Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Monday, April 27, 2026

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Thursday, March 5, 2026

மாட்டிக் கொண்ட மகாராஜா

 





 

10,11,ஆகஸ்ட், 2024 ஆகிய தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் 37 வது பொது மாநாடு திண்டிவனம் நகரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற “மக்கள் ஒற்றுமை கலை விழா”வில் நான் எழுதிய “மாட்டிக் கொண்ட மகாராஜா” நாடகத்தை எங்கள் தோழர்கள் அற்புதமாக நடித்து மக்களின் கரவொலியை அள்ளினார்கள்.

ராஜா, மகாராஜா, மீண்டும் மகாராஜா, சந்திரனில் மகாராஜா ஆகிய நாடகங்களின் தொடர்ச்சி இந்த "மாட்டிக் கொண்ட மகாராஜா" 

மாநாடு முடிந்த பின்பு அதனை இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இந்திய அரசில் என்ன நிகழும் என்று நாடகம் வாயிலாக எதிர்பார்த்தோமோ  அது நடக்காத காரணத்தால் இந்த நாடகத்தை இங்கே பகிர்வது பொருத்தமில்லை என்று அதை ஒரு ஓரத்தில் வைத்து விட்டேன்.

பீகார் முதல்வர் பொறுப்பிலிருந்து நிதீஷ்குமார் இப்போது துரத்தப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராகப் போகிறார். மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம்.  முதல்வர் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல நிதீஷ்.

அதனால் நாடகக் காட்சிகள் நிஜமாகும், விரைவிலேயே . . .

 

மாட்டிக் கொண்ட மகாராஜா . . .

 

காட்சி 1


 

இடம் : அரசவை

தலையில் உலகம் சுற்றும் வாலிபன் தொப்பியோடு “ராஜாவுக்கு ராஜா நாந்தான், எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” என்ற பாடல் ஒலிக்க, அப்போ நாம எல்லாம் யாரு? என்ற கேள்வியோடு மந்திரிகள் இருவரும் பார்த்துக் கொள்ள, மகாராஜா அரசவைக்கு வருகிறார். அவரது கேமராமேன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

 மந்திரி 1 : போதும்யா போதும். விட்டா நாள் ஃபுல்லா போட்டோ எடுத்துக்கிட்டே இருப்ப போல!

 மகாராஜா : என்னய்யா இந்த தொப்பில நான் எப்படி இருக்கேன்?

 மந்திரி 2 : அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னறீங்க .

 மந்திரி 1 : ஏன்யா நீ எம்.ஜி.ஆர் போட்டோவாவது பாத்திருக்கியா? இப்படி  உசுப்பேத்தி உசுப்பேத்தி நீ நல்ல பேரு வாங்கிக்கறே!

 மகாராஜா :  சரி விடுங்கய்யா!  மக்கள் என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?

 மந்திரி 1     : நல்லபடியா எதுவும் பேசலை

 மந்திரி 2 : இந்தாளு சொல்றதை நம்பாதீங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் உங்க புகழ்தான்.

 மந்திரி 1 : அதுலயே எவ்வளவு பேர் கழுவி கழுவி ஊத்தறாங்க தெரியுமா?

 அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்கிறது.

 மகாராஜா : அங்க என்ன சத்தம்?

 புகைப்படக்காரர் : பழைய மகாராஜாவோட பையன் ஒரு கூட்டமா வந்திருக்காரு!

 மகாராஜா : அந்த சின்னப்பையனுக்கு என்ன வேணுமாம்?

 மந்திரிகள் இருவரும் வெளியே போய் சின்ன ராஜாவுடன் பேசி விட்டு உள்ளே வருகிறார்கள்.

 மந்திரி 1 : போன தடவை யானை மாலை போட்டு நீங்க மகாராஜாவானீங்க இல்லை! அப்போ . . .

 மகாராஜா : அதுக்கு இப்போ என்னய்யா?

 மந்திரி 1 : அஞ்சு வருஷம் கழிச்சி மறுபடியும் யானையை வச்சி மகாராஜவை தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னீங்களாம். அதை ஞாபகப்படுத்த வந்திருக்காரு

 மந்திரி 2 : நாமெல்லாம் என்னிக்குய்யா சொன்ன வார்த்தையை காப்பாத்தியிருக்கோம். அஞ்சு வருஷம் முன்னாடி சொன்னதை எல்லாம் இப்போ செய்யனுமா என்ன?

 மகாராஜா : விடுய்யா பாத்துக்கலாம். நாம பழக்கின யானைதானே!  

மந்திரி 1 : போன தடவை உங்க கழுத்தில மாலை போட்டதும் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தீங்க இல்ல!

 மந்திரி 2 : அதனால என்னய்யா?

 மந்திரி 1 : ஓவர் ஃப்ளாஷ் ஒத்துக்காம அதோட பார்வையே போயிடுச்சு.

 மந்திரி 2 : அப்போ அது ரிஸ்க்! அந்த யானை சின்னப்பையன் கழுத்தில மாலையை போட்டா நம்ம கதை அம்பேல்.

 மகாராஜா : வேற என்னய்யா செய்யறது?

 மந்திரிகள் இருவரும் யோசித்த படியே அங்கும் இங்கும் நடக்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, ஒரு சூப்பர் ஐடியா!

 மகாராஜா : என்னய்யா அது?

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் பலப்பரிட்சை செய்யுங்க. அதில நீங்க ஜெயிச்சிடலாம்.

 மந்திரி 1 : யோவ, அவரு சின்னப்பையன், நம்ம மகாராஜாவுக்கோ வயசாயிடுச்சு.

 மந்திரி 2 : நாமெல்லாம் சுத்தி நின்னு அவனை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். அதுல அவன் கவனம் மாறும். அப்போ மகாராஜாவை ஜெயிக்க வச்சிடுவோம். நமக்கு ஏத்த ஒரு ஆளை அம்பயர் ஆக்கிடலாம்.

 மந்திரி 1 : யானைக்கு பதிலா பலப்பரிட்சைன்னா அவன் ஒத்துக்குவானா?

 மந்திரி 2 : நான் என்ன பேசறேன்னு பாரு! அவனை கூட்டிட்டு வா

 சின்ன ராஜா வருகிறார்.

 மந்திரி 2 : இங்கே பாரு தம்பி! இந்த ப்ளூ கிராஸ், பீட்டா எல்லாம் ரொம்ப தகறாரு செய்யறாங்க! யானையை சித்திரவதை செய்யறோமாம். நீயும் மகாராஜாவும் யாருக்கு வலிமை அதிகம்னு பலப்பரிட்சை செய்யுங்க. ஜெயிக்கறவங்க மகாராஜாவாயிடுங்க!

 சின்ன ராஜா யோசிக்கிறார்.

 மந்திரி 2 : நீ சின்னப்பையன்தானே!  உனக்கே உன் பலத்து மேல நம்பிக்கை இல்லையா?

 சின்ன ராஜா :  எனக்கா பயமா? உங்காளு எவ்வளவு நேரம் தாங்குவார்னு யோசிச்சேன். சரி மோதிப் பார்க்கலாம். எப்போ?

 மகாராஜா : நாளைக்கே


 காட்சி  2



ஒரு டேபிள் போடப்பட்டு இரண்டு நாற்காலிகளில் மகாராஜாவும் சின்ன ராஜாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் ஒரு  சேர் போடப்பட்டு அதில் அம்பயர் உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 சின்ன ராஜா : ஆரம்பிக்கலாமா?

 அம்பயர் பதில் சொல்லாமல் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : சார்! ஸ்டார்ட் சொல்லுங்க

 அம்பயர் வாயில் மிக்ஸரை மென்று கொண்டிருக்க கையால் ஜாடை காட்டுகிறார்.

 மகாராஜாவும் சின்ன ராஜாவும் கைகளை கோர்த்து மோதுகிறார்கள்.

 மந்திரி 2 : தம்மாத்தூண்டு பையன் நீ, மகாராஜாவோட மோத வந்துட்டியா?

 மந்திரி 2 : உங்க தாத்தாவாலத்தான்     நாடே நாசமா போச்சு!

 மந்திரி 1 : உங்க அப்பாவும் சரியில்லை.

 மந்திரி 2 : நீயெல்லாம் மகாராஜாவானா எல்லா பொண்ணுங்களோட தாலியையும் பறிச்சி பக்கத்து நாட்டுக்கு கொடுத்துடுவே

 சின்ன ராஜா  அம்பயரைப் பார்த்து : இதையெல்லாம் அடக்க மாட்டீங்களா?

 அம்பயர் அப்போதும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 மகாராஜாவின் நண்பர்கள் நிதீஷும் சந்திரபாபுவும் வருகிறார்கள்.

 நிதீஷ் : என்ன மந்திரி? மகாராஜா தோத்துடுவார் போல இருக்கே!

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் மகாராஜாவை ஜெயிக்க வைக்க மாட்டீங்களா?

 நீதீஷும் சந்திரபாபுவும் சேர்ந்து மகாராஜா கையோடு தங்கள் கைகளை சேர்த்துக் கொண்டு அழுத்தம் தர மகாராஜா ஜெயித்து விடுகிறார்கள்.

 வெற்றி! வெற்றி ! என எல்லோரும் குதிக்கிறார்கள்.

 சின்ன ராஜா : இது அநியாயம்! அராஜகம்! ஒத்தனோட மூணு பேர் மோதுவாங்களா? என்ன அம்பயர் இதை கேட்க மாட்டீங்களா?

 அம்பயர் காதில் வாங்காதது போல மீண்டும் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : நாளைக்கு மகாராஜா மீண்டும் பதவியேற்கப் போகிறார். எல்லாரும் வந்துடுங்க.

 

காட்சி 3



மகாராஜா அவரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார். மந்திரிகளும் நண்பர்களும் கை தட்டுகிறார்கள்.

 சின்ன ராஜா : பிராடு செஞ்சு பதவிக்கு வந்தீங்களே! மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

 மகாராஜா : போன பத்து வருஷமா என்ன செஞ்சேன்?

சின்ன ராஜா : ஒன்னும் செய்யல

 மகாராஜா : இப்பவும் அப்படித்தான்.

 மகாராஜா அரசவையை விட்டு புறப்படுகிறார்.

 நிதீஷும் சந்திரபாபுவும் : எங்கே கிளம்பிட்டீங்க?

 மகாராஜா : என்னோட ரூமுக்குத்தான்.

 நீதீஷ் : இங்க இருக்க வேண்டாமா?

 மகாராஜா : இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரே இடம் அரசவைதான்.

 சந்திரபாபு : அப்படில்லாம் எஸ்கேப் ஆயிட முடியாது. அஞ்சரை மணி வரைக்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

 நிதீஷ் : அந்த கிரீடத்தை கொடு. எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கறேன்.

 மகாராஜா : அது மகாராஜா கிரீடம்தான்.

 சந்திரபாபு : நாங்க இல்லைன்னா நீ எப்படி மகாராஜாவாயிருப்ப?

 நிதீஷ் : இப்போ கொடுக்கலைன்னா அது சின்ன ராஜா தலைக்கு நிரந்தரமா போயிடும்.

 இரண்டு பேரும் கிரீடத்தை மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறார்கள். போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, இந்தாங்க, உங்க முதலாளிகளுக்கு தர நீங்க கேட்ட லாலிபாப்

 சந்திரபாபு : அந்த லாலிபாப்பை எங்களுக்கு கொடுங்க.

 மகாராஜா : அது என் முதலாளிகளுக்கு

 நிதீஷ் : கண்ணா, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நாங்கதான் உன் முதலாளி.

 அவர்கள் இருவரும் லாலிபாப்பை சுவைக்க

 மகாராஜா : என்னய்யா இது.

 மந்திரிகள் இருவரும் : இனிமே இப்படித்தான் . . .

 மகாராஜா அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்து கொள்ள …

 “உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்” என்ற பாடல் ஒலிக்கிறது.

 குரல் : இது கதையல்ல, கற்பனையல்ல. இன்னும் ஐந்து ஆண்டுகள், இந்த தேசம் பார்க்கப் போகும் கொடுமைகள்.

 


 

 

மகாராஜா : தோழர் சி.சோமசுந்தரம், கோட்ட அலுவலகம்

மந்திரி  1  : தோழர் ஜி.ரவி, ஆரணி

மந்திரி   2 : தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான், கோட்ட அலுவலகம்

சின்ன ராஜா : தோழர் பி.எஸ்.பாலாஜி, வேலூர் கிளை

புகைப்படக் காரர் : தோழர் சி.கணேசன், கோட்ட அலுவலகம்

அம்பயர்  : தோழர் கே.வி.பாலகுமார், கோட்ட அலுவலகம்

நிதீஷ்        :  தோழர் கே.ரபீக் அகமது, வேலூர் கிளை

சந்திரபாபு : தோழர் ஆர்.குமரேசன், கோட்ட அலுவலகம்.

 பிகு : மேலே உள்ள கார்ட்டூன்கள்  திண்டிவனம் மாநாட்டு கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டவை. 

 

 

Friday, December 5, 2025

திருப்பரங்குன்றமும் மத்தவிலாசப் பிரகசனமும்

 


தோழர் பிரளயன் 2018 ல் நடத்திய நாடகமான "மத்தவிலாச பிரகசனம்" படித்துக் கொண்டிருக்கிறேன். 

அதில் ஒரு வசனத்தையும் பாடலையும் படித்த போது இன்றைய திருப்பரங்குன்றம் நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதால்  அதனை பகிர்ந்து கொள்கிறேன்.


பொறுப்பில்லாத மனிதர் மூட்டும் பகை நெருப்பு இன்னமும் பரவிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் துயரம். 

Thursday, December 19, 2024

சைக்கிள் சாரங்கியா? அப்ப சரி, அப்ப சரி

 


இன்று மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.

 ராகுல் காந்தி ஒரு காங்கிரஸ் எம்.பி யை தன் மேல் தள்ளி விட்டதால் கீழே விழுந்து மண்டை உடைந்துள்ளதாக ஒரு பாஜக எம்.பி ஐ.சி.யுவில் படுத்துக் கொண்டுள்ளதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.

 யாரந்த எம்.பி என்று பார்த்தால் அது சைக்கிள் சாரங்கியாம்.

 யார் அந்த சைக்கிள் சாரங்கி?

 ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு கீழே . . .

 

மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை





மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி

இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.

ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.

ஆனால்  அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?

அவரும் அவரது இரண்டு மகன்களும்  எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?

இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?

இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.

அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.

அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.

சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.

வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.

ஆக மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!

 


பிகு: ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ் கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள். போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .

 

 

Friday, March 15, 2024

ரத்தத்தைக் கூட துடைக்க மாட்டீங்களாடா????

 


யாரோ அவங்க வீட்டிலேயே பின்னாடிலியிருந்து கீழே தள்ளி விட்டாங்களாம். கீழே விழுந்து நெத்தியில அடி, மூக்கில அடி, ரத்தமா ஒழுகுது. ஆஸ்பத்திரியில சேர்த்து மூனு தையல் போட்டாங்க, ஆஸ்பத்திரியிலேயே தங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னா, மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்குன்னு கிளம்பியாச்சு.

இதெல்லாம் செஞ்சது மோடின்னுதானே நெனச்சீங்க?


 

இவங்களும் மோடி மாதிரியேதான். டுபாக்கூர், முரடு.

 மம்தா பானர்ஜியின் லேட்டஸ்ட் ஸ்டன்ட் இது.

 யம்மா மம்தா உங்க குடும்பத்து ஆளுங்க ரொம்பவுமே மோசம். கீழே தள்ளி விடறாங்க, கொட்டற ரத்த்ததை (அது மெல்லிசா வழியற மாதிரிதான் ஏற்பாடு) துடைக்கக் கூட மாட்டேங்கறாங்க. அவங்களை முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க, நாளைக்கு கொலை கூட செய்ய தயங்க மாட்டாங்க, படுபாவிங்க.

 ஏம்பா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டருங்களா, உங்க தீதிக்கு நிஜமாவே அடிபட்டதுன்னு நம்பியா ஆஸ்பத்திரிக்கு கூட்டம் கூட்டமா வந்தீங்க?

 தொண்டர் மைண்ட் வாய்ஸ் : அப்படி நம்பி வரலைன்னா எங்க உடம்பிலிருந்து ரத்தம் கொட்ட வச்சி எங்களை ஆஸ்பத்திரியில படுக்க வச்சுடுவாங்களே

Monday, February 26, 2024

அடுத்த ஸ்டண்ட் இதானே மோடி?

 


தண்ணீருக்கடியில் ஸ்டண்ட் வேலை செய்தார் மோடி. அந்த படத்தை நான் போடப்போவதில்லை. இதை சிலாகிக்கிற சங்கி முட்டாள்கள் ஒரு அவமானம். 

அந்த கேடு கெட்ட மனிதனின் அடுத்த வெட்கம் கெட்ட நாடகம் பாராசூட்டில் தொங்குவதாகத்தான் இருக்கும் . .

Sunday, December 31, 2023

சந்திரனுக்கு டிமோ போனால் . . .


டிமோ சந்திரனுக்குப் போனால் எப்படி இருக்கும் என்றொரு கற்பனையில் ஒரு நாடகம் எழுதினேன். செப்டம்பர் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் நாடகத்தை அரங்கேற்றினோம்.

 ஒரே ஒரு நாள் ஒத்திகையின் போது மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. அதன் பின் தோழர்களே பயிற்சி எடுத்துக் கொண்டு சில வசனங்களை மெருகேற்றி சிறப்பாக நடித்து மக்களின் கைத்தட்டுக்களை அள்ளிக் கொண்டார்கள்.  

 அந்த நாடகத்தின் எழுத்து வடிவம் உங்களுக்காக.

 மகாராஜாவாக தோழர் சி.சோமசுந்தரம்,

மந்திரி 1  ஆக தோழர் ஜி.ரவி



மந்திரி 2 ஆக  தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான்

விஞ்ஞானியாக  தோழர் பி.எஸ்.பாலாஜி

புகைப்படக்காரராக  தோழர் சி.கணேசன்

 





 

சந்திரனில் மகாராஜா

 

பின்னணிக் குரல் : நிலவுக்கு சந்திராயன் மூன்றை அனுப்பி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் நம் விஞ்ஞானிகள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாய் அந்த மகத்தான சாதனையை சம்பந்தமே இல்லாதவர்கள் களவாடினால் என்ன நடக்கும்?

 “ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா”ஒலிக்க மகாராஜா அரசவைக்கு வருகிறார். வந்து நின்று  ஸ்டைலாக பார்க்கிறார், எல்லா பக்கமும் திரும்பி நிற்கிறார். அவரை போட்டோகிராபர் புகைப்படங்கள் எடுக்கிறார். பிறகு அரியணையில் அமர்கிறார்.

 மந்திரிகள் இருவர் பக்கத்தில் வந்து நிற்கிறார்.

 மகாராஜா: நாட்டில என்னய்யா நடக்குது?

 மந்திரி 1 ;: ;மகாராஜா பணப்பூரில் பயங்கரப் பிரச்சினை. மக்கள் அடித்துக் கொண்டு சாகிறார்கள். நாம் படையை அனுப்பி அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

 மந்திரி 2 : யோவ் மங்குனி மந்திரி, அந்த சண்டையே நாம ஏற்பாடு செஞ்சதுதான். சண்டை நடந்துகிட்டே இருந்தாதான் எவனும் நம்ம கிட்ட வர மாட்டேன்.

 மந்திரி 1 : மகாராஜா, விலைவாசி ஏறிக்கிட்டே இருக்குது, வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடுச்சு, ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.

 மகாராஜா : ஏன்யா எப்ப பாரு நொய் நொய்யுன்னு ஏதாவது பிரச்சினையை சொல்லிக்கிட்டே இருக்க? இதுக்குத்தான்யா நான் அரசவைக்கே வரதுல்ல. என் நாட்டில எனக்கு பிடிக்காத ஒரே இடம் இதுதான்யா.

 மந்திரி 2 :  மகாராஜா சந்தோஷப்படற மாதிரி, அவரு பெருமையா பேசற மாதிரி ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுய்யா.

 மந்திரி 1 : இருந்தா சொல்ல மாட்டேனா? ஏன் நீயும் மந்திரிதானே! நீ என்ன கிழிக்கற?

 மகாராஜா : ஏய், அப்டில்லாம் பேசக் கூடாது. இவன் என் மன சாட்சி, மனதின் குரல். என் மனசுல இருக்கறத செஞ்சு முடிக்கறவன். பணப்பூர் சண்டைக்கே இவந்தான் மெயின்.

 மந்திரி 1 : மகாராஜா, அந்த காலத்துல சந்திரனுக்கு போக ராக்கெட் கண்டு பிடிக்க ஆரம்பிச்சாங்க. அந்த வேலை இப்போ முடிஞ்சு நம்ம சைன்டிஸ்டுங்க எல்லாம் இப்போ ரெடியா இருக்காங்க. நீங்க கையெழுத்து போட்டா அவங்க கிளம்பிடுவாங்க.  நீங்களும் அவங்கள பெருமையா வழி அனுப்பி வைக்கலாம். போட்டோ எடுத்து போடலாம்.

 மகாராஜா : சரி கூப்பிடு அந்த ஆளுங்களை.

 சைன்டிஸ்ட் வருகிறார் : வணக்கம் மகாராஜா

 மகாராஜா :  நமஸ்தே ன்னு சொல்லுய்யா.

 மந்திரி 2 : மகாராஜாவுக்கு என்ன சொன்னா பிடிக்கும்னு கூட தெரியாம நீயெல்லாம் என்னய்யா ஆராய்ச்சி செஞ்ச?

 சைன்டிஸ்ட் : மகாராஜா, எங்க தாத்தா மகாராஜா சந்திரனுக்கு போக ஒரு ராக்கெட்டு கண்டுபிடிக்க ஆரம்பிச்சாரு. அது இப்போ தயாரா இருக்கு! நீங்க இதுல்ல கையெழுத்து போட்டா கஜானாவில இருந்து பணத்தை வாங்கிட்டு மத்த ஏற்பாட்டை செய்வோம்.

 மகாராஜா ஃபைலை கையில் வாங்குகிறார். இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள தன் பெயரைப் பார்த்து கையெழுத்து போடுகிறார்.

 சைன்டிஸ்ட் நன்றி சொல்லி விட்டு கிளம்புகிறார்.

 மந்திரி 2 : இரு இரு எங்க கிளம்பிட்டே. கொஞ்சம் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு போ.

 சைன்டிஸ்ட் : என்ன மந்திரியாரே?

 மந்திரி 2 : சந்திரனுக்கு யார் போகப் போறாங்க?

 சைன்டிஸ்ட் : நாந்தான் மந்திரியாரே

 மந்திரி 2 :  அங்கே போய் என்ன செய்யப் போற?

 சைன்டிஸ்ட் : அங்க தண்ணி இருக்கான்னு கண்டு பிடிப்பேன். அங்கே இருக்கிற கல்லையையும் மண்ணையும் கொண்டு வந்து இங்கே ஆராய்ச்சி செய்வேன்.

 மந்திரி 2 : தண்ணி இருக்கான்னு பார்க்கவும் கல்லையும் மண்ணையும் கொண்டு வர நீ எதுக்கய்யா? அரசாங்கம் செலவு செய்யும்.  உனக்கு பேரும் புகழுமா?

 மந்திரி 1 : அப்போ என்ன நீ போகப் போறியா?

 மந்திரி 2 : நான் எதுக்குய்யா போகனும்?  நம்ம நாட்டுக்கே தலைவர் மகாராஜா. அவர் போனாதான் நாட்டுக்கே பெருமை. சந்திரனுக்குப் போற முதல் மகாராஜா நம்ம மகாராஜாவாதான் இருக்கனும்.

 மகாராஜா : இது நல்ல ஐடியாவா இருக்கே! நானே சந்திரனுக்குப் போறேன்.;

 சைன்டிஸ்டும் ம;ந்;திரி 1 ம் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

 சைன்டிஸ்ட் : மகாராஜா, அது கொஞ்சம் ரிஸ்க். நான் அதுக்காகவே படிச்சவன்,

 மந்திரி 2 : மகாராஜா படிக்காதவருன்னு சொல்றியா? உலகத்துல யாருமே படிக்காத படிப்பை அவரு மட்டுமே படிச்சதுக்கான சர்டிபிகேட் இருக்கு, பார்க்கறியா?

 மந்திரி 1 (மெதுவாக) : நாட்டுல அத்தனை பேரும் அதை கேட்டாலும் தர மாட்டீங்க, அப்படி ஒன்னு இருந்தா காண்பிக்க மாட்டீங்களா?

 மகாராஜா : இங்கே பார், நல்ல நாள் பார்த்து நான் கிளம்பனும். அதுக்கு ஏற்பாடு செய். யோவ் சைன்டிஸ்ட், நான் என்ன செய்யனும்னு நீதான் எனக்கு புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கனும்.

 

காட்சி 2

 

விண்வெளிக்கூடம்


சைன்டிஸ்ட் : மகாராஜா, இதுதான் சந்திரனுக்கு போகும் இயந்திரம். இதுக்குள்ள உட்கார்ந்து முதலில்  காற்று அளவை சோதிக்கனும். புவியீர்ப்பு விசையை கவனிக்கனும். அப்பறமா …

 மகாராஜா : அதெல்லாம் நீங்க செஞ்சு வச்சிருங்க. நான் உள்ள போய் உட்கார்ந்து ஏதாவது மந்திரத்தை சொல்வேன். மிஷின் கிளம்பிரனும்.

 சைன்டிஸ்ட் : இயந்திரத்திற்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டு வருகிறார்.

        

சைன்டிஸ்ட் :  மகாராஜா இந்த மந்திரத்தை ஞாபகம் வச்சுக்குங்க

 மகாராஜா: என்ன மந்திரம் அது?

 சைன்டிஸ்ட் :  அண்டா காகசம், அபுகா ஹுகும் புறப்படு சீசேம்.

 மந்திரி 2 : யோவ்! இது கொள்ளைக் கூட்டத்தோட மந்திரம்தானே!

 மந்திரி 1 : பொருத்தமாத்தானே இருக்கு!

 சைன்டிஸ்ட்  மகாராஜா இதை போட்டுக்குங்க என்று விண்வெளி உடையைத் தருகிறார்.

 மகாராஜா : இதைப் போட்டுக்கிட்டா என் கம்பீரமே போய்டுமேய்யா?

 மந்திரி 1 : இதை போடலைன்னா உங்க உயிரே போயிடுமே!

 மகாராஜா தயாராக வருகிறார். அவர் கூடவே போட்டோகிராபரும் வருகிறார்.

 சைன்டிஸ்ட் : மகாராஜா, இவரு எதுக்கு?

 மகாராஜா : இவரு இல்லைன்னா என்னை சந்திரனில யாரு போட்டோ எடுப்பா?

 சைன்டிஸ்ட் : ஒருத்தர்தான் உட்கார முடியும். கவலைப்படாதீங்க மகாராஜா, நம்ம மிஷினே உங்களை போட்டோ எடுக்கும்.

 மகாராஜா மிஷினுக்கு அருகில் போய் விட்டு மீண்டும் வருகிறார்.

 மகாராஜா : யோவ் சைன்டிஸ்ட், பஞ்சாங்கத்தை ஒழுங்கா பாத்த இல்ல? இன்னிக்கு அமாவாசை கிடையாதே? நான் பாட்டுக்கு சந்திரனை தேடிக்கிட்டு இருக்கப் போறேன்.

 சைன்டிஸ்ட்: ராஜா, நீங்க சந்திரனில இறங்கின உடனே இதே மந்திரத்தை கொஞ்சம் மாத்தி சொல்லனும்

 மகாராஜா:. நீ வாயை மூடு. அதெல்லாம் எனக்கு தெரியும்.

 மகாராஜா சந்திரனுக்கு புறப்படுகிறார்.

 சைன்டிஸ்ட் கையில் உள்ள கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து

 சைன்டிஸ்ட் : மகாராஜா சந்திரனுக்கு போயிட்டார்

 சந்திரனில் இறங்கியதும்

 மகாராஜா : அண்டா பிரியாணி, அப்பா வச்ச பேரு, டைகர் கா ஹுகும்.

 சைன்டிஸ்ட்  தலையில் கை வைத்துக் கொள்கிறார்.

 மந்திரி 1 : என்னாச்சு சைன்டிஸ்டு?

 சைன்டிஸ்ட் : இப்படியெல்லாம் சொதப்புவார்னு நான் நெனச்சேன்.

 மந்திரி 2: என்னாச்சுய்யா?

 சைன்டிஸ்ட் :மகாராஜா மிஷினில இருந்து இறங்கிய உடனே  சொல்ல வேண்டிய மந்திரத்தை மாத்தி சொல்லிட்டாரு.

 மந்திரி 1 : அதனால என்ன?

 சைன்டிஸ்ட் : மிஷின் நிற்காம சுத்திக்கிட்டே இருக்கும்.

 மந்திரி 1 : அப்போ மகாராஜா?

 சைன்டிஸ்ட் : அவரு இனிமே  அதை துரத்திக்கிட்டே இருக்கனும்.

 ராக்கெட் போய்க் கொண்டே இருக்கிறது, அதன் பின்னால் மகாராஜாவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

 அடுத்தவர் உழைப்பை களவாட நினைப்பவர், மக்களைப் பற்றிக் கவலையில்லாமல் சுய நலமாய் வாழ்பவர் நிச்சயம் ஒரு நாள் தெருவில் நிற்பார். அந்த நாள் சீக்கிரம் வரும்.

 


பிகு: ஒரு ஆட்டோவின் நான்கு பக்கங்களிலும் விண்கலனின் படத்தை ஒட்டி அதை சந்திராயனாக மாற்றி இருந்தோம். சந்திராயன் மேலே செல்வதற்குப் பதிலாக சாலையில் சென்றது.