Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Tuesday, February 24, 2026

வம்புக்காக அலையும் திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர்

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை நீதிபதி பதவியிலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள முன்மொழிவு மிக மிக நியாயம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.


ஆன்மீக குருக்களை கடவுளின் அம்சமாக பார்ப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்,  மூடர்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்று அவர் சொல்லியுள்ளார்.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆச்சாராம் பாபு, ராம்ரஹீம் சிங், சீசீ.ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான போலிகளை ஆன்மீகக் குருக்களாகவும் கடவுளின் அம்சமமாக கருதினால்தான் புத்திசாலி, உத்தமன், நாகரீக மனிதன் என்று இவர் சொல்வாரானால் அதை விட மூடராகவோ காட்டுமிராண்டியாகவோ, அயோக்கியனாக இருப்பதே மேல்.

தமிழ்நாட்டு மக்களை வெறுப்பேற்றி இவர் மீது மோசமாக பேச வைத்து அனுதாபம் தேட நினைக்கிறார். கலவரத்தை தூண்டும் எண்ணம் கூட இருக்கலாம்.

உச்ச நீதிமன்றம் இவர் மீது தன்னியல்பாக (SOU MOTU) நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இல்லை என்பதால்தான் இவருக்கு தைரியம். 


பிகு: கடவுளின் அம்சமான ஆன்மீகக் குருக்கள் பற்றி கூடுதலாக அறிய, அவர்களின் நிழல் உலகம் பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் . .

Friday, January 30, 2026

மகாத்மாவை மறவோம். கோட்சேவையும்

 


இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சியால், கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி கோட்சேவின் தோட்டாக்களுக்கு மகாத்மா காந்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த நாள் இன்று.

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளின் கையில் ஆட்சி இருக்கும் கொழுப்பில் இன்று ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது.

மகாத்மாவை கொச்சைப்படுத்தும் பதிவுகள் மட்டுமல்ல அது, கொலைகாரன் கோட்சேவை தேசப்பிதா என்று வர்ணிக்கும் அளவிற்கு எழுதப்பட்ட பதிவுகள் அது.

அவர்கள் விரும்பியபடி இந்தியா 'ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்" என்று மாறாமல் இன்னும் பன்முகத் தன்மையோடு நீடிப்பதற்கான அடித்தளம் இட்டவர்கள் காந்தியும் நேருவும் என்பதால்தான் அவர்கள் இறந்து எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் வெறுக்கிறார்கள்.

இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் மத சார்பின்மையையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்போம். அதன் மூலம் மகாத்மாவையும் மறக்காமல் இருப்போம். கோட்சே ஒரு கடைந்தெடுத்த கயவன் என்பதை அம்பலப்படுத்தும் ஒரு நூலின் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

கோட்சே கூட்டத்தின் சூழ்ச்சியும் சதியும்.

 



 

நூல் அறிமுகம்

 

நூல்                                                     : நாதுராம் கோட்சே –    உருவான வரலாறும்

                                                                இந்தியா குறித்த அவனது பார்வையும்

 

ஆசிரியர்                                          : திரேந்திர கே ஜா

தமிழில்                                             :  தமிழில் இ.பா.சிந்தன்

வெளியீடு                                         : எதிர் வெளியீடு

                                                                பொள்ளாச்சி

விலை                                                : ரூபாய் 500.00

 

 

ஆன்மீக அரசியல், நிழல் ராணுவங்கள் என்று சங் பரிவார அமைப்புக்களை, அவற்றின் சதிகளை செயல்பாடுகளை அம்பலப் படுத்திய நூல்களை எழுதிய திரேந்திர.கே.ஜா அவர்களின் நூல். முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் கடின உழைப்பால் நம்மிடம் தமிழில் பேசுகிறது.

 

இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி “சூழ்ச்சி” என்றும் இரண்டாம் பகுதி “சதி”  என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

முதல் பகுதியின் பக்கங்களை தள்ளுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதற்கு நூலாசிரியரோ, மொழி பெயர்ப்பாளரோ காரணம் அல்ல. ஏனென்றால் முதல் பகுதி கோட்சேவின் ஆரம்ப கால வாழ்வை சொல்கிறது. கோட்சேவின் மந்தம் நூலிலும் எதிரொலிக்கிறது.  எந்த ஒரு வேலையையும் செய்ய உடல் வணங்காத, ஆனால் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதனாகவே கோட்சே இருந்திருக்கிறான்.

 

மகாத்மா காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டவனின் வாழ்க்கை சாவர்க்கரின் சகவாசத்தால் திசை மாறுகிறது.  மதவெறி மனதில் ஊறுகிறது. மகாராஷ்டிராவின் பேஷ்வாக்களைப் போல இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கரின் இந்து மகா சபை ஆகிய இரு அமைப்புக்களிலும் செயல்படுகிறான்.

 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் போல காட்சியளித்தாலும் இரண்டின் நோக்கங்களும் ஒன்றே என்பதையும் இந்துக்கள் மட்டுமே இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும் என்பதையும் இதர மதச் சிறுபான்மையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரண்டு அமைப்பிறகும் வேறுபாடுகள் கிடையாது என்பதை நூல் விரிவாக பேசுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பாடப்படும் பாடலோடுதான் கோட்சே இந்து மகா சபை கூட்டத்தை துவக்குவான் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களையும் நடத்துவான் என்பதும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவர் இந்து மகா சபையின் துணைத்தலைவர் என்பதும் இரண்டு அமைப்புக்களும் வேறல்ல என்பதை உணர்த்தும்.

 

இந்து ராஜ்ஜியம் அமைவதற்கு காந்திதான் தடையாக இருப்பார் என்று கோட்சே நீண்ட நாட்களாகவே கருதி வந்தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் நூல், காந்தியே தற்கொலை செய்து கொள் என்று மகாத்மா காந்தி நடத்திய ஒரு போராட்டத்தின் போது கூச்சலிட்டான் என்பதையும் சொல்கிறது.

 

கோட்சேவைப் பற்றி மட்டும் இந்த நூல் பேசவில்லை, கோட்சேவுடன் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாராயன் ஆப்தே, இருவருக்குளான நட்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது. கோட்சே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானவன் என்றும் நாராயண் ஆப்தே பெண்களை வஞ்சிப்பவன் என்பதும் தெரிகிறது. சாவர்க்கரின் அரசியல் (மன்னிப்பு உட்பட) நூல் விவரிக்கிறது.  கோட்சே பத்திரிக்கையாளர் அவதாரமெடுத்து நச்சு பரப்பியதையும் நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அதிலே பிரச்சினை வந்த போது சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்கவும் அபராதம் செலுத்தவும் அவன் தயங்கவில்லை

 

நூலின் இரண்டாம் பகுதி ஒரு துப்பறியும் நூலுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத வெறி கொண்டலைந்த கோட்சே ஆப்தே கூட்டாளிகள், ஜின்னாவை கொல்ல வேண்டும், பாகிஸ்தான் செல்லும் ரயிலை தகர்க்க வேண்டுமென்று திட்டமிட்டு நிதி சேகரிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியவில்லை அதனால் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக ஆட்களை சேர்க்கிறார்கள்.

 

ஆப்தே இத்திட்டத்தில் தீவிரமாக இருக்க கோட்சேவோ பட்டும் படாமல்தான் இருக்கிறான். சாவர்க்கரை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்படுகின்றனர். மதன் லால் பக்வா என்பவனை அவனுக்கு தெரியாமலேயே காந்தியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசி நேரத்தில் அவன் பயந்து போய் பின் வாங்க, கையெறி குண்டை அவன் வீசினால்  அந்த குழப்பத்தில் மற்றவர்கள் சுட்டு விடுவார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி 20 அன்று பக்வா குண்டை வீச, மற்றவர்கள் எதுவும் செய்யாமல் முயற்சி தோற்றுப் போகிறது. அவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான்.

 

அதன் பின்பு மகாத்மா காந்தியை சுடுவதென்று கோட்சே முடிவு செய்கிறான். அந்த கொடுமையையும் நிகழ்த்துகிறான். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களின் வழக்கில் மக்களின் ஆதரவு கிடைத்தது போல தனக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைத்து பெரிய ஆளாகி விடலாம் என்பதுதான் கோட்சேவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை. மக்களின் எதிர்ப்பு மட்டுமே கிடைத்தது.

 

அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னதெல்லாம் பொய் என்பது பின்பு நடைபெற்ற சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமானது என்பதை நூல் பதிவு செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது முன்பே தெரியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் ஒரு கூட்டத்தில் பேசிய போது பூடகமாக தெரிவித்துள்ளார் என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பட்டியலையோ வரவு செலவு கணக்குகளையோ பராமரிக்காமல் இருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்குத்தான் என்கிறது நூல்.  கோட்சே வைத்திருந்த கணக்கு நோட்டு கிடைத்ததால் அவனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டனர் என்பதோடு இணைத்துப் பாருங்கள்.

 

காந்தியின் கொலை வழக்கின் போது  யாரோ ஆங்கிலத்தில் தயாரித்து கொடுத்த உரையைத்தான் கோட்சே படித்தான் என்றும் அதன் மூலம் தன்னை தியாகியாக காண்பித்துக் கொள்ள முயன்றான் என்பதையும் நூல் உணர்த்துகிறது.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு கூட கடைசியாக கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடலை கோட்சே பாடியிருக்கிறான். அகண்ட பாரதம் உருவான பின்பே சிந்து நதியில் தன் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கோட்சே சொன்னதால் அது இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பரப்பட்டுள்ள செய்தியும் ஒரு கட்டுக்கதையே என்பதை நூல் சொல்கிறது. எப்படி? நூலை படித்து விடுங்களேன்.

 

இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளின் தோற்றத்தையும் அது எப்படி மகாத்மா காந்தியின் கொலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொல்லவே கோட்சே காந்தியை கொலை செய்தான் என்பதையும் மிகவும் விளக்கமாக சொல்கிறது இந்நூல்.  மொழியாக்கம் என்ற உணர்வே வராத அளவிற்கு சிறப்பாக தமிழில் தந்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் கருத்துக்களை முடக்கும் ஆட்சியாளர்கள் இருப்பினும் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

பின் குறிப்பு : திருமணம் ஆனவன் என்பதை மறைத்து நாராயண் ஆப்தேவால் ஏமாற்றப்பட்ட பெண் மனோரமா என்ற பெண்ணும் மதன்லால் பக்வாவை மிகவும் நேசித்த செவாந்தி என்ற பெண்ணும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளை உருவாக்க வேண்டுமென்ற தூண்டுதல் வருகிறது.

 

Saturday, January 3, 2026

கியூபாவை ஏன் ஆதரிக்க வேண்டும்?


 

நூல் அறிமுகம்

 

நூல் :                             நாMMMம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும் ?

ஆசிரியர்                          இ.பா.சிந்தன்

வெளியீடு                         பாரதி புத்தகாலயம்,

                                  சென்னை – 18

விலை                            ரூபாய் 95.00

 

உங்களுடைய ஜி-பே கணக்கு முடங்கினால்? வாட்ஸப் செயல்படாமல் போனால்? கூகிள் கூட மௌனமாகி விட்டால்? உங்களால் இணையத்தின் எந்த வசதியையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானால்? காரணம் சொல்லாமல் வேலையிலிருந்து துரத்தப்பட்டால்? உங்கள் நிறுவனம் உற்பத்தி செய்கிற பொருட்களுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டால்? இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால்? அதனால் மற்ற நாடுகளும் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால்?

 

நினைக்கவே பதற்றமாக இருக்கிறதல்லவா? இந்த நிலையை கியூபா அறுபதாண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி கியூபா சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி அறிய நம்மை தயார்படுத்துகிறது இந்த நூல்.

 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் கியூபா இன்று சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு முன்பாக கியூப நாட்டின் வரலாற்றையும் பல நூற்றாண்டுகளாக கியூப மக்கள் சந்தித்து வரும் இன்னல்களைப் பற்றியும் அந்த நாட்டில் வசந்த காலம் வந்தது பற்றியும் விரிவாக பேசுகிற நூல் இது.

 

இயற்கை எழில் கொஞ்சுகிற, மூன்று பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த கியூபாவில் 1492 ம் ஆண்டு ஒரு கப்பல் வருகிறது. அந்த கப்பல் ஸ்பெயினில் இருந்து கொலம்பஸை சுமந்து கொண்டு வந்தது. கியூப மண்ணில் கரும்பு விரைவாகவும் சுவையாகவும் வளரும் என்ற உண்மையை கொலம்பஸ் அறிந்து கொண்டதுதான் கியூப மக்களுக்கு உருவான பிரச்சினைகளின் வேர். ஸ்பெயின் முதலாளிகள் சர்க்கரை உற்பத்தி செய்யவும் கியூபாவின் இதர முக்கியமான உற்பத்தி பொருட்களான சுருட்டு மற்றும் ரம் தயாரிக்கவும் கியூபா ஸ்பெயினுடைய வேட்டைக்காடாக மாறுகிறது. அந்த நாட்டு மக்கள் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

 

1511 லியே விடுதலைக்கான போராட்டம் அந்துவே என்பவரால் தொடங்கப்பட்டு அது நசுக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும் பல்வேறு காலகட்டங்களில் ஸ்பெயின் ஆதிக்கத்திற்கு எதிராக நிக்கோலஸ் மொராலஸ், ஹோஸே அண்டோணியோ, கார்லோத்தே, NHநார்சிசோ லோபஸ் ஆகியோர் போராடியுள்ளனர். ஸ்பெயின் ஆதிக்கத்திற்கு எதிராக பல தென்னமிரிக்க நாடுகளில் போராடி வெற்றி கண்ட சைமன் பொலிவார் இவர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்துள்ளார்.

 

1868 ல் தான் கியூபாவின் விடுதலைப் போராட்டம் என்பது விரிவாக நடந்துள்ளது. மானுவல் செஸ்படஸ் என்ற சர்க்கரை முதலாளி, தன் ஆலையில் அடிமை முறையை ஒழிப்பதாக அறிவித்து ஸ்பெயினுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நடத்த முறையான ராணுவத்தை அமைத்து போராடுகிறார். பத்தாண்டுகள் நடந்த போராட்டத்தின் விளைவாக கியூபாவில் இருந்த அடிமை முறை ஒழிக்கப்படுகிறது. மானுவல் செஸ்படஸ்தான் கியூபாவின் தந்தையாக பிடல் காலத்தில் மதிக்கப்படுகிறார்.

 

அதன் பின்பு ஹோஸே மார்த்தி, ஒரு படையை திரட்டி போராடுகின்றார். மக்களின் எழுச்சிக்கு முன்பு ஸ்பெயின் தடுமாறுகிறது. கியூபா விடுதலையின் வெற்றிக் கோட்டை நெருங்குகிற நேரம் கியூப எல்லையில் நிறுத்தப் பட்ட மூன்று அமெரிக்க கப்பல்கள் தகர்க்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா கியூபாவிற்குள் நுழைகிறது.

 

அமெரிக்கா கியூபாவை எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண்டது என்பதையும் அமெரிக்க ஆதரவு கியூப ஜனாதிபதிகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக எப்படி செயல்பட்டு தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என்பதை அடுத்த அத்தியாயங்கள் விளக்கும். அமெரிக்க ஆதிக்கத்தை வீழ்த்துவேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று அமெரிக்க அடிமையாக செயல்பட்ட பாடிஸ்டா ஆட்சியின் அவலங்களுக்கு எதிராக தோழர் பிடல் கேஸ்ட்ரோ தலைமையில் போராடத் தொடங்குகிறார்கள். அவர்களின் முதல் தாக்குதல் முயற்சி தோற்றுப் போய் நீதிமன்றத்தின் முன்பாக பிடல் நிறுத்தப்படுகிறார். (தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து அவர் ஆற்றிய உரை “வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய, எழுச்சியும் உற்சாகமும் தரும் நூல் அது), பிடல் மீண்டும் படை திரட்டுகிறார். உலக இளைஞர்களுக்கெல்லாம் இன்றைக்கும் ஆதர்ஸமாக திகழும் சே அவருடன் கை கோர்க்கிறார். பல முனைகளில் போர் நடக்கிறது. பாடிஸ்டா அமெரிக்காவிற்கு ஓடுகிறார். சென்ற முறை கைதியாக வந்த தோழர் பிடல் கேஸ்ட்ரோ இம்முறை 1959ம் வருடம் ஜனவரி எட்டாம் தேதியன்று வெற்றி வீரராக கியூபத் தலைநகர் ஹவானாவிற்குள் நுழைகிறார்.

 

“ஒரு புதிய தேசத்தின் முகம் என்ற அத்தியாயம் கியூபாவின் புரட்சிகர அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை விளக்குகிறது. அன்னிய நாட்டு முதலாளிகள் சொத்துக்கள் தேச உடமையாக்கப்படுகின்றன. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கறுப்பின மக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டு சமத்துவம் மலர்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்துள்ளவர்களிடமிருந்து உபரி வீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன, கல்விக்கும் எழுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல வீரர்கள் உருவாகின்றனர். சுகாதாரத்திற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை மிகச்சிறந்த மருத்துவர்களையும் உருவாக்குகிறது. பல விதமான வைரஸ்களை அமெரிக்கா பரப்பி நோய்களை பரவச் செய்கையில் அவற்றை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி பெருகிறது. கொரோனா சமயத்தில் முகக் கவசமான மாஸ்க் கூட கிடைக்காத சூழலில் மூன்று தடுப்பூசிகளை உருவாக்கி வெனிசுலா, வியட்னாம் போன்ற நாடுகளுக்கு அனுப்பியது என்பது ஒரு சாதனை.

 

இது கியூபாவின் சாதனைப் பக்கம் என்றால் வேதனைப் பக்கம் மிகுந்த வலி நிறைந்தது. கியூபப் புரட்சி அரசு உருவான 1959 ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐசனோவர் தொடங்கி அவருக்கு பின் வந்த கென்னடி முதல் இன்றைய ட்ரம்ப் வரை அந்த அரசை வீழ்த்த முயற்சித்துத்தான் வருகின்றனர். பிடலை கொல்ல தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் கியூபாவின் வாழ்வாதாரத்தை அழிக்க பொருளாதாரத் தடைகள் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தனர். புரட்சிக்கு முன்பு அளித்திருந்த 30  லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியில் 7 லட்சம் டன்னை குறைத்தனர். அதனை இறக்குமதி செய்ய சோவியத் யூனியன் வந்ததால் ஒட்டு மொத்த இறக்குமதியையும் ரத்து செய்தனர். சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு சர்க்கரை உற்பத்தி குறைந்து தற்போது தன்னுடைய தேவைக்கே பிற நாடுகளை நம்பும் நிலையில் நின்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலில் கியூபாவை இணைத்து மற்ற நாடுகளிடமிருந்து கியூபாவை அன்னியப் படுத்தியுள்ளது. கியூபாவிற்கு பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமெரிக்க துறைமுகங்களில் அனுமதிக்கப்படாது என்ற உத்தரவு கியூபாவிற்கு அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் நெருக்கடியை ஏற்படுத்தியது. கியூபாவிற்கு இடைஞ்சல் தரவே ஹெல்ம்ஸ்-பர்ட்டன் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டமே பல தடைகளை கொடுத்துள்ளது.

 

சோஷலிசக் கொள்கையை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக சென்றால் கியூபா தப்பி பிழைக்குமே என்று நம் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட அருகாமை நாடுகளான ஹெய்தி, டொமினிக் குடியரசு, போர்ட்டோ ரிக்கோ போன்ற நாடுகளின் அவல நிலையை அடுத்த அத்தியாயம் விளக்குகிறது.

 

கியூபாவிற்கு ஆதரவாக நாம் ஏன் நிற்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய ஆசிரியர் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் கியூபாவிற்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கியூப நாட்டின் வரலாற்றோடு இன்றைய நிலைமைகளையும் இணைத்து நல்லதொரு நூலை அளித்த தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலகக் கூட்டம் கியூப மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட ஒவ்வொரு தோழரும் ரூபாய் 200.00 அளிக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அளித்த அறைகூவல் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நாம் இன்னும் கூட அதிகமான தொகையை அளித்திருக்கலாம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிற நூல் இது.

 

 

வேலூர் சுரா


"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது. 


Friday, January 2, 2026

"நானே மகத்தானவன்"

 


நூல் அறிமுகம்

 

நூல் :                             நானே மகத்தானவன்

ஆசிரியர்                          அ.பாக்கியம்

வெளியீடு                         தூவல் கிரியேஷன்ஸ்

                                  சென்னை – 28

விலை                            ரூபாய் 300.00

 

உலகின் மகத்தான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் போராட்ட வாழ்வை விளக்குகிற முக்கியமான நூல் இது. முகமது அலி பற்றி நாம் அறிந்தவற்றை அறியாத செய்திகள்தான் அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது.

 

முகமது அலியின் வாழ்க்கையை பேசும் நூலாக இருந்தாலும் பதினோறாவது அத்தியாயத்தில்தான் முகமது அலியே வருகின்றார். அப்படியென்றால் முதல் பத்து அத்தியாயங்கள் எதைப் பேசியது? அமெரிக்காவில் நிலவிய நிற வெறியின் கொடுமைகளை பேசியது. கருப்பின மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கி அவர்களின் உரிமைகளை முடக்கிய காலத்தை விவரித்தது. கல்வி மறுக்கப்பட்ட கண்ணீர் கதையை சொன்னது. அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு ஜனாதிபதியான ஜான்சன் ஜிம் க்ரோ சட்டம் என்ற சட்டத்தின் மூலம் கருப்பின மக்களை சித்திரவதைக்குள்ளாக்கிய ஆட்சியாளர்களின் கொடூரங்களை விவரித்தது.

 

வெள்ளை இன இளம் பெண்ணோடு பேசிய குற்றத்திற்காக எம்மெட்டில் என்ற 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட அராஜகத்தையும் அந்த கொலை கருப்பின மக்களின் கோபத்தை தூண்டியதையும் அந்த சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதையும் அந்த சிறுவனின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை வெள்ளையின மக்கள் அடித்து நொறுக்கியதையும் அது மீண்டும் அமைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தகர்க்கப்பட்ட கொடுமையையும் இறுதியில் 230 கிலோ இரும்பில் அமைக்கப்பட்டதையும் சொல்லும் அத்தியாயம் அமெரிக்காவில் நிலவிய நிற வெறிக்கான முக்கியமான சான்று.

 

தற்காப்புக் கலையாக குத்துச்சண்டையை கருப்பின மக்கள் பயின்று தேர்ந்தாலும் வெள்ளை நிறத்தவரோடு அவர்களால் மோத முடியாத தடையைச் சொன்னது. பின்னொரு நாளில் அதற்கான அனுமதி கிடைத்த போது வெள்ளையின குத்துச் சண்டை வீரர்களை முறியடித்த ஜேக் ஜாக்ஸன், ஜோ லூயிஸ் ஆகியவர்களின் வெற்றி எப்படி கருப்பின மக்களுக்கு எழுச்சி அளித்தது என்பதை விவரித்தது.

 

இச்சூழலில்தான் கேஸியஸ் கிளே என்ற இளம் கருப்பின வீரர் குத்துச்சண்டை களத்திற்குள் நுழைகிறார். கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அமெரிக்கா முழுதிலும் அறியப்படுகிறார். 1960 ல் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்கிறார். நாடெங்கிலும் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாடு திரும்பும் அவருக்கு மிஞ்சியது என்னமோ அதிர்ச்சிதான். லூயிஸ் வில்லி என்ற நகரில் உள்ள உணவு விடுதிக்கு நண்பர்களோடு சென்ற கேஸியஸ் கிளேவிற்கு அங்கு கருப்பினத்தவர் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட அதுவரையில் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கத்தை ஓகியோ ஆற்றில் வீசி எறிகிறார். நிற வெறியின் கொடுமையை உணர்ந்து அதற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தும் கொள்கிறார். அமெரிக்காவின் முக்கிய போராளியான மால்கம் எக்ஸ் உடன் இணைகிறார்.

 

இஸ்லாம் தேசம் என்ற அமைப்புடன் இணைந்து கொள்கிறார். மதம் மாறி முகமது அலி என்று பெயரை மாற்றிக் கொள்கிறார். கேஸியஸ் கிளே என்ற பெயர் அவரது பெற்றோர்களை அடிமைகளாக வைத்திருந்தவர் பெயர் என்பது பெயர் மாற்றத்திற்கான காரணம். வெள்ளியின ஆணவத்தோடு அவரை மீண்டும் மீண்டும் கேஸியஸ் கிளே என்று அழைத்து அவமானப்படுத்த முயன்ற ப்ளாய்ட் பேட்டர்ஸனோடு நடந்த போட்டியை முகமது அலி கையாண்ட விதம் சிறப்பானது. “இப்போது என் பெயரைச் சொல்” என்று ஒவ்வொரு குத்தின் போதும் ஆக்ரோஷமாக முழங்கினார். அவருக்கு பாடம் கற்பிக்கவே அந்த போட்டியை பல சுற்றுக்கள் வரை எடுத்துச் சென்றார்.

 

களத்தில் ஆக்ரோஷ முகம் காண்பிக்கு முகமது அலியின் இன்னொரு முகம் அவரின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவது. மனித நேயத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் அவர்.

 

கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின் படி வியட்னாம் நாட்டிற்கு எதிரான போரில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். என்னை நீக்ரோ என்றழைக்காத மக்களுக்காக நான் ஏன் போரிட வேண்டும் என்று கேட்ட அவர் வெள்ளையின் வெறி பிடித்த எஜமானர்களுக்காக வெள்ளை நிறமல்லாத மக்கள் வாழும் நாட்டை இருளடையச் செய்ய பத்தாயிரம் மைல்கள் கடந்து நான் செல்ல மாட்டேன் என்று அவர் உறுதியாக இருந்ததால் குத்துச்சண்டை போடுவதற்கான அவரது உரிமம்  ரத்து செய்யப்பட உச்ச நீதிமன்றம் வரை சென்று அதனை மீட்டெடுத்தார். ஆப்பிரிக்க நாடான கானாவிற்குச் சென்று அங்குள்ள மக்களிடன் தன் வேர்களைத் தேடியே இங்கே வந்ததாக பேசியுள்ளார்.

 

அமெரிக்க – இராக் போரின் போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்க அமெரிக்க அரசு இவரை பயன்படுத்தியது. சதாம் ஹூசைனோடு முகமது அலி பேசி அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால் பாலஸ்தீன கைதிகளை மீட்க இஸ்ரேல் வந்த முகமது அலியை சந்திக்கவே இஸ்ரேல் அரசு மறுத்து விட்டது. ஜியோனிஸக் கொள்கைகளுக்கு எதிராக முகமது அலி பேசியதே காரணம்.

 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை இருந்த போதும் கியூபாவிற்கு ஏராளமாக உதவியுள்ளார். ஐநா சபையின் யுனிசெப் அனைப்பிற்கும் உதவியுள்ளார். அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார். கியூபா, சோவியத்யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளார், இந்தியாவிற்கும் வந்துள்ளார்.

 

தடை விதிக்கப்படுவதற்கு முன்பு பங்கேற்ற 31 பெரிய போட்டிகளில் அனைத்திலும் வென்றதற்காகவும் அதன் பின்பு கலந்து கொண்ட 29 போட்டிகளில் 24ல் வென்றதால் மட்டும் முகமது அலி, மகத்தானவர் என்று மக்கள் மனதில் இடம் பெறவில்லை. அவர் ஆற்றிய மனித நேயப் பணிகளாலும்தான். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகத்தான மனிதனின் முழு பரிமாணங்களை அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு இந்த நூல்.

 

நிற வெறிக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் இறுதி அத்தியாயத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா நிகழ்த்திய நிற வெறிக் கொடுமைகளை முழுமையாக அறிந்து கொள்ள உதவிய நூலாசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

 

வேலூர் சுரா

"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது. 



Wednesday, December 31, 2025

சங்கிகள் வெறுக்கும் "ஆலம்கிர் ஔரங்கசீப்"

 

நூல் அறிமுகம்

 

நூல்                          : ஆலம்கிர் ஔரங்கசீப்

ஆசிரியர்               : புலியூர் முருகேசன்

வெளியீடு              : குறி வெளியீடு,

                                    வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்

விலை                    : ரூபாய் 300.00

 

பிப்ரவரி மாத்த்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கலவரம் வெடித்தது. “சாவா” என்றொரு திரைப்படத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் ஔரங்கசீப் மிகவும் மோசமாக சித்திரவதைப் படுத்தி கொன்றார் என்று காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம். அந்த திரைப்படம் மட்டுமல்ல, நாம் பள்ளியில் படித்த பாடப்புத்தகங்கள் கூட ஔரங்கசீப் ஒரு கொடுங்கோல் மன்னர், இசை போன்ற கலைகளை வெறுத்தவர் என்றுதான் கற்றுக் கொடுத்துள்ளது.

 இந்த நூல் ஔரங்கசீப்பின் இன்னொரு பக்கத்தை காண்பிக்கும் நூலாக அமைந்துள்ளது. புனைவு நூலாக இருந்த பின்னும் ஔரங்கசீப் மீது வரலாறு வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தரப்பு விளக்கங்களை அளிப்பதாக உள்ளது. ஔரங்க்சீப் வரலாற்றோடு இந்த நூல் சுருங்கி விடவில்லை. கடந்த கால வரலாறு தொடங்கி நிகழ்கால சம்பவங்கள் வரை பலவற்றையும் விவரித்துள்ளது இந்த நாவல்.

 ஔரங்கசீப்பின் வரலாற்றை எழுத வந்த அயர்லாந்து விடுதலைப் போராளி லாவேஜ் மூலம் கதை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காலத்தை கடந்ததாக லாவேஜின் பயணம் முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது நூலை மிகுந்த கவனத்தோடு படிக்க வைக்கிறது.  ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த மறுநாள் அமிர்தசரஸில் தொடங்கும் நூல், கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரின் யமுனை நதிக்கரையில் நிறைவு பெறுகிறது. இதற்குள்ளாக எத்தனையெத்தனை நிகழ்வுகள்!!!

 ஔரங்கசீப் பக்கம் வருவதற்கு முன்பாக வேறு எவற்றைப் பற்றியெல்லாம் இந்த நாவல் பேசியுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

 ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் காலித் தோட்டாக்களின் குவியல் மீது நிற்கிற லாவேஜிற்கு தன்னுடைய அயர்லாந்து நாட்டு விடுதலைப் போராட்டத்தையும் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இப்படித்தானே ஒடுக்கியது என்ற துயரத்தையும் அளிக்கிறது. உத்தம்சிங் இதற்கு பதிலடி தருவான் என்று மைக்கேல் டயரிடமும் சொல்ல வைக்கிறது இந்த படுகொலைக்குக் காரணம் தேசப்பிதாதான் என்று ஒருவர் அங்கே மகாத்மா காந்தி மீது குற்றம் சுமத்துகிறார். யார் அவர் என்று பிறகு பார்ப்போம்.  .

 குஜராத்தில் மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் ஆச்சாரமான உணவிற்காக மண்ணெணெய் அடுப்பில் சமைப்பதையும் அதில் உள்ள அபாயங்களை விவரிக்கும் போதே கோத்ரா ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்த குஜராத் கலவரமும் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட்தும் விவரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொலையாளிகளிடம் பறி கொடுத்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கும் உள்ளாகிய பில்கிஸ் பானுவிற்கு நிகழ்ந்த அராஜகம் இந்த நாவலில் தில்ரஸ் பானுவிற்கு நிகழ்ந்ததாக சொல்லப்பட்டு கண்ணீர் வரவழைக்கிறது.

 காஷ்மீர் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஆசிபா எனும் சிறுமிக்கு கோயிலுக்குள் நடந்த பாலியல் கொடுமை, கொலை பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

 வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்ட  சிவகங்கை மன்னன்  துரைசாமி பற்றியும் அவரது வீரத்தளபதி சேக் உசேன் பற்றியும் அவர்களின் துயரம் மிகுந்த இறுதி நாட்கள் பற்றியும்  இந்த நூல் விவரிக்கிறது.

 இப்போது ஔரங்கசீப் பற்றி வருவோம். மத வெறியர்களுக்கு அவர் மீது என்ன கோபம்? கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் “சதி” க்கு எதிராக உத்தரவிட்டதன் மூலம் பிரச்சினை தொடங்குகிறது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலை அவர் இடிக்க உத்தரவிட்டார் என்றொரு குற்றச்சாட்டு பேசப்படுகிறதே தவிர கோயிலுக்கு வந்த கட்ச் ராணி கோயில் புரோகிதர் ஒருவரால் கடத்தப்பட்டு கோயில் நிலவறையில் பாலியல் கொடுமைக்கு உள்ளானதன் எதிர்வினைதான் அந்த நடவடிக்கை என்பதைப் பற்றி பேசப்படுவதில்லை என்று இந்த நூல் சொல்கிறது. தன் மனைவிக்காக ருத்ர வீணை என்ற வாத்தியத்தில் ஆஹிர் பைரவ் எனும் ராகம் இசைக்கிற கலைஞராகவும் அவரை இந்த நாவல் காண்பிக்கிறது.

 தண்ணீரின் வேகத்தால் கோதுமை மாவு அறைக்கும் இயந்திரம், காப்பியின் அறிமுகம் போன்ற பகுதிகள் சுவாரஸ்யமான கற்பனைகள்.

 ஔரங்கசீப் – சிவாஜி உறவு பற்றியும் விரிவாக இந்த நூல் பேசுகிறது. சிவாஜி அரசனாக முடியேற்க முதலில் யார் ஆட்சேபித்தார்களோ, அவர்களேதான் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வளர காரணமாக இருந்தார்கள் என்பதையும் சொல்கிறது. அது மட்டுமல்ல அதை செய்வதாக ஒரு பாத்திரம் வருகிறது. அந்த பாத்திரம் விக்ரம் ஜோஷி.

 இன்று இந்தியாவில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் பரிவாரத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்கில் மகாத்மா காந்தி மீது பழி போடுவதில் தொடங்கி காலம் தோறும் வரும் விக்ரம் ஜோஷியை சித்தரித்துள்ளார். லாவேஜ் யமுனை நதிக்குள்ளாக விக்ரம் ஜோஷியை கொலை செய்து புதைத்தாலும் அவன் மீண்டும் எப்போது எந்த வடிவில் வருவானோ என்ற அச்சத்துடன் நாவலை நிறைவு செய்கிறார். மத வெறி அபாயம் இன்னும் தொடர்கிறது அல்லவா! ஔரங்கசீப்பிற்கு நற்சான்றிதழ் கொடுப்பது போல இந்த நாவல் அமைந்துள்ளதோ என்றொரு சிந்தனை எழலாம். பல நூறு ஆண்டுகளாக பல்வேறு படைப்புக்கள் மூலம் அவர் அவதூறு செய்யப்பட்டுள்ள போது, அவர் புகழ் பாடத்தான் ஒரு நூல் இருக்கட்டுமே!

 சரியான சமயத்தில் சரியான படைப்பை நல்லதொரு மொழியில் வழங்கிய தோழர் புலியூர் முருகேசனுக்கு வாழ்த்துக்கள்.

-         வேலூர் சுரா


"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.  

-          

 


Tuesday, April 15, 2025

எம்.எஸ் மீதான பாசமல்ல,கிருஷ்ணா மீதான வன்மமே

 



 

                                          

நூல் அறிமுகம்

 

நூல்                                                    : எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

ஆசிரியர்                                         : டி.எம்.கிருஷ்ணா

தமிழில்                                             : அரவிந்தன்

வெளியீடு                                        : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,

                                                               நாகர்கோயில்

விலை                                                 ரூபாய் 50.00

 

மியூசிக் அகாடமி கடந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் திரு டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்த போது அதற்கு எதிராக சிலர் அறிக்கைகள் வெளியிட்டனர்,  நீதிமன்றத்துக்குக் கூட ஒருவர் சென்றார். கர்னாடக இசை மேதை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஒரு கட்டுரையில் இழிவு படுத்தி விட்டார் என்பது எதிர்ப்புக்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்பட்டது.

 

அந்த கட்டுரையின் தமிழாக்கம்தான் இந்த நூல். அந்த நூலை முழுமையாக படிக்கும் போதுதான் எப்படிப்பட்டதொரு பொய்ப் பிரச்சாரம் நடந்துள்ளது என்பதை உணர முடியும்.

 

இந்த நூலின் தொடக்கமே டி.எம்.கிருஷ்ணா, தன் குருவான செம்மங்குடி சீனிவாச அய்யரோடு ஒரு தியாகராஜர் கீர்த்தனையை கற்றுக் கொள்கையில் அங்கே வருகிற எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அவர்களோடு இணைந்து பாடிய நெகிழ்ச்சியான அனுபவத்துடனேதான் அமைந்துள்ளது. “நாட்டின் மகத்தான இரு இசைக் கலைஞர்களோடு இணைந்து நான் பாடிக் கொண்டிருந்த அந்த மதியப் பொழுதை எந்நாளும் என்னால் மறக்க இயலாது. இது தூய்மையான, உண்மையான உயிர்த்துடிப்பு கொண்ட உத்வேகமூட்டும் நினைவு” என்று விவரிக்கிறார் அவர்.

 

பொலிவியாவில் மலையேற்றத்துக்கு சென்ற போது 16,000 அடி உயரத்தில் கூடாரத்தில் நீண்ட இரவுகளில் துணையாய் இருந்ததும் எம்.எஸ் ஸின் பாடல்களே என்று கூறும் டி.எம்.கிருஷ்ணாவா அவரை இழிவு படுத்தினார்? அப்படி என்ன நூலில் எழுதப்பட்டுள்ளது?

 

திருமதி எம்.எஸ் அவர்களின் துவக்க கால வாழ்க்கையைப் பற்றியும் அப்போதே அவர் இசையில் உச்சத்தை தொடுவார் என்பதற்கான அடையாளம் இருந்ததாக விவரிக்கிற அவர், பின்பு தன் அன்னையோடு முரண்பட்டு ஆனந்த விகடன் பிரிவு மேலாளர் திரு சதாசிவம் வீட்டில் தஞ்சமடைந்ததையும் சதாசிவம் எம்.எஸ் ஸை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதையும் எழுதுகிறார்.

 

அதன் பின்பு எம்.எஸ் அவர்களின் இசை வாழ்வு உட்பட ஒட்டு மொத்த வாழ்க்கையும் சதாசிவம் அவர்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை நூல் விவரிக்கிறது. எந்த கச்சேரியில் எந்த பாடலை எத்தனை நேரம் பாட வேண்டும், எந்த புடவை அணிய வேண்டும் உட்பட எல்லாவற்றையும் சதாசிவமே முடிவு செய்வார் என்பதையும் சில சமயங்களில் கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கையில் கூட அந்த கீர்த்தனையை நிறுத்தி விட்டு, அவசரமாக புறப்படப்போகும் வி.ஐ.பி பார்வையாளருக்காக பஜன் பாடலை பாட வைப்பார் என்பதையும் நூலில் பதிவு செய்துள்ளார்.  அதே போல அதிகமான கை தட்டல்கள் கிடைக்கும் என்பதற்காக ஒவ்வொரு கச்சேரியிலும் சங்கராபரணம் ராகத்தையே பிரதான பாடலாக பாட வைப்பார் என்பதையும் மற்ற பல ராகங்களையும் அவர் மிகச்சிறப்பாக பாடுவார் என்றாலும் அதற்கான வாய்ப்பு அவருக்கும் ரசிகர்களுக்கும் மறுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது புதிதான செய்தி அல்ல, கர்னாடக இசை ரசிகர்கள் அறிந்ததுதான்.

 

துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோரின் பாடல்கள், ரபீந்திர சங்கீத், மீரா பஜன் என பலவகை இசைகளை தீவிரமாக கற்றுக் கொண்டதன் விளைவாக பாடலை இயற்றியவர், அதன் தன்மை, நோக்கம் ஆகியவற்றுக்காக தன்னுடைய ஆளுமையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிடும் ஆசிரியர் பல வகை இசைகளை அவர் பாடினாலும் ஒரு வகை இசையின் சாயல் இன்னொரு சாயலில் கொஞ்சமும் இருக்காது என்று சொல்லி இது கண்டுகொள்ளப்படாத அபார சாதனை என்றும் பாராட்டுகிறார்.

 

அதே போல  கச்சேரிகளில்  துக்கடா என்றழைக்கப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க எம்.எஸ் தான் காரணம் என்று சொல்கிற கிருஷ்ணாஅவர் அழகாக பாடும் துக்கடாக்களின் சமய ரீதியிலான அம்சத்தில் கவனம் செலுத்தும் ரசிகர்கள் எம்.எஸ் அவர்களின் இசை ஞானத்தை பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்றளவும் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும் “வெங்கடேச சுப்ரபாதம்” பாடியது அவர் இசை வாழ்வில் பெரிய வீழ்ச்சியை அளித்தது என்றும் அவரது இசையை ரசிகர் தெய்வீக இசை என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு விட்டார் என்றும் குறிப்பிடுகிறார்.

 

இந்த நூலில் அவர் வைக்கிற விமர்சனம் என்பது பக்க வாத்தியங்களுடன் செய்கிற பயிற்சி என்பது பிழையற்ற கச்சேரி என்ற வடிவத்தை கொடுத்தாலும் படைப்பூக்கம் குறைந்து போய் விடுகிறது என்பதுதான். அது அவர் இசைத்திறனை சிறுமைப் படுத்துகிறது இதனைக்கூட  இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், அவர் கணவராக இருந்தாலும் கட்டுப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்.

 

எம்.எஸ் ஸிற்குள் ஒரு சோகம் குடி கொண்டிருந்தது என்றும் அவர் இசை வாழ்வின் மீது செலுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் அந்த சோகம் உருவாகியிருக்கலாம் என்று கணிக்கிற கிருஷ்ணா கர்னாடக இசை உலகில் தனக்கான அங்கீகாரம் அவரது ப்ஜனைகள், துக்கடாக்கள் ஆகியவற்றுக்காக கிடைத்தது போல கர்னாடக இசை வடிவங்களான கீர்த்தனை, வர்ணம், தில்லானா போன்றவைக்காக கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே அவருக்கு இருந்தது என்பதையும் பதிவு செய்கிறார்.

 

நூலின் இறுதிப் பத்தியில் கிருஷ்ணா நிறைவாக சொல்வது மிக முக்ககியம்.

 

“எம்.எஸ் மன உறுதி மிக்கவர், வலிமையானவர், கவனக்குவிப்பும் அர்ப்பணிப்பும், துணிச்சலும் கொண்டவர்,  உள் முகமானவர், வெள்ளை உள்ளம் கொண்டவர்,  மென்மையானவர், கர்னாடக இசை உலகம் அவர் இசையை   எளிமைப்படுத்தி தெய்வீக இசை, சாதாரண இசை என்னும் இரண்டு வகைமைக்குள் அடக்கி விட்டது. அவரது இசை இந்த இரண்டு அம்சங்களையும் கொண்டிருந்ததுடன் இவை இரண்டுக்கும் இடையிலும் இருந்தது. அவரும் அவரின் இசையும் நம்மை எப்போதும் வசீகரிக்க தவறுவதில்லை. உண்மையான எம்.எஸ் எங்கே இருக்கிறார் என்னும் பதிலளிக்கப்படாத கேள்வியை அவரும் அவர் இசையும் என்றுமே எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்”

 

மறைந்த இசை மேதை பற்றி தற்கால இசை மேதை தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக எழுதியுள்ளார். அதனை முழுமையாக படிக்காதவர்கள் மட்டுமே டி.எம்.கிருஷ்ணா, திருமதி எம்.எஸ்.சுப்புலட்சியை இழிவு படுத்தி விட்டார் என்று கூக்குரல் எழுப்புவார்கள். படித்தும் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டால் அவர்கள் மனதில் கிருஷ்ணா மீது வன்மம் நிரம்பியிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

 

(எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக எழுதியது)

 

 

Wednesday, February 5, 2025

சாமியார்களுக்குள் சண்டை சகஜமப்பா

 


 Pant போட்ட காரணத்துக்காக ஒரு சாமியார் இன்னொரு சாமியாரை தாக்கிய காணொளியை காலையில் பகிர்ந்திருந்தேன்.

 ஏதோ ஒரு தனித்த சம்பவத்தை பொதுப்படையாக்குவது சரியா என்று ஒரு தோழர் கேட்டார். சாமியார்கள் சண்டை போடுவதெல்லாம் ஒன்றும் அரிய விஷயம் கிடையாது. அடிக்கடி நடப்பதுதான் என்று சொன்னேன். அப்போதுதான் இரண்டு வகுடங்களுக்கு முன்பு எழுதிய நூல் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிது.

 திரேந்திர ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூல்தான் அது. அவசியம் படியுங்கள்.

 வடக்கத்தி சாமியார்களின் சண்டைகள் பற்றித்தான்  அந்த நூல் பேசுகிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களில் நடைபெறும் சண்டைகள், அதிகாரப் போர், கொலை முயற்சிகள் பற்றி யாராவது எழுத வேண்டும். அது திடுக்கிடும் திருப்பங்களோடு  இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

சாமியார்களின் நிழல் உலகம் அறிய . . .


 அவன் சாகட்டும், செத்து ஒழியட்டும்”

என்று சொல்லிக் கொண்டே தரையில் காயங்களுடன் படுத்துக் கிடந்த ஒரு முதியவரின் வயிற்றில் தன்னுடைய காலால் ஓங்கி மிதித்தார் ஒரு துறவி.

 இது எந்த திரைப்படத்தின் முதல் காட்சியுமல்ல, திரேந்திர கே.ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலின் தொடக்கமே இப்படித்தான் அமைகிறது.

 அயோத்தியின் பெரிய அரசியல் மையமான துறவிகள் குழுவான நிர்வானி அகாரா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள  அனுமார் கோயிலின் வாசலில்  அந்த அகாராவின் துறவி, வாடகை கொடுக்காத பூக்கடை வைத்திருந்த முதியவரைத்தான் அப்படித்தான் தாக்கினார்கள். அந்த குழு மிகவும் பிரசித்தி பெற்ற குழுதான். அந்த குழுவைச் சேர்ந்த அபிராம்தாஸ் என்ற துறவிதான் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 இந்த நூல் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். ஆன்மீக அரசியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் சாமியார்களின் நிழல் உலகை அம்பலப்படுத்துகிற நூல். சாமியார்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத் மூலமாக வளைக்கப்பட்டார் என்பதை சொல்கிற நூல்.

 உங்களை படிக்கத் தூண்டுவதற்காக நூலிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 துறவிகள் குழுக்கள் அகாராக்கள் என்று அழைக்கப்படுகிறது. சைவத்தை, வைணவத்தை, சீக்கியத்தையும் கூட பின்பற்றும் அகாராக்கள் உண்டு. அவற்றுக்குள் பிரிவினைகள் உண்டு, அவைகள்தான் கோயில்கள், மடங்களை நிர்வகிப்பவை. அகாராக்களின் தலைவர்களாக இருக்கும் மகந்துகள் என்பவர் அதி முக்கியமானவர்கள். அகாராக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அகில இந்திய அகாரா பரிஷத். உபி முதல்வர் யோகி கூட கோரக்பூர் மடத்தின் மகந்து என்பதை நினைவில் கொள்க..

 மல்யுத்தம் கற்றுக் கொள்வதற்காக அகாராக்களில் இணைபவர்கள் உண்டு. முகலாய ஆட்சிக் காலத்திலும் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அகாராக்கள் கூலிப்படை நடத்தி மன்னர்கள் சார்பாக போர்களுக்குச் செல்வார்கள். இதிலே அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஒரு வருடம் ஆதரித்த அரசரை அடுத்த வருடம் எதிர்த்த கதையும் உண்டு. காரணம் பணம்.

 ஒரு மடத்தின் வாரிசாக வருவது என்பதற்காக கொலையெல்லாம் நடந்துள்ளது. குருவை சீடன் கொல்வதும், ஒரு மடத்து விஷயத்தில் தலையிட இன்னொரு மடம் கொலையாட்களை அனுப்புவது ஆகியவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பதை நூலின் பல பக்கங்கள் சொல்கிறது.

 ஒரு சாமியார் இறந்து போய் விட்டார். அவரை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு கோஷ்டிகளுக்குள் கம்பு, கத்தி, வாள் ஆகியவற்றைக் கொண்டு சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக சண்டையிட குதிரையில் வந்த ஒரு சாமியார் தன்னை பாதுகாத்துக் கொள்ள, எதிரணியினரை தாக்க ஆயுதமில்லாமல் தவித்து புதிய ஆயுதத்தை கண்டறிகிறார். இறந்து போன சாமியாரின் சடலத்தை கால்களைப் பிடித்து தூக்கி, அதனைக் கொண்டே அனைவரையும் தாக்குகிறார்.

  இது போல ஏராளமான சம்பவங்கள் நடக்கும் இடம்தான் அயோத்தி.

 அனைத்து அகாராக்களுக்கும் முக்கியமான நிகழ்வு கும்ப மேளா, அவர்கள் குளித்த பின்புதான் மற்றவர்கள் குளிக்க முடியும். எந்த அகாராவில் அதிகமான நிர்வாண சாமியார்கள் உள்ளார்களோ, அவர்கள்தான் வலிமையானவர்கள் என்று கருதப்படுவார்கள், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் பிச்சைக்காரர்களையும் சாமியார்களாக அழைத்து வந்து கணக்கு காண்பிக்கிறார்கள் என்பதை சாமியார்களே வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். நாக சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த சாமியார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை நூலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

 அகாராக்கள் சில சாமியார்களுக்கு “மகா மண்டலேஸ்வரர்கள்” என்று பட்டம் தரும். அப்படி பட்டம் கிடைத்த சாமியாருக்கு பக்தர்கள் அதிகமாவார்கள், காணிக்கை பெருகும் என்பதால் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் கொடுக்க மகாமண்டலேஸ்வரர்கள் எண்ணிக்கை இப்போது பெருகி விட்டது. ராதா மே என்ற பெண் சாமியாருக்கு அப்பட்டம் தந்தது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த சர்ச்சையும் நித்தியானந்தருக்கு அளிக்கப்பட்ட போது உருவாகவில்லை.

 இந்துக்களின் மிகப் பெரிய மதத்தலைவராக கருதப்படுகிற சங்கராச்சார்யார்களுக்குள் நடக்கிற சர்ச்சை, அரசியல், பிரச்சினைகள் குறித்து இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஆதி சங்கரர் உருவாக்கிய சங்கர மடங்கள் ஜோதிர்மத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. காஞ்சி மடம் தாங்களும் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் என்று சொன்னாலும் இதனை மற்ற நான்கு மடங்கள் ஏற்பதில்லை. ஜோதிர்மத் மடத்தின் சங்கராச்சார்யாராக முடி சூட்டிக் கொண்ட அச்சுதானந்த தீர்த்தர் என்பவரை அகாராக்கள் எப்படி துரத்தியது என்பதை நூல் விவரிக்கிறது, அது மட்டுமல்ல இப்போது கிட்டத்தட்ட 100 சங்கராச்சார்யார்கள் உள்ளார்கள் என்பதையும் அம்பலப்படுகிறது.

 சாமியார்களின் துணை இருந்தால் அவர்கள் மூலம் பக்தர்களிடம் தங்கள் அரசியலை கொண்டு செல்லலாம் என்று வி.ஹெச்.பி எடுத்த முயற்சிகள், அதன் ஒரு பகுதியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட ராமர் கோயில் பிரச்சினை, ஆரம்ப காலத்து முட்டுக்கட்டைகள், பின்னர் அவர்கள் எப்படி முன்னேறினார்கள் ஆகியவை விவரமாக எழுதப்பட்டுள்ளது.

 பாஜகவின் மத அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்புலத்தில் உள்ள சாமியார்களின் நிழல் உலகை புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் மாஃபியாவை விட மோசமான அந்த உலகை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார் நூலாசிரியர் திரேந்திர கே.ஜா. மொழி பெயர்ப்பு என்ற உணர்வு வராத வண்ணம் எப்போதும் போல மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் இ.பா.சிந்தன்.

 இப்படி ஒரு சர்ச்சையான நூலை தைரியமாக வெளியிட்ட பொள்ளாச்சி எதிர் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்.