Sunday, June 3, 2018

பொருந்தா ஊதிய ரஜனிக்கு புரியாது . . .




முதலாளித்துவ ஊடகங்களில் மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் கண்டு கொள்ளப்படாத ஒரு போராட்டம் பனிரெண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

அஞ்சல் துறையின் பாவப்பட்ட ஜென்மங்கள் முன்பு ஈடி ஊழியர்கள் என்று அழைக்கப்பட்டு இப்போது ஜிடிஎஸ் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் பகுதி நேர ஊழியர்கள். கிராமப்புற அஞ்சல் சேவை என்பது இவர்கள் இல்லையென்றால் நடக்கவே நடக்காது.

இரண்டரை லட்சம் ஜி.டி.எஸ் ஊழியர்கள் பனிரெண்டு நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்தியரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஊதியக்குழு முடிந்ததும் அதன்படி ஜி.டி.எஸ்  ஊழியர்களுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு முழு நேர ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது போல விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கும்  ஊதிய உயர்வு கிடைத்து விடும்.

இந்த முறையும் கமலேஷ் சந்திரா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது பரிந்துரையும் அளித்து விட்டது.

அக்குழு பரிந்துரை அளித்து பதினெட்டு மாதங்கள் ஆன பின்பும் அது அமலாக்கப்படவில்லை. அமலாக்குவதற்கு மோடி அரசுக்கு மனமில்லை. பாஜக சார்பு சங்கம் அங்கே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விட்டதால் அரசு கண்டு கொள்ளவில்லை.


மனு அளித்தல், முறையீடு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்,  அடையாள வேலை நிறுத்தம் மீண்ரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று பல கட்டங்களை கடந்த பின்பு இப்போது வேறு வழியின்றி கடைசி கட்டமாக கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த குழுவின் பரிந்துரைப்படி அவர்களுக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும்?

மாதச்சம்பளத்தில் உயர்வு ரூபாய் இரண்டாயிரம் முதல் அதிகபட்சம் நான்காயிரம் ரூபாய் வரை. அப்படியும் கூட குறைந்தபட்ச ஊதியமாக தொழிற்சங்கங்கள் கோருகிற பதினெட்டாயிரம் ரூபாய் என்பது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்குக் கூட வராது.

மோடி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் அன்றாடம் உயர்ந்து வருகையில் நியாயமான ஊதிய உயர்வு மறுக்கப்படுகிற போது அவர்கள் போராடவில்லை என்றால்தான்  அவர்கள் வாழ்வு  சுடுகாடு ஆகும்.

இந்த உண்மையெல்லாம்

ஒரு துளி வியர்வைக்கு 
ஒரு பவுன் தங்கக்காசு 

என்று உழைப்பிற்குக் கொஞ்சமும் பொருந்தாத ஊதியம் வாங்கும் ரஜனிக்கெல்லாம் புரியாது.

Saturday, June 2, 2018

பத்து பாடல்களோடு தொடங்குதம்மா . . .



பாடலின் துவக்கத்திலும் இடையிலும் வரும் இசை மூலம் கவிதை படைத்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜாவின் சில பாடல்களின் முதல் தொகுப்பு இது.

பத்து பத்து பாட்டாக பகிர்ந்து கொள்கிறேன்.

திரு செழியனின் பதிவில் விவரித்த

சுந்தரி கண்ணால் ஒரு சேதி  யுடனே தொடங்குகிறேன்.

அதே பதிவில் அவர் குறிப்பிட்ட இன்னொரு பாடலான

அதே ப்ரியா படத்தில் வரும் ஏ! பாடல் ஒன்று

ரஜனிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இன்னொரு டூயட் பாடலில்
நடுவில் கொஞ்சம் சோகத்தையும் தரும் ஆகாய கங்கை

சிறு பொன்மணி அசையும் அதில் இசை தெறிக்கும்

இப்பாடலைக் கேட்டால் ஆயிரம் மலர்கள் மலரும்

சின்னஞ்சிறு வயதில்   கேட்ட வித்தியாசமான சப்தங்கள்

சின்னக் கண்ணன் அழைக்கையில் குரலா? குழலா? எது இனிது?

அன்றும் சரி இன்றும் சரி அந்த நினைவு ஒரு வித்தியாசமான பறவை


நாளை இன்னொரு பத்து பாடல்களோடு சந்திப்போம்


ஒரே ஒரு ராஜா - இளையராஜா

இசை அரசன் இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் எழுதிய கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


ராஜாவின் சிறப்பம்சமான இடையிசை (Interlude) பற்றி அவர் எழுதியுள்ளது பரவச அனுபவத்தின் பகிர்வுதான்.

அப்படி பரவச அனுபவம் தந்த பல பாடல்களை இன்றும் நாளையும் பகிர்ந்து கொள்கிறேன். இப்போதைக்கு கட்டுரையை படியுங்கள்.

இளையராஜாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்






இளையராஜா 75: அவர் ஒருவர்தான்!


செழியன்

இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்த தினம்

நேற்று முற்பகலில் இளையராஜாவின் பாடலை நானும் சிபியும் கேட்டுக்கொண்டிருந்தோம். மூன்றாம் பிறை படத்தின் துவக்கப் பாடல். இசை மாணவனான சிபி என்னைப் பார்த்துப் புன்னகைத்து, “அவருக்கு மட்டும் எப்படிப்பா இப்படியெல்லாம் தோணுது? எனக்கு அவரு கம்போஸிங் கத்துக் குடுப்பாரா?” என்று கேட்டான். “கம்போஸிங் கத்துக் குடுக்க முடியாது. நீயே அவரு பாட்டுல இருந்து கத்துக்க வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு இளைய நிலா பாடலின் பல்லவிக்குப் பிறகு வரும் கிட்டார் இசையை ஒலிக்கவிட்டு “இதை வாசிச்சுப் பாரு” என்றேன். கிட்டாரில் விரல்கள் அங்கும் இங்கும் தாவி அரைமணி நேரப் பயிற்சிக்குப் பிறகு அந்த இசையை வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைத்தான்.
கல்லூரி நாட்களில் சிவகங்கை பூச்சொரிதல் விழாவுக்கு ஆர்கெஸ்ட்ரா நடக்கும். அதில் ஒருமுறை ப்ரியா படத்தின் டார்லிங் டார்லிங் பாடலின் துவக்க இசையை இசைக் கலைஞர்கள் வாசித்துவிட்டுப் புருவத்தை உயர்த்தித் தலையை அசைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு பாடல் அடிப்படையாக ஒரு ட்யூன் வழியாகத்தான் இயங்குகிறது. இதை நம் வசதிக்காக ராகம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அந்த ஒரு ட்யூனின் ஆதாரத்திலிருந்து வேறு வேறு வகையான இசையை வேறு வேறான இசைக் கருவிகளைக் கொண்டு பாடலுக்குள் இளையராஜா நிகழ்த்துகிற அற்புதம்தான் ஆச்சரியமானது. Change over என்று சொல்லப்படும் குறிப்பிட்ட கதிக்குள் மாறிக்கொண்டே இருக்கும் இந்த இசைத் துணுக்குகளை மட்டும் நாம் கவனித்துப் பார்த்தால் அதுவே அலாதியான அனுபவமாக இருக்கும்.

இசையின் பகுதியாகவே இருக்கும் ராஜா

குழந்தைகளிடம் க்ரீம் பிஸ்கட்டுகளைக் கொடுத்தால் அவர்கள் பிஸ்கட்டைப் பிரித்து எடுத்து முதலில் க்ரீமைத்தான் தின்பார்கள். அதுபோல அவரது எந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்குப் பாடலின் இடையில் இருக்கும் இசைதான் (Interlude, prelude) முதல் ஆர்வம் (Interlude என்பது பாடலின் முதல் சரணத்துக்கும் இரண்டாவது சரணத்துக்கும் இடையில் வருகிற இணைப்பு இசை. Prelude என்பது பாடலின் துவக்க இசை). மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்வது போல இளையராஜா பாடலின் இசைப் பகுதியாகவே இருக்கிறார். அவரது இசையை ரசிகராகவோ அல்லது மாணவனாகவோ அணுகுகிற யாருக்கும் அந்த பிரமிப்பு தவிர்க்க முடியாதது. காரணம், அந்த இசைச் சேர்க்கையில் வரும் அற்புதமான இசை மாற்றங்கள்.

இளையராஜாவுக்கு முந்தைய திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒரு பாடலின் ராகத்தில் அது தரும் பாவங்களில் அற்புதமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை நம் இந்திய இசை மரபு வழி வருபவை. இந்திய இசை மரபு என்பது குரலை முதன்மைப்படுத்தி இயங்குகிறது. ஒரு பாடகர் பாடுவார். அவர் பாடும் ராகத்தின் தன்மைக்கேற்ப பல்லவியிலிருந்து அடுத்த சரணத்துக்கு இணைப்பை ஏற்படுத்தும் இசையாகவே அது இருக்கும்.

இது கச்சேரியில் ஒருவர் பாடும்போது அவரது ஆலாபனைகளையே வயலின் அல்லது வீணையில் திரும்ப இசைக்கும் மரபிலிருந்து வருகிறது. பாடுபவரின் குரலுக்கு இடையில் இணைப்புபோல இந்த இசைதான் இருக்கும். இதையே பக்க வாத்தியம் என்று சொல்கிறோம். இந்தப் பக்க வாத்திய மரபின் தொழில்நுட்பம் சார்ந்த தொடர்ச்சியாகவே திரைப்பாடல்கள் பெரிதும் இருந்தன. இதனால் பெரும்பாலான பழைய பாடல்களின் interlude என்பது இரண்டு பல்லவிகளுக்கும் இடையில் ஒரே இசைதான் திரும்பத் திரும்ப இசைக்கப்படும்.
பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்களில் அதன் இசைச் சேர்ப்புக்காகப் பெரிதும் புகழப்படுகிற இரண்டு பழைய பாடல்களைக் கேட்டால் (துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில், பட்டத்து ராணி - சிவந்த மண்) Interlude என்பதில் இருக்கும் வித்தியாசத்தை உணர முடியும். Interlude என்பதை விரைவில் கடந்துவிட்டுக் குரலுக்கு மாறுவதைக் கவனிக்க முடியும்.

ஆனால், இளையராஜா மேற்கத்திய இசையின் மீதிருக்கும் ஆளுமையினால் இந்த interlude, மற்றும் prelude என்பவற்றை அழகான கவிதைகளைப் போலத் தன் பாடல்களின் இடையில் கையாளுகிறார். அதிலும் சிறப்பு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இசைக் கருவிகளின் வழியாகக் கோர்வைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார். இந்தச் சேர்க்கைகள் அபூர்வமானவை. இதனைப் புரிந்துகொள்ள ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்னும் பாடலை எடுத்துக்கொள்ளலாம்.

இசைக் கருவிகள் என்னும் கதாபாத்திரம்

திரைக்கதையின் நுட்பங்கள் பற்றிப் படிக்கும்போது அதில் fore shadow என்றொரு பதம் வருகிறது. அதாவது கதையின் பின்னால் வரும் கதாபாத்திரத்தை அல்லது அதன் குணாதிசயத்தைக் கதையின் தொடக்கத்திலேயே கோடிட்டுக் காட்டுவது. திரைக்கதையின் இந்த யுக்தியை வைத்துக்கொண்டு இந்தப் பாடலில் இசையைப் பார்க்கலாம். ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்குத் தன் பாடலில் இருக்கும் இசைக் கருவிகள் ஒரு கதாபாத்திரம்போல.

திரை இசை என்பது மேற்கத்திய இசை வடிவம் போல தன்னிச்சையானது அல்ல. நமது இசையோ அல்லது பாடலோ ஒரு காட்சியின் மீதுதான் இசைக்கப்படுகிறது. இவ்வாறு இசைக்கப்படும்போது கதையில் அதுவரை நீங்கள் பார்த்த கதாபாத்திரத்தின் தன்மையை மீறி இசை இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அது படத்தின் மனநிலைக்குப் பொருந்தாது. எனவே பாட்டில் இருக்கும் இசை கதாபாத்திரத்தின் தன்மைக்கு மட்டுமல்ல கதையின் தன்மைக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும். பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.

பிரமிக்கவைக்கும் அதிசயம்

‘சுந்தரி’ பாடலை ஒருமுறை கேளுங்கள். இந்த ஏழு நிமிடப் பாடல் காட்சி மாதிரிகள் எதுவும் இல்லாமல் கற்பனையில் முழுக்கப் புனையப்பட்டு பிறகுதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்துக் கேளுங்கள். ஒரு ஏழு நிமிடப் பாடல் காட்சிக்கான soundscape ஐ முழுக்கக் கற்பனையில் உருவாக்குவது என்பது சாதாரண வேலை இல்லை. உதாரணத்துக்கு Dunkrik என்ற படத்துக்குக் கரு இசை (theme music) உருவாக்கப்படுகிறது என்றால் அங்கே காட்சிகளுக்கான மாதிரிகள் நிச்சயம் வரையப்பட்டிருக்கும். வரையப்பட்ட படங்கள் ஒரு திரைப்படம்போல இயங்குவதற்கான தொழில்நுட்பத்தில் இந்தக் காட்சி திரையில் எவ்வளவு நேரம் வரும், எங்கே காட்சி மாறும் என்கிற குறிப்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், நம் திரைப்படங்களில் ஒரு காதல் பாடல் போர்ப் பின்னணியில் நடக்கிறது என்பதைக் கடந்து குறிப்புகள் எதுவும் இருந்திருக்கும் சாத்தியங்கள் இல்லை.

முன்பு சொன்ன fore shadow என்கிற யுக்தியை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பாடலின் பல்லவியில் வரும் புல்லாங்குழல் பாடல் முழுக்கச் செய்கிற வேலையைக் கவனியுங்கள். பாடல் எப்படித் துவங்குகிறது? போரும் காதலும் அகமும் புறமும் எப்படி இணைகிறது? எந்த இசைக் கருவிகள் இணைத்து வைக்கின்றன? அந்த மாற்றம் இயல்பாக எப்படி நிகழ்கிறது? மேற்கத்திய இசையும் இந்திய இசையும் இணைகிற (fusion) இடங்களைக் கவனியுங்கள். இந்தப் பாடலின் முழு இசையையும் காட்சி வழியே மனதில் முதலில் இயற்றி, ஒரு மனிதர் தன் கற்பனையின் வழியே அதை ஸ்வரங்களாகக் காகிதத்தில் எழுதினார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதுபோல அவரது இசைக்கோர்வைகள் உருவாக்கும் நிலக்காட்சிகள் குறித்து, கற்பனை வெளிகள் குறித்து நம்மிடம் அதிகம் பதிவுகள் இல்லை. அவர் பாடலுக்குள் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. பரிசோதனைகள் இருக்கின்றன. அது குறித்த எந்த ஆய்வுகளும் நம்மிடம் இல்லை. முதன்முதல் தஞ்சாவூர் கோயிலைப் பார்க்கும்போது, தாஜ்மகாலைப் பார்க்கும்போது இது மனித உழைப்பா, இது சாத்தியமா என்று பிரமிக்கத் தோன்றும். அப்படி நுணுகிக் கேட்கிற யாரையும் பிரமிக்க வைக்கிறவர் இளையராஜா.

விழித்திருக்கும் பின்னிரவாக அது இருக்க வேண்டும். நெடுஞ்சாலைப் பயணமாக இருக்க வேண்டும். அகாலமான அந்தப் பொழுதின் அமைதியில், இருளின் தனிமையில் அவர் இசை உங்களுடன் இருக்க வேண்டும். அதுதான் தருணம். அப்படிக் கேட்கிற வாய்ப்பு நிகழ்ந்தால் உங்கள் கடந்த காலம் ஒரு மவுனத் திரைப்படம் போல உங்கள் மனதில் ஓடத் துவங்கும்.

மேற்கத்திய இசை மரபில் ஒரு மேற்கோள் இருக்கிறது. ஆயிரம் இளவரசர்கள் பிறந்திருக்கலாம். இனியும் பிறக்கலாம். ஆனால், ஒரே ஒரு பீத்தோவன்தான். அதுபோல நமக்கும் ஒரு ஒரே இளையராஜாதான்.

ரஜனியை படிக்கச் சொல்லுங்க . . .

முந்தைய பதிவின் தொடர்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையினை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அனில் அகர்வாலின் எடுபிடி மோடி
மோடியின் எடுபிடி எடப்பாடி

இந்த இரண்டு எடுபிடிகள் சொன்னதை அப்படியே கக்கிய திருவாளர் ரஜனிகாந்த் இந்த அறிக்கையை படிக்கட்டும். அப்போதுதான் யார் சமூக விரோதிகள் என்பது தெரியும். 

சமூக விரோதிகளை ஆதரித்த அவரும் ஒரு சமூக விரோதி என்பதும் புரியும்.







தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உண்மை அறியும் குழு அறிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018 மே 22, 23 தேதிகளில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு,பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களது உடமைகளுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட உண்மைகள் அறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழு சார்பாக 2018 மே 27, 28 தேதிகளில் களஆய்வு நடைபெற்றது. ஜி.செல்வா (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்புக் குழு) தலைமையில், வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி(சென்னை உயர் நீதிமன்றம்), பேராசிரியர் வி.பொன்ராஜ் (திருநெல்வேலி), நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.மல்லிகா (கோவில்பட்டி),  எஸ்.அரிகிருஷ்ணன் (தென்சென்னை), சு.பேச்சிமுத்து  (தூத்துக்குடி), ஏ. பொன்னுதுரை (ஊடகக் குழு - சிபிஎம், சென்னை)  ஆகியோர் இந்தஆய்வில் ஈடுபட்டனர். 

கள ஆய்வில் சந்திப்பு மற்றும் ஆய்வு செய்யப்பட்ட இடங்கள்

துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த குடும்பத்தினர், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், மக்கள்திரளாக போராட்டத்தில் பங்கெடுத்த திரேஸ்புரம், பாளையங்கோட்டை ரோடு, மடத்தூர், குமரெட்டியாபுரம், அண்ணா நகர், மில்லர்புரம் ஆகிய பகுதிகள், மாவட்டஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு, ஸ்டெர்லைட் ஆலை வாயிலில் கழிவுகள் கொட்டப்பட்ட இடம்; அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்ட மருத்துவர்கள், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம், வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம், வாலிபர் - மாணவர் - மாதர் சங்க நிர்வாகிகள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பிணை மனு விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அமர்வு, கிறிஸ்தவவாழ்வுரிமை இயக்கத்தைச் சார்ந்த ஆயர்கள், செல்வராசு, சுந்தரமைந்தன் ஆகிய தனி நபர்கள், அமைப்புகள், இடங்கள் இக்கள ஆய்வுக்குழுவினால் விவரங்கள் சேகரிப்பதற்கான தளங்களாக அமைந்தன. 

போராட்டத்திற்கான பின்புலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் ஆலைக்கு எதிராக மக்களின் கடும்எதிர்ப்பும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மனுக் கொடுத்தல், பொதுக்கூட்டம், கதவடைப்பு, பேருந்துநிறுத்தம், சாலை மறியல், மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, பேரணி, முற்றுகை, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது எனப் பல வகையான இயக்கங்கள் பலதரப்பட்டவர்களால் நடத்தப்பட்டுள்ளன. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களின் கடும் அடக்குமுறை, தடியடி, கைது,சித்ரவதை, பழிவாங்கல் எனப் பல வகையான ஒடுக்குமுறைகளை மக்கள் எதிர்கொண்டு வந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட எண்ணற்ற பாதிப்புகளை ஆதாரத்துடன்அரசுக்கு அளிக்கப்பட்ட போதும், ஆலையை மூடுவதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

உச்ச நீதிமன்ற ஆணையின்படி முனைவர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழு அளித்த பல ஆய்வு விவரங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து ஏற்படும் பாதிப்புகளை விளக்கி 21.09.2004-ல் வெளியிட்ட அறிக்கைபெரும் அதிர்ச்சியை மக்களிடத்தில் உண்டாக்கியது. ஆனால், அதற்குப் பின்பும் ஆலையின் உற்பத்தியை 70,000 டன்னிலிருந்து 1,00,000 டன்னுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிகரித்துள்ளது. பின்னர் படிப்படியாக நான்கு லட்சம் டன் உற்பத்தியாக எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் உயர்த்தப்பட்டது.மேலும் சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் காயம்,கந்தக அமிலக் குழாய் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு, நச்சுப் புகையால் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவ்வப்போது மயங்கி விழுதல், குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுதல், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து அரசின் உதவியோடு ஆலை விரிவாக்கத்தை ஸ்டெர்லைட் செய்து கொண்டே வந்தது.தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகள் எதையும் ஆலை நிர்வாகம் மதிக்கவில்லை. மேலும் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த ஆலையை மூடக் கோரி ஸ்டெர்லைட்ஆலை எதிர்ப்புக் குழு என்ற பெயரில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். 

ஆலையின் அருகாமையில் உள்ள குமரெட்டியாபுரம் மக்கள் தொடங்கிய தொடர்போராட்டம் தூத்துக்குடியில் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் எதிரொலித்தது. மிக அமைதியான முறையில்ஆலையை மூடக் கோரி கிராமங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போராட்டங்களுக்கு ஆதரவாகபல்வேறு கட்சிகள், அமைப்புகள் செயலாற்றி வந்தன. போராட்டத்தின் 100-ஆவது நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி செல்வதெனஅறிவித்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது; மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரியது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து பதில் கூற வேண்டுமெனக்கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு போராட்டக் குழுவினருக்கு அழைப்பு விடுத்து கூட்டம் 20-ஆம் தேதியன்று நடைபெற்றது.

2018 மே 22, துப்பாக்கிச் சூடு

2018 மே 22 அன்று போராட்டத்தின் 100 ஆவது நாளையொட்டிய பேரணி குறித்து அனைத்து விவரங்களும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் அறிந்து வைத்திருந்துள்ளன. பேரணிக்கு முன்பாக 20 ஆம் தேதியன்று சமாதானக்கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடத்தி உள்ளனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. மேலும் போராட்டக்குழுவினரில் ஒரு பிரிவினர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் இடத்தில், 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் மற்றொரு பிரிவினர் திட்டமிட்டபடி 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை எனவும் அறிவிக்கிறார்கள். 

21 ஆம் தேதியன்று எஸ்.எல்.வி. மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறை ஒருபிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது போராட்டத்தில் பங்கேற்கக்கூடியவர்கள் இடையே உள்ள ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதற்கும் முற்றுகைப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பதை குறைப்பதற்கும் உதவுமென ஆட்சியரும் காவல்துறையும் கருதி இருக்கக்கூடும். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்ற ஒரே கோரிக்கைக்காக 22 ஆம் தேதியன்று கடற்கரை அருகிலிருந்து பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் என சகல பகுதி மக்களும் பாளையங்கோட்டை ரோடு வழியாக பேரணியாக சென்றனர். எந்த அமைப்பும் தங்களதுகொடிகளை எடுத்து வரக்கூடாது என முடிவு எடுத்திருந்ததனால் யாருடைய கைகளிலும் கம்போ பைப்போ எதுவும்  இல்லை. பேரணி தெற்கு காவல்நிலையத்தை அடைந்தபோது, பேரணிக்குள் காவல்துறையினர் மாடுகளை உள்ளே விரட்டியுள்ளனர். இதன் காரணமாக அங்கு சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வி.வி.டி. சிக்னல் அருகில் போலீஸ் பேரிகாட் போட்டு தடுத்துள்ளனர். அதையும் மீறி மக்கள்பேரணி  செல்கிறது. மடத்தூர், மில்லர்புரம், பிஎன்காலனி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் பேரணியில் இணைய கூட்டத்தின் அளவு அதிகமானது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இப்பேரணியைத் தடுக்க காவல்துறையினர் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பேரணியில் வந்த ஒரு பகுதியினர் ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலுக்குச் சென்றனர். முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலுக்கு சென்ற பண்டாரம்பட்டி சந்தோஷ் என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு, அவரின் மண்டை உடைக்கப்பட்டு காவல் துறை வாகனத்தினுள்ளே தூக்கிப் போடப்பட்டார். அங்கு வாகனம் ஒன்று எரிவதை  சந்தோஷ் பார்த்துள்ளார். அந்நேரத்தில் மக்கள் யாரும் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழையவில்லை. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் வாகனத்தை எரித்ததாக சொல்வது பொய் என சந்தோஷ், மாணவர் சங்க நிர்வாகி கலைராஜிடம் தெரிவித்துள்ளார். 

சந்தோஷ் போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய போது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். தன்னையும் போலீஸ் சாகடித்துவிடுவார்கள், காப்பாற்றுங்கள் என அவர் சொன்னது ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் உதவியின் காரணமாகவே உயிர் பிழைத்து தான் சிகிச்சை பெற முயன்றதாக தெரிவித்துள்ளார். முதலில் மக்களை ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறவிட்டு, காவல்துறை பின்னோக்கி சென்றுள்ளது. 

இவ்வாறு இரண்டு, மூன்று முறை முன்னேறுவதும் பின்னே செல்வதுமாக இருந்துள்ளது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லத்தியால் மட்டுமின்றி ரீப்பர் கட்டைகள், இரும்பு பைப்புகள், கற்களைக் கொண்டும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர்; பின்புறத்திலிருந்தும் பக்கவாட்டிலிருந்துமே போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டாலும், அது மக்கள் அடர்த்தியாக இருந்த பகுதியில்தான் வீசப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் வெறுப்படைந்த மக்களில் சிலர், தற்காப்புக்காக கல்லெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

குண்டடிபட்டுக் காயமடைந்த மக்களை உரிய முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற காவல்துறை அனுமதிக்கவில்லை. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்குவதை காவல்துறையினர் தடுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரு சக்கர வாகனத்தின் மூலமாகவே பொதுமக்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இறந்தது யார்? அடிபட்டது யார்? என்கின்ற பதற்றத்தோடு மக்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கும் சேர்த்து பீதியூட்டும் வகையில் மருத்துவமனைக்கு வெளியே தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் 23.05.2018 அன்று காவல்துறை நடத்தியுள்ளது. இதில் வேடிக்கை பார்த்தவர்கள், அத்தெரு வழியே சென்றவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த உறவினர்கள், நண்பர்களும்காவல் துறையின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் சிகிச்சை முறையாகத் தரப்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு துணையாக இருந்தவர்களும் காவல் துறையினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் ஏன் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என கேட்டபோது, சிகிச்சை எடுத்தால் எங்களையும் போலீஸ் வழக்குல சேத்துடும். வீட்டுக்கு ஒருத்தர் மேல கேஸ் போட்டது போதாதா என தங்களுடைய ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களோடு போலீசுக்கும் சிகிச்சை கொடுத்தபோது, போலீஸைத் தொட்ட கையால எங்களைத் தொட்டுசிகிச்சை செய்யாதீங்க என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக மருத்துவமனை டீன் கூறினார். சிகிச்சைக்காக அரசு எந்தப் பணத்தையும் ஒதுக்கவில்லை. மருத்துவர்களின் சொந்த பணத்திலிருந்து ரூ.5,00,000 எடுத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றியதாகத் தெரிவித்தனர். அதேநேரத்தில் காவல்துறையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனைக்குள் வந்தவர்களை, சில மருத்துவர்களே போலீசிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர்.

 மருத்துவமனை டீன் மே 27 ஆம் தேதி தெரிவித்த தகவலின்படி 108 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிக் குண்டுகள் எலும்புவரை பாய்ந்துள்ளதால் சிகிச்சை பெறவேண்டிய 6 பேர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 20 போலீசார் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைபெறுகின்றனர். 2 பேர் தாங்களாகவே தனியார் (மதுரை வேலம்மாள், மீனாட்சி மிஷன்) மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டனர்.

பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் தெரிவித்தவை

l உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 99 நாட்களாக கிராம அளவில் நடைபெற்ற அமைதிப் போராட்டததில் ஈடுபட்டவர்களை ஒருமுறை கூட மாவட்ட ஆட்சியர்  சந்திக்காதது ஏன்?

l தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த முதல்வர், துணை முதல்வர்,
அமைச்சர்கள் என யாரும் முன்வராதது ஏன்?

l குழந்தைகளைக் கையில் ஏந்திக் குடும்பம் குடும்பமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி சென்ற மக்களை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு சாகடித்தது எந்த விதத்தில் நியாயம்?

l துப்பாக்கிச் சூடு நடத்துகிற பட்சத்திலும் முழங்காலுக்கு கீழே சுட்டு கூட்டத்தை கலைக்க வாய்ப்பிருந்தும் அதைச்செய்யாமல் உயிரை பறிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சுட்டுக்கொன்றது ஏன்?

l ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர், மேலும், மருத்துவமனை, திரேஸ்புரம், அண்ணா நகர், குடோன் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

l நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சட்டவிரோதமாகத் தெற்கு காவல்நிலையம், புதுக்கோட்டை, வல்லம்,துப்பாக்கிச் சூடு மைதானம் போன்ற இடங்களில் அடைத்து, அடித்து சித்ரவதை செய்யப்பட்டது ஏன்?

l மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகள், வைத்திருந்த பொருட்கள், வாகனத்தின் சாவி போன்றவைகளை காவல்துறையினர் பிடுங்கி வைத்துக்கொண்டு தரமறுப்பது ஏன்?

l துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?

இப்படியாக பல கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. இதில் இருவரின் கருத்துக்கள் கவனத்திற்குரியவை. 

75 வயது முதியவர் ஒருவர் இப்போராட்டம் குறித்து தெரிவித்தது: முன் எப்போதையும்விட இப்போராட்டம் மூன்று விதங்களில் முக்கியத்துவம் உடையது. 

ஒன்று- சாதி, மதம் கடந்து அனைத்துப் பிரிவினரும் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாய் நடத்தியது. 

இரண்டு- அதிக எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு, ஈடுபாடு, தலைமை வகித்து நடத்தியது.

மூன்று- வழக்கறிஞர்கள் ஒற்றுமையோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக  பணம் வாங்காமல்  வழக்காடியது. 

இக்கருத்தை வேறு ஒரு தளத்தில் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெரிவித்தார். ஒரு சாதி, ஒரு மதப் பிரிவினரின் போராட்டம் என்ற அடையாளத்தைத் தாண்டி, அனைத்துப் பகுதி மக்களின் போராட்டமாக ஸ்டெர்லைட் போராட்டம் இந்த முறை மாறியது. அதுபோல ஒரு பகுதி மக்களின் போராட்டம் என்பதைத் தாண்டிமாவட்டம் தழுவிய போராட்டமாக விரிவடைந்தது. இதைஸ்டெர்லைட் நிர்வாகம் புரிந்துகொண்டது. எனவே, அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கத் திட்டமிட்டது என்றார்.


பரிந்துரைகள்

l உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்புப்
புலனாய்வு நடைபெற வேண்டும்.

l துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி, காவல்துறையினர் ஆகியோரை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலை உள்ள இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

l இதுவரை சுற்றுப்புறச் சூழலுக்கு நேர்ந்துள்ள கேடுகளுக்கான இழப்பீட்டை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடமிருந்து பெற வேண்டும்.

l காவல்துறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சையும் இழப்பீடும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் இன்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

l ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.


வெளியீடு

மனித உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

துப்பாக்கிச்சூட்டிற்கு கையெழுத்து போலியான ஆவணங்களே!

சிபிஎம் உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு

உண்மை அறியும் குழுவின் அறிக்கையை உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள், வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.



திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனிதஉரிமை பாதுகாப்புக்குழு சார்பில் தூத்துக் குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெள்ளியன்று திருச்சியில் வெளியிடப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மனித உரிமை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, குழுவின் உறுப்பினர்கள் சுவாமிநாதன், அபிராமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, வழக்கறிஞர்கள் ரங்கராஜன், லலிதா, திருமூர்த்தி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் உ.வாசுகி நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்டெர்லைட் போராட்டம் என்பது கடந்த 22 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்தஆலையின் விரிவாக்கத்திற்கு நிலங்களை வழங்கியதால் தான் மக்கள் இந்த போராட்டத்தை துவக்கினர். போராட்டம் துவங்கிய நாளில் இருந்து 100-வது நாள் வரை மாவட்ட ஆட்சியர் போராட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. 100-வது நாள் அன்று பேரணியில் இவ்வளவு மக்கள் வரப் போகிறார்கள் எனத் தெரிந்தும் திட்டமிட்டு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் எங்களிடம் கூறியது இன்னும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் நாங்கள் சந்திக்கத் தயார்;  ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான். இதுதான் மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டிற்கு துணை தாசில் தார்கள் உத்தரவிட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பார்க்கும் போது முன்தேதியிட்டு போலியாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்வைக்கிறோம். மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ, பிஏ(ஜெனரல்), சப்-கலெக்டர், தாசில்தார் யாரும் துப்பாக்கிச்சூட்டிற்கு கையெழுத்து போடவில்லை. இவர்களை விட்டு விட்டு துணை தாசில்தாரை கையெழுத்து போட வைப்பது என்பது தயாரிக்கப்பட்ட ஆவணமாக - நடந்த துப்பாக்கிச் சூட்டைநியாயப்படுத்துகிற விசயமாக இருக்கிறது.

 தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி விட்டுவீடுகளில் புகுந்து இளைஞர்களை இழுத்து செல்லும் நிலைஉள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழன் அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டி மாணவர் சங்கத்தினர் உள்ளே இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார்கள். காவல்துறையினர் மக்களை துன்புறுத்துகிற, சித்ரவதை செய்கிற படங்களை பத்திரிகையாளர்கள் எடுத்து விட்டால் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்நடக்கிறது.கடந்த 25-ஆம் தேதி சுமங்கலி கல்யாண மண்டபம் அருகில் தீக்கதிர் செய்தியாளர் குமார், செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி.அருண்சக்திகுமார் உள்பட போலீஸ் பட்டாளம் அங்கு இருந்துள்ளனர். மண்டபத்தில் தங்கி இருந்த சிலரை கைது செய்ததை குமார் படம் பிடித்துள்ளார். உடனே அவரைத் தாக்கி செல்போனைப் பறித்து, படங்களை அழித்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடு என மிரட்டியுள்ளனர். 

ஒட்டுமொத்தமாக நடந்த துப்பாக்கிச் சூடு, கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட செயல்பாடு; இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலியான, காயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் தகுதியான பொருத்தமான இழப்பீடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எல்லாம் இணைத்து ஜூன் 4-ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

இவ்வாறு உ.வாசுகி கூறினார்.

நன்றி - தீக்கதிர் 02.06.2018

முழுமையான அறிக்கை - அடுத்த பதிவில்

Friday, June 1, 2018

கச்சநத்தம் - இதுவே இறுதி நிகழ்வாகட்டும்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின்   முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

பொறுப்புணர்வோடு செயல்பட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்களுக்கு பாராட்டுக்கள்.





கச்சநத்தம் களம்
-------------
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது சாதி ஆதிக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் திரு. சண்முகநாதன், திரு. ஆறுமுகம், திரு.சந்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

மதுரை அரசு மருத்துவ மனையில் இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.முருகவேல்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட போராட்டக்குழு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டது. பல்வேறு திருப்பங்கள், இடையூறுகளை கடந்து கோரிக்கைகள் வென்றெடுக்கப் பட்டுள்ளன.

போராடத்தின் பங்கேற்க 30 ம் தேதி வருகைதந்த தோழர்.பெ.ஜான்பாண்டியன் அவர்கள் போராட்டகுழுவோடு தன்னை இணைத்துக்கொண்டு  சிறப்பான பங்களிப்பு செய்தார்.


தோழர்.பெ.ஜான்பாண்டியன்    அவர்களோடு போராட்டக்குழு தலைவர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.முருகவேல்ராஜன் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர்.க.பாலபாரதி (சி.பி.எம்), தோழர்.ஆர்.கிருஷ்ணன்(சி.பி.எம்)  தோழர்.குணசேகரன்(சி.பி.ஜ)

தோழர்.எம்.கந்தசாமி மாவட்ட செயலாளர்( சி.பி.எம்) தோழர்.கண்ணகி  வட்ட செயலாளர்(சி.பி.ஜ) தோழர்.இன்குலாப் மாவட்ட செயலாளர் (வி.சி.க)ஆகியோடு  தீ.ஒ.மு சார்பில் நானும் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் மிகுந்த பயன்அளித்தது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலமாக 

1.விடுபட்டிருந்த உண்மை குற்றவாளிகள் பெயர்கள் FIR ல் இணைக்கப்பட்டன.

2.புகார்களை அலட்சியம் செய்து வந்த சார்பு ஆய்வாளர்கள் செல்வம்,ஜானகிராமன் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

3.கச்சநத்தம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பது.

4.கச்சநத்தம் கிராமத்தில் முத்துசேர்வை என்பவர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்பது.

5.தீவிர சிகிச்சை தேவைப்படுகிற மலைச்சாமி,சுகுமாறன் ஆகியோரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்ப்பது.

6.கச்சநத்தம் கிராமத்தை திருப்பாசேத்தி காவல்நிலைய எல்லைக்குள் கொண்டுவருவது.

7.நிவாரண தொகையை உயர்த்திட பரிந்துரை செய்வது. 

ஆகிய முடிகள் எட்டப்பட்டது 

அதன்பிறகு ,சிகிச்சை பெற்று வருகிறவர்களை பார்த்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.சி/எஸ்.டி கமிஷன் துணை தலைவருடன் சந்திப்பு நடைபெறது. 


முடிவுகள் மக்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களின ஒப்புதலோடு இன்று(1.6.2018) உடல்களை பெற்றுக்கொள்வது
என முடிவு செய்யப்பட்டது.

எண்ணிப்பார்க்க முடியாத பாதிப்புகளை எதிர்கொண்ட கச்சநத்தம் மக்களின் உறுதி மகத்தானது.

போராட்ட களத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்த   திரு.கண்ணபிரான் பாண்டியன்,வழக்கறிஞர் பாஸ்கர் மற்றும் போராளிகள் முக்கியமானவர்கள்.

தோழர்.சுப அண்ணாமலை,    தோழர்.முருகன் கண்ணா, வழக்கறிஞர் சோலை,  முனுச்சாலை ராமர், புலிப்பாண்டியன், நாகை.திருவள்ளுவன், எவிடன்ஸ் கதிர் என பங்களிப்பு செய்தவர்கள்  (பெயர் தெரியாத காரணத்தால் சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம்) பாராட்டுக்குறியவர்கள்.



புதிய தமிழகம் தலைவர்.திரு.க.கிருஷ்ணசாமி அவர்கள் களத்திற்கு வந்து,பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அரசோடு பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் .தொல்.திருமாவளவன் ,நாம் தமிழர் கட்சி தலைவர். தோழர்.சீமான் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்கள். இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

சி.பி.எம் மாநிலக்குழு ரூ 50 லட்சம் நிவாணம் கோரி அறிக்கை வெளியிட்டது. சி.பி.எம் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து தொடர்பில் வந்து நிலைமைகளை கேட்டறிந்தார். 

சி.பி.எம் தலைவர்கள் தோழர்.க.கணகராஜ், க.பாலபாரதி, ஆர்.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், என்.நன்மாறன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி மானாமதுரை உள்பட 18 இடங்களில் ஜூன் 5 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. முன்னணியின் தலைவர்கள் தோழர்.ஆர்.கிருஷ்ணன், எம்.கந்தசாமி,   த.செல்லகண்ணு, எம்.பாலசுப்பிரமணியமன், மா.கணேசன்.மற்றும் சி.பி.எம், தீ.ஒ.மு தோழர்கள்   4 தினங்களும் போராட்ட களத்தில் இருந்தனர். 


தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை,ஆதவன் தீட்சண்யா மிகுந்த கவலையுடன் விசாரித்தனர். 


இயக்குனர் பாரதிராஜா, கௌதம் ஆகியோர் வருகை வரவேற்பிற்குரியது. 

இறுதி நிகழ்விற்கு உடல்கள் இப்போது எடுத்து செல்லப்படுகிறது. 

இதுவே இறுதி நிகழ்வாகட்டும்.

கா.ப.கா.க.ப. நல்ல செய்தி

காஷ்மீர் பற்றி காலையில் கண்ணில் பட்ட நல்ல செய்தி



(எவ்வளவு பெரிய தலைப்பு?)

ஆம். இன்றைய ஹிந்து இதழில் காலையில் முதலில் கண்ணில் பட்டதே அந்த செய்திதான்.

முன்பொரு காலத்தில், காஷ்மீரில் அமைதி நிலவிய காலத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் எழுதிய    பாடல்களை இப்போதைய இஸ்லாமிய கலைஞர்கள் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடியுள்ளனர்.

ரம்ஜான் நோம்பிலிருந்த பார்வையாளர்கள் மெய் மறந்து போயுள்ளார்கள். பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அற்புதமான கலைப் பொக்கிஷங்களை இழந்துள்ளோம் என்றும் பலரும் மனமாற வருந்தியுள்ளார்கள். இப்போதைய நிலை மாற வேண்டும் பண்டிட்டுகள் திரும்ப வேண்டும் என்று உளப்பூர்வமான விருப்பத்தை தெரிவித்து உள்ளார்கள்.

இந்த நிலை தொடர வேண்டும்.

இந்த மன நிலையை சீர் குலைக்க இரு தரப்பிலும் முயலாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக  இந்திய ராணுவம்  அமைதியாக இருக்க வேண்டும்.