Friday, August 31, 2012

எவரால் எங்களோடு மோத முடியும்?
நாளை எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐம்பத்தி ஆறாவது பிறந்த நாள். எல்.ஐ.சி  தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் மக்கள் சேவையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது நமது நிறுவனம் என்ற உணர்வோடு பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் முகவர்கள் ஆகியோர் இந்த வெற்றிக்கு ஓரு ஒரு காரணம். எத்தனை சவால்கள் வந்தாலும் அதனை முறியடித்து, போராட்ட உணர்வோடு தொய்வின்றி உறுதியுடன் நடைபோடும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி யை கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பது மற்றொரு காரணம்.

எல்.ஐ.சி யின் வளர்ச்சி பற்றி புரிந்து கொள்ள இந்த புள்ளி விபரங்களைப் பாருங்கள்

எண்
பொருள்
அளவு
1
கடந்தாண்டு பெற்ற பாலிசிகள்
357.51 லட்சம்
2
முதலாண்டு பிரிமிய வருமானம்
81,514.49 கோடி ரூபாய்
3
மொத்த வருமானம்
2,87,315.38 கோடி ரூபாய்
4
மொத்த பிரிமிய வருமானம்
2,08,802.90 கோடி ரூபாய்
5
பாலிசிதாரர் பட்டுவாடா
1,18,733.76 கோடி ரூபாய்
6
ஆயுள் நிதி
12,83,990.72 கோடி ரூபாய்
7
சொத்து மதிப்பு
14,17,891.79 கோடி ரூபாய்
8
மத்திய அரசு பத்திரங்களில் முதலீடு
4,41,760 கோடி ரூபாய்
9
மாநில அரசு பத்திரங்களில் முதலீடு
2,13,913 கோடி ரூபாய்
10
வீட்டு வசதி திட்டங்களில்
41,067 கோடி ரூபாய்
11
மின்சார உற்பத்திக்காக
86,880 கோடி ரூபாய்
12
குடிநீர், பாசன, வடிகால் திட்டங்களில்
10,494 கோடி ரூபாய்
13
மற்ற துறைகளில்
21,947 கோடி ரூபாய்
14
பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில்
3,94,779 கோடி ரூபாய்
15
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில்
7,04,151 கோடி ரூபாய்
16
தற்போது சேவை செய்யும் பாலிசிகள்
39.61 கோடி

இப்போது சொல்லுங்கள், எங்களோடு எவரால் போட்டியிட முடியும்?

இதை முன்னாடியே சொல்லக் கூடாதா என நரேந்திர மோடியிடம் எரிந்து விழுந்த மன்மோகன்சிங்
குஜராத்தில் பெண்கள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதற்கு
அங்கே உள்ள பெண்கள் நடுத்தரப் பெண்கள் என்றும் 
அவர்களுக்கு அழகுணர்வு அதிகம் உள்ளதால் மிகக்
குறைவாகவே சாப்பிடுகிறார்கள். ஆகவே ஊட்டச்சத்து
குறைவுள்ளவர்களாக உள்ளார்கள் என்ற அரிய,
அறிவியல், சமூக கண்டுபிடிப்பை குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி சொல்லியுள்ளார்.

இந்த அபத்தக் கருத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட நரேந்திர மோடியை
மிகக் கடுமையாக கண்டித்துள்ளதாக சி.பி.ஐ தகவல்
கிடைத்துள்ளது. 

என்ன தெரியுமா?

இவ்வாறு மன்மோகன் சிங் சொன்னாராம்.

" அடேய் படுபாவி, இதை முன்னாடியே சொல்லியிருக்கக் 
கூடாதா! இது தெரிந்திருந்தால் இந்தியாவில் நாற்பது
சதிவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது
தேசிய அவமானம் என்று சொல்லியிருக்க மாட்டேனே!
இந்தியக் குழந்தைகள் பிறக்கும் போதே அழகுணர்வோடு
பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஊட்டச்சத்து
குறைவாக உள்ளார்கள். பிறக்கும் குழந்தைக்குக்க்கூட
அழகுணர்வு இருப்பது எங்கள் அரசின் சாதனை. அதனால்
சீர்திருத்தங்கள் தொடர வேண்டும் என்று சொல்லியிருப்பேனே "

என்று சத்தம் போட்டாராம்.

பாவம்தானே மன்மோகன்சிங்1
நரேந்திர மோடிக்கு உள்ள அறிவு அவருக்கு இல்லையே!
 

Thursday, August 30, 2012

காக்கிச்சட்டை அரக்கர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?
இப்படியும் நடக்குது   போலீஸ் அட்டூழியம் ; பழ வியாபாரி மார்பில் பைக் ஏற்றி கொடூரம்அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் தெருவோரமாக நின்று வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரியை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கீழே தள்ளி மோட்டார் பைக்கை நெஞ்சில் ஏற்றி துவம்சம் செய்த காட்சி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காய்கறி - கனிகள் ரோட்டில் சிதறி ஓடின : @@அலகாபாத் மார்கெட் வீதியில் பலர் தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் இந்த போலீசார் மாமூல் வாங்கி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழியாக வந்த போலீஸ்காரர்கள் 4 பேர் ஒரு வியாபாரியின் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லியிருக்கின்றனர். அவர் மறுக்கவே ஆவேசமுற்ற போலீசார் அவரை அடித்து கீழே தள்ளினர். வண்டியில் இருந்த காய்கறி மற்றும் கனிகள் ரோட்டில் சிதறி ஓடின. இதனை பார்த்த அக்கம் பக்கத்து வியாபாரிகள் என்ன செய்வது என அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து பார்த்து கொண்டிருந்தனர். தொடர்ந்து கோபம் உச்சிக்கு ஏறியதும் அந்த வியாபாரியை தரையில் தள்ளி அவர் நெஞ்சில் மோட்டார் பைக்கை கொண்டு ஏற்றி அழுத்தி துவம்சம் செய்தவனர்.
இந்த சம்பவம் ஒரு சிலரால் மொபைல் போன் மூலம் படமாக்கப்பட்டு பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காட்சி வெளியானதும் மாநிலம் முழுவதும் இந்த விஷயமே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையில் இது போன்ற வன்செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டில் பொதுநல வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் எஸ்.பி., கூறியுள்ளார்.

தகவல் - நன்றி யாஹூ இணைய தளம்.

விசாரித்தால் மட்டும் போதுமா என்ன?
நடுரோட்டிலேயே இப்படி என்றால்
லாக்கப்பில் என்ன செய்வார்கள்?
காக்கிச்சட்டை அணிந்த இந்த அரக்கர்களுக்கு 
என்ன தண்டனை அளிக்கலாம்?

ஏமாற்று வேலை செய்ய எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?இரண்டு தினங்கள் முன்பாக கர்னாடக மாநிலம் குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு விஜய் மல்லய்யா எண்பது லட்சம் ரூபாய் செலவில் தங்கக் கதவுகள் காணிக்கை என்ற பெயரில் கையூட்டு அளித்தது பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவிற்காக அந்த கோயில் கடவுளின் படத்தையும் இணைத்து வெளியிடலாம் என்று கூகிளில் தேடிய போது கிடைத்த தகவல்கள் மற்றும் படங்கள் கீழே காண்பீர்.

ஐந்து தலை நாகத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் மற்றும் படங்களைப் பார்க்கவும்.என்ன படங்களைப் பார்த்தீர்களா? சூர பத்மனை அழித்த பிறகு முருகன் இந்த இடத்தில்தான் தெய்வசேனையை திருமணம் செய்து கொண்டதாகவும் பாம்பின அரசி வாசுகியின் வேண்டுகோள்படி இங்கே முருகப் பெருமான் பாம்பு ரூபத்தில் அருள் பாலிப்பதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

சரி முருகன் தெய்வசேனையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டதாக தமிழ்நாட்டு தகவல்கள் சொல்கிறதே, குக்கேயா? திருத்தணியா ? முருகன் தெய்வசேனையை எங்கே திருமணம் செய்து கொண்டார்? சரி சரி அப்துல் கலாம் சொன்னது போல கோயிலுக்கான அக்ரஸிவ் மார்க்கெட்டிங் உத்தி போல.

நம் பிரச்சினை திருமணம் அல்லவே, விஷயத்திற்கு வருவோம்.

படத்தில் பார்த்த ஐந்து தலை நாகம் குக்கே சுப்ரமணியர் கோயிலில் உலா வரும் ஐந்து தலை நாகம் என்றும் அது சாட்சாத் முருகப் பெருமானேதான் என்று உருகி உருகி எழுதியிருந்தார்கள்.

இது என்ன கேள்விப் படாத கதையாக இருக்கிறதே என்று மெனக்கெட்டு தேடினால் சில நிமிடங்களிலேயே உண்மை புலப்பட்டு விட்டது.

ஐந்து தலை நாகம் என்பது பொய் என்பதும் ஒற்றை தலை மட்டுமே உள்ள நாகத்திற்கு போட்டோ ஷாபில் கூடுதலாக நான்கு தலைகளை இணைத்து உலவ விட்ட போலிப்படம் என்பது தெரிந்து விட்டது. இதிலே இன்னும் சிறப்பு என்னவென்றால், அந்த ஒற்றைத் தலை நாகம் கூட குக்கே கோயில் உள்ள நாகம் அல்ல.

கொரியாவில் உள்ள ஒரு பாம்புப் பண்ணையில் உலவும் ஒரு பாம்பின் படம் அது. அதிலே ஒட்டு வேலை செய்து ஐந்து தலை நாகமாக்கி விட்டார்கள். ஒரிஜினல் ஒற்றைத் தலை நாகத்தின் புகைப் படங்களையும் கீழே பாருங்கள்.


பிள்ளையார் பால் குடித்தது போல வேப்ப மரங்களிலிருந்து அவ்வப்போது பால் கசிவது போல ஐந்து தலை நாகமும் வெறும் கட்டுக்கதைதான்.

மனிதர்களின் பக்தியை எப்படியெல்லாம் தங்களின் ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்..

இதிலே இன்னும் ஒரு கூடுதல் தகவல். குக்கே சுப்ரமணியர் ஆலயத்தில் மட்டுமல்ல, இன்போசீஸ் நிறுவனத்தின் மங்களூர் அலுவலகத்தில் இதே ஐந்து தலை நாகம் இருப்பதாகவும்  ஒரு கதை பார்த்தேன்.

எப்படியெல்லாம் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்று பாருங்கள்.