Monday, December 29, 2014

ஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்




தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவை செய்யும், அவர்களிடம்தான் அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் தனியாருக்கு நிகர் யாரும் கிடையாது என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

நெருங்கிய உறவினர்களோடு என் மகன் ஹைதராபாத் சென்றிருந்தான். நேற்று மாலை 4.40 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ விமானத்தில்  சென்னை திரும்ப வேண்டும். 2.30 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை அடைந்து செக் இன் செய்து, பேக்கேஜ் எல்லாம் ஒப்படைத்து செக்யூரிட்டி சோதனை முடிந்து உள்ளே போனதும் நான்கு மணி நேர தாமதம் என்று அப்போதுதான் அறிவித்தார்களாம்.

பயணம் செய்பவர்களின் அலைபேசி எண்கள் அவர்கள் வசம் உள்ள போது நான்கு மணி நேர தாமதம் என்ற தகவலை சொல்லியிருந்தால் நிதானமாக வந்திருப்போமே என்ற கேள்விக்கு பதில் சொல்லவே யாரும் தயாராக இல்லை. துபாயிலிருந்து வர வேண்டிய அந்த விமானம் ஐந்து மணி வரை துபாயிலிருந்து புறப்படவேயில்லை. தாமதத்திற்கான காரணமும் சொல்லப் படவில்லை. செக்யூரிட்டி சோதனை முடிந்து விட்டதால் வெளியேயும் செல்ல முடியவில்லை. விமான நிலையத்திற்குள்ளே திரிவதைத் தவிர நேரத்தைப் போக்க வேறு எந்த வழியும் இல்லை.

இறுதியில் பத்து மணிக்கு விமானம் வந்து பத்தரை மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பனிரெண்டு மணிக்கு மேல் சென்னை வந்தடைந்திருக்கிறது. இத்தனை மணி நேரம் பயணிகளை காத்திருக்க வைத்துள்ளேமே என்ற குற்ற உணர்ச்சி கூட கொஞ்சமும் இல்லாமல்தான் இண்டிகோ நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது.

சரி இப்படி காக்க வைத்தார்களே, ஏதாவது உணவாவது கொடுத்தார்களா என்று கேட்ட போது என் மகன் சொன்னான். ஐந்து மணிக்கு ஜில்லுனு ஒரு பஜ்ஜியும் சூடாக ஒரு ஜூசும் கொடுத்தார்கள், கூடவே இரண்டு வருடத்துக்கு முன்னாடி தயார் செய்தது போல காய்ந்து போன ஒரு பிரட் சாண்ட்விச். அவ்வளவுதான். இரவு உணவு கூட எதுவும் தரவில்லை.

இதுதான் தனியார் நிறுவனங்களின் பொறுப்புணர்வு, வாடிக்கையாளர் சேவையின் லட்சணம்.

1 comment: