Saturday, December 20, 2014

என்னதான் சொல்லுங்கள்... தனியார் தனியார்தான்!






 

“நீங்கள் கொடூரமானவர்கள்... இன்றைய நிலைமையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறீர்கள்... உங்கள் சேவையின் மூலமாகத்தான் நான் வீடு போய்ச் சேர முடியுமெனில், அதற்குப் பதிலாக நான் நடந்தே போய் விடுவேன்” ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில், உபேர் கார் சேவைக் கம்பெனி குறித்து இவ்வாறு பொரிந்து தள்ளியிருக்கிறார். அதன் காரணம் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன் உபேர் கம்பெனி குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம். 

‘உபேர் கார் சேவை கம்பெனி’ என்பது, சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு சேவை நிறுவனம். உலகின் 45 நாடுகளில் உள்ள 200 பெரிய நகரங்களில் இது தனது சேவையினை நடத்தி வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பாக, புது தில்லியில் இதன் சேவையினைப் பயன்படுத்திய பெண் அவர் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கும்.

இந்த வாரம் திங்கட்கிழமை காலை சிட்னி நகரின் ‘லிண்ட் சாக்லேட் கஃபே’ விடுதிக்குள் துப்பாக்கி முனையில் மக்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டது குறித்து செய்தி பரவியவுடன், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி அதன் அருகில் குவிந்திருந்தவர்கள் அங்கிருந்து விரைந்து வெளியேறினர். தெருவே வெறிச்சோடிப் போனது. அப்பகுதியிலிருந்த மக்கள் அங்கிருந்து விரைந்து வெளியேறிட ‘உபேர்’ கார் சேவை அழைப்பிற்கான கணினி செயலியை பயன்படுத்திடத் துவங்கினர். இச்சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியவுடன், அந்நிறுவனம் குறைந்தபட்ச கட்டணத்தை 100 ஆஸ்திரேலிய டாலர் என உயர்த்தியது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் விதிக்கப்படும் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தியது. வேறு வழியில்லாமல், அந்தப் பணத்தைக் கொட்டி அழுத பின்னர், சமூக வலைத்தளத்தில் மக்கள் தங்களது மனக்குமுறலைப் பதிவு செய்யத் தொடங்கினர். அந்த வரிசையில் ஒன்றுதான் துவக்கத்தில் நீங்கள் படித்தது. டாக்சி சேவைக்கான தேவை மிகவும் அதிகமாக இருந்ததால் ஓட்டுநர்களை ஈர்க்கவே அவ்வாறு கட்டணத்தை உயர்த்தியதாக அந்நிறுவனம் இப்போது சமாளிப்பு வேலையில் இறங்கியிருக்கிறது. 

ஆனால், அந்த நேரத்தில் பயணம் செய்தவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்த இந்நிறுவனம், இது குறித்து கடுமையான விமர்சனம் எழுந்த பிறகே, அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது. லாபம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தால் தனியார் நிறுவனங்கள் துளி கூட மனிதாபிமானம் இல்லாது லாபத்தை நோக்கி எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. 1994ல் சூரத் (குஜராத்) நகரில் பிளேக் என்ற கொள்ளை நோய் தாக்கிய போது, அந்நகரை விட்டு வெளியேறுவதற்கு தனியார் பஸ் கம்பெனிகள் எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பது நினைவிருக்கிறது அல்லவா? 

சூரத் நகரிலிருந்து சென்னை வருவதற்கு ஒரு நபருக்கு ரூ. 25 ஆயிரம் வரை கேட்டார்கள் என்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா என்ன? உலகமயமாக்கல் கொள்கையின் வாயிலாக இவர்களைப் போன்றவர்களை எல்லாம் இந்தியாவிற்குள் வர அனுமதித்து விட்டு, இது போன்றவர்கள் பலர் மேலும் பல துறைகளுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுப்பது இந்திய மக்களுக்கு சேவை(!?) செய்வதற்காகவே என நமது ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் காதுகளில் பூச்சுற்றும் வேலையை துளிக் கூட கூச்சமின்றி செய்து வருகின்றனர் என்பதுதான் இதில் வேதனை! 

கட்டுரையாளர் 

தோழர் எம்.கிரிஜா,
இணைச் செயலாளர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


நன்றி

தீக்கதிர்  18.12.2014 

3 comments:

  1. Uber taxi driver raped a Delhi woman. Nokia company in Sri perumbudur sent 13000 employees home and made
    them jobless.Foxconn company also sacked 7000 employees Long live private sector and Mr Modi wants FDI
    in insurance,railways,and defence sector..BJP and Congress are one and the same. Long live India's democracy
    which has made un educated, un cultured politicians become crorepathies. Trade unions must protect public sector otherwise the rightwing BJP with the help of Adani , Ambant and Mallya will loot public sector BANKS AND
    INSURANCE COMPANIES

    ReplyDelete
  2. சேவை செய்யவா வருகிறார்கள்

    ReplyDelete