Sunday, August 9, 2020

ஸ்விக்கியின் ஆய்வு எங்கே முடியும்?

 

சென்னையில் தங்கியிருக்கிற என் மகன் அனுப்பிய படங்கள் கீழே உள்ளது.






 தனியாக ஒரு அறையெடுத்து வேலைக்கு போய் வருகிற அவனுக்கு உணவு விடுதிகள்தான் ஒரே வழி. இந்த ஊரடங்கு காலத்தில் காலையும் இரவும் அருகில் உள்ள ஹோட்டலில் பார்சல் வாங்குபவனுக்கு  இப்போது மதிய வேளையில் ஸ்விக்கி தான் துணை.

 அவன் ஸ்விக்கி மூலமாக வாங்கியதை வைத்து ஒரு தேர்வு போல மதிப்பெண் அளித்துள்ளார்கள்.

 எத்தனை முறை ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எத்தனை உணவகங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எத்தனை உணவுப் பொருட்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

எப்படிப்பட்ட உணவு வகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டது?

அந்த ஆர்டரை வழங்க ஸ்விக்கி பணியாளர்கள் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர்?

ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடி மூலமாக அடைந்த பலன் எவ்வளவு ரூபாய்?

 இதிலே அளிக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாகவே இருக்கிறதாம்.

 இவற்றை முதலில் பார்க்கிற போது சுவாரஸ்யமாக இருந்தது. நல்லா ரூம் போட்டு யோசிச்சிருக்காங்கய்யா என்று பாராட்டவும் தோன்றியது.

 சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

 “பாய்ஸ்” படத்தில் செந்தில் சொல்வாரல்லவா?

 “இது வெறும் நோட்டு அல்ல, டேட்டா பேஸ், இன்பர்மேஷன், இன்பர்மேஷன் இஸ் வெல்த்”

 ஆக ஸ்விக்கியிடம்  ஒவ்வொரு ஊரிலும்

 யார், யார் உணவு விடுதியில் ஆன் லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்கிறார்கள்,

 எந்தெந்த உணவு வகைகளை எவ்வளவு பேர் நாடுகிறார்கள்?

 எந்தெந்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்?

 எந்த உணவகத்தில் எந்த உணவு வகைக்கு அதிகம் கிராக்கி இருக்கிறது?

 எந்த வேளையில், எப்படிப்பட்ட நாட்களில் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் குவியும் அல்லது குறையும்?

 இந்த டேடா பேஸ் இப்பொது ஸ்விக்கியிடம் இருக்கிறது என்பது உண்மை.

 இதை வைத்து என்ன செய்ய முடியும்?

 

எந்த உணவு வகைகளை

எந்த உணவகத்திலிருந்து

வாங்குவது என்ற

உங்கள் முடிவை

அவர்களால் மாற்ற முடியும்.

 இத்தனை நாள் என்னிடம் ஸ்விக்கி ஆப் இல்லாமல் இருந்தது. அதை தரவிறக்கி சோதனை செய்து பார்த்தேன்.

 நாம் விரும்பும் உணவகத்தை விட அவர்கள் கவனப்படுத்துவது அவர்கள் விரும்பும் உணவகமாகவே உள்ளது.  

 தரமானது, பாதுகாப்பானது என்றும் மிகவும் பிரபலமானது என்றும் அவர்கள் முன்னிறுத்துவதற்கும் நம்முடைய அனுபவத்திற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது.

 ஒரு சில உணவுப் பொருட்களுக்கே (வழக்கமானவற்றை விட சற்று விலை அதிகமானது) கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது.

 சாதாரண உணவுப் பொருட்கள் இப்போது இல்லை என்று சொல்லப் படுகிறது. (பொதுவாகவே நம் உணவகங்களில் காலை எட்டரை மணிக்கு மேல் இட்லி கிடைக்காது)

 காம்போ, இத்தனை ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இவ்வளவு தள்ளுபடி என்றெல்லாம் அவர்கள் நமக்கு நன்றாக வலை வீசுகிறார்கள்.

 அடுத்து உணவகங்களுக்கும் இது போன்ற உணவு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரலாம். வராதவை தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடும்.

 நாம் கட்டுப்பாடாக இல்லையென்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தை இனி அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

4 comments:

  1. சரியான பதிவு

    ReplyDelete
  2. இன்றைய காலத்தில் நம்மை பற்றிய பலவிதமான டேட்டாக்கள் பல முறையில் சேமிக்கப்படுகின்றன அதன் மூலம் நம்மை சுற்றி நம்மை அறியாமலே பல் வலை பின்னப்படுகிறது என்பது உண்மை

    ReplyDelete
  3. முன்பு ஒருமுறை வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் மருத்துவர் சிவராமன் அவர்கள், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது ZOMATTO போன்றவர்கள்தாம் என்பதை அழகாகவும் நகைச்சுவையுடனும் கூறியிருப்பார்

    ReplyDelete
  4. எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! அச்சமாய் உள்ளது

    ReplyDelete