Showing posts with label ஏ.ஐ.ஐ.இ.ஏ. Show all posts
Showing posts with label ஏ.ஐ.ஐ.இ.ஏ. Show all posts

Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.

 


Thursday, July 31, 2025

விடை பெறும் வேளை இது



வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 

16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால்  அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?

மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.

பொருளாதார தன்னிறைவு  என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.

முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். 

எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!

இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.

02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு  முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது. 

கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.

களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.

இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .


Saturday, July 12, 2025

நெகிழ்வும் நிறைவும் அளித்த வேலை நிறுத்தம்

 










09.07.2025 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் என் வாழ்வில் மிக முக்கியமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

முதலில் 20.05.2025 என்றுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தயாரிப்பு பணிகளும் துவங்கியிருந்தது.

இந்த நிலையில்தான் 02.05.2025 அன்று காலையில் அலுவலகம் செய்கையில் ஒரு வேன் என் ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் மோத   சாலையில் சறுக்கிக் கொண்டே சென்றேன். பேண்ட் இரு இடங்களில் கிழிந்து தொங்கியது. இடுப்பிலும் கழுத்திலும் கடுமையான வலி. முழங்காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கவே முடியவில்லை. எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் கோட்ட அலுவலகக்கிளைத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் தகவல் சொல்ல மற்ற தோழர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இடுப்பிலும் கழுத்தெலும்பிலும் ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி அதன் படியே 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மறுநாள் காலையில் முதலில் வந்த ஆர்தோ மறுத்துவரிடம் 20  தேதி வேலை நிறுத்தம் உள்ளது. அன்று நான் அலுவலகம் சென்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கேற்றார்போல என் சிகிச்சையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல  அவர் புன்னகைத்து விட்டு போய் விட்டார்.

உடலின் இரண்டு பக்கங்களிலும் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் குறைந்த பட்சம் ஆறு வாரங்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும், அது வரை நிற்பதோ, உட்கார்வதோ வாய்ப்பில்லை என்று சொன்னபோதுதான் முந்தைய டாக்டரின் புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது.

பணிக்காலத்தின்  இறுதி வேலை நிறுத்தத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது  என்பது  மிகப் பெரிய ரணமாக இருந்தது. 

இந்த சூழலில்தான் வந்தது அந்த நற்செய்தி.

எல்லையில் உருவான பதற்றத்தின் காரணமாக வேலை நிறுத்தத்தை 09.07.2025 அன்று ஒத்தி வைத்த நற்செய்தி.

வாக்கர் துணை கொண்டு மெதுவாக நடக்கலாம் என்று ஜூன் மத்தியில் மருத்துவர் அனுமதி கொடுக்க அலுவலகம் செல்ல தொடங்கினேன். அதனால் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பிளாட்டினம் ஆண்டு இலச்சினையை வெளியிடும் நல் வாய்ப்பையும் எங்கள் கோட்டத் தலைவர்கள் அளித்தார்கள்.




ஒரு  வழியாக வந்தது 09.07.2025. அன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களின் எண்ணிக்கை சிறப்பாகவே இருந்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதன் மூலமாக ஒரு விசுவாசமான உறுப்பினராக  உழைக்கும் வர்க்கக் கடமையை நிறைவேற்றிய நிறைவு கிடைத்தது. பறி போயிருக்க வேண்டிய வாய்ப்பு மீண்டும் கிடைத்ததில் நெகிழ்ச்சியும் கிடைத்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் நான் பங்கேற்ற அதே நாளில் மே மாத துவக்கத்தில் பணியில் சேர்ந்து தன் பணிக்காலத்தின் முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற இளைய தோழர் டி.அஜித் குமாரை( மறைந்த எங்கள் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மகன்) ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி.


பிகு: மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடந்த வேலை நிறுத்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டது. உள்ளூர் தோழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் உணர்வை வெளிப்படுத்த அர்க்கோணம், ஆரணி, குடியாத்தம்,  ராணிப்பேட்டை கிளைத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தத் தயங்கவில்லை. ஆறாவது புகைப்படம் எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள். ஏழாவது புகைப்படம் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ். எட்டாவது புகைப்படம் பணிக்காலத்தில் இறுதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நான். 

பிகு: இன்னமும் "வாக்கர்" துணையுடன்தான் நடை. இயல்பு வாழ்க்கை திரும்பும் நாள் இன்னும் கண்ணில் தென் படவில்லை.




Wednesday, July 9, 2025

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேற்ப்ட்ட தொழிலாளர்கள் இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் முதலில் 20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது.

மோடியின் உளவுத்துறை கோட்டை விட்டதாலோ அல்லது அரசு அலட்சியம் செய்ததாலோ நிகழ்ந்த பஹல்காம் படுகொலைகள், அதற்கு பிந்தைய நிகழ்வுகள் காரணமாக 20.05.2025 க்கு பதிலாக 09.07.2025 என்று மாற்றி வைக்கப்பட்டது. தேதி மாறியதால் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ந்தேன். ஏன் என்பதை பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு "காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதிய தலையங்கத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்,

இந்த தேதிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் எழுதுகிறேன்.



அகில  இந்திய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் உழைப்பாளி வர்க்கம்

 

மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை வேகமாக அமலாக்க முயற்சிக்கிறது. இதனை முறியடிக்க இந்திய உழைப்பாளி வர்க்கமும் கடுமையான போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.  விரிவான போராட்ட வியூகத்தை வடிவமைக்க 18.03.2025 அன்று புதுடெல்லியில் “தொழிலாளர்களின் தேசிய மாநாடு” நடைபெற்றது. மத்தியத் தொழிற்சங்கங்கள், துறைவாரி அகில இந்திய சங்கங்கள்,  கூட்டமைப்புக்கள் என இந்திய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பாரதீய மஸ்தூர் சங் (BMS) மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் வி.ரமேஷ், பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றன்ர்.

 

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது. இது இந்திய நிலைமையையும் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களையும் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் விரிவாக எடுத்துரைத்திருந்தது. 2017-2018 லிருந்த ஊதியங்கள் 2023-2024 ல் குறைந்துள்ளது. ஆண் தினக்கூலி ஊழியரின் ஊதியம் ரூபாய் 203 லிருந்து 242 ரூபாயாகவும் பெண் ஊழியரின் ஊதியம் ரூபாய் 128 லிருந்து ரூபாய் 159 ஆகவும் உள்ளது. அதே நேரம் கார்ப்பரேட்டுகளின் லாபமோ 22.3 % உயர்வை கண்டுள்ளது.  இந்திய மக்கட்தொகையில் 5 % பேரிடம் 70 % செல்வம் குவிந்துள்ள நிலையில் மக்கட்தொகையின் அடிமட்டத்தில் உள்ள 50 % பேரிடமோ வெறும் 3 % செல்வமே உள்ளது. ஐரோப்பிய கோடீஸ்வர்களை விட பெரிய செல்வந்தர்களாக இந்திய கோடீஸ்வரர்கள் உள்ளனர்.  இந்திய ஏழைகளில் 90 சதவிகிதத்தினர் சர்வதேச அளவில் வரையறை செய்யப்பட்டதை விடவும் வறுமையான நிலையில் உள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழலில் மத்தியரசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான பணி நேரம், கூட்டு பேர உரிமை, குறைந்த பட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட போராட்ட வடிவங்கள் அனைத்தையும் பறிக்க முயல்கிறது. அரசியல் சாசனம் அளித்திட்ட கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் நலனுக்காக UAPA, PMLA, புதிதாக மாற்றப்பட்ட குற்றவியல் சட்டம் BNS ஆகியவை மூலமாக ஒடுக்குவதன் நீட்சியாகவே தொழிலாளர் சட்ட தொகுப்புக்களையும் அமல்படுத்த அரசு முயல்கிறது.

 

தொழிலாளர்கள் கூட்டாகவோ, தங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாகவோ தங்களின் குறைகளை பதிவு செய்வது கூட புதிய குற்றவியல் சட்டம் பாரதீய நியாய சன்ஹிதாவின்  111 ம் பிரிவின் படி குற்றச்செயலாக கருதப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது. பிணையில் வெளி வர இயலாத படி தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஒடுக்க முயல்கின்றனர். தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடத்துவது, பிரசுரங்களை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசுத்துறைகளும் கூட எடுக்கத் துவங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலைமையை எந்த ஒரு தொழிலாளியாலோ தொழிற்சங்கத்தாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

விதி மீறலுக்காக சிறைத் தண்டனை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளில் 180 மீறல்களுக்கு இரண்டாண்டுகள் முன்பாகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் இன்னும் 100 நீக்கப்பட்டுள்ளது. “இடையூறின்றி தொழில் செய்ய உதவுவது” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கருணை மழை பொழியும்  அரசுதான் தொழிலாளர்களை மட்டும் ஒடுக்க முயல்கிறது.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாடு ஜாதி, மத, இனம், மொழி கடந்து உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையை கட்டுவதும் அதை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் என்ற புரிதலோடு  பல கோரிக்கைகளை வடிவமைத்து அவற்றை வென்றெடுக்க போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளது.

 

இன்சூரன்ஸ், வங்கி, துறைமுகம், ரயில்வே, அஞ்சல், ராணுவ தளவாட உற்பத்தி, போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % உயர்த்துவதை கைவிட வேண்டும், பாலிசிகள், முகவாண்மையை வேறு நிறுவனத்திற்கு மாற்றும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், தேசிய பணமயமாக்கல் திட்டம் கைவிடப் பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 26,000 ஆக உயர்த்தப்பட்டு விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட கால வேலைத் திட்டம் (Fixed Term Employment Scheme), அக்னிபாத் திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டு ஒப்பந்த முறை தொழிலாளர் திட்டம் அகற்றப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், தேசிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவை கைவிடப்பட்டு வரையறுக்கப்பட்ட பலனை உறுதி செய்யும் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 9,000 வழங்கப்பட வேண்டும்.

 

அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதிச்சட்டத்தின் படி வேலை நாட்கள் ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டும்.

 

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் திரும்பப் பெற விவசாயிகள் சட்டத்தை வேறு பெயரில் வேறு வடிவில் திணிக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 

ஆண்டாண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பறிக்க கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களின் தொகுப்பை அமலாக்கக் கூடாது.

 

இந்த கோரிக்கைகளை முன் வைத்து வரும் 20.05.2025 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் தேசிய மாநாடு முடிவெடுத்தது.

 

20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை வெற்றி பெறச் செய்ய, மாவட்ட, மாநில கருத்தரங்குகள் நடத்துவது, மக்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்க பிரசுரங்களை அளிப்பது, வாயிற்கூட்டங்கள் நடத்துவது, பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மாநாடு முடிவு செய்துள்ளது.

 

தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மத்தியரசும் எண்ணற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

"தாக்குண்டால் புழுக்கள் கூட தரை விட்டுத்துள்ளும்! கழுகு தூக்கிடும் குஞ்சு காக்க துடித்தெழும் கோழி, சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்.சாக்கடை கொசுக்களா நாம்? சரித்திரத்தின் சக்கரங்கள்” 

என்ற தணிகைச் செல்வன் கவிதை வரிகளுக்கேற்ப தாக்குதல்களை முறியடிக்க உழைப்பாளி மக்கள் களம் காண வேண்டிய தருணம் இது.  மத்தியரசின் தாக்குதல்களை சந்திக்க உழைப்பாளி மக்கள் தயாராகி விட்டார்கள் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கும் தருணம்தான் 20, மே, 2025 ஒரு நாள் வேலை நிறுத்தம்.

 “கோடிக்கால் பூதமடா, தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்பதை அரசும் முதலாளிகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் அமையட்டும், பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் காண்பித்துள்ள உறுதி சிறப்பானது. நல்லதொரு மாற்றத்திற்கான துவக்கமாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் வெளிப்பாடாக, 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுவோம்.    

Tuesday, July 1, 2025

எங்களுக்கு வயது 75

 


இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பிறந்த நாள். 74 வருடங்களை நிறைவு செய்து 75 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது.

ஒரு மாபெரும் நதியின் துவக்கம் சின்னஞ்சிறு ஓடையாகத்தான் இருக்கும் என்பது எங்களது சங்கத்திற்கும் பொருந்தும். 01.07.1951 அன்று மும்பை தாதரில் ஒரு சின்னஞ்சிறிய அரங்கில் தோன்றிய சங்கம் ஒரு சாதனை வரலாற்றுக்கு சொந்தமான அமைப்பாக திகழ்கிறது.

இந்தியாவின் முதன்மையான தொழிற்சங்கமாக கட்டமைத்த தியாகிகள், தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.

எங்கள் வாழ்வும் வளமும் எப்போதும் எங்கள் சங்கமே என்ற புரிதலோடு அதனை கண்ணின் மணி போல காத்து மேலும் முன்னேற்றுவோம் என்று உறுதியேற்கிறோம்.


Wednesday, April 16, 2025

40 - கணக்கில் வராததையும் கணக்கில் கொண்டு . . .

 


இன்று எல்.ஐ.சி பணியில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

16.04.1986 அன்று சென்னை உனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் எங்களுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தேன். அப்போதெல்லாம் மூன்று மாதம் பயிற்சிக் காலம், மூன்று மாதம் தகுதி காண் பருவம். பயிற்சிக் காலம் பணிக்காலமாக கணக்கில் எடுக்கப் படாது. 1990 க்குப் பிறகு பயிற்சிக்காலம் என்று தனியாக கிடையாது. தகுதி காண் பருவம் ஆறு மாதங்களாகி விட்டது. 

எல்.ஐ.சி கணக்கில் சேர்க்காவிட்டாலும் நான் இணைந்தது இந்த நாள்தானே! அதனால் அதனை கணக்கில் கொண்டால் இந்த நாளில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3107.2025 அன்று பணி நிறைவு.

இந்த நாற்பது ஆண்டு கால அனுபவங்களை நினைத்துப் பார்த்து நல்ல, சவாலான அனுபவங்களை பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

சமூகத்தில் ஒரு மதிப்பும் பொருளாதார தன்னிறைவும் எல்.ஐ.சி யால்தான் கிடைத்தது என்பதை பதிவு செய்கிறேன். அதன் பின்புலமாக இருந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

முதல் நாள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அலுவலக பயிற்சி வகுப்பு சுய அறிமுகம், அதிகாரிகளின் வாழ்த்துரை (முதுநிலை கோட்ட மேலாளருக்கு அன்றுதான் பதவி உயர்வு ஆணை வந்திருந்ததால் அவருக்கான வாழ்த்துரை), எல்.ஐ.சி பற்றிய அறிமுகம் என்று கழிந்தது.

மாலையில்தான் முக்கியமான சம்பவம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம். மகத்தான் தலைவரும் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீரமான உரை சங்கத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான துவக்கப்புள்ளி. 




எப்படி மறக்க இயலும் இந்நாளை !!!

Tuesday, March 4, 2025

கவிஞர் நந்தலாலாவிற்கு செவ்வணக்கம்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவரும் சிறப்பான உரை வீச்சால் பல மேடைகளை தன் வசப்படுத்தியவருமான தோழர் கவிஞர் நந்தலாலா இன்று இயற்கை எய்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.

அவரை முதலில் பார்த்தது 1998 ம் வருடம் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போதுதான். நெடுஞ்செழியன் என்ற பெயரில் வங்கி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நந்தலாலா என்று தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் துவக்க மாநாட்டின் போது அறிவித்தார்.

அன்று மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. அதிலே ஞான.ராஜசேகரன் இயக்கிய "ஒரு கண், ஒரு பார்வை" குறும்படம் திரையிடப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் ஜாதிய வெறியால் கண் பார்வையை இழந்த சேலம் தனம் என்ற சிறுமியின் கதை அது.

குறும்படத்தை தொடர்ந்து பேச வந்தார் தோழர் நந்தலாலா. ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவரது உரை. அவரை தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமாரின் உரை வீச்சும் அசத்தலாக இருக்க, எங்கள் கோட்டச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு புதிய திறப்பு.

அந்த வருடம்தான் வேலூரைத்தாண்டி எங்கள் மாநாடு முதல் முறையாக புதுவையில் நடைபெற இருந்தது. பொது வெளியில் "மக்கள் ஒற்றுமை கலை விழா"  அப்போதிலிருந்து தொடங்கியது. அந்த நிகழ்வில் உரை வீச்சு நிகழ்த்திய தோழர் நந்தலாலா, அதன் பின்னும் பல வருடங்கள் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருக்கோயிலூர், குடியாத்தம் என பல வருடங்கள் மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

குடியாத்தம் மாநாட்டிற்குப் பிறகு நீண்ட இடைவெளி. கடந்த 2024 ம் வருடம் திண்டிவனத்தில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் கலந்து கொண்டு "நடந்த கதை மறந்து விட்டாய், கேளடா கண்ணா" என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்த்தி சிரிக்க, சிந்திக்க வைத்தார்.




முன்னதாகவே வந்திருந்து எங்கள் தோழர்கள் வழங்கிய "மாட்டிக் கொண்ட மகாராஜா" நாடகத்தையும் ரசித்து பார்த்து தோழர்களையும் பாராட்டினார்.

அந்த மாநாடே எங்கள் கோட்டத்தில்  அவர் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு திறமையான, அர்த்தபூர்வமாக பேசுகிற, சிந்தனைகளை தூண்டுகிற சிறந்த பேச்சாளரை தமிழ்நாடு இழந்து விட்டது.

செவ்வணக்கம் தோழர் கவிஞர் நந்தலாலா . . .

Thursday, February 27, 2025

கங்கை யமுனை சங்கமத்தில் குளித்த கதை

 


மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் பில்ட் அப் கொடுத்த மகா கும்ப்மேளா ஒரு வழியாக நேற்று முடிந்து விட்டது. உபி மாநில அதிகாரிகள் கஜானாவில் சேர்ந்த பணத்தை எண்ணி மாநிலத்தின் ஒட்டு மொத்த கடனை கட்டி புது புது வளர்ச்சித் திட்டங்களுக்கு பணத்தை முதலீடு செய்வார்கள் என்று நம்புவோம்.

கங்கையும் யமுனையும் (சங்கிகளின் கற்பனை நதி சரஸ்வதியை நான் கணக்கிலெடுக்கவில்லை)  சங்கமிக்கும் இடத்தில் நானும் ஒரு முறை குளித்துள்ளேன். 

2002 ம் ஆண்டு உபி மாநிலம் கான்பூரில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் கூட்டமும் அதுதான் கான்பூருக்கு சென்னையிலிருந்து தினசரி ரெயில்கள் அப்போது (இப்போதும் இருப்பதாக தெரியவில்லை)  இல்லை. வாராந்திர ரயில்கள்தான்.

தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒன்றரை நாட்களுக்கு முன்பாகவே கான்பூர் சென்று விட்டோம். பயணக் களைப்பில் மாலை வரை ஓய்வு எடுத்துக் கொண்டாகி விட்டது. 1857 சிப்பாய் புரட்சி தொடர்பான ஒரு பூங்கா (அந்த புரட்சியை தொடர்பு படுத்தக்கூடிய விதத்தில் எந்த நினைவுச்சின்னமும் அங்கு இல்லை. இந்திய சிப்பாய்களுக்கு பயந்து வெள்ளையினப் பெண்கள் குதித்து இறந்து போன கிணறு மட்டும் மூடப்பட்டிருந்தது) வுக்கு அழைத்துச் சென்ற கான்பூர் தோழர் ஒருவர் அடுத்து கூட்டிச் சென்ற இடம் ஜேகே கோயில். ராதா சமேத கிருஷ்ணன் கோயில்தான். எப்படி டெல்லியில் ராதாகிருஷ்ணன் கோயிலும் ஹைதராபாத்தில் வெங்கடாசலபதி போயிலும் அதை கட்டிய பிர்லாவின் பெயரில் பிர்லா மந்திர் என்று அழைக்கப்படுகிறதோ, அதே போல கோயிலை கட்டிய ஜே.கே மில்ஸ் முதலாளி பெயரில் அந்த கோயில் அழைக்கப்படுகிறது.

அடுத்து ஒரு முழு நாள் உள்ளதே, என்ன செய்வது என்ற கேள்விக்கும் கான்பூர் தோழர்களே விடை சொன்னார்கள். ஒரு டாடா சுமோ ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  அதிகாலையில் புறப்பட்டோம். சென்னை 2 கோட்டத்தின் சார்பாக தோழர் டி.ஏ.விஸ்வநாதன், சேலம் கோட்டத்தின் சார்பாக தோழர் பாலசுப்ரமணியன், தஞ்சைக் கோட்டத்தின் சார்பாக தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  நெல்லை கோட்டத்தின் சார்பாக தோழர் டி.தேவபிரகாஷ், கோவைக் கோட்டத்தின் சார்பாக தோழர் டி.நீலமேகம், மதுரை கோட்டத்தின் சார்பாக தோழர்கள் பாரதி மற்றும் மீனாட்சி சுந்தரம், வேலூர் கோட்டத்தின் சார்பாக நானும் சிறப்பு அழைப்பாளராக அப்போது பங்கேற்ற இன்றைய அகில இந்திய இணைசெயலாளர் தோழர் எம்.கிரிஜா என இத்தனை பேரையும் அடைத்து சுமோ புறப்பட்டது. சென்னை 1 கோட்டத்தின் சார்பாக யார் வந்தார்கள் என்பது மட்டும் நினைவில் இல்லை. 

பயண நேரம் எவ்வளவு என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் வண்டி போனது போனது போய்க் கொண்டே இருந்தது. அலகாபாத் சென்றதும் பலத்த ஏமாற்றம்.  நேரு குடும்ப சொத்தாக இருந்து அருங்காட்சியமாக மாறிய ஆனந்தபவன், பகத்சிங்கின் சகா சந்திரசேகர் ஆசாத் பிரிட்டிஷ் ராணுவத்துடன் போராடி சுட்டுக் கொல்லப்பட்ட பூங்கா அகியவை மூடப்பட்டிருந்தது.

யமுனை நதிக்கரையின் ஓரத்தில் இருந்த கோட்டையை வெளியே இருந்து மட்டும்தான் பார்க்க முடிந்தது. அந்த மொட்டை வெயிலில் யமுனை கரையில் இரண்டு பாம்பாட்டிகளைத் தவிர வேறு யாருமில்லை.  பிறகு படகில் சங்கம் சென்றோம். கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அந்த இடம் சின்னஞ்சிறு தீவு போலவே இருந்தது. கங்கைக்கும் யமுனைக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது, நீரின் நிறம் மற்றும் வேகத்தில் . . .  படகில் சென்ற எல்லோருமே அங்கே தர்ப்பணம் செய்தார்கள், எங்களைத் தவிர. . . ஒரு புரோகிதர் சுத்தமான தமிழில் நீங்க எல்லாம் என்ன கோத்ரம் என்று கேட்க தோழர் டி.தேவபிரகாஷ் ஏ.ஐ.ஐ.இ.ஏ கோத்ரம் என்று சொன்ன போது எனக்கு விசிலடிக்க தோன்றியது. சங்கமத்தில் குளித்த பின்பு மதிய உணவுக்குப் பிறகு கான்பூர் திரும்பினோம்.

மூன்று நாட்கள் செயற்குழு முடிந்த பின்பு மாலை ஆறு மணிக்கு ஏறிய ரயில் மறு நாள் முழுதையும் எடுத்துக் கொண்டு அதற்கும் மறுநாள் காலை பத்து மணியளவில் சென்னையில் கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் நானும் தோழர் டி.ஏ.விஸ்வநாதன், தோழர் சேலம் பாலு என மூவர் மட்டும்தான். தோழர் டி.ஏ,வி யும் நானும் பெரும்பாலும் பேசிக் கொண்டே வர அவ்வப்போது தோழர் பாலு பேசுவார்.

அலகாபாத் பயணம் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தது. கான்பூர் செல்கையில் கணக்காகத்தான் பணம் எடுத்துச் சென்றிருந்தேன். அலகாபாத் செல்ல மட்டும் ஒருவருக்கு அறநூறு ரூபாய் ஆனதால் கையிருப்பு மிகவும் குறைந்து போனது. ஏ.டி.எம் கார்ட் கூட அப்போது இல்லை.  இரண்டாம் நாள் இரவில் மற்றவர்கள் ஷாப்பிங் போன போது நான் மிகவும் சிக்கனமாக மகனுக்கு மட்டும் ஒரு ஜிப்பா வாங்கினேன். மனைவிக்கு எதுவும் வாங்கவில்லையா என்று கேட்ட கோழிக்கோடு கோட்டத்தோழர் அச்சுதனிடம் உங்கள் வழிகாட்டுதல்தான் என்று சொல்லி சமாளித்தேன். அதென்ன வழிகாட்டுதல் என்பதை இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்

அதற்குப் பிறகுதான் எங்கே பயணம் மேற்கொண்டாலும் ஒரு கணிசமான தொகையை ஒரு கவரில் போட்டு கையிருப்பாக எடுத்துச் செல்வேன், அதற்கான தேவை இல்லாவிட்டாலும் கூட. 


பிகு: மேலே உள்ள படம் இன்றைய ஆங்கில இந்து இதழில் முதல் பக்கத்தில் வெளிவந்திருந்தது. 

Tuesday, February 11, 2025

அது ஒரு நிலாக்காலம்

 



இன்று தைப்பூசம். அலுவலகத்திற்கு விடுமுறை. பயணத்தில் முக்கால்வாசி முடித்த நூலை முடித்தது, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கி சிகண்டிகளோடு போட்டுக் கொண்டிருந்த சண்டையும் ஒரு கட்டத்தில் போரடித்து விட்டது.

அப்போதுதான் ஒரு தைப்பூச நாள் நினைவுக்கு வந்தது. 

அது 1999 ம் வருடம். அப்போது வாஜ்பாய் அரசு கொண்டு வந்திருந்த ஐ.ஆர்.டி.ஏ மசோதாவிற்கு எதிராக நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடந்து கொண்டிருந்தோம்.

எங்கெங்கு மக்கள் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்க்ள், பிரசுரத்தோடும் கையெழுத்து படிவம் உள்ள அட்டையோடும் இருப்பார்கள்.

கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், கண்காட்சிகள், சந்தைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் எங்களை பார்த்திருப்பீர்கள்.

1999 ம் வருட தைப்பூச நாள், அன்று முழு நிலவு நாளும் கூட. மக்கள் அதிகம் திரளக்கூடிய திருவண்ணாமலை கிரிவலத்தின் போதும் வடலூர் தைப்பூசத்தின் போதும் கையெழுதுக்கள் திரட்டுவது என்று முடிவு செய்தோம். திருவண்ணாமலை, வடலூர் ஏன் என்றால் இரண்டு பகுதிகளும் எங்கள் கோட்டப்பகுதிக்குள் இருப்பவை.

வேலூரிலிருந்தும் கிட்டத்தட்ட முப்பது தோழர்களுக்கு மேல் திருவண்ணாமலை சென்றிருந்தோம். திருவண்ணாமலை கிளையில் இருந்தும் வந்திருந்தார்கள். அதே போல வடலூருக்கு கடலூர் மற்றும் நெய்வேலி தோழர்கள் சென்றார்கள். வேலூரிலிருந்து கூட நான்கு தோழர்கள் சென்றார்கள்.

ஒரு மூன்று மணி நேரம் மட்டுமே எங்களால் கையெழுத்துக்களை திரட்ட முடிந்தது. அப்போது திரட்டிய கையெழுத்துக்கள் 25,000. அதை விட அதிகமானவர்களிடம் எங்கள் செய்தி சென்றது. 

இப்போதையை அவசர உலகில் மக்கள் பொறுமையாக நின்று கையெழுத்திட்டு செல்வார்களா? அரசுக்கு எதிரான இயக்கத்தை ஏவல் துறை அனுமதிக்குமா?  சங்கிகள் எப்படிப்பட்ட இடையூறுகள் செய்வார்கள்? என்பதையெல்லாம் யோசித்து பார்க்கையில் நிச்சயமாக அது ஒரு நிலாக்காலம்தான். . . 

Saturday, February 1, 2025

இணையற்ற செயல் வீரரை இழந்தோம்

 


டி.டி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற எங்கள்  வேலூர் கோட்டச்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மறைவுச்செய்தி இன்றைய நாளை துயரமாக்கியது. 

1993 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த தோழர் அவர். எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த தோழர் சங்கத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது அலுவலக வாசலில் அமர்ந்து அலுவலகம் வருபவர்களை "இன்று வேலை நிறுத்தம்" என்று சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஒருவர் அவரை நக்கலாக "நீ என்ன வாட்ச்மேனா"  என்று கேட்க, "ஆமாம். எல்.ஐ.சி யை பொதுத்துறையாய் பாதுகாக்கும் வாட்ச்மேன்" என்று தோழர் தேவராஜ் சூடாக திருப்பி பதியளிக்க கேள்வி கேட்டவர் உள்ளே ஓடிவிட்டார்.



கோட்ட அலுவலகக் கிளையின் உதவி செயலாளர், செயலாளர்  என்று பணியாற்றிய தோழர் தேவராஜ், 2011 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் கோட்ட துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் தேவராஜ் கடந்த 2024 ம் வருடம் வரை அந்த பொறுப்பில் செயல்பட்டார்.

தோழர் தேவராஜ் சிறந்த செயல் வீரர். அவரிடம் கொடுக்கப்படும் பணி எதுவானாலும்  செம்மையாக செய்து முடிப்பார். பயணங்களில் உடன் இருப்பார். கொரோனா காலம் வரை தவறாமல் ஒவ்வொரு வருடமும் வெண்மணி பயணத்தில் கலந்து கொண்டவர். இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். இளம் வயதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்பிலும் இருந்துள்ளார். 

2022 ல் தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்திய போது விளம்பரக் குழு அமைப்பாளராக அவர் ஆற்றிய பணி மனதில் நிலைத்துள்ளது. காவல் நிலையத்துக்கு அனுமதிகளுக்காக சளைக்காமல் சென்று வந்தார். பேரவைக் கூட்டங்களில் பேச எப்போதுமே தன்னை தயார்ப்படுத்திக் கொள்வார்.

வெளிப்படையாகும் பேசும் குணம் கொண்டவர், கடின உழைப்பாளி. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரை கேன்ஸர் எனும் கொடிய நோய் தாக்கியது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல தயாராகும் வேளையில் அவரது மன உறுதியை பாதிக்கக்கூடிய விதத்தில் ஒரு ஜென்மம் பேசிய பேச்சு அவரது செவிகளையும் எட்டியது. ஆனால் அது அவரது மன வலிமையை அதிகரித்தது. நான் மீண்டு வருவேன் என்ற மன உறுதியோடு சிகிச்சைக்கு சென்றார்.

மூன்று நான்கு மாதங்களிலேயே மீண்டு மீண்டும் அலுவலகம் வந்தார். அவரது பணிகளை வழக்கம் போல செய்யத் தொடங்கினார். 2023 ல் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்ட மாநாட்டில் இரண்டு நாட்களும் முழுமையாக கலந்து கொண்டார். இனி அவர் எப்போதும் போல செயல்படுவார் என்று நம்பிய போது நோய் மீண்டும் அவரை தாக்கி மருந்துகளின் பக்க விளைவுகள் அவரை மிகவும் படுத்த இந்த முறை அவரை நோய் வென்று விட்டது.

உங்கள் பணிகளால், சங்கத்தின் மீதான உங்கள் பற்றுதலால், உங்கள் இனிய அணுகுமுறையால் எப்போதும் எங்களோடு இருப்பீர்கள்.

செவ்வணக்கம் தோழர் டி.டி 

Sunday, January 19, 2025

வரலாற்றை மோடி வகையறாக்கள் மறந்ததால் . . .

 


இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் இதே நாளில்தான் ஒரு அவசரச் சட்டம் மூலமாக ஆயுள் இன்சூரன்ஸ் வணிகத்தை அன்றைய நேரு அரசு தேசியமயமாக்கியது. நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் வானொலியில் அந்த முடிவுக்கான காரணங்களை விளக்குகிறார்.

தனியார் கம்பெனிகளின் மோசடிகள் காரணமான சூறையாடப்பட்ட பாலிசிதாரர்களின் நலனை பாதுகாப்பது என்பதுதான் முக்கியக் காரணம். வணிகர்கள் நாற்பது விதமான மோசடிகளை செய்வார் என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லியுள்ளார். அதற்கும் மேல் எண்ணற்ற மோசடிகளை செய்தவர்கள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்று ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் பதிவு செய்கிறார்.

ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயம் எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனத்தை உருவாக்கியது. ஐந்து கோடி ரூபாய் மூலதனத்துடன் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு  இப்போது 52 லட்சம் கோடி ரூபாயை கடந்து விட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எல்.ஐ.சி என்பதற்கு மேல் வேறென்ன எழுத வேண்டும்!

இருபதாண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அரசால் இன்சூரன்ஸ் துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. 23 கம்பெனிகள் இப்போது செயல்பட்ட போதும் அவர்களால் எல்.ஐ.சி யின் முதன்மைத்தன்மையை அசைக்க முடியவில்லை. கிட்டே நெருங்கவும் முடியவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியவே பிறந்திருக்கும் மோடியால் இதனை சகித்துக் கொள்ள முடியுமா?

பட்ஜெட் கூட்டத்தொடரில் சில மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்துள்ளது. தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் எல்.ஐ.சி க்கு மட்டும் கட்டுப்பாடு ஆணையமாகவும் செயல்படுகிற INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY சில விபரீத பரிந்துரைகளை கொடுத்துள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவது.

இதன் மூலம் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் பாலிசிதாரர் பணம் அன்னிய நாடுகளுக்கு பறந்து விடும். ஏமாற்றி விட்டு ஓடினால் நீங்கள் அங்கே போய்தான் வழக்கு நடத்த வேண்டும். மொத்தத்தில் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ தம்படிக்கு பிரயோசனமில்லை.

இன்சூரன்ஸ் கம்பெனி துவக்க குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் மூலதனம் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு விதி. காப்பீடு எடுக்கப்படும் தொகையைப் போல ஒன்றரை மடங்கு கையிருப்பு  SOLVANCY MARGIN இருக்க வேண்டும் என்பது இன்னொரு விதி.

இந்த இரண்டு விதிகளையுமே தளர்த்தப் போகிறார்கள். அதன் மூலம் புற்றீசல் போல இன்சூரன்ஸ் கம்பெனிகள் மழையில் முளைக்கும் காளான் போல உதிக்கும். அன்றே இறக்கும் ஈசல் போல காணாமல் போகும். அவைகளை நம்பி முதலீடு செய்தவர்கள் கதி???????

எல்.ஐ.சி வணிகத்தின் அச்சாணி முகவர்கள்தான். ஐ.ஆர்.டி.ஏ கொண்டு வந்த ஒரு பைத்தியக்கார விதி காரணமாக பாலிசித்திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் முகவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.

இந்த சூழலில் எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகள் ஆக்கிரமிக்கும் சதியை வேறு ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நெறிமுறையற்ற வணிகத்திற்கே இது இட்டுச் செல்லும்.

மொத்தத்தில் என்ன ஆகும்?

எப்படி 1956 ல் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளால் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே போன்ற நிலை 2026 லேயே உருவாகும்.

"வரலாற்றை மறந்தால் அது இன்னும் வேகத்தோடு மீண்டும் நிகழும்" என்பார்கள்.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளை மோடி வகையறாக்கள் மறந்து விட்டார்கள். அதனால் புதிய மோசடிகளுக்கு வாசலை திறந்து வைக்க முயல்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மறக்கவில்லை. மக்களிடம் சென்று உண்மைகளைச் சொல்லி அவர்களின் கருத்துக்களை ஆயுதமாகக் கொண்டு போராடி வருகிறோம். 

"வலுவான எல்.ஐ.சி, வலிமையான இந்தியா" என்ற முழக்கத்தோடு களம் இறங்கியுள்ளோம்.

நிச்சயம் நாங்கள் எல்.ஐ.சி யையும் காப்போம், தேசத்தையும் காப்போம்.

Sunday, January 5, 2025

எல்.ஐ.சி யில் மட்டும் ஏன் முடியாது?

 


முன் குறிப்பு : ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்தில் எழுதப்பட்ட பதிவு. சற்று தாமதமாக இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்று அங்கே DREU சங்கம் வெற்றி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சிகரமான செய்தி. ரயில்வே துறை ஒரு மத்தியரசு நிறுவனம். அங்கே அரசு அங்கீகாகரத்திற்கான தேர்தலை நடத்தியுள்ளது.

மத்தியரசு நிறுவனமாக இருக்கிற  பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும்  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை ஆறு முறையோ ஏழு முறையோ அங்கே தேர்தல் நடந்துள்ளது.

நிதித்துறைக்கு கீழ் உள்ள வங்கித்துறையில் அனைத்து வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு  ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைத்து சங்கங்களும் கையெழுத்திடுகின்றன.

நிதித்துறையின் கீழ் வரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை சங்க அங்கீகாரத் தேர்தல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.

ஆனால்

அதே நிதியமைச்சகத்தின் கீழ்வரும் எல்.ஐ.சி யில் மட்டும் சங்க அங்கீகாரத் தேர்தல் இது வரை நடந்ததே இல்லை.

தொழிற்சங்க ஜனநாயகம் ஏன் எல்.ஐ.சி யில் மட்டும் மறுக்கப்படுகிறது?

காரணம்?

பயம், பயமின்றி வேறில்லை.

ஏனென்றால் இங்கே எல்.ஐ.சி யில் எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையுடன் பெரும்பான்மையாக உள்ளது ஒரே ஒரு சங்கம் மட்டும்தான்.

அது

எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

எல்.ஐ.சி தோன்றும் முன்னே தோன்றிய சங்கம்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான சங்கம்.

மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் உயர்த்திப் பிடிக்கிற சங்கம்.

நிறுவன நலனுக்காகவும் பாலிசிதாரர்கள், முகவர்கள்,  ஊழியர் நலனுக்காகவும் சமரசமின்றி தொடர்ந்து  போராடுகின்ற  சங்கம்.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க தொடர்ந்து போராடுகின்ற, மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் மத்தியில் பல பத்தாண்டுகளாக கருத்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற சங்கம்.

 அது மட்டுமல்ல, இங்கே அரசுக்கு ஆதரவான சங்கம் என்பது ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்ட சங்கம், அதற்கும் அங்கீகாரம் கொடுத்து அழகு பார்க்க வாய்ப்பே கிடையாது.

 நிர்மலா அம்மையார் மட்டுமல்ல அவர்களுக்கு முன்பாக இருந்த அருண் ஜெய்ட்லி கூட அந்த சங்கத்தை வளர்க்கப்பார்த்தார். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். எங்களுக்கு 1995 ல் பென்ஷன் திட்டம் அறிமுகமானது. சிறிய அளவிலான ஊழியர்கள் அப்போது அத்திட்டத்தில் இணையவில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த பின்னணியில் பென்ஷன் திட்டம்தான் லாபகரமானது என்பது புரிந்து பென்ஷன் திட்டத்தில் இணைய எங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை உருவானது.

 அக்கோரிக்கையை வென்றெடுக்க எங்கள் சங்கம் தொடர்ந்து போராடியது. முயற்சிகள் எடுத்தது. வேலை நிறுத்தங்கள் மேற்கொண்டோம். அரசு உயர் அதிகாரிகளிடம் நியாயத்தை விளக்கினோம். இறுதியில் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 அருண் ஜெய்ட்லி என்ன செய்தார் தெரியுமா? அரசாணை வெளியிடப்பட்டதும் அதனை எல்.ஐ.சி நிர்வாகத்திற்குக் கூட தெரிவிக்காமல் அவருடைய ஆதரவு சங்கத்திற்கு சொல்லி தகவலை பரப்ப வைத்தார். ஏதோ அவர்கள்தான் பெற்றுக் கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைத்த அற்ப ஆசை. ஒரு சில அப்பாவிகள் வேண்டுமானால் அந்த மாயையில் மயங்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் யாரால் அந்த பலன் வந்தது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

 தங்களுக்கு எந்நாளும் அடிபணியாத ஒரு சங்கம் அங்கீகாரம் பெறுவதை தடுக்க முயல்கின்றனர்.  நாட்டின் ஜனநாயகத்தையே  மதிக்காத கும்பல் தொழிற்சங்க ஜனநாயகத்தை மட்டும் மதிக்குமா என்ன?

 ஆனால் நாங்கள் விட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். இறுதி வெற்றி எங்களுடையதே.

 

 

Wednesday, January 1, 2025

புத்தாண்டு இனிதாய் அமையட்டும்

 


புத்தாண்டின் முதல் பதிவாய் என்ன எழுதலாம் என்று யோசித்தேன். எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த இரு தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை அளிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



வெறுப்பும் வன்முறையும் புதிய வாழ்வியல் நடைமுறைகளாக  மாறி வரும் இன்றைய சூழலில் அமைதியாய் ஒன்றிணைந்து வாழ்வது, உண்மை, நீதி, அனைவருக்குமான நலன் ஆகிய அழகிய விழுமியங்களுக்காக போராடுவது இன்றியமையாதது. இந்த அழகிய சித்தாந்தங்களை வளர்த்தெடுக்க அழிவு சக்திகளையும் இருளையும் பின்னுக்குத் தள்ள வேண்டியது அவசியமாகும்.

2025 ல்  இந்த உயரிய இலக்குகளை வென்றெடுப்பதற்காக முன்னேறுவதற்கான  பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                                                               -        தோழர் அமானுல்லாகான்                                                                               முன்னாள் தலைவர்    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை கொண்டு வருகிறது. வெறுப்பை அன்பின் மூலம் அகற்றுகிற, பாகுபாட்டை சமத்துவம் மூலம் அகற்றுகிற, போர்களை அமைதி வென்றெடுக்கிற, வளர்ச்சியையும் செல்வத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிற மனிதத்திற்காக ஒன்றிணைகிற சிறப்பானதொரு உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. 

இவை ஒரு நாளில் நிகழாது. புத்தாண்டு அதற்கான பாதையை வழிகாட்டட்டும். 

அனைத்து தோழர்களுக்கும்  மகிழ்ச்சியான 2025  புத்தாண்டு அமைய எனது வாழ்த்துக்கள்

                                                        தோழர் கே.வேணுகோபால்,

                                                  முன்னாள் பொதுச்செயலாளர்,

                      அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

 அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிகு: புத்தாண்டின் முதல் பதிவில் ஒரு இனிப்பு இருக்கட்டும் என்பதற்காக இன்று நான் தயாரித்த பீட்ரூட் அல்வா மேலே . . .

Monday, December 23, 2024

பாப்கார்ன், பிரியாணி, ஆம்லெட் மற்றும் இன்சூரன்ஸ்

 


புதிதாக வரி போடுவதென்றால் நிர்மலா அம்மையாருக்கு ஒரே குஷி. குறைவாக இருந்த வரியை உயர்த்துவதிலும் கூட. அவருக்கு மூளை என்ற வஸ்து இருப்பது தெரிவதே இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

சாதா ஆம்லேட்டிற்கு ஒரு வரி, பெரெட் ஆம்லட்டிற்கு ஒரு வரி, தொட்டுக் கொள்ள ஸாஸ் கொடுத்தால் ஒரு வரி.

அதே போலத்தான் பாப்கார்னிற்கும் பிரியாணிக்கும் . . .

வெங்காயமே சாப்பிடாத அம்மையாருக்கு ஆம்லெட்டைப் பற்றியோ பிரியாணியைப் பற்றி என்ன தெரியப் போகிறது!  வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள் என்ற இலவச உபதேசம்  வேண்டுமானால் செய்வார்!

வரிகளை உயர்த்துவதில் காண்பிக்கிற வேகத்தை குறைப்பதில் மட்டும் காண்பிப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற குரல் இப்போது வலிமையாக கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம். அவர்களும் நிதியமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினார்.

மோடியின் மந்திரி நிதின் கட்காரியும் கடிதம் எழுதினார். பலரும் மக்களவை, மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இத்தனைக்கும் பிறகே இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி பிரச்சினை ஜி.எஸ்.டி கவுன்டிலில் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அது பற்றி ஆராய கமிட்டியெல்லாம் போடப்பட்டது.

ஆனால் இன்ற வரை முடிவெடுக்கப்படவில்லை. ஆயு, மறு ஆய்வு, மேலும் ஆய்வு என்று நடந்து கொண்டிருக்கிறது.

மக்களிடமிருந்து பிடுங்குவதில் இருக்கும் வேகமும் ஆர்வமும் கொடுப்பதற்கு மட்டும் அம்மையாருக்கு இருப்பதே இல்லை.

மக்கள் என்ன அதானியா இல்லை அம்பானியா?

 

Monday, December 9, 2024

அயோத்தியில் பறந்த செங்கொடி


 வட மத்திய மண்டலத்தின் 30 வது பொது மாநாட்டை ஃபைசாபாத் கோட்டச்சங்கம் அயோத்தியில் நடத்தினர். அங்கே ராமர் பாதை என்றழைக்கப்படுகிற சாலையின் வழியே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் சங்கத்தின் செங்கொடிகளை ஏந்தி மக்களுக்கான முழக்கங்களை எழுப்பிச் சென்றதை அயோத்தி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். நம்முடைய வாழ்வாதாரக் கோரிக்கைகளை எழுப்புகிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டாகியது,
-
 7,8,9, டிசம்ப்ர், 2024 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்   
அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் 
வட மத்திய மண்டலக் கூட்டமைப்பின் தலைவர்
தோழர் சஞ்சீவ் சர்மா பேசியதிலிருந்து. 

Saturday, October 12, 2024

போராட்டமும் துர்கா பூஜையும்

 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் 1960 களின் இறுதியில் இயந்திரமயமாக்கலுக்கு எதிராக நடத்திய "இலாகோ விஜில்" போராட்டம். எல்.ஐ.சி நிர்வாகமும் மத்திய அரசும் பத்தாயிரம் ஊழியர்களின் வேலையை செய்யக்கூடிய ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ திட்டமிட்டது. கல்கத்தாவிலிருந்து "இலாகோ" கட்டிடத்தின் உள்ளே அந்த சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ முயற்சித்தார்கள். அதை தடுக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அந்த "இலாகோ" கட்டிடத்தினை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முற்றுகையிட்டிருந்தது. 

வெற்றிகரமாக நிறைவுற்ற அந்த போராட்டத்தின் மிக முக்கியமான தருணம், மேற்கு வங்கத்தின் முக்கியமான திருவிழாவான துர்கா பூஜை சமயத்தில் கம்ப்யூட்டரை நிறுவ நிர்வாகம் போட்டிருந்த திட்டத்தை முறியடித்தது.

இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை சில புனைவுப் பாத்திரங்களோடு நாவல் வடிவில் நான் ஆவணப் படுத்தியிருந்த "முற்றுகை" நூலில் துர்கா பூஜை தொடர்பான அத்தியாயத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

சாம்சங் நிர்வாகம் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் எத்தனை முயன்றாலும் உணர்வு மிக்க தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்க முடியாது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம். 



இலாகோ முற்றுகை யை உடைப்பதற்கான சரியான தருணம் வந்துள்ளதாக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்து சேர்ந்தது. துர்கா பூஜை தொடங்கி இருந்தது. பெங்காலிகளின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகை துர்கா பூஜை. காளிகத் காளி, தக்னேஷ்வர் துர்கா போன்றவர்களை பிரதான கடவுளாக வழிபடுபவர்களுக்கு துர்கா பூஜைதான் பிரதானமான பண்டிகை. அந்தந்த பகுதிகளில் பந்தல் அமைத்து களி மண்ணால் உருவாக்கப்பட்ட துர்கை சிலைகளுக்கு வண்ணம் பூசி பத்து நாட்கள் பூஜை நடத்தி பிறகு கங்கையில் கரைப்பார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசம் மட்டுமல்ல, மத வேறுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடும் திருவிழாவும் கூட.

 என்னதான் போராட்டம் என்றாலும் துர்கா பூஜாவை குடும்பத்தோடு கொண்டாடத்தான் ஊழியர்கள் விரும்புவார்கள். அதனால் இந்த சமயத்தில் முற்றுகைக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே சரியான தருணம் பார்த்து கம்ப்யூட்டரை வில்லியம்ஸ் கோட்டையிலிருந்து வெளியே கொண்டு வந்து இலாகோ கட்டிடத்திற்குள் எடுத்துச் சென்று விடுவோம் என்பதுதான் அந்த திட்டம்.

 உண்மையிலேயே இது தீவிரமான பிரச்சினைதான். ஊழியர்களுடைய உணர்வுகளையும் புறக்கணிக்க முடியாது. அதே சமயம் இத்தனை நாள் உறுதியாக இருந்து விட்டு பிரச்சினை உச்சகட்டத்தை நெருங்கிய நிலையில் அதை கோட்டை விட்டு விடவும் முடியாது.

 என்ன செய்வது?

 ஏதாவது செய்தாக வேண்டுமே!

 முதல் வருடம் கால்டெக்ஸ் கம்பெனியில் நடந்த சம்பவம் வேறு நினைவில் வந்து கொண்டே இருந்தது.

 கால்டெக்ஸ் ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனம். அங்கே ஊதிய உயர்வுக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதற்கான அறைகூவல் கொடுத்திருந்தார்கள்.

 அப்போது துர்கா பூஜைக் காலமும் வந்தது. பண்டிக்கைக்கான நான்கு நாட்கள் விடுமுறை அளித்திருந்தார்கள். விடுமுறை முடிந்து அலுவலகம் வந்த ஊழியர்கள் தங்கள் வாழ்நாளில் காணாத அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.

 ஆம்

 அவர்களின் அலுவகத்தைக் காணவில்லை.

 விடுமுறைக் காலத்தில் கால்டெக்ஸ் நிர்வாகம் தங்கள் அலுவலகத்தை சுத்தமாக காலி செய்து கொண்டு பம்பாய்க்கு போயிருந்தார்கள். மேலாளர் அறைகள், ஊழியர்களின் இருக்கைகள் என எல்லாவற்றையுமே எடுத்துப் போயிருந்தார்கள். ஊழியர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, தாங்கள் பணியாற்றிய மேஜையில் வைத்திருந்த சொந்த உடமைகளைக் கூட இழந்திருந்தார்கள்.

 கால்டெக்ஸ் நிலைமை நிச்சயமாக இங்கே வரக்கூடாது.

 அதற்கு?  

 போராட்டமும் தொடர வேண்டும். ஊழியர்களின் பண்டிகைக் கொண்டாட்டமும் நடைபெற வேண்டும்.

 பரேஷ்பாபு ஒரு அருமையான யோசனையைச் சொன்னார்.

 நாம் ஏன் இங்கேயே துர்கா பூஜாவை கொண்டாடக் கூடாது?

 ஒரு தொழிற்சங்கம் இது போல ஒரு மதத்தின் பண்டிகையை கொண்டாடுவது முறையாக இருக்குமா?

 என்ற கேள்வியும் உடன் வந்தது.

 விவாதம் நடந்தது. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மதத்தின் பண்டிகை என்பதைக் கடந்து மக்களின் பண்டிகையாக மாறி விட்டது. துர்கா பூஜை பந்தல்களுக்கு அனைத்து மதத்தினரும் வருவதும் காணிக்கை செலுத்துவதும் நடைமுறையாகவே மாறி விட்டது. அதனால் இங்கே துர்கா பூஜையைக் கொண்டாடுவதில் தவறில்லை. அதே நேரம் இலாகோ கட்டிடத்தின் பின் வாயில் வழியாகத்தான் கம்ப்யூட்டரை உள்ளே கொண்டு செல்ல முடியும். அந்த இடத்தில் நாம் துர்கா சிலையை வைத்து விட்டால் அதனை அகற்றி விட்டு கம்ப்யூட்டரை எடுத்துச் செல்லும் தைரியமும் நிர்வாகத்திற்கு வராது. அப்படி நிர்வாகம் முரட்டுத்தனமாக யோசித்தாலும் பிரச்சினை வரும் என்பதால் ஆளுனர் பயப்படுவார். அதனால் நாம் இங்கே துர்கா பூஜை கொண்டாடுகிறோம் என்று சரோஜ்தா அறிவித்தார்.

 முடிவெடுத்தாகி விட்டது. துர்காதேவியின் சிலைக்கு எங்கே செல்வது? சிலை வாங்க பணம் வேண்டுமே! போராட்டப் பந்தலில் இருப்பவர்களிடமே வசூல் செய்யப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய் உடனடியாக வசூலானது. யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை வருமான வரித்துறை விசாரணைக்கு வந்தால் காண்பிக்க தயாராக இருப்போம் என்று போஸ் பாபு கிண்டலடித்தார்.

 ஆக பணம் தயார். சிலைகள் வாங்க யார் செல்வது? நிர்மல், அசோக், அமிதவ், குனின் குழு நாங்கள் போகிறோம் என்று புறப்பட்டார்கள். குமர்துளி என்றொரு பகுதி வடக்கு கல்கத்தாவில் இருந்தது. அங்கேதான் துர்காதேவி சிலைகளை செய்யும் பிரசித்தி பெற்ற மண்பாண்டக் கலைஞர்கள் இருந்தார்கள். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நால்வரும் புறப்பட்டார்கள். போனவர்கள் போனவர்களே இரவு வரை அவர்கள் திரும்பவில்லை. இங்கே பந்தலில் உள்ளவர்களுக்கு பதட்டம். என்னாயிருக்குமோ? மோட்டார் சைக்கிளில் போனார்களே, பாதுகாப்பாக போயிருப்பார்களா என்று கவலைப்பட்டார்கள். யாராவது குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் விபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற சிந்தனைதானே முதலில் வருகிறது!

 இரவு பத்து மணிக்கு அவர்கள் சிலைகளோடு வந்து சேர்ந்தார்கள்.கடைசி நிமிடம் என்பதால் மிகவும் அலைய வேண்டியுருந்தது.  துர்கா தேவி, சிவன், லட்சுமி, சரஸ்வதி, வினாயகர் சிலைகள் எல்லாம் வாங்கி ஒரு வண்டியில் ஏற்றி கொண்டு வந்தார்கள். கார்த்திகேயன் சிலை ம்ட்டும் கிடைக்காததால் இன்னொரு சரஸ்வதி சிலை வாங்கி அதையே கொஞ்சம் மாற்றி கொண்டு வருவதற்கு கால தாமதம் ஆனது என்றார்கள். சிலைகள் வந்ததை விட அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததே அந்த நிமிடத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.

 சிலைகள் வந்தாகி விட்டது. ஒரு சின்ன பந்தல் அமைத்து இலாகோ கட்டிட வாசலில் நிறுவியாகி விட்டது. அடுத்து இன்னொரு கேள்வி வந்தது. யார் பூஜை செய்வது? எல்லோரும் முழித்தார்கள். பக்கத்தில் இருந்த பழக்கடை வியாபாரி நான் செய்கிறேன் என்று முன் வந்தார். பத்து நாட்களும் அமோகமாக கழிந்தது. வழக்கத்தை விட அதிகமானவர்கள் முற்றுகையில் கலந்து கொண்டார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பல ஊழியர்கள் முற்றுகையிலும் பங்கேற்றார்கள். சங்கம் அமைத்த துர்கா தேவியையும் வழிபட்டு சென்றார்கள். ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை கம்ப்யூட்டர் துர்கா என்று தலைப்பிட்டு கட்டுரையே வெளியிட்டது.