Thursday, December 31, 2015

செல்க, வருக, வெல்க

இன்னும் சில நிமிடங்களில் விடைபெறப் போகும் 2015 ம் ஆண்டை அனுப்பி வைப்போம். 

இன்னும் 366  நாட்கள் நம்மோடு இருக்கப் போகிற 2016 ஐ வரவேற்போம்.

எல்லா வெற்றிகளும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நெஜமாவே பெங்களூரில் இப்படித்தானா? இல்லை?

முக நூலில் படித்து ரசித்தது.


மோடி மாஸ்கோவில இருக்கிற போது நம்ம பெங்களூரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் வீட்டிலேந்து புறப்பட்டாரு. மோடி காபூலுக்கு வந்த நேரம் இவரு சில்க் போர்ட் கிட்ட வந்துட்டாரு. மோடி லாகூருக்கு வந்து சேர்ந்த நேரத்தில இவர் மார்த்தள்ளி கிட்ட இருந்தாரு. மோடி டெல்லிக்கே வந்து சேர்ந்துட்டாரு, ஆனா இவரு வொயிட் பீல்டுக்கிட்ட டிராபிக்கில மாட்டி இன்னும் ஆபிஸ் போக முடியாம முழிக்கிறாரு.

இதுதான் நான் படித்தது.

பெங்களூர் நிலைமை இவ்வளவு மோசமா போயிடுச்சுனு வருத்தப்படறாங்களா?

இல்லை

வாயு வேகம், மனோ வேகத்தில பயணம் செய்யற மோடிய நக்கல் விடறாங்களா?

ஒரு வேளை ரெண்டுமே கரெக்டுதானா?

Wednesday, December 30, 2015

ஜில்லுனு பிரெட் ரோல் சோமாஸ்
இது முழுக்க முழுக்க எனது கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. எங்கோ படித்ததை பெருமளவு மாற்றியது என்ற பெருமிதப்பட முடியும்.

முதலில் செய்ய வேண்டியது – பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றோடு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். சின்னதாக உடைத்த முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் வறுத்து இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 பிறகு பிரெட்டை சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு முறை குழவியால் ஓட்டி பிறகு கலவையை இதற்குள் வைத்து மூடவும். பிறகு அலுமினியம் பாயில் பேப்பரால் சுற்றி வைக்கவும். அனைத்து பிரெட்டுகளிலும் இது போல செய்த பின்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃப்ரீஸரில் ஒரு மூன்று மணி நேரம் வைக்கவும்.


பிறகு வெளியே எடுத்து கத்தியால் இரண்டு பாகமாக வெட்டி, மேலே ஒரு செர்ரிப் பழத்தை வைத்து கொடுக்கவும்.

பிரெட்டை விட கலவை அதிகமாகி விட்டது. ஆனாலும் அதற்காக கவலைப்படவில்லை. நெய்யை சூடாக காய்ச்சி மாவின் மீது ஊற்றி உருண்டையாகவும் பிடித்தாகி விட்டது.

ஆக ஒரே நேரத்தில் இரண்டு இனிப்புக்கள்

நாங்கள் கம்பீரமானவர்கள்...

  தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் அவர்கள் எழுதிய மிக முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாங்கள் கம்பீரமானவர்கள்

அரசியலிலும் சமுதாயத்திலும் மாற்றம் வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புள்ள மக்களிடையே, இன்றைய அரசியல் இயக்கங்கள் எதுவும் சரியில்லை என்ற எண்ணத்தை விதைத்து, அரசியல் பங்கேற்பற்ற ஒரு சமூக வெளியைக் கட்டமைக்கிற வேலை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
சில நேர்மையான அதிகாரிகள் உள்ளிட்ட தனிமனிதர்களை முன்னிறுத்தி அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்ற சிந்தனை அவ்வாறு கட்டமைப்பதற்கான வண்ணப்பூச்சாகத் தீட்டப்படுகிறது. அரசியலை அசூயைக்கு உரியதாக்கிவிட்ட சில கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள கசப்புணர்வும் பிரதிபலிக்கப்படுகிறது, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் கட்சிகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிற கைங்கரியமும் செய்யப்படுகிறது.

அண்மையில் ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் கட்டுரையாளர் சமஸ் எழுதிய ஒரு பதிவு வெளியானது. அது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரை மட்டும் குறிப்பிட்டு எழுதுகிறபோதெல்லாம் இடதுசாரி தோழர்கள் தொடர்புகொண்டு கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிட்டு அவர்களெல்லாம் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் என்று சமஸ் கூறியிருக்கிறார். என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், சி. மகேந்திரன் ஆகிய சில தலைவர்களையும் அவர்களது தன்னலமற்ற பணிகளையும் குறிப்பிட்டு, அவர்களைப் போன்றவர்கள் ஆட்சியமைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் அங்கீகரித்திருக்கிறார். நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன் ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறார்.பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்களது வாழ்வையும் பணியையும் பல ஊடகங்கள் ஏதோ நேர்ந்துகொண்டது போல இருட்டடிக்கிறபோது, அவர்களை சமஸ் நல்ல வெளிச்சத்தில் காட்டியிருப்பது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியதுதான்.

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளப் பாதிப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மாதக்கணக்கில் இரவுத்தூக்கமில்லாமல் உழைத்தது பற்றியும், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆவணங்களோடு சென்று தலையிட்டது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மழைவெள்ளக் காலத்தில் எந்தக் கட்சியும் எதுவும் செய்யவில்லை என்ற சித்திரத்தைப் பல ஊடகங்கள் வரைந்துகொண்டிருக்கிறபோது, இந்த உண்மைக் காட்சியைக் க hட்டியிருப்பதற்காகவும் நன்றியை உரித்தாக்கலாம்.இன்றளவும் மார்க்சிஸ்ட் தோழர்கள் பலவகையான வாழ்வாதார மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தங்களது வீடுகளும் நீரில் மூழ்கி, இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும் பொதுமக்களைக் காக்கிற முனைப்பை உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டவர்கள் அவர்கள். சொல்லப்போனால், ஊடகங்கள் எட்டிக்கூட பார்க்காத இடங்களில் அடித்தட்டு மக்களின் வெள்ளத் துயர் துடைப்பதற்குத் தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மழைவெள்ளம் சுழற்றியடித்த தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கட்சி அலுவலகங்களில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகளையும் மறுவாழ்வுக்கான நிவாரணங்களையும் ஒருங்கிணைக்கிற பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.சமஸ் விரும்பினால் அவர் எழுதுவதற்கு இப்படிப்பட்ட உண்மைக் கதைகளை நிறையவே எடுத்துக்கொடுக்க முடியும்.பெருமிதத்திற்குரிய வேறு பல முன்னுதாரணங்களும் உண்டு.

கம்யூனிஸ்ட் தலைவர்களில் 9 பேர் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்துள்ளனர். இவர்களில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஆடம்பரப் புகார்களோ கூறப்பட்டதில்லை. மக்களையோ செய்தியாளர்களையோ சந்திக்கத் தயங்காதவர்கள் அவர்கள்.திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சொந்தவீடு கூட இல்லாதவர் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன.அதே மாநிலத்தின் முதல்வர் பொறுப்பிலிருந்த நிருபன் சக்ரவர்த்தி விடைபெற்ற நாளில் ஒரு கையில் புத்தகப் பெட்டியும் இன்னொரு கையில் ஆடைகளையும் எடுத்துச் சென்றது பற்றி “அதிசயம் ஆனால் உண்மை” என்று தலையங்கம் எழுதியது ‘தினமணி’.தசரத் தேவ் நினைவுகள் திரிபுராவின் ஆதிவாசி மக்களுக்கு இன்றும் ஒரு உந்துவிசை.தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு ஒரு முழுநேர ஊழியராய் வாழ்ந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.நாடாளுமன்றத்திற்கே சைக்கிளில் வந்துசென்றவர் பி. சுந்தரய்யா.இன்றைக்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், சாதாரண பேருந்துகளிலும் ரயிலில் இரண்டாம் வகுப்புகளிலும் பயணிக்கிற தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தலைவர்கள் மட்டுமல்ல, உள்ளூர் கிளையிலும் இத்தகையவர்களைக் காண முடியும். வெளிச்சமூகத்தின் தாக்கத்தில் சிலர் தடம் மாறுவார்களானால் அவர்களை சரியான தடத்திற்கு மாற்றுகிற முயற்சியும் கம்யூனிஸ்ட் இலக்கணமே.இத்தகைய நற்குணங்கள் தோழர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் அல்ல, அவர்களே சொல்வது போல் ஒவ்வொரு தோழரையும் இப்படி வளர்த்தெடுக்கிற செங்கொடி இயக்கத்தின் சிறப்பியல்பு இது.

ஆனால், சமஸ் தனது கட்டுரையை, முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமரவைப்பது என்ற விவகாரமாகவே முடிக்கிறார். மேற்படி தலைவர்களை விட்டுவிட்டு, வைகோ-வையோ, விஜயகாந்தையோவா அந்தப் பதவியில் அமர்த்தப்போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஒருவர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவர். இன்னொருவர் மக்கள் நலனுக்காக இந்தக் கூட்டணிக்கு வருமாறு அழைக்கப்பட்டிருப்பவர்.ஆக, தனி மனித அரசியலைக் கட்டமைக்கத்தான் சமஸ் கட்டுரை விரும்புகிறதா என்றே கேட்க வேண்டியிருக்கிறது. தனிமனிதர்களின் நேர்மையும் எளிமையும் முக்கியமானவைதான்; ஆனால் அவை மட்டுமே மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானவையல்ல. நம் நாட்டின் அரசியலைப் பிடித்த கேடுகளில் ஒன்றுதான் தனி மனித ஆராதனை, தனி மனித நிந்தனை இரண்டுமே.

அடிப்படையான பிரச்சனைகளில் வதைபடுகிற மக்களை மாற்றத்திற்காக அணிதிரட்டும் முயற்சிகள் நடக்கிறபோதே, வரலாற்றைத் திருத்துவதற்காகவே அவதரித்த நாயகர்களாக சில தனித் தலைவர்களின் பக்கம் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அவர்களின் பின்னால் செல்லவைக்கிற திருப்பணியும் நடக்கிறது.

அதுவும் அரசியல் புலமற்ற தனி மனிதர்கள் என்றால் இன்னும் உற்சாகமாக முன்னிறுத்தப்படுவார்கள். கொள்கை சார்ந்த இயக்கமாக மக்கள் அணிதிரளவிடாமல் பார்த்துக்கொள்வதில் அவ்வளவு கவனம்.மக்கள் நலக் கூட்டணி என்பது முதல் முறையாகத் தமிழகத்தில் குறைந்த பட்ச கொள்கை உடன்பாட்டின் அடிப்படையில், மக்களுக்கான போராட்டங்கள் அடிப்படையில் - மழைவெள்ளத்தையொட்டி மக்களுக்கான சேவை அடிப்படையிலும் - உருவாகியிருக்கிறது. அந்தக் கொள்கைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஆட்சிக்கும் கொள்கை சார்ந்த கூட்டியக்கம் வருவதே தமிழகத்திற்கு நம்பகமான மாற்றுப் பாதையாக இருக்கும்.

கட்டுரையில் சமஸ் குறிப்பிட்ட நல்ல தலைவர்கள் சேர்ந்து எடுத்த முடிவுதான் மக்கள் நலக் கூட்டணியை அமைப்பது. அந்தக் கூட்டணியின் தலைவர்களோடு சேர்ந்து எடுத்த முடிவுதான் தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பது. தமிழகத்தின் உடனடி அரசியல் சூழலில், கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்ற, அதிமுக-திமுக-பாஜக-காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பலத்தைக் கூட்டணிக்குப் பயன்படுத்த முயல்வதில் தவறு என்ன? அவரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தபோது குறைந்த பட்ச கொள்கை உடன்பாடு பற்றி அவரிடமும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அறிவிக்காமலே ஒரு கட்சியின் தலைமை அவர் தங்களுடைய கூட்டணியில் நீடிக்கிறார் என்று கூறிக்கொள்கிறது. இன்னொரு கட்சி அவரோடு பேச இடைநிலைத் தூதர்களை விட்டு நோட்டம் பார்க்கிறது.மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களோ கம்பீரமாக, நேரடியாக, வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு அவரைச் சந்திக்கிறார்கள்.

முதலமைச்சர் பொறுப்பில் யாரை உட்கார வைப்பீர்கள் என்ற கோணத்தில் இதை விவகாரப்படுத்துவது கூட்டணி முயற்சியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று வேண்டுமானால், இந்தக் கூட்டணியை விரும்பாதவர்கள் மனம் மகிழக்கூடும்.

தலைவர்கள் நல்லவர்கள், கட்சி எடுக்கிற முடிவு தவறானது என்ற தோற்றத்தையும் இத்தகைய எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.இது கட்சியின் ஒரு உயர்மட்டத் தலைவர் தன் விருப்பப்படி எடுக்கிற முடிவு அல்ல. கூட்டுத் தலைமை, கூட்டு முடிவு, கூட்டுச் செயல்பாடு என்பதே கம்யூனிஸ்ட் கட்சி வழிமுறை. கட்சியின் அரசியல் வழிமுறைகள் பற்றி மக்கள் மனங்களில் ஐயத்தை விதைப்பதும், கட்சியைத் தனிமைப்படுத்துவதும், கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக எதிர்க்கிற, சமஸ் போன்றோரும் எதிர்க்கிற, உள்நாட்டு-உலகமய சுரண்டல் சக்திகளுக்கும் மதவெறி-சாதியவெறி பீடங்களுக்கும்தான் உவப்பளிக்கும். அந்த உள்நோக்கத்துடன்தான் சமஸ் இவ்வாறு எழுதியிருப்பதாகக் கூறுவதற்கில்லை என்றாலும், அவருடைய கட்டுரையின் ஒட்டுமொத்தத் தாக்கம் இதுதான்.இத்தகைய தாக்கங்களையும் கடந்து மாற்று இயக்கம் கட்டப்படும்.

-‘தீக்கதிர்’ இன்றைய (டிச.30) இதழில் தோழர் அ.குமரேசன் அவர்களின் வந்துள்ள  கட்டுரை.

Monday, December 28, 2015

வரலாறு என்றால் புகழ்வோம். நிகழ்காலமென்றால் ?????

அண்டார்டிகா பாறையும் சாதனை மனிதரின் ஆதங்கமும்

நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கர்னல் பா.கணேசன் அவர்களை நன்றாக தெரியும்.


தென் துருவத்தில் இந்தியா அமைத்த தஷின் கங்கோத்ரி ஆய்வு மையத்தின் தலைவராக செயல்பட்ட திரு கர்னல் பா.கணேசன் அவர்கள் தென் துருவத்தில் பணியில் உறைந்து கொண்டிருந்த ஒரு பாறை கொண்டு தனது சொந்த ஊரான சன்னா நல்லூரில் ஒரு பூங்கா அமைத்துள்ளார் என்ற செய்தி அறிந்ததுமே, இந்த ஆண்டு வெண்மணிப் பயணத்தின் போது அங்கே சென்று வருவது என திட்டமிட்டிருந்தேன்.

மதிய உணவு முடிந்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட பின்புதான் கர்னல் அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எப்படி செல்ல வேண்டும் என்று வழி சொன்னது மட்டுமல்லாமல் அந்த பூங்காவை பராமரிப்பவரை உடனடியாக அங்கே வரச் சொல்கிறேன் என்றும் சொன்னார். அது போலவே நாங்கள் அங்கே சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரும் வந்து விட்டார்.

தூண்களில் அமைக்கப்பட்டிருந்த அந்த தென் துருவப் பாறை மெய் சிலிர்க்க வைத்தது. அதை விட மெய் சிலிர்க்க வைத்தது கர்னல் அவர்களின் சாகசப் பயணம். தன்னுடைய சொந்த ஊரில் சிறப்பான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கிய அவரது பிறந்த மண்ணின் மீதான நேசம் பாராட்டுதலுக்குரியது.

தென் துருவப் பயணம் குறித்த சிறு வரலாறே அங்கே சொல்லப்பட்டு இருந்தது. எங்கள் தோழர்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாகவும் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

நாங்கள் அங்கே இருந்த போது கர்னல் அவர்களிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அகத் தூண்டுதல் பூங்காவின் பாதுகாவலர் கர்னல் எழுதிய நூலின் பிரதிகளை எங்களுக்கு அளித்தார்.

“நீங்கள் இப்போது நிற்கிற இடத்தில் ஒரு காலத்தில் நான் நாற்று நட்டிருக்கிறேன், களை பறித்திருக்கிறேன், பதினான்கு வயது வரை காலில் செருப்பு கூட அணிந்ததில்லை. கடின உழைப்பின் மூலமே இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறேன்” என்று உணர்வு பூர்வமாக பேசினார்.

“இந்த இடத்தில் பல வகுப்புக்களை நடத்தி பலரையும் முன்னேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை” என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புறப்படும் போது பிரகாஷ் என்ற அந்த பாதுகாவலருக்கு நாங்கள் டீ சாப்பிட்டு விட்டு போகவில்லையே என்பதில் ஒரே வருத்தம்.

ஒரு அரிய அனுபவத்தின் சான்றாக உள்ள இடத்திலிருந்து புறப்படும் வேளையில் உ.வஜ்ரவேலு என்ற தோழர், அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்

“இதுவே வட நாட்டு ஆளுங்க யாராவது செஞ்சிருஞ்சா, தலையில தூக்கி வைச்சு ஆடியிருப்பாங்க, இந்த இடமே பிரம்மாண்டமா மாறியிருக்கும். தமிழ்நாட்டு ஆளு என்பதால் இப்படி ஒரு அலட்சியம்”  

என்று சொன்னார்.

அது சரிதான் என்பதுதான் என் கருத்தும்.

இமயத்திலிருந்து கண்ணகிக்கு கோயில் கட்ட கல் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனின் புகழ் பாடுவோம்.

அதுவே நிகழ்காலம் என்கிற போது கண்டு கொள்ள மாட்டோம்.

இதுதான் இன்றைய மரபு.

அங்கே நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கீழே

 

எரிந்து போன சண்டி ஹோம பந்தலும் அமைதிப்படை அமாவாசையும்


பல கோடி ரூபாய் செலவில் மஹா சண்டி ஹோமம் நடத்தினார் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ். ஆனால் அவர் மீது கடவுளின் அருட்பார்வை விழவில்லை போலும். அவரின் ஹோமத்தின் மீது என்ன கோபமோ? அக்கினி பகவான் ஹோமத்திற்காக போடப்பட்ட அனைத்து பந்தல்களையும் எரித்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் செய்தியறிந்து அப்படியே திரும்பிப் போய் விட்டது.

என் கவலையே கேசிஆரின் ஆலோசகர்கள் அடுத்து அவருக்கு என்ன ஆலோசனைகள் தருவார்களோ என்பது பற்றித்தான்.

ஏதோ தோஷம் இருப்பதால்தான் இப்படியாகி விட்டது. எனவே தோஷ நிவர்த்தி பிராயச்சித்த ஹோமம் நடத்த வேண்டும் என்று இன்னொரு ஹோமம் நடத்தி கல்லா கட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

என் கவலை அது கூட கிடையாது.

அமைதிப்படை கிளைமாக்ஸில் அமாவாசை புடவை கட்டி ஒரு காதில் மட்டும் தோடு அணிந்து வருவது போல வர வேண்டும் என்று சொல்லி விட்டால் அவர் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆந்திராவில் ஏற்கனவே நடந்ததைத்தான் அமைதிப்படையில் காண்பித்தார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள்.

பாவம் தெலுங்கானா மக்கள்!!!!


Sunday, December 27, 2015

கருவூலத்துறையின் களங்கம் போக்க . . .

நாளை வேலூரில் நடைபெறவுள்ள இயக்கம் பற்றிய பிரசுரம்.

வேலூர் நகரத்தோழர்கள் அவசியம் பங்கேற்பீர்கரகாட்டக்காரன் வண்டியில் ஒரு பயணம்

வர்க்கப் போரில் உயிர் நீத்த நாற்பத்தி நான்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்தாண்டும் வெண்மணி சென்றோம். வெண்மணிக்கு செல்வதற்கு முன்பு  வழக்கம் போல திருவாரூரில் வெண்மணி சங்கமக் கருத்தரங்கமும் நடைபெற்றது. 


அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.திருநாவுக்கரசு உணர்ச்சி மிகு உரை ஒன்றை நிகழ்த்தினார். தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வும் பணியும்" என்ற நூலை எங்கள் அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். வெள்ளம் நிவாரணம் குறித்த பணிகளை எங்களது தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன், அவருக்கே உரித்தான பாணியில் நெகிழ்ச்சியோடு விவரித்தார். கடலூரில் நடைபெற்று வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக எங்கள் கடலூர் கிளைச் செயலாளர் தோழர் கே.பி.சுகுமாறன் கௌரவிக்கப்பட்டது எங்களுக்கு ஒரு பெருமை.

வெண்மணி வளைவிலிருந்து எங்கள் சங்கத் தோழர்கள் ஊர்வலமாக வெண்மணி நினைவகம் வரை செல்வோம். எனக்கு காலில் அடிபட்டதில் இருந்து ஊர்வலத்தில் நடப்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி கிளையில் பணியாற்றுகிற காந்தி என்ற தோழர் (முன்பு வேலூரில் பணியாற்றியவர்) பைக்கில் என்னை அழைத்துச் செல்வார். இந்த ஆண்டு அவர் ஊரில் இல்லாததால் நடந்தே சென்றேன். கொஞ்சம் அதிகமாக நடந்தால் நரம்பு இழுத்துக் கொண்டு பொறுக்க முடியாத வலியைத் தரும். ஆனால் அப்படி எதுவும் இந்த முறை நடக்கவில்லை.

வெள்ளத்தின் பாதிப்பு வெண்மணிக்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையை பாதிக்கவில்லை என்பது சிறப்பான ஒன்று. உழைக்கும் வர்க்க உணர்வுள்ள தோழர்களை எந்த பிரச்சினையும் பாதிக்காது என்பதற்கான உதாரணம் இது.

வெண்மணி அனுபவம் எப்போதும் போல எழுச்சியை அளித்தது. எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து செயல்பட ஊக்கம் அளித்தது. 

ஆனால் இந்த முறை வெண்மணி பயணத்தில் நாங்கள் சென்ற வேன் படுத்திய பாடு இருக்கிறதே, அதுதான் இந்த பயணத்தைப் பற்றி நினைத்தால் இனி நினைவிற்கு வரும் போல.

நீண்ட தூர வேன் பயணத்தில்தான் பார்க்காத சில திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தொலைக்காட்சி ரிப்பேர் என்பது முதல் சோதனை. கையில் எடுத்துச் சென்ற புத்தகத்தை படிக்க முடிந்தது என்றாலும் அது சூரியன் மறையும் வரையில்தான். அதற்குப் பிறகு தான் எனக்கு போரடித்தது என்றால் மற்ற தோழர்களுக்கோ பயணம் தொடங்கிய நிமிடத்தில் இருந்தே. 

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் வேன் நின்றது. கியர் லாக்காகி விட்டது என்று ஓட்டுனர் காரணமும் சொன்னார். நல்ல வேளையாக அருகிலேயே ஒரு மெக்கானிக் கடை இருந்தது. ஆனால் வாகனம் சரியாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது.  

அதன் விளைவு என்னவென்றால் மயிலாடுதுறையில் நல்ல ஹோட்டல் எது என்று விசாரித்து அமர்ந்து ஆர்டர் கொடுத்தால் பாதிப் பேருக்கு மட்டுமேயான மாவு இருக்கிறது என்ற சொல்ல மற்றவர்கள் பக்கத்தில் இன்னொரு உணவகத்துக்குப் போய் சாப்பிட்டு வர காலை பதினோரு மணிக்கு வேலூரில் புறப்பட்டவர்கள், இரவு பதினொன்றரைக்கு திருவாரூர் போய்ச் சேர்ந்தோம். 

வரும் வழியில் பூம்புகார் செல்வதா இல்லை வேளாங்கண்ணி செல்வதா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த வண்டியைப் பார்த்து வெறுத்துப் போய் நல்லபடியாக வேலூர் போய்ச் சேர்ந்தால் சரி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் துயரம்.

வந்து கொண்டே இருந்தோம். இரவு உணவு திருக்கோயிலூரில் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மெஸ்ஸில் சாப்பிடலாம் என்று வந்தால் அது மூடப்பட்டு கிடந்தது.  மீண்டும் ஊருக்குள் வருவதற்குப் பதிலாக திருவண்ணாமலை போய் விடலாம் என்று முடிவு செய்தோம்.

நாங்கள் வரும் நேரத்தில் சுவையாகவும் தரமாகவும் குறைந்த  விலையோடும் வேனை பார்க் செய்யும் வசதியோடு  எந்த ஹோட்டல் திறந்திருக்கும்?  என்று ஒரு கேள்வி, சில துணைக் கேள்விகளோடு திருவண்ணாமலையில் வசிக்கிற போளூர் கிளைச் செயலாளர் தோழர் சங்கரிடம் கேட்க, அவர் ஒரு ஹோட்டல் பெயரைச் சொன்னது மட்டுமல்ல,  இருபது பேருக்கான உணவையும் எடுத்து வைக்கச் சொல்கிறேன் என்றும் தெம்பு கொடுத்தார். 

சரி பனிரெண்டு மணிக்குள் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே தடால் என்ற பெரும் சத்தத்தோடு மீண்டும் வேன் நின்றது. மீண்டும் அதே பிரச்சினை.

என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. மீண்டும் தோழர் சங்கருக்கே போன் செய்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு பார்சல் வாங்கி வரச் சொன்னேன். அதற்குள் முதல் கியரில் வேன் நகரத் தொடங்கியது. ஹோட்டலுக்கே வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் சொன்னேன். அவரும் அங்கே வந்து விட்டார். எங்கள் வேன் மெதுவாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. 

ஒரு இருபது நிமிடத்திற்குப் பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கண்டு ஹோட்டல் வாசலுக்கு வருகையில் தோழர் சங்கரிடமிருந்து வேன்.

எங்க இருக்கீங்க தோழர் என்று கேட்க வெறுப்போடு சொன்னேன்

"உங்க கண்ணு முன்னாடி கரகாட்டக்காரன் கார் மாதிரி ஒரு வேன் ஒண்ணு வருது பாருங்க, அதிலதான் வந்துக்கிட்டு இருக்கோம்"
பின் குறிப்பு : இத்தோடு கதை முடியவில்லை. ஓனர் வேலூரிலிருந்து ஒரு மெக்கானிக்கோடு காரில் வருவதால் உள்ளூர் மெகானிக் யாரும் வேண்டாம் என்று ஓட்டுனர் சொல்லி விட்டதால் அவர்கள் எப்போது வந்து, எப்போது சரி செய்து, எப்போது கிளம்புவது என்று யோசித்து பேருந்தில் வேலூர் செல்ல முடிவெடுத்தோம். அது வரை அந்த வழியாக சென்ற வேலூர் பேருந்துகள் காலியாகவே போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிற்கோ இடமே இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருந்த நிலையில் ஓடிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் காரில் வந்திருந்த தோழர் சங்கரே மூன்று ட்ரிப் அடித்து அனைவரையும் பேருந்து நிலையத்தில் சேர்க்க, ஒரு வழியாக நள்ளிரவு இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

மேலே உள்ள படத்தில் எங்கள் கோட்டத்தில் உள்ள தோழர்கள் இருக்க பின்னணியில் இருப்பதுதான் எங்களை பாடாய் படுத்திய அந்த வேன்.