Saturday, August 15, 2020

சுதந்திர தின சூளுரை

 

இந்தியக் குடியரசை மீட்டெடுப்போம் என சுதந்திர தின சூளுரை  எடுப்போம்,

 












-தோழர் அமானுல்லா கான்,

முன்னாள் தலைவர்,

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

 

சுதந்திரம் பெற்றதிலிருந்து காணாத ஒரு மிகப் பெரிய நெருக்கடியை தேசம் சந்தித்து வரும் வேளையில்தான் இந்த வருட ஆகஸ்ட் 15 வருகிறது.  பொருளாதாரம் வெளி வர முடியாத ஆழமான நெருக்கடியில் உள்ளது. மத, சமூகப் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ளன. அரசியல் சாசன விழுமியங்களும் ஜனநாயகமும் பின்னுக்கு போய் விட்டன. கோவிட் 19 ன் தாக்குதல் காரணமாக சுகாதாரத்துறை முற்றிலுமாக நிலை குலைந்து போயுள்ளது. அருகாமை நாடுகளுடனான உறவு என்பது சீர்கெட்டுள்ளது. இப்படிப் பட்ட பன்முகச் சவால்களை தேசம் எப்படி  எதிர்கொள்ளப் போகிறது? தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உழைக்கும் வர்க்கம் எப்படிப்பட்ட பங்களிப்பை செலுத்தப் போகிறது?

 இந்தியாவிற்கு சுதந்திரம் நம்பிக்கையோடு மட்டுமல்ல வலியோடும் சேர்ந்தே வந்தது. இந்தியா பிரிவினை கண்டதனால், அதனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் உருவான வலி அது. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசிக் காலம் கற்பனை கூட செய்ய முடியாத காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளால் நிரம்பியிருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிகப் பெரிய புலம் பெயர்வு என்பது பிரிவினையால் நேரிட்டது. இருப்பினும் சுதந்திரம் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் உருவாக்கியது. பாகிஸ்தான் மத அடிப்படைவாத நாடாக மாறியது போல அல்லாமல் இந்தியாவை ஜனநாயகம், மதச்சார்பின்மை, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அடித்தளங்களுடனான நவீன நாடாக உருவாக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி தளகர்த்தர்கள் முடிவெடுத்தனர்.

 15 ஆகஸ்ட் 1947 அன்று மக்களிடம் உரையாற்றிய பண்டித நேரு “இன்று நாம் கொண்டாடும் சாதனை என்பது எதிர்காலத்தில் நாம் பெறப் போகும் மகத்தான வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றை நோக்கிய  நடவடிக்கைகளே, சந்தர்ப்பங்களே” என்றார். ஏழை எளிய மக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இவ்வார்த்தைகள் எழுச்சியூட்டின. சுதந்திர இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் பெருகின. வறுமை, பசி, நோய்மை, அறியாமை ஆகியவற்றை அகற்றுவோம் என்ற உறுதிமொழிகள் காப்பாற்றப்படும் என்று மக்கள் நிஜமாகவே மக்கள் நம்பினார்கள்.

 பொருளாதார செயல்பாட்டில் தோல்வியே

 சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் பெரும்பாலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலேயே நீடிக்கிறது. புதிதாக விடுதலை பெற்ற நாடு தன் வளர்ச்சிக்கு முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்ததும் 1991 ல் முழுமையாக நவீன தாராளமயத்தை தழுவியதும் இன்று இந்தியாவுக்குள் ஒரு இந்தியாவை நாம் காணும் சூழலுக்கு எடுத்துச் சென்றது. ஒட்டு மொத்த மக்கட்தொகையில் பத்து சதவிகிதமானவர்களின் வாழ்க்கைத் தரம் உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பவர்களோடு ஒப்பிடக் கூடியதான ஒரு இந்தியாவும் இருக்கிறது. அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிற இந்த இந்தியா, தன்னை உலகளாவிய அளவில் மிகப் பெரிய சக்தி படைத்த நாடாக கருதுகிறது. ஏழை எளிய மக்களின் துயரத்தை, ஒப்புக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ  கூட அது தயாராக இல்லை.

 இதற்கு மாறாக இன்னொரு இந்தியாவிலோ பெரும்பாலான மக்கட்தொகை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறது. அவர்களது வாழ்க்கைத்தரமோ ஆப்பிரிக்க சஹாரா பாலைவன வாசிகளைப் போல மோசமாக இருக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தி என்று உற்சாகத்தில் திளைக்கிற இந்திய ஆட்சியாளர்கள், மனித வளர்ச்சிக் குறியீட்டில் சர்வதேச அளவில் இந்தியா பரிதாபகரமான 129 வது இடத்தில் இருப்பது பற்றி கவலைப்படுவதே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி உலகில் உள்ள ஏழை மக்களில் 28 % இந்தியாவில்தான் உள்ளனர். கோவிட் 19 தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களை கையாண்ட விதமே இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாய் உள்ள விளிம்பு நிலை மக்கள் மீதான அரசின் அக்கறையின்மையையே நிரூபித்தது.  இந்த ஒருதலைப்பட்சமான வளர்ச்சி என்பது உலகிலேயே மிகப் பெரிய சமத்துவமற்ற சமூகமாக இந்தியாவை மாற்றியுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பலனளிக்கும் என்ற உறுதிமொழியை காப்பாற்றாததால் தேசம் தனது விளிம்பு நிலை மக்களை ஏமாற்றி விட்டது.

 பின்னோக்கிச் செல்லும் ஜனநாயகம்.

 ஜனநாயகம் என்பது குறித்த கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவது மட்டுமல்ல. நீதியும் சுதந்திரமும்தான் அதன் அர்த்தம். நிலப்பிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்று கூறப்பட்டது. புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகளில் ஜனநாயகம் தோற்றுப் போய் யதேச்சதிகாரமும் ராணுவ சர்வாதிகாரமும் நிலை கொண்ட போதிலும் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்தது. இங்கே தேர்தல்கள் முறைப்படி நடைபெற்று ஆட்சி மாற்றம் சுமுகமாகவேதான் இருந்திருக்கிறது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் சீரழிவின் அடையாளங்கள் தெளிவாகவே தெரிகிறது.

 ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்குவது என்ற சிந்தனை இப்போது அரசியலை செயல்படுத்தும் கருவியாக இல்லை. அரசியல் என்பது வணிகமாகவும் பிழைப்பாகவும் மாறி விட்டது. நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் சுய நல சக்திகளால் நிரம்பியிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் குற்ற வரலாறு கொண்டவர்கள். நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் குற்றவாளிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாகவே தென்படுகிறது. கடந்த சில வருடங்களாக இன்னொரு புதிய நிகழ்ச்சிப் போக்குகளையும் பார்க்கிறோம். ஆட்சியில் அமர்வதற்கு ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியமே கிடையாது. தேர்தலில் தோற்றுப் போன பின்பும் வெற்றி பெற்றவர்களை ஏதோ ஒரு சந்தைப் பொருள் போல விலை கொடுத்து வாங்கியும் ஆட்சிக்கு வர முடிகிறது.

 ஒரு ஜனநாயகம் வெற்றி பெற நீதித்துறை மற்றும் இதர ஜனநாயக, அரசியல் சாசன அமைப்புக்களும் ஊடகங்களும் சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். இன்று நீதித்துறையும் ஜனநாயக அமைப்புக்களும் ஆட்சியாளர்களோடு சமரசம் செய்து கொண்டுள்ளதையும் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்களிடம் விலை போயுள்ள நிலைமையையும் பார்க்கிறோம்,  குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல அதிகாரத்தின்  அத்துமீறல்களிலிருந்தும் குடிமக்களை பாதுகாக்க நீதித்துறை இன்று தவறி விட்டது.   பெரும்பாலான ஜனநாயக நிறுவனங்கள் முதுகெலும்பை இழந்து விட்டன. சுதந்திர ஊடகம் என்று அழைக்கப்படுபவையோ அரசாங்கத்தின் பிரச்சார பிரங்கிகளாகவே மாறி விட்டது. இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகள் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அரித்து விட்டது.

 தீவிரமாகும் சமூக, மதப் பதற்றங்கள்

 பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற மட்டும் மக்கள் விரும்பவில்லை. பேசுவதற்கான, சிந்திப்பதற்கான, விமர்சிப்பதற்கான சுதந்திரத்தையும் விரும்பினார்கள். அவர்கள் கருத்துக்களை ஒடுக்கும் அடக்குமுறைகளை முறியடிக்க விரும்பினார்கள். இச்சுதந்திரங்களை அளிக்க அரசியல் சாசனம் உறுதியளித்தாலும் நடைமுறையில் அது மக்களிடமிருந்து நழுவிக் கொண்டுதான் இருக்கிறது. நீதித்துறை அச்சுதந்திரங்களை பாதுகாக்க தயங்குகிறது. இன்று ஒருவர் மாறுபட்டு சிந்தித்தாலோ, பேசினாலோ, அரசையோ அல்லது அதன் தலைவரையோ விமர்சித்தாலோ அவர்கள் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கத் துணிந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  நடத்தப்பட்ட விதமே அரசின் பழிவாங்கும் குணத்திற்கு போதுமான சான்றாகும் ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவால்கா, சுதா பரத்வாஜ் மற்றும் பல . சிறந்த அறிவுஜீவிகள் சிறையில் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரதமரை கொலை செய்ய அவர்கள் சதி செய்தனர் என்ற கொடூரமான குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டாலும் இரண்டு வருடங்களான பின்பும் அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடங்கவேயில்லை. ஒடுக்கப்பட்டவர்களாக ஒலிக்கும் அக்குரல்களை முடக்குவது மட்டுமே அவர்களின் எண்ணம். மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் மத்தியரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே கடுமையான சட்டங்கள் உண்மைகளை சொன்ன ஊடகவியளாளர்கள் மீதும் பாய்ந்துள்ளது. இந்தியா ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக சிதைவுண்டு போனது போல காட்சியளிக்கிறது.

 டாக்டர் அம்பேத்கர் ஜாதி ஒழிப்புக்காக போராடினார். ஜாதி ஒழிந்து விடும் என்று நம்பினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் ஜாதிய முறை இன்னும் அழுத்தமாக வேரூன்றியுள்ளது. இந்திய சமூகம் இன்னமும் ஒரு ஆழமான ஜாதிய சமூகமாகவே நீடிக்கிறது. இப்படிப்பட்ட சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான அராஜகங்களுக்கு இன்னும் முடிவே இல்லை. நிலப்பிரபுத்துவ அரசியல் பிழைத்திருக்க வேண்டுமானால் அவர்களுக்கு ஜாதிய சமூகம் நீடித்திருக்க வேண்டும். ஜாதியத்தை தகர்ப்பதற்கு  அரசுக்கு உறுதியோ தீவிரமோ கிடையாது. அதுதான் இந்தியாவை “ஜாதிகளின் குடியரசு” என்று ஆனந்த் டெல்டும்டேவை கூறத் தள்ளியது. வலதுசாரி அடிப்படைவாதிகளின் அரசியல் வளர்ச்சி சிறுபான்மையினரை மேலும் விளிம்பிற்குத் தள்ளியது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதுமாகும். வலதுசாரி அடிப்படைவாதிகள் பெரும்பான்மையினரின் ஆதரவை கட்டமைக்க சிறுபான்மையினரை “பிறர்” என மாற்ற முயல்கின்றனர். அரசின் கடந்த ஒரு வருட செயல்பாடுகள் சிறுபான்மையினரை மேலும் அன்னியப்படுத்தியுள்ளது.

 இன்றைய சூழல்

 கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பேயே  இந்தியப் பொருளாதாரம் பெரும் சிக்கலில் தவித்து தடுமாறிக் கொண்டிருந்தது. கோவிட் 19 அந்த நெருக்கடியை மேலும் அதிகமாக்கி விட்டது. பல லட்சம் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அதனால் அவர்கள்  வருமானமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோவிட் 18 நிலைமையை சமாளிப்பதில் ஆட்சியாளர்கள் இன்று சந்திக்கும் தோல்வி என்பது பொது சுகாதாரத்துறையை அலட்சியப்படுத்தி முடக்கியதன் பிரதிபலிப்பே. மத உணர்வுகளை தூண்டி விடவும் அந்த அடிப்படையில் மக்களை அணி திரட்டவும் தொற்று பரவலைக் கூட பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

நீண்ட காலம் நட்புறவோடு இருந்த அண்டை நாடுகளுடனான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவு சீர் கெட்டுள்ளதென்றால் அது ஆட்சியாளர்களின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைத்தான் சுட்டுகிறது. சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தின் ஊடே தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் உள்நாட்டு, பன்னாட்டு தனியார் மூலதனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. பல்லாண்டு கால போராட்டங்கள் வாயிலாக தொழிலாளர்கள் வென்றெடுத்த உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

 நவீன தாராளமயம் தோற்றுப் போய்விட்டது என்ற ஒருமித்த கருத்து உலகெங்கும் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் பங்களிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது, அரசின் பங்களிப்பே மிகவும் அதிகமாக தேவைப்படுகிற அவசியத்தை, சூழலை கோவிட் தொற்று உருவாக்கி விட்டது.  உலகளாவிய நிலைமை இவ்வாறு இருக்கையில் மோடி அரசோ தொடர்ந்து நவீன தாராளமயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை ஒரு அரசாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளிலிருந்து நழுவி வருகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக மத ரீதியான அணி திரட்டல் என்பது தொடர்கிறது. ஜாதிய முறை மேலும் வேரூன்றி சமூக ரீதியிலான பாரபட்சமான செயல்பாடுகள்  தங்குதடையின்றி தொடர்கிறது.  74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தியாவின் இன்றைய நிலை இதுதான்.

 குடியரசை மீட்டெடுப்போம்

 இச்சிதைவை உழைப்பாளி வர்க்கத்தைத் தவிர வேறு யாரால் தடுக்க முடியும்! தற்போதைய பொருளாதார, அரசியல் அமைப்புக்கு மாற்றான ஒரு முறையை முன்மொழியக் கூடிய திறமையும் வல்லமையும் உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டு. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள குடியரசின் மதிப்பீடுகளை காத்து  ஜனநாயகத்தை பாதுகாக்கும் வல்லமையும் உழைப்பாளி வர்க்கத்திற்கே உண்டு. நாம் நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை கட்டமைக்க முடிவெடுத்தோம். இந்தியக் குடியரசின் அடித்தளமாக மத, மொழிப் பன்முகத்தன்மை அமைந்திருக்கும் என்பதை இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்தது, இன்று அந்த அடிப்படைக் கொள்கைகள் அனைத்துமே பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் பிரிக்க இயலாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தொழிலாளர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்க நடைபெறும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க வேண்டியது உழைப்பாளி வர்க்கத்தின் கடமை. நாட்டின் பொருளாதார, அரசியல் திசை வழியை மாற்ற வேண்டுமானால் உழைக்கும் வர்க்கம் உழைப்பாளி மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைக்கிற சக்தியாகவும் திகழ வேண்டும்.

 கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத தன்மைகளோடு, தோற்கடிக்க முடியாதவர் என்று கட்டுக்கதைகள் மூலம் தலைவர் கட்டமைக்கப்பட்டு ரட்சகர் போல பொய்த் தோற்றத்துடன் வடிவமைக்கிறார்கள். இது யதேச்சாதிகரத்திற்கே இட்டுச் செல்லும். இது போன்ற போக்குகள் ஏற்கனவே இந்தியாவில் நாம் பார்க்கத் தொடங்கி விட்டோம். அரசியலில்  நாயக வழிபாடும் தனி நபர் துதியும் நிச்சயமாக பேரழிவில்தான் முடியும் என்று டாக்டர் அம்பேத்கர் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையை உழைப்பாளி வர்க்கம் புறக்கணித்து விடக் கூடாது.

 ஒடுக்கப்பட்ட மக்களும் உழைப்பாளி மக்களும் ஒன்றிணைந்து  பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு மாற்று பார்வையை இத்தேசத்தின் முன்வைக்கக் கூடிய வாய்ப்பாக 74 வது சுதந்திர தினம் அமைந்துள்ளது. ஒரு நியாயமான, சமத்துவமான சமுதாயத்தை அமைப்பதென்ற நோக்கமே உழைக்கும் வர்க்கப் போராட்டங்களை வழி நடத்தும் சக்தியாக இருந்திட வேண்டும். அரசியல் சாசன, குடியரசின் மதிப்பை மீட்டெடுப்பது என்பதில் உழைக்கும் வர்க்கம் உறுதியாக இருந்திட வேண்டும். இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நம் முன் உள்ள பணியும் இதுதான். நாம் மேற்கொள்ள வேண்டிய சூளுரையும் இதுதான்.

 இன்சூரன்ஸ் வொர்க்கர் ஆகஸ்ட் 2020 இதழில் 

வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

தமிழாக்கம் மற்றும் வெளியீடு


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்

 

 

 

 

 

 

No comments:

Post a Comment