Friday, May 31, 2013

எச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்?

வெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூர் என்று எங்கள்
ஊரை இனியும் யாரும் அழைக்காதீர்....

நேற்று எங்கள் ஊரில் 98 டிகிரிதான் அதிக பட்ச வெயில்.

ஆனால்

மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் எவ்வளவோ
அதிகம்.

இன்று 

மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய கடுமையான
மழை, இதோ, இன்னும், ஒன்பதரை மணி வரை கூட
பெய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே இனி யாரும் எங்களூரை வெயிலூர் என்று
கிண்டல் செய்யாதீர்கள்.

செய்தால்

நல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யுமாம் மழை
என்பது வள்ளுவர் வாக்கு.

நாங்கள் ஏராளமான நல்லவர்கள் உள்ளதால்தான்
தொடர்ந்து மழை பெய்கிறது. ஆகவே நல்லவர்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அது உங்களுக்கு நல்லதல்ல, ஜாக்கிரதை.

பின் குறிப்பு

என் மைன்ட் வாய்ஸ் எனக்கே கேட்கிறது.
ஒரு நாள் மழைக்கு இவ்வளவு பில்ட் அப்பா?


Thursday, May 30, 2013

அண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ராஜா....

இந்திய தொலைக்காட்சி  வரலாற்றிலேயே முதன் முறையாக,
மன்னிக்கவும், அரசியல் வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக
பிரதமர் ஒருவர் மக்களை சந்திக்காமல் நாடாளுமன்ற உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.லோக்சபா உறுப்பினராக அல்ல, 
அவரது சொந்த மாநிலம் பஞ்சாபிலிருந்து கூட எம்.பி ஆக
முடியாதவர் இவர். வேட்பு மனு தாக்கல் செய்த அன்று அஸ்ஸாம்
மக்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது வேறு விஷயம்.

மக்களைச் சந்தித்து மக்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாத
ஒரு நபர் பிரதமராகும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும்
கிடையாது.

போட்டியிட்ட ஒரு தேர்தலில் பரிதாபமாக தோற்றுப் போனவர்
மன்மோகன்சிங் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 1999 ல்
தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு மிகவும் மோசமாக
பாஜக வின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம்  தோற்றுப் 
போனவர் மன்மோகன்சிங். 

அதன் பின்பு அவர் மக்களவைப் பக்கம் தலை வைத்தே 
படுக்கவில்லை.மக்களை சந்திக்கும் அவசியம் இல்லாததால்
மக்களின் பிரச்சினைகள் என்ன என்று புரியவே புரியாத
பொருளாதரக் காகிதப் புலி.  

எது எப்படியோ அண்ணனுக்கு இன்னும் ஐந்து வருடம்
பிரச்சினையே இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்
மண்ணை கவ்வினாலும் கவலை இல்லை.

வீடு உண்டு, போன் உண்டு, ஏரோப்ளேன் டிக்கெட் உண்டு,
சம்பளம் உண்டு, பயணப்படி உண்டு, பார்லிமென்ட்
காண்டீனில் மலிவு விலை சப்பாத்தியும் டீயும் உண்டு.

அனுபவிங்க ராஜா, அனுபவிங்கஅழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்டுப் பாருங்கள்

 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்,
இத்தாலி நாட்டில் கிளெவயெர் என்ற
இடத்தில் உள்ள தொங்கும் பாலம்.
கொஞ்சம் ஆபத்து இருந்தாலும்
அழகாக இருக்கிறதல்லவா?
எப்படிச் செல்வது என்பதென்றெல்லாம்
எனக்குத் தெரியாது,
ஏனென்றால் நான் இந்தியாவைத்
தாண்டியதில்லை.
இந்தியாவிலும் 
காஷ்மீர் மாநிலத்திற்கும்
வட கிழக்கு மாநிலங்களுக்கும்
சென்றதில்லை.

இத்தாலிதானே!
வேண்டுமானால் சோனியா காந்தியை
வழி கேட்டுக் கொள்ளுங்கள்,
இந்திய அரசை எப்படி நடத்துவது
என்றால் சரியாக வழிகாட்ட முடியவில்லை.
இதற்காவது சரியான வழியை
சொல்கின்றாரா பார்ப்போம்.
The Tibetan Bridge in Claviere, Piedmont - Italy

Tuesday, May 28, 2013

காங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்பது மீண்டும் ஒரு முறை ரத்தச்சேற்றில் நிரூபணமாகியிருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டுள்ள காங்கிரஸ்காரர்களில் ஒருவன் மஹேந்திர கர்மா. இவன் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது. சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியவன்.

ஒரு நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் சி.பி.ஐ கட்சியில் சேர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான இவன் அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளால் காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறான். அங்கே வெற்றியும் பெறுகிறான். சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை அமைக்கிறான். 
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருவர் திசை மாறிப் போனால் 
மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு தமிழகத்தில் 
சி.பி.ஐ யின் தளி தொகுதி ராமச்சந்திரன் ஒரு உதாரணம் 
போல, சட்டிஸ்கர் மாநில உதாரணம் மகேந்திர கர்மா,

காங்கிரஸ் அரசும் பாஜக அரசும் சல்வா ஜூடுமின் நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணக்காரர்களும் மற்ற முதலாளித்துவ நிறுவனங்களுமும் கூட அள்ளித் தருகிறது. சல்வா ஜூடுமால் அதிகமாக வேட்டையாடப் பட்டது நக்ஸலைட்டுகளை விட அப்பாவி பழங்குடி மக்கள்தான் அதிகம்.

பழங்குடி இனப் பெண்களை பாலியல் வன் கொடுமைகளுக்கு உட்படுத்துவது சல்வா ஜூடுமிற்கு பொழுது போக்கு. காவல்துறையும் மாநில அரசும் ஆதரவு அளித்ததால் அதன் அராஜகத்திற்கு அளவே கிடையாது. ஒரு மாபியா கும்பலாகவே அது செயல்பட்டது. புகார் கொடுத்தவர்களை மிரட்டி பிறழ் சாட்சியாக மாற்றியது பற்றி முன்னரே ஒரு முறை எழுதியுள்ளேன்.

உச்சநீதி மன்றம் தலையிட்டு சட்டிஸ்கர் அரசை தலையில் குட்டி கண்டித்த பின்பே சல்வா ஜூடும் அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த அமைப்பைச் சேர்ந்த பலரை பாஜக அரசு காவல்துறையில் இணைத்துக் கொண்டுள்ளது.

சட்டிஸ்கர் மாநில வன்முறைக் கலாச்சாரம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் என்றால் மறு பக்கம் அரசு பயங்கரவாதம். அரசு பயங்கரவாதத்திற்கு துணை நின்ற மஹேந்திர கர்மா இப்போது கொல்லப்பட்டு விட்டார். அவரோடு வேறு பல காங்கிரஸ்காரர்களும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு விட்டனர்.

மக்களின் பாதுகாவலர்களாக தங்களை சித்தரித்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகள், இத்தாக்குதல்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்வதை விட அவர்களின் வாழ்விற்கு கெடுதல்தான் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களை  கண்டுபிடிக்கிறோம் என்ற போர்வையில் நடத்தும் தேடுதல் வேட்டையால் அப்பாவி பழங்குடி மக்களின் நிம்மதி பறிபோகப் போகிறது. இவர்கள் நிச்சயமாக பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் இருப்பதற்கான காரணம் அங்கே இது நாள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசும்தான். அவர்களின் கொள்கைகள்தான். எண்ணற்ற இயற்கை வளம் குவிந்திருந்தாலும் வேலையின்மைப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இயற்கை வளத்தை பெரும் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் சுரண்ட அனுமதிக்கிறது. அவை அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. 

தங்கள் வாழ்வாதரத்தை இழக்கும் பழங்குடி மக்களின் 
பிரச்சினைகளுக்குதீர்வு காணாதவரை மாவோயிஸ்ட் 
பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. மத்தியிலும் 
மாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள் தங்களின் 
கொள்கைகளைமாற்றிக் கொள்ள வேண்டும். 
அதுதான் ஒரே வழி.
Monday, May 27, 2013

ஹிந்தி வெறி சித்துவிற்கு ஸ்ரீகாந்தின் சவுக்கடி

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.

 http://www.youtube.com/watch?v=0EsZ11JrNDQ

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஹிந்தியில் பேசிய
சித்துவை அதை மொழிபெயர்க்குமாறு ஸ்ரீகாந்த் கேட்க
99 % பேருக்கு ஹிந்தி தெரியும். மீதமுள்ள ஒரு சதவிகிதத்திற்கு
எதற்கு நான் மொழி பெயர்க்க வேண்டும் என அவர்
ஆணவமாக சொல்ல

" நான் தமிழில சொன்னா உனக்கு புரியுமாடா? "

என சவுக்கடி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.

சபாஷ் ஸ்ரீகாந்த்....

Sunday, May 26, 2013

சொர்க்கத்தை அனுபவித்தேன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் சென்றிருந்தேன்.
அது பற்றி நாளை எழுதுகிறேன்.

திரைப்படம் முடிந்து அரங்கிற்கு வெளியே வந்தால்
நல்ல மழை.

நூற்றிப் பத்து, நூற்றி பதிமூன்று டிகிரிகள் வரை கொளுத்திக்
கொண்டிருக்கும் வேலூரில் மழை. ஆச்சர்யமாகவே இருந்தது.
ஆனால் மழைக்காக ஒதுங்கி நிற்காமல் பதட்டமே இல்லாமல்
நிதானமாக நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

ஆஹா!

என்ன இனிமை! என்ன இனிமை!!

மேலே தண்ணீர் தூறலாய் விழுந்து கொண்டிருக்க, குளிர் காற்று
மேலே வீச, மழைக்கு பயந்தவர்கள் ஒதுங்கி இருக்க சாலையில்
குறைவான போக்குவரத்தில்  அந்த பத்து நிமிட பயணம்
உண்மையிலேயே சொர்க்கம்.

வேலூர் வெயிலூர்தான்.

எப்போதாவது குற்றாலம் போலவும் மாறும்.
இன்று அந்த நாள்,
இனிமையான நாள்....

டப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்
http://vijaytamil.org/wp-content/uploads/MahabharathamSun-Tv-Serial-MahabharathamMahabharatham-Serial.jpg


 http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2013/Feb/15/Mahabharatham_Tv_Serial_Working_Stills/Mahabharatham_Tv_Serial_Working_Stillsc2cda82c5ea1ad19f98ff7d71de1ef63.jpgசுரேஷ் கிருஷ்ணா - மகாபாரதத்தை தமிழில் எடுங்களேன்

சன் டிவி யில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒளிபரப்பாகும்
மகாபாரதம் தொடரை முன்பு இரண்டு வாரங்கள் பார்க்க
நேரிட்டது. இன்றும் பார்க்க நேர்ந்தது. 

தமிழில் எடுக்கப்பட்ட தொடர் என்ற உணர்வே கொஞ்சம் கூட
வரவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்டு டப்பிங் செய்த தொடர்
போலவே உள்ளது.

பி.ஆர்.சோப்ரா எடுத்த ஹிந்தி மகாபாரதத்தின் பாதிப்பிலிருந்து
சுரேஷ் கிருஷ்ணா வெளிவரவில்லை போலும். வசனங்கள் 
எல்லாம் மிகவும் செயற்கையாக ஒட்டவே ஒட்டவில்லை.

இதே மகாபாரதக் கதைதான் கர்ணன் திரைப்படமும். பல 
வருடங்கள் முன்பு வந்தது. தூய தமிழ் வசனங்கள்தான். ஆனால்
அது இயல்பாக இருந்தது போல பிரபஞ்சனின் வசனங்கள் இல்லை.

எங்கோ, ஏதோ உதைக்கிறது.
அது என்னவென்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள்,
இல்லையென்றால் அத்தனை பணமும் எள்தான்.

மகாபாரதத்தை விட அபத்தங்கள் அதிகமாக உள்ள
கதை ஏதாவது உண்டா?

இன்றைய தமிழ் சீரியல்களில்  காணும் ஒழுக்கக் கேடுகளுக்கு
துவக்கம் மகாபாரதமே -  விரைவில் எழுதுவேன்

 

Saturday, May 25, 2013

இடம் மாறிய இதயம் - இனிமை மலரட்டும்

அல்லாவின் புகழை 
போதிக்கும் ஆசிரியர்
அவர்.

ஹரியின் புகழ்
போற்றும் அர்ச்சகர்
அவர்.

பக்கத்து பக்கத்து
வீடுகள் கூட கிடையாது,

பக்கத்து பக்கத்து 
நாடுகள்,
பகை நாடுகளாய்
ஒரு தோற்றமும் உண்டு.

ஹரியின் புகழ் போற்றும்
அர்ச்சகரின் இதயம்
இன்று இடம் மாறி
அல்லா புகழ்
போதிக்கும் ஆசிரியர்
வசம்.


மரணத்திற்குப் பின்னும்
அந்த இதயம் துடிக்கிறது,
மதத்தை வென்ற
மனிதத்தின் பெருமை சொல்லி.

இந்திய இதயம் இனி
பாகிஸ்தானில் துடிக்கும்,
இதயத்தின் இணைப்பு,
இரு தேசங்களின் 
கசப்பை  போக்கும்
இனிப்பாய் அமையட்டும்.

 
 

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா?

இன்னிசை வேந்தன் டி.எம்.எஸ் அவர்களின் மரணம் பலரையும்
வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது முகநூலில் அவருக்கு
குவியும் அஞ்சலிச் செய்திகளே சான்று. 

அவரது பாடல்களால் ஈர்க்கப்படாதவர்கள் யார்தான் இருக்க
முடியும்?

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தன் கம்பீரக் குரலால் அனைவரையும்
கட்டிப் போட்டவர் அல்லவா அவர்?

எனக்கு ஒரு பயம் தோன்றியதை பதிவு செய்யவே எழுதுகிறேன்.
இனிய பல பாடல்களைப் பாடி காலங்களில் என்றும் வசந்த காலமாகவே
நெஞ்சில் நிலைத்துள்ள அமரர் பி.பி.எஸ் அவர்கள் மறைந்தபோது
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அபத்தமாக எழுதி ஆத்திரத்தை
ஏற்படுத்தியது.

இப்போதாவது அந்த பத்திரிக்கை கவனமாக செயல்படுமா?

பொறுப்போடு எழுதுமா?

டி.எம்.எஸ் - நீங்கள் மரணத்தை வென்றவர்


 

இசையுலகை ஆண்ட 
இன்னொரு
இன்னிசை வேந்தனும்
இனி  நம்மிடம் இல்லை.

பாசத்தையும் நேசத்தையும்
காதலையும் கம்பீரத்தையும்
தன் குரலால் சொல்லிக்கொடுத்த
டி.எம்.சவுந்தரராஜன் இப்போது இல்லை.

இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர் பாட்டு
என்பது டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே
தனியாக தெரியும்.

பாட்டும் நானே என்று பாடிய போது
பாடல் கற்றுக் கொள்ள தோன்றியது.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
என்ற போது பாசம் வந்தது.

முத்துக்களோ கண்கள் என்று குழைந்த போது
காதல் உணர்வு  நம்மையும் தொட்டு விட்டு போகும்.

கண்ணெதிரே தோன்றினாள் என்று அவர் பாடும்போது
இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று
நமக்கு பதைக்கும்.

மதுரையில் பிறந்த மீன் கொடியை என்று
கவிஞரின் பாட்டு என்னமோ கதாநாயகியை
வர்ணித்தாலும் டி.எம்.எஸ் நம்மை ஒரு
தமிழக உலாவிற்கே கூட்டிப் போய் விடுவார்.

எரிமலை எப்படி பொறுக்கும் என்று
கொதிக்கும்போது விலங்குகளை ஒடிக்க கை உயரும்.

யாரை நம்பி நான் பிறந்தேன் என்றாலோ
நமக்கும் வெறுப்பு வரும்.

அச்சம் என்பது மடமையடா என்ற போது
வீரம் பிறக்கும்.

என்னடி ராக்கம்மா மூலமா கிண்டல் செய்ய
கற்றுக் கொடுத்தார்.

அவரிடம் இருந்த உச்சரிப்பு சுத்தம் வேறு
எவரிடமும் கிடையாது.

ஆயிரமாயிரம் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்
அவர்களுக்கு என்றும் மரணமில்லை.

தமிழ் இருக்கும் வரை, இசை இருக்கும் வரை
நீங்களும் நிலைத்திருப்பீர்கள்.

Wednesday, May 22, 2013

அம்மையாரின் அலங்கோல இரண்டாண்டு ஆட்சிக் காலம்மோசமான ஆட்சிக்கு உதாரணமாய் : மம்தாவின் மறு பெயர் அராஜகம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு ஆட்சிக் காலத்தை மதிப்பீடு செய்ய இரண்டாண்டுகள் போதாது என்று மம்தா பானர்ஜி சொல்வதே இந்த இரண்டாண்டுகளில் அவரது ஆட்சி எதையும் சாதிக்கவில்லை என்று அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான்.

விவசாயிகள் தற்கொலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தொண்டர்களை கொல்வது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்தல், மத்தியரசுக்கு மிரட்டல் நாடகங்கள், எதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என முத்திரை குத்துதல், கேலிச்சித்திரத்தை ரசித்ததற்கு சிறைத் தண்டனை, அடி உதை, கைது செய்யப்பட்ட கட்சிக்காரனை லாக்கப்பை திறந்து விடுதலை போன்றவை  அவரது முதலாமாண்டின் சிறப்பம்சம் என்றால் இரண்டாம் ஆண்டில் அவர் சாதித்தது இன்னும் அதிகம்.

கேள்வி கேட்ட மாணவி டானியா சச்தேவை மாவோயிஸ்ட் என்று கடந்தாண்டு சாடிய மம்தா, கேள்வி கேட்ட ஒரு விவசாயியை அங்கே கைது செய்ய ஆணையிட்டு தனது அராஜகத்தை வெளிப்படுத்தினார். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று பொறுப்பில்லாமல் பேசினார்.

மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வேன் என்ற மிரட்டல் நாடகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தொடர முடியவில்லை. புலி வருகுது என்ற புரளியை உருவாக்கிய சிறுவன் இறுதியில் புலிக்கு பலியானது போல திரிணாமுல் காங்கிரஸ் ஒரு கட்டத்தில்  மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேற நேரிட்டது.  

கல்லூரி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மாணவர் சங்கத் தோழர்கள் மீது மம்தாவின் காவல்துறை மிருகத்தனமாக தாக்கியதில் சுதிப்தா சென் குப்தா என்ற மாணவர் சங்கத் தலைவர் இறந்து போனார். அது ஒரு விபத்து என்று காவல்துறை சாதிக்கையில் அற்பமான சம்பவம் என்று முதலமைச்சர் கூறினார். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு இளைஞன் இறந்து போவது அற்பத்தமானது என்று சொல்வது அவரது அற்பத்தனமான குணாம்சத்திற்கு எடுத்துக்காட்டு.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள மாணவர்கள் மம்தாவிற்கும் நிதியமைச்சருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கையில் நேர்ந்த தள்ளுமுள்ளுவின் எதிர்வினையாக திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் மேற்கு வங்கத்தில் வெறியாட்டம் ஆடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொல்கத்தா நகரின் சிறப்பான பிரஸிடென்ஸி பல்கலைக் கழகத்திலும் திரிணாமுல் குண்டர்களின் வன்முறை தாக்குதல் நிகழ்ந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஏகாதிபத்திய விருப்பத்தை நிறைவேற்ற மம்தாவிற்கு துணை நிற்க ஆளுனராக அனுப்பப்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரி எம்.கே.நாராயணனே குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல வேண்டியிருந்தது.

இந்த ஆட்சியின் ஊழல் முகமும் இப்போது அம்பலமாகி விட்டது. சாரதா குழுமம் என்ற தனியார் சீட்டு கம்பெனி மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்து விட்டது. அவர்கள் வசூலித்த பணத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியங்களை பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் வாங்கியுள்ளதும் தெரிய வருகிறது. லியர்னாடோ டாவின்ஸி, பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்குக் கூட இந்தியாவில் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்கியதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு மம்தா கண்டுபிடித்துள்ள புதிய உத்தி இது போலும்.

தங்கள் சேமிப்பை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாரதா குழுமத்தின் சொத்துக்களை கைப்பற்றுவதற்குப் பதிலாக, அவரது கட்சிக்காரர்களிடம் இருக்கிற சுதிப்தாசென்னின் பணத்தை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக  பாவ வரி என்று கூடுதல் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளார்.

அனைத்து அம்சங்களிலும் தோற்றுப்போன அரசாகவே மம்தாவின் ஆட்சி காட்சியளிக்கிறது. அவரது செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை இடைத் தேர்தல்  முடிவுகளும் காண்பிக்கிறது. அவரது ஆதரவு தளம் கரைந்து கொண்டு வருகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அம்பலப் படுத்தி விடுமோ என்ற அச்சத்திலேயே அதனையும் தள்ளிப் போடப் பார்க்கிறார். மின்மினிப் பூச்சியை ஓளி தரும் தீபமாக நம்பி ஏமாந்த மேற்கு வங்க மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. 

பின் குறிப்பு : ஜெ அம்மையாரின் ஆட்சி என்று நினைத்து படிக்க 
வந்திருந்தால்  ஏமாற்றமடைய வேண்டாம். அந்த ஆட்சி பற்றியும்
எழுதுவேன்
 


Tuesday, May 21, 2013

ராஜீவ் காந்தி கொலையான அன்று.அந்த இரவு நானும் இன்னொரு தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில்
 வீர பாண்டிய கட்டபொம்மன் இரவுக் காட்சி  பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.

ஒரு அனிச்சை செயலாக நானும் இன்னொரு தோழரும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபியை, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.

அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.

அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.

அப்போதே அந்த பயம்!

கிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.
உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிற விளையாட்டாக இருந்தாலும் அதற்கு கனவான்களின்  ஆட்டம் ( Gentle Men’s Game ) என்ற பெயருண்டு. நாகரீகம் அற்ற ஏதாவதோ அல்லது சற்று கண்ணியக் குறைவாகவோ ஏதாவது   நிகழ்ந்தால் “ இது கிரிக்கெட் அல்ல ( It is Not Cricket ) “ என்று சொல்லக் கூடிய அளவிற்கான விளையாட்டாக கிரிக்கெட் இருந்தது. இவையெல்லாம் பொய்யாய் பழங்கதையாகி வெகு நாட்கள் ஆகி விட்டது. பழைய பெருங்காய டப்பாவின் வாசம் கூட மறைந்து விட்டது.

தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு, அதற்காக விளம்பரதாரர்கள் கொட்டிக் கிடக்கும் ரூபாய்கள் என்று எப்போது வணிகம் நுழைந்ததோ அப்போதிலிருந்தே சீர்குலைவு என்பதும் தொடங்கியது. கிரிக்கெட் விளையாடுவதில் வருவதை விட விளம்பரத்தில் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகம் என்றான பின்பு, அணியில் இடம் பிடிப்பதற்கும், அதை தக்க வைப்பதற்கும்  திறமை என்பதை விட மற்ற காரணிகளே பிரதானமாக போய் விட்டது. பிராந்திய பார்வைகளும் ஒரு முக்கியக் காரணி.

உலகமயமாக்கலுக்கு பின்பு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் வெறியர்களாக ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலரை எங்களின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு மோசமாக போய் விட்டது. அதனால்தான் வரி ஏய்ப்பு செய்தால்கூட அதிலென்ன தவறு என்று கேட்கும் மனப்பான்மையும் மக்களிடம் அதிகரித்துள்ளது. சூதாட்ட புகார்களில் முன்பு சிக்கியவர்கள் கூட எந்த கூச்சமும் இல்லாமல் வர்ணனையாளர்களாக மைதானங்களில் வலம் வர முடிகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் எப்போதும் சர்ச்சைகள் நிரம்பியது. உலக கிரிக்கெட் அமைப்பையே கட்டுப்படுத்தும் அளவிற்கு நிதி வல்லமை கொண்டது. எந்த அரசுக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட மாட்டோம் என்று ஆணவத்தோடு சொல்ல முடிகிறது.

இந்திய கிரிக்கெட்டின் சீர்குலைவு என்பது ஐ.பி.எல் போட்டிகளின் வரவிற்குப் பிறகு அதிகரித்தது. ஏதோ ஜடப் பொருட்களை ஏலம் விடுவது போல வீரர்களும் ஏலம் விடப்பட்டார்கள். இந்த ஏல முறைக்கு வீரர்களும் உடன்பட்டது ஒரு வெட்கக்கேடு. ரிலையன்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், சன் டிவி போன்ற வர்த்தக நிறுவனங்களும் திரைப்பட நடிகர்களும் உரிமையாளர்கள் ஆனார்கள். இவர்களிடமெல்லாம் என்ன நெறிமுறையை எதிர்பார்க்க முடியும்?

ஐ.பி.எல் போட்டிகள்  ஏற்படுத்தியுள்ள கலாச்சார சீர்கேடு என்பது கண்டிக்கத் தக்கது. பெண்களை இழிவுபடுத்துவது. வக்கிர சிந்தனையை பார்வையாளர்கள் நெஞ்சத்தில் உருவாக்கக் கூடியது. மாணவர்களின் கல்வியையும் நாசமாக்குகிறது. அது மட்டுமல்ல  இந்திய ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் என்ன, நாங்கள் கல்லா கட்டுவதுதான் முக்கியம் என்று ஒரு ஆண்டு போட்டிகளையே தென் ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் சென்றவர்கள்தான் இவர்கள்.

இப்போது ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. இதிலே அதிர்ச்சி அடைவதற்கான அவசியம் எதுவும் இல்லை. விளையாட்டே சூதாட்டமாக மாறி வெகு நாட்கள் ஆகி விட்டது. மூன்று வீரர்களும் ஏராளமான தரகர்களூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறு மீன்களாகவே தோன்றுகின்றனர். ஒரே ஒரு அணியில் உள்ள வீரர்களை மட்டும் தரகர்கள் அணுகியிருப்பார்கள் என்று நம்ப முடியாது. எங்களை அணுகினார்கள், நாங்கள் மறுத்து விட்டோம் என்று சொல்லும் துணிவு இது வரை யாருக்கும் ஏற்படவில்லை. அனைவரும்  மௌனமாகவே  இருக்கின்றார்கள். ஊழல் பெருங்கடலில் இன்னும் எத்தனை திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன என்பது இன்னும் கொஞ்ச காலம் போனால் தானாக தெரிய வரும்.

காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும்  அவசியமான பணிகளைக் கூட தள்ளி வைத்து விட்டு தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இழைக்கப் படுகின்ற மிகப் பெரிய துரோகமாகத்தான் அந்தப் போட்டிகளின் போக்கையும் முடிவையும் யாரோ முன் கூட்டியே தீர்மானிப்பது என்பது. இந்த மிகப் பெரிய அநீதிக்கு உள்ளானாலும் தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்கிற இந்திய ரசிகனின் பலவீனத்தையே இந்த ஊழல் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியாவின் ஏனைய விளையாட்டுக்களையெல்லாம் அமுக்கிய பெருமை கிரிக்கெட்டிற்கே உண்டு. அதனால்தான் ஒலிம்பிக்கில் இன்னும் ஒற்றைப் படை  பதக்கங்களையே நம்மால் பெற முடிகிறது. ஆல மரத்தின் கீழே புல்லும் முளைக்காது என்பது போல  மற்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பதேயில்லை. ஊடகங்களும் மற்ற விளையாட்டுக்களை சீண்டுவதே இல்லை.

இந்த நிலைமை மாற வேண்டுமென்றால் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். கிரிக்கெட் வாரியம் சீரமைக்கப்பட்டு ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட வேண்டும்.  சூதாட்ட விவகாரம்  முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை வருகின்றவரை ஐ.பி.எல் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். அதுதான் இந்திய விளையாட்டுத்துறை முன்னேற உதவிகரமாக இருக்கும்.


Monday, May 20, 2013

வெட்டி ஆம்பளைங்களுக்கு சவுக்கடி

சென்னை உயர்நீதி மன்றம் ஒரு விவாகரத்து வழக்கில் சூப்பர்
தீர்ப்பு அளித்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு
செல்பவர்கள்.

சோம்பேறியான கணவன், வேலையை ராஜினாமா செய்து விட்டு
வீட்டில் சொகுசாக இருக்கத் தொடங்கினான். மனைவியை 
தந்தை வீட்டிற்கு அனுப்பி ஒரு லட்ச ரூபாய் கொண்டு வரச்சொல்லி
கொடுமைப் படுத்தினான். மனைவி மறுக்கவே அடி,உதை என்று
கொடுமைகள் வேறு. 

வேறு வழியே இல்லாத மனைவி, விவாகரத்து கேட்க இந்த
மனிதன் ஜீவனாம்சம் கேட்கிறான். மாவட்ட நீதிமன்றம் அதனை
மறுத்தது. இவன் உயர் நீதிமன்றம் செல்ல அங்கேயும் அவன் மனு
நிராகரிக்கப்பட்டது.

எந்த குறைபாடும் இல்லாமல் வேலைக்கு போகாமல் சோம்பிக்
கிடப்பவர்களுக்கு உழைத்து சிரமப்படும் மனைவி ஜீவனாம்சம்
எதுவும் தர வேண்டியதில்லை. மனைவி வேலைக்கு போய்
சம்பாதிக்கிற காரணத்தினாலேயே ஜீவனாம்சம் கேட்க இது
போன்ற பேர்வழிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று
சவுக்கடி கொடுத்துள்ளது. 

விவாகரத்து செய்வதால் ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை
என்று இந்த தீர்ப்பு சொல்கிறது.

ஆனால் வெட்டியாக இருந்து கொண்டு மனைவியை வெட்டி
அதிகாரம் செய்யும் சோம்பேறி ஆண்களுக்கு சோறு போட
வேண்டிய அவசியம் கூட இல்லை என்று ஒரு தீர்ப்பு வந்தால்
இங்கே பலரும் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

அதுவும் கூட தேவைதான்

Saturday, May 18, 2013

இளிச்சவாயனானது நீஏன் இந்த புலம்பல்கள்?

காத்து நிற்கும் கடமை இருப்பதால்
காவல்துறை என்று பெயர் அதற்கு.
மக்களை தாக்கும் துறையாய்
மாறி நிற்கிறது.

ஊழல்களை கண்டுபிடித்து
உள்ளே தள்ளவே ஒரு துறை,
ஊழல் செய்தவனிடம் அது
உத்தரவு வாங்கும் கொடுமை இங்கே,

மக்களைப் பார்க்காமல்
அவர் குரல் கேட்காமல்
மந்திரியானவருக்கு
பிரதம மந்திரியானவருக்கு
மக்களைப் பற்றி என்ன புரியும்?

விளையாட்டில் சூது போய்,
சூதே விளையாட்டாய்
மாறிப் போனது.
மைதான ஆட்டத்திற்கு
ஆரவாரம் அதிகமா?
வெளியில் ஆடும் ஆட்டத்திற்கு
ஆரவாரம் அதிகமா?

விளையாட்டைப் பார்ப்பதை விட
உற்சாகம் அளிக்கவென்று
நாடு கடந்து வந்தவர்களை
பார்க்கத்தானே ஆர்வம் அதிகம்.

நாடகம்தான் நடக்கிறது.
நன்றாய்த்தான் நடிக்கிறார்கள்
என்று நன்றாய் அறிந்து கொண்டும்
வாக்களிக்க நின்றாய் நீ!
புகார் கொடுக்க போனாய் நீ!
முட்டி மோதி சீட்டு வாங்கி
ஆட்டம் பார்க்கப் போனாய் நீ!

நீயாக ஏமாந்து விட்டு
ஏமாற்று உலகம் இது,
ஏமாற்றும் அரசு இது
என்றெல்லாம்
ஏன் இந்த புலம்பல்கள்?