Friday, November 30, 2018

இவ்ளோ துட்டையும் வாங்கிகிட்டுஐந்து கோடி ரூபாய் மூலதனம் போட்ட இந்திய அரசுக்கு எல்.ஐ.சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தன் லாபத்தில் 95 % ஐ பாலிசிதாரருக்கு ஒதுக்கி வைத்து மீதம் ஐந்து சதவிகிதத்தை லாபப் பங்குத் தொகையாக தரும்.

அப்படி மத்தியரசு போட்ட ஐந்து கோடி ரூபாய்க்கு (இப்போது எல்.ஐ.சி திருத்தச் சட்டத்தின் படி நூறு கோடி ரூபாய்) கடந்த 2017-2018 நிதியாண்டின் லாபத்தில் அரசுக்கு சேர வேண்டிய ஐந்து சதவிகிதத் தொகையான ரூபாய் 2,430 கோடி ரூபாய் எல்.ஐ.சி உயரதிகாரிகளால் மத்திய அமைச்சர் அருண் ஜெய்ட்லியிடம் வழங்கப்பட்டது.

இத்தனை ரூபாய் தருகிறார்களே, கொஞ்சம் புன்னகையோடு போஸ் கொடுப்போம் என்று உள்ளதா அந்த மந்திரிக்கு?

"எல்.ஐ.சி யின் பங்குகள் மட்டும் விற்கப்பட்டிருந்தால்" என்று கடந்த ஆண்டு எல்.ஐ.சி யின் வைர விழாவிலேயே புலம்பிய மஹானுபாவன் அல்லவா!

நம் முதலாளிகளான உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டிய லாபம் இந்திய நாட்டுக்கும் பாலிசிதாரர்களுக்கும் போகிறதே என்ற விரக்தியில் அமைச்சர் முகம் உம்மென்று ஆகி விட்டதோ?


செக்கச் சிவந்த வானம் அல்ல . . .

வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள்
தன் வாழ்க்கையை காத்துக் கொள்ள
கால் வலிக்க நடந்து வந்து
தலை நகரை சிவப்பாக்கினர்.

எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
காண நாடாளுமன்றத்தைக் கூட்டிடு
என்று முழக்கமிட்டு வந்தனர்.

தற்கொலைப்பாதையை கைவிட்டு
போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டனர்.

உங்களுக்காக நாங்கள்,
உங்கள் கரங்களோடு கரம் கோர்த்து
தோளோடு தோளாய் நிற்க

வழக்கறிஞர்கள்,
மருத்துவர்கள்,
மாணவர்கள்,
வாலிபர்கள்,
இன்சூரன்ஸ் ஊழியர்கள்
உள்ளிட்ட தொழிலாளர்கள்
சங்கமிக்க

போராட்டச் சூட்டில் 
செக்கச் சிவந்தது டெல்லி.

இறுதி வெற்றி என்றும்
எளிய மக்களுக்கே வலையில் சிக்கிய அனாமதேயங்கள்


பிணராயி விஜயன் ஏன் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை?புதுடெல்லி அரசு புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்து பழைய திட்டத்திற்கு மாறுவது என்று எடுத்த முடிவைப் பற்றி செவ்வாய் அன்று பதிவிட்டிருந்தேன்.

படிக்காதவர்களுக்காக அந்த பதிவின் இணைப்பு இங்கே உள்ளது

ஒரு முக்கியமான தகவலை அனாமதேயங்களுக்காகவே தவிர்த்துள்ளதாகவும் அதிலே குறிப்பிட்டிருந்தேன். அனானிகளுக்காக விரித்த வலை அது. எதிர்பார்த்தது போலவே இரண்டு அனானிகள் சிக்கிக் கொண்டார்கள்.

அனானிகள் போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் அளித்த பதிலையும் இங்கே ஒரு தனி பதிவாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Why Edappadi only? Why Not Kerala CM? Does he not learn from Kejriwal? A typical hypocrite post of a communist. Before advising other states, you implement in your own kerala.

ஏன் எடப்பாடிதான் கத்துக்கனுமா? பினராயி கத்துக்க வேண்டாமா? கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்ல ரத்து செய்ய சொல்லு. 
நான் அளித்த பதில் கீழே உள்ளது.

ஹாஹா. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அனானிகளின் புத்திகூர்மையை பரிசோதிக்க ஒரு முக்கிய தகவலை எழுதவில்லை என்று சொன்னதே இது போன்ற அபத்தமான பின்னூட்டம் வரும் என்றுதான்.

தெளிவா எச்சரிக்கை கொடுத்தும் அவசரப்பட்டு நான் விரிச்ச வலையில இப்படி வந்து சிக்கிட்டீங்களே!

புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை முதலில் ஏற்க மறுத்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. அந்த முடிவை மட்டும் மம்தா அரசு இன்னும் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது.

கேரளாவில் அப்போது ஏ.கே.அந்தோணி அரசு.  காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அரசு ஊழியர்களின் கடுமையான போராட்டத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்திற்கு ஆதரவு தந்ததாலும் அந்தோணி அரசால் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற முடியவில்லை. அந்தோணியின் முடிவையே அவருக்குப் பின் முதல்வரான உம்மன் சாண்டியும் பின்பற்ற வேண்டியிருந்தது.

பிறகு மத்தியிலும் ஆட்சி மாற்றம், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம். மன்மோகன் ஆட்சிக்காலத்தில் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாறச் சொல்லி நிர்ப்பந்தம் வந்தாலும் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உறுதியாக மறுத்து விட்டார். தோழர் அச்சுதானந்தன் எடுத்த முடிவை மீண்டும் ஆட்சிக்கு வந்த உம்மன் சாண்டி தொடர வேண்டியிருந்தது.

கேரளாவில் புதிய பென்ஷன் திட்டத்தை அமலாக்க முடியாது என்பதில் அங்கே உள்ள அரசு ஊழியர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கறாராக இருப்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது எடப்பாடியும் மற்ற மாநில முதல்வர்களும்தானே தவிர தோழர் பிணராயி விஜயன் அல்ல.

புதிய பென்ஷன் திட்டத்தை திரிபுராவிலும் அமலாக்காமல் இத்தனை நாள் தோழர் மாணிக் சர்க்கார் பார்த்துக் கொண்டார். ஆனால் கோமாளி பிப்ளப்தேவ் குமாரின் அராஜக அரசு அதனை இப்போது அறிமுகம் செய்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் எடுத்த நல்ல முடிவு மத்தியரசிற்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. அது போலவே போராட்ட களத்தில் நிற்கும் மத்தியரசு, மாநில அரசு, வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

பிகு

இந்த பின்னூட்டங்கள் மூலம் காவிகளோ அல்லது இதர சிவப்பு அலர்ஜிக்காரர்களோ அவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு இடது முன்னணி அரசின் மீதும் தோழர் பிணராயி விஜயன் மீதும் வெறுப்போடு உள்ளார்கள் என்பது தெரிகிறது. உங்களின் வெறுப்பே அவரது சிறப்பான மக்கள் நலப் பணிக்கு சான்று . .


Thursday, November 29, 2018

அந்தாளை அப்பவே தூக்கி இருக்கனும் . . .

ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனியில் போடப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற காரணத்தால் ஆளுனர் அதனை ரத்து செய்து விட்டார்.

அப்போதே ஆளுனரை பதவியிலிருந்து அகற்றி இருந்தால் இன்றைய  அசிங்கம் நடந்திருக்காது என்று காவிகளும் கார்ப்பரேட்டுக்களும் மனதிற்குள்ளாவது புலம்பிக் கொண்டு இருப்பார்கள் அல்லவா?


அம்பானியின் பெருந்தன்மைக்கு நன்றி சொல்வீர் . . .
வாட்ஸப்பில் வந்த தகவல் கீழே உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் 

பிற்பகல் சரியாக 1 மணிக்கு நடை சாத்தப்படும்.

 ஆண்டாண்டு காலமாக இந்த நடைமுறை அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது

எந்த சந்தர்ப்பத்திலும், யாருக்காகவும் இது மீறப்பட்டதில்லை என்கிறார்கள் உள்ளுர் மக்கள்.

மோடியின் முதலாளி முகேஷ் அம்பானி நேற்று அங்கே செல்வதாகத் திட்டம். 1 மணி வரையில் ஆளைக் காணோம்

ஆனால் நடை சாத்தப்படவில்லை. ஆற அமர ஒன்றரை மணி வாக்கில் வந்த அம்பானி & கோ-வுக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது

சிறப்பு பூஜை இத்யாதிகளெல்லாம் பேஷாக செய்யப்பட்டன

அள்ளியிறைத்தஅம்பானியை அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பிவைத்தபோது மணி 2;15. 

அதன் பிறகே நடை சாத்தப்பட்டது.

அப்பட்டமான இந்த அத்துமீறல் உள்ளுர் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகஇந்து தமிழ்செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளுர் பக்தர்கள் சரி..,

ஆகம விதிகள், ஆச்சார அனுஷ்டானங்கள் மீறப்பட்டால் சும்மா விடமாட்டோம் 

என பொழுதுக்கும் கம்பு சுற்றும் ராமகோபாலன்கள், எச்.ராஜாக்கள் எங்கே போனார்கள்? ஒரு சத்தத்தையும் காணோம்.

அனுப்பியவருக்கு  ஆனாலும்  ஓவர் எதிர்பார்ப்பு.

ஆகம விதிகள், கோயில் சம்பிரதாயங்கள் ஆகியவை மீறப்பட்டதை எச்.ராசா, ராம. கோபாலன் வகையறாக்கள் கண்டிப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கே நியாயமா இருக்கா?

நீங்களே சொல்லிட்டீங்க, முகேஷ் அம்பானி மோடியோட முதலாளின்னு.

பாஜகவிற்கும்  காவிகளுக்கும் படியளிக்கிற பகவான் அம்பானி. அவருக்காக ஆலய சம்பிரதாயங்களை மாற்றவில்லை என்றால் வேறு யாருக்காக மாற்றுவது!

கடல் மண்ணை பிடித்து சீதையால் உருவாக்கப்பட்டது  ராமேஸ்வரம் கோயில் உள்ள ராமநாதர் மூலவர் லிங்கம் என்று புராணத்தில் சொல்லப்படுவதாக படித்துள்ளேன்.

அந்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து அம்பானி தங்கிய விடுதிக்கு கொண்டு போய் வழிபட வைக்கவில்லை என்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அப்படியெல்லாம் சொல்லாத முகேஷ் அம்பானியின் பெருந்தன்மைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

பிகு

எதுக்கும்  கோயிலில் உள்ள உற்சவர் சிலைகள் எல்லாம் பத்திரமா இருக்கான்னு ஒரு தடவை பொன்.மாணிக்கவேல் பார்த்துட்டா நல்லது.

Sorry கவர்னர் சார்!

பாஜகவிற்கு எதிரான ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையை ஆளுனர் கலைத்தார் என்று பதிவிட்டிருந்தேன்.

பாஜக அளித்த நிர்ப்பந்தத்தினை முறியடிக்கவே ஆளுனர் சட்டப்பேரவையை கலைத்தார் என்று இன்றைய தீக்கதிர் செய்தி கூறுகிறது.

இவ்வளவு நல்லவரா சார் நீங்கள்! 

தவறாக புரிந்து கொண்டமைக்கு வருந்துகிறேன்.

உங்களை பதவியிலிருந்து நிச்சயம் தூக்கி விடுவார்கள். அதற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீநகர், நவ.28-காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்ததற்காக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில், பாஜக தலைவர் சஜ்ஜத் லோனாவை முதல்வராக்குமாறு மத்திய அரசிடமிருந்து நெருக்கடி வந்ததாலேயே பேரவையைக் கலைத்தேன் என்று மாலிக் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில், மெகபூபாவின் மக்கள்ஜனநாயகக் கட்சியை உடைத்து, குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வந்தது. இதையறிந்த மெகபூபா, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்க முடிவு செய்து, ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், சட்டப்பேரவையையே கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். இது கண்டனத்திற்கு உள்ளானது. 

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பல்கலைக்கழகத்தில் பேசிய சத்யபால் மாலிக், காஷ்மீர் பாஜக தலைவர் சஜ்ஜத் லோனாவுக்கு, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு, மத்திய அரசு கூறியதாகவும் அதனை மறுத்துத்தான் பேரவையை கலைத்ததாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

“சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன்” என்று கூறியஅவர், “ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப் பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ, ஆளுநர் முன் அனுமதி பெற வேண்டியதில்லை” என்றும் அதிரடி காட்டினார்.

 இது தற்போது பாஜக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள் ளாக்கி இருக்கிறது.அதேநேரம், முன்பு ஆளுநரை விமர்சித்த மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் தற்போது ஆளுநரின் பேச்சுக்காக பாராட்டியுள்ளனர்.

“தில்லியில் இருந்து வரும் உத்தரவை ஆளுநர் பின்பற்ற மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொடுத்துள்ளது” என்று மெகபூபா கூறியுள்ளார்

.“குதிரை பேரம், பணம் ஆகியவற்றின் மூலம் பாஜக ஆட்சி உருவாக இருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநருக்கு வாழ்த்துக்கள்” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்டெரிலைட் - அகர்வாலுக்காக அகர்வால்அகர்வால் + மோடி + அகர்வால்

புதுதில்லி,நவ.28-ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. 

மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது . ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறுதி முடிவு அரசிடமே உள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும். அகர்வால் குழு அறிக்கையில் என்ன கூறினாலும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது என்றார்.\\

நிரந்தரமாக மூட சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் இயற்றுக: சிபிஎம்

சென்னை, நவ. 28-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள், கால்நடைகள் மீதான ஸ்டெர்லைட் ஆலையின் பல்வேறு கடுமையான பாதிப்புகளின் காரணமாக ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவா க முன்னுக்கு வந்து, பல கட்ட போராட்டங்களும், காவல்துறையின் துப்பாக்கிச் சூடும் நடந்த பின்னணியில் தான் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

சிபிஎம் மனு

ஆலை மூடல் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சார்பில் பொதுநலன் சார் தலையீட்டு மனு (ஐவேநசஎநniபே யீநவவைiடிn) போடப்பட்டு, அது அனுமதிக்கவும் பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு நடந்திருக்கிறதா என்று ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து எவரும் இடம் பெறக்கூடாது என்ற ஸ்டெர்லைட்டின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது பெரும் நெருடலை ஏற்படுத்தியது. இருப்பினும், பொதுநலன்சார் தலையீட்டாளர் (iவேநசஎநநேச) என்ற முறையில் இந்த உத்தரவின் நகல் அர்ச்சுனனுக்கு அளிக்கப்பட்டதை ஏற்று, ஆய்வுக்குழுவிடம் எழுத்து மூலமான விரிவான அறிக்கை கொடுத்ததோடு பல்வேறு வாதங்களும் அர்ச்சுனன் சார்பில் வழக்கறிஞர்களால் எடுத்து வைக்கப்பட்டன. ஏராளமான மக்கள் ஆலை மூடலை ஆதரித்து மனுக்கள் கொடுத்தனர்.

மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டார்

ஆலை மூடலுக்குப் பிறகு, ஜூலை 2018ல் நாடாளுமன்றத்தில் நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வத், ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல உலோகங்களின் இருப்பு தண்ணீரில் இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

வரம்பை மீறிய ஆய்வுக்குழு

தற்போது, ஆய்வுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது தவறு, மூடுவதற்கு உரிய காரணங்கள் இல்லை என்ற ரீதியில் முடிவுகள் இடம் பெற்றுள்ளன என்று தெரிகிறது. ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அது மக்கள் மீது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வது தான் குழுவின் வரம்பு. ஆனால் ஆலையை மூடியது தவறு, உரிய காரணங்கள் இல்லை என்று குழு சொல்வது, வரம்பை மீறிய செயலாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் ஆட்சேபணையைத் தெரிவிக்கிறது.

யார் ‘அவசியமற்றவர்கள்’?

இந்த அறிக்கையின் நகலை வேதாந்தா குழுமம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டும் அளித்தால் போதும்; டிசம்பர் 7ம் தேதிக்குள் அவர்கள் தம் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதர பொதுநலன்சார்தலையீட்டாளர்கள் அவசியமற்றவர்கள்; எனவே அறிக்கையின் நகலை அவர்களுக்கு அனுப்பவேண்டிய அவசியமில்லை என்றும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அவசியமில்லை என்றால் தலையீட்டு மனு தாக்கல் செய்த போதே கூறியிருக்க வேண்டும். மனுவை அட்மிட் செய்ததோடு, உத்தரவுகளின் நகல்கள் உட்பட தலையீட்டாளர் என்று குறிப்பிட்டு அனுப்பிவிட்டு, வழக்கு முடியும் தருவாயில், இவர்கள் அவசியமற்றவர்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? டிசம்பர் 10 தான் அடுத்த வாய்தா என்று இருந்ததை மாற்றி, ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை ஏற்று பசுமைத் தீர்ப்பாயம் உடனே கூடியதும், மேற்கூறிய உத்தரவுகளைப் பிறப்பித்ததும், ஆய்வுக்குழுவின்அறிக்கையின் சில தேர்வுக் செய்யப்பட்ட பகுதிகளை மட்டும்இணைய தளத்தில் ஏற்ற ஏற்பாடு செய்ததும் போன்ற நடவடிக்கைகள் ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகளாகும்.

கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசின் துரோகம்!

வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடையாளர் பட்டியலில் மத்திய ஆளும் கட்சியான பாஜக இருப்பதும்; மத்திய மாசு கட்டுப்பாட்டுக் குழு தமிழகத்துக்கு வந்து - பூட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்குள் போக முடியாத போதும், ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசுபடுகிறது என்று சொல்ல இயலாது என்று அறிக்கை கொடுத்ததும்; பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், ஆய்வுக்குழுவின் தலைவர் தருண் அகர்வால் குறித்த விமர்சனங்களும் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற அறிகுறியை ஏற்படுத்தின. தற்போது அது நடந்திருக்கிறது. 

இது பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு அணுகுமுறை இழைக்கும் பெரும் துரோகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது.தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழுவின் அறிக்கைக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்து, அதை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்; உச்சநீதிமன்றத்தையும் அணுக வேண்டும்; சட்டமன்றத்தைக் கூட்டி ஆலை மூடலுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பரிந்துரைப்பது அவர்கள் வேலை அல்ல...

துக்குடி, நவ. 28-சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது. உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தீர்மானித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாநகர செயலாளர் தா. ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

நன்றி - தீக்கதிர் 29.11.2018

Wednesday, November 28, 2018

பாஜக கிரிமினல்கள் – பட்டியல் ப்ளீஸ் காயத்ரி . . .பிக் பாஸில் “சேரி பிஹேவியர்” என்று சொல்லி தன் ஆதிக்க வெறியை அம்பலப்படுத்திக் கொண்ட காயத்ரி ரகுராம் ,குடிபோதையில் கார் ஓட்டிக் கொண்ட சர்ச்சை குறித்தோ, அவரை பாஜகவிலிருந்து நீக்க தமிழிசைக்கு அதிகாரம் கிடையாது என்று அவர் ட்வீட்டியது பற்றியோ நான் எழுதப் போவதில்லை.

காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்குவதோ, தொடர்ந்து வைத்துக் கொள்வதோ பாஜக வின் உள்கட்சிப் பிரச்சினை. எந்த ஒரு கட்சியின் உள் கட்சி நிகழ்வுகள் பற்றியும் எழுதுவதில்லை என்ற நிலைப்பாடு பாஜகவிற்கும் பொருந்துமில்லையா!

காயத்ரி ரகுராம் எழுதிய ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன் ஷாட்டுக்கள் கீழே உள்ளது.இதிலே பாஜகவில் உள்ள கிரிமினல்களின் பட்டியலை என்னால் தர முடியும் என்று சொல்கிறாரே, அது மிகவும் முக்கியம். பெண்களை ப்ளாக்மெயில் செய்கிறார்கள் என்று சொல்கிறாரே, அதுவும் முக்கியம். 

பாஜக ஒரு கிரிமினல் கட்சி என்று பல வருடங்களாக சொல்லி வருவது சரியானதுதான் என்பதை அக்கட்சியின் முக்கிய பிரபலமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அப்படி பாஜகவில் உள்ள கிரிமினல்களின் பட்டியலை வெளியிடுங்களேன் காயத்ரி.

அந்த கிரிமினல்கள் மீது பாஜக என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை உலகம் அறியட்டுமே

கொலையுண்டவர் குடும்பங்களை நோக்கி . . .

அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகள் தமிழகத்தில் மனசாட்சி உள்ளவர்களின் மனதை பாதித்தது.

பாலியல் இச்சைக்கு பணிய மறுத்ததால் தலை வெட்டிக் கொல்லப்பட்ட ராஜலட்சுமி.

வெறியர்களால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி, காவல்துறையின் அலட்சியத்தால் மரணித்த சௌம்யா,

ஆணவக்கொலையின் சமீபத்திய பலி நந்தீஷ்.

இந்த மூவர் குடும்பங்களையும் நேரில் சந்தித்து நீதி கோரும் அவர்களின் போராட்டத்தில் துணை நிற்போம் என்று நம்பிக்கை விதைகளை தூவி வந்துள்ளது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை அமைப்பாளர் தோழர் ஜே.விஜயா, தென் மண்டலப் பொருளாளர் தோழர் ஆர்.கே.கோபிநாத், சேலம் கோட்டச்சங்கத் தலைவர் தோழர் லட்சுமி சிதம்பரம், பொதுச்செயலாளர் தோழர் ஏ.கலியபெருமாள் உள்ளிட்ட தோழர்கள் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து உறுதி கொடுத்து விட்டு வந்தனர். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான 
சர்வதேச தினம் மூன்று நாட்கள் முன்பாகத்தான் கடந்து போயிருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தைப் போல இத்தினத்தையும் ஒரு கொண்டாட்ட தினமாக நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை முதலாளித்துவ ஊடகங்கள் தொடங்கி உள்ளன.

பத்திரிக்கைகளில் ஒரு நாள் புகைப்படத்துடன் செய்தி வருவதோடு முடிந்து போவதல்ல, வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது. களத்தில் தொடர்ந்து நிற்பது. 

அந்த கள அனுபவத்தை உணர்வுபூர்வமாக எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் பகிர்ந்து கொண்டுள்ளார். நிஜமான அக்கறையோடு, புரிதலோடு அவர் எழுதியுள்ளது நெகிழ்ச்சியூட்டுகிறது. 

அவசியம் முழுமையாய் படியுங்கள்.
ஒசூரிலிருந்து புறப்பட்டு நகரத்திலிருந்து விலகி இருபுறமும் பச்சைப்பசேலென்ற வயல்களிடையே தார்ச் சாலையில் பயணித்தோம். அடுத்து வந்த கரடுமுரடான சாலையில் சிறிது தூரம் சென்ற எங்களது கார் சூடுகொண்டபள்ளி கிராமத்தை அடைந்தது. வலதுபுறம் திரும்பியவுடன் காவல்துறையிரின் விசாரிப்புகளை முடித்து உள்ளே சென்றோம். 

கீத்துக் கொட்டாய் குளியறை, ஷீட் போட்ட வீடு(!) ... நந்தீஷின் சகோதரியும், தாயும் வெளியே வந்தனர்.  எங்களோடு வந்திருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகியும், விச-வின் நிர்வாகியும் எங்களை அறிமுகப்படுத்தினர்.  'இந்த கொலைல சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஜெயில்ல போடணும்.. எங்க 15 குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்ல' என கண்ணீர் மல்க நந்தீஷின் குடும்பத்தினர் பேசத் துவங்கினர். அவர்கள் சொல்வதைக் கேட்க கேட்க மனம் பதைபதைத்தது. தேற்ற வார்த்தைகளின்றி மனம் கனத்தது. ஆதரவின் அடையாளமாக 5000/- ரூபாய்களை அக்குடும்பத்தினரிடம் அளித்தோம். சாதி ஆணவக் கொலையை எதிர்த்த அவர்களது போராட்டத்தில் என்றென்றும் AIIEA தோழர்கள் உடனிருப்போம் என உறுதியளித்தோம்.

அரூரில் மதிய உணவை முடித்துவிட்டு சிட்லிங் நோக்கி துவங்கியது பயணம்.. மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகியும்,  மாதர் சங்கத்தின் செயலாளரும் எங்களோடு வந்தனர். கோட்டப்பட்டியை நெருங்கும்போது, இனி கொஞ்சம் ரோடு மோசமாக இருக்கும் என தோழர் சொன்னார். கொஞ்சம் இல்லை, நடுல கொஞ்ம் ரோட்டையே காணோம். நெடுஞ்சாலைல எங்கள சொகுசா சுமந்த கார், இப்ப குலுக்கி தூக்கிப் போட்டது. 

20 நிமிட பயணத்தில் சிட்லிங்கை அடைந்தோம். செளமியாவின் வீட்டை அடைந்தோம். வாசலில் கயித்துக் கட்டில், நெருப்பு கனன்று கொண்டிருந்த மண் அடுப்பு ... அக்குடும்பத்தின் ஏழ்மையை எடுத்துரைத்தது. செளமியாவின் தாய், அண்ணி, பாட்டி, அக்கம்பக்கம் இருப்போர் அவசரமா உட்கார சேர்களைப் போட்டனர். தன் ஆசை மகளுக்கு நேர்ந்த கொடுமையை, இழைக்கப்பட்ட அநீதியையும் அழுகையோடு சொன்னபோது, நீரில் மிதக்கும் கண்களோடு கேட்டுக் கொண்டிருந்த எங்கள்  கண் முன் அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியத்தால் உயிரோடு கொல்லப்பட்ட செளமியா முகம் வந்து மனதைப் பிசைந்தது.

 கனத்த இதயத்தோடு சிட்லிங்கிலிருந்து ஆத்தூருக்குப் புறப்பட்டோம்.  ஐபிஎஸ் பாசாகி காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சௌமியாவின் கனவு, இயற்கை உபாதைக்காக ஓடைப்பக்கம் ஒதுங்கியபோது அவளோடு சேர்த்து கலைக்கப்பட்டது சொல்லொணாத் துயரத்தை அளித்தது.  வனத்துறையின் காடுகளினிடையே பயணித்த பின், கிராமம் ஒன்றை எட்டியபோது, இயற்கை உபாதைக்கு ஒதுங்க இடம் தேடினோம்.  மினி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை பார்த்ததும் காரை நிறுத்தினோம். அங்கே இருந்த இரு பெண்களிடம் எங்கள் சிரமத்தை சொல்லி உதவி கேட்டோம். மலர்ந்த முகத்தோடு எங்களை கழிப்பறைக்கு அழைத்து சென்றார். மனதார அவர்களுக்கு நன்றியை சொன்னோம். 

அப்போது நீங்கல்லாம் எங்கே இருந்து வர்றீங்க? என கேட்க, நாங்க விவரங்களை சொன்னோம். நெகிழ்ந்து போன அவர்கள், 'நீங்க செஞ்சிருக்கறதோட பார்த்தா நாங்க உங்களுக்கு ஒண்ணுமே செய்யல' என சொன்னதோடு, அங்கே கிண்ணத்துல இருந்த அவிச்ச கடலையை எடுத்து, 'எங்க தோட்டத்து கடலை.. மருந்தடிக்காதது' என சொல்லி அள்ளித் தந்தனர்.  'இந்த பக்கம் வரும்போது எங்க கடைக்கும் வாங்க' என்றவர்களிடம் விடைபெற்றோம். இச்சமூகத்தில் மனிதம் இன்னும் முற்றிலுமாக மரணித்து விடவில்லை என்ற ஆறுலோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஆத்தூரின் தளவாய்பட்டி நோக்கி கார் வேகம் பிடித்தது.  நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி ராஜலட்சுமி வீடு நோக்கி பயணித்தோம். இருபுறமும் இருந்த வயல்வெளிகளில் சோளம், பருத்தி, மரவள்ளிகிழங்கு, மஞ்சள் ஆகியன பயிரிடப்பட்டிருந்தன.  அங்கொன்றும் இங்கொன்றாகவும் இருந்த சாலை வீடுகளைப் பார்த்தபடி போனோம். அங்க ஒரு வீட்டுக்கு போற வழி முட்களும், கம்பிகளும், கட்டைகளும் போட்டு மறிக்கப்பட்டிருந்தது. உடன் வந்த மாதர் சங்க சகோதரியிடம் கேட்டபோது இதுதான் ராஜலட்சுமிய கொன்னவன் வீடு என்றார். 

மீண்டும் வலப்புறம் திரும்பி கார் நிற்க இறங்கினோம். அங்கிருந்த காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ராஜலட்சுமி வீட்டை அடைந்தோம். குடும்பத்தினரை சந்தித்து பேசத் தொடங்கினோம். அச்சிறுமியின் தாயும், தகப்பனும், சகோதரி & சகோதரன் நடந்ததை விவரித்தபோது மனம் பதைபதைத்தது. பாப்பாவோட தலையில்லாத ஒடம்பு இங்கதாம்மா துடிச்சுச்சு என அத்தாய் கை காட்ட அவரோடு நாங்களும் துடிதுடித்துப் போனோம். சாதி வெறிக்கெதிரான போராட்டத்தில் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று சொல்லி,  விடை பெற்றோம்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் கண்களில் நன்றி ஒளிர்ந்தது. 

காலை முதல் தொடர் பயணம்... நம்ப வைத்து கொலை செய்த சுவாதியின் பெரியப்பா, காதும் காதும் வைத்து  வழக்கை முடித்து குற்றவாளிகளை காப்பாற்ற சௌமியாவின் குடும்பத்தாரை  வஞ்சித்த காவல்துறை, அரசு மருத்துவமனை, பெண்கள் காப்பகம் ஆகியற்றைச் சார்ந்தவர்கள், 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கழுத்தை துள்ளத் துள்ள, துடிக்கத்துடிக்க கொன்றவன் ... இவர்களை எதிர்த்த போராட்டத்தில் களம் கண்டு வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சமூரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற நிறைவோடு ஊர் திரும்ப பயணம் கார் நோக்கி நகர்ந்தோம்.

SZIEFன் பொருளாளர் கோபிநாத், LICSZWWCCன் இணை அமைப்பாளர் விஜயா, சேலம் கோட்டச் சங்க பொதுச் செயலாளர் கலியபெருமாள், தலைவர் லக்ஷ்மிசிதம்பரம், சேலம் கோட்ட மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் பொன்மொழி, கோவை மண்டல பொது இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழுவின் அமைப்பாளர் ஷோபனா ஆகியோரோடு நானும் சென்றேன். ஒசூர் கிளையின் ஹரிணியும் இதர முன்னணி தோழர்களும் நந்தீஷ் குடும்பத்தினரை சந்திக்க எங்களோடு வந்தனர். சேலம் கோட்ட மகளிர் துணைக் குழுவின் அமைப்பாளர் தோழர் சாந்தி சிட்லிங்கிற்கும், தளவாய்ப்பட்டிக்கூம் எங்களோடு பயணித்தார்.