Saturday, August 1, 2020

தோழர் சுர்ஜித்தோடு ஒரு பயண அனுபவம்



இன்று தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களுடைய நினைவு தினம். 

பஞ்சாப் இந்தியாவிற்கு அளித்த ஒப்பற்ற தலைவர். 

துப்பாக்கிக் குண்டுகள் துரத்திய போதும் அஞ்சாமல் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி காங்கிரஸின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது அவருக்கு வயது பதினான்குதான்.

இந்திய வரலாற்றிலேயே விடுதலைப் போராட்டத்திற்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காகவும் அதிக ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் வாழ்வை அர்ப்பணித்தவர்.

பெரிஸ்ட்ரோய்கா, கிளாஸ்நாட் என்று கோர்ப்பசேவ் அறிமுகம் செய்த போது இவை சோவியத் யூனியனை சிதைக்கப் போகிறது என்று அவர் முகத்திற்கு நேராக உறுதியாகச் சொன்ன தீர்க்கதரிசி.

மத வெறியர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்ட அரும்பாடு பட்டவர். 

அவர் இன்று இல்லாதது இந்தியாவிற்கு பெரும் இழப்பு.

தோழர் சுர்ஜித்திற்கு செவ்வணக்கம்.

இந்த பதிவில் சொல்ல இருப்பது என் அனுபவம் அல்ல. எங்கள் தஞ்சைக் கோட்டத்தின் பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் செயலாற்றிய தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அனுபவம்.



இன்றைய தினம் தோழர் சுர்ஜீத் அவர்களின் நினைவு தினம். தோழர் சுர்ஜீத் அவர்களுக்கு வீர வணக்கம். இந்நாளில் எனது நினைவு சற்றே பின்னோக்கி செல்கிறது. 21 05 1991 அன்று பாராளு மன்ற தேர்தலை ஒட்டி திருவாரூர் நகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் சுர்ஜீத் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். 

கூட்டம் முடிந்த பிறகு தோழர் சுர்ஜீத் அவர்களை சென்னைக்கு கம்பன் விரைவு வண்டியில் அழைத்துச்சென்று 22 05 1991 அதிகாலை புதுடெல்லிக்கு செல்லும் விமானத்தில் அனுப்புமாறு தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்னை பணித்திருந்தது. அதன்படி நானும் தோழர் சுர்ஜீத் அவர்களும் கம்பன் விரைவு வண்டியில் திருவாரூர் நகரத்திலிருந்து புறப்பட்டோம். தோழர் சுர்ஜீத் அவர்கள் ஹிட் லிஸ்டில் இருந்த காரணத்தால் மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் பயணித்தோம். 

கம்பன் விரைவு வண்டி கடலூரை அடைந்தவுடன் நீண்ட நேரம் புறப்படாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. போலீஸ் அதிகாரிகளை மீண்டும் மீண்டும் விசாரித்த பொது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 05 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொலை செய்யபட்ட செய்தியை தெரிவித்தனர். அதனையொட்டி ஏற்பட்டுள்ள கலவரத்தை பற்றியும் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் கம்பன் விரைவு வண்டி கடலூரை தாண்டி செல்லும் சூழல் இல்லை எனவும் தெரிவித்தனர். நீண்ட நேரம் கடலூர் புகை வண்டி நிலையத்தில் காத்திருந்தோம். 

கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டு அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக கடலூரில் வசித்துவந்த கட்சி தோழர் ஒருவரின் இல்லத்திற்கு மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டோம். பி எஸ் என் எல் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தோழர் சுர்ஜீத் அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் இதர கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அவ்வப்போது மாறி வரும் நிலைமையை அறிந்து கொண்டார். 22 05 1991 முழுவதும் மேற்குறிப்பிட்ட இல்லத்தில் தங்கினோம். நிலைமை சற்று சீரடைந்த பின்னர் அன்று இரவு சென்னைக்கு செல்லும் ஜனதா விரைவு வண்டியில் நாங்கள் இருவரும் மீண்டும் தகுந்த பாதுகாப்புடன் புறப்பட்டோம். 

மறுநாள் காலை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கட்சி ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தபடி தோழர் என் ராம் அவர்கள் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார். விமான நிலையம் சென்றவுடன் ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த தோழர் ராம் அவர்களுடன் லௌஞ்சுக்கு சென்றோம். அங்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பாரூக் மரைக்காயர் அவர்கள் இருந்தார். விமானம் புறப்படும் வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்டவுடன் நான் தாம்பரம் வந்து பேருந்தில் தஞ்சைக்கு திரும்பி சென்றேன். 

இந்த நிகழ்ச்சி எனது வாழ்நாளில் என்னால் மறக்கமுடியாத அனுபவமாகும்.

பிகு: தோழர் எஸ்.ஆர்.கே என் சின்ன மாமனார். ஆமாம். என் மனைவியின் சித்தப்பா. 

1 comment: