Saturday, August 8, 2020

கலைஞர் - அன்றும் நேற்றும்

இந்த பதிவும் ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுதான். 

நிஜமாகவே நெகிழ்ச்சியூட்டியதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

கீழே உள்ள படங்கள் நேற்று பூரி கடற்கரையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைத்த மணற்சிற்பங்கள்.



 2018 ஆகஸ்ட் முதல் வாரம். சென்னையில் இருந்து நான் ஒடிசா திரும்பிய பின்னர் கலைஞரின் உடல்நிலை சிறிது சீரடைந்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் கலைஞரின் மகன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் திரு. ஸ்டாலின் கலைஞரின் மகள் திருமதி கனிமொழி ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் பேசி நலம் விசாரிக்க விரும்பினார் எங்கள் மாநில முதல்வர் திரு. நவீன் பட்நாயக்.

எனவே இருவரின் தனிப்பட்ட அலைபேசி எண் கிடைக்குமா என்று முதல்வரின் செயலர் என்னிடம் கேட்டார். உடனே சென்னையிலுள்ள நண்பர் ஒருவரின் மூலம் அலைபேசி எண்களைப் பெற்று இருவரிடமும் தொடர்பு கொண்டு முதல்வர் பேச விரும்புகிறார் என்பதை தெரிவித்துவிட்டு என்னையும் அறிமுகம் செய்து கொண்டு கலைஞரின் உடல்நலம் பற்றி விசாரித்தேன். பின்னர் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் எங்கள் மாநில முதல்வர் திரு.ஸ்டாலின் திருமதி கனிமொழி ஆகிய இருவரிடமும் கலைஞரின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

சென்னையில் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிக்க முடியாமல் போனது என்ற வருத்தம் எனக்கு கொஞ்சம் குறைந்தது.

2018 ஆகஸ்ட் - 7 ஆம் நாள். ஒடிசா மாநில முதல்வர் திரு. நவீன் பட்நாயக் புவனேஸ்வரத்திலிருந்து சிறப்பு விமானத்தில் மும்பை பயணம் செய்தார். மாநில அரசின் சில உயரதிகாரிகளும் நானும் முதல்வருடன் சென்றோம். ஒடிசா மாநிலத்தில் தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மும்பை தாஜ் ஹோட்டலில் ஒரு பெரிய நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தோம். மறுநாள் 8 ஆம் தேதி இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்கள் முதல்வரை சந்திக்கவும் ஒடிசா மாநிலத்தில் தொழில் முதலீடு பற்றி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் "கலைஞர் மறைந்தார்" என்ற செய்தி 7 ஆம் தேதி இரவு வெளியான போது நான் மும்பையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

7 ஆம் தேதி நள்ளிரவு முதல் 8 ஆம் தேதி காலையிலும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் கலைஞரின் இறுதி உறைவிடம் அண்ணாவின் சமாதி அருகே சாத்தியமா இல்லையா என்பதைப் பற்றித் தான் விவாதம். இது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

'புவனேஸ்வரத்தில் இருந்திருந்தால் இறுதி நிகழ்விற்கு சென்னை சென்றிருக்கலாமே' என்று தோன்றியது. முதல்வருடன் முக்கியமான அரசு நிகழ்வில் மும்பையில் இருந்ததால் சென்னை செல்ல இயலவில்லை. ஒடிசா அரசின் சார்பில் நிதியமைச்சர் தலைமையில் சில தலைவர்கள் புவனேஸ்வரத்திலிருந்து சென்னை சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் "வங்கக் கடற்கரை" "வங்கக் கடற்கரை" என்று சொல்லிக்கொண்டு இருந்தன. திடீரென்று மனதில் ஒரு யோசனை தோன்றியது. ஒடிசாவின் மிகச்சிறந்த மணற் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கிற்கு ஒரு 'வாட்ஸ் அப்' செய்தி அனுப்பினேன் - உடனடியாக தொடர்பு கொள்ளும்படி.

சுதர்சன் பட்நாயக் சிறந்த மனிதர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தான் மணற்சிற்பக் கலையில் பிரபலமாகத் தொடங்கி இருந்தார். தனக்கு எங்காவது ஒரு வேலைவாய்ப்பிற்கு ஏற்பாடு செய்யும்படி முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் அவர் முறையிட்டிருந்தார். அப்போது நான் ஒடிசா மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலராக இருந்தேன். "சுதர்சன் பட்நாயக்கிற்கு எங்கேயாவது வேலை வாங்கித் தருவதை விட அவர் பன்னாட்டு மணற்சிற்பக் கண்காட்சிகளில் கலந்து கொள்ள உதவலாம் அதுவே அவருக்கும் மாநிலத்திற்கும் நன்மை பயக்கும்" என்று நான் கருத்து தெரிவித்தேன். அன்றைய சூழலில் அது சுதர்சன் பட்நாயக்கிற்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஆனால் எதுவும் வேலையில் சிக்கிக் கொள்ளாததால் அவர் இன்று உலகப் புகழ் பெற்ற கலைஞர். பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். உலக அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். ஒடிசா அரசு சென்ற ஆண்டு அவரை ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவராகவும் நியமித்துள்ளது.

எனது வாட்ஸ் அப்பை பார்த்ததும் சுதர்சன் என்னைத் தொடர்பு கொண்டார். நான் முதல்வரின் கலந்தாய்வு நடைபெறும் இடத்திலிருந்து வெளியே சென்று அவரிடம் பேசினேன். எனது மன ஓட்டத்தை எப்படி தான் புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. நான் பேசத் தொடங்கும் முன்பே அவர் குறுக்கிட்டு கலைஞர் மறைவு பற்றி குறிப்பிட்டார். பூரியில் வங்கக் கடற்கரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் ஒரு மணற்சிற்ப அஞ்சலி செலுத்தலாம் என்றார். இந்த யோசனை எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி தோன்றியது என்பது எனக்கு இன்றளவும் வியப்பாகவே இருக்கிறது.

சுதர்சன் பட்நாயக்கின் தமிழன்பிற்கு இது முதல் சாட்சியம் அல்ல. ஒரு முறை திருவள்ளுவருக்கு பூரி கடற்கரையில் கம்பீரமான மணற்சிற்பம் எழுப்பி என்னை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 2016 நவம்பரில் சென்னையில் நடந்த எனது நாட்டுக்குறள் பாடல்கள் அரங்கேற்றம் மற்றும் ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வின் போது அவரது "மணற்சிற்ப அசைவூட்டக் காணொளி" ( Sand Art Animation Picture) திரையிடப்பட்டது.

2018 ஜனவரியில் தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தின கொண்டாட்டங்களின் பின்னணியில் சென்னை, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, கோவா என்று பல இடங்களிலும் புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து திருவள்ளுவருக்கு மணற் சிற்ப மரியாதை செய்த கலைஞர் அவர்.

எனவே, தமிழ்நாட்டின் தலைநகரில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்து, முக்கடல் சந்திக்கும் தென்குமரி முனையில் முப்பால் வள்ளுவருக்கு மாபெரும் கற்சிலை எழுப்பிய கலைஞருக்கு, திருவள்ளுவர் மணற்சிற்பத்தால் தமிழர் மனம் கவர்ந்த பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் வங்கக் கடற்கரையில் 'மணற்சிற்ப அஞ்சலி' செலுத்துவது மிகவும் பொருத்தம் என்று தோன்றியது.

மேலும் உத்கல் பண்பாட்டு பல்கலைக்கழகத்தில் "திருக்குறள் இருக்கை" அமைக்க தமிழக அரசின் சார்பில் நிதியுதவி செய்தது முதல் புவனேஸ்வர் தமிழ்ச்சங்க கட்டிடம் மற்றும் நூலகம்/ வாசிப்பு மையத்திற்கு நிதியுதவி செய்தது வரை ஒடிசா சார்ந்த பல தமிழ்ப்பணிகளுக்கு கலைஞர் உதவிக்கரம் நீட்டியிருந்தார்.

மணற்சிற்பத்திற்கான மாதிரிப் படத்தை சுதர்சன் பட்நாயக் இணையத்தில் இருந்து தேர்ந்தெடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். மணற்சிற்பத்திற்கு ஒரு வரியில் ஆங்கிலத்தில் தலைப்பு வேண்டும் என்றார். " Tribute to Kalaignar The Legend 1924- 2018 " என்று எழுதி அனுப்பினேன். மணற்சிற்ப வேலை தொடங்கி விட்டது; நடைபெறுகிறது என்று அவ்வப்போது செய்தி அனுப்பினார் அவர்.

இவ்வாறு மும்பையில் அரபிக்கடல் கரையில் நான்.
சென்னையில் வங்கக் கடற்கரையில் கலைஞரின் இறுதி உறைவிடம் கோரி உயர்நீதிமன்றத்தில் வாதம். தொலைக்காட்சியில் உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் இராஜாஜி அரங்கம். ஒடிசாவில் அதே வங்கக் கடற்கரையில் சுதர்சன் பட்நாயக்கின் அஞ்சலி.

சில மணி நேரங்களில் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். ஏராளமான தமிழர்களும் சுற்றுலாப் பயணிகளும் கலைஞர் மணற்சிற்பத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சுதர்சன் பட்நாயக்கிற்கு
"நன்றி" சொன்னேன்.

ஆர்.பாலகிருஷ்ணன்

07/08/2019

No comments:

Post a Comment