Thursday, September 17, 2015

இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு ஒரு சூடான பதில்

மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்ற முக்கியமான கட்டுரை இது.

அரசை ஆட்டிவைக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளி ஒருவருக்கு மக்களுக்காக கவலைப்படும் ஒரு விஞ்ஞானி  ஒருவர் அளித்துள்ள பதில் இது. 


http://puthagampesuthu.com/wp-content/uploads/2015/02/tv-vengatesh.jpg

என்னதான் செய்தது இந்திய அறிவியல்...?

த.வி. வெங்கடேஸ்வரன்

கடந்த 2015ஜூலை 15 அன்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISC - Indian Institute of Sciences) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி "உலக மக்களை வியப்புறச் செய்கிற உலகைக் குலுக்கிய எந்த அறிவியல் ஆய்வையவது செய்துள்ளீர்களா" என அங்கே குழுமியிருந்த பேராசியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும் IISC, IIT முதலிய உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் சாதித்தது என்ன? உலகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டையும் தொடும் கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஏதாவது ஒரு ஆய்வைச் சுட்ட முடியுமா என சவால் விடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். மேலும் தொழில் மற்றும் வளர்ச்சிக்கு உதவாத உயர் கல்வி அரசு சார் நிறுவனங்களில், அரசு நிதியுதவியோடுதான் இருக்கவேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

விடுதலை அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் ஆன பின்பும் உலகின் மூன்றில் ஒரு கடைக்கோடி வறிய ஏழைகளின் இருப்பிடம் இந்தியா. உலகின் மொத்த 370 லட்சம் பார்வைக் குறை உள்ளவர்களில்  150 லட்ச மக்கள் இந்தியாவில்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் பார்வைக் குறை உள்ளவர்களில் 75% தீர்க்கக்கூடிய குறைகளோடு இருப்பவர்கள்தாம். கண் தானம் செய்ய முன்வருபவர்கள் குறைவு. மேலும் கண் மருத்துவர்கள் குறைவு என்பதுதான் கண் பார்வை சீர் செய்யாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். தேவையான  40,000 கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களில் வெறும் 8,000 தான் இந்தியாவில் உள்ளனர். ஆண்டுக்கு  2.5 லட்சம் கண்தானம் தேவை. ஆனால் கிடைப்பதோ வெறும்  25,000. போதிய விழிப்புணர்வு இன்மையால் அதிலும் 30% பயனற்று வீணாகிறது. உலக மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு அடுக்கில் அதலபாதாளத்தில் 13வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 0.23 சதவிகித மக்கள் குப்பை பொறுக்கியும் 0.37 சதவிகித மக்கள் பிச்சை எடுத்தும்தான் உயிர்வாழ்கிறார்கள். 54% மக்களின் இருப்பிடம் வெறும் ஒரே ஒரு அறை கொண்ட வீடு. வெறும் 8.29 சதவிகித கிராமப்புற மக்கள்தான் மாதத்திற்கு  10,000 ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டுகின்றனர். வளர்ச்சியின்மையின் காரணமாக ஐந்து அகவை கடக்கும் முன்னரே 134 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் மடிந்து விடுகின்றன. இதில்  7,48,000 குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே இறந்து விடுகின்றன. அதாவது, வளர்ச்சியின்மை, போதிய சுகாதார மருத்துவ வசதியின்மை காரணமாக, நாள்தோறும்  2,000 கைக் குழந்தைகள் சாவு          

இந்தியாவில்  உள்ளபடியே இந்திய மக்களின் பல்வேறு வாழ்வு பிரச்சனைகள், சுகாதார தேவைகள், வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என பல அம்சங்களில் இந்திய அறிவியல் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம்தான். ஆயினும் இந்த அவலங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பமும் அவை அரசுசார் நிறுவனங்களில் இருப்பதும் தான் காரணமா? நாராயணமூர்த்தி கூறுவதுபோல இந்திய அறிவியல் நிறுவனங்கள் கடந்த அறுபது ஆண்டுகளில் சாதித்தது ஒன்றுமேயில்லையா?

கிராவிட்டி என்ற திரைப்படம் எடுக்க ஹாலிவுட் செலவழித்த தொகையை விட குறைந்த செலவில், நாசாவின் செலவில் பத்தில் ஒரு பகுதியில் செவ்வாய் அடைந்த இஸ்ரோ தொழில்நுட்பம் சளைத்ததா என்ன? அதன் தொடர்ச்சியாகத்தானே நாஸா உட்பட, பல நாடுகள்,  இஸ்ரோவின் ராக்கெட்டில் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த முன்வந்துள்ளன? இஸ்ரோவின் வளர்ச்சி, தொழில்நுட்ப சாதனை என்பது எங்கும் இங்கும் தயார் செய்த தொழில்நுட்பத்தை இரவல் வாங்கிப் பொருத்தி இணைத்துச் செய்யும் தொழில்நுட்பம் அல்ல. சுயசார்புடன் தானே தயாரித்த தொழில்நுட்பங்கள்.   விடுதலை அடைந்தபோது இந்தியா "ship to lip" (கப்பலிலிருந்து ஒருவாய் கவளம்) என்ற நிலையில் இருந்தது. பெருமளவு தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. PL 480 என்ற அமெரிக்க உதவித் திட்டத்தின் அடிப்படையில் பல லட்சம் தானியங்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்பட்டன. ஸ்டாண்ட்போர்ட் பேராசிரியர் பால் எஹ்ல்ரிச் என்பார் அந்த நிலையில் "இந்தியா முழுகும் கப்பல்; யாராலும் எதுவும் செய்யமுடியாது. அது தானே மடிந்துவிடுவதை அப்படியே விட்டுவிடுவதுதான் நலம்" என ஆருடம் கூறியதையும் அரிசி பற்றாக்குறை போன்ற சிக்கல்களையும் மறக்க முடியுமா? இன்போசிஸ் உருவான 1981இல் இந்தியா 68.3 கோடி மக்கள்தொகையும், 12.9 கோடி டன் தானிய உற்பத்தியும் கொண்டிருந்தது, தானிய இறக்குமதி கொண்டுதான் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.  2014இல் இந்தியா 26.3 கோடி டன் உற்பத்தி செய்து  1210 கோடி மக்கள் தொகைக்கு உணவு அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

அன்றிலிருந்து இன்று பலமடங்கு பெருகியுள்ள இந்திய மக்கள் தொகையான  121 கோடி மக்கள் தொகைக்கும் உணவு அளிக்குமளவுக்கான இந்த உற்பத்திப் பெருக்கத்திற்கு தனியார் துறையின் பங்களிப்புதான் என்ன?  சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விமர்சனங்கள் இருப்பினும் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுத்த விவசாய ஆராய்ச்சி செய்தது யார்? இந்திய விவசாய ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் 35 வருடத்தில் இரண்டு மடங்கு உணவு பெருக்கம் ஏற்பட்டிருக்க முடியுமா?

சர்வதேச சுகாதார நிறுவனத்தால் உலகம் முழுவதும் தடுப்பூசி பெரும் மூன்றில் ஒரு குழந்தையின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தொழில்நுட்ப இறக்குமதி ஒன்றே கொள்கை என செயல்படும் இந்திய தனியார் தொழில் அமைப்பில் வித்தியாசமான நிலையில் உள்ளது இந்திய மருந்து உற்பத்தித் துறை. எல்லைகள் இல்லா மருத்துவர்கள் (Medicines sans Frontiers -MSF) எனும் சர்வதேச அமைப்பு இந்தியாவை உலகின் மருந்துக் கிடங்கு என வர்ணிக்கிறது. ஹைதரபாதில் உள்ள இந்திய மருந்தக ஆய்வு அறிவியல் நிறுவனம் கொடுத்த கொடைதான் இந்த நிலைக்கு காரணம். ஆண்டுக்கு 10,000 டாலர் செலவு பிடித்த எய்ட்ஸ் சிகிச்சையை இந்திய மருந்துகள் கொண்டு மூன்றில் ஒரு பங்கில் செய்ய முடிந்துள்ளது. ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து உட்பட மூன்றாம் உலக நாடுகளின் "குறைந்த விலையில் தரமான மருந்து" தயாரிப்பில் இந்தியாதான் முன்னணி வகிக்கிறது.

ஆயினும் இந்திய அறிவியலின் நிலை திருப்திகரம் என கூறிவிட முடியாதுதான். இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எண்ணிக்கை வெறும்  200,000; அதாவது 10,000 மக்கள் தொகைக்கு வெறும் நான்கு ஆய்வாளர்கள் என்ற விகிதத்தில்தான் உள்ளனர். அமெரிக்காவில் இது  79; அறுபது ஆண்டுகள் முன்பு நம்மைவிட பின்தங்கிய நிலையில் இருந்த சீனாவில் 18.  அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு இந்தியா செலவிடும் தொகை  ஜிடிபியில் வெறும்  0.9சதவிகிதம். சீனா நம்மைவிட அதிக  ஜிடிபி கொண்டிருந்தும் இரண்டு சதவிகிதம் செலவு செய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பல உயர்கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அறிவியல் ஆய்வு நிறுவங்களில் சுதந்திரமின்மை, அதிகாரத்துவப் போக்கு முதலியவையும் பல்கலைக்கழகங்கள் பாராமுகமாக நடத்தப்படுவதும்உயர்கல்வி நிறுவனங்களில் தரமற்ற ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் நியமிக்கபடுவதும் இந்த நிறுவனங்கள் சந்திக்கும் சில சவால்கள்.

ஏன் இன்னமும் அமரிக்கா உலக அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் மேலாண்மை நிலையில் உள்ளது என்பது குறித்து Select USA 2015 எனும் கருத்தரங்கில் கூகிள் செயல் தலைவர் எரிக் ஷெமிட்  கருத்துக் கூறியபோது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அறிவியல் தொழில் கொள்கையை உருவாகிய வன்னேவர் புஷ் என்பவரை சிறப்பாக நினைவு கூர்ந்தார்.  1945இல் "அறிவியல் முடிவில்லா எல்லை" என்று முழங்கிய புஷ் அடிப்படை அறிவியல் என்பதும் பயன்பட்டு அறிவியல் என்பதும் வெவ்வேறு எனத் தெளிவுபடுத்தியதோடு நிற்காமல் தனியார் துறை அடிப்படை ஆய்வுக்கு துணைபோகாது என உணர்ந்து அரசுதான் ஆதரவு தரவேண்டும் என முடிவுக்கு எட்டி தேசிய அறிவியல் அறக்கட்டளை National Science Foundation) என்ற அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஆய்வு வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டார். புதிய தொழில்களும் உற்பத்திப் பொருள்களும் மாய மந்திரத்தால் ஏற்படாது. அதற்கு நீண்ட அறிவியல் பயணம் தேவை என உணர்ந்து அறிவியல் தேடலுக்கு நிதியுதவி அளித்தது அரசு நிதியில் இயங்கிய இந்த அறக்கட்டளை.  நேரடி தொழில் மற்றும் லாப நோக்குடன் தொடர்பு அற்ற ஆய்வு நிதி கொண்டுதான் அமெரிக்க அறிவியல் வளர்ந்துள்ளது என விவரித்தார் எரிக் ஷெமிட்.

அரசு கைவைக்காமல் தனியார் மயமாக இருந்ததால் தான் சமீப காலத்தில் பெரிதும் போற்றி புகழ்ந்து பேசப்படும் இன்போஸிஸ் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை செழித்தது உலக வரைபடத்தில் இந்தியாவைஏற்றியுள்ளது என சிலர் வாதம் செய்கின்றனர். இவர்களுக்கு வரலாறு தெரியவில்லையா அலல்து வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனரா என்பது தான் புரியவில்லை.   1960-1970களில் மத்திய அரசின் மின்னணு துறை Department of Electronics) முன்யோசனையுடன் செயல்பட்டு TIFR போன்ற நிறுவனங்களில் கணினி ஆய்வுகளை துவங்கி வேண்டிய மனித வளத்தை தயார் செய்தது. மனிதவளம் தயாரிப்பு தனியார் துறையில் நடக்க இயலவில்லை. ஐ ஐ டி போன்ற நிறுவனங்கள் தாம் கணினி விற்பனர்களை தயார் செய்தது. அதன் விளைவாகவே இந்தியா ஐ டி மென்பொருள் துறையில் மேலாதிக்க இடத்தில உள்ளது என்பதை மறுக்க முடியுமா? மேலும் மென்பொருள் ஏற்றுமதி செய்ய இந்தியாவால் முடியும் என முன் அனுமானம் செய்து  1972இல் ஏற்றுமதிக் கொள்கையில்  ஐ டி நிறுவனங்கள் குறைந்த விலையில் கணினி இறக்குமதி செய்ய வழிவகுத்து 1980-1990 ஐ டி பூங்காக்களை ஏற்படுத்தி தொழில் முனைவோருக்கு வசதி செய்து கொடுத்து வரி சலுகைகள் இலவச இன்டர்நெட் வசதி போன்ற சேவைகளைத் தந்து ஊக்கம் கொடுத்து வளர்ந்தது தான் இந்திய ஐ டி துறை. 1990கள் வரை ஐ டி தொழில்துறை பெற்ற அரசு உதவிகளை மறந்த அம்னீசிய பேச்சுதான் "ஐ டி துறையில் தனியார் துறை சாதனை" எனும் புருடா. சிறப்பான நுட்ப மனிதவளத்தையும் அறிவையும் தரவல்ல IISC போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதால்தானே பெங்களூரு இந்தியாவின் ஐ டி தலைநகராக, உலக வரைபடத்தில் இடம் பிடித்து?

நிலவில் நீர்ப்பசை இருப்பதைக் கண்டுபிடித்து நிலவு பற்றிய இதுவரையிலான அறிவியல் கருத்துகளையே புரட்டிப்போட்டது இந்திய சந்திரயான் திட்டம். இதனால் என்ன "பயன்" என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வரலாற்று ஆய்வுகள், மொழியியல் ஆய்வுகள் போன்ற பல நுணுக்க ஆய்வுகளையும் "பயன் என்ன" என்ற கேள்வியில் பின்னுக்குத் தள்ள முயல்கிறது புதிய-தாராளவாத அரசியல்-பொருளாதார பார்வை. இதே அளவுகோலைக் கைகொண்டால் கலிலியோ பூமிதான் சூரியனை சுற்றுகிறது என ஆய்வு செய்ததற்கோ, புராண ராகு-கேது பாம்பு சூரியனை விழுங்கும் கட்டுக்கதைகளை மறுத்து ஆரியபட்டர் நிலவு மறைவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது எனஆய்வு செய்ததற்கோ என்ன "பயன்" என்று கேட்டுவிடலாம்தான். "பயன்" என்பதை தொழில் பண்டம் உற்பத்தி மற்றும் உடனடி லாபம் என்று மட்டும் விளங்கிக் கொள்ளும் குறுகிய புதிய-தாராளவாத புரிதலைத் தான் இந்த பார்வை வெளிப்படுத்துகிறது. லாபநோக்கு மட்டும் படைப்பாக்கத்தையும் அறிவியல் அறிவையும் வளர்துவிடாது.

இந்திய அறிவியல் சந்திக்க வேண்டிய சவால்கள், சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் பல உள்ளன. எனினும் தனியார்மயம் ஒருபோதும் அதற்குத் தீர்வு ஆகாது. இவற்றில் பலவற்றுக்கு அறிவியல் தொழில்நுட்ப உள்ளீடு அவசியம். இந்திய அறிவியல் செல்லவேண்டிய பயணம் நெடியது. பார்வைகள் விரிவடைந்து எளிய மக்களின் தேவைகள் சார்ந்து ஆய்வுகள் அவசியம். சுற்றுசூழல் சிக்கல்களை சமாளிக்கும் விதமான புதிய தொழில் நுட்பங்கள் அவசியம். ஏற்கனவே நடந்த மின்னணுப் புரட்சியின் போது நாம்  அப்போதுதான் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்திருந்தோம். கணினிப் புரட்சியில் நம்மால் ஓரளவு பங்கு கொள்ள முடிந்தது. தற்போது முன்னணியில் இருக்கும் நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார் எளிய தொழில்நுட்பம் போன்ற புதிய வளர்ச்சிகளில் நாம் முன்னணியில் இருக்க முயலவேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் காணவேண்டும். போதிய நிதி ஓதுக்கீடு, ஆய்வுகளுக்கு சுதந்திரம், தொழில்நுட்ப ஆய்வு மட்டுமல்ல வரலாறு போன்ற சமூக ஆய்வுகளுக்கும் போதிய ஆதரவு என முன்நோக்கு பார்வையுடன் கூடிய சரியான அறிவியல் தொழில்நுட்பக் கொள்கையே இன்றைய தேவை. 
 
(கட்டுரையாளர் மத்திய அரசின் விக்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி)

9 comments:

  1. லாபநோக்கு மட்டும் படைப்பாக்கத்தையும் அறிவியல் அறிவையும் வளர்துவிடாது.
    உண்மைதான் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. Narayana moorthi kettadhu sariyey!!
    IISC -il idhu pondra kelvigal
    maanavargalai thoondum.

    "sudar vilakkayinum
    thoondukool ondru vendum"

    Scientist koduthathu
    Arumaiyana virivaana oru vilakkam,
    indha vilakkathiney
    velikondu vandhatharkkaaka

    Mr Narayanamoorthy and Mr da.ve. Venkateswaran
    iruvarum paaratukum potrudhalukkum uriyavargal.

    idhu pondra kelvi pathilkal, nam naatin meedhu
    namakku nalla mariyadhaiyum, patrayum
    yerpaduthum!!! Vaalga Bharatha Manithiru Naadu!!

    Thank you Raman sir!!
    Y.Anna.

    ReplyDelete
  3. Despite Gov't. Spending on R&D is less than 1% of GDP, India's public sector ISRO is superb. No developed country came to such growth without spending on R&D in many times by Gov't. Our govt. Is against this concept. Hence Gov't. Policies has to be changed, or Gov't has to be changed. Rajendiran.

    ReplyDelete
  4. செய்து 1210 கோடி மக்கள் தொகைக்கு உணவு அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.//? 1210 கோடியா?பா.ம.கவினர் செய்ததும் இப்படிப்பட்ட தவறு தானே? அதை ஊதிப் பெரிதாக்கியவர்தானே நீங்கள் ?

    ReplyDelete
    Replies
    1. 1210 கோடி என்பது அச்சுப் பிழை. அடுத்த பத்தியிலேயே 121 கோடி என்று சொல்லப்பட்டதை கவனியுங்கள். அதற்கும் பாமக விற்கும் என்ன தொடர்பு? அபத்தமாக உள்ளது உங்கள் குற்றச்சாட்டு

      Delete
    2. pmk printed 20016 for 2016 as you criticized in another post

      Delete
    3. ஒரு பெரிய கட்டுரையில் வரும் சிறு அச்சுப் பிழைக்கும் விளம்பரத்தின் மிக முக்கியமான பகுதிக்கும் வேறுபாடு உள்ளது. அதைத் தவிர எனது பதிவின்
      மிக முக்கிய நோக்கம் "ஜாதி வெறி பாமக" எந்நாளும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான்.

      Delete
  5. நண்பர் ராமன்,

    உங்கள் தளத்தில் இதனைப் போல ஒரு பதிவினை எதிர்பார்கவில்லை. இந்தக் கடிதத்தினை நீங்கள் மீளப்படித்தால் இதில் இருக்கும் தீவிர வலதுசாரி "தேசி" கருத்துகளையும் கட்டமைப்புக்களையும் பார்க்கலாம்.

    நாராயணமூர்த்தியின் கருத்துக்கள் மிகத் தவறாக திரிக்கப்பட்டுள்ளன. இந்த கடிதத்தினை எழுதியுள்ள நபர், ஒரு அரசு அதிகார வர்க்கப் பிரதிநிதியாக வெற்று வாதத்தினை முன்வைக்கின்றார்.

    IIT, IISC மற்றும் பல மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் இருப்பவர்கள், மேலாதிக்கம் புரிபவர்கள் அனைவரும் ஏறத்தாள இப்படியான தேசிய சுயதம்பட்டதினை அடிக்கும் வாய்சொல் வீரர்கள் தான்.

    இன்றும் நமது நாட்டில் சொந்தமான தொழில்நுட்பத்தில் ஏதும் பெரிதான பங்களிப்பு இல்லை. இதுதான் நாராயணமூர்த்தி சொல்லவந்தது.

    எழுதும் பேனாவில் இருந்து, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நுகர்பொருள்கள், மோட்டார் வாகனங்கள், கணணி, மின்னனு சாதனங்கள் என்று எந்தவித அறிவியல் தொழில் நுட்ப நிலையில் நம் பங்களிப்பு என்று பெரிதாகக் கூற ஏதும் இல்லை. இது தான் யதார்த்தம்!

    ReplyDelete