Friday, June 30, 2017

அற்புதமான உரையின் சுருக்கம்கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் நிகழ்த்திய அற்புதமான உரையின் சுருக்கத்தை மதுரைத் தோழர் வெண்புறா சரவணன் அவர்கள் ஒரே படத்தில் சாறாகக் கொடுத்துள்ளார்.

அவருக்கு நன்றி சொல்லி அப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.ப்ளூ டூத், ஹெட்போனாவது பயன்படுத்தித் தொலையுங்கள்

 

வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பேசும் வழக்கம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பெருமாள் கோயிலில் ஒரு கருத்தரங்கம் முடிந்து திரும்பி வரும் வழியில் வாலாஜாபாத்தில் ஒரு இளைஞன் பைக் ஓட்டிக் கொண்டு போனும் பேசிக் கொண்டு வந்தான். ஒற்றைக் கை சவாரிதான். அவன் கையிலிருந்து போன் தவறி விழ, அதைப் பிடிப்பதற்கான முயற்சியில் பேலன்ஸ் தடுமாறி அப்படியே பைக்கோடு கீழே விழுந்தான். எங்கள் காரை ஓட்டி வந்த தோழர் மெதுவான வேகத்திலேயே ஓட்டி வந்ததால் பிரேக் போட்டு நிறுத்தி விட்டார். வேகமாய் வந்திருந்தால் அந்த இளைஞன் மீது மோதுவது தவிர்க்க இயலாததாகி இருக்கும்.

பதினைந்து நாட்கள் முன்பாகக் கூட வேலூரிலும் இதே போன்ற காட்சியை  கொஞ்சம் தொலைவில் இருந்தபடி  காண நேரிட்டது. 

நேற்று மீண்டும்.

சாகசக்காரர்களே, நீங்கள் மட்டும் விழுந்து அடி பட்டுக் கொண்டால் பரவாயில்லை.  உங்கள் தவறால் மற்றவர்களின் உயிருக்கும் அல்லவா ஆபத்து வருகிறது?

வாகனத்தில் போகும் போது தொலைபேசியை தவிர்க்க முடியாத அளவிற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பேசுபவராகக் கூட இருக்கலாம்

அல்லது இந்தியா பாகிஸ்தான் மத்தியில் அமைதியை உருவாக்க மோடியோடோ அல்லது நவாஸ் ஷெரீபோடோ கூட பேசிக் கொண்டிருப்பீர்கள்

இந்த ஒற்றைக் கை சவாரிக்கு பதிலாக ப்ளூ டூத், ஹெட் போன் ஆகியவற்றையாவது பயன்படுத்தித் தொலையுங்களேன்.

 

Thursday, June 29, 2017

மகாத்மாதான் . . . மோடி இல்லைப்பா......

 
 
மாடுகளின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை மகாத்மா காந்தி ஏற்க மாட்டார் என்று மோடி சொன்னது பற்றி பல கருத்துக்கள் உலா வருகிறது.
 
அது அவர் நடிக்கும் நாடகம் என்றும் பலர் சொல்கிறார்கள்.
 
அரசியல் கட்டாயம் என்றும் சிலர் சொல்கிறார்.
 
இனி மாட்டின் பெயரால் கொலை நடக்காது என்று இப்போதும் கூட சிலர் அப்பாவிகளாக நம்புகிறார்கள் 
 
அல்லது
 
அப்படி நடிக்கிறார்கள்.
 
மோடி சொன்னதை கொஞ்சம் ஆராய்ந்தால்
 
"மகாத்மா காந்தி ஏற்றுக் கொள்ள மாட்டார்"
 
என்றுதான் 
 
அவர் சொல்லியுள்ளார். நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றா சொல்லியிருக்கிறார்?
 
அவரு கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்களா?
 
 

அநாகரீக சங்கிக்கு அருமையான பதிலடி
மேலே உள்ள படத்தை முக நூலில் பார்த்தேன்.

இஸ்லாமியரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அநாகரீகமாக பதிவு எழுதிய ஒரு சங்கிக்கு அற்புதமான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனிதனுக்கெல்லாம் யாரும் பிரியாணியே கொடுத்திருக்க மாட்டார்கள். வெட்டி பந்தாவிற்காக கதை விட்டு நன்றாகவே வாங்கிக் கொண்டுள்ளான்.

மோடியின் கட்சி ஆட்கள் இப்படித்தானே இருப்பார்கள்!

Wednesday, June 28, 2017

புத்தியே வராதா புளுகர்களே? மோடி போலவே.....
தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முக நூல் பக்கத்தில்தான் இச்செய்தியைப் பார்த்தேன்.

இந்த இணைப்பிற்குச் சென்றால்   நீங்களும் பார்க்கலாம்.

எத்தனை முறை மாட்டிக் கொண்டாலும் இந்த மோடியின் அடிமைகள் மோசடி வேலைகளை நிறுத்தவே மாட்டார்களா?

மோடி போலவேதானே அவரது ஆட்களும் இருப்பார்கள்!!!!

Fraud, Fraud, Fraud

மோடியா? எழுதிக் கொடுப்பவரா? யார்? யார்? யார்?
மோடிக்கு  உரை எழுதிக் கொடுப்பவர் மூடர் என்பதால் மோடி அபத்தமாக உளருகிறாரா?

அல்லது 

மோடி மூடர் என்பதால் அவருக்கு உரை எழுதிக் கொடுப்பவர், மோடியின் தரத்துக்கு உரைக்கு எழுதிக் கொடுக்கிறாரா?

ஆம்,

மீண்டும் ஒரு அபத்த உரை, அமெரிக்க மண்ணில்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள அட்டாக் என்ற நகரத்தை இந்தியாவில் உள்ளதாய் பேசியுள்ளார் மோடி.

இன்னும் இரண்டு வருடங்களுக்காக மோடியால் வரலாறெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது, அவருக்கு உரை எழுதுபவராலும் கூட.

ஆகவே இந்திய மக்களே,

Enjoy The Comedy

Tuesday, June 27, 2017

கண் சிமிட்ட . . .கண்ணீர் வந்தது
சில தினங்கள் முன்பாக சென்னை சென்றேன்.  வழியில் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காபி சாப்பிட சென்ற போது பார்த்த காட்சியை கொஞ்சம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 

நான் அமர்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் இருந்த மேஜையை சுத்தம் செய்த சிறுவன், அந்த சோபாவில் ஒரு நொடி உட்கார்ந்து ஸ்டைலாக கால் மீது கால் போட்டுக் கொண்டான். அடுத்த நொடியே யாராவது அவனை பார்க்கிறார்களா என்று அச்சத்தோடு சுற்றும் முற்றும் நோக்கினான்.

நான் அவனைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைக்க, என்னைப் பார்த்து கண் சிமிட்டு விட்டு அடுத்த மேஜைக்கு போய் விட்டான்.

அந்த சிறுவனுக்கு அதிகபட்சம் பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும். நேபாளத்திலிருந்தோ அல்லது ஏதோ வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது இன்னும் பால் வடியும் அந்த முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

படிப்பை தொடர முடியாமல் சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு உழைக்க வருமளவிற்கு வறுமை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கையில் ஒரு நிமிடம் கண்ணில் நீர் துளித்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சி.ஐ.டி.யு அமைப்பின் செயல் திட்டத்திலும் அது உள்ளது. விரைவில் அப்பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியம். 

பின் குறிப்பு : மேலே உள்ள படம் கூகிளிலிருந்து எடுக்கப்பட்டது


 

Sunday, June 25, 2017

ஒரு சிறிய உடைப்பு

கணினி பழுதாகி விட்டது.
சரியாகும் வரை   A Small Break.

Friday, June 23, 2017

ஏழையென எழுதி . . .. அச்சா தின் அசிங்கம் . . .

மருத்துவரீதியில் எனக்கு ரத்தக் கொதிப்பு எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் அலங்கோல ஆட்சி மூலமாக காவிகள் உருவாக்கி விடுவார்கள் போல.

இன்று காலை ஹிந்து நாளிதழில் படித்த செய்தி அப்படிப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் டௌசா என்ற மாவட்டத்தில் யாரெல்லாம் ரேஷன் கடையில் இலவச கோதுமை வாங்குகிறார்களோ, அவர்கள் வீட்டுச் சுவரில்

“நான் ஏழை. ரேஷன் கடையில் இலவசமாக கோதுமை வாங்குகிறேன்”

என்று மாவட்ட நிர்வாகம் பெயிண்டால் எழுதி வைத்துள்ளது. குடும்பத் தலைவரின் பெயரையும் வேறு எழுதி வைத்துள்ளது.

தன்னுடைய மக்களை எப்படி கேவலப்படுத்துவது என்பதில் மோடியும் அவரது மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.

இன்று சுவரில் எழுதிய கயவர்கள் நாளை முகத்தில் பச்சை குத்துவார்களா?

இதுதானய்யா மோடி சொன்ன “அச்சா தின்”

இனியும் பாஜக விற்கு ஓட்டு போடுபவர்கள் மன நலன் குன்றியவர்களாக மட்டுமே இருக்க முடியும்….

Thursday, June 22, 2017

பத்து லட்சத்தோடு தொடரும் பயணம்
கோபத்தோடு முந்தைய பதிவை எழுதி விட்டு பின்னூட்டம் இருக்கிறதா, எவ்வளவு பார்வைகள் முந்தைய நாளில் இருந்தது என்ற விபரங்களைப் பார்த்தால் ஒரு இனிய தகவல் காத்துக் கொண்டிருந்தது.

ஆம்.

வலைப்பக்கத்தின் பார்வைகள், அதாவது Hits பத்து லட்சம்  என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.

2009 ல் வலைப்பக்கம் துவங்கினாலும்  2010 மத்தியிலிருந்துதான் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன்.  அப்போது தொடங்கிய பயணம் இதுவரை நிற்காமல் தொடர்கிறது. வெளியூர் பயணங்களின் போது பதிவுகள் எழுதியிருந்தாலும் வெளியிட முடியாத நிலை இருந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்பு அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்த மாதிரி சமயங்களுக்காக சில புகைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் ஆகியவை ட்ராப்டில் தயாராகவே இருக்கும்.

இத்தனை நாள் வலைப்பக்க அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வைக்கும் தலைப்புதான் உங்கள் பதிவை படிக்க தூண்டுகிறது. ஈர்க்கும் தலைப்பு இல்லாவிடில் முக்கியமான விஷயங்கள் எழுதியிருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாத அபாயம் உண்டு.

ஆயிரம் பதிவுகளை எழுதிய போது இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்வைகள் இருந்தது. பதிவுகள் இரண்டாயிரத்தைத் தொட்ட போது ஐந்து லட்சம் என்று பார்வைகள் அதிகரித்தது. மூவாயிரமாவது பதிவை நெருங்குகையில் பத்து லட்சம் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

அன்றாட நிகழ்வுகளை இடதுசாரிப் பார்வையுடன் எழுதுவது என்பது முன்னுரிமையாக இருந்தது. அவ்வப்போது சற்று இளைப்பாற இசை, சமையல் என்றும் செல்வேன்.  இன்றைக்கு மதவெறி மூலம் நாட்டை நாசமாக்கும் சங் பரிவாரக் கும்பலின் மோசடிகளை, பொய்களை அம்பலப்படுத்துவதே பிரதான பணியாக இருக்கிறது.

அந்த பணியை மேலும் வேகப்படுத்த “பத்து லட்சம் பார்வைகள்” என்ற எண்ணிக்கை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. ஒரு சில அனானிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கரப்பான்பூச்சி, கொசுக்களோடுதானே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சரியான பாதை எது என்பதை வழி காட்டிய எங்கள் அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாவிடில் நானும் இல்லை, என் எழுத்துக்களும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யும் தருணம் இதுதான்.

பதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாமி

சமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய் மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின் துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.

இந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம்!

கடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் தொடங்கி நேற்று மாலை தாம்பரம் வரை நடைபெற்ற  பயணத்தில் எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா? ஏதேனும் மோதல் உண்டா? பயணக் குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா? பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களா?ஆபாசமாய் பேசினார்களா? வழியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்களா? பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா?

என்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி?

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச் சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே  ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள். சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில்  உங்களிடம்தான் வருவதாக  இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே உள்ளீர்கள்?

சேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா, சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்?

ஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக் கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா? உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய தீய சக்தியின் உத்தரவா?

கூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ? நீங்கள் பதவி பெற்றதற்கும் உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும் ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ?

சொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ?

உங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில் நடைபோட அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள் ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால் நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி தடுக்க முடிக்கிறது? கைது செய்ய முடிகிறது?

அடிமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.