Sunday, May 25, 2014

எம்.எஸ்.வி வடித்த கண்ணீர்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgktNYJmhV3wny5sztHwWhptYeIM3euBvkj3s1SBpEOPP62ombSztG1Nt6JInceaZhUIne16bqkVREWBE_z_kZcEEzFiCldwvbxva3KJJzV-oqip3_EfFghzUXzf5C5smP3lfOrwCD1oOrg/s1600/7411_17_Nizhal+Nijamakirathu.jpg

ஆனந்த விகடனில் விகடன் மேடையில் எஸ்.பி,பி  அளித்த
பதில்களில் நெஞ்சைத் தொட்ட ஒரு பதில் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் வடித்த கண்ணீர் பற்றியது.

நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் "இலக்கணம் மாறுதோ "
படத்தின் ஒலிப்பதிவு முடிந்ததும் அதன் பாதிப்பு விலகாமல்
எம்.எஸ்.வி கண்ணீர் வடித்ததாக அவரது மனைவி தொலைபேசி
செய்து கூறியதாகவும் அதுநாள் வரை பாலசுப்ரமணியன் அவர்களே
என்று அழைத்த எம்.எஸ்.வி பாலு கண்ணா என்று அழைத்ததாகவும்
எஸ்.பி.பி. கூறி நெகிழ்ந்து போயிருப்பார்.

அதற்குக் காரணமான இந்த பாடலை பார்க்க ஒவ்வொரு 
நாளும் நினைத்தாலும் இன்றுதான் அவகாசம் கிடைத்தது.

எவ்வளவு சிறப்பான பாடல் இது.....

கண்ணதாசன் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் அற்புதமான
இசை வடிவம் அளிக்க எஸ்.பி.பி யும் வாணி ஜெயராமும்
தங்கள் தேனிசைக் குரல்களால் உயிர் கொடுத்திருப்பார்கள்.

திரையில் அதை கமலஹாசனும் சுமித்ராவும் செய்திருப்பார்கள்.

பாலச்சந்தரின் மறக்க முடியாத படத்தின் மறக்க முடியாத பாடல்.

நீங்களும் இங்கே பார்த்து, கேட்டு ரசியுங்கள்

Saturday, May 24, 2014

கண்ணெதிரே ஓர் விபத்து

ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக நடந்த ஒரு விபத்து.

பல்ஸ்ர் பைக்கில் ஒரு வாலிபன் ஒரு சின்ன தெருவில்
சீறிப் பாய்வது, திடீரென பிரேக் போட்டு நிறுத்துவது,
அரை வட்டம் போட்டு வேகமாக கிளம்புவது என்று
சாகசங்கள் செய்து கொண்டிருந்தான். யாரையோ 
ஈர்ப்பதற்காக என்பது தெரிந்தது.

ஆனால் அரை வட்டம் போட்டு வேகமாக திரும்பும் போது
சறுக்கி அவனும் பைக்குமாக கீழே விழுந்தார்கள்.

காலில் நல்ல அடி. பாண்ட் கிழிந்து ரத்தம் சொட்டியது.
எலும்பும் முறிந்திருக்கலாம். அவனையும் கூட இருந்த
நண்பனையும் ஆட்டோ ஏற்றி அனுப்பினோம் என்றாலும்
கூட  யாரும் அந்த பையனுக்காக அனுதாபப்படவில்லை
என்பதுதான் யதார்த்தம்.

"தேவையில்லாம சீன் காட்டிட்டு இப்ப அடி பட்டுட்டான்.
இந்த பசங்களுக்கு பைக் ஏறினாலே ஹீரோனு நினைப்பு"

இது ஒரு பெரியவரின் வார்த்தை.

நியாயம்தான். 

தேவையற்ற சாகசங்களில் இழப்பதற்கு உயிர் என்ன
மலிவானதா?
 

திரை நட்சத்திரங்களின் வெற்றிகள் தோல்விகள்





மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட சில திரை நட்சத்திரங்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிலர் தோற்றுப் போயுள்ளனர்.

சினிமா ஸ்டண்ட் போல பல்டி அடித்து கட்சிகளுக்கிடையே தாவிக் கொண்டிருந்த விஜயசாந்தி தோற்றுப் போய் விட்டார்.

ராமாயண சீதை ஸ்மிர்தி இராணியை விட ராகுல் காந்தி பரவாயில்லை என்று அமேதி மக்கள் முடிவு செய்து விட்டனர்.

முன்னாள் இந்திய அழகி குல் பனாக்கிற்கு பஞ்சாப் மக்கள் ஆதரவு தரவில்லை.

ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி பின்னிலையில் இருந்த போது நக்மா முன்னிலை பெற்றிருந்தார். மீரட்டில் நக்மாவை பார்க்க திரண்ட கூட்டம் வாக்காக மாறவில்லை.

இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற குத்து ரம்யா எனப்படுகிற திவ்யா இம்முறை கர்னாடகாவில் அதே தொகுதியில் தோற்றுப் போய் விட்டார்.

இரண்டு மூன்று கட்சி மாறிய ஜெய்ப்பிரதாவும் தோற்றுப் போய்விட்டார்.

எனக்கு மதுராவோடு உணர்வுரீதியான பந்தம் இருக்கிறது என்று சொன்ன ஹேமா மாலினிக்கு மதுரா தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். தொகுதிக்கு வந்து அந்த பந்தத்தை தக்க வைத்துக் கொள்வாரா என்பது போக போகத் தெரியும்.

கடந்த முறை தெலுங்கு தேசக்கட்சி வேட்பாளராக உள்குத்து வேலைகளால் தோற்றுப் போன ரோஜா, இந்த முறை வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக அதே நகரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகி விட்டார்.

நான் மிகவும் வருத்தமடைகிற வெற்றி முன்னாள் நடிகை மூன் மூன் சென் பங்குரா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். தலை சிறந்த நாடாளுமன்றவாதியான தோழர் பாசுதேவ் ஆச்சார்யா கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

அவரது நாடாளுமன்ற அனுபவம், விஷய ஞானம், பேச்சாற்றல், பிரச்சினைகள் பற்றிய தெளிவான புரிதல் ஆகியவை இல்லாமல் போவது பதினாறாவது மக்களவைக்குத்தான் மிகப் பெரிய இழப்பு. மம்தாவின் மோசடி வேலைகளாலும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாததனத்தாலும் ஒரு மிகச் சிறந்த உறுப்பினரை இந்திய மக்களவை இழந்துள்ளது. 

பின் குறிப்பு - இதில் ஒரு நடிகையின் பெயரை நான் தெரிந்தே தவிர்த்துள்ளேன்
 

பாகிஸ்தானுக்கு கரண்ட் விக்க நவாஸ் ஷெரிப்பை மோடி கூப்பிட்டாரா?

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழியை
மோடி நிரூபித்து விட்டார்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் தனது
பதவியேற்பு விழாவிற்கு அழைத்த மர்மம் கொஞ்சம்
கொஞ்சமாக விலகுகிறது.

மோடியின் பைனான்சியரான ஆதோனி கம்பெனி
குஜராத்தில் அமைக்கவுள்ள மின் நிலையத்தில்
உற்பத்தியாகும் மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு
விற்க நினைக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி
உள்ளன.

ஆகவே தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான் 
பிரதமரை பிரியாணி செய்து விடுவேன் என்று
சொன்னாலும் இப்போது பாசம் காண்பிப்பது
நண்பன் துட்டு பார்க்கவே என்று தோன்றுகிறது.

தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கி 
பட்ஜெட்டில் பெரும்பகுதியை ராணுவ தளவாடம்
வாங்க ஒதுக்கி, அதில் ஒரு பகுதியை ஊழல்
செய்வதை விட, அண்டை நாட்டோடு அமைதியை
உருவாக்குவது நல்லது. 

 

Friday, May 23, 2014

காய்ச்சல் வந்தால் தவறில்லை



குடையைத் தூக்கியெறி,
கோடை மழையைக் கொண்டாடு.

ஓரத்தில் ஒதுங்காதே,
சாலைக்கு வந்து விடு

துணிகள் நனைந்தால் என்ன?
உள்ளம் நனைய வேண்டாமா?

உடல் குளிர்ந்தால்
உள்ளமும் குளிர்ந்திடுமே..

வேடிக்கை பார்க்காதே.
நீயும் வந்து இணைந்திடு.

மழையில் நனைந்திடு
மகிழ்ச்சியை பெருக்கிடு

காய்ச்சல்தான் வந்தால் என்ன?
இப்படி ஒரு மழை
இனி என்று வருமோ
நம் ஊருக்கு.....

(நேற்று அலுவலகத்திலிருந்து கொட்டும் மழையில் நனைய நனைய மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். அப்போது மழைக்கு அஞ்சி அங்கங்கே ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்து தோன்றியது?




Thursday, May 22, 2014

காசு கொடுத்து மழை

கட்டணம் நிர்ணயித்து
கண்காட்சி போல
காசு வசூலித்தால்
கோடியாய் இங்கே
பணம் கொட்டும்,
அடித்துப் பெய்கிறது
மழை
அதை நாங்கள்
மறந்தே போன பின்

வைகோ - மோடியை விட சிறந்த நடிகர்

சில தினங்கள் முன்பாக மோடி பெற்ற சிறந்த நடிகர் விருது 
இப்போது வைகோ வசம் வந்துள்ளது.

பெரியார், அண்ணாவின் விரல் பிடித்து அரசியல் கற்றுக் 
கொண்ட வைகோவிற்கு பாஜகவின் அரசியல் கோர முகம்
தெரியாதா என்ன? ராஜ பக்சே வருகைக்கு எதிராக சாஞ்சி
வரை போராட்டம் நடத்தியவர்தானே அவர்? அப்போது
ராஜபக்சேவை அழைத்து என்ன பாரக் ஒபாமாவா இல்லை
விளாடிமிர் புடினா? பாஜக தானே?

பாஜக ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழருக்காக, 
தமிழக மீனவர்களுக்காக துரும்பைக் கூட கிள்ளிப் 
போடாது என்பது வைகோவிற்கு மற்ற எல்லோரையும் விட
நன்றாகவே தெரியும். ஆனாலும் வேறு எங்கும் செல்ல 
முடியாது, தனியாக நிற்கும் தைரியமும் கிடையாது.
அதனால்தான் முற்றிலும் முரண்பாடான கூட்டணி
என்று தெரிந்தும் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார்.

ஆனாலும் மோடி வந்தால் இலங்கைப் பிரச்சினை தலைகீழாய்
மாறி விடும் என்று பிரச்சாரம் செய்தார். ஏதோ நாளையே
ராஜபக்சேவை மோடி கைது செய்து விடுவார் என்ற பிம்பத்தை
உருவாக்க முனைந்தார். 

ராஜபக்சே வருவதை கண்டிக்காவிட்டாலோ, இல்லையில்லை
கண்ணீர் விட்டு மன்றாடாமல், கருப்புத்துண்டு அணிந்து
பதவியேற்பு விழாவிற்கு போய் விட்டால் இனி இலங்கைத்
தமிழரை வைத்து அவரால் அரசியல் தொழில் நடத்த முடியாது.

மேலும் மோடியோடு இணைந்ததால் அவரால் வெற்றியும் பெற
முடியவில்லை. ஆகவே கழண்டு கொள்ளவும் வாய்ப்பு வேண்டும்.

ஆக கண்ணீர் மல்க மல்க கை கூப்பி தனது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்தி விட்டார்.

பார்ப்போம் அடுத்த காட்சியை எப்படி அரங்கேற்றுகிறார் என்று....