Tuesday, September 22, 2015

தூக்கில் தொங்கிய நம்பிக்கை, எரிந்து போன நேர்மை



சமீபத்திய இரண்டு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இரண்டும் நேரடியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஆனால் அவை அளிக்கிற செய்திகளோ ஒன்றுதான்.
             
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா வை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால் யாரும் அது பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்ற மன நிலையில் “அம்மா”  ஆட்சி இருக்கிறது. கேள்வி கேட்ட சி.பி.எம்  எம்.எல்.ஏ க்களை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றியதிலிருந்தே குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதில் இந்த அரசு கவனமாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரு காவல்துறை உயரதிகாரி தற்கொலை செய்து கொள்கின்றார் என்றால் அவருக்கு எந்த அளவு அழுத்தம் தரப்பட்டிருக்கும்? தன்னுடைய தோழி இறந்து போனதற்கு காவல் துறைதான் காரணம் என்று எப்படிப் பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிந்தும் இன்னொரு காவல்துறை உயரதிகாரி சொல்லியிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பெருமாள் முருகன் பிரச்சினையில் அரசு ஜாதிய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்திருந்தால் கோகுல்ராஜ் கொலையும் நடந்திருக்காது. இப்போது விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது. இத்தனைக்குப் பிறகும் தமிழக அரசும் காவல்துறையும் மௌனமாகத் தான் இருக்கிறது. இந்த கள்ள மௌனம் தாங்க முடியாத அசிங்கமாக இருக்கிறது.

அதே போல இன்னொரு அதிர்ச்சி செய்தி ராணுவ ரகசியங்களை எரித்த விவகாரம். சர்ச்சைக்குரிய ராணுவ தளபதியாக இருந்து இன்று மோடியின் அமைச்சராகவுள்ள வி.கே.சிங்  தான் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு தான் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு என்ற பெயரிலான ஒற்றர் குழு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எரித்து விட்டார் என்று பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது.

அந்த குழுவின் மூலமாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், செலவழித்த பல கோடி ரூபாய்களுக்கான கணக்கு வழக்குகள் எல்லாமே சாம்பலாகி விட்டது. இந்த செயல் அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. இவருக்கு அடுத்து தளபதியாக வருபவர் அறிந்து கொள்ளக் கூடாத படி என்ன மர்மம் அந்த ஆவணங்களில் உள்ளது? ராணுவத்தின் பெயரால் ஏதேனும் சதிகள் நடந்ததா? நிதி முறைகேடு நடந்துள்ளதா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் வருகிறது.

இவரும் பதில் சொல்லவில்லை. இவரை அமைச்சராக வைத்திருக்கிற மோடியும் பதில் சொல்லப்போவதில்லை.

அதிகாரத்தை பயன்படுத்த விடாமல் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதால் ஒரு காவல்துறை அதிகாரி தூக்கில் தொங்கி விட்டார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ராணுவ அதிகாரியோ அமைச்சராக வலம் வருகிறார்.

தூக்கில் தொங்கியது காவல்துறை மீதான நம்பிக்கை.
எரிந்து போனது ராணுவத்தின் நேர்மை.

இதுதான் இன்றைய இந்திய அதிகார வர்க்கத்தின் உண்மையான முகம்.

வெட்கக் கேடு!!!!

No comments:

Post a Comment