Tuesday, April 15, 2014

.ரஜனிகாந்த் பதில் சொல்வாரா?
இன்றைய தீக்கதிர் இதழில் வந்த ஒரு அற்புதமான கட்டுரை

மாணிக் பாட்ஷாவுக்கு சில கேள்விகள்..

 


கடந்த சில நாட்களாக சில ஊடகங்கள் கிளப்பி, பரப்பிய யூகமான அந்த நிகழ்வு கடைசியில் நடந்தே விட்டது. 

அதாவது கார்ப்பரேட் ஊடகங்களின் கதாநாயகர் நரவேட்டை நரேந்திர மோடி, தமிழ்த்திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கே வந்து சந்தித்தே விட்டார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் - இந்திய நாட்டின் பிரதமர் ஆசனமே அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக கார்ப்பரேட் ஊடகங்களால் ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கும் மனிதர் குஜராத் கலவரம் “2002ன் ஹீரோ” நரேந்திர மோடி. 

அவர் தமிழ்நாட்டின் மூத்த நடிகர் ரஜினிகாந்தை அவரது வீடுதேடி வந்து, டீ குடித்து, 50 நிமிடம் அளாவளாவி மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவரோ ஒரு அரசியல் சூப்பர் மேன் என்று ஆதரவாளர் களால் புகழப்படுகிறவர்.
இவரோ சினிமா சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்றவர். இருவரது துறையும் வேறு வேறு என்றெல்லாம் கேள்வி எழுகிறதா?

மோடி எனது நல்ல நண்பர் என்கிறார் ரஜினிகாந்த். இருக்கட்டும். அதற்காக ஒரு அரசியல்வாதி, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பவர். பிரச்சார வேலை ஏதும் இல்லாமல் சென்னைக்கு வந்து டீ குடித்து 50 நிமிடம் பேசிச் செல்வது ஆச்சரியமாக இல்லையா? நாடு முழுவதும் அவரது அலை வீசிக் கொண்டிருப்பதாக கூறும் போது அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஆச்சரியமாக இல்லையே! அதுபோல் தமிழகத்தில் மோடி அலையை கொஞ்சம் வேகப்படுத்த ரஜினி “பேனை” பயன்படுத்தும் முயற்சியாகத்தான் இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு. 

வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்கிறாரே ரஜினி. எது வலிமை? எது சிறந்த நிர்வாகம்? மோடி முதல்வரானவுடன் குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு முஸ்லிம் சிறுபான்மை இன மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனரே ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி, பஜ்ரங்தளம் பரிவாரத்தினர். அதை அடக்காமலிருந்ததல்ல, காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு கலவரக்காரர்களுக்கு ஊக்கம் கொடுத்தது தான் சிறந்த நிர்வாகமா? அப்போது பிரதமராக இருந்த வாஜபாய் எந்த முகத்துடன் வெளிநாடு போவேன் என்று கேட்டாரே அதுதான் சிறந்த நிர்வாகமா?அன்று முஸ்லிம் மதத்தினர் மீது வெறியாட்டம் நடத்திக் கொன்று குவித்ததை இப்போதும் நினைத்தாலும் நெஞ்சம் பதைக்குமே. 

தாயின் முன்னே மகளை பலாத்காரம் செய்தல், கர்ப்பிணியின் வயிற்றைக் குத்திக் கிழித்து சிசுவை எடுத்து தீயிலிட்டுக் கொல்லுதல், உயிரோடு தீ வைத்துக் கொளுத்துதல், கொலை வாளுடன், கொடிய ஆயுதங்களுடன் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களையும் அரக்கச் செயலில் ஈடுபடச் செய்தது தான் வலிமையான தலைவருக்கு இலக்கணமோ?இப்படித்தான் இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் நாசிச ஹிட்லர் யூதர்களை மட்டுமல்ல பல நாட்டு மக்களையும் போரில் மட்டுமல்லாது, துன்புறுத்துதல், பட்டினி போட்டுக் கொல்லுதல், சிறைகளில் அடைத்து வைத்தல், பணயக் கைதிகளாக்கிக் கொல்லுதல், மருத்துவ ரீதியாக மரணமடையச் செய்தல் என்று எப்படி எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அப்படியெல்லாம் கொன்று குவித்தான். 

மூன்று கோடி பேருக்கு மேல் உயிரிழக்கக் காரணமாக இருந்தான் என்று கூறுப்படுகிறது. அவனுடன் இணைந்த முசோலினி, டோஜோ போன்ற ராணுவ, சர்வாதிகார பாசிச வெறியர்கள், இடிஅமீன் போன்ற நரவேட்டைக்காரர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் விழுந்து மண்மோடு மண்ணாய் மக்கிப் போனார்கள்.அவர்கள் எல்லாம் உதாரண புருஷர்களாக அல்ல. வரலாற்று ஏடுகளில் ஒதுக்கப்பட்டவர்களாக “அப கீர்த்தி” வாய்ந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இன, மத பேதம் பேசி பிரிவை ஏற்படுத்தி கலவரம் உண்டாக்கி மண்ணுயிர்களை மாய்ப்பவர்களுக்கும் நேரும். 

ஆரிய இனமே உலகின் மேன்மையான இனம் என்பது ஹிட்லரின் எண்ணம். அத்தகைய பிராமண மேலாதிக்க, சாதிய, சதுர்வர்ண இந்துமத வெறி கொண்ட ஆர்எஸ்எஸ் -சின் உறுப்பினர் என்று பெருமிதம் கொள்ளும் யாரும் நல்ல மனிதனாகக் கூட நடந்து கொள்ள மாட்டார்கள். இதுதான் வலிமை என்றால் மனிதநேயம் கொண்டவர்கள் நம்மை ஏளனம் செய்ய மாட்டார்களா? ரஜினி தான் நடித்த பாட்ஷா படத்தை மறந்திருக்கமாட்டார். தமிழக மக்களும் மறக்கமாட்டார்கள்.
அது தமிழகத்தில் வெளியான காலத்தில் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகளையும் மறக்க முடியாது.அந்தப் படம் வன்முறைக் கலாச்சாரத்தை கண்டிப்பது மட்டுமல்லாமல், ரஜினி தனது நண்பராக வரும் அப்பாவி பாட்ஷாவை (சரண்ராஜ்) வில்லன் தாதா ஆன்டனி (ரகுவரன்) கொலை செய்ததால் பொங்கி எழுந்து மாணிக்கம் மாணிக் பாட்ஷாவாகி நியாயம் கேட்பதாக அமைந்தது.அப்போதிருந்த அரசியல் சூழலில், அன்றைய அதிமுக ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தார் நடிகர் ரஜினி காந்த். அது அன்றைய எதிர்க்கட்சிக்கு ஆதரவாக அமைந்தது.
ஆட்சி மாற்றத்துக்கு உதவியாக இருந்தது. 

ஆனால் அடுத்தடுத்த தேர்தலிலும் ரஜினி காந்திடம் வாய்ஸ் கொடுக்க வைக்க பலவகையிலும் பலரும் முயற்சி செய்து வரு கிறார்கள். அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாகவே இத்த கைய ‘சந்திப்பை’ ஏற்பாடு செய்கிறார்கள். எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிற பாஜக இப்படியோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, ரஜினியிடம் மோடிக்கு சர்டிபிகேட் பெற்றுவிட்டதுபோல் குதூகலமாக செய்தி வெளியிட்டுள்ளன சில பத்திரிகைகள்.அப்பாவி முஸ்லிம் நண்பன் பாட்ஷாவை கொலை செய்ததால், பழிவாங்க மாணிக் பாட்ஷாவாக அவதாரம் எடுத்தவர் பாட்ஷா மாணிக்கம். 

அப்பாவி முஸ்லிம் ஆண்கள்,பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள்... என ஆயிரக்கணக் கானவர்களை கொன்று குவித்த கொடூரத்துக்குக் காரணமானவர் நரேந்திர மோடி. இந்த நரவேட்டை நரேந்திர மோடி உங்களுக்கு நல்ல நண்பரா? இவர்தான் வலிமையான தலைவரா? அந்தக் கொடூரங்களில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்காமல் செய்தவர்தான் சிறந்த நிர்வாகியா?சொல்லுங்கள் மாணிக் பாட்ஷா? சொல்லுங்கள்.

ப.முருகன்

நன்றி - தீக்கதிர் 15.04.2014

2 comments:

  1. சரியான கேள்வி தோழரே ! இதற்கு ரஜினி கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் ! எனக்கென்னவோ இலங்கையின் ராஜ பக்சேவை விட மோடி கொடூரமானவர் என்றே தோன்றுகிறது ! அப்படிப்பட்டவருடன் ரஜினி எப்படி ஒரு மணி நேரத்தை செலவிட்டார் என்பதுதான் புரியவில்லை ! தேர்தல் நேரத்தில் இவரிடம் பேசியதால்தான் இதுவரை மோடியை பற்றி எதுவும் பேசாமல் இருந்த ஜெ கூட கொந்தளித்துள்ளார் ! அம்மையார் குறைந்த எண்ணிக்கையில் வென்றால் கோச்சடையானுக்கு பிரச்சினைதான் !

    ReplyDelete
  2. thiruvaalar rajnikanth avargale neengal kandippaaga modi avargallukku aaaharavaaga voice kodukka koodadhu

    ReplyDelete