Friday, August 14, 2020

ஜஸ்ட் ஷட் அப்



வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டார் என்று இன்று தீர்மானித்துள்ள உச்ச நீதிமன்றம் அவருக்கான தண்டனையை  20,ஆகஸ்ட் அன்று அறிவிப்பதாக சொல்லியுள்ளது.

அவர் உச்ச நீதிமன்றத்தை அவதூறு செய்தார் என்ற தீர்ப்பு கீழே உள்ள இரண்டு ட்வீட்டுகளின் அடிப்படையில்தான் தரப்பட்டுள்ளது. 




முதல் ட்வீட்டில் நான்கு தலைமை நீதிபதிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது படமே நான்காமவர் மீதான கருத்து சரியென்பதை உணர்த்தி விடும். அதிலே வண்டி ஸ்டாண்ட் போடப்பட்டுள்ளதை கவனிக்காமல் ஹெல்மெட் போட வேண்டும் என்று சொல்லி விட்டேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். 

மற்றபடி ஒரு அரசியல் தலைவரின் ஐம்பது லட்ச ரூபாய் பைக்கில்  அமர்ந்து போஸ் கொடுப்பதை, அதுவும் கொரோனா காலத்தில் மாஸ்க் இல்லாமல் போஸ் கொடுப்பதையெல்லாம் பணி ஓய்வுக்குப் பின்பு வைத்துக் கொண்டால் யார் கேட்கப் போகிறார்கள்!

இரண்டாமவரைப் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நால்வரில் மூன்றாமரும் இருந்தார். பின்பு தடம் மாறி இன்று எம்.பி ஆகவும் ஆகி விட்டார்.

நான்கு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஊடகங்களிடம் தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சித்த போது போகாத மானமா இப்போது பிரஷாந்த் பூஷனின் ட்வீட் மூலம் போய் விட்டது!


ஜனவரி மாதம்  எங்கள் அகில இந்திய மாநாடு விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு கோபால கௌடா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அவரது முழு உரையையும் முன்னரே

 எல்லா நீதிபதிகளும் இப்படி இருந்தால்?

என்று பிப்ரவரி மாதமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதிலே ஒரு பகுதியை மட்டும் இப்போது தருகிறேன்.

‘நான் அதன் அங்கமாக இல்லை’

அரசியல் சட்டப்பிரிவு 370 என்பது இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைக்கப்படுவதற்கான சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது பறிக்கப்பட்டுள் ளது. கூட்டாட்சி தத்துவம் தாக்கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை களில் சிகிச்சை பெற இயலவில்லை. அரசியல் சட்டப்பிரிவு 32ன் அடிப்படையில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டும். ஆனால் ஆட்கொணர்வு மனு போட்டால் - சீத்தாராம் யெச்சூரி உட்பட பலர் நீதி மன்றத்தை அணுகினால், உச்சநீதிமன்றம், நீங்கள் போய் பார்த்து வாருங்கள் என்கிறது. சட்டப்படி தலையிட மறுக்கிறது. உச்சநீதிமன்றம் தனது கடமையை செய்யவில்லை. இன்றைய உச்ச நீதி மன்றத்தின் அங்கமாக நான் இல்லை என மகிழ்ச்சி அடைகிறேன். 

ஆக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மீது நீதிபதிகளே விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரி, இப்போது ஏன் அவதூறு நடவடிக்கை?

நிஜமாகவே அவசர நிலை காலத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. எனவே எதிர்ப்புக் குரலை முடக்க அரசு, நீதித்துறை, நிர்வாகம், காவல்துறை என அனைவருமே கூட்டாக செயல்படுகிறார்கள்.

இதை உணர்ந்து கொள்கிற அனைவருக்கும்

அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துக்கள்

நாளை அதற்கும் வாய்ப்பில்லாமல் நம்மிடமும் சொல்வார்கள்
ஜஸ்ட் ஷட் அப்


No comments:

Post a Comment