Showing posts with label ரத்த தானம். Show all posts
Showing posts with label ரத்த தானம். Show all posts

Monday, April 9, 2018

இலக்கு முடிந்தது. இனியும் தொடரும் . . .


எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட "அறுபது முறை ரத்த தானம்" என்ற இலக்கு இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலக்கு முடிந்தாலும் உடல் நலன் வரை அனுமதிக்கிற வரை இப்பணியை நிச்சயம் தொடர்வேன். என்ன புதிதாக இலக்கு எதையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை!

முதல் முறை என்னை ரத்த தானம் செய்ய அழைத்துப் போன எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 

அறுபது முறையும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில்தான் ரத்த தானம் செய்துள்ளேன்.  இந்திய வரலாற்றின் கறுப்பு நாளான டிசம்பர் 6, 1992 ம் நாளன்றுதான் முதல் முறை ரத்த தானம் செய்தேன். 

இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் ரத்த வங்கியில் எத்தனையோ ஊழியர்கள் மாறியுள்ளார்கள். ஆனால் மாறாமல் இருப்பது  அவர்களின் கனிவுதான் என்பதை இங்கே பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.

முதல் முறை ரத்த தானம் செய்து விட்டு வீட்டுக்கு வருகையில்  அதன் நினைவாக திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் கர்னாடக சங்கீத கேஸட் ஒன்று வாங்கி வந்தேன். இப்போது டேப் ரிகார்டரும் காஸெட்டுக்களும் பரணுக்கு போய் விட்டது. பாரதி புத்தகாலயம் திறந்திருந்தால் ஒரு புதிய புத்தகம் ஒன்று வாங்கி வர வேண்டும்.

ரத்த வங்கியிலிருந்து வெளி வருகையில் ஒரு மன நிறைவு இருந்தது.

வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் உருப்படியாக ஏதாவது செய்துள்ளோமா என்று திரும்பிப் பார்க்கையில் அப்படி சொல்வதற்கு நம்மிடமும் ஒன்று உள்ளது என்ற நிறைவுதான் அது. 

Monday, December 4, 2017

மகிழ்ச்சியாய்...மன நிறைவாய்...இனிய நாளாய்

இன்றைய நாள் இனிமையான நாளாய் அமைந்திருந்தது.



ரத்த தானம் செய்வதற்காக இன்று சி.எம்.சி மருத்துவமனை சென்றிருந்தேன். திங்கட்கிழமை ஆதலால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஸ்க்ரீனிங்கிற்கு அழைக்கவே நேரமானது. காத்திருந்த நேரத்தில் பக்கத்தில் பார்த்தேன். இரண்டு கிராமத்து இளைஞர்கள் பதட்டமாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் முறையாக ரத்த தானம் செய்ய வந்துள்ளார்கள் என்பது புரிந்தது. அவர்களோடு பேச்சு கொடுத்தேன்.

ஆம். அவர்கள் முதல் முறையாக ரத்த தானம் செய்ய வந்தவர்கள்தான். ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அக்கா ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் ஐந்து பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

"எங்களுக்கு ரொம்பவே பயமாயிடுச்சு. கிராமத்திலேந்து ஆட்கள் வந்ததால் அவங்க குடுத்துட்டாங்க. நாங்க எஸ்கேப் ஆயிட்டோம். இன்னிக்கு வேற ஆளுங்க கிடைக்காததால் நாங்களே வந்துட்டோம். பயமாத்தான் இருக்கு"

இருபத்தி ஐந்து வருட ரத்த தான அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டு தைரியம் அளித்து முடிப்பதற்குள் எங்களுக்கு அழைப்பு வந்து விட்டது.

ஸ்கீரினிங் முடிந்த பின்பும் பேசிக் கொண்டிருந்தேன். "வலியெல்லாம் ஒன்றும் இருக்காது. பத்து நிமிடத்தில் முடிந்து விடும். இன்று எடுக்கும் ரத்தம் நாளையே உடலில் புதிதாக சேர்ந்து விடும்"

என்று சொன்னவுடன் அவர்களில் மூத்தவர் சொன்னார்

"இறைக்கிற கிணறுதான்  ஊறும். அப்படித்தான சார்!"

அவர் ஒரு விவசாயி.

மூன்று பேரும் ஒரே நேரத்தில் ரத்த தானத்தை முடித்து விட்டு மருத்துவமனை கொடுத்த சமூசா, பழ ரசத்தை சாப்பிடுகிற போது

அட, இவ்வளவுதானா சார்? ரொம்பவே பயந்துட்டோம். வேற யாருக்காவது வேணும்னாலும் நிச்சயமா கொடுப்போம்" 

என்று கை குலுக்கி விட்டு புறப்பட்டார்கள்.

அந்த கைகுலுக்கலில் உழைப்பாளியின் உறுதியும் நம்பிக்கையும் இணைந்தே இருந்தது.

இந்த நாள் மகிழ்ச்சியாய், மன நிறைவாய், இனியதாகவே அமைந்து விட்டது. 

பி.கு : எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட 60 முறை என்ற இலக்கை அடைய இன்னும் ஒரே ஒரு முறைதான் உள்ளது. அதையும் தாண்டி செல்ல முடிந்தால் அது கூடுதல் மகிழ்ச்சி.

Monday, February 1, 2016

சில கேள்விகளும் விளக்கங்களும்




உயிர் காக்கும் உன்னதப் பணி ரத்த தானம். ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மனதில் சில கேள்விகள் இருக்கும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு கீழே உள்ள பிரசுரம் விளக்கமளிப்பதாக உள்ளது. சி.எம்.சி மருத்துவமனையின் ரத்த வங்கி இப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

அவசியம் படிப்பீர்,
ரத்த தானம் செய்திடுவீர்,
உயிர் காப்பீர்





Monday, July 27, 2015

ரத்த வங்கியில் இன்று




http://www.newmansu.org/uploads/1/2/8/4/12841948/9902996_orig.jpg
இன்று வெற்றிகரமாக ஐம்பத்தி நான்காவது முறையாக ரத்த தானம் செய்தேன். கடந்த முறை ரத்த தானம் செய்த போது எழுதிய பதிவு இது. இன்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாகவே இருந்தனர். நானும் கூட. ஏனென்றால் இம்முறை என் கையிலும் ஸ்மார்ட் போன் இருந்தது.

மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்த நேரத்தில் அருகே அமர்ந்திருந்த ஒரு மாணவனோடு பேசிக் கொண்டிருந்தேன்.வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவன் பகிர்ந்து கொண்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியளித்தது. நண்பர்களாக ஒரு ஐம்பது மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக செயல்படுவதாகவும் அந்த மாணவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ரத்த தானம் செய்து கொண்டு வருவதாகச் சொன்னார்.

வாரம் ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் யாராவது இருக்கிறார்களா  என்று கண்டறிந்து ரத்த தானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி தன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்து உங்களுக்கு தேவைப்பட்டாலும் தயங்காமல் என்னை அழையுங்கள் என்றார்.

உண்மையிலேயே மனம் மிகவும் மகிழ்ந்து போனது. நம்பிக்கையளிக்கும் அந்த இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களை கைகொடுத்து தெரிவித்துக் கொண்டேன்.

இன்று கண்ட இன்னொரு காட்சி இந்தியாவின் வேலையின்மைப் பிரச்சினையை உணர்த்துவதாக இருந்தது. இரு இளம் பெண் ரத்த தானம் செய்ய வந்திருந்தார். ஏதோ ஒரு வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தோற்றத்திலேயே தெரிந்தது.

அந்தப் பெண்ணிற்கு அந்த மாணவர் படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் அந்தப் பெண். இங்கே யாராவது நோயாளியோடு வந்துள்ளீர்களா என்று கேட்டதற்கு "இல்லை, இங்கே "நேச்சுரல்ஸ்" கிளையில் வேலை செய்வதாகச் சொன்னார்.

பல்லாயிரம் ரூபாய் ஊதியம் பெறும் ஐ.டி வேலை அல்ல. பத்தாயிரத்துக்கும் குறைவான ஊதியத்திற்கு பல மாநிலங்கள் தாண்டி மொழி தெரியாத ஊருக்கு வேலைக்கு வந்திருக்கிறார், கட்டுமானப் பணிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவது போல.

வேலைக்கு வந்த இடத்திலும் யாருக்காவது உதவலாமே என்று ரத்த தானம் செய்ய முன்வந்தது பாராட்டுக்குரிய ஒன்று.

 

 

Friday, December 6, 2013

டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் ஆறு வரை, மனதிற்கு மகிழ்ச்சியாய் ஐம்பது.



இன்று ஐம்பதாவது முறையாக ரத்த தானம் வழங்கினேன். இருபத்தி ஓரு வருடங்களில் ஐம்பது முறை என்பது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. ஆனாலும் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி, ஒரு நிறைவு. பல தோழர்களை தொடர்ந்து ரத்த தானம் வழங்க வைத்துள்ளேன் என்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ஒரு தற்செயலான ஒற்றுமை என்பது இருக்கிறது. இந்திய வரலாற்றின் மிக மோசமான கறுப்பு தினமாக ஆறு, டிசம்பர், 1992 அன்றுதான் முதல் ரத்த தானம் தொடங்கியது. இன்று ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தோழரது குடும்பத்து உறுப்பினருக்காக ரத்தம் அளித்துக் கொண்டிருந்த போதுதான் அதுவும் நினைவிற்கு வந்தது.

அந்த முதல் ரத்த தானத்தின் நினைவாக வீடு வரும் வழியில் கே.ஜே.யேசுதாஸின் கர்னாடக இசை காஸெட் ஒன்று கூட வாங்கி வந்தேன். கல்யாணி ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவி என்று ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரு மணி நேரம் ஒலிக்கும் காஸெட் அது. யேசுதாஸின் கற்பனாஸ்வரங்களுக்கு பெங்களூர் தியாகராஜன் வயலினில் ஈடு கொடுப்பார்.

பூஜையைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்து விட்டு பாபர் மசூதியை படுபாவிகள் இடித்ததால், ராணுவம் கையில் இருந்தும் இடிக்கும்வரை வேடிக்கை பார்த்த நயவஞ்சக நரசிம்மராவ் இவர்கள் மீது கனன்று கொண்டிருந்த கோபத்திற்கு வடிகாலாய் அன்று கொடுத்த ரத்த தானமும் யேசுதாஸின் கல்யாணியும் அமைந்திருந்தது.

என்னை முதன் முதலாக ரத்ததானம் செய்ய அழைத்துச் சென்ற எங்கள் வேலூர் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அவர் இருபத்தி ஐந்து முறைகளுக்கு மேல் ரத்த தானம் செய்தவர்.

முதல் முறை ரத்த தானம் அளிக்கச் சென்றபோது வீட்டில் மனைவியிடம் தகவல் சொல்லவில்லை. அவர் பயப்படுவாரோ என எனக்கு பயம். ஆனால் அவருக்கு அதில் மகிழ்ச்சிதான். அதனால்தான் என்னால் தொடர்ந்து இப்பணியை செய்ய முடிகிறது. என் மகனுக்கும் இதில் பெருமை உண்டு.

இன்னும் இப்பணியை தொடர முடியும் என்று நம்புகிறேன்.


Sunday, June 30, 2013

ஹரி, சசிகுமார் போன்ற அரிவாள் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கிட்டத்தட்ட ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு  நேற்று
ரத்த தானம் செய்தேன். நாற்பத்தி ஒன்பதாவது முறையாக
ரத்த தானம் செய்ததில் ஒரு மகிழ்ச்சி. கடந்த முறை ரத்த தானம்
செய்ய சென்ற போது ரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பதாக
நிராகரித்து விட்டார்கள். எனவே ஐம்பது என்ற இலக்கை அடைய
முடியுமோ என்ற அச்சம் இருந்தது. அதை அடைய முடியும்
என்ற நம்பிக்கை இப்போது  வந்து விட்டது.

இப்போது நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம் பற்றி.

பொதுவாக ரத்த தானம் செய்யப் போனால் ஒரு மணி நேரத்தில்
திரும்பி விடுவேன். நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால்
மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தது. அப்போது
கண்ணில் பட்ட காட்சிகளே இப்பதிவிற்குக் காரணம்.

விபத்தில் சிக்கிய நண்பனுக்காகவும் இதய அறுவை 
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நண்பனுக்காகவும்
ரத்தம் அளிக்க ஒரு இளைஞர் பட்டாளமே வந்திருந்தது.
அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தொலைபேசி செய்து
கொண்டிருந்தார்கள். 

இன்னும் கூட ரத்தம் தேவைப்படுது நண்பா, எப்படியாவது
வந்துடேன் என்று மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.

அது போல அஸ்ஸாமிலிருந்து வந்த ஒரு குடும்பம் 
ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் எப்படியாவது ஒரு நாள்
அவகாசம் கொடுங்கள், இரண்டு உறவினர்கள் ட்ரெயினில்
வந்து கொண்டிருக்கிறார்கள், திங்கட்கிழமை காலை 
ரத்தம் கொடுத்து விடுவார்கள். ஆபரேஷனை தள்ளிப் போட
வேண்டாம் என்று டாக்டருக்கு சொல்லுங்கள் என்று
கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.  அஸ்ஸாமிலிருந்து வந்த
நாங்கள் இன்றைக்குள் எங்கே ஆட்களைக் கண்டு பிடிப்பது
என்று அவர்கள் கேட்டதிலும் நியாயம் உண்டு. 

நானும் இன்னொரு தோழரும் கூட அஸ்ஸாம் மாநிலம்,
ஜோர்ஹாட்டைச் சேர்ந்த ஒரு தோழருக்கு ரத்தம் அளிக்கத்தான்.
எல்.ஐ.சி ஊழியர் என்பதால் அவரது குடும்பமாக எங்கள்
சங்கம் உள்ளது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது
இல்லையே.

உயிரின் உன்னதமும் அதைக் காக்க ரத்தத்தின் முக்கியத்துவமும்
மருத்துவமனையில் இருந்தால்தான் புரியும். 

அரிவாள் வீசி தலையை வெட்டியெடுத்து திரை முழுவதும்
ரத்தம் பீய்ச்சியெடுக்கிற காட்சியை படத்துக்கு படம் வைக்கிற
ஹரி, சசிகுமார் உள்ளிட்ட எண்ணற்ற இயக்குனர்களுக்கு
ஒரு வேண்டுகோள்.

இப்படி ரத்தம் விரயமாகிற காட்சிகளை கொஞ்சம் தவிர்க்கலாமே..

உயிரை சுலபமாக எடுக்கிற காட்சிகளுக்கு பதிலாக 
உயிரின் உன்னதத்தை போற்றுகிற காட்சிகளை அளிக்கலாமே...

ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உங்கள் திரைப்படங்களில்
கொஞ்சம் சொல்லுங்களேன். உங்கள் திரைப்படங்களைப்
பார்த்து நான்கு பேர் ரத்த தானம் செய்தால் அது உங்களுக்கும்
பெருமைதானே...

ரத்த தானம் பற்றி குறும்படங்கள் கூட எடுக்கலாமே...

நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.