Tuesday, August 18, 2020

நான் பாதிக்கப்பட்டவனா? பழி வாங்கியவனா?

 

சனிக்கிழமை நடந்த சம்பவம் இது. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களைத் தேர்ந்தெடுத்து  ட்ராலியில் போட்டு பில் போடும் இடத்தில் வரிசையில் நின்றிருந்தேன். கொரோனா தொற்று அபாயம் காரணமாக போதுமான தனி நபர் இடைவெளி விட்டே நின்று கொண்டிருந்தோம். குளிர் சாதன வசதி அணைக்கப்பட பெரிய பெடஸ்டல் ஃபேன்கள் சுற்றிக் கொண்டிருந்தன.

 நான் கவுண்டரை நெருங்கினேன். பொருட்களை பில் போட கொடுத்து விட்டு சட்டைப் பையில் வைத்திருந்த ஒற்றை இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கையில் எடுக்கையில் அது கை நழுவி கீழே விழுந்தது. ஃபேன் காற்றின் வேகத்தில் சில அடிகள் பறந்தது. எனக்கு முன் நின்றிருந்தவர் அப்போதுதான் அவருடைய பில்லை செட்டில் செய்து விட்டு வாசலுக்குச் சென்று கொண்டிருந்தவர் அந்த நோட்டை கையில் எடுத்தார்.

 அதனைப் பெற்றுக் கொள்ள அவர் அருகில் சென்றேன்.  என்னை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. “சார் அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு என்னுடையது. என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டேன். அவர் ஒரு சின்ன சிரிப்போடு “தரையில் கிடப்பது எடுப்பவருக்கே சொந்தம்” என்று சொல்லி விட்டு தன் பர்ஸில் வைத்துக் கொண்டு வேகமாக நடந்தார்.

 நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். சுற்றி முற்றி பார்த்தேன். அவரவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல முகத்தை திருப்பிக் கொண்டிருந்தார்கள். நான் வேகமாக அவர் பின்னே சென்று மீண்டும் பணத்தைக் கேட்டேன். இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவும் எரிச்சலாகவும் “தரையில் கிடப்பது எடுப்பவருக்கே சொந்தம்”  என்று சொல்லி விட்டு அவரது காரை நோக்கி போய்க் கொண்டிருந்தார்.

அன்றைக்கென்று பார்த்து கிரெடிட் கார்ட் கூட எடுத்துச் செல்லவில்லை. போன பணம் போனதுதான் என்று நொந்து கொண்டிருந்த வேளையில் அந்த மனிதர் கார்க் கதவை திறக்க தன் கையிலிருந்த இரண்டு பைகளை தரையில் வைக்க, நான் வேகமாக ஓடிச்சென்று அந்த இரண்டு பைகளையும் எடுத்துக் கொண்டு “தரையில் கிடப்பது எடுப்பவருக்கே சொந்தம்” என்று சத்தமாக சொல்லி விட்டு என் இரு சக்கர வாகனத்தின் முன்னே வைத்து கிளம்பி விட்டேன். அந்த மனிதர் திகைத்துப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது என் வண்டியின் கண்ணாடி மூலம் நன்றாக தெரிந்தது.

 வீட்டிற்கு வந்து அந்த பைகளைப் பார்த்தால்

 ஒரு பையில் வெங்காயம், தக்காளி, காலிஃபளவர், உருளைக்கிழங்கு, காரட், காப்ஸிகம் உள்ளிட்ட பல காய்கறி வகைகள். எல்லாமே குறைந்த பட்சம் ஒரு கிலோ இருக்கும்.

 இன்னொரு பையிலோ

 பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ,

முந்திரி அரை கிலோ,

பாதாம் அரை கிலோ,

வெண்ணெய் ஒரு கிலோ,

நெய் ஒரு கிலோ,

நல்லெண்ணெய் 2 கிலோ

சர்க்கரை ஒரு கிலோ,

இன்ஸ்டன்ட் காபி கால் கிலோ

பனீர், சீஸ், ஜாம், தேன்,

 என்று இருந்தது. கணக்கு போட்டு பார்த்தால் இரண்டாயிரம் ரூபாய்க்கு இரண்டு மடங்கு அளவு மதிப்பு இருக்கும் போல.

 நெய்யில் வறுத்த முந்திரியை கொறித்த படி இந்த அனுபவத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 பாஸ்மதி அரிசியில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது.

 இப்போது சொல்லுங்கள்

 நான் பாதிக்கப்பட்டவனா

அல்லது

பழி வாங்கியவனா?

 என்ன முழுமையாக படித்தீர்களா? சொல்லுங்கள்.

 நீங்கள் யோசிக்கும் நேரத்தில் நான் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.

 இது ஒன்றும் எனக்கு நடந்த சம்பவம் அல்ல. வேறு யாருக்கும் கூட நடந்தது அல்ல. ஒரு வேளை உண்மையாக இருக்குமோ? அந்த இரண்டாயிரம் ரூபாய் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பதட்டத்தோடு படித்தீர்கள் அல்லவா?

 அதுதான் விஷயமே. வாசிப்பின் ருசிக்காக எழுதப்பட்ட ஒரு கற்பனை. அவ்வளவுதான். படம் பார்ப்பது. வீடியோ பார்ப்பது ஆகியவற்றை விட வாசிப்பே சுவாரஸ்யம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இப்பதிவு. படிக்கும் போதே காட்சியை உங்கள் கண் முன்னே கொண்டு வருவது எழுத்தில் மட்டுமே சாத்தியம். ஆகவே தொடர்ந்து வாசிப்பீர் . . .

 பிகு: தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் எம். குன்னி கிருஷ்ணன் அவர்களின் முக நூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பார்த்த பதிவை உணவுப் பொருட்களை மட்டும் மாற்றி தமிழில் கொடுத்தேன். அவ்வளவுதான்.

3 comments:

  1. வாசகனை வழிநெடுக தன் கைபிடித்து கூட்டிச்செல்லும் வலிமைப்பெற்ற எழுத்தாளனே சிறந்த எழுத்தாளன்.

    ReplyDelete
  2. Super secret of writing a short story.congrats comrade.

    ReplyDelete