Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Monday, February 9, 2026

மோடிக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?

 மலேசியாவில் மோடி தமிழை உயர்த்திப் பிடித்ததாக பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை அப்படியே பகிர்ந்து கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் மருத்துவனையில் படுத்துக் கொண்டிருக்கும் ஹைகோர்ட் புகழ் எச்.ராசா உட்பட அனைத்து சங்கிகளுக்கும் கீழே உள்ள படம் சமர்ப்பணம். . . 



Friday, September 17, 2021

வந்தேறியால் கிடைத்த மூன்று கோடி


மதுரை AIIMS. அன்று செங்கல், இன்று ?? 

என்ற தலைப்பில் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு தோழர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளை பதிவிட்டிருந்தேன்.

அதற்கு ஒரு நாம் தமிழர் தம்பி அனாமதேயமாக வந்து 

தமிழன் இல்லாத ஒரு வந்தேறியான மதுரை எம்.பி வழமை போல உளறி கொட்டி இருக்கிறார். தினமும் யாரையாவது குறை சொல்வதை தவிர ஏதும் தெரியாது ஒரு எம்பி அதற்க்கு இந்த வந்தேறியின் சால்ரா.

என்று பின்னூட்டமிட்டிருந்தார்.


அதற்கு உடனடியாக சூடாக பதிலும் கொடுத்து விட்டேன்.

தோழர் சு.வெ எழுப்பிய எந்த பிரச்சினைக்கும் பதில் சொல்ல முடியவில்லை அல்லவா அது போதும். வந்தேறிகள் என்று உங்களால் வர்ணிக்கப்படுபவர்கள் தைரியமாக சொந்த அடையாளத்தோடு எழுதுகிறோம். தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு தமிழனை இழிவு படுத்துகிறார்கள். உமக்காகவே நாளை ஒரு பதிவை பகிர்கிறேன். மோடி அரசை குறை சொன்னால் நாம் தமிழர் தம்பிகளுக்கு ஏன் கோபம் வருகிறது? உங்களுக்குள் என்ன பேக்கரி டீலிங்?


வந்தேறி என்று வர்ணிக்கப்படுகிற தோழர் சு.வெ எடுத்த முயற்சிகள் காரணமாகவே எண்ணற்ற முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மக்களவை உறுப்பினராக அவர் ஆற்றி வரும் பணி சிறப்பாக உள்ளது. அதற்கு ஒரு சிறிய உதாரணமாக எங்கள் தஞ்சைக் கோட்ட தோழரும் தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரனின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.


அதனைப் படித்து விட்டு அந்த அனாமதேயத் தம்பி உடனடியாக பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தோழர் சு.வெ - சீமான் குறித்த ஒரு சிறிய ஒப்பீட்டை இன்று மாலையோ அல்லது நாளையோ செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் சேர்த்து வசை பாடினால் போதும்.

இப்போது தோழர் களப்பிரனின் பதிவை படியுங்கள்.





தோழர் Venkatesan Su அவர்களுக்கு #தஞ்சை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
" சு.வெங்கடேசன் #மதுரை_தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். அவர் பணிகள் பற்றியே அதிகமா பதிவு போடுறீங்களே... அவரால் நம்ம #தஞ்சைத்தொகுதிக்கு என்ன லாபம்..?" என்று நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள் என்னவென்று அறியாத சிலர் அறியாமையால் கேட்பதுண்டு... அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து போயிருக்கிறோம். சு.வெ. நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கைகளும், குரல்களும் தமிழகம் சார்ந்தது, தென்னிந்தியா சார்ந்தது. அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகள் எப்போதுமே இந்த நாட்டின் இறையாண்மைக்கான குரல்கள் என்பதை நாங்கள் என்ன இப்படி கேட்பவர்களுக்கெல்லாம் வகுப்பெடுக்கவா முடியும்..?
இருந்தாலும் சமீபத்திய அவரின் கோரிக்கியும், அதன் மூலம் வெளிவந்துள்ள அறிவிப்புகளும் அவரின் மதுரை தொகுதி சார்ந்தது மட்டுமல்ல, அது நம் தொகுதி சார்ந்ததும் தான் என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் போல் இரண்டு வெற்றிகள் அடுத்தடுத்து வந்துள்ளது
பல்கலைக்கழக மானியக்குழு 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ3,22,82,172 வழங்காமல் தாமதப்படுத்தி வந்தது.
நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறு கோரியிருந்தார் சு.வெ.
அவரின் கோரிக்கையை ஏற்று முழுத்தொகையையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த தாம்பரம் - செங்கோட்டை; தஞ்சையை கடந்தே செல்ல உள்ளது. அதுவும் பகல் நேரத்தில்... அதே போல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம்; திருவாரூர் - காரைக்குடி என்ற இரயில்களும் நம் தொகுதிக்கானது.
தோழர் சு.வெ.அவர்களுக்கு தஞ்சை தொகுதி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
---------------------------------------------------------------
தமிழ் பல்கலைக்கழகத்திற்கு
ரூ 3,22,82,172 ஐ வழங்கியது மானியக்குழு - சு.வெங்கடேசன்
கோரிக்கை ஏற்றமைக்கு நன்றி.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழக மானியக்குழுவின் 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ 3,22,82,172 தொகை வர வேண்டிருந்தது. பல்கலைக்கழகம் கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இத்தொகையை பெற்றுத்தர கல்வித்துறை நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தாங்கள் முயற்சி செய்து உதவுமாறு பல்கலைக்கழகத்தின் தரப்பில் இருந்து என்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகம், மானியக்குழுவுக்குத்தர வேண்டிய தொகையை கழித்துக்கொண்டு மீதித்தொகையையாவது விரைவாக பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு மானியக்குழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதி,தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று 12 ஆவது மானியக்குழு வழங்க வேண்டிய ரூ 3,22,82,172 ரூபாயை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு.
மதுரையை மையப்படுத்திய ஐந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி.
-சு.வெங்கடேசன் எம்.பி.,
சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின் பொதுப்பெட்டிகளைக் கொண்ட விரைவு இரயில்களை இயக்கினார்கள். அதனை வரவேற்றேன். சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை ஏற்று மூன்று சாதாரண பயணிகள் இரயிலையும், மூன்று விரைவு இரயில்களையும் இயக்க தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே வாரியத்திடம் கோரியுள்ளது.
புதிதாக இயக்க உள்ள பயணிகள் இரயில்கள்:
1. மதுரை - போடிநாயக்கனூர்
2. திண்டுக்கல் - கோவை
3. திருவாரூர் - காரைக்குடி.
புதிதாக இயக்கவுள்ள விரைவு இரயில்கள்.
1.தாம்பரம் - செங்கோட்டை
2. மதுரை - இராமேஸ்வரம்
3. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
இவைத்தவிர சென்னை சென்ட்ரல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு வண்டியை போடி நாயக்கனூர் வரை நீட்டிக்க வேண்டுமென்றும், திருவனந்தபுரம் முதல் மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு வண்டியை இராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும் தென்னக இரயில்வே அனுமதி கோரியுள்ளது.
தென்னக இரயில்வேயின் இக்கோரிக்கையை இரயில்வே வாரியம் ஏற்று விரைவாக உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தென்னக இரயில்வேயின் இந்த கோரிக்கைகளில் ஐந்து வண்டிகள் மதுரை சார்ந்து இயங்கும் வண்டிகளாக இருப்பதால் எனது நன்றியை தென்னக இரயில்வேக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, January 2, 2013

சாதனை மேல் சாதனை படைக்கும் தமிழக அரசு; வாழ்த்து சொல்வதா? நொந்து கொள்வதா?




தமிழக அரசு இந்த ஆண்டு புதிய சாதனை படைத்துள்ளது. அதற்காக அரசு மகிழ்ச்சியும் அடைந்துள்ளது.

அப்படிப்பட்ட சாதனை என்ன தெரியுமா?

இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள விற்பனை 95 கோடி ரூபாயாம். கடந்த புத்தாண்டில் 70 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்ததாம். இந்த ஆண்டு கூடுதலாக 25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக மக்களை கூடுதலாக குடிக்க வைத்ததற்கு பெருமைப் பட்டுக் கொள்ளும் அரசு இதுவாக மட்டுமே இருக்க முடியும். இலக்கை மிஞ்சிய பெருமிதம் வேறு இதிலே.

இதே போன்றதொரு விற்பனையை பொங்கல் பண்டிகைக் காலத்தில் வேறு எதிர்பார்க்கிறார்களாம்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சொல்கிற தமிழக முதல்வர், பாலியல் குற்றங்களுக்கு குடிபோதையும் ஒரு முக்கியக் காரணி என்பதை மறப்பது ஏனோ?

குற்றங்களை உருவாக்கும் சூழலை உருவாக்கி விட்டு கடுமையான தண்டனை விதிப்பது மிகப் பெரிய முரண்பாடு. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கோ, முதல்வருக்கோ உண்மையிலேயே விருப்பம் இருக்குமானால் மது விலக்கு பற்றி தீவிரமாக சிந்தித்து உறுதியாக முடிவெடுக்க வேண்டிய சரியான நேரம் இது.

ஒரு புறத்தில் மது பான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து மறுபுறம் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பேன் என்று சொல்வது போலித்தனம், வெற்றுக் கூச்சல்.


Sunday, December 30, 2012

யப்பா ரஜனி, நீ அரசியலுக்கு வரவே வராதே...


 

என்   மகன்  மிகவும்  வற்புறுத்தி  ரஜனிகாந்த் பிறந்தநாள்
விழா வீடியோவை முகநூலில் பார்க்க வைத்தான்.

என்ன கொடுமை சார் இது?

அரசியல் குறித்து அவர் அள்ளித்தந்துள்ளது கேட்டால்
சிரிப்பு சிரிப்பாக வந்தது.

1996 ல் வாய்ஸ் கொடுக்காவிட்டால் அவர் கோழை என்று
சொல்லி விடுவார்கள் என்பதால் அவர் வாய்ஸ் கொடுத்தாராம்.

உசுப்பேத்தி விட்டதக்கு பயந்து போய் வாய்ஸ் கொடுத்தேன்
என்பதையே என்ன வீரமா சொல்றாரு!

அரசியல் கட்சி தலைவர்கள் நல்லவர்களாம். இது 
உண்மை. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரைக்கும்
உண்மை (தா.பா நீங்கலாக). மற்ற கட்சிகளுக்கு இது
பொருந்தவே பொருந்தாது. ஆனால் ரஜனி சொல்கிறார்.
எல்லா தலைவர்களும் நல்லவர்களாம்.

அரசியல் தலைவர்கள் வேதனையாக உள்ளார்களாம்.
அவர்களை கெடுப்பது தொண்டர்கள்தானாம். 
தொண்டர்களின் பேராசையால்தான் தலைவர்களுக்கு
பிரச்சினையாம். 

என்ன ஒரு காமெடி?

யதார்த்த நிலைமை கொஞ்சமும் தெரியாத ரஜனி
போன்றவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே
மேல்.

இதிலே  அவரது ரசிகர்கள்தான் பாவம்.

அரசியல் தொண்டர்களைப் பற்றி சொல்லியது
அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும் என்பது
புரியாமலே ஆரவாரம் செய்கின்றனர்.

அவர்களை வெறியர்கள் என்று சொன்னதற்கும்
உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்.

இவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால்
தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் 
காப்பாற்ற முடியாது. 

( 1996 டயலாக் ரிபீட்டு)

Thursday, November 29, 2012

தர்மபுரி அராஜகப் புகைப்படங்கள்

தர்மபுரி கலவரத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்
மிகைப்படுத்தப் பட்டதாகவும்
ஓரிரு வீடுகள்  மட்டுமே  தாக்கப்பட்டதாகவும்
சில அறிவுஜீவிகள் இணையத்தில்
அபத்தமாக உளறிக் கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  எங்களது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அப்போது எங்கள் சேலம் கோட்ட தோழர்கள்
பாதிப்புக்களை படம் எடுத்துள்ளனர்.

அதிலிருந்து மாதிரிக்காக சில படங்கள்
மட்டும் இங்கே.

அதைப் பார்த்தால் தெரியும். உண்மை என்னவென்று.

கொள்ளையடிக்கப்பட்ட பீரோக்களின் படமும்
எரிக்கப்பட்ட வாகனங்கள் படமும் மட்டுமே
இங்கே உள்ளது. இன்னும் ஏராளமாய் உள்ளது.





















 

Friday, November 23, 2012

இதுதான் இந்திய நீதியா????????

இது முக நூலிலிருந்து  என் மகன்
எடுத்துக் கொடுத்த படம்.

அஜ்மல்  கசாபை தூக்கிலிட்ட
இந்திய அரசு ரத்த வெறி பிடித்த
ராஜபக்சேவிற்கு 
ரத்தினக் கம்பள வரவேற்பு
அளித்ததை 
கேள்வி கேட்கிறது.

கசாப்பை தூக்கிலிட்டது சரி.
என்ற புரிதலோடு

ராஜபக்சேவை இந்திய அரசு
தாங்கிப் பிடிப்பது 
நியாயமா என்று 
நானும் கேட்கிறேன்.

இதுதான் இந்திய நீதியா?

இந்தக் கேள்வியை
மன்மோகன்சிங்கை கேட்பதை
விட அவரை ஆட்டி வைக்கும்
சோனியா காந்தியையும்,

சோனியாவை சொக்கத்தங்கம்
என்று வர்ணித்தவரையும்
கேட்பது இன்னும்
பொருத்தமாக இருக்கும்...




Thursday, November 15, 2012

சாதிய வன்மங்களைத் துடைத்தெறிவோம்!


பி. சம்பத்,
மாநிலத்  தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

 


தர்மபுரி மாவட்டம், நத்தம், கொண்டாம் பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் தலித்துகள் மீது சாதிய சக்திகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டம் ஜனநாயக சக்தி களின் மனசாட்சியை உலுக்கும் சம்பவங் களாகும். இக்கிராமங்களில் சுமார் 300 வீடுகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடந்துள்ளன. அடைத்துள்ள வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள நகை கள், பணத்தை கொள்ளையிடுவது, விலை உயர்ந்த பிரிட்ஜ், கட்டில், மின்விசிறி, கேஸ் அடுப்பு போன்றவற்றை உடைத்து நொறுக்குவது, தானியங்கள், துணிகள், இதர பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது, இறுதியாக பெட் ரோல் ஊற்றி வீட்டிற்கு நெருப்பு வைப்பது என மிகவும் திட்டமிட்ட முறையில் ஒரே மாதிரி யாக 300 வீடுகளிலும் நடந்தேறியுள்ளன.


வாழ்க்கையை பறிகொடுத்தவர்களாக

சேதாரத்தை துல்லியமாக இனிமேல்தான் மதிப்பிட வேண்டியுள்ளது என்றாலும் உத் தேசமாக பல பத்துகோடி ரூபாய்க்கு பாதிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. பெங்களூர், திருப்பூர் என பல ஊர்களுக்குச் சென்று சிறு கச் சிறுகச் சேகரித்த உடைமைகள் முழுவதும் சாதி வெறியர்களால் கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன. தலித்துகளின் உயிர்களைத் தவிர உடைமைகள் முழுவதும் இக்கிராமங்களில் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையையே பறிகொடுத்தவர்களாக சொந்த கிராமங்களிலேயே அகதிகளாக மாறி யுள்ளனர். ஒரு தலித் பெரியவர் இத்தாக்குதல் பற்றி விவரிக்கும் போது “எங்களது வாழ்க்கை 50 ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது” என துயரத்துடன் கூறினார்.


தலித்துகளுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து கலகம்


இக்கொடூரமான தாக்குதலுக்கு காரணம் என்ன? 23 வயது நிரம்பிய தலித் இளைஞன் இளவரசன், 20 வயது நிரம்பிய சாதி இந்து பெண் திவ்யா, இவர்களிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டது தான்!. சாதிச் சமூகத்தில் இது மிகப்பெரிய குற்றமாம். அதுவும் கீழ்சாதி தலித் இளைஞன் உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்தததற்காக அக் கிராமத்தில் உள்ள அனைத்து தலித் குடும் பங்களுக்கும் சாதி வெறியர்கள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள “கட்ட(சாதி)ப் பஞ்சாயத்து” வழங்கியுள்ள தண்டனையாம் இது. இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக அந்த இளம் தம் பதியை ஆஜர்படுத்துமாறு கட்டளையிட்டது இந்தக் கட்டப்பஞ்சாயத்து. இதன் நோக்கம் அறிந்த தம்பதியினர், தாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட தெரிவித்து வர மறுத்துவிட்டனர். இதன் பிறகு அம்பு திவ்யா வின் தந்தை நாகராஜ் மீது பாய்கிறது. பெண் ணை உருப்படியாக வளர்க்கவில்லை என அவர் மீது சாடுகிறார்கள். கேவலமான வார்த் தைகளால் திட்டுகிறார்கள். சாதிப் பெருமை யை கெடுத்துவிட்டதாக புலம்புகிறார்கள். இத் தகைய சாதி வெறியர்களின் அவதூறுகளைப் பொறுக்க முடியாமல் நாகராஜ் தற்கொலை செய்து கொள்கிறார்.பிறகு நாகராஜ் மரணத்திற்கான பழியும் தலித்துகள் மீது சுமத்தப்படுகிறது. தலித் இளைஞன் திருமணம் செய்து கொண்டதா லும் தலித் மக்கள் துன்புறுத்தியதாலும் தான் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது சடலத்தை பிரதான சாலையில் வைத்து சாலை மறியல் நடத்துகின்றனர். சாதி உணர்வைத் தூண்டிவிட்டு வெறியாக மாற்றி 2000 பேர் திரட்டப்படுகின்றனர். கையில் உருட்டுக்கட்டைகளோடும், பெட்ரோல் பாட்டில்களோடும் திட்டமிட்டு தலித் குடி யிருப்புகளுக்குள் நுழைகின்றனர். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் தலித் இளை ஞர்கள் வேலை நிமித்தம் பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்குச் சென்ற நிலையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மட்டுமே கிராமங்களில் இருந்தனர். வெறி கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு அவர்கள் அஞ்சி உயிரைப் பாதுகாக்க அவசர அவசரமாக ஓடி வெளியேறினர். இதன் பிறகுதான் ஊர்களுக்குள் புகுந்து நரவேட்டை யாடியுள்ளது சாதி வெறிக் கும்பல்.


இன்னொரு சம்பவம்

2 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை என்ற கிராமத்தில் மாரிமுத்து என்ற தலித் இளைஞன் உயர்சாதிக் குடும் பத்தைச் சேர்ந்த அபிராமி மீது காதல் கொண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சாதிய சக்திகளுக்கு அஞ்சி சென்னையில் ஊராருக்குத் தெரியாமல் வாழ்ந்தனர். ஒரு குழந்தையும் பிறந்தது. இதனை மோப்பம் பிடித்த அபிராமியின் சகோதரன் நயவஞ்சக மாகப் பேசி அவர்களுக்கு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்து கிராமத்திற்கு வரவழைத்தான். நம்பிக்கையோடு ஊர் திரும்பினர் தம்பதியி னர். இந்நிலையில் தலித் இளைஞனிடம் மனம் குளிர பேசி வரவழைத்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று கண்ட துண்ட மாக வெட்டிப் போட்டனர். தலை, கை, கால் கள், ஆணுறுப்பு என ஒவ்வொன்றும் தனித் தனியாக வெட்டி எறியப்பட்டன. அபிராமியும் குழந்தையும் நிராதரவானதோடு அக்கிராம தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தப் பட்டனர். தஞ்சை நகர மக்களை உலுக்கிய படுகொலையாகும் அது.


சாதியமைப்பின் கேடயமா பெண்?


இக்காலத்தில் நாடு முழுவதிலும் தமிழகத் திலும் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இத்தகைய படுகொலைகள் நடக்கின்றன. இதனையொட்டி தலித் மக்கள் மீது பல தாக்கு தல் சம்பவங்களும் நடந்துள்ளன. மனித சமு தாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அநா கரீகச் சம்பவங்களாகும் இவை. இச்சம்பவங் களில் சாதி அடிமைத்தனம் மட்டுமல்ல, பெண், அடிமைத்தனமும் அடங்கியுள்ளது. ஆம். பெண் சாதியமைப்பின் கேடயமாக கரு தப்படுகிறாள். சாதியமைப்பை பாதுகாக்க வேண்டுமென்றால் பெண்கள் சாதி வரம்பு மீறி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மீறி திரு மணம் செய்தாலோ அல்லது அதை அனுமதித் தாலோ சூரக்கோட்டை, நத்தம், கொண்டாம் பட்டி, அண்ணாநகர் சம்பவங்களும், ஏன் நாக ராஜ் மரணம் போன்ற சம்பவங்களும் நடந் தேறும் என்பதுதான் சாதி வெறியர்களும், சாதி யமைப்புகளும் உணர்த்தும் செய்தியாகும்.

சாதியமைப்புகளின் சவால்

இச்சம்பவங்களுக்குப் பின்னணியாக தமிழகத்தில் சாதியமைப்புகள் அரங்கேற்றிய சில சம்பவங்களைக் கவனிக்க வேண்டும். பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு, சாதி மீறி திருமணம் செய்து கொள் வதற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல் விடுத் தார். பத்திரிகைகளும் இதனைச் செய்தியாக வெளியிட்டன. இதைபோல கொங்கு வேளா ளக் கவுண்டர் பேரவை திருப்பூரில் கூடி, சாதி, மத கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும், அப்பேரவையில் கொங்குச் சட்டம் ஒன்றை இயற்றிக் கொண்டதாகவும் அதன்படிதான் கொங்கு வேளாளர்கள் செயல்பட வேண்டு மென்றும், இதோடு பெண்களுக்கு சொத்துரி மை வழங்கக்கூடாது எனவும் தீர்மானம் நிறை வேற்றியதாகவும் பத்திரிகைச் செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு சட்டத்திற்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய சக்திகள் மீது அரசு நிர்வாகமும், காவல்துறை யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்திற்குரியது. இக்காலத்தில் சில சாதியமைப்புகள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வாபஸ் பெறும் படியும் தீர்மானம் நிறைவேற்றி தலித்து களுக்கு எதிரான தங்களது நிலைபாட்டை பறைசாற்றிக் கொண்டன. 


சாதிய வன்மங்களை சவக்குழிக்கு அனுப்புவோம்

மறுபுறம் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காக மதுரையிலும், பரமக்குடி யிலும் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கணக்கு தீர்ப்பது என்பது சாதிய வன்மங்களின் வெளிப் பாடாகும். மிருகத்தனமான இத்தகைய தாக்கு தல்கள் வன்மையான கண்டனத்திற்குரி யவை. சாதிய பெருமை பேசுவதும், சாதிய வன்மங்களைக் காட்டுவதும் தமிழகத்தில் தொடர்கதையாய் நிகழ்வது வேதனைக் குரியது. சாதிய வன்மங்களுக்கு முடிவு கட்ட வும், ஜனநாயகச் சூழலைப் பலப்படுத்தவும் இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் திட்டமிட்டு செயல்படுவது அவசியமாகும்.


திராவிடக் கட்சிகள்
தமிழகத்தில் 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் மாறி, மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன. சாதிய ஒடுக்கு முறைகளுக்கு இவை முடிவு கட்டத் தவறியுள் ளன. குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகவும், வாக்கு வங்கி நோக்கத்திற்காகவும் அவ்வப் போது சாதிய உணர்வுகளையும், சாதிய அமைப்பு களையும் இவை பயன்படுத்தி வந்துள்ளன. பெரியாரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டே பெரியாரின் சமூக நீதிக் கருத்துக்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். காங்கிரஸ் உள் ளிட்ட இதர முதலாளித்துவக் கட்சிகளும் சாதி உணர்வையும் பயன்படுத்துவதில் தாங் கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையே அனுபவம் உறுதிப்படுத்துகிறது.


காவல்துறை செயல்பாடு

சாதிய சக்திகள் சட்டத்திற்கு சவால்விடும் சம்பவங்களில் காவல்துறையின் நடவடிக் கைகள் ஏற்க முடியாதவையாகும். நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகரில் சுமார் 5 மணி நேரம் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் எவ்வித தலையீடும் செய்யவில்லை. தங் களுக்குத் தெரியாது என்பதையோ, போதுமான காவலர்கள் இல்லை என்பதையோ நம்பு வதற்கு இல்லை. காவல்துறையை பலப் படுத் தவும், நவீனமயமாக்கவும் ஏராளமான பணம் செலவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரி வித்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்ட சம் பவங்கள் வெட்கக் கேடானவையாகும். காவல்துறை அதிகாரிகள் சிலரும் சாதிய உணர்வுடன் செயல்பட்டுள்ளனர் என்ற கருத் தை புறக்கணிக்க முடியாது. தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பளார் மதுரை மாவட்டப் பணிக்கு சென்றுள்ள பின்னணி யில் தலித் குடியிருப்புகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. அவர் தர்மபுரி திரும்பிய பிறகுதான் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்துக் குற்றவாளி களும் கைது செய்யப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுவது அவசியமாகும். இதோடு தாக்குதல் நடைபெற்ற போது செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக் கை எடுப்பது அவசியமாகும். எதிர் காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க இவை இன்றியமையாத தேவையாகும்.


தமிழக அரசின் அணுகுமுறையும் - கடமைகளும்


தலித் மக்கள் அனைத்தையும் இழந்து நிற் கின்றனர். குடும்பம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு போதுமான தல்ல. அவர்களது இழப்பிற்கு முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வீடுகள் முழுவதும் சேத மடைந்த பின்னணியில் தலித் மக்களின் வீடு களை புனரமைத்துத் தர வேண்டும். மாணவ - மாணவிகள், இளைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள், ரேசன் கார்டுகள், உடைமை களுக்கான ஆவணங்கள் அனைத்தும் நெருப் பில் பொசுக்கப்பட்டுள்ளன. இவை அனைத் தும் காலதாமதமின்றி திரும்ப வழங்கிட வேண் டும். (இழப்புகள் மற்றும் ஆவணங்கள் அழிப்பு குறித்து நாம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் தெரிவித்த அடிப்படையில் சிறப்பு முகாம் நடத்தி மக்களிடம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன)
வர்க்கமாக அணிதிரள்வோம்!


பாதிக்கப்பட்ட தலித்துகள் அனைவரும் உழைப்பாளிகள். சமூக ரீதியாகவும், பொருளா தார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களாக தலித் துகள் உள்ளனர் என்பதை இச்சம்பவமும் உறுதிப்படுத்துகிறது. எனவே இவர்களின் பிரச்சனை என்பது உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனையேயாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் சாதிய சக்திகளின் தாக்குதல் களுக்கு எதிராக அனைத்து உழைப்பாளி மக்க ளும் அணிதிரள்வது உழைக்கும் வர்க்க ஒற்று மைக்கு அவசியமானதாகும். தர்மபுரி மாவட்டத் தில் தலித்துகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்த கணிசமான மக்களும் உழைப்பாளி மக்களே ஆவர். இரு தரப்பின ரின் பொருளாதார நிலையும் பின் தங்கிய தாகவே உள்ளது. வர்க்கம் என்ற முறை யில் இவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர் கள். ஆனால் சாதிய சக்திகள் உள்ளே நுழைந்து, இவர்களுக்குள் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்த வர் என்றும் பிணக்குகளை ஏற்படுத்தி வரு கின்றன. சாதிய ஒடுக்குமுறைகளை ஏவிவிடு கின்றன. இருதரப்பு உழைப்பாளி மக்களும் ஜனநாயக சக்திகளும் இதற்கு இடம் தரக் கூடாது. சாதியமைப்புகளையும் சாதியத் தலைவர்களையும் புறந்தள்ளி, மக்கள் ஒற்று மையை நிலைநாட்ட வேண்டும். தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் முழு வதற்கும் இது பொருந்தக் கூடியதாகும். சமூக நல்லிணக்கத்திற்கு மட்டுமல்ல, உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் இது முன்தேவையாகும்.

நன்றி
தீக்திர்  15.11.2012

Wednesday, November 14, 2012

நியாயம் கேட்டு ஒரு ஆர்ப்பாட்டம்





ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆதிக்க சக்திகளால் மிகவும் மோசமான முறையில்  தாக்கப்பட்ட தர்மபுரி நத்தம் காலனி தலித் மக்களுக்கு நியாயம் வழங்கவும் வன்முறையாளர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி,
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 16.11.2012 வெள்ளிக் கிழமை, மாலை 5 மணி
இடம் : அண்ணா கலை அரங்கம் அருகில், வேலூர்

தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு பையனும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.  ஆதிக்க சக்திகளைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்துக்காரர்களால் இந்த காதல் ஜோடியை பிரிக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்க சக்திகள் நத்தம் காலனியில் உள்ள 268 தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி, தானியங்கள், மற்ற உடமைகள், வாகனங்கள், பள்ளிக்குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், ரேஷன் கார்டுகள் ஆகியவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர்களது பணம், நகைகள், ஆடு, மாடுகள், ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

தீண்டாமை வன் கொடுமைச் செயலான இந்த அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க,
பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்க,
அவர்கள் தங்களது இருப்பிடங்களில் மீண்டும் வாழ்ந்திட பாதுகாப்பு வழங்கிட வற்புறுத்தி,
இது போன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காமல், அமைதியை உருவாக்கிட 
தமிழக அரசினை வற்புறுத்தி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறுகின்ற
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பீர், உரிமைக்குரல் எழுப்பிடுவீர்
தலைமை
தோழர் வி.குபேந்திரன், மாவட்டத் தலைவர், த.தீ.ஒ.மு
கண்டன உரை

ஜி.லதா,                       பி.சக்திவேல்,               சி.ஞானசேகரன்
மாநில துணைத்தலைவர்   மாவட்டச் செயலாளர்     பொருளாளர்

எஸ்.ராமன், A.I.I.E.A   எஸ்.டி.சங்கரி, A.I.D.W.A. எம்.காசி, CITU

வி.ஈ.ஏகநாதீஸ்வரன், துணைத்தலைவர்    எல்.சி.மணி, துணைத் தலைவர்,

அருள் ஸ்ரீனிவாசன், துணைத்தலைவர்,     சி.சரவணராஜ், TNGEA, 

கே.சாமிநாதன், வி.தொ.ச,                    எம்.சுப்ரமணியன், TNMSRA

முகில், தமுஎகச,        எம்.கோவிந்தராஜ், COTEE,     சி.சரவணன், TNPTF

சி.பலராமன், SEWA, BSNL    எம்.சிட்டிபாபு, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை,
ஐ.ஜார்ஜ், CMCEU,     எம்.ஞானவேல்,      DYFI,        தி.வ.தனுஷ், SFI,
கே.ஏ.வரதராஜன், தமிழ்நாடு அருந்ததியர் சங்கம்,

அனைவரும் அவசியம் பங்கேற்பீர், ஆதரவு தாரீர்
இவண்         தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
                            வேலூர் மாவட்டக் குழு