Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Friday, March 31, 2017

போங்கடா, நீங்களும் உங்க டெக்னாலஜியும்.




          
சந்திரனுக்குப் பாய்ந்தது ஒரு விண்கலம்,
செவ்வாய்க்கும் கூட
விரைவில் செல்லுமாம்.          
                                                 
ஒரு ராக்கெட்டில் ஒரே நேரத்தில்
நூற்றுக்கும் மேல் செயற்கைக் கோள்கள்
விண்ணில் சீறிப் பறந்து
வட்டப்பாதையில் நிலை கொண்டதும்
இந்தியாவின் தலை நிமிர்ந்ததாம்.

கசங்கிப் போகும் ரூபாயைத் தவிர்க்க
கணிப்பொறியில்தான் இனி பரிமாற்றமாம்.

காகிதப் பயன்பாடே இல்லாமல்
மின்னஞ்சலில்தான் எல்லாமே.    

ஆதார் அட்டையைத் தேய்த்தால்தான்
கழிவறைக் கதவும் திறக்குமாம்.

மூச்சு விடுவதும் முனகுவதும் கூட
அரசு கண்காணிப்பில் வருமாம்.  

டிஜிட்டலில் இந்தியாவில்
எல்லாமே மாறுமாம்.  

இந்தியா வேகமாய்
முன்னேறவும் செய்யுமாம்.

கழிவை சுத்தம் செய்ய
சாக்கடைக் குழியில் இறங்கி
மரணிப்பது மட்டும் மாறாதாம்.
                                                        
எது எதற்கோ இயந்திரம் வந்தாலும்
இதற்கு மட்டும் வாராதாம்.

போங்கடா,   
நீங்களும் உங்க டெக்னாலஜியும்.    

(கடலூர் சம்பவத்தின் போது எழுதியது)  

Tuesday, February 2, 2016

தண்ணி மேல இல்லை, தண்ணிப் பாலம்







இன்று வாட்ஸப்பில் வந்த புகைப்படங்களை பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்தது.

ஒரு தொழில்நுட்ப அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெர்மனி இதை நிகழ்த்தியுள்ளது. ஆறு மீது பாலம், கடல் மீது பாலம், கடலுக்கடியில் சுரங்கம், நீர்வழிப் போக்குவரத்து என்பதையெல்லாம் கடந்து விட்டது இது.

நீர்வழிப் போக்குவரத்துக்காக பாலம் கட்டி அதிலே தண்ணீரை நிரப்பி படகு அல்லது சிறு கப்பல்களை விடுவது என்பது ஒரு சாதனைதான்.

இதைப் பார்க்கிற போது நிச்சயமாக பெருமூச்சு வருகிறது.

தொழில்நுட்பம் இப்படியெல்லாம் சென்று கொண்டிருக்கிற போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

இருக்கிற நதிகளையெல்லாம் வறண்டு போகச் செய்து மணல் கொள்ளைக்கு வழி விட்டுள்ளோம்!

இயற்கையே பெரு மழை வாயிலாக நதிகளை நிரம்பச் செய்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் அத்தனை நீரையும் கடலுக்கு அனுப்பிடுவோம்.

அது மட்டுமா, கோடிக்கணக்கில் ஒரு திட்டம் தீட்டி தொடங்கினாலும் இந்த இடத்தில் ஒரு கற்பனைப்பாலம் இருந்தது என்று சொல்லி “நம்பிக்கை”யின் அடிப்படையில் அந்த திட்டத்தையே தடுத்திடுவோம்!

என்ன செய்ய? அடுத்தவர்களின் சாதனையைப் பார்த்து பெருமூச்சு விடத்தான் நம்மால் முடியும்!

பின் குறிப்பு : இந்த தண்ணீர்ப் பாலம் பற்றி விபரங்கள் அறிந்து கொள்ள இணையத்தில் தேடிய போது வெட்கமாகப் போய் விட்டது. இந்த பாலம் 2003 ம் ஆண்டே திறக்கப்பட்டு விட்டதாம். இது கூட தெரியவில்லையே என்று கொஞ்சம் அசிங்கமாக உள்ளது. இது மட்டுமல்ல, இது போல வேறு சில பாலங்களும் உள்ளது என்பதையும் அறிந்து கொண்டேன். 

மேலும் பல தகவல்கள் அறிந்து கொள்ள இந்த இணைப்பிற்குச் செல்லவும்

Friday, July 10, 2015

அப்போதாண்டா டிஜிட்டல் புரட்சி

 

கொஞ்ச நேரத்திற்கு முன்பு வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி.

டாஸ்மாக்கால் நொந்து போன ஒரு குடிமகன் சொன்னானாம்.

என்ங்கடா டிஜிட்டல் புரட்சி, டிஜிட்டல் இந்தியா னு கதை அளக்கறீங்க.

"ஸ்னாப்டீல், ஃபிலிப்கார்ட்டில் சரக்கு வாங்கி காலி பாட்டிலை ஓ.எல்.எக்ஸில் விற்க முடியுமா? அப்போதாண்டா நிஜமா டிஜிட்டல் புரட்சி வந்ததுனு அர்த்தம்"

பாவம் ரொம்பவே நொந்து போய்ட்டாரு போல இருக்கு.

ஏம்பா அம்பானி, அதானி, உங்க டிஜிட்டல் இந்தியா முதலீட்டில இதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்களேம்பா. மோடி ஐயா, சாதாரண குடிமக்களுக்குத்தான் நீங்க எதுவும் செய்யப் போறதில்ல. இந்த குடிமகன்களையாவது கொஞ்சம் கண்டுக்கலாமே!

Tuesday, March 10, 2015

ஸ்மார்ட் போன் கொடையாளர்கள்/நோயாளிகள்


Image result for cmc blood bank

 

 

இன்று சி.எம்.சி ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்யச் சென்றிருந்தேன். கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்த ரத்த வங்கியில் மொத்தம் ஐந்து படுக்கைகள். ரத்தம் எடுப்பதற்கு முன்பான சோதனைகள் முடிந்த பின்பும் ரத்தம் கொடுப்பதற்கு காத்திருப்பது என்பது தவிர்க்க முடியாதது. ரத்தம் எடுப்பது என்பதும் ஒருவருக்கு குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் (எல்லா நடைமுறைகளுக்கும் சேர்த்து) ஆகி விடும்.

குருதிக் கொடையாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கையில் காத்திருப்பின் நேரமாகும் போது "எவ்வளவு நேரமாகும்" என்ற எரிச்சல் குரலை பல மொழிகளில் கேட்க முடியும். முன்னும் பின்னும் நடப்பார்கள். கண்ணாடி வழியே எட்டிப்பார்ப்பார்கள். சலிப்பும் அலுப்புமாக இருப்பார்கள்.

ஆனால் இன்று நான் பார்த்த காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த இடமே மிகவும் அமைதியாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக  புற நோயாளிகள் பிரிவிற்குப் போன போதும் வழக்கமான சப்தம் குறைவாகவே இருந்தது.

ஏன் இந்த மாற்றம்?

ஒன்றுமில்லை ஜெண்டில் மேன், 

அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்.

தங்களை அழைப்பதைக் கூட கவனிக்க முடியாத படி சிலர் ரொம்பவே மும்முரமாக மூழ்கியிருந்தனர்.

 

Friday, November 2, 2012

இவையெல்லாம் இந்தியாவில் சாத்தியமா? சான்ஸே இல்லை

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்

முதலில் உள்ள  எட்டு புகைப்படங்கள்
அமெரிக்காவில் உள்ள
க்ராண்ட் கேண்யான் பள்ளத்தாக்கில்
கட்டப்பட்ட 
கண்ணாடி பாலம்.

அடுத்த நான்கு புகைப்படங்கள்
சீனாவில் உள்ள
தியான்மென் மலையில்
கட்டப்பட்ட 
கண்ணாடி பாலம்.

அமெரிக்கப்ப்பாலத்தை விட
சீனப் பாலம் சற்று நீளமானது.
மலையைச் சுற்றி
கிரிவலம் வருவது போல
கட்டப்பட்டுள்ளது.

இது போன்ற பாலங்கள்
ஆஸ்திரியா, பிரேஸில் போன்ற
நாடுகளிலும் உண்டு.

சுற்றுலாப் பயணிகளை இந்தக்
கண்ணாடி பாலங்கள் வெகுவாக
ஈர்க்கின்றன, 

இயற்கை எழில் கொஞ்சும்
இடங்கள்  ஏராளமாக உள்ள
இந்தியாவிலும் இது போல
புதுமைகளை செய்தால்
சுற்றுலாத்துறை நல்ல
முன்னேற்றம் அடையும்.

ஆனால் நம் ஆட்சியாளர்களோ,
இதுதான் வாய்ப்பு என்று 
கொள்ளையடிப்பார்கள் என்ற
அச்சமும் சேர்ந்தே வருகிறது.

சரி சரி முதலில் 
சுற்றுலாத்தளங்களில் ஒழுங்கான
கழிப்பறை வசதியை
அரசுகள் ஏற்படுத்தட்டும்
அதற்குப் பிறகு
புதுமைகளைப் பார்ப்போம்
என்று நீங்கள் சத்தம் போடுவது
காதில் விழுகிறது. 

சரி இந்தப் படங்களைப் பார்த்து
பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.








 

இனி நீங்கள் பார்க்கப் போவது சீனாவின் கண்ணாடி பாலம்




 

Monday, June 18, 2012

அந்த நாள் இனி வருமா?

இன்று காலை முக நூலில் பார்த்த இந்தப்படம் பழைய 
நினைவுகளைக் கிளறி விட்டது.


டேப் ரிகார்டர்  ஒரு காலத்திய கனவு. கல்லூரிக் காலத்தில்
விடுதி அறையில் பக்கத்து அறையில் இருந்த பணக்கார
மாணவன் ஒரு சின்ன டேப் ரிகார்டரைக் கொண்டு வர
அவன் அந்த  நிமிடமே ஹாஸ்டலின் வி.ஐ.பி யாகி 
விட்டான். மற்றவர்களுக்கு அதை எட்டி நின்று பார்க்க
மட்டும்தான் அனுமதி, அவன் விரும்பும் பாடல்களை
மட்டும்தான் கேட்க வேண்டும், மற்றவர்கள் படிக்கும் போதோ
எழுதும் போதோ அவன் பாட்டு போட்டால் அவர்கள் அந்த
வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாட்டு கேட்க வேண்டும்
என்றெல்லாம் நிபந்தனைகள் போடத் தொடங்கி விட்டதால்
திராட்சை கிட்டாத நரிகளாக ஒரு கட்டத்தில் வெளியேறி
விட்டோம். 


எனது  இரண்டாவது அண்ணன் முதன் முதலில் ஒரு டோஷிபா
வாங்கி வந்தான். கூடவே இரண்டு காஸெட்டுகள், ஒன்று 
ஜேம்ஸ் பாண்டு படங்களின் டைட்டில் பாடல்கள், இன்னொன்று
ஒரு போனியெம் காஸெட் என்று நினைக்கிறேன். புரிந்ததோ
புரியவில்லையோ, பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, அதைக்
கேட்டுக் கொண்டே இருந்தது ஒரு காலம். 

எல்.ஐ.சி பணிக்கு சேர்ந்த பின்பு முதன்முதலாக ஒரு காஸெட்
பதிவு செய்தேன். இளைய ராஜா பாடல்கள் அடங்கியது அந்த
காஸெட். பின்பு நான் நெய்வேலி எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பிற்கு
வந்து  நான்கைந்து மாதங்களுக்குப் பின்பு ஒரு புதிய பி.பி.எல்
டேப் ரிகார்டர் வாங்கினேன். முதல் காஸெட் கர்ணன் பாடல்கள்.

அப்போது இருந்த சம்பளத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு காஸெட்
வாங்குவதே சிரமமாக இருக்கும். அலுவலக விஷயமாக 
வேலூர் வந்தால் கிடைக்கும் பயணப்படியை மிச்சம் பிடித்து
காஸெட்டுகள் வாங்கிய காலமும் உண்டு.

ஒரு முறை எனது பெரிய அண்ணன் நெய்வேலி வந்த போது
அவன் வைத்திருந்த யேசுதாஸின் கர்னாட சங்கீத காஸெட் 
கேட்ட போது, தேவகாந்தாரி ராகத்தில் ஷீரசாகர சயனா என்ற
பாடல் அப்படியே ஈர்த்தது.  அதே காஸெட்டில் இருந்த கல்யாணி
ராகப் பாடலான ' ஏதா  உணரா" வில்  யேசுதாஸ் பிரயோகித்த
வேகமான ஸ்வரங்கள் அப்படியே மயக்கியது.

பள்ளி படிக்கும் காலத்தில் திருவையாறு தியாகராஜ ஆராதனைக்கு
என்.சி.சி, என்.எஸ்.எஸ், கூட வரும் உறவினர்களுக்கு துணையாக
சென்ற பூர்வ ஜன்ம ஞாபகமும் இணைந்து கொள்ள பிறகு வாங்கத்
தொடங்கியது கர்னாடக இசை காஸெட்டுக்களை.

என் திருமணத்தின் போது ஒரு சம்பவம். நெய்வேலி கிளை
ஊழியர்கள் எனது திருமணப் பரிசாக ஒரு வி.ஐ.பி பெட்டி,
அயர்ன் பாக்ஸ், மேஜை விளக்கு என வாங்கினார்கள். நானும்
கூட சென்றிருந்தேன். இவையெல்லாம் வாங்கியது போக மீதம்
பணம் இருந்தது. அதிலே தேடித்தேடி யேசுதாஸ், மகாராஜபுரம்
சந்தானம், டி.என்.கிருஷ்ணன், சிட்டி பாபு என காஸெட்டுகளாக
வாங்கினேன். 

திருமணத்திற்கு வந்த பரிசுப் பொருட்கள், பரிசுப்பணம்
 அனைத்தையும்  அந்த பெட்டியில்தான் வைத்திருந்தோம். 
அந்த பெட்டி மண்டபத்திலேயே  காணாமல் போய் விட்டது. 
பணம், பரிசுப் பொருட்கள் போனதை விட  தேடிப் பிடித்து 
வாங்கிய காஸெட்டுகள் போனதுதான் அப்போது  மிகவும் 
வருத்தமாக இருந்தது. அன்று வாங்கிய டி.என்.கிருஷ்ணன்
வயலின் பாடல்கள் பிறகு எங்குமே கிடைக்கவில்லை.


அரியக்குடி ராமானுஜய ஐயங்கார் பாடிய 'எவரி மாட' பாட்டு
போல வருமா என்று என் அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்.
சென்னையில் கூட கிடைக்காத அந்த பாட்டு தற்செயலாக 
மும்பையில் கிடைத்தது. அதைக் கேட்கும் போது வழக்கமாக
இறுக்கமாக இருக்கும் அவர் முகம் கூட மலர்ந்தது.

இளையராஜாவின் " ஹவ் டு நேம் இட்" கேட்ட பின்புதான் 
நான் அவரது வெறி பிடித்த ரசிகனானேன். வாழ்க்கையில் நான்
இழந்த ஒரு வாய்ப்பு அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் 
சங்கத்தின்   மகத்தான ஒரு  தலைவரும்  நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த தோழர் சுனில் மைத்ரா அவர்களின்
உரையை கேட்காததுதான். 

ஆனால் அவரது இரண்டு உரைகளின் டேப் பதிவுகளை 
ஒரு தோழர் வைத்திருந்து அதைக் கேட்கும் வாய்ப்பு 
கிடைத்தது. அதிலே ஒரு உரையை பல ஆண்டுகளுக்குப்
பின்பு தமிழாக்கம் செய்து  சிறு நூலாக வெளியிட்டோம்.
ஒரு முறை கேட்டது மொழியாக்கம் செய்ய மிகவும் 
உதவிகரமாக இருந்தது.  

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று உண்டு.
பாலமுரளி கிருஷ்ணாவின் தேன் குரலில் கேட்ட 
" வந்தனமு ரகுநந்தனா" என்ற சஹானா ராகப்பாடல்தான்
 எங்களுடைய  மகனுக்கு ரகுநந்தன் என்ற பெயரை அளித்தது. 


ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட முன்னூறு காஸெட்டுக்கள் வரை
சேர்ந்தது. பயணத்திற்காக ஒரு வாக்மேன், அதற்காக ஒரு பை,
என்றெல்லாம் வைத்திருந்தேன். இசையோடுதான் பயணம் 
நடக்கும். பழைய காசெட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைவதும்
சிக்கிக் கொள்வதும் தொடர்ந்தது. இதற்கிடையில் இரண்டு டேப்
ரிகார்டர்கள் மாற்றி விட்டேன். ஆனால் பழுதை சரி செய்ய முடியாத
நிலை, உதிரிகள் கிடைக்காத நிலை என்று வந்த பின்பு தூசி படியத்
தொடங்கியது. 


அலைபேசியில் பாடல்கள்  கேட்கும் வசதி, புதிதாக வாங்கிய 
கணிணியில் பாடல்கள் கேட்கும் வசதி என்று ஒரு புறம் வந்தது.
வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க இடப் 
பிரச்சினையும் இணைந்தே வந்தது. 

புத்தகங்களா ? அல்லது பயன் படுத்த இயலாத டேப் ரிகார்டரா
என்று வந்த போது கனத்த இதயத்தோடு டேப் ரிகார்டர் மற்றும்
காஸெட்டுகளை கட்டி பரணில் போட்டேன். புத்தகங்கள் வைக்க
அலமாரியில் மூன்று வரிசைகள் கிடைத்தது. அதுவும் இப்போது
நிரம்பி வழிகிறது. 

இசையை இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். 
இசையோடுதான்  இப்போதும் பயணம் நடக்கிறது. ஆனால் 
அந்த காலம் அது தனி. பதிவு செய்ய கொடுத்து விட்டு இரண்டு
முறையாவது அலைந்து பெறுவது, ஒழுங்காக பதிவாகி 
உள்ளதா என்று தவிப்போடு கேட்பது போன்ற சின்னச்சின்ன
அனுபவங்கள் மறைந்து போய் விட்டது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த முக நூலில் பார்த்த படம்
சொல்வது போல இனி வரும் தலைமுறைக்கு காஸெட்டுக்கும்
பென்சிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிய வாய்ப்பேயில்லை.

காஸெட்டுக்களின் வருகையால் வாழ்விழந்த கிராமபோன்
ரிகார்டுகளின் நிலை பற்றி யாராவது எழுதினால் நன்றாக
இருக்கும்.

தோழர் காஷ்யபன், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து 
கொள்ளுங்களேன்