Thursday, February 28, 2019

சிராய்ப்பில்லாதது ஏமாற்றமா மாலன்?மகிழ்ச்சி, வருக அபிநந்தன் . . .

அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பதட்டம் நிறைந்த பத்து நாட்களில் கிடைத்த நல்ல செய்தி.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாதுகாப்பாக நாளை அபிநந்தன் வீடு திரும்பட்டும்.

இன்றைய சூழல் நம்பிக்கை தருகிறது. போர் விரும்பிகளும் ஊடகங்களும் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது.

போர், போர் என்று கதறிக் கொண்டிருந்தவரும் சண்டை என்றால் சிராய்ப்பு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவருமான மூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன், இந்த நிமிடம் வரை அபிநந்தன் வீடு திரும்புவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

சிராய்ப்பில்லாமல் அபிநந்தன் திரும்புவதில் ஏமாற்றமா மாலன்?  

பின் குறிப்பு ; இன்றைய சூழலுக்கு பொருத்தமான இந்த ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட்

அது கலைஞர் கட்டினதய்யா . . .
வட மாநிலங்களில் பாஜக பரப்பிக் கொண்டிருக்கும் இரண்டு படங்கள் பற்றி முக நூலில் சில தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ஹிந்தி தெரிந்த தோழர் ஒருவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.

புதிய தலைமைச் செயலகமாக கலைஞரால் கட்டப்பட்டு ஜெயலலிதாவால் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்ட இந்த கட்டிடம்மதுரையில் மோடி கட்டிய “ஏ.ஐ.ஐ.எம்.எஸ்” மருத்துவமனையாம். மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடம் கூட இன்னும் தயாராகவில்லை. நிதி ஒதுக்கப்படவில்லை. வழக்கமான ஜூம்லா வேலையாக அடிக்கல் நாட்டு விழா மட்டும் நடந்துள்ளது.

அதற்குள்ளாக மருத்துவமனையை கட்டி திறந்து விட்டதாகவே படம் போட்டு விட்டார்கள் பாஜக காரர்கள்.மேலே உள்ளது மதுரையில் வைகை நதியில் மோடி கட்டிய பாலமாம். மோடி மதுரையில் பாலம் மட்டும் கட்டவில்லை. ஹாலந்து என்ற நதியையே மதுரைக்கு கொண்டு வந்து விட்டார். ஆமாம் இந்த பாலம் ஹாலந்து நதிக்கு மத்தியில் இருக்கிறது.

ஆனால் இந்த நதி

மதுரையில் இல்லை.

ஹாலந்து நாட்டில் இருக்கிறது.

இந்த இரு படங்களிலும் சொல்லப்பட்ட வாசகம் என்ன தெரியுமா?

மோடி    – இந்தியாவின் சக்தி
-         இந்தியாவின் நம்பிக்கை

உண்மையில் எழுதப்பட வேண்டிய வாசகம்

போட்டோஷாப் -   மோடியின் சக்தி
                                     மோடியின் நம்பிக்கை

ஆமாம். இதையெல்லாம் நம்பக்கூடியவர்களா ஹிந்தி பேசும் மாநிலத்தவர்?

இம்சை அரசன் மாலன் போர் முனையில்போர், போர் என்று பிப்ரவரி 14 முதல் துடித்துக் கொண்டிருப்பவர் மூத்த பத்திரிக்கையாளர் என்று பலரால் வர்ணிக்கப்படும் மாலன். 

அவர் எழுதிய ஒரு பதிவின் ஸ்க்ரீன் ஷாட் கீழே.
அபிநந்தன் சிக்கிய பின்பு அவர் எழுதிய இரண்டாவது பதிவு கிட்டத்தட்ட "சண்டையில கிழியாத சட்டை இருக்கா" என்ற வடிவேலு வசனத்திற்கு நிகரானது.சிராய்ப்பில்லாமல் வெற்றிகள் கிடையாது என்பது உண்மைதான் மாலன் அவர்களே. அந்த சிராய்ப்பு உங்கள் உடலில் ஏற்பட்டிருக்க வேண்டும். அடுத்தவர் உடலில் அல்ல. ஒரு இந்திய விமானி சிறைப்பட்டிருக்கும் வேளையில் அவர் இப்படி பேசுவதன் அர்த்தம் என்ன?

இங்கிதத்தைப் பற்றி உபதேசிப்பவர்கள்தான் விளக்க வேண்டும். 

மாலன் மனதில் உள்ளதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக மட்டுமல்ல, அருவெறுப்பாகவும் உள்ளது.

மாலன் எழுதியதாக ஒரு போலி பதிவு வந்ததும் சட்டென்று அவர் பதட்டமாகி விட்டார். நான் அபிநந்தன் பற்றி எந்த பதிவுமே எழுதவில்லை என்று ஒரு வாக்குமூலமும் அளித்து விட்டார், அந்த சிராய்ப்பு பதிவு யாரைச் சொல்கிறது என்ற உண்மையை மறைத்து விட்டு. 


சமூக வலைத்தளங்களில் மோடிக்கும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே போர் வெறியை தூண்டுவதற்கும் எதிரான கருத்துக்கள் உடையவர்கள் அனைவருமே அபிநந்தன் சிக்கிக் கொண்டதை எண்ணி வருந்துகிறார்கள், கவலைப் படுகிறார்கள், அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஆனால் இவரோ நான் அபிநந்தன் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்.

மாலனுக்கோ அவரைப் போன்ற மாரிதாஸ் ஆகிய ஆட்களுக்கோ இந்திய மக்களைப் பற்றியோ கொஞ்சமும் கவலை கிடையாது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக கூலி வாங்கிக் கொண்டு கூவுபவர்கள்.

இவர்களே இவர்களை அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.

இவர்கள் எல்லாம் போர் முனைக்குச் சென்றால் எப்படி தவிப்பார்கள் என்பதை மேலே உள்ள படம் விளக்கும். 


Wednesday, February 27, 2019

பாகிஸ்தானிலிருந்து ஒலிக்கும் குரல்கள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் கௌரவமாக நடத்தப்பட வேண்டும், உரிய மருத்துவ சிகிச்சையும் உணவும் அளிக்கப்பட வேண்டும். அவரை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தாமல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

இவைதான் நம் விருப்பம்.

இக்குரலை  பாகிஸ்தானியர்களும் ஒலிக்கிறார்கள் என்பதை கீழே உள்ள சமூக வலைத் தள பதிவுகள் உணர்த்துகின்றன.

எப்போதும் மக்களுக்கிடையே பகைமை கிடையாது என்பதை இது நிரூபிக்கிறது. நம்பிக்கையும் அளிக்கிறது. 

மாலனும் மாரிதாசும் கிளப்பும் வெறிக்கு முற்றிலும் முரணானது இது.


முதல்ல ஏன் கோட்டை விட்டீங்க?


டென்ஷன் ஆகாம பதில் சொல்லுங்க மோடிஇந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்கிறேன். துணிச்சல் காண்பித்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

கச்சிதமான தாக்குதல் நடத்திய விமானங்களை தயாரித்தது ஹெச்.ஏ.எல் என்ற பொதுத்துறை நிறுவனம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அம்பானி அளவிற்கு அதற்கு திறமையோ அனுபவமோ கிடையாது என்று அரசு  அதனை நிராகரித்தது நினைவுக்கு வரக்கூடாது என்று கட்டுப் படுத்திக் கொண்டாலும் வந்து தொலைக்கிறது.

சரி அது கிடக்கட்டும் விடுங்கள்.

உயிரிழப்பு எதுவும் கிடையாது என்று பாகிஸ்தான் அரசு சொல்வதை ஏற்காமல் முந்நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு சொல்வதையே ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு வீடியோ கேமை இந்திய விமானப்படையில் தாக்குதல் பாரீர் என்று பாஜக ஆதரவாளர்கள் பரப்பியதைக் கூட இது காவிகளின் வழக்கமான மோசடி வேலை என்று கழுவி ஊற்றுவதற்குப் பதிலாக அது சிலரின் ஆர்வக் கோளாறு என்றே புரிந்து கொள்கிறேன்.

அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டவனாக

கேட்கிறேன்.

வெடிகுண்டு தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை உளவுத்துறையின் அறிக்கை அளித்தும் அதனை அலட்சியம் செய்து நாற்பது வீரர்களின் வீர மரணம் நிகழ அனுமதித்தது யார்? ஏன்? முதலில் ஏன் கோட்டை விட்டீர்கள்?

டென்ஷன் ஆகாம பதில் சொல்லுங்க பார்ப்போம்.


பின் குறிப்பு :

அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்வதற்கு முன்பே காலையில் எழுதிய பதிவு இது.  இன்று அபி நந்தன் சிக்கிக் கொண்டது உட்பட அனைத்தும் உளவுத்துறை தகவலை அலட்சியப்படுத்தியதில்தான் துவங்கியது என்பதால் இப்பதிவு இப்போது முன்னை விடவும் இன்னும் பொருத்தம் என்றே கருதுகிறேன்.  


அபி நந்தன் பாதுகாப்பாய் திரும்பட்டும்இன்று இந்திய அரசின் முன்னுரிமையாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிக்கிக் கொண்டுள்ள விமானப்படை அதிகாரி அபி நந்தன் விடுதலை பெற்று வருவதுதான்.

அதற்கான உரிய நடவடிக்கையை தொடங்குங்கள்.

வெற்று முழக்கங்களோ, வெறிக் கூச்சல்களோ இப்போது அவசியம் இல்லை.

அம்பானியின் மகனோ அல்லது அதானியின் மகனோ சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்களோ, அதைச் செய்யுங்கள். 

அதே போல வெறியூட்டிக் கொண்டிருக்கிற மாலனும் மாரிதாஸூம் அடங்குங்கள்.

இங்கே உள்ளவர்களை உசுப்பேத்தும் உத்திகளை விட்டு விட்டு தைரியம் இருந்தால் நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், வாங்கிய கூலிக்கு மேலும் கூவாதீர்கள்.

#SayNoToWar


110 ஆண்டுகளுக்கு முன்பு


தவற விட்ட தொலைக்காட்சித் தொடர்தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம் அது. அழுது வடியும் ஷெனாய் பின்னணி இசையோடு “முன்ஷி ப்ரேம்சந்த் கி அமர் கஹானியான்” என்று ஹிந்தியில் ஒரு கனமான குரல் சொல்லும் போது உடனடியாக செய்கிற வேலை எழுந்து போய் தொலைக்காட்சியை அணைப்பதாகத்தான் இருக்கும். ஆமாம் அது ரிமோட் பயன்பாட்டிற்கு வராத காலம்.

நம் தமிழ் இசையமைப்பாளர்கள் சோகக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்ததால் ஷெனாய் ஒரு அழுமூஞ்சி வாத்தியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். குறும்பான கண்களோடு சிரித்து ரசித்து வாசிக்கும் பிஸ்மில்லாகானை ஒரு முறை கேட்ட பின்புதான் ஷெனாய் குறித்த கருத்து மாறியது.

அது போல முன்ஷி பிரேம்சந்த் கதைகள் பற்றி முன்பு தூர்தர்ஷன் உருவாக்கியிருந்த கருத்து அவரது சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்த போதுதான் மாறியது.  பல நல்ல கதைகளின் தொலைக்காட்சி வடிவத்தை தவற விட்டு விட்டோமே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

அந்த உணர்வைக் கொடுத்த நூலைப் பற்றியே இந்த பதிவு.

கடந்த நவம்பரில் நெல்லையில் எங்கள் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு நெல்லையில் நடைபெற்ற போது வாங்கிய நூல் இது.  வாங்கிய கையோடு அன்றே பயணத்தில் படித்தும் முடித்து விட்ட நூல். ஆனால் நூல் பற்றி எழுதத்தான் நீண்ட நாட்களாகி விட்டது.

நூல்                                                :  மோட்சம்
ஆசிரியர்                                     : பிரேம்சந்த்
தமிழில்                                        : ச.வீரமணி
வெளியீடு                                    : பாரதி புத்தகாலயம்
                                                          சென்னை – 18
விலை                                            : ரூபாய் 40.00

110 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ளது ஐந்து சிறுகதைகள். அவை அனைத்துமே அன்றைய சமூக சூழலின் கண்ணாடியாக இருக்கிறது. சமூக அவலங்களை அம்பலப்படுத்துகிறது. மனிதர்களின் குணாம்சத்தை, போலித்தனத்தை தோலுரித்துக் காண்பிக்கிறது.

நோயுற்ற தன் குழந்தையை கடவுளின் காலடியில் கிடத்தினால் குணமாகி விடும் என்ற நம்பிக்கையோடு வருகின்ற ஒடுக்கப்பட்ட பெண் சுகியோவிற்கு பூசாரியாலும் பக்தர்களாலும் நேர்கிற இழிவும் இழப்புமே “கடவுள் இல்லம்” என்ற கதையில் விவரிக்கப்படுகிறது.

தன் மகனின் திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்துத் தரச் சொல்லும் வேண்டுகோளோடு அனைத்து தட்சணைப் பொருட்களோடும் பண்டிதர் வீட்டிற்கு செல்லும் துகி என்ற  ஒடுக்கப்பட்ட இனத்தைச்  சேர்ந்த தொழிலாளி ஒரு வாய் கஞ்சி கூட கொடுக்கப் படாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக அத்தொழிலாளியின் சடலத்தை அப்பண்டிதர் இழுத்து வந்து தெருவில் வீசுகிற கதைதான் “மோட்சம்”

இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு கொலைக் குற்றவாளியை விடுவிக்கிற நீதிபதி ராய் சாஹிப், இறக்கும் நிலையில் உள்ள மாடுகளுக்காக மாட்டுத்தீவணத்தை திருடும் தன் வீட்டு வேலைக்காரன் தாம்ரிக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை அளித்து தன் நேர்மையை நிரூபிப்பதைச் சொல்கிறது “பண்பாளர் என்பவர் யார்?”

அனைத்துக் கதைகளையும் விளக்குவது என்பது நூலைப் படிக்கும் சுவாரஸ்யத்தை  குறைத்து விடும் என்பதால் அவற்றை தவிர்க்கிறேன். அந்த இரண்டு கதைகளும் இன்னும் சிறப்பு என்பதை மட்டும் சொல்லாமல் இருக்க முடியாது.

தன் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை கேட்டு பிரேம்சந்த் சரத்சந்திரரை அணுகிய போது “ரவீந்திரநாத் தாகூரால் மட்டுமே இது போன்ற கதைகளை எழுத முடியும். அவர்தான் முன்னுரை எழுத முடியும். எனக்கு அந்த தகுதி கிடையாது” என்று மறுத்தாரென்றால் பிரேம்சந்தின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்.

பெயர்களும் ஊர்களுமே இது மொழிபெயர்ப்பு நூல் என்று உணர்த்துகிறது. மற்றபடி நேரடியாக தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்ற உணர்வை அளிக்கும் வண்ணம் தமிழாக்கம் செய்துள்ள தோழர் ச.வீரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, February 26, 2019

ஒரு தேசியவாதி என்பவர் ??????
எட்டு வயது பெண் குழந்தையை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்து முதுகெலும்பை உடைத்து கொலை செய்த உத்தமர்களை விடுதலை செய் என்று ஊர்வலம் போகும் போது கூட கையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்கள்.

ஒரு சாதாரண பாலியல் வன் புணர்ச்சி வழக்கை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் குறைந்து போகும் என்று கவலைப் படுபவர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் கலவரம் செய்து, குற்றச் செயல் புரிந்த உத்தமர்களுக்காக வாதாடி, அரசு வழக்கறிஞர் பதவி பெறுபவர்.

ஆசிபாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி நீங்கள் பேசினால் மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற என் உணர்வுதான் பெருகும் என்று உத்தமர்களால் வாழ்விழந்த அந்த சின்னஞ்சிறு பெண் மீது இரக்கத்தைப் பொழிந்தவர்.

இவர்கள்தான் தேசியவாதிகள், தேச பக்தர்கள்.

இப்படியெல்லாம் செயல்பட்டு “தேசியவாதி” “தேச பக்தர்” என்ற முத்திரையை போலிகளிடமிருந்து  பெறுவதைக் காட்டிலும்

மக்களின் துயரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்கள் யாரோ, அவர்களுக்கு எதிராக போராடி “தேசத் துரோகி” பட்டம் பெறுவதே  மேலானது. சிறந்தது.

தோற்றுப் போன கு.மூ ராஜ தந்திரம்!
டாக்டர் கிச்சாவின் நேர்மை பிடிச்சுருக்குஎனக்கு தென் காசி தொகுதி,
என் மகனுக்கு ராஜ்யசபா,
என் மகளுக்கு மெடிக்கல் கவுன்சிலில் இடம்.

இந்த உறுதிமொழிகளை எல்லாம் எனக்கு அளித்தார்கள். இதையெல்லாம் வாய்மொழியாகக் கூட ஊர்ஜிதம் செய்ய தயாராக இல்லாததால் நான் பாஜக-அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறேன்.

டாஸ்மாக்கில் மாங்காய் ஊறுகாய் சப்ளை செய்ய வேண்டும் என்பது போல பத்து கோரிக்கைகள் வைத்தோம். அதை ஏற்றுக் கொண்டதால் கூட்டணியில் இணைந்தோம் என்று பம்மாத்து செய்கிற மருத்துவர் ஐயாக்களை விட

நான் கேட்டது கிடைக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்று வெளிப்படையாக எழுத்துபூர்வமாகவே சொன்ன டாக்டர் கிச்சாவின் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.

நாங்கள் பட்டியலினத்தை விட்டு வெளியேறுகிறோம் என்ற அளவிற்கு அவரை பேச வைத்த குருமூர்த்தியின் ராஜ தந்திரங்கள்தான் பாவம் தோற்றுப் போய் விட்டது.

மாணவர்களுக்கா? சின்ன புள்ளதனமா இருக்கே!
வங்கிகளின் இணைப்புக்கள் – பின்னே உள்ள சதிவலைகள் என்ற தலைப்பில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட தவல்கள் குறித்த பதிவுகளின் இறுதி பகுதி இது.
முதல் இரண்டு பகுதிகளின் இணைப்பு கீழே உள்ளது.ஸ்டேட் வங்கியில் முன்பு குறைந்த பட்ச இருப்புத் தொகை( Minimum Balance) இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று சொல்லி வங்கிக் கணக்குகளை துவக்க வைத்தார்கள். பிறகு ஸ்டேட் வங்கியோடு அதன் துணை வங்கிகள் பலவற்றையும் இணைத்தார்கள்.  இப்போது குறைந்த பட்ச இருப்புத் தொகையை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்தி விட்டார்கள்.

குறைந்த பட்ச இருப்புத் தொகை ஐயாயிரத்தை விட குறைவாக போகும் போது  நூறு ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள்.  ஐயாயிரம் ரூபாய்க்கும் குறைவான இருப்புத் தொகையை யார் வைத்திருக்கப் போகிறார்கள். ஜீரோ பேலன்ஸ் என்று நம்பி கணக்கு துவக்கிய ஏழை மக்கள்தான். அப்படி அவர்களிடமிருந்து கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஸ்டேட் வங்கி வசூலித்த அபராதத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

ஏழை மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்த அதே ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டில் மட்டும் பெரு முதலாளிகள் வாங்கி திருப்பித் தராமல் குவிந்து போன வாராக்கடனில் Deep Haircut மூலமாக  இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது.

வங்கிகள் எதற்காக தேசியமயமாக்கப் பட்டதோ அதற்கு முரணான எதிர் திசையில் வங்கிகளை இன்றைய மத்தியரசு இழுத்துச் செல்கிறது. சாதாரண மக்கள் தைரியமாக வங்கிகளுக்கு வர வேண்டும் என்பதுதான் தேசியமயத்தின் முக்கியமான நோக்கம். இன்று  சாதாரண மக்கள் வங்கியின் பக்கம் வர முடியாதபடி அச்சுறுத்துகிறார்கள்.

கடன்களுக்கு பிணை பெறுவதிலும் மிகப் பெரிய பாரபட்சம் உள்ளது.

சேன்ஸ்க்ரிட் என்ற மாணவி தன் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக அறுபத்தி மூன்று லட்சம் ரூபாய் கடன் கேட்கிறார். கடன் தொகையில் 120 %  பிணை அளித்தால்தான் கடன் வழங்குவோம் என்று சொல்கிறது. அவரால் பிணை ஏதும் அளிக்க முடியாததால் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டது. அந்தப் பெண் நீதிமன்றம் செல்கிறார்.

ஏழரை லட்ச ரூபாய்க்கு மேல் கடன் என்றால் பிணை இல்லாமல் கடன் தர முடியாது என்ற வங்கியின் வாதத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.

(Sanskrit என்ற பெயருக்காகவே வட்டி கூட இல்லாமல் கடன் கொடுத்திருக்கலாம். சமஸ்கிருதம் ஒரு இறந்த மொழி என்று பேசப்படும் இக்காலத்தில் அந்த பெண்ணைக் காண்பித்து சமஸ்கிருதம் இன்னும் உயிரோடுதான் உள்ளது என்று சொல்லும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்)

எல்லோருக்கும் இதே விதிதான் கடை பிடிக்கப்படுகிறதா?

“கனிஷ்க்”  என்ற நகைக்கடை திவாலாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டது. அதன் கடன் பாக்கித் தொகை 840 கோடி ரூபாய்.

எந்த அடிப்படையில் கடன் கொடுத்தார்கள்?

கடையில் இருந்த நகைகளின் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டு.

அந்த ஸ்டாக் என்ன ஆனது?

மார்ச் மாதம் இருந்த ஸ்டாக் மே மாதம் மறைந்து விட்டது.

(ஒரு வேளை ஏதாவது மந்திர, தந்திர வேலையாக இருக்குமோ? பூதம் ஏதாவது தூக்கிப் போயிருக்குமோ? இல்லை ஒரு வேளை கவரிங் நகைகளைக் காண்பித்து ஏமாற்றி இருப்பார்களோ?)

சரி பிணையாவது வாங்கி உள்ளார்களா?

ஆம், வாங்கியுள்ளார்கள்.  840 கோடி ரூபாயில் 120 % ஆன 1008 கோடி ரூபாய் அளவிற்குத்தானே?

அதுதான் இல்லை.

வெறும் 150 கோடி ரூபாய்க்கு மட்டுமே பிணை வாங்கியுள்ளது.  ஆக வசதி படைத்தவர்களுக்கு 120 % பிணை வாங்குவது கிடையாது. பத்து அல்லது பதினைந்து சதவிகிதம் மட்டுமே வாங்குகிறது.

கல்விக் கடன் வசூலை ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

ஆம்

நிஜமாகத்தான். விற்றுள்ளது.

ஸ்டேட் வங்கி, தனக்கு வர வேண்டிய 840 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. 840 கோடி ரூபாய் கடன் பாக்கித் தொகையை ரிலையன்ஸ் 360 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

அதன் படி மாணவர்கள் வாங்கிய கடன் தொகையை ரிலையன்ஸ் வசூல் செய்து எடுத்துக் கொள்ளும். அப்படி கடன் வசூல் செய்வதற்காக ரௌடிகளை ஏவி விட்டு அவர்கள் அசிங்கப்படுத்தியதில் மதுரையில் லெனின் என்ற மாணவன் இறந்து போனான்.  

840 கோடி ரூபாயை 360 கோடி ரூபாய்க்கு வாங்கியதில் 480 கோடி ரூபாய் ரிலையன்ஸுக்கு  லாபம் என்பதோடு நிறுத்தி விட முடியாது. ஏனென்றால் அதையும் தாண்டியது இந்த டீலிங்.

முதல் கட்ட தவணையாக ரிலையன்ஸ் கட்டியது வெறும் அறுபது கோடி ரூபாய்தான். மீதமுள்ள முந்நூறு கோடி ரூபாயை வருடத்திற்கு இருபது கோடி ரூபாய் என்று பதினைந்து வருடங்களில் செலுத்தினால் போதும். 840 கோடி ரூபாயையுமே ஒரே ஆண்டிலேயே  ரிலையன்ஸ் வசூலித்து விட்டால் கூட அந்த பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து விட்டு அதில் வருமானத்திலிருந்தே ஒரு சிறு பகுதியாக வருடம் இருபது கோடி ரூபாய் என்று கட்டி விடலாம்.

இத்தனை வசதிகளை ரிலையன்ஸுக்கு செய்வதற்குப் பதிலாக மாணவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

(ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாணவர்கள் ஒன்றும் மோடியின் அருமை நண்பர் அம்பானி கிடையாதே!)

ஆனால் இந்த அரசு அதையெல்லாம் செய்யாது.

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமை அல்ல. அவற்றின் பொதுத்துறை தன்மையை பாதுகாப்பது என்பதும் மிகவும் முக்கியம்.

பிகு : அடைப்புக் குறிக்குள் நீல நிறத்தில் இருப்பது மட்டும் என்னுடைய கருத்து.

Monday, February 25, 2019

எரிந்த கார்கள் - ஒரு சந்தேகம்
சனிக்கிழமை அன்று பெங்களூரில் 300  கார்கள் எரிகிறது.

ஞாயிறு அன்று சென்னையில் 200 கார்கள் எரிகிறது.

பெங்களூரில் எரிந்த கார்கள் எல்லாம் விமானப் படையின் சாகஸத்தைப் பார்க்க வந்த பார்வையாளர்களின், மக்களின் கார்கள்.

இங்கே சென்னையில் எரிந்து போனதோ  ஒரு குறிப்பிட்ட கால் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள். அந்த நிறுவனம் போணியாகாமல் நஷ்டத்தில் செயல்பட்டு  மூடப்பட்ட ஒரு நிறுவனம். அந்த கார்கள் எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தவை.

இத்தனை நாட்களாக ஒன்றும் நடக்கவில்லை. பெங்களூர் சம்பவம் நடந்து மறு நாளே நடக்கிறது என்றால் சந்தேகமாக இருக்கிறது.

வாங்கிய கடனை திருப்பி கட்டாமல் ஏமாற்றவோ அல்லது பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளிடமிருந்து பணம் பெறவோ வேண்டுமென்றே கொளுத்தப்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

அந்த டாக்ஸி கம்பெனிக்கு அரசியல் பின்புலம் உள்ளதா? அதன் உரிமையாளர் யாராவது பெரிய அரசியல் புள்ளியின் பினாமியா ஆகியவற்றைக் கூட போலீஸ் விசாரிக்க வேண்டும்.

ஆனா நம்ம ஊர் ஸ்காட்லாண்ட் யார்ட் அதையெல்லாம் செய்யுமா என்பது இன்னும் ஒரு சந்தேகம்.


உதிக்கும் வேளையில் அழகு . ..

காலை ஆறு மணி அளவில்
மகனை ரயிலேற்றி விட்டு
வீடு வ்ரும் வழியில்
பாலாறு பாலத்திலிருந்து
பார்த்த அழகிய காட்சி
உங்களுக்கும் . . .
Sunday, February 24, 2019

அந்த டாக்ஸி டிரைவரின் நேர்மை . . . .
நேற்று சென்னை சென்றிருந்தேன்.

எங்கள் வாகனத்துக்கு முன்பு சென்றிருந்த காரின் பின்னே எழுதப்பட்டிருந்த வாசகம் 

"என் மனைவி தந்த பரிசு"

என்று எழுதப்பட்டிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

(இது எனக்கு தோன்றவேயில்லையே என்றும் நினைத்தேன்)

அது ஒரு கால் டாக்ஸி. யெல்லோ போர்ட் வண்டி, வாகன எண் அவசியமில்லை என்பதால் நீக்கி விட்டேன்.

அதன் பின்பு பார்த்தால் இன்னொரு வாசகம்

"நண்பா மோதி விடாதே. மொத்தமும் கடன்"

எவ்வளவு யதார்த்தமான ஒன்று!

அந்த கார் டிரைவரின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது.


பிரியாணி, கேக், கொழுக்கட்டை


மதம் – நம்பிக்கை, வெறி, சார்பின்மை, நல்லிணக்கம் பற்றிஇது மிகவும் அடிப்படையான ஒரு விஷயம்தான். ஆனால் சிலர் அறைகுறையாக புரிந்து கொண்டுள்ளனர். சிலர் புரிந்து கொள்ளவே தயாராக இல்லை. சிலர் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சிலர் தவறான கருத்துக்களை வம்படியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மத நம்பிக்கை

இன்று உலகில் பல மதங்கள் நடைமுறையில் உள்ளன. ஏதோ ஒரு மதத்தை  பெரும்பாலான மக்கள் பின்பற்றுவது என்பது எந்த அளவு உண்மையோ அதை விட பெரிய உண்மை மதம் என்பதும் மனிதன் கண்டுபிடித்த அமைப்புதான் என்பது. இன்று மதம் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் போலவே  மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களும் உள்ளார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை.

தான் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றுவதும் அதற்கேற்றார்போல் அந்த மதத்தின் வழிபாட்டை கடைபிடிப்பதும் அவரவர்களின் உரிமை. தனிப்பட்ட விஷயம். அதை கேள்வி கேட்கவோ, தலையிடவோ யாருக்கும் உரிமை கிடையாது. வழிபாட்டுச் சுதந்திரத்தை அனைத்து இந்திய மக்களுக்கும் அரசியல் சாசனம் அளித்துள்ளது.

நீங்கள் இந்த மதத்தைத்தான் பின்பற்ற வேண்டுமென்றோ, அல்லது பின்பற்றக் கூடாது என்றோ கட்டளையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

மத வாதம்

என் மதம்தான் சிறந்தது, மற்ற மதங்கள் எல்லாம் போலி என்று சொல்வது மத வாதம். இதுவே முற்றிப் போகிற போது அது மத அடிப்படை வாதமாக மாறுகிறது.

சில மாதங்கள் முன்பாக முக நூலில் ஒரு நண்பர் ஒரு பதிவிட்டிருந்தார். ஏதோ சில ஆழ்வார் பாசுரங்களை பதிவிட்டு அதற்கு விளக்கமும் சொல்லி இருந்தார். அதன் சாராம்சம் இதுதான்

“பெருமாளை கடவுளாக வழிபட்டவன் வேறு எந்த கடவுளையும் மதிக்க மாட்டான். பெருமாள் தவிர வேறு யாரையும் கடவுளாகவே கருதுவது கிடையாது”

நாத்தீகர்களை எப்போதும் வசைபாடும் அவரை

“நீங்கள் பெருமாளைத் தவிர வேறு யாரையும் கடவுளாக கருதுவது கிடையாது. நாத்திகர்கள் பெருமாளையும் கடவுளாகக் கருதுவது கிடையாது. உங்களுக்கும் நாத்தீகர்களுக்கும் பெருமாளைத் தவிர வேறு முரண்பாடு இல்லாத போது அவர்களை மட்டும் ஏன் திட்டுகிறீர்கள்?”

என்று நான்  கேள்வி கேட்க,  அவர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

மத அடிப்படைவாதம் என்பது இதுதான்.

மத வெறி

மத அடிப்படைவாதத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் மத வெறி. அடுத்த மதத்தவர் மீது காழ்ப்புணர்வு கொள்வதும், இழிவு படுத்துவதும் மாற்று மதத்தவரை வம்புக்கு இழுப்பதும் கொலை, கலவரம் என்ற அளவிற்குச் செல்வதுமாகும். மனிதத் தன்மை என்பது மறந்து போன கட்டம் இது.

மதச் சார்பின்மை.

சார்பின்மை என்ற வார்த்தையே விளக்கம் சொல்லி விடுகிறது. மதச்சார்பின்மை என்பது தனி நபர் சார்ந்தது கிடையாது என்பதுதான் முதலில் சொல்ல வேண்டிய செய்தி.

எந்த ஒரு அரசும் மதத்தை சார்ந்திருக்கக் கூடாது என்பதுதான் மதச் சார்பின்மை.  மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதுதான் மதச்சார்பின்மையின் கோட்பாடு.

மதச் சார்பின்மை என்பது அரசுகளும் அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

மத உணர்வுகளைத் தூண்டுவதுதான் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் உத்தி என்பதால் அவர்களுக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையே பாகற்காயாக கசக்கிறது. மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடிக்கிற கட்சிகளை வசை பாடுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது இவர்கள் நிகழ்த்துகிற தாக்குதல்களை கண்டிப்பவர்களை போலி மதசார்பின்மைவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

பெரும்பான்மை அடிப்படைவாதம் தேசியமாக புகழப்படும், சிறுபான்மை அடிப்படைவாதம் தீவிரவாதமாக சித்தரிக்கப் படும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

காவிகளின் தேச பக்தி என்ன என்பதை “தேசத் துரோகி பேசுகிறேன்” பதிவில் விரிவாகவே எழுதியுள்ளதால் மீண்டும் அந்த விஷயத்திற்குள் செல்லவில்லை.  சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள்தான் “போலி தேசியவாதிகள்”

ராமருக்கு கோயில் கட்டுவது என்பது வெறும் அரசியலுக்காக உணர்வை தூண்டுகிற வேலையைத் தவிர வேறொன்றும் இல்லை.  நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் சிவாஜி, குரு கோவிந்த்சிங் உள்ளிட்ட பலரின் படமெல்லாம் இருக்கிறது. ஆனால் ராமரின் படம் கிடையாது. மகாத்மா காந்தி ஒரு முறை அந்த அலுவலகத்திற்கு சென்ற போது “ராமரின் படத்தை வைக்கலாமே” என்று கேட்ட போது ராமர் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக சண்டை இடவில்லையே என்று பதில் வந்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடைபெற்ற போது இப்போதாவது ராமர் படம் அங்கே உள்ளதா என்று பார்ப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு எங்களின் தஞ்சைக் கோட்ட தோழர்கள் இருவர் சென்று வந்துள்ளனர். நாங்களும் ஆர்,எஸ்.எஸ் காரர்கள்தான் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து சர்சங்சாலக் அறை வரை முழுதும் சுற்றிக் காட்டி உள்ளார்கள். எங்கேயும் ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் அளவில் கூட ராமர் படம் இல்லை.

ஆக ராமருக்கு கோயில் என்பது பக்தியினால் எழுப்பப்படும் முழக்கம் அல்ல, வெறும் அரசியல் கோஷம்தான் என்பதை பக்தர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை

இந்த இரண்டும் பிரிக்க முடியாத இரட்டையர்.

ஒரு மதத்தவர் மாற்று மதத்தவரை மரியாதையோடு அணுகுவதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதும் மத நல்லிணக்கமாகும்.

இது இந்தியாவில் காலம் காலமாக இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றில் எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். 

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல்  குரல்    எழுந்த எங்கள் வேலூர் மண் அதற்கான  சிறந்த உதாரணமாகும். இந்து முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து வெள்ளையருக்கு எதிராய் போராடியதை சொல்ல முடியும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாவர் மசூதிக்கு செல்வதும் ஒரு சிறந்த உதாரணம்.

அந்த நல்லிணக்கம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ரம்ஜான் பிரியாணியும் தீபாவளி பட்சணங்களும்   கிறிஸ்துமஸ் கேக்குகளும்   பரிமாறிக்கொள்ளப்படுவதும்    பகிர்ந்து கொள்ளப்படுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது!

உங்கள் வீட்டில் சாமிக்கு படைக்கப்பட்டதை நாங்கள் தொட மாட்டோம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மத அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு, ஆனால் அவர்கள் சதவிதம் குறைவுதான். அப்படிப்பட்ட திரிபு வேலைகள் எப்படி தொடங்கின, அதன் பின்னணியில் இருந்தது யார் என்பதையெல்லாம் சமீபத்தில் படித்து முடித்த ஒரு நூலின் வாயிலாக அறிந்து கொண்டேன். நேரமிருப்பின் இன்றோ, நாளையோ அந்த நூல் விமர்சனம் மூலமாக அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்

இன்றைய தேவை என்பது மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாப்பது. அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் பார்த்துக் கொள்வது. மத நம்பிக்கை கொண்டவர்கள்தான் இதை செய்திட வேண்டும்.      

அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு ஒதுக்கி வைப்பதுதான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.

இந்தியாவில் அதைச் செய்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் என்பதை நாங்கள் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறோம்.

மதத்தின் பெயரால் மனிதத்தை குலைப்பவர்கள் அவசியம்தானா?

சிந்திப்பீர், நிதானமாக சிந்திப்பீர்.

பிரியாணியும் கேக்கும் கொழுக்கட்டையும் சுற்றி வலம் வரட்டும். நம்பிக்கை மலர்கள் பூக்கட்டும். அமைதி என்றும் நாட்டில் நிலைக்கட்டும்.


Saturday, February 23, 2019

இந்தாண்டு இல்லை. இனி வரும் . . .
ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது மிகப் பெரிய அராஜகம்.

குழந்தைகளின் கல்விக் கனவை மொட்டாய் இருக்கையிலேயே கருக வைக்கும் கொடூரம்.

நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை ஐந்தாவது வகுப்பிலும் எட்டாவது வகுப்பிலும் முடக்குகிற முயற்சி.

ஏழைக்குழந்தைகள், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

குலத் தொழிலை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு மாணவர்களும் பெற்றோர்களும் தள்ளப்படுவார்கள்.

கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான இந்த முடிவு கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

இந்த வருடம் அமலாகாது என்று ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.

அதன் பொருள் என்ன?

அடுத்த வருடம் இருக்கும் என்பதா?

அய்யா அடிமைகளே, மோடி மனம் குளிர வேண்டும் என்பதற்காக தமிழகக் குழந்தைகளை காவு கொடுக்காதீர் . . .

படம் எடுக்க விடுங்கய்யா . . .

நேற்று முன் தினம் இரவு.

கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சமயத்தில் வானைப் பார்த்தால் 

தூரத்து நிலவும் அருகில் இருந்த தென்னையும் அழகாகத் தெரிந்ததால் 

அதை அலைபேசியில் கைப்பற்றி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து (கண்ணில் தெரிந்த அழகு காமெராவில் வரவில்லை என்பது வேறு விஷயம்) 

போனை எடுத்தால்அந்த கடைக்காரர் கல்லாவை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்து விட்டார்.

"என்ன சார், நிலாவுல பாபா படம் தெரியுதுன்னு சொல்றாங்களே சார், அதுக்குத்தானே போட்டோ எடுக்கறீங்க"

என்று அவர் கேட்க

பக்கத்து கடைக்காரரும் 

"ஆமாம் சார், வாட்ஸப்பில் கூட வந்தது"

என்று ஆமோதிக்க

"ஆளை விடுங்கப்பா, மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில நான் இனிமே நிலாவை  போட்டோவே எடுக்க மாட்டேன்"

என்று ஓடி வந்து விட்டேன.

வாட்ஸப்பில் வருவதெல்லாம் நிஜம்தான் என்று நம்பும் ஆட்கள், மோடி நல்லவர், வல்லவர் என்பதைக் கூட நம்பத்தானே செய்வார்கள்! 

பாவம் அப்பாவிகள் !!!!!