Tuesday, August 4, 2020

ஐ.பி.எல் – காசு, காசு,காசுதானா?




இந்திய கிரிக்கெட் வணிகமயமாகி பல்லாண்டுகளாகி விட்டது. அந்த வணிகமயத்தின் உச்சம் இந்தியன் பிரிமியர் லீக். விளையாட்டு வீரர்கள் தங்களையே பொருட்களாகக் கருதி ஏலத்திற்கு உட்படுத்திக் கொள்கிற கொடுமை ஐ.பி,எல் லால் வந்தது.

இந்த கொரோனா காலத்திலும் இந்தாண்டு ஐ.பி.எஸ் போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

 

இந்தியாவில் அல்ல,

 யுனைட்டெட் அரப் எமிரேட்ஸில்.

 

இது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

 

மக்களவைத் தேர்தல் நேரம், ஆகவே பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உண்டு, ஒரு  மாதம் தள்ளி வையுங்கள் என்று உள்துறை அமைச்சகம் 2009 ம் ஆண்டும் 2014 ம் ஆண்டு கேட்டதற்கு” எங்களுக்கு துட்டுதான் பிரதானம், தொலைக்காட்சி வருமானம்தான் முக்கியம்” என்று இரு முறையும் ஷர்ஜாவுக்குச் சென்று ஆட்டத்தை நடத்தினார்கள்.

 

அதே போல இந்த முறையும் வெளி நாட்டுக்கு போகிறார்கள்.

 

கொரானாவால் மக்கள் அவதிப்படுகிறார்களா, அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

 

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றும் அரசுடைய வாரியம் கிடையாதே!  அரசின் எந்த கட்டுப்பாடும் அவர்களுக்கும் பொருந்தாதே! அவர்கள் ஏன் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்! ஆட்டம் நடக்க வேண்டும், தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்ட வேண்டும். அவ்வளவுதான்.

 

விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட  அவர்களுக்கு கவலையில்லை. யாருக்காவது தொற்று வந்தால் வேறு புதியவரை கொண்டு வரலாம் என்று விதியை மாற்றி விட்டார்கள்.

 

காசு.துட்டு, பணம், மணி, மணி – இதற்கு முன்பாக கொரோனாவாக இருந்தால் என்ன? வேறு எதுவாக இருந்தால் என்ன?

 

என்ன! ஐ.பி.எல் ஆரம்பித்ததும் மக்களுக்கும் எல்லாம் மறந்து விடும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, புதிய கல்விக் கொள்கை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எல்லாம் பின்னுக்குப் போய் சென்னை சூப்பர் கிங்ஸா அல்லது மும்பை இந்தியன்ஸா அல்லது ராஜஸ்தான் ராயல்ஸா என்று விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள், அவை வெறும் முதலாளிகளின் அணிதான் என்பதை மறந்து.

 

பிகு: சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று குரல் கொடுத்த தேஷ் பக்த்ஸ், விவோ நிறுவனத்தின் ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரை நிர்ப்பந்திப்பார்களா, அந்த செயலாளர் அமித் ஷா வின் மகன் என்பது தெரிந்த பிறகு.


No comments:

Post a Comment