Friday, May 30, 2014

டுபாக்கூர்கள்தான் மோடியின் மூலதனமோ?

எத்தனைக் காலம் திரிக்கப்படுமோ மோ(ச)டிக் கயிறு?

 


 
“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம்.
தீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது 

மாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7)ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லஅந்த ஆறு வீரர்களும் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள்என்றும் சரடு விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றின் செய்தியென அந்தப்பத்திரிகை கூறுகிறது.ஹிராத் நகரில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இந்திய ராணுவவீரர்கள் தில்லி வந்து விருந்தில் கலந்து கொண்டிருந்தால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தில்லிவந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணத்தில் இது எவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும். இது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மாலைமலர் ஏடு இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தியா? அல்லது விளம்பரமா? என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால் நரேந்திர மோடியை சூப்பர் மேனாகப் காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின்போது அவர் ஹெலிகாப்டரில் துணிச்சலுடன் போய் 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டார் என்று புருடாவிடப்பட்டது.

 நாடே அல்ல உலகமே இந்தப் புனைச்சுருட்டு செய்தியை வியப்புடன் பார்த்தது. பலமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் தீவு தீவாகப் பரிதவித்து நின்றனர். இவர்களில் குஜராத்தியர்களை மட்டும் கண்கொத்தி பாம்புபோல் நரேந்திர மோடி எப்படி பொறுக்கி எடுத்து மீட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பிறகு தான் கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரம் வெளிச்சத்துக்குவந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர்ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டுத்திரும்பினார் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதேபோன்ற பொய் மூட்டையைத் தான் இன்றும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். உருளுகின்ற பொய்களை நம்பிக்கால்வைத்து தங்கள் வலையில் விழுகின்ற வரைலாபம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.

உண்மையில் நடந்ததாக வெளியான செய்திகளைப் பார்ப்போம்.ஹிராத் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த நான்கு தீவிரவாதிகள் முயற்சி செய்தனர். இவர்களில் ஒரு தீவிரவாதி இந்திய தூதரகத்தின் சுவர் மீது ஏறினான். அந்தச்சுவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் அவனது பை சிக்கிக் கொண்டது. அந்தத் தீவிரவாதியை கவனித்த - தூதரகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவனைச் சுட்டு வீழ்த்தினர். அவன் ஒரு சில அடிகள் ஓடி தப்பிக்க முயன்றும் முடியாமல் சுருண்டுவீழ்ந்து செத்தான். மற்ற மூன்று தீவிரவாதிகள் பக்கத்துக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர். 


இதனை கவனித்த ஆப்கன் பாதுகாப்புப்படையினர் அவர்கள் மூவரையும் சுட்டுவீழ்த்தினர். இதனை இந்திய - திபெத் எல்லைப்பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் சுபாஷ் கோஸ்வாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் (டைம்ஸ்ஆப் இந்தியா- 24/5/ ;பக். 12)இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியைக் கேள்விப்பட்டவுடன் ஹிராத் நகரில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் நரேந்திரமோடி தொடர்புகொண்டார். ஹமீத் கர்சாயுடனும் பேசினார். தூதரகத்தைத் தாக்க முயன்ற 3 தீவிரவாதிகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார். 

இதற்கும் மேலாக இந்திய வீரர்களிடம் மோடியே பேசினார் - அதுவும் யாருடைய உத்தரவுக் காகவும் காத்திருக்க வேண்டாம் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று ரிமொட் கண்ட்ரோல் உத்தரவு போட்டார். அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்திய ராணுவ வீரர்களால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அதீக கற்பனைதான் உத்தரகாண்ட் மோசடி செய்தியை நினைவுபடுத்துகிறது. 

இந்திய ராணுவவீரர்கள் எந்த நிலைமையையும் தீரத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தான். அதற்காக மோடி தான் அவர்களின் மூளை சக்தி என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. நரேந்திரமோடியை மாவீரனாகக் காட்டும் முயற்சியை ஊடகங்கள் தொடர்கின்றன என்பதன் வெளிப்பாடு தான் இந்தச் செய்தி. செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இப்படிப்பட்ட சாகச செய்திகள் உலவ விடப்படுகின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் திரிக்கப்படுமோ இது போன்ற மோ(ச)டிக் கயிறு. 

இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே “தீரவிசாரிப்பதே மெய்” என்று சொல்லியிருக்கிறார்கள். முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் உணர்ந்து பின்பற்றுவோம்.

- மயிலைபாலு

நன்றி - தீக்கதிர் 30.05.2014

5 comments:

 1. அப்பிடீனாக்கா அது உம்மை இல்லையா ? மோ(ச)டியா ?
  அபுதாபி பாமரன் Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 2. உண்மையாகவே இருந்தாலும் ஏற்றுகொள்ள மனசு வராது உங்களுக்கு

  ReplyDelete
 3. முதலில் உண்மை பேச ஆரம்பிங்க சார்.

  ReplyDelete
 4. Imagine if you become PM and someone who is Raman enthusiastic did a article like this will you take responsibility?

  ReplyDelete
 5. It is not an act of an enthusiast Mr Anonymous. Fabrication and Build Up of Myth is the Strategy of Modi & Co.

  ReplyDelete