Showing posts with label கலவரம். Show all posts
Showing posts with label கலவரம். Show all posts

Friday, May 1, 2026

தைலாபுரம் தோட்டத்தின் முன்னே - மறக்க நினைத்தாலும் முடியவில்லை.

 சில மோசமான சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும்  முகநூல் நினைவு படுத்திவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் 30.04.2013 அன்று நடைபெற்றது.  01.05.2013 அன்று எழுதிய பதிவை கீழே அளித்துள்ளேன். பாமக கட்சியில் அப்பா-மகன் மோதல் என்பது உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் ஜாதிவெறியை தூண்டி மக்களுக்கிடையே மோதலை உண்டாக்கியவர்கள் அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்கிறார்களே என்பது  அற்ப சந்தோஷத்தை அளித்தது. 

இந்த சம்பவம் வேறொரு நெகிழ்ச்சியான பாடத்தையும் கொடுத்தது. அதனை வேறொரு பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

இதோ அந்த பாடம்.

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

இதிலே குறிப்பிட்டுள்ள அவர் மறைந்த தோழர் பி.சன்யால், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவராக, இணைச்செயலாளராக, மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த வேகமும் உற்சாகமும் நிறைந்த தலைவர். 

அதன் பின்பான பயணங்களின் போது தைலாபுரம் தோட்டத்தை கடக்கும் போதெல்லாம் தூங்க முயற்சிப்பேன். பெரும்பாலும் முடிவதில்லை.  அங்கே நடந்த சம்பவத்தையும் தாண்டி எனக்கு எரிச்சலூட்டும் விஷயம் கீழே உள்ளது.

பாமகவின் கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் கொஞ்சமும் பொருந்தாத அந்த மூவரின் சிலைகள் எதற்கு அங்கே? 



இப்போது பழைய பதிவை பாருங்கள்.


பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்


நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்  இன்சூரன்ஸ் துறையில்   அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்கு எதிராக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  வேறு ஒரு கிளையில்   தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.


திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற
  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு  இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.


கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.
   எனது சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன். புதுவை, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை  நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு
   எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து  அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள்.
அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள்  நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில்
என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை
நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து கொண்டிருந்தது  ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர்
  போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா
நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே
  ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி  துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு  மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.


சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால் 
செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர்
  கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள்  முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது  பார்த்தேன். ஸ்டேசனுக்கு   சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும்.  வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி 
சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?


மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும்
  எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில் ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா?
உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?


குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள்

சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?


அசம்பாவிதம் எதுவும் நிகழாததால் என்னால் ப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.

Thursday, February 19, 2026

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

Friday, January 23, 2026

நீதிபதிக்கு மாறுதல் மட்டுமே என்று மகிழுங்கள்

 


நவம்பர் 2024 ல் உத்திர பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் ஒரு கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தது.

ஐநூறு ஆண்டு பழமையான ஒரு மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சங்கிகள் சர்ச்சை எழுப்ப, ஆதித்ய சிங் மாவட்ட நீதிபதி அந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

அந்த ஆய்வு செய்ய மசூதி நிர்வாகத்தினர் எதிர்த்த போது, சங்கிகள் கலவரம் செய்தனர். போலீஸ் மசூதியை பாதுகாக்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமானவர்கள் காயப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் தந்தை தொடுத்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி, போலீஸாரின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய அனுஜ் சவுத்ரி என்ற ஏசிபி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி மாவட்ட நீதிபதி சுதீர் என்பவர் உத்தரவிடுகிறார்.

காவல்துறை அதை ஏற்க முடியாது என்ற நிலை எடுக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பாளருக்காக ஒப்பாரி வைத்த சங்கிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?

நீதிபதி சுதீரை இட மாற்றம் செய்து விட்டார்கள்.

நீதிபதி லோயாவிற்கு நிகழ்ந்தது இவருக்கு நடக்காதது மகிழ்ச்சியே.

மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் உண்மையை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் போல கொல்லப்படாமல் மாறுதலோடு நிறுத்திக் கொண்டது மொட்டைச்சாமியார் ஆட்சி.

இன்னொரு செய்தி தெரியுமா?

சுதீர் இடத்திற்கு வந்தது யார் தெரியுமா?

மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட  அதே ஆதித்ய சிங் தான் . . .



Monday, January 5, 2026

கோர்ட்டுங்களா இது ????????????????

 


இந்திய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைப்பது மூட நம்பிக்கை எனும் வகையில் இன்று இரண்டு வேறுபட்ட தீர்ப்புக்கள் வந்துள்ளன.

குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டி விட்ட அனுராக் தாகூர் எம்.பி யாகவும் கபில் மிஸ்ரா டெல்லி அமைச்சராகவும் சொகுசாக பவனி வரும் சூழலில் யுஏபிஏ சட்டத்தின் படி சிறை வைக்கப்பட்ட டெல்லி மாணவர் சங்கத் தோழர் உமர் காலித்திற்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நடத்த துப்பில்லாத ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக் கூட திராணியற்றதாகி விட்டது இன்றைய நீதித்துறை.

அதே நேரம் சீக்கியர்களின் ஒரு கோஷ்டியான தேரா சச்சா சௌதா எனும் அமைப்பின் சாமியாரும் பல்வேறு கொலை, பாலியல் கொடுமை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராம்ரஹீம்சிங் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள  குர்மீத் சிங்கிற்கு  நாற்பது நாட்கள் பரோல் கொடுத்துள்ளது.

அந்தாளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட ஐந்து வருடங்களில் பதினைந்தாவது முறையாக வழங்கப்படும் பரோல் இது. பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல், ஹரியானா சட்டப் பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய சமயங்களில் எல்லாம் நீதிமன்றம் நாற்பது நாட்கள் பரோலை தாராளமாக வழங்கியுள்ளது.

மோடி வகையறாக்களுக்கு தேவைப்படுமென்றால் கிரிமினல் சாமியாருக்கு பரோலை அள்ளி வழங்கும் நீதிமன்றம் உரிமைக்காக போராடுபவர்களை சிறையிலேயே அடைத்து மகிழ்கிறது.

கோர்ட்டுங்களா இவை?

மேலே உள்ள படத்தைப் பார்த்து நீங்களே பதிலை சொல்லிக் கொள்ளுங்கள். 

Thursday, December 4, 2025

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால் ????


 தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.

இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?

சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.

அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.

அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான்  விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை. 

"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள். 

அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்

144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.

உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .



Wednesday, September 24, 2025

எப்படி இருந்த லடாக்கை இப்படி???

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான லடாக்கை மோடி அரசு ஜம்மு காஷ்மீரிலிருந்து துண்டித்து தனியான யூனியன் பிரதேசமாக அறிவித்தது. 

லடாக், லே  பகுதியின் அழகை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


இப்படி அழகு கொஞ்சும் இடத்தின் இன்றைய நிலை என்ன?


இங்கே எரிந்து கொண்டு இருப்பது லே நகரில் உள்ள பாஜக அலுவலகம்.

காரணம் என்ன?

தனி யூனியன் பிரதேசம் ஆனதால் லே, லடாக் பகுதியில் தேனும் பாலும் கரை புரண்டோடும் என்றொரு ஜூம்லா வாக்குறுதியை மோடி அளித்தார். 

வழக்கம் போல எதுவும் நடக்கவில்லை. புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளதைப் போல சட்டப்பேரவையும் கிடையாது. அதனால் பிரச்சினைகளை பேச எம்.எல்.ஏ க்களும் கிடையாது. 

அதனால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடந்தது. 

3 இடியட்ஸ் படத்தில் ஷாருக்கான், நண்பன் படத்தில் விஜய் தோன்றிய கொஸாக்ஸி பசப்புகழ் பாத்திரத்தின் ஒரிஜினலான சோனம் வாங்க்சுக் என்பவர் இந்த போராட்டத்தின் மையப்புள்ளி.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த பயனும் இல்லை. அவ்வளவு சீக்கிரம் மோடி விட்டுக் கொடுத்திடுமா என்ன! அதிலும் 2024 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற பாஜக வேட்பாளருக்கோ மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

ஜம்மு காஷ்மீருக்கே இன்னும் மாநில அந்தஸ்து தராத மோடி அரசு லடாக்கிற்கு அவ்வளவு சுலபமாக கொடுத்திடுமா என்பது சந்தேகமே.

பாஜக அரசின் அணுகுமுறை கலவரமாக வெடித்து நால்வர் இறந்து போக மக்களின் கோபம் பாஜக அலுவலகத்தின் மீது நெருப்பாக வெடித்துள்ளது. 

உரைய வைக்கும் குளிர்ப் பிரதேசத்தை பற்றி எரிய வைத்ததுதான் மோடியின் சாதனை.

Tuesday, April 1, 2025

FIR ஏ இப்போதுதான் என்றால் ?????

 


கீழேயுள்ள செய்தியை முதலில் படியுங்கள்


குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை "வெட்டுங்கள், கொல்லுங்கள், சுடுங்கள்" என்றெல்லாம் வெறியூட்டி வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை தூண்டி 53 பேர் இறக்கவும் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு கோடிக்கணக்கில் சொத்துக்கள் நாசமாக காரணமாக இருந்தவன் இந்த கபில் மிஸ்ரா. இன்னொருவன் அனுராக் தாகூர்.

கலவரத்தை நடத்தியதற்கு வெகுமதியாக அனுராக் தாகூர் மத்திய அமைச்சராகி விட்டான். கபில் மிஸ்ராவிற்கும் டெல்லி அமைச்சர் பதவி பரிசளிக்கப்பட்டு விட்டது.

கலவரத்தை தூண்டியதற்கு இப்போதுதான் கபில் மிஸ்ரா மீது FIR பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி வழக்கு பதிவு செய்து அதை நடத்தி தீர்ப்பு வருவதற்குள் அவன் டெல்லி முதல்வரானால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.


அனுராக் தாகூர் மீது FIR ???

அதற்குள் அவன் பிரதமராகி விடுவான் . . .

Saturday, March 22, 2025

சங்கி பெரும் கரடிகளே தூற்றிய சாம்பாஜி

 


சங்கிகள் இன்று சத்ரபதி  சிவாஜியின் மகன் சாம்பாஜி மீது  திடீரென பாசத்தை பொழிந்து கொண்டு ஔரங்கசீப்பின் மீது வெறுப்பை கக்கிக் கொண்டு கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 சாம்பாஜி  பற்றி வரலாறு சொல்வது என்ன?

 வரலாற்றை விட்டுத்தள்ளுங்கள்

 சங்கிகளின் குருமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

 மகாத்மா காந்தி கொலை வழக்கு புகழ், தனக்குத்தானே வீரன் பட்டம் கொடுத்துக் கொண்ட சாவர்க்கர் என்ன சொல்லியுள்ளார் என்பது கீழே உள்ளது.

 

“மராத்தா சாம்ராஜ்யத்தை ஆள சாம்பாஜி தகுதியற்றவன், முன் கோபி, குடிகாரன், ஸ்த்ரீ லோலன்.”

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான கோல்வாக்கர் எழுதிய “சிந்தனைக் கொத்துக்கள்” என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கை பிரகடன நூலில் சாம்பாஜி பற்றி எழுதியுள்ளது கீழே உள்ளது.

 


சாம்பாஜி குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்ய வைத்து மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்”

 ஆக சங்கிகளின் குருமார்களான கோழை சாவர்க்கர் மற்றும் கோல்வாக்கர் ஆகிய இருவரும் சாம்பாஜியை

 குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன்

 என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

 அப்படிப்பட்ட ஒரு மோசமான ஆளை முன் வைத்து சங்கிகள் கலவரம் நடத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சாம்பாஜி  மீதான பாசம்  அல்ல, இஸ்லாமியர்கள் மீதான  வெறுப்புதான்.

 பிகு: அடுத்த பதிவு :  காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்

Tuesday, February 11, 2025

ஆட்டுக்காரனையும் எச்.ராசாவையும் கைது செய்யுங்கள்

 


தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட காவிக்கயவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் சொதப்பல்கள் காரணமாக மதுரையில் ஒரு கூட்டத்தை கூட்டிய தெனாவெட்டில் மீண்டும் பல வதந்திகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.

அந்த வதந்தி என்னவென்று கீழேயுள்ள படங்கள் சொல்லும். (படங்கள் உதவி திரு முகமது பஷித்)

மிக முக்கியமாக கடைசியில் உள்ள படங்களை பார்க்கவும்.











ஆக, காவிக்கயவர்கள் போட்டோஷாப் மோசடி செய்து மதுரையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர் உறுதியாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சங்கி குணாம்சத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சேகர் பாபுவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

கலவரத்தை தூண்ட சதி செய்யும் எச்.ராசா, ஆட்டுக்காரன், காடேஸ்வரா சுப்புரமணி, அர்சுன் சம்பத் போன்றோரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்கள் வெளியே வராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் மண் என்பதை வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் செயலிலும் காண்பிக்க வேண்டும், 

Wednesday, September 25, 2024

இதை மட்டும் ஏற்க முடியாது எல்.முருகன்…

 


ஆட்டுக்காரன் லண்டன் போயிருப்பதால் ஆட்டுக்காரனின் வேலையான வதந்தி பரப்பி அரசியல்  ஆதாயம்  தேடும் சங்கிகளின் கீழ்த்தரமான உத்தியை எல்.முருகன் எடுத்துக் கொண்டுள்ளார்.

எல்.முருகனின் ட்விட்டர் பதிவு கீழே.

 


அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று நெல்லை மாவட்ட  காவல்துறை வெளியிட்ட அறிக்கை கீழே.

 



நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி கலவரத்தைத் தூண்டும் உங்கள் முய்ற்சிகள் மட்டும் எனக்குக் கோபத்தை அளிக்கவில்லை.

 

பார்க்க எருமை மாடு ( படத்தில் வட்டத்துக்குள் உள்ள நபர் )  மாதிரி வளர்ந்துள்ள 24 வயது ஆசாமியை சிறுவன் என்று சொன்னது கோபத்தை அதிகமாகவே உருவாக்கியது  மிஸ்டர் எல்.முருகன்.

 

 

Wednesday, September 11, 2024

குண்டர்கள் நீங்கள்தான் வாய்க்கொழுப்பு சூர்யா

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு செய்து கைதாகி இப்போதும் ஜாமீனில் உலவிக் கொண்டிருக்கும் எஸ்.ஜி.சூர்யா எனும் பாஜகவின் திமிர் பிடித்த ஆணவ சங்கி, கம்யூனிஸ்டுகள் மீது விஷம் கக்கியிருக்கிறான்.


தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவன தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சி.ஐ.டி.யு தலைமையில் சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் நலத்துறை, காவல்துறை ஆகியோரோடு கூட்டணி வைத்துக் கொண்டு சாம்சங் நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது.

முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் பாஜக கட்சியின் சூர்யா, போராடும் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் குண்டர்கள் என்று கொச்சைப் படுத்தியுள்ளான்.

அந்த நாலு கால் பிராணிக்கு குண்டர்கள் யாரென்று சொல்ல வேண்டியுள்ளது.

குஜராத்திலும் மும்பையிலும் கோவையிலும் முசாபர் நகரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று  அவர்களின் உடமைகளை அழித்த காவிக் கயவர்கள்தான் குண்டர்கள்.

நாடோடி இனச்சிறுமி ஆசிபாவை கோயிலுக்குள் வைத்து கூட்டு  பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அயோக்கியர்களும் அவர்களை விடுதலை செய்ய தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ க்களும் கட்சியினரும்தான் குண்டர்கள். 

மணிப்பூரில் சிறுபான்மை இன மக்களை கொன்று குவித்து பெண்களை அவமானப்படுத்திய உங்கள் ஆட்களும் முதலமைச்சரும்தான் குண்டர்கள். 

மாட்டின் பெயரில் தொடர்ந்து அப்பாவிகளை கொன்று கொண்டிருக்கும் பாஜக, சங் பரிவாரத்தை சேர்ந்தவர்கள்தான் குண்டர்கள்.

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் குடித்து கூத்தடித்து சென்று கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான் குண்டர்கள்.

திருமணம் மீறிய உறவுப் பிரச்சினைகளுக்காக பல சங்கிகள் கொல்லப் படும் சூழ்நிலையில் அதனை மதப் பிரச்சினையாக திசை திருப்புகிற ஆட்டுக்காரன், எச்.ராசா, எஸ்.ஆர்.சேகர், கரு,நாகராஜன், முருகானந்தங்கள், எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள்தான் குண்டர்கள்.

இந்த குண்டர்கள் கூட்டத்தின் தலைவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும்.

தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தையும் பாதுகாக்கும் காவல் அரணாக திகழ்வது இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களே. 

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சின்ன உதாரணம்.

தொழிற்சங்க இயக்கத்தை கொச்சைப்படுத்தும் கேவலமான ஜந்து சூர்யாவே உங்கள் காவிக்கூட்டம் சார்பில் பி.எம்.எஸ் என்று ஒரு சங்கம் வைத்துள்ளீர்களே, அந்த ஆணி தேவையற்றதுதானே! கலைத்து விடவும். 

Wednesday, July 24, 2024

சங்கிகள் இல்லை, அமைதியாய் கடந்த யாத்திரை

 


ஹரியானாவில் பிரிஜ் மண்டல் யாத்திரை என்ற பக்தர்களின் யாத்திரை கடந்தாண்டு நடைபெற்ற போது "நூ" என்ற ஊரில் கலவரம் வெடித்து எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது எழுதிய ஹரியானா கலவர அரசியல் என்ற பதிவை இணைப்பின் மூலமாக படியுங்கள்

அதே யாத்திரை இந்த வருடம் "நூ" வைக் கடந்தது. அப்போது இஸ்லாமிய மக்கள், பக்தர்களை வரவேற்று குளிர் நீர் கொடுத்து ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர்.

எங்கள் கிராமத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை பல்லாண்டுகளாக கட்டுக்கோப்பாக உள்ளது. வெளியாட்களினால் கடந்த ஆண்டு கலவரம் வெடித்து எங்கள் ஊருக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்துக்களும் முஸ்லீம்களும் பேசி இந்த வருடம் வரவேற்பு கொடுப்பது என்றும் எந்த வெளியாளையும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தோம் என்று கிராமத்தினர் மகிழ்ச்சியோடு சொல்கின்றனர்.

சங்கிகளை அகற்றினால் அமைதி நிச்சயம் என்று நிரூபித்த "நூ" மக்களுக்கு பாராட்டுக்கள் . . .


Tuesday, July 23, 2024

காவடி யாத்திரையில் கலவரத்துக்கு விதையா?

 



வட இந்தியாவில் கான்வர் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் காவடி போலத்தான் அதுவும்.

கங்கை நதி நீரை முக்கியமான தளங்களிலிருந்து காவடியில் உள்ள பானைகளில் சேகரித்து அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடக்கும் இந்த யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில்  முதலாளிகளின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று மொட்டைச் சாமியார் உத்தரவு போட்டுள்ளார்.

என்ன காரணம்?

இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர்கள் வைக்கிறார்களாம். அப்படி இருக்கிற இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டு யாத்திரை செல்பவர்களின் புனிதம் கெட்டு விடுமாம். இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க நினைக்கும் சில்லறை புத்தி இது.

இது மட்டுமா நோக்கமாக இருக்கும்?

மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியை சட்டப்பேரவை தேர்தலில் சரி செய்ய இந்துக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி விடும் ஆபத்தான சதி இது.

இன்னும் கூட ஒரு காரணம் இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

உணர்வுகளை தூண்டி விடுவது கலவரத்தை உருவாக்கவே! முசாபர்நகர் கலவரத்தை நடத்தித்தான் மொட்டைச்சாமியார் ஆட்சிக்கு வந்தார். இப்போது இன்னொரு கலவரம் அந்த கிரிமினல் சாமியாருக்கு தேவைப்படுகிறது. கடைகளில் பெயர்ப்பலகைகளில் இஸ்லாமியர்களின் பெயர் இருந்தால் அவர்களை தாக்குவது சுலபமாக இருக்கும் என்பதுவும் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

உத்திரப்பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. . .

 பிகு: அயோக்கியத்தனமான உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது ஒரு நல்ல செய்தி