Friday, June 18, 2021

சுடுகாட்டில் திருமண மந்திரம்

 


முன் குறிப்பு : பெண்கள் கொள்ளி வைக்கலாமா என்று ஒரு விவாதம் சில வாரங்கள் முன்பு நடந்தது நினைவிலிருக்கலாம். அப்போதே எழுதிய  இரு பதிவுகளை  ட்ராப்டிலேயே வைத்திருந்தேன்.  அனைத்து ஜாதியினரும் பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு வந்த பின்பு “சடங்கு, சம்பிரதாயம், கலாச்சாரம், லொட்டு, லொசுக்கெல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கூச்சல் எழுவதால்  அப்போது எழுதியதன் முதல் பகுதியை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  நேரடியாக கோவில் அர்ச்சனை தொடர்பான அனுபவம் கிடையாது என்றாலும் கலாச்சார காவலர்களின் செயல்பாடுகள் பற்றியது இது.

 பல வருடங்கள் முன்பு நிகழ்ந்தது. என் அத்தையின் இறப்பிற்காக என் அப்பாவையும் அம்மாவையும் வாடகைக் கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்னை அழைத்துச் சென்றேன். தாம்பரத்திற்கு அருகில் ஒரு புற நகர் பகுதி. அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது. முதுமை காரணமாக சில உடல் உபாதைகள் இருந்த போதும் நான் கண்டிப்பாக மயானத்திற்கு வருவேன் என என் அப்பா அடம் பிடித்ததால்  அவரை அழைத்துக் கொண்டு நான் சென்றேன்.

 சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வைத்து சில சடங்குகளுக்குப் பின்பு தகன மேடையில் கட்டை, வறட்டிகள் வைத்து அடுக்கி வைக்கும் நேரத்தில் இயற்கை அழைப்பிற்காகவும் புகை பிடிக்கவும் ஒரு புதர் நோக்கி நகர்ந்தேன்.  என் பின்னால் இன்னொருவர் வந்தார்.  அவர் தகனத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர்.

 யாரையோ அலைபேசியில் அழைத்தார்.

 “நான் இங்க ஒரு கல்யாணத்துல (!) இருக்கேன். நீங்க மண்டபத்துக்கு கிளம்பரதுக்கு முன்னாடி வர முடியாது. அதனால யாத்ரா தான மந்திரத்தை (மண மகன் வீட்டினர் திருமணத்திற்கு முன்பு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு செய்யும் சடங்கு)  போனில் சொல்றேன். நீங்க திருப்பிச் சொல்லுங்கோ”

 என்று  சொல்லி அந்த மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்.

 சுடுகாட்டில் சடலத்தையும் வைத்துக் கொண்டு திருமண மந்திரங்களை ஒருவரால் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சொல்ல முடிகிறது. இவர்கள்தான் சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் பிற்போக்குச் சிந்தனைகள் நிலைப்பதற்கு காரணமாக இருப்பவர்கள்.

 ஏதோ ஒருவர் அப்படி செய்தால் எல்லோரையும் அப்படி பொதுமைப் படுத்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளுக்கும் இன்று பேக்கேஜ் வந்து விட்டது. தானம் கொடுக்கப்படும் பொருட்கள் ரீசைக்கிள் ஆகிறது. ஒரு க்ரூப்பிலிருந்து இன்னொரு க்ரூப் போகிற போர்ட்டபிளிட்டி எல்லாம் செல்லுபடியாகாது. இன்றைய  காலத்தில் இதுதான் யதார்த்தம்.  

 இன்னொரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 நாளை

 மயானக் கூட்டாளிகள்

1 comment:

  1. அட தூ! கொஞ்சம் கூட மனசாட்சியில்லாதவனா இருக்கானே

    ReplyDelete