Tuesday, July 31, 2018

தடை . . .அதை உடை . . .

எட்டு வழி சுங்கச்சாலைக்கு எதிரான நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்சமீப காலமாக தமிழக காவல்துறை மக்கள் பிரச்சனைகளின் மீது நடத்தப்படும் எந்தவிதமான போராட்டத்திற்கும், இயக்கங்களுக்கும் அனுமதியளிப்பது இல்லை. அதிலும் குறிப்பாக இயக்கங்களுக்கு அனுமதி கோருவோர் நீதிமன்றங்களை நாடி நிவாரணம் பெறுவதை தடுக்கும் பொருட்டு இயக்கம் நடத்துவதற்கு முந்தைய நாளில் ‘அனுமதி மறுக்கப்பட்டது’ என்ற கடிதம் தருவதை காவல்துறை தனது வழக்கமாக கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் போராட முடியாது என்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தடுப்பதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற வேண்டியதிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த நிலையில் விவசாயிகளை நிர்ப்பந்தித்தும், துன்புறுத்தியும், பயமுறுத்தியும் எட்டு வழிச் சுங்கச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி திருவண்ணாமலையிலிருந்து - சேலம் வரை ஆகஸ்ட் 1 முதல் நடைபயணம் செல்ல அனுமதி கேட்டு, ஜூலை 23-ந் தேதியே காவல்துறை கூடுதல் இயக்குநருக்கும், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.

 ஆனால், காவல்துறை ஜூலை 29ந் தேதியன்று சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளது. அரசு மக்களை நிர்ப்பந்திக்கிறது, மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம் செல்கிறது, இதில் சட்டம் - ஒழுங்கு கெடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மேலும் காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைபயணம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்த பின்னரும், இவ்வாறு அனுமதி மறுப்பது காவல்துறையின் எதேச்சதிகார போக்கை காட்டுவதாகும்.

அரசியல் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை தட்டிப்பறிக்கும் இப்போக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஆனால், அதேசமயம் ஆளுங்கட்சியின் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், அனுமதிக்கப்படாத இடங்களிலும், வழித்தடங்களிலும் கூட கூட்டங்கள், சைக்கிள் பயணங்கள் அனுமதியளிப்பதை காவல்துறை வழக்கமாக கொண்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியும், எதிர்க்கட்சிகளுக்கு மற்றும் அமைப்புகளுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிப்பது பாரபட்சமான போக்காகும்.

காவல்துறையின் இத்தகைய அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல என்பதாலும், விவசாயிகளின் கோரிக்கை நியாயம் என்பதாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ந் தேதி இந்த நடைபயணத்தை தொடருவது என்று முடிவு செய்திருக்கிறது.

காவல்துறையும், தமிழக அரசும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கிற கொள்கைகளை கைவிட வேண்டுமெனவும், இந்த நடைபயணத்தை அனுமதிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

மக்கள் உரிமைகளுக்காக அடக்குமுறைகளை கடந்து நடைபெறும் இப்பேரியக்கத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
31.07.2018

2,221 ல் செல்லூரார் தோற்றம் !!!!!

2,221 ல் அதிமுக வெற்றி பெறுவதை பார்க்க கலைஞர் இருப்பார் என்று நம் அகில உலக விஞ்ஞானி செல்லூரார் கூறியிருந்தார்.

அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

2,221 ல் செல்லூரார் எப்படி இருப்பார் என்று இணையத்தில் கிடைத்த ஒரு ஆப் மூலம் முயன்று பார்த்தேன்.

நீங்களும் பாருங்கள்


காமெடி பண்ணாதீங்க போலீஸ்கார் . . .எட்டு வழிச்சாலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாளை திருவண்ணாமலையிலிருந்து "என் நிலம், என் உரிமை" நடைப்பயணத்தை நடத்தவுள்ளது.

"01-07-2018 முதல் 31-07-2018" வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்வலம் நடத்த தடையிருப்பதால் "01-08-2018" நடைபெற உள்ள நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு!

என்று சொல்லி காவல்துறை கடிதம் கொடுத்துள்ளது. 

31.07.2018 வரை உள்ள தடை உத்தரவு எப்படி ஐயா 01.08.2018 அன்றைக்கு பொருந்தும்.

போங்கய்யா, ஒரு மறுப்புக் கடிதத்தைக் கூட உருப்படியா கொடுக்க முடியாத நீங்க எல்லாம் . . . . .

Monday, July 30, 2018

அறுவெறுப்பாய் உள்ளது மோடி . . .

மக்களவையில் மோடி உரையாற்றும் காணொளியை இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.

மோடியின் கோமாளிக் கூத்தும் உடல் மொழியும் சைகைகளும் பார்க்கவே அறுவெறுப்பாக உள்ளது. 

ஒரு நான்காம் தர பேச்சாளரைப் போன்ற இந்த கேடு கெட்ட பேச்சுக்கு விழுந்து விழுந்து சிரிப்பதிலிருந்து பாஜக கட்சியினரின் தரமும் தெரிகிறது.வேணாம் மோடி,நீங்க நாடாளுமன்றத்துக்கு போகவும் வேணாம்.
அந்த அவையை அசிங்கப்படுத்தவும் வேணாம்


களப்போராளியைப் பற்றி விரிவாக . . .

எங்கள் தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதி, நேற்றைய வண்ணக்கதிர் இதழில் வெளியான பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து அரசியல் இயக்கத்திற்கு...


களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

ஜி. ராமகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே வேம்பாகக் கருதி முகம் சுழிக்கும் மத்திய பாஜக அரசு அவற்றை வேக வேகமாகத் தனியாருக்குக் கைமாற்றி வருகிறது. மத்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்ஐசி) முந்தைய காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் தனியார்மயமாக்க முயன்றபோதெல்லாம் உறுதியாக எதிர்த்து போராடி, மக்களின் சொத்தாகிய அந்த நிறுவனத்தை பொதுத்துறையாகப் பாதுகாத்ததோடு, அது அரசுக்கு லாபப்பங்கீடு தரக்கூடிய நிறுவனமாக செயல்படுவதற்கும் முக்கிய காரணமாகத் திகழ்வது அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ). இதற்காக இந்தச் சங்கம் நடத்திய போராட்டங்கள் ஒரு மகத்தான வரலாறு. 

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல இருந்தாலும் இப்போதும் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்கக்கூடிய நிறுவனமாக எல்ஐசி செயல்படுவதற்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பங்களிப்பு தலையாயது. இத்தகைய சங்கத்தை வளர்த்ததிலும், உயரிய நோக்கங்களுக்காக ஊழியர்களை ஒற்றுமையாகச் செயல்பட வைத்ததிலும் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் தோழர் எஸ். ராஜப்பா. 

மதுரையில் 1936-ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜப்பா. தந்தை காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றியவர். மதுரை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த ராஜப்பா சென்னைக்கு வந்து, ‘இந்து’ நாளேட்டில் ஓராண்டு பணியாற்றி 1957-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். துவக்கத்திலிருந்தே ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்த்திட முன்முயற்சி மேற்கொண்டார். 1959-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தின் மனமகிழ்ச் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டுறவு உணவகம், கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை தொடங்கப்பட்டபோது இவைகளுடைய நிர்வாகியாகவும் ராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். அப்போது சங்கத்தின் தென்மண்டல தலைவராக இருந்த மோகன் குமாரமங்கலம் பண்டக சாலையில் முதல் விற்பனையை துவக்கி வைத்ததை ராஜப்பா நினைவு கூர்கிறார். 

1968ம் ஆண்டு காப்பீட்டு ஊழியர் சங்கத்தில் செயல்பட்ட அதே நேரத்தில் தோழர் வி.பி. சிந்தன் ஆலோசனைப்படி பியர்லெஸ் எம்ப்ளாயீஸ் யூனியன், டிடர்ஜென்ட் இந்தியா லிமிட்டெட், ரோட் டிரான்ஸ்போர்ட் ஊழியர் சங்கம் ஆகியவற்றிலும் பொறுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். 1966-ஆம் ஆண்டு சென்னை கோட்ட பொதுச்செயலாளராக ராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். மேலும் தென் மண்டல தலைவராகவும் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய இணை செயலாளராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டார். தோழர் ராஜப்பா காப்பீட்டு ஊழியர் சங்க போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். 

1965-ஆம் ஆண்டு நிர்வாகம் நிறுவனத்தில் கம்ப்யூட்டரை புகுத்த திட்டமிட்டது. சங்கம் எல்லா மாநிலங்களிலும் இதை எதிர்த்து போராட வேண்டுமென முடிவெடுத்தது. சென்னை கோட்டத்தில் 35 சதவிகித ஊழியர்களே சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். நிறுவனத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று சங்கம் முடிவெடுத்தபோது “சென்னை கோட்டத்திலும் வேலைநிறுத்தம் செய்வோம்” என்று ராஜப்பா, என்.எம். சுந்தரம் உள்ளிட்ட தோழர்கள் கூறியிருக்கிறார்கள். “மாநிலத்தில் பிற கோட்டங்களில் சங்கம் ஓரளவுக்கு பலமாக இருக்கிறது. தலைமையகமான சென்னையில் பலவீனமாக இருக்கிறது; எப்படி உங்களால் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க முடியும்,” என அகில இந்திய பொதுச்செயலாளர் சரோஜ் சௌத்ரி சென்னை கோட்டத் தோழர்களைக் கேட்டிருக்கிறார்.


“தலை பலவீனமாக இருந்து உடலின் மற்ற அங்கங்கள் வலுவாக இருக்குமானால் என்ன பயன்,” என்று சரோஜ் சௌத்ரி, பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் கேட்டதை (றுhயவ ளை வாந ரளந டிக வாந டிவாநச டiஅளெ டிக வாந bடினல நெiபே ளவசடிபே கை வாந hநயன ளை றநயம?) அப்படியே நினைவில் வைத்திருக்கிறார் ராஜப்பா. “உறுதியாக வேலைநிறுத்தும் செய்தோம். 19 சதவீத ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதைப் படிப்பினையாக எடுத்துக்கொண்ட சங்கம், போராட்டத்தின் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென்று ஊழியர்களுக்கு போராட்ட உணர்வூட்டத் திட்டம் வகுத்தது.அடுத்தடுத்து நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஊழியர்களின் பங்கேற்பு அதிகரித்தது. 

1966ல் 51 சதவீதம், 1967-ல் 78 சதவீதம், 1968ல்-90 சதவீதம் என பங்கேற்பு அதிகரித்தது. இந்த சாதனைக்காக அகில இந்திய பொதுச்செயலாளர் சென்னை கோட்ட சங்கத்தலைமைக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினார். இவ்வாறு படிப்படியாக போராட்டத்தில் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதற்கு மற்ற தோழர்களோடு சேர்ந்து தோழர் ராஜப்பாவும் முனைப்பாக பணியாற்றினார். என்.எம். சுந்தரம், ராஜப்பா ஆகிய தோழர்களை உள்ளடக்கிய போராட்டக்குழு அமைத்து கம்ப்யூட்டரை எதிர்த்து இயக்கம் நடைபெற்றது. எல்ஐசியில் மட்டுமல்ல, ரயில்வேயில் கம்ப்யூட்டரை புகுத்தும் முயற்சியை எதிர்த்த போராட்டத்திலும் ராஜப்பா கலந்து கொண்டார். 

1968-ஆம் ஆண்டு ரயில்வேயில் கம்ப்யூட்டரைப் புகுத்தும் முயற்சி ராணுவத்தின் உதவியோடு நடந்தபோது அதை எதிர்த்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ராஜப்பா உள்ளிட்ட எல்ஐசி மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அகில இந்தியஅளவிலும், மாநிலத்திலும் கம்ப்யூட்டர்மயமாக்கலை எதிர்த்துப் போராட்டம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தேவையின் அடிப்படையில் சங்கத்தோடு பேச்சுவார்த்தை மூலம் கம்ப்யூட்டரை அனுமதிப்பது என்று முடிவாக்கப்பட்டது. இத்தகைய முடிவால், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட்டது, அதே வேளையில் நிர்வாகத்தில் வேலை அதிகரித்திருந்த நிலையில் கம்யூட்டர் அனுமதிக்கப்பட்டது.

1972-ஆம் ஆண்டு அகில இந்திய சங்கத்தின் 7-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. சென்னையில் இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதில், மற்ற தோழர்களோடு ராஜப்பாவும் முக்கிய பாத்திரம் வகித்தார். சென்னைப்பகுதியில் சங்கத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது. 

1974ஆம் ஆண்டு ஊதிய உயர்வுக்கான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு அகில இந்திய அளவில் 168 ஊழியர்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களில் தோழர் ராஜப்பாவும் ஒருவர். 


அதனாலெல்லாம் அவரோ சக ஊழியர்களோ பின்வாங்கிவிடவில்லை. 40 நாட்களுக்குப் பிறகு நிர்வாகம்தான் பின்வாங்கியது, அந்த நடவடிக்கையை விலக்கிக்கொண்டது. 1974-ஆம் ஆண்டு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது, சங்கத்தலைமை ஒத்துழையாமை போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. போராட்டம் தொடங்கிய பின்னணியில் மத்திய அரசு சென்னை, தார்வார், பெங்களூர், டெல்லி, பாட்னா, மீரட் ஆகிய நகரங்களின் எல்ஐசி அலுவலகங்களுக்குக் கதவடைப்புச் செய்தது. 16 நாட்கள் வேலைநிறுத்தம் நீடித்தது. ஒன்றுபட்ட ஊழியர்களின் போராட்டத்தை உடைக்க முயற்சியெடுத்து தோல்வியுற்ற மத்திய அரசு கதவடைப்பை விலக்கிக் கொண்டு, சங்கத்தலைமையோடு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஊதிய உயர்வு அளித்தது. 

1984-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனத்தை ஐந்து நிறுவனங்களாக பிரிப்பதற்கு மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. இதை எதிர்த்து சங்கத் தலைமை தொடர்ச்சியாக பல கட்ட இயக்கங்களை நடத்தியது. ஊழியர்கள் உறுதியாக எதிர்த்ததால் மத்திய அரசு அந்தப் பிரிப்புத் திட்டத்தை கைவிட்டது. 1988-ஆம் ஆண்டு சங்கத்தினுடைய அகில இந்திய பொதுச்செயலாளராக என்.எம். சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் இருக்கும் சென்னைக்கு சங்கத்தின் தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது. “தொடக்கக் காலத்தில் சங்கம் பலவீனமாக இருந்த சென்னை மாநகரத்தில் இருந்து சங்கத்தின் அகில இந்திய மையம் செயல்பட்டது எங்களுக்குப் பெருமைதான்,” என்று உணர்வுப்பூர்வமாக ராஜப்பா கூறினார். 

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைமை போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கின்ற போதெல்லாம் தமிழகத்தில் எல்லா காப்பீட்டு நிறுவன அலுவலகங்களிலும் 100 சதவிகித ஊழியர்கள் பங்கேற்பார்கள். அந்த அளவிற்கு அகில இந்திய அளவில் உருக்குப் போன்ற ஒற்றுமையைக் கட்டி இச்சங்கம் இன்றளவும் செயல்பட்டு வருவது கவனிக்கத் தக்கது. 

1960-களில் துடிப்போடு சங்கப்பணியாற்றிய தோழர் ராஜப்பா சென்னை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வி.பி. சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன் ஆகியரோடு ஏற்பட்ட தொடர்பினாலும் அகில இந்திய தலைவர்கள் சுனில் மைத்ரா உள்ளிட்ட தலைவர்களின் தாக்கத்தினாலும் தோழர் ராஜப்பா 1968ம் ஆண்டு கட்சியில் உறுப்பினரானார். இவரது அயராத பணியினை அங்கீகரிக்கும் அடிப்படையில் தோழர் ராஜப்பா அரங்கத்தினுடைய மாநில கட்சி கமிட்டிக்கும், அகில இந்திய கட்சி கமிட்டிக்கும் உறுப்பினராக உயர்த்தப்பட்டார். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் ஒரு சிறப்புத்தன்மை என்னவெனில், ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அல்லாமல் மக்களுக்கு எதிராக வருகிற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டங்களிலும் கலந்து முன்னணியில் நிற்கும். 

1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு விலக வலியுறுத்தி நடைபெற்ற நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள் முழுமையாகக் கலந்து கொண்டனர். இத்தகைய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் ராஜப்பா மையமான பங்காற்றினார். சென்னை மாநகரிலும், தமிழகத்திலும் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாகவும், எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தோழர் வி.பி. சிந்தன் மற்றும் உ.ரா. வரதராசன் போட்டியிட்டபோது தோழர் ராஜப்பா தேர்தல் பணியாற்றியிருக்கிறார்.

அத்துடன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 14வது மாநாடு சென்னையில் நடைபெற்றபோதும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு நடைபெற்றபோதும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியிருக்கிறார்.

1996ம் ஆண்டு தோழர் ராஜப்பா எல்ஐசி பணியிலிருந்து ஓய்வுபெற்றார். சிஐடியு தலைவர்களில் ஒருவரான தோழர் டி.கே. ரங்கராஜன் கூறிய ஆலோசனையை ஏற்று சிஐடியு தலைமையிலான பல சங்கங்களில் தோழர் ராஜப்பா பணியாற்றி வருகிறார். ஃபோர்டிஸ் மலர், எம்.எம்.எம், விஜயா போன்ற பெரிய தனியார் மருத்துவமனை ஊழியர்களின் சங்கத் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இத்துடன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், காஸ்மோபாலிட்டன் கிளப், எஸ்.வி.எஸ். சபா ஆகிய அமைப்புகளின் தொழிற்சங்கங்களிலும் தலைவராக, துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மருத்துவமனை ஊழியர்களின் குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும் தமிழக அரசின் குழுவில் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்.

1976ம் ஆண்டு அவசரநிலை ஆட்சிக் காலத்தில் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தலைமறைவாக செயல்பட்ட வி.பி. சிந்தன், உமாநாத் போன்ற தோழர்களுக்கு உதவுவதற்காகவும். கட்சியுடனான அவர்களது தொடர்புகளுக்காகவும் கே.என். கோபால கிருஷ்ணன் போன்ற தோழர்களோடு இணைந்து ராஜப்பாவும் பணியாற்றினார்.தோழர்கள் என்.எம். சுந்தரம், கே.என். கோபாலகிருஷ்ணன், ஆர். கோவிந்தராஜன் போன்ற தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நாட்களை ஒரு இளைஞரின் உற்சாகத்தோடு நினைவுகூர்கிறார் ராஜப்பா. அகில இந்திய அளவில் அன்றைய சிஐடியு தலைவர்கள் பி.டி. ரணதிவே , பி. ராமமூர்த்தி அவ்வப்போது சங்கத்திற்கு அளித்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளது என்பதை நெகிழ்வோடு ராஜப்பா கூறினார். 

பணியில் இருந்த போதும், ஓய்வு பெற்ற பிறகும், தன்னுடைய சங்கப்பணி, கட்சிப்பணிக்கு துணைவியாரும், பிள்ளைகளும் உதவியாக இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு கூறினார்.நடுத்தர வர்க்கத்தினருக்கான சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து மாநில, அகில இந்திய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர் தோழர் ராஜப்பா. சங்கப்பணி, கட்சிப்பணி இரண்டிலும் மற்றவர்களோடு இணக்கமாக இணைந்து செயல்பட்டதோடு, அடுத்தடுத்து தலைமைக்கு இளைய தோழர்களை கொண்டு வருவதிலும் முனைப்புடன் இருந்தவர் தோழர் ராஜப்பா. காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னணித்தலைவர்களில் ஒருவரான தோழர் ராஜப்பா நிர்வாகத்தினுடைய ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக வேலைநீக்கம் போன்ற சோதனைகளை உறுதியாக எதிர்கொண்டவர். தற்போது 82 வயதாகும் தோழர் ராஜப்பா கட்சி உறுப்பினராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் சக ஊழியர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக உறுதி குன்றாமல் இயங்கி வருவது பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.


கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க . . .

தமிழக தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பால்,
வாட்ஸப் வதந்திகளால் 
ஏற்பட்ட தாக்கத்திலிருந்து வெளிவர,
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள

பழைய நகைச்சுவை ஓவியங்களைப் பாருங்கள்.

ஓல்ட் இஸ் கோல்ட் அல்லவா!!!

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் . . .


Sunday, July 29, 2018

இயக்கத்திற்கு ஈர்த்த தலைவர் . . .

தீக்கதிர் நாளிதழின் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் இதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கல் எழுதும் "களப்பணியில் கம்யூனிஸ்டுகள்" தொடரில் எங்கள் முன்னோடித் தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்கள் பற்றி இன்று எழுதியுள்ளார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் நான் பார்த்த முதல் தலைவர் தோழர் ராஜப்பா. 

அவரது எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு இதே பக்கத்தில் மூன்றாண்டுகள் முன்பு எழுதியதை இங்கே மீள் பதிவு செய்துள்ளேன்.

16.04.1986, வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். அன்றுதான் எல்.ஐ.சி நிறுவனத்தில் பயிற்சி உதவியாளராக அடியெடுத்து வைக்கிறேன். மொத்தம் 125 பேர் அன்று பணியில் இணைகிறோம். சென்னை பாரி முனையில் உள்ள யுனைட்டெட் இந்தியா கட்டிடத்தில்தான் பதினைந்து நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலையில் நிர்வாகத்தின் அறிமுகக் கூட்டம். மாலை பயிற்சி வகுப்பு முடிந்ததும் சங்கத்தைப் பற்றிய ஒரு அறிமுகக் கூட்டம் உள்ளதாக மதியத்தில் ஒருவர் வந்து சொன்னார்.

மாலை ஐந்து மணிக்கு பயிற்சி வகுப்பு முடிகிறது. பத்து பதினைந்து பேர் வருகிறார்கள். அவர்களில் ஓரிருவர் நேர்முகத் தேர்வு நடக்கும் போது வாழ்த்து சொன்னவர்கள் என்பது நினைவில் இருந்தது. ஆனால் அவர்களின் பெயரெல்லாம் அப்போது தெரியாது. வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர் பேச வருகிறார். அதற்குள்ளாக நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவரிடம் கண்ணைக் காட்ட, அந்த நபர் அவசரம் அவசரமாக மைக்கை அங்கேயிருந்து அகற்றி எடுத்துப் போகிறார்.

வெள்ளை ஆடை அணிந்த அந்த மனிதர் பேசத் தொடங்குகிறார்.

“அந்த ஒலிபெருக்கியை அப்படியே வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் உங்கள் அத்தனை பேரையும் சென்றடையக் கூடிய சக்தி எங்கள் குரலுக்கு உண்டு” என்று பேசத் தொடங்குகிறார்.

அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை இடியாய், பேரருவியாய், இனிய தென்றலாய், எல்லாமாமுமாக அமைந்திருந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுருக்கமான வரலாறாக, இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்த வகுப்பாக அமைந்திருந்த அந்த உரை புதிய வாசலுக்கு என்னை அழைத்துச் சென்றது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் என்னையும் இணைத்துக் கொள்ள அடித்தளமாய் அமைந்திருந்தது.

அந்த வெள்ளை ஆடை மனிதர் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர், பின்பு தென் மண்டலப் பொதுச்செயலாளராக, தலைவராக, அகில இந்திய துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ராஜப்பா.

எல்.ஐ.சி யிலிருந்து ஓய்வு பெற்று இருபதாண்டுகள் ஓடி விட்டாலும் அவரது தொழிற்சங்கப் பணி இன்னும் தொடர்கிறது. சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனை ஊழியர்களை அணி திரட்டி சங்கம் அமைத்துள்ளார். காஸ்மோபாலிடன் கிளப் போன்ற கிளப்கள், காபி டே போன்ற நிறுவன ஊழியர்களை தொழிற்சங்கத்தின் அணி வகுக்கும் பணியைச் செய்தவர். ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் இப்போதும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர். எப்போதுமே உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருப்பவர். அவரது உற்சாகம் நமது சோர்வை போக்கி விடும்.

என்றுமே அவர் ஒரு வழிகாட்டி.

அர்ப்பணிப்பு மிக்க உழைப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணம் தோழர் எஸ்.ராஜப்பா.  

தோழர் ராஜப்பா பற்றி தோழர் ஜி.ஆர் எழுதியதை அடுத்த பதிவில் பகிர்கிறேன். 

அறிவாளை தூக்க வைக்காதீங்கடா . . .


நாம் அமைதியாக, ஆக்க பூர்வமான பணிகளை செய்ய வேண்டும் என நினைத்திருப்போம்.  ஆனால் உருப்படியான வேலை இல்லாத வெட்டி ஜென்மங்களான, அடுத்தவர்களை எப்படி கெடுக்கலாம் என்று டிவி சீரியல் வில்லிகள் போலவே எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிற சங்கிகள், நம்மை வெறுப்பேற்ற ஏதாவது பேசுவார்கள், உளருவார்கள். கடுப்பாகிற நம்மையும் அவர்களைப் போலவே  மோசமானவர்களாக மாற்ற நினைக்கிற கேவலமான உத்தி அது. 

அப்படிப்பட்ட ஒரு மோசமான மனிதன்தான் மேலே படத்தில் இருக்கிற பசனகவுடா என்ற கர்னாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. அந்தாள் உள்துறை அமைச்சராக இருந்தால் போலீஸை விட்டு அறிவுஜீவிகள் அனைவரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி விடுவாராம். தோழர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்த மனிதனை தூக்கி உள்ளே வைக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 

இந்த  சங்கிகள் எல்லாம் அவர்கள் பாணியிலேயே நம்மையும் எதிர்வினையாற்ற வைத்து நம்மையும் அவர்களைப் போலவே மட்டமானவர்களாக  மாற்றி, நம்முடைய கவனத்தை முக்கியமான பணிகளிலிருந்து திசை திருப்பி, நேரத்தை விரயம் செய்ய வைப்பதற்காக விரிக்கிற சதி வலை என்று நன்றாக புரிகிறது. 

அதனால்தான் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது.

பணிவோடு அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது...

எங்களையும் அறிவாளை தூக்க வைக்காதீங்கடா . . .


இயற்கையான கூட்டணி - அரசியல் அல்ல

வானம் - மேகம் - நிலவு - காற்றில் அசையும் இலைகள்

இந்த இயற்கைக்கூட்டணி
எப்போதுமே அழகானது.

அப்படி ஒரு அழகான தருணம்
புகைப்படமாக இங்கே . . .


Saturday, July 28, 2018

இரண்டு அற்புதமான கேட்சுகள்


வாட்ஸப்பில் வந்த இரண்டு காணொளிகளை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

நீங்களும் ரசியுங்கள்.
Friday, July 27, 2018

கலைஞர் நீடூழி வாழட்டும் . .
அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்ப்பதை விட மோசமான ஒரு குணம் இருந்து விட முடியாது.  

வயது முதிர்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டாலே, உடனடியாக அவரை எங்கே அடக்கம் செய்வது என்பது வரை விவாதிக்கிற ஆர்வக்கோளாறு ஆட்களையும் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்களையெல்லாம்  மனித ஜென்மம்  என்றே கருத முடியாது.

கலைஞருக்கு நாள் குறிக்கிற வக்கிரத்தை பலர் செய்வதை இப்போது பார்க்க முடிகிறது. அப்படி  அடுத்தவருக்கு  நாள் குறித்த சிலருக்கு தங்கள் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறது.

இது போல எத்தனையொ முறை நாள் குறிக்கப்பட்ட கலைஞர் அவற்றையெல்லாம் தாண்டித்தான் இத்தனை நாளாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

இப்போதும் அத்தனை கணிப்புக்களையும் முறியடித்து நலமாய் வலம் வருவார் என்றே நம்புகிறேன்.

கலைஞர் நீடூழி வாழட்டும் . . .பேச விட்டு வேடிக்கை பாக்கறியா?

அவங்களை பேச விட்டு நீ வேடிக்கை பாக்கறயா என்று நாம் கோபமாக கேட்கும் கேள்வியைத்தான் எங்கள் முன்னாள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் இ.ர்ம்.ஜோசப், நாகரீகமான முறையில் மோடியைப் பார்த்து எழுப்பியுள்ளார்.

மோடி பதில் சொல்ல மாட்டார். ஆனால் மோடியின் குரூர புத்தியை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பேச விட்டு மௌனம் காக்கும் பிரதமர்

ராஜஸ்தான் மாநில எல்லைப் புறத்தில் ஆல்வார் பகுதி. ஜூலை 20 மாலை நேரம் - ரக்பர் கான், அவரது நண்பர் ஒருவர் ரூ.60,000 விலை கொடுத்து வாங்கிய இரண்டு பசுக்கள். பசுக்களை டெம்போ வேனில் ஏற்றிக் கொண்டு வர கையில் காசு இல்லை. நடந்து கொண்டே பசுக்களை ஓட்டி வருகின்றனர். திடீரென்று ஒரு கூட்டம். அவர்களைத் தாக்கத் தொடங்குகிறது. ரக்பரின் நண்பர் வயல்களுக்குள் ஓடித் தப்பிக்கிறார். ரக்பர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். 

பின்னிரவில் போலீஸ் வருகிறது. ரத்தத்தைக் கழுவி விட்டு, போலீஸ் வேனில் ரக்பர் ஏற்றப்படுகிறார். வழியில் போலீஸ்காரர்கள் டீக்கடையில் நிதானமாக டீ குடிக்கிறார்கள். காலை 4 மணிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் போது, ரக்பர் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 

கூர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் 13 காயங்கள். அதிர்ச்சியில் இறந்ததாக டாக்டர்கள் கூறுகிறார்கள். தான் ஒருவர் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ரக்பரின் மரணம், அவரது மனைவி, ஏழு குழந்தைகளை ஒரே இரவில் அநாதை ஆக்கிவிட்டது. 

மறுபுறத்தில் இறந்து போனவருக்கும் இருப்பவர்களுக்கும் அறிவுரைகள் தொடங்கி விட்டன.

‘‘முஸ்லிம்கள் இந்துக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுக்களை கடத்திச் செல்லக் கூடாது.
இந்த தொழிலை அவர்கள் நிறுத்த வேண்டும்’’ - ராஜஸ்தான் பாஜகஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ்.

‘‘இவர்கள் மாட்டுக்கறி தின்பதை நிறுத்தி விட்டால், கொலைகளும் நின்று விடும்’’ - ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர் இந்திரேஷ் குமார்.‘‘

இந்திரேஷ் குமார் ஒரு பக்குவமான மனிதர்’’ - பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கிரி ராஜ் சிங்.

‘‘முஸ்லிம்கள் பசுக்களைத் தொடுவதையே தவிர்க்க வேண்டும்’’ - பா.ஜ.க தலைவர் வினாயக் கட்டியார். 

‘‘இந்த நாட்டில் பசுக் கொலை நிறுத்தப்படாத வரையில், இத்தகைய கொலைகள் தொடர்வே செய்யும்’’ ராஜா சிங் பா.ஜ.க எம்.எல்.ஏ. 

‘‘மோடியின் புகழ் உயர உயர, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும்.’’ - மத்திய நீர்ப்பாசனத் துறைபா.ஜ.க இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால். 

மோடியின் உயர்ந்து வரும் புகழ் குறித்து கடைசியில் சொல்லப்பட்ட வாசகங்கள் மிக முக்கியமானவை. 


2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனைகளாகப் புறந்தள்ளி விட முடியாது. 

இந்த நிகழ்ச்சிகளுக்கும் மோடியின் புகழ் உயர்வதற்கும் தொடர்பு உண்டு என்று பா.ஜ.க நம்பும் எனில், நிலைமை என்னவாகும்? மோடியின் புகழை மேலும் உயரச் செய்வதற்குத் தானே அந்தக் கட்சி தொடர்ந்து முயற்சி செய்யும்?

இப்படி பா.ஜ.க-வினர் பலர் பேசிய பின்னரும் இந்தப் பிரச்சனையில் பிரதமர்மோடி காக்கும் கனத்த மௌனம் அந்தமுயற்சிக்கு அளிக்கும் ஒப்புதல் தானோ?

                                     -  தோழர் இ.எம்.ஜோசப்,
                                       முன்னாள் துணைத்தலைவர்,
                              தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

Thursday, July 26, 2018

இதுவல்லவோ கார்ட்டூன் !!!!

திரு சுரேந்திராவின் கைவண்ணத்தில்
ஹிந்து நாளிதழில்

காவிக்குண்டர்களை அம்பலப்படுத்தும் கார்ட்டூன்


மோடியின் 7 லட்சம் கோடி சாதனையை வாழ்த்த மாட்டீரா? . . .வராக்கடன் ரூ. 8.6 லட்சம் கோடியை வாரிச் சுருட்டியது வெறும் 4,387 பேர்தான்!புதுதில்லி, ஜூலை 25 -
இந்திய வங்கிகளின் மொத்த வராக் கடன்களில் 90 சதவிகிதத்தை வாரிச் சுருட்டியவர்கள் வெறும் 4 ஆயிரத்து 387 பேர்தான் என்பது தெரியவந்துள்ளது.அதாவது, நாட்டிலுள்ள வங்கிகளின் மொத்தவராக்கடன் ரூ. 9 லட்சம் கோடி என்ற நிலையில்,இந்த 4 ஆயிரத்து 387 பேர் மட்டும் 8 லட்சத்து59 ஆயிரத்து 532 கோடி ரூபாயை சுருட்டியுள்ளனர்.

வராக்கடன்கள் தொடர்பாக, ஜூலை 24-ஆம் தேதி மாநிலங்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார். அதில் இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

‘2014-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வெறும் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், 2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்தவராக் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 62 ஆயிரம்கோடியாக உள்ளது. இதில் ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கடன்பெற்றவர்கள் என்று பார்த்தால் அவர்கள் சுமார்4 ஆயிரத்து 387 பேர்தான். இவர்கள் ஒட்டுமொத்த வராக் கடன்களில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர். இவர்களின் மொத்த கடன் ரூ. 8 லட்சத்து 59 ஆயிரத்து 532 கோடியாக உள்ளது’ என்று ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். 

எனினும், ரூ. 10 கோடிக்கு மேல் கடன் பெற்றுபாக்கி வைத்துள்ள அந்த கடனாளிகள் மற்றும்நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க முடியாது என்றும், ரிசர்வ் வங்கிச் சட்டம்1934, 45(இ) பிரிவானது வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விவரங்களை வெளியிடத் தடைவிதிப்பதாகவும் அவர் மழுப்பியுள்ளார்.

தீக்கதிர் 26.07.2018

Wednesday, July 25, 2018

இன்றும் இதுதான் டாப் சீன் . . .
கடைகுட்டி சிங்கம் படத்தில் ரேக்ளா ரேஸ் பார்த்த போது  1959 ல் வெளியான (அப்போது நான் பிறக்கவில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும். 1982 -85 ல் கல்லூரிக் காலத்தில் பார்த்த படம். அப்போது ஆங்கில வசனங்கள் புரியாததால் படமும் புரியவில்லை என்பதே உண்மை.) ஆங்கிலப் படமான பென்ஹர் திரைப்படத்தின் ரதப் போட்டிதான் நினைவுக்கு வந்தது.

அந்த விறுவிறுப்பான காட்சியின் காணொளியை இங்கே இணைத்துள்ளேன். 

ஐம்பத்தி ஒன்பது வ்ருடங்களுக்கு முந்தைய படமாக இருந்தாலும் இது போன்ற போட்டி சீன்களில் இதுதான் இன்றும் டாப் என்பது என் கருத்து. பதவியை தாங்கும் இதயமய்யா இது!
தர்ம யுத்த பார்ட்டியை நீட் அம்மையார் அசிங்கப்படுத்தியது குறித்து பரிதாபமே வரவில்லை. “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று அறிஞர் அண்ணாவை துணைக்கு அழைத்தபோது சிரிப்புதான் வந்தது.

இவரது தம்பிக்காக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்ததாகவும் அதற்கு நன்றி சொல்ல இவர் டெல்லி சென்றதாகவும் ஆனால் இவரை சந்திக்க மறுத்த அம்மையார், மற்ற சில எம்.பிக்களை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஹெலிகாப்டர் கதையெல்லாம் மக்கள் காதில் பூ சுற்றும் வேலையாகத்தான் தோன்றுகிறது. அம்மையார் போட்ட ஏதோ ஒரு கட்டளையை அடிமைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் செய்யாமல் போயிருக்கலாம். அதற்காகத்தான் இந்த மூக்குடைப்பாக இருக்கலாம்.

மற்றபடி இந்த அவமானங்களுக்காக எல்லாம் கவலைப்படுகிற, ரோஷப்படுகிற ஆட்கள் அல்ல இவர்கள்.

தான் முதலமைச்சராக இருந்த போது தனக்குக் கீழ் அமைச்சராக இருந்த ஒருவரின் கீழ் இப்போது துணை முதலமைச்சராகக் கூட பணியாற்றத் தயாராக உள்ள ஒரு இதயம், இந்த அவமானத்தை எல்லாம் தாங்காதா என்ன!!!!

உன்னத ஓவியன் அவன் . . .
இயற்கையைக் காட்டிலும் உன்னத ஓவியன் உண்டோ?
வானமென்னும் திரையில்
எத்தனையெத்தனை வண்ணங்கள்?
வர்ண ஜாலங்கள்!

பி.கு : கடந்த வாரம் ஒரு ரயில் பயணத்தின்போது எடுத்த படங்கள்

Tuesday, July 24, 2018

கல்யாண் ஜ்வெல்லர்ஸின் கபடம்
தாங்கள் என்னவோ மிகப் பெரிய யோக்கியர்கள் போல வேடம் போடுகிற கல்யாண் ஜ்வெல்லர்ஸ், ஹிந்திய்ல் அமிதாப் பச்சனை வைத்தும் தமிழில் பிரபுவை வைத்தும் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் வங்கி ஊழியர்களையும் அதிகாரிகளையும் கொச்சைப் படுத்தியிருந்தது.

வங்கி அதிகாரிகள் சங்கத்தின் கடுமையான எதிர்வினைக்குப் பிறகு அந்த விளம்பரம் யாரையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என விளக்கம் அளித்தது.

அந்த விளம்பரம் திரும்பப் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். திருச்சூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளின் போராட்டம் நியாயமா என்று பிஸினஸ்லைன் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. ஆம் நியாயம் என்று 58 % பேர் சொன்னார்கள்.இறுதியில் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாய் கல்யாண் ஜ்வல்லர்ஸ் எழுத்து பூர்வமாக அறிவித்தது.ஆனால் தமிழில் பிரபு நடித்த அந்த விளம்பரம் இன்னும் வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.

திரும்பப் பெறுவதாக சொல்லி விட்டு இன்னும் திரையிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இவர்கள் நம்பிக்கை, நேர்மை என்றெல்லாம் கதைக்கிறார்கள்!

மோடியிடம் கற்றுக் கொண்ட பாடமோ?


சிவப்பாய் சூரியன் - அழகு

நேற்று காலையில் வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பியிருந்த படங்கள், அழகாய்  இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

சீன - திபெத் எல்லையில், மானசரோவர் ஏரிக்கரையில் எடுக்கப்பட்ட படங்கள்.

அழகின் உச்சகட்டம்.

Monday, July 23, 2018

செண்டிமென்ட் (கடைக்குட்டி) சிங்கம்

நேற்று காலைக் காட்சி சென்றிருந்தோம்.  படத்தில் வரும் சத்யராஜ் குடும்பத்து உறுப்பினர்கள் அளவு கூட தியேட்டரில் பால்கனியில் ஆட்கள் இல்லை. கீழேயும் கூடத்தான். மின் கட்டணம் கட்டக்கூட டிக்கெட் வசூல் வந்திருக்குமா என்ற கேள்வியோடுதான் படம் பார்க்க துவங்கினோம்.

படத்தின் சாதக அம்சங்கள் என்னவென்று பார்த்தால்

விவசாயியை மதிக்க வேண்டும், விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற படம்.

அதே போலத்தான் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படம்.

குடும்ப உறவுகள் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த படம். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அற்புதமான ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இயல்பான நடிப்பு, சூரியின் காமெடி  ஆகியவையும் படத்திற்குப் பலம். சத்யராஜை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

ஆணவக் கொலை செய்கின்றவனை காவல்துறையும் நீதிபதியும் மிகக் கடுமையாக நடத்துகிற , சாடுகிற காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

கார்த்திக்கு பெண் தர வேண்டும் என்று காத்திருந்த அக்காக்கள் கோபப்படுவதிலாவது நியாயம் உண்டு. மற்ற அக்காக்களின் கோபமெல்லாம் கதையை இழுத்துச் செல்ல செயற்கையாக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.

அதே போல ஒரே பாடலில் கதாநாயகன் பணக்காரனாவது போல, க்ளைமேக்ஸில் கார்த்திக் கண்ணீர் மல்க பேச, அனைவரும் திருந்தி விடுவது அதிக பட்ச செயற்கையாக இருக்கிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த உடனேயே பாட்டெல்லாம் மறந்து போய் விடுகிறது.

சமீப காலத்தில் ஓவர் செண்டிமெண்ட், ஓவர் கண்ணீரோடு வந்த படம் இதுதான்.

அப்புறம் முக்கியமாக

சத்ரியன் படத்தில் “மாலையில் யாரோ? மனதோடு பேச” என்று பாடிய, சுந்தர காண்டத்தில் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்ட பானுபிரியாவா இது? பரிதாபம் !!!

பின் குறிப்பு : கடைசி வரியைப் பார்த்து விட்டு எங்கள் தோழர் ஆரோக்கியராஜ், "தோழர் ராமனின் விருப்பப்படி" என்று “மாலையில் யாரோ?” பாடலை வாட்ஸப் க்ரூப்பில் போடாமல் இருக்க வேண்டுமே என்ற பதட்டம் வேறு இருக்கத்தான் செய்கிறது.

குருதியில் நனைந்த தாமிரபரணி


                                                       நாறும்பூநாதன்

ஜூலை 23 - மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். வருடம் :1999

அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. கையில் கொடியும், இடுப்பில் குழந்தையுமே இருந்தன. கூட்டத்தை கலைக்கிறோம் என்று சொல்லி விரட்டினார்கள். கட்டடம் கட்ட குவிக்கப்பட்டிருந்த செங்கற்களை காவல்துறையினர் எடுத்து, பொதுமக்களை குறிப் பார்த்து எறிந்தனர். ஆறு அடி நீளமுள்ள சவுக்கு கம்பால், தண்ணீருக்குள் குதித்த ஆண்களையும் பெண்களையும் அடித்து துவைத்தனர்.

ஆற்றின் மறுபுறம் கரையேறி தப்பிக்க முயன்ற ஆண்களையும் ஈரச் சேலையுடன் இருந்த பெண்களையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி ஆற்றில் குதிக்கும் முன்பு, தனதுஒன்றரை வயது குழந்தை விக்னேஷை, அம்மா இரத்தினமேரி கரையில் போடும்போது, குழந்தையையும் தூக்கி காவல்துறையினர் உள்ளே எறிந்தனர். 

ஆற்றில் மூழ்கி இறந்து போனார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை பார்த்து, நீச்சல் போட்டியில் கோப்பைகள் வென்ற அவர்களின் புகைப்படங்கள் சிரிக்கின்றன.தெருவெங்கும் இறைந்து கிடந்த ஒற்றைச் செருப்புகள், மூன்று மணி நேர வெறியாட்டத்தின் உச்சத்தை காட்டின.

எல்லாம் முடிந்த பின், சுலோச்சனா முதலியார் பாலத்தில், வழக்கம்போல பேருந்துகள் ஓட ஆரம்பித்தன. பாலத்தின் அடியில், இந்த பதினேழு உயிர்களை சுமந்தபடி தாமிரபரணி ரத்தச்சிவப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்.

1. விக்னேஷ் (ஒன்றரை வயது குழந்தை), 2. ரத்தினம், 3. சஞ்சீவி, 4.ஷாநவாஸ், 5. குட்டி என்ற குமார், 6.இரத்தினமேரி, 7. இன்னாசி மாணிக்கம், 8. ஜான் பூபாலராயன், 9. வேலாயுதம், 10.கெய்சர், 11. ஜெயசீலன், 12.அந்தோணி, 13. முருகன், 14. ராஜி, 15. ஜோசபின், 16. அப்துல்ரஹ்மான், 17. ஆறுமுகம். 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளவரை, தாமிரபரணி ஆறு இருக்கும் வரை, இந்த பதினேழு பேரின் பெயர்களும் நிலைத்து நிற்கும்.

நன்றி - தீக்கதிர் 23.07.2018