Monday, February 29, 2016

ஜேஎன்யு - அம்மையாரை அதிர வைத்தவர்

முப்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு  அது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தவர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி. அவசர நிலைக்கால அராஜகங்களுக்குப் பின்பு நடந்த பொதுத்தேர்தலில் அவர் தோற்றுப் போனாலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தார். 

அவர் அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாக அவரது வீட்டிற்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். முதலில் அவரது எடுபிடிகள் வருகின்றனர். பிறகு இந்திரா காந்தியே வருகிறார்.

அவர் ஏன் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட மனுவை மாணவர் சங்கத் தலைவர் படிக்கிறார். முதலில் புன்னகையோடு அதை கேட்ட அம்மையார் மனுவில் அவர் நிகழ்த்திய குற்றங்களை பட்டியல் போட்டு மாணவர் சங்கத் தலைவர் படிக்கவும் விளக்கவும் செய்வதைக் கேட்க பொறுக்காமல் வீட்டிற்குள் ஓடி விட்டார். 

அவர் போன பிறகும் ஆர்ப்பாட்டம் ஆவேசமாக தொடர்ந்தது. அவர்கள் கொண்டு வந்த மனுவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.

அம்மையார் மறுநாள்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

தனது உறுதி மிக்க போராட்டத்தால் அன்று இந்திரா காந்தி அம்மையாரை அதிர வைத்த அந்த மாணவர் சங்கத் தலைவர் யார் தெரியுமா?

அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பிரச்சினைக்காக இன்று மோடி அரசால் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ள அதே



தோழர் சீத்தாராம் யெச்சூரி தான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர்.

Sunday, February 28, 2016

உங்கள் புத்திதான் சில்லறைத்தனமானது மிஸ்டர்


வழக்கம் போல நாடாளுமன்றத்தில் வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கும் திருவாளர் மோடி, கர்னாடகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சில்லறைத்தனமான விஷயங்களுக்காக பிரச்சினைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வீரம் காட்டியுள்ளார். 

அப்படியென்ன சில்லறைத்தனமான பிரச்சினைகள்?

எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள், நீங்கள் ராமரின் பிள்ளையா? முறை தவறி பிறந்தாயா என்று ஒரு அம்மையார் கேட்டதை கண்டித்தால்,

மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி ஒரு முதியவரின் உயிரை ஏனய்யா பறித்தீர்கள் என்று கேட்டால்,

யாரும் எதுவும் வாய் திறந்து பேசக்கூடாது, பேசினால் வெளியே போ எனச் சொல்கிறீகளே, இது என்ன ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா என்று வினவினால்,

இந்தியாவின் வளங்களையெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொட்டிக் கொடுக்கிறீர்களே, இது தேசத்துரோகமில்லையா என்று எதிர்த்தால்,


இந்தியர்கள் ஒவ்வொருவருவருக்கும் பதினைந்து லட்ச ரூபாய் தருவோம் என்று சொல்லி விட்டு அது சும்மா என்று இப்படி ஏமாற்றுவது நியாயமா என்று குரலெழுப்பினால்

உங்கள் அமைச்சர் பெருமக்கள் இருவரால் ரோஹித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தூக்கிலே தொங்கினாரா, அந்த கருணை உள்ளங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று குமுறினால்,

புகழ் பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தை உங்களின் அடியாட்கள் ஏ.பி.வி.பி, ஏவலாட்கள் காவல்துறை மூலம் நாசமாக்க முயல்வது அயோக்கியத்தனமில்லையா என்று போராடினால்

அதுவெல்லாம் உங்களுக்கு சில்லறைத்தனமான விஷயமாக தெரிகிறது. 

மிஸ்டர் மோடி, உங்களது புத்தியும் நடவடிக்கைகளும்தான் சில்லறைத்தனமானது என்பது எப்போதுதான் உங்களுக்குப் புரியும்?

 

 

Saturday, February 27, 2016

எழுதவே அசிங்கமாய் இருக்கிறது.





இந்த பதிவை எழுத வேண்டுமா என்று நேற்று முதல் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அசிங்கத்தை அசிங்கம் என்று சொல்லத்தான் வேண்டுமல்லவா!

வீரப்பனை விட பெரிய மீசை வைத்த இந்த மனிதன் ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பெயர் கியான்தேவ். ராவணன் வேஷம் போட்டே சீட் வாங்கியவராம்.

இந்த மனிதன் பெரிய புள்ளியியல் நிபுணர். அவரது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரம் எலும்புத்துண்டுகள், பத்தாயிரம் புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், நான்காயிரம் பீடித்துண்டுகள், மூவாயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், பயன்படுத்தப்பட்ட கருக்கலைப்பு ஊசிகள் அறுநூறு ஆகியவை கிடக்கிறதாம். இரவு எட்டு மணிக்கு மேல் மாணவர்களும் மாணவிகளும் பங்கேற்கின்ற நிர்வாண நடனம் ஒவ்வொரு நாளும் நடைபெறுமாம்.

உலகப் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தை எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு நைட் கிளப் போல அந்த மனிதன் சொல்லியுள்ளான் என்றால் அவனது புத்தி  எவ்வளவு மட்டமானது என்பதைப் பாருங்கள்.

தங்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் உறுதியோடு போராடுகிற ஜே.என்.யு மாணவர்களை இழிவு படுத்த எந்த அளவிற்கு கீழிறங்க முடியுமோ, அந்த அளவிற்கு காவிப்படை சென்று கொண்டிருக்கிறது.

தீவிரவாதிகள், தேசத்துரோகிகள் ஆகிய வசை பாடல்களுக்கு மாணவர்கள் அடி பணியாமல் தொடர்ந்து போராடி வருவதால் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக சித்தரிக்கிற அடுத்த சதியை கியான்தேவ் மூலமாக துவக்கியுள்ளார்கள்.

பொய்ப் பிரச்சாரம் செய்வதில் கோயபல்ஸ் எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்

Friday, February 26, 2016

குழந்தையைக் கொன்ற “அம்மா”




இது தமிழ்நாட்டு “அம்மா” இல்லை. மத்தியரசு “அம்மா”

காவிப்படை அளித்த நிர்ப்பந்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் வரும் போது மனித வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி, ரோஹித் வெமுலாவை “குழந்தை” என்றே குறிப்பிட்டு அந்த குழந்தையின் சடலத்தை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக சாடியுள்ளார். ரோஹித்தை குழந்தை என்று சொல்லியுள்ள ஸ்மிர்தி இராணியின் தாயுள்ளத்தை பாருங்கள் என்று சில காவி டவுசர்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். ஸ்டிக்கர் ஒட்டி பேனர் கட்டாத அளவிற்கு பாராட்டியுள்ளனர்.

ரோஹித் வெமுலாவையும் மற்ற மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ய யார் காரணம்?

அவர்களைப் போன்ற ஜாதிய, தீவிரவாத, தேச விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது யார்?

உதவித்தொகையை நிறுத்தி வைக்க, விடுதிகளிலிருந்து வெளியேற்ற, துணைவேந்தருக்கு தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்தது யார்?

மின்னஞ்சல் மீது மின்னஞ்சல் அனுப்பி ரோஹித் வெமுலா, தூக்குக்கயிற்றை நாட காரணமாக இருந்தது யார்?

இப்போது ரோஹித் வெமுலாவை குழந்தை என்று சொல்லி பாசத்தை பொழிகிற இதே ஸ்மிர்தி இராணிதானே?

குழந்தையைக் கொன்று விட்டு இப்போது போட்டுள்ள தாய் வேடத்தில் அவர் காண்பிக்கிற சிறப்பான நடிப்பை அவர் திரைப்படங்களில் கூட வெளிப்படுத்தியிருப்பாரா என்று தெரியவில்லை. 



குழந்தையை பார்க்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் சொன்ன பொய்களை ஹைதராபாத் பல்கலைக்கழக மருத்துவரின் அறிக்கை தோலுரித்து விட்டது. இப்படிப்பட்ட பொய்யர்களை இந்தியா இன்னும் அமைச்சர்களாக நீடிக்க அனுமதிக்கலாமா?


அலகாபாத்திலும் காவி வக்கீல்கள் அராஜகம்







அலகாபாத் நகரின் தொழிற்சங்கங்கள், மற்றும் பல முற்போக்கு சக்திகள் இணைந்து நேற்று ஒரு பேரணி ஒன்றை சங் பரிவாரத்தின் பிரிவினைச் சதிகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருந்தார்கள். மக்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மோத வைக்கிற இழி செயல்களையும் அந்த முயற்சிகளுக்கு மோடியின் அரசு எவ்வாறு பக்கபலமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் விதத்தில் ஜே.என்.யு மற்றும் ரோஹித் வெமுலா பிரச்சினையை முன்னிருத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப் போய்க் கொண்டிருந்த போது வக்கீல்களாக தொழில் புரியும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவோம் என்றெல்லாம் அசிங்கமாக பேசியுள்ளார்கள்.

.பல பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் எங்களது அலகாபாத் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் அவினாஷ் மிஸ்ரா அவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் காவல் நிலையத்தில் குழுமிய பின்னரே புகார் பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாதவர்கள் என்று முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.  தோழர் அவினாஷ் மிஸ்ரா மீது தாக்குதல் நடத்திய ரௌடிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வெறியாட்டம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.

காவிக் கூட்டத்தின் சகிப்பின்மைக்கு இந்த சம்பவம் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத அராஜகவாதிகள் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்த நினைக்கிறார்கள். அதன் மூலம் தங்களது அசிங்கங்களை மறைக்க முயல்கிறார்கள்.

ஆனால் கொள்கை வழி நிற்கிற முற்போக்கு சக்திகளை எந்த அச்சுறுத்தல் மூலமாகவும் பணிய வைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது குண்டாந்தடிகளை விட, அரிவாள், துப்பாக்கிகளை விட எங்களின் கொள்கைகளுக்கும் உறுதியான வர்க்க உணர்விற்கும் வலிமை அதிகம்.

Thursday, February 25, 2016

மெய் சிலிர்க்க வைத்த புகைப்படம்





நான்கைந்து நாட்களாக முக நூல் பக்கம் அவ்வளவாக வரவில்லை. வலைப்பக்க பதிவிற்கு இணைப்பு கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்ததால் இந்த புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.

மனம் முப்பதாண்டுகளுக்கு முன்பு பறந்து சென்றது.

16.04.1986, வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். அன்றுதான் எல்.ஐ.சி நிறுவனத்தில் பயிற்சி உதவியாளராக அடியெடுத்து வைக்கிறேன். மொத்தம் 125 பேர் அன்று பணியில் இணைகிறோம். காலையில் நிர்வாகத்தின் அறிமுகக் கூட்டம். மாலை பயிற்சி வகுப்பு முடிந்ததும் சங்கத்தைப் பற்றிய ஒரு அறிமுகக் கூட்டம் உள்ளதாக மதியத்தில் ஒருவர் வந்து சொன்னார்.

மாலை ஐந்து மணிக்கு பயிற்சி வகுப்பு முடிகிறது. பத்து பதினைந்து பேர் வருகிறார்கள். அவர்களில் ஓரிருவர் நேர்முகத் தேர்வு நடக்கும் போது வாழ்த்து சொன்னவர்கள் என்பது நினைவில் இருந்தது. ஆனால் அவர்களின் பெயரெல்லாம் அப்போது தெரியாது. வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர் பேச வருகிறார். அதற்குள்ளாக நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவரிடம் கண்ணைக் காட்ட, அந்த நபர் அவசரம் அவசரமாக மைக்கை அங்கேயிருந்து அகற்றி எடுத்துப் போகிறார்.

வெள்ளை ஆடை அணிந்த அந்த மனிதர் பேசத் தொடங்குகிறார்.

“அந்த ஒலிபெருக்கியை அப்படியே வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் உங்கள் அத்தனை பேரையும் சென்றடையக் கூடிய சக்தி எங்கள் குரலுக்கு உண்டு” என்று பேசத் தொடங்குகிறார்.

அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை இடியாய், பேரருவியாய், இனிய தென்றலாய், எல்லாமாமுமாக அமைந்திருந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுருக்கமான வரலாறாக, இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்த வகுப்பாக அமைந்திருந்த அந்த உரை புதிய வாசலுக்கு என்னை அழைத்துச் சென்றது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் என்னையும் இணைத்துக் கொள்ள அடித்தளமாய் அமைந்திருந்தது.

அந்த வெள்ளை ஆடை மனிதர் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர், பின்பு தென் மண்டலப் பொதுச்செயலாளராக, தலைவராக, அகில இந்திய துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ராஜப்பா.

எல்.ஐ.சி யிலிருந்து ஓய்வு பெற்று இருபதாண்டுகள் ஓடி விட்டாலும் அவரது தொழிற்சங்கப் பணி இன்னும் தொடர்கிறது. சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனை ஊழியர்களை அணி திரட்டி சங்கம் அமைத்துள்ளார். காஸ்மோபாலிடன் கிளப் போன்ற கிளப்கள், காபி டே போன்ற நிறுவன ஊழியர்களை தொழிற்சங்கத்தின் அணி வகுக்கும் பணியைச் செய்தவர். ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் இப்போதும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர். எப்போதுமே உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருப்பவர். அவரது உற்சாகம் நமது சோர்வை போக்கி விடும்.

என்றுமே அவர் ஒரு வழிகாட்டி.

அர்ப்பணிப்பு மிக்க உழைப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணம் தோழர் எஸ்.ராஜப்பா.  

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.ராஜப்பா அவர்களை, அவரது எண்பதாவது பிறந்தநாளன்று சி.ஐ.டி.யு தலைவர்கள் வாழ்த்துகிற புகைப்படம்தான் மேலே உள்ளது.

கீழே உள்ள புகைப்படங்கள் அவர் வேலூரில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றபோது எடுக்கப்பட்டவை.

12.06.1988 ல் வேலூர் கோட்டச் சங்கத்தின் துவக்க விழாவை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டம்



ஆகஸ்ட் 1996 ல் வேலூரில் நடைபெற்ற இருபத்தி நான்காவது தென் மண்டல மாநாட்டில்.



ஆகஸ்ட் 1998 ல் புதுவையில் நடைபெற்ற கோட்டச் சங்க மாநாட்டில்



2, செப்டம்பர், 2006 ல் எங்கள் சங்கக் கட்டிடம் சரோஜ் இல்லத்தில் ஓய்வறைகளை திறந்து வைத்த போது. 




கடந்த மாதம் தஞ்சையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டிலும் நான்கு நாட்களும் கலந்து கொண்டார்.