Sunday, April 30, 2017

வெடிகுண்டுகளுக்கு இடையே ஒரு . . . .


நூல்                 “பார்த்தினீயம்”
ஆசிரியர்             தமிழ்நதி
வெளியீடு            நற்றிணை பதிப்பகம்
                       சென்னை
விலை               ரூபாய் 450.00

ஈழப் போராட்டத்தின் பின்னணியில் ஒரு காதல் கதை. இந்திய ராணுவம் நல்லது செய்யும் என்று நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டதை விவரிக்கும் கதை என்று சொல்வதும் கூட பொருத்தமாக இருக்கும்.

குறும்பு மிக்க மாணவன் வசந்த குமாரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பரணி என்று பெயர் மாறுகிறான். பரணியும் அவனது காதலி வானதியும் அவர்களின் காதலும் ஈழப்போராட்டத்தால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது என்பது மையச்சரடாக இருந்தாலும் அம்மக்களின் வலியும் துயரமும் சந்திக்கும் பிரச்சினைகளும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள கதை.

அமைதிப்படை நுழைவதற்கு முந்தைய சில ஆண்டுகள், அமைதிப்படை இலங்கையில் இருந்த காலம், வெளியேறிய காலம் என குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கதை நகர்கிறது.

சிங்களப்படையின் தாக்குதல்கள், அதற்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் போனாலும் துரத்தி வரும் துயரங்கள், உணவும் தங்குமிடமும் சிக்கலாய் மாறும் சூழல்கள், அருகிலேயே வெடிக்கும் குண்டுகள், காணாமல் போகும் இளைஞர்கள், ஆலயங்கள் அகதி முகாம்களாய் மாறும் அவலம், அங்கேயும் வந்து சேரும் நெருக்கடி, இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள், சோதனை என்ற பெயரில் வக்கிரமாக செயல்படும் ராணுவ வீரர்கள் என துவக்கப்பக்கங்கள் தமிழர்களின் இன்னலை துல்லியமாக படம் பிடித்துக்காட்டுகின்றன.

இந்திய அமைதிப்படையின் வருகை நம்பிக்கையோடு எதிர் நோக்கப்பட, அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் உருவான திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்வுகள் சரியாக சித்தரிக்கப்படுகிறது.  அதன் பின்பு அவர்கள் ஒருதலைப் பட்சமாக தங்களோடு இருக்கும் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவது, மற்ற இயக்கங்களால் புலிகள் வேட்டையாடப்படுவது போன்ற நிகழ்வுகள், இது ஒரு புனைவல்ல, போர்க்குறிப்புக்கள் என்ற உணர்வையே உருவாக்குகிறது.

அதே சமயம் புலிகள் இயக்கத்திற்கு உள்ளே நடைபெறும் பழி வாங்குதல் நடவடிக்கைகளும் நேர்மையாக அணுகப்பட்டுள்ளது. அமைதிப்படையால் பாலியல் தாக்குதலுக்குள்ளான ஒரு பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை வானதியிடம் பகிர்ந்து கொள்வதை படிக்கையில் என்னைப் போலவே உங்களுக்கும் ராஜீவ் காந்தி மீது கோபம் வரும்.

இயக்கத்தில் சேர்வதென்பது பெருமையும் கவலையும் ஒரு சேர அளிக்கிற உணர்வு என்பதை பல பாத்திரங்களின் பார்வையில் ஆசிரியர் சொல்கிறார். மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பு என்பது பெருமை, உயிருக்கு ஆபத்து என்பது கவலை. வானதியையும் இந்த இரண்டு உணர்வுகள்தான் ஆட்டி வைக்கிறது. ஆனால் இயக்கத்திலிருந்து வெளியே வந்த பரணியை அவள் ஏற்றுக் கொண்டாளா என்பதை நாவலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய மிக முக்கியமான நூல் “பார்த்தினியம்” அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழ்நதிக்குப் பாராட்டுக்கள். மிகக் கடினமான உழைப்பு.Saturday, April 29, 2017

மறக்க முடியாத அந்த நாட்களி்ல் . . . .


நூல்                 “ நீர்”
ஆசிரியர்             வினாயக முருகன்
வெளியீடு            உயிர்மை பதிப்பகம்
                       சென்னை.
விலை               ரூபாய் 300.00

2015 ம் ஆண்டின் இறுதியில் சென்னையை புரட்டிப் போட்ட பெரு மழையை, பொறுப்பின்றி திறந்து விடப்பட்ட  செம்பரப்பாக்கம் ஏரியை, அதனால் மக்கள் பட்ட அவதியை, அன்றைய அரசு நிவாரணப் பணிகளில் காண்பித்த அலட்சியத்தை, உதவிக்கரம் நீட்ட பலர் தன்னெழுச்சியாய் முன்வந்ததை மறந்து விட முடியுமா? (ஆனால் மக்கள் மறந்து போய்தான் தங்களை ஆணவத்துடன் அலட்சியம் செய்த அதிமுகவிற்கே மீண்டும் வாக்களித்தனர் என்பது வேறு கதை)

அந்த காலகட்டத்தை பதிவு செய்கிறது வினாயக முருகனின் “நீர்”. மயிலேறி உலகத்தை சுற்றிய முருகன் போல ஒட்டு மொத்த சென்னைக்குள் எல்லாம் ஆசிரியர் செல்லவில்லை. தாய் தந்தையை வலம் வந்து கனி வென்ற வினாயகனாக ஒரு தெருவின் அவலத்தையே முழு நூலாக்கி விட்டார். ஒரு தெரு பட்ட அவஸ்தையைத்தானே ஒட்டு மொத்த சென்னையும் அனுபவித்தது!

மழையின் தொடக்கத்தில் மணிக்கணக்கில் முடங்கிய போக்குவரத்தில் தொடங்குகிற நூல் நீரெல்லாம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிற வரைக்குமான ஒரு மாத காலகட்டத்தை பதிவு செய்கிறது.

வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அடுத்தவர் வீட்டில் அடைக்கலம் புக வேண்டிய அவலம், நெருங்கிய நண்பராக இருந்தாலும் இயல்பாக இருக்க முடியாத யதார்த்தம், குடிநீரையும் மற்ற பயன்பாட்டுக்கு தேவையான நீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம், அதனால் எல்லாவற்றையும் சுருக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், தண்ணீர் ஈரத்தினால் காலில் ஏற்பட்ட சரும நோய்கள் என்று தனிப்பட்ட முறையில் அனுபவித்த சிரமங்கள் எல்லாம் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேங்கிய தண்ணீரை அகற்றுவதில் மாநகராட்சி காண்பித்த அலட்சியம், தன்னெழுச்சியாய் சிலர் பணி செய்யும் போது சிலர் தனக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, அதே நேரம் பணி செய்பவர்களை கொச்சைப்படுத்துவது என்று அன்றாடம் சமூகத்தில் நாம் காணும் விகாரமான பக்கமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப்பணிக்காக வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத அவலமும் இந்த நூலில் சரியாக பதிவாகியுள்ளது.

எண்பதுகளின் திரைப்படங்களில் தேவையே இல்லாவிட்டாலும் ஒரு சிலுக்கு ஸ்மிதாவின் நடனக்காட்சி ஒன்றிருக்கும். அது போல இந்த நூலுக்கு ஒரு பெண் கதாபாத்திரமும் அந்த பாத்திரத்தின் பாலியல் இச்சைகளும் வலிந்து திணிக்கப்பட்டது போல நான் உணர்ந்தேன். அந்த பாத்திரத்தை ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நூல் முழுமையாகத்தான் உள்ளது.

சென்னை நகரம் நரகமானதை துல்லியமாக சொன்னது “நீர்”. வினாயக முருகனின் நீரோடை போன்ற எழுத்து நடை அதை சக்தியாகவே சொன்னது. 

Friday, April 28, 2017

நதிக்குள்ளே நடந்த . . . .

 தாமிரபரணி நதியை பன்னாட்டுக் கம்பெனிகளிடமிருந்து பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய வெற்றிகரமான போராட்டம் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஜி.பாஸ்கரன் அவர்கள் பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ஊட்கங்கள் இப்போராட்டத்தை இருட்டடிப்பு செய்து தங்களின் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டன.

உற்சாகத்தை பன்மடங்காக்கிய போராட்டம்

உங்களுக்கு உற்சாகத்தை தருவது எது என ஒரு கம்யூனிஸ்ட்டிடம் கேட்டால், அவர் சொல்லுவார் “போராட்டம்”. அந்த உண்மையை உணர ஏப்ரல் 24 அன்று தாமிரபரணி நதிக்கரைக்கு வந்திருந்தால், போராட்ட உற்சாகம் கரை புரண்டோடியதை நேரில் கண்டு உணர்ந்திருக்கலாம். தடைகளை தகர்த்து நாங்கள் முன்னேறுவோம் என்பதை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த செங்கொடியின் புதல்வர்களும், புதல்விகளும் உணர்த்தினார்கள். 

ஆற்றினுள் சாமியானா பந்தல் போட ஒத்துக்கொண்ட போலிஸ், பின்னர் பந்தல்காரரை மிரட்ட பந்தல் பாதியில் நின்றது. வெய்யில் கொளுத்தியது. போலிஸ் கெடுபிடிகளுக்கு இடையில், ஆற்றின் நடுவில் திட்டமிட்டபடி மேடை அமைக்கப்பட்டது. பந்தல்காரர் லேசாய் தயக்கம் காட்ட, தோழர்களே மேடையை போட்டார்கள். தகராறுக்கு பின் கட்டப்பட்ட ஒலிபெருக்கி இயக்கப்பட்டது. ஓங்கி முழங்கியது முழக்கங்கள். மரத்தடியில் கூடி நின்ற கூட்டம், முழக்கமிட்ட இடத்தை நோக்கி மழைக்கு முந்தைய மேக கூட்டத்தை போல நகர்ந்து வந்தது. தாமிரபரணி நதியெங்கும் எதிரொலித்தன முழக்கங்கள். 


தோழர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், வாசுகி, வெங்கட்ராமன், கனகராஜ் ஆகியோர் மதுரை ரோட்டில் இருந்து சாலைத்தெருவுக்குள் நடந்தே வர, இருமருங்கிலும் உள்ளூர் மக்கள் திரளாக நின்று வரவேற்றார்கள். கீழத்தெருவை தாண்டி, படித்துறைக்கு வந்த போது திரண்டிருந்த தோழர்கள் உற்சாகத்தோடு செங்கொடி உயர்த்தி முழக்கமிட்டார்கள், முக்கூடலுக்கும், சீவலப்பேரிக்கும் இடையில் மற்றொரு நதி தாமிரபரணியில் கலந்ததோ என்று அதிசயிக்கும் வண்ணம், பெருங்கூட்டம் நதியை நோக்கி சென்றது. கரையெல்லாம் போலிஸ். 


ஏன் வெயிலில் மேடை என்றார்கள். ஏன் பாதியில் நிற்கிறது பந்தல் என்றார்கள். போலிஸ் தடுத்து விட்டது, மரத்தடியில் பேசுங்கள் என்கிறது போலிஸ் என்றோம். தேவையில்லை சுட்டெரிக்கும் வெய்யில் எங்களை தளர விடாது, உற்சாகமூட்டும் என்று கொளுத்தும் வெயிலில் மேடையேறினார்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடித்தாலன்றி தாக்கு பிடிக்க முடியாத வெய்யிலில் செங்கொடி கூட்டம் அரசுக்கு எதிரான தாக்குதலை தொடுத்தது. தோழர் பிருந்தாகாரத் மற்றும் தோழர்கள் பேசிய பிறகு போலிசிடம் இருந்து தாக்கீது வந்தது, பந்தல் போட்டுக்கங்க சார், எதை தடுத்தாலும், அதையும் போராட்ட வடிவமா மாத்திருவீங்க சார். 


ஏப்ரல் 21ல் இருந்து போலிஸ் நம்மை பின் தொடர்ந்தது. ஆத்துக்குள்ள போராட்டம் நடத்த அனுமதி கிடையாது, மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்டு அப்படி எங்கயாச்சு நடத்துங்க என்றனர். வெள்ளக்காரன் காலத்திலேயே வஉசி, சிவா பேசிய கூட்டமெல்லா நடந்திருக்கு என்றதும், அந்தக் காலம் வேற, இப்ப நிலமை வேற என்றனர். பிறகு ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தனர். முடியாது என்றோம். சாலைத்தெருவுக்கு வந்தனர். படித்துறை வரை என்றனர். மறுத்துவிட்டோம். இதற்கிடையில் இடத்தை பார்க்க போலிஸ் அதிகாரிகள் நாலைந்து முறை படையெடுக்க சிந்துபூந்துறை புதியதோர் உற்சாகத்தை பெற்றது. இறுதியில் சுதந்திரத்திற்கு பின்பு முதல்முறையாக தாமிரபரணி ஆற்றில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்க போராட்டம் துவங்கியது. 


வீசும் அனல் காற்றையும் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வகையில் மிக ஆவேசத்துடன் தோழர் பிருந்தாகாரத் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஊருக்கு புறப்படும் வரையில் நதிக்கரையில் மக்களோடு, மக்களில் ஒருவராகவும் வீற்றிருந்தார் தோழர் பிருந்தாகாரத். 


இவ்வளவு பேர எப்பிடி சமாளிப்பீங்க என்ற போலிஸ், கட்டுக்கோப்பான அந்த கூட்டத்தை பார்த்து வாயடைத்து போனது. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு முடிந்தது. தண்ணீர் பாக்கெட்டுக்களையும், பேப்பர் தட்டுக்களையும் தோழர்களே அப்புறப்படுத்தினார்கள். குடும்பத்தோடு வந்திருந்த தோழர்கள் குழந்தைகளோடு ஆற்றில் குளியலையும் முடித்தார்கள். போராட்டங்கள் பன்முகத்தன்மை கொண்டது. துவக்கத்தில் இருந்து முடியும் வரை போராட்டத்தில் இரண்டற கலப்பதை தோழர்களிடம் கற்க வேண்டும். 


மாலை 4 மணிக்கு போராட்டம் தொடரும் என்று தோழர் ஜி,ராமகிருஷ்ணன் அறிவித்த போது போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அதற்கு முன்பும், பின்பும் கலைக்குழு தோழர்கள் போராட்டத்தின் வீரியத்தை ரத்தமும் சதையுமாய் முன்னெடுத்தார்கள். அத்தனை கலைஞர்களுக்கும் நமது செவ்வணக்கங்கள். ஏப்ரலின் துவக்கத்தில் பாடல், நாடக பட்டறை நடந்த போது இவ்வளவு வீரியத்தோடு இந்த படை புறப்படும் என்று கருதவில்லை. எதுவும் வீண்போகாது என்ற இயக்கவியலை மீண்டும் ஒரு முறை அவர்கள் நிருபணம் செய்தார்கள். 


குறுக்குச்சாலை சித்ராவை தோழர் வாசுகி இயக்கத்தின் சொத்து என்றார்கள். அது மிகையில்லை. அவரது குரலின் வலிமை பெரும் கூட்டத்தை தன்வசப்படுத்தியது. மாரிக்கொழுந்தே என் மல்லிகைப்பூவே பாடல் வரிகள் அவரது குரலில் இப்போதும் ரீங்காரமிடுகிறது. சங்கரன்கோவில் கல்யாணி, கீர்த்தி. குழந்தை செல்வங்கள். அற்புதமானதொரு குரல் வளம். கல்யாணி காலையிலேயே போன் செய்தாள். வேன்ல வந்தா போதுமா, சீக்கிரமா பஸ்ல வரனுமா என்று. திருவுடையானின் தம்பி தண்டபாணி, மதியழகன் ஒரு இசைக்கச்சேரியை நடத்திக் காட்டினார்கள். கலெக்டர் வாராரு காரு ஏறி தாரு ரோட்டுல, கலர் கலரா காகிதம் பார் ஆபிஸ் கேட்டுல என்று சமயோசிதமாக பல அரசியல் பாடல்களை பாடி இயக்கத்திற்கு வலிமை சேர்த்தனர். போராட்டத்திற்கென தோழர்கள் சுயமாக உருவாக்கிய பாடல்கள் அரங்கேறின. போராட்டங்கள் ஆளுமைகளை உருவாக்குகிறது. தனித்திறமைகளை செழுமைப்படுத்துகிறது. 


போராட்ட காலத்தில் உருவான நெல்லை கலைக்குழு, தூத்துக்குடி பாரதி கலைக்குழு, நெல்லை சிஐடியூ பிடிஆர் கலைக்குழு நாடகங்கள் போராட்டத்திற்கு உத்வேகமூட்டின. நாடகங்களை தோழர்கள் நடராஜன், செண்பகம் உருவாக்கி பயிற்சியளித்தனர். நாடக குழுக்களில் சிஐடியூ, வாலிபர் அமைப்புகளின் ஊழியர்களே கலைஞர்களாக பரிணாமம் எடுத்தனர். முன்னீர்பள்ளம் தோழர் முருகனின் இரு மகன்களும் நாடக குழுவில் இணைந்தனர். பத்தாம் வகுப்பு, பன்னெண்டாம் வகுப்புக்கு பரிட்சை எழுதி இருக்கிறார்கள். நாடகம் முடிந்து ஒவ்வொருவரும் பெயரையும், பொறுப்பையும் சொல்லி அறிமுகம் செய்து கொள்வார்கள். அஜித் சொன்னான், “அஜித், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்”. 


நாடக குழுக்கள் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நாடகம் நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தனர். இரண்டு பறை வாங்கி பயிற்சி எடுத்து பறையாட்டம் ஆடினார்கள் வாலிபர் சங்க தோழர்கள். தோழர் குமாரவேலின் ஆட்டம் ரொம்ப பிரபலம். 4 மணிக்கு பிறகு போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அவசர வேலை இருந்தவர்கள் கிளம்ப, 9 மணிக்கு 600க்கும் அதிகமான தோழர்களால் மைதானம் நிரம்பி வழிந்தது. உடை எடுக்க வீட்டுக்கு போனவர்கள் திரும்பி வந்து சேர்ந்தார்கள். இன்னைக்கு எப்பிடி, காலையில வாறோ என்று அலைபேசியில் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போரட்ட களத்திற்கு வந்தனர். சிந்துபூந்துறை பொதுமக்கள் துவக்கத்தில் இருந்து நம்முடன் இருந்தனர்.
ஏப்ரல் 20ல் தீக்கதிர் சிறப்பிதழ் மூன்று மாவட்டங்களிலும் 7000 விற்பனை செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களை தோழர்கள் முழுமையாக பயன்படுத்தினர். வெளிநாட்டில் இருந்த படியே தோழர் யூசுப் ஒரு 5 நிமிட ஆவணப்படத்தை உருவாக்கினார். தோழர் முத்தழகன் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார். வெகுமக்களிடம் இவையெல்லாம் நல்ல தாக்கங்களை உருவாக்கின. 


பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக் 2005ல் துவக்கப்பட்ட காலத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களை துவக்கியது. அந்த போராட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நீடித்து நடந்தன. 2015ல் பெப்சி நிறுவனம் துவக்கப்பட்ட போதும் மார்க்சிஸ்ட் கட்சி களம் இறங்கியது. 2017 பிப்ரவரியில் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாக மூன்று மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. மார்ச் 2ல் தீர்ப்பு வந்தது. உபரி தண்ணீரை தான் வழங்குகிறோம் என்ற தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் அறிக்கையை ஏற்று தீர்ப்பு வந்தது. மார்ச் 6ல் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. வாலிபர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் பிரச்சாரங்களும், உண்ணாவிரத போராட்டமும், ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. பிரதான கட்சிகளான பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுகவைத் தவிர இதர பல அமைப்புகளும் களம் இறங்கின. 


இப்போராட்டங்களின் நீட்சியாக மாபெரும் மக்கள் திரள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கியது. இரவு 7 மணிக்கு கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோக் பெப்சிக்கு தடை விதிப்பது குறித்து, குறிப்பாக உபரி தண்ணீர் குறித்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஒப்புக்கொண்டார். போராட்டக்குழுவோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை அம்சங்களையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டார். 


கடிதத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு,


“பெருகிவருகின்ற விவசாய தேவை, பொதுமக்களுடைய தேவை ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் போது தற்போதைய உபரிநீர் என்று பொதுப்பணித்துறையால் செய்யப்பட்ட கணக்கீடு ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதியதாக ஒரு வல்லுநர் குழுவினை நியமித்து உபரி தண்ணீர் என்பதை ஆய்வு செய்து தாமிரபரணியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது, எவ்வளவு தண்ணீர் தேவை, உபரிநீர் இருக்கிறதா இல்லையா என்பதை சரியாக கணக்கீடு செய்து அரசு ஆய்வு செய்து தக்க முடிவுகளை எடுக்க வேண்டுமென்று CPI(M) மாநிலச்செயலாளர் உயர்திரு ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தண்ணீரை கச்சாப்பொருளாக பயன்படுத்தக்கூடிய பெப்சி கோகோகோலா போன்ற நிறுவன்ங்களுக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.


எனினும் மாவட்ட நிர்வாக தரப்பில் புதிய வல்லுநர் குழுவை நியமித்து ஒரு அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்வது என ஒத்துக்கொள்ளப்பட்டது. எனவே இக்கடிதத்தின் மூலம் ஒரு வல்லுநர் குழுவை நியமித்து மூன்று மாவட்டங்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய நீர் தேவைகள், தண்ணீர் கிடைக்க கூடிய மொத்த அளவு ஆகியவற்றை வல்லுநர் குழு மூலமாக அறிவியல்பூர்வமாக தக்க புதிய ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை செய்ய அரசு ஆணையிட பரிந்துரை செய்கிறேன். மேலும் மேற்படி புதிய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவுகளை அரசு மேற்கொள்ளலாம் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”. 


இது முதற்கட்ட போராட்டம், முதற்கட்ட வெற்றி. கோக் பெப்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும். அது முன்னிலும் பன்மடங்கு பலமாகவும், வீரியமாகவும், பன்முகத்தோடும், மக்கள் திரளோடும் துவங்கும். அதோ தாமிரபரணி சற்றே ஆசுவாசமடைகிறாள். அவளுக்கு நம்பிக்கை பூத்துவிட்டது. உயரப்பறந்த செங்கொடி அவளில் பிரதிபலித்தது நம் முகங்களைப் போல.

K.G.Baskaran

Thursday, April 27, 2017

இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?


மோசடி டவுசர் பாய்ஸ் எப்பவுமே பொய் மட்டும்தான் பேசுவாங்க. அவங்க வாயிலேயிருந்து என்னிக்குமே உண்மை மட்டும் வரவே வராது. இவங்க டுபாக்கூர், ஃபிராடு என்று மீண்டும் மீண்டும் புரட்டி அடிச்சாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணை இல்லாமல் மறுபடியும் மறுபடியும் கதை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்பவும் ஒரு மூன்று கற்பனைக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தவறு என்று ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. இடதுசாரிகள் மீதான பொய் என்றால் சில நடுநிலை நல்லவர்களுக்கு திடிரென நீதி, நியாயம், நேர்மை எல்லாம் வந்து விடும். பொய்க்கதைகளை நம்பி உபதேசம் சொல்ல புறப்பட்டு விடுவார்கள்.

தற்போது உலவும் மூன்று பொய்களும் உண்மை நிலவரங்களும் பற்றி பார்ப்போம்.

கேரள மின்சார அமைச்சர் தோழர் எம்.எம்.மணி பற்றியது.

தோழர் சதன் தக்கலை எழுதிய பதிவு நடந்தது என்ன என்பதை முழுமையாக விளக்கும். அதை படியுங்கள்.கேரளாவில் சில தினங்களாக, கேரள மின்துறை அமைச்சர் பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசிவிட்டார் என்று எதிர் கட்சிகளும் வலதுசாரி கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து ஊளையிட்டு வருகின்றன...

கேரளத்தின் மூணார் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் மலயோர சிறு நகரம்...சுற்றுலாத்தலம், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி, டாடா போன்ற பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் தேயிலைத்தோட்டங்களும் இங்கு இருக்கின்றன...

இங்கு எராளமான தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்...


இத்தகைய வளம் மிகுந்த பகுதியில் தங்கள் உடமைகளைப் பெருக்க, வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிக்க, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முயன்று வருகின்றன...அந்த நிலங்களில் பெரிய ரிசார்ட்டுகள் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முயன்று வருகின்றன... 

அந்தப் பகுதியிலும் இடுக்கி மாவட்டத்தின் பிற மலைப் பிரதேசங்களிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்த்து CPIM-மும் இடதுமுன்னணி அரசும் போராடி வருகின்றன...ஒவ்வொரு காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் தனியாருக்கு சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த நிலங்களை அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, அதற்கடுத்து வரும் இடதுமுன்னணி அரசுகள் மீட்பது தொடர்கதையாகி வருகின்றன...ஆனாலும் ஆக்கிரமிப்புகள், பலவித தந்திரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்றன...வழிபாட்டுத்தலங்கள் அமைக்க என்ற பெயரில் ஏக்கர் கணக்கில் நிலத்தை அபகரிப்பதும் அதன் ஒரு பகுதியாகும்...

அதோடு வழிபாட்டுத்தலங்களை கேடயமாகப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை தொடரலாம் என்ற குதர்க்க தந்திரமும் அதில் மறைந்துள்ளது....


அத்தகைய முறையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் அமைக்கப்பட்டிருந்தது...அதனை அகற்றுவதற்கு சில அதிகாரிகள் முயன்றனர்...அதிகாரிகளில் சிலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகிறார்கள்...அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபடுவது போல் நாடகமாடி சில அதிகாரிகள் இந்த வழிபாட்டுத் தலங்களை முதலில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி, அதன் மூலம் சாதாரண மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் கோபத்தைத் திருப்ப முயன்றுள்ளனர்...அத்தகைய முயற்சியாக மூணார் பகுதியிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தைத் தேர்ந்தெடுத்து அதை அகற்ற முயன்றனர்...அந்த தேவாலயத்தின் முகப்பில் இருந்த பிரம்மாண்ட சிலுவையை நம்பிக்கையாளர்கள் மனம் புண்படும்படி ஆக்ரோஷத்துடன் உடைத்தனர்... இதனை ஊடகங்கள் கேரள இடதுமுன்னணி அரசுக்கு எதிராக பயன்படுத்த முயன்றனர்...

ஆனால கேரள முதல்வர் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது அத்தியாவசியம் ஆனால் யாருடைய நம்பிக்கையிலும் இந்த அரசு தேவையில்லாமல் தலையிட்டு நம்பிக்கையாளர்களை வேதனைப் படுத்தாது...அங்கு அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மறைமுகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுக்கவே, இத்தகைய செயல்களை செய்கின்றனர் என்று கூறியதோடு ஆக்கிரமிப்பு அகற்றம் முறைப்படுத்தப் பட்டு மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்றும்...ஆக்கிரமிப்பும் வாழ்க்கைக்காக குடியேறுவதும் இரண்டும் வெவ்வேறு என்றும்...வாழ்வாதரத்திற்காக குடியேறிய மக்களுக்கு குடிமனைகளுக்குத் தேவையான அளவு நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்றும்...மே மாதம் முதல் இந்தப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக ஒரு அரசு உயர்மட்டக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது...
இது நில மாபியாக்களுக்கும் கார்பரேட்டுகளுக்கும் பெரும் பின்னடைவானது...

இந்தப் பின்னணியில் நில மாபியாக்களின் இத்தகைய நரிதந்திரங்களை அம்பலப்படுத்திப், CPIM சார்பில் தோழர் M.M.மணி ஒரு கூட்டத்தில் பேசினார்...அதில் கார்ப்பரேட் ஊடகங்களின் ஊழியர்களும், நில மாபியா கைக்கூலிகளும், சில அரசு அதிகாரிகளும் யாரால் வழி நடத்தப்படுகிறார்கள் என்று அம்பலப்படுத்தினார்...அதோடு அவர்கள் அனைத்துவிதமான கேளிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதையும் வெட்டவெளிச்சமாக்கினார்...சில ரிசார்டுகளும் கேளிக்கை விடுதிகளும் இவர்களுக்கு அத்தகைய வசதிகளை செய்து கொடுத்ததையும், இவர்கள் அத்தகைய கேளிக்கைகளில் பங்கேற்றதையும் கோடிட்டு காட்டினார்...அப்போது ஏற்கனவே மூணார் கண்ணன்தேவன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் “பொம்பிளை ஒருமை” என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்திலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரச்சனையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு மூணாறில் முகாமிட்டு, நில மாபியா, கார்பரேட் ஆதரவு கும்பல் இதே கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்... அப்போது அவர்கள் ரிசார்ட்டுகளுக்கு பதிலாக காட்டிற்குள் அவற்றை செய்து கொண்டிருந்தார்கள் என்று அந்த நில அபகரிப்புக் கும்பலையே தாக்கிப்பேசினார்...


இந்த விடியோ காட்சியை மலையாள மனோரமா நியுஸ் தொலைக்காட்சி திரித்து “பொம்பளை ஒருமை” பெண்களை தான் தோழர் மணி குறிப்பிட்டதாக செய்தி பரப்பியது...”பொம்பிளை ஒருமை போராட்டக்காலத்திலும்” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பொம்பிளை ஒருமை நடந்த காலத்திலும்” என்று குறிப்பிட்டிருப்பார்... அவ்வளவு தான்...


இதை அவரது பேச்சை முழுமையாக கேட்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும்...ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் எடுத்து விபச்சார ஊடகங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றின...தோழர்.M.M.மணி ஒரு எளிமையான கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் என்பதும் அவரது இயல்பான கிராமப்புற மொழிநடை பற்றியும், அலங்காரமற்ற உரைகள் பற்றியும் அறிந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதோடு அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் செய்தார்கள்...

அதோடு எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரசும் பாஜகவும் இதை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட முயன்றனர்...சிலர் அவரது உருவத்தையும் நிறத்தையும் ஆதாரமாக வைத்து சமூக ஊடகங்களில் கேலிச்சித்திரங்களை உலாவ விட்டார்கள்...தமிழகத்தில் இதை கேரள-தமிழ்நாடு மாநிலப் பிரச்சனையாக்க சிலர் முயன்று வருகிறார்கள்...தோழர். M.M.மணி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூடத் தெரியாமல் மலையாளி என்று கருதி எதிர்ப்பது நகைப்புக்குரியது...

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பல பொது இடங்களிலும் பெண்களை அவமானப்படுத்தியும் மானபங்கப் படுத்தியும் சர்ச்சைகளில் மாட்டிய, ராஜ்மோகன் உண்ணித்தான், பீதம்பரப் குறுப்பு, குஞ்ஞாலிக் குட்டி, அப்துல்லாக் குட்டி மற்றும் சரிதா நாயர் பிரச்சனையில் சிக்கியவர்கள் போன்ற உத்தமர்களே அதிகமாக வாய் கிழிய பேசி வருகிறார்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, ஷோபா சுரேந்திரன் என்ற BJP பெண் தலைவர், எம் எம் மணியை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமென்றால் அவரை "வைத்துக்கொள்ளுங்கள்" என்று என்று அதரவு தெரிவித்துப் பேசிய பெண் தொழிலாளர்களைப் பார்த்து எரிச்சலைடைந்து தரக்குறைவாக கூறியுள்ளார்... ஆனால் இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்பிரச்சனையிலுள்ள உள்நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.


எனினும் இப்பொழுது உண்மை வெளியான பின்னர் தோழர் M.M.மணியை பலரும் ஆதரிக்கிறார்கள்...ஆதரவு இயக்கங்கள் பெருகி வருகின்றன...

கேரள இடதுமுன்னணி ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது எதிரிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது...அதில் குறிப்பாக தோழர்.M.M மணியின் பொறுப்பிலுள்ள, மின்சாரத் துறை ஒரு முக்கிய சாதனையயை நிகழ்த்தப் போகிறது...கேரளம் நாட்டிலேயே முழுமையாக மின்சார வசதி பெற்ற மாநிலமாக மாற இருக்கிறது.... 

தோழர். பிணராயி விஜயன் பாசிசத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களில் முக்கிய அடையாளமாக பலராலும் முன் நிறுத்தப்படுகிறார்... எதிர்காலத்தில் நாடு, பாசிச சக்திகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து இந்நாட்டையும் மக்களையும் மீட்கும் போராட்டங்களை வலுவாக நடத்தும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உள்ளது என்ற அபாயமணி எதிரிகளின் காதுகளுக்கு கேட்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறியே இத்தகைய பொய்ப் பிரசாரங்கள் என்பதில் ஐயமில்லை...

CPIM இத்தகைய சதிகளை முறியடித்து முன்னேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்...!


அதிகாரிகளின் அராஜகத்தை அம்பலப்படுத்தினால் அது பெண்களுக்கு எதிரானது என்று திசை திருப்பிய சதிக்கு இரையாகி உபதேசம் செய்த நடுநிலை நல்லவர் யாரும் தங்களின் தவறை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் பேச்சு நடை சரியில்லை. மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவரை கட்சி நிச்சயம் எச்சரிக்கும். தவறுகளை கண்டிக்கவோ, திருத்திக் கொள்ளவோ மார்க்சிஸ்ட் கட்சி தயங்காது. அது பற்றி இந்த நல்லவர்கள் கவலைப்பட அவசியமில்லை.

காவிகளின் கட்டுக்கதையை நம்பி இப்போது உணர்ச்சிவசப்படுகிற உத்தமர்கள் எல்லாம் எப்போதுமே இப்படி நியாயம் பேசுபவர்கள்தானா என்று கொஞ்சம் அவர்களின் பதிவுகளைப் பார்த்தால் அப்படி எல்லாம் பெண்களின் பிரச்சினைக்காக பரிதவிப்பவர்களாகத் தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி மீது மனதுக்குள் ஒளிந்திருக்கிற ஏதோ ஒரு உணர்வு (அது என்ன எழவு என்று அவர்களுக்குத்தான் தெரியும்) போட்டுத்தாக்க கிடைத்தது ஒரு வாய்ப்பு என்று புறப்பட வைத்து விட்டது.

இரண்டாவது பொய்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் முப்பத்தி ஓரு தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் மொத்தமாகவே 51 வாக்குகளைத்தான் பெற்றார்கள் என்பது இக்கதை. மோசடிப் பேர்வழி என்று சக சங்கியான எஸ்.வி.சேகரால் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் கேடி ராகவன் கட்டிய கதை இது. ஒரு வார்டில் மட்டுமே சிபிஎம் நான்காயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்ற விபரத்தைச் சொல்லி காரித்துப்பியதும் அதை அவர் டெலிட் செய்து விட்டார். கேடி ராகவனை நம்பி நக்கல் செய்த எல்லோரும் எங்கோ காணாமல் போய் விட்டார்கள்.

மூன்றாவது பொய் ரொம்பவே அபாயகரமானது. விஷத்தை பரப்பும் விபரீத வேலை.

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளோடு நடந்த மோதலில் சிஆர்பிஃஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மானவர் சங்கத் தோழர்கள் கொண்டாடினார்கள் என்று புகைப்படங்களை வெளியிட்டு வழக்கமான தேச துரோகி டயலாக்கையும் பயன்படுத்தினார்கள், அந்த புகைப்படங்கள் எல்லாம் மாணவர்  சங்கத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட (ஏ.பி.வி.பி தோல்வியடைந்த தேர்தலும் கூட). நடந்த நிகழ்வின் புகைப்படங்களை ஏதோ இப்போது எடுத்த படங்கள் என்று புலம்பியுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்கள் மீது பொதுப்புத்தியில் ஒரு வெறுப்பை உருவாக்க காவிக் கேடிகள் தொடர்ந்து செய்யும் முயற்சியில் இதுவும் ஒன்று.

மூன்று சம்பவங்களிலும் பாஜககாரர்கள் அப்பட்டமான பொய்யர்கள் என்பது மீண்டும் அம்பலமாகி உள்ளது. நிமிர்த்த முடியாத நாய் வால், நஞ்சுள்ள நாகம் என்பது போல பாஜகவும் பொய்யும் பிரிக்க முடியாதது. உண்மை பேச வேண்டும் என்பதை விட தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவது அவர்களுக்கு எளிதானது. இந்த கேடு கெட்ட பிழைப்பிற்கு அவர்கள் பிச்சை எடுக்கப் போகலாம்.பின் குறிப்பு 

கேடி ராகவனின் கட்டுக்கதையை நம்பி “நாராயணசாமி நடராஜன்” என்று முதியவர் என் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் போட்டு மகிழ்ச்சியடைந்தார். நேர்மை சிறிதும் இல்லாத, வன்மம் மட்டுமே கொண்ட அவரது பின்னூட்டங்கள் எதையும் பிரசுரிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே அறிவித்த போதிலும் தனது வெறியை தணித்துக் கொள்ள அவர் அவ்வப்போது பின்னூட்டமிடுவதும் அதை நான் அகற்றுவதும் நடந்து கொண்டே இருப்பது வேறு விஷயம். அவர் என்னை பாராட்டி போட்ட இரண்டு பின்னூட்டங்களையும் கூட நான் அகற்றத்தான் செய்தேன்.