Wednesday, July 31, 2019

மல்லய்யாக்கள் (மானங்கெட்டு) வாழ்கிறார்கள்"காபி டே" முதலாளி சித்தார்த் தற்கொலை மூலம் தனது வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார்.

அவர் இறுதியாக எழுதிய கடிதத்தைப் படிக்கிற போது கடன் தொல்லை உள்ளிட்ட ஏராளமான நெருக்கடிகளில் சிக்கியிருந்ததாக தெரிகிறது.

மல்லய்யா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி போன்று மானங்கெட்டுப் போய் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடாமல் பாவம் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

"ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்" என்ற நடிகர் திலகத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. 

மரண பங்கம் மோடி . . .

புல்வாமாவில் எல்லைப் படை வீரர்கள் கொல்லப்பட்ட போது காட்டில் உல்லாசமாக பொழுது போக்கிய நவீன நீரோ மோடியை கலாய்த்து பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. 

அதிலே தோழர் பகத்சிங் எழுதிய பதிவு மரண பங்கம்.

சங்கிகள் கோபப்பட்டு ஆபாச வார்த்தைகளில் பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக ஒரு கேவலமான மனிதனை ஆதரிக்கிற தாங்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று சுய பரிசீலனை செய்து கொள்வது நல்லது. 
குறிப்பு: Discovery chanella பேசுகிற மாதிரியே வாசிக்கவும்.....

இப்போ நாங்க சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம். எங்க முன்னாடி அதோ ஒரு புலி பயங்கர கோவத்துல இருப்பதை பார்த்துட்டோம். இந்திய பிரதமர் கொஞ்சம் கூட பயப்படலை, அது எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. உங்களுக்கு பயமே இல்லையான்னு கேட்டதும், " அது எங்க தேசிய விலங்கு"ன்னு அவர் சொன்னதும் நான் பயந்து போய்ட்டேன். ஏன்னா... நான் அவரோட தேசத்தை சேர்ந்தவன் இல்லை. அப்போ நான் தான் இரையாக போறேன்னு உள்ளுணர்வு சொன்னதும் என்ன பண்றதுன்னே தெரியலை.


"பயப்படாத...அது கிட்ட வரும் போது ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு"ன்னு என் காதுல மோடி ஜி சொன்னதும் நான் ஷாக் ஆயிட்டேன்.

" அய்யோ ஜி...ராமனுக்கும் புலிக்கும் தொடர்பே இல்லையே ஜி...ஆக்சுவலா சாமியே சரணம் ஐயப்பா தான் சொல்லனும்"னு நான் சொன்னதும் அவர் முகம் சிவந்ததை நான் பார்த்துட்டேன். அப்ப தான் புரிஞ்சது அவருக்கு கேரளான்னாவே ஆகாதுன்னு.

"இங்கே ஏதும் குகை இருக்கா?"ன்னு மோடிஜி கேட்டார்.

" இருக்கு ஜி..ஆனா எலெக்ட்ரிசிட்டி இருக்காது"ன்னு சொன்னதும் அவர் "ஹே ராம்" னு வானத்தை பார்த்து கை விரிச்சிக்கிட்டேசொன்னார். "இது யாருங்க ஜி ?" ன்னு கேட்டேன். " அரே பாகல்" னு பதில் சொன்னார். பாகல்னா யாருன்னு எனக்கும் தெரியலை.


ஒரு சிங்க வால் குரங்கு எங்க முன்னாடி தாவி குதிச்சி ஓடுனதை பார்த்தோம். அது பின்னாடியே ஓடி போய் "ஹேய்....அனுமான்...ஹேய் அனுமான்" னு சொன்னார். அது இன்னும் வேகமாக ஓடுனதை நான் பார்த்தேன்.

"அது யாருங்க ஜி?"..னு கேட்டேன்.

"இத்தனை கேள்வி கேட்கறியே...நீ பிரஷ்ஷா?னு கேட்டார்..

நான் வெட்கப்பட்டுக்கிட்டே..."இல்லை ஜி மேரிட் "னு சொன்னேன். பட்னு தலையிலடிச்சிக்கிட்டதை நான் பார்த்துட்டேன். 

கூட்டமா வரிக்குதிரைகள் வருவதைப் பார்த்ததும் குதுகலமாகி விட்டார் மோடி அடுத்த முறை வரும் போது நிர்மலாவையும் கூட்டி வர வேண்டுமென்றார் எனக்கு புரியவில்லை. பின்னர் அவரே விளக்கினார் அவர்தான் வரி போடும் அமைச்சர் இந்த வரிக்குதிரைகளை பார்த்தால் அவருக்கு புதிய வரிகளுக்கான ஐடியா கிடைக்கும் என்று சிரித்தபடியே சொன்னார்.


இப்போ நாங்க சேர வேண்டிய இடத்தை சேர்ந்துட்டோம். இது ஒரு புல்வெளி. உருளைங்கிழங்கு மாதிரி ஒரு பாறாங்கல்லுல மல்லாக்க படுத்து மூச்சை இழுத்து புடிச்சார். " இடுப்பு வலியா..ஜி?"னு கேட்டேன். "ஆசனம்"னு சொன்னார். நாட்டுசனம்...ஊருசனம் பத்தி இவர் கவலைப்பட்ட மாதிரி எனக்கு தெரியலை.

இப்போ இருட்ட ஆரம்பிச்சிருச்சு. இரவு உணவுக்கு நாங்க தயாராகனும். இங்கே இவரோட பாதுகாப்பா இன்றைய இரவை இங்கே கழிக்க முடியாதுன்னு தோனுது. இவரை இங்கே விட்டுட்டு போகவும் எனக்கு பயமா இருக்கு... ஏன்னா ...

கொஞ்சம் நல்ல படியாக இருப்பது இந்தக் காடு ஒன்னு தான்.

எச்சரிக்கை - பகிர்வுகள் தொடரும்

Tuesday, July 30, 2019

வீரர்களை கோழைகள் கொண்டாடுவார்களா?


திப்பு சுல்தான் விழாவை யெட்டி ரத்து செய்துள்ளதில் வியப்பில்லை.

கோழைகளால் வீரர்களை கொண்டாட முடியாது.

திப்பு சுல்தான் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட இல்லாத யெட்டி விழா கொண்டாடுவதுதான் திப்புவிற்கு இழுக்கு.

சூர்யா – மதிப்பு உயர்கிறது.
அகரம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து இந்து தமிழில் திரு சமஸ் எழுதிய கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஒரு அறக்கட்டளை தாங்கள் வழங்கும் உதவிகள் சேர வேண்டியதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக வகுத்துள்ள வரையறைகள் பாராட்டத்தக்கது. கல்வியாளர் கல்யாணியின் பார்வை பாராட்டுதலுக்குரியது.

அரைவேக்காடு என்று ஆட்சியாளர்களால் விமர்சிக்கப்படுகிற  சூர்யா நடத்தும்  அறக்கட்டளையே இவ்வளவு யோசிக்கிற போது இந்த முழு வேக்காட்டு ஆட்சியாளர்கள் ஒரு புதிய  கல்விக் கொள்கையை உருவாக்கும் போது எவ்வளவு அக்கறையாக செயல்பட்டிருக்க வேண்டும்?

அவர்கள் அக்கறை யாருக்காக என்பதை இன்னொரு பதிவில் பார்க்கும் முன்பு

சமஸ் அவர்களின் கட்டுரையை படியுங்கள். சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனால் மிக முக்கியமானது. அவசியம் படியுங்கள். இதை படித்தவுடன் சூர்யா மீதான மதிப்பு என் மனதில் உயர்ந்தது. நிச்சயமாக உங்கள் மனதிலும் கூட . . .

சூர்யாவின் அகரத்திடம்
  இந்தியக் கல்வித் துறை   கற்க வேண்டிய பாடம்

======சமஸ்வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது.

 நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன.

 மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.

அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன்.

எப்போது தூங்குவான்?

ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான்.

என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.

நம்முடைய அகராதியிலிருந்து அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பிள்ளைகளின் குடியிருப்புகள் எதையும் நாம் வீடுகள் என்று குறிப்பிடவே முடியாது. வெறும் நூறு சதுரடி அல்லது இருநூறு சதுர அடிக்கு உட்பட்ட குடிசைகள்; கீழே மண் தரை, மேலே கீற்றுக்கூரை, சுவர்களாகச் சாக்குத் துணி; நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட குடும்பம் அதற்குள் வசிக்கிறது. அவர்களுடைய உடைமைகள், சமையல், படுக்கை, வாழ்க்கை சகலமும் அதற்குள்தான். பொருளாதார அழுத்தம் மட்டுமல்ல அது; நெஞ்சத்தில் ஒரு பெருமூட்டைபோல ஒட்டுமொத்த சமூக அழுத்தத்தையும் தூக்கிச் சுமந்துகொண்டுதான் பள்ளிக்கூடங்களை நோக்கி மூச்சிரைக்க அவர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களைத்தான் நாம் சொல்கிறோம், “இது ஒரே நாடு பன்னிரண்டு ஆண்டுகள் படித்து நீ எடுத்த உன் பள்ளிக்கூட மதிப்பெண்கள் போதாது; நான் வைக்கும் இன்னொரு தேர்வில் நீ டெல்லியிலும் சென்னையிலும் வருஷத்துக்கு பத்து லட்சம் வரை கட்டி சிறப்புப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுடன் மோதி ஜெயிக்க வேண்டும்; நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்குப் போ! இன்னும் ஓடு!”

இந்த 10 வருஷத்தில் ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள்; 54 பேர் மருத்துவர்கள். இவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நம் கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் இருப்பது மட்டும் உலகம் அல்ல என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது இந்தக் கல்விப் பணி” என்றார். “பெற்றோர் இறந்துவிட்டார்கள். விண்ணப்பம் வாங்கக்கூட அந்த மாணவியிடம் பணம் இல்லை. நாம் செய்தது சின்ன உதவி. ஆனால், அது இன்று இந்திய ராணுவத்தில் அவரை மருத்துவராக ஆக்கியிருக்கிறது. கல் உடைக்கிற தொழிலாளியின் மகனும், ஆடு மேய்ப்பரின் மகனும் மருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். கல்வி ஒரு சமூக அறமாக இருக்க வேண்டும். ‘பணம் இருந்தால் விளையாடு’ என்கிற சூதாட்டமாக அது மாறக் கூடாது இல்லையா?”

சூர்யா நிறுவியது என்றாலும், ‘அகரம் அறக்கட்டளை’ என்பது சூர்யா மட்டும் அல்ல; இப்படி ஒரு அமைப்புக்கு கருத்துருவம் கொடுத்த எழுத்தாளர் ஞானவேல், செயலுருவம் கொடுத்த கல்வியாளர் கல்யாணி, அமைப்பைச் சுமந்து பொறுப்பேற்று நடத்தும் ஜெயஸ்ரீ, தங்களுடைய பணிகளுக்கு அப்பாற்பட்டு எளியோரின் கல்விக்காகச் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஏழை மாணாக்கரின் எதிர்காலத்துக்காக நிதியளிக்கும் கொடையாளர்களின் கூட்டுச் சேர்க்கை அது. “உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை நேரில் பார்க்கச் செல்லும்போது, நல்ல உடைகூட இல்லாத நிலையில் வெளியே வர சங்கடப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் பிள்ளைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை அடுத்தகட்டத் தேர்வுக்காக அருகில் உள்ள நகரத்துக்கு அழைத்தால் பலரிடம் பஸ் செலவுக்குக்கூடப் பணம் இருக்காது. பெண் பிள்ளைகளின் எல்லா படிப்புச் செலவையும் நாம் ஏற்றுக்கொண்டாலும்கூட, சமூகச்சூழல் சார்ந்து பெற்றோர்கள் யோசிப்பார்கள். உயர்கல்வி படித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது, திருமணச் செலவு என்று எல்லாமே மாறிவிடும் என்று அஞ்சுவார்கள். ஏழ்மை என்றால் அப்படி ஒரு ஏழ்மை இங்கே இருக்கிறது; நாம் கிராமங்களிலிருந்து நிறைய தூரமாகிவிட்டோம்” என்றார் ஞானவேல்.

நான் ‘அகரம்’ அமைப்பின் மீது கொண்டிருக்கும் பெருமதிப்பு அது தன்னிடம் உதவி கோரும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உருவாக்கிக்கொண்டிருக்கும் தேர்வு முறையில் இருக்கிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு மாணாக்கர்களை அது வரிசைப்படுத்துவதில்லை. உயர்கல்விக்கு உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்களைத் தேர்ந்தெடுக்க ‘அகரம்’ கையாளும் முறைமை இது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 150 புள்ளிகள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 50 புள்ளிகள். அரசுப் பள்ளி மாணவர் என்றால் 15 புள்ளிகள். மாற்றுத்திறனாளி என்றால் 20 புள்ளிகள். தலித்துகள் அல்லது பழங்குடியினர் அல்லது இலங்கை அகதிகள் என்றால் 25 புள்ளிகள். மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர் என்றால் 25 புள்ளிகள். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத குக்கிராமத்தினர் என்றால் 20 புள்ளிகள். மின் வசதி இல்லாத வீட்டில் வசிப்பவர் என்றால் 10 புள்ளிகள். தாயை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 20 புள்ளிகள். தந்தையை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 10 புள்ளிகள். குடிநோய்க்கு ஆளாகி குடும்பத்தைக் கவனிக்காதவராகத் தந்தை இருந்தால் 5 புள்ளிகள். குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வரும் மாணவர் என்றால் 10 புள்ளிகள். பெற்றோர் பத்தாம் வகுப்பு வரைகூடப் படித்திராதவர்கள் என்றால் 10 புள்ளிகள். தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் நேரில் செல்கிறார்கள். உண்மையை உறுதிசெய்கிறார்கள். அவர்களுடைய கள நிலவர அறிக்கைகளிலிருந்தே ‘அகரம்’ தன்னுடைய செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது.

எளியோர் கல்விக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட பேராசிரியர் கல்யாணி வகுத்தளித்த முறைமை இது. “ஏன் தந்தையில்லாக் குழந்தைக்கு 10 புள்ளிகள் என்றும் தாயில்லாக் குழந்தைக்கு 20 புள்ளிகள் என்றும் பிரித்திருக்கிறீர்கள்? பொதுவாக, தந்தையில்லாக் குழந்தைகள்தானே பொருளாதாரரீதியாக அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் நம் சமூகத்தில் இருக்கிறது?” என்று பேராசிரியரிடம் கேட்டேன். “அந்தப் பொதுப்பார்வை தவறு என்பதையே எங்கள் களப்பணி அனுபவத்தில் உணர்ந்துகொண்டோம். தந்தையில்லாக் குழந்தைகள் எப்படியோ தாயால் படிக்கவைக்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால், தாயில்லாக் குடும்பங்களோ சீரழிந்துவிடுகின்றன. அந்தக் குடும்பங்களில் விழும் முதல் அடி குழந்தைகளின் படிப்புக்குத்தான்” என்றார் கல்யாணி.

அடிப்படையில், நம்முடைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருக்கிறதா, தந்தைவழிச் சமூகமாக இருக்கிறதா என்ற கேள்வியை நீங்கள் சொல்லும் கள உண்மைகள் எழுப்புகின்றன என்று சொன்னேன். “இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றார் கல்யாணி. “தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் குடிநோயானது குடும்பங்களைச் சீரழிக்கும் பெரும் சமூக அவலமாக மாறியிருப்பதை எங்களுடைய இந்தப் பயணத்தில் பல குடும்பங்களின் நிலையிலிருந்து உணர்ந்தோம். அதனால்தான் அப்படிப்பட்ட குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 புள்ளிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறோம். நன்றாகப் படிக்கும் ஒரு நல்ல மாணவர் பன்னிரண்டாம் வகுப்பின்போது உடல்நிலை அல்லது குடும்பச் சூழல் பாதிக்கப்பட்டு கொஞ்சம் மதிப்பெண் குறைகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பொருட்டில் அவர் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. அதனால்தான் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டுவருகிறோம். எப்படியும் ஒரு நல்ல மாணவர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது; அதற்கு நம்முடைய அமைப்பு முறை காரணமாகிவிடக் கூடாது!”

நூற்றுக்குத் தொண்ணூறு சத மதிப்பெண்களை எடுப்பவர்களுக்கு மட்டும் ‘அகரம்’ உதவவில்லை; நாற்பது சத மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கும் அவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்பைப் பெற உதவுகிறது. “நம்மூரில் ஒரு வழக்கம் உண்டு. கல்விக்கு உதவுகிறேன் என்ற பெயரில் முதல் வரிசை மதிப்பெண்கள் எடுத்தவர்களை அழைத்து பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு மலைக் கிராமத்தில் கல்வியறிவில்லாத தாய் - தகப்பன்களுக்குப் பிறந்து, ஏழ்மையை எதிர்கொள்ள காட்டு வேலைக்குப் போய்க்கொண்டே படித்து அறுபது சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவி, நகரத்தில் எல்லா வசதிகளோடும் படித்து தொண்ணூறு சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவருக்குச் சளைத்தவர் இல்லையே? முன் வரிசையில் வருபவர்களுக்கு உதவத்தான் அரசாங்கமே இருக்கிறதே; பின்னே நிற்பவர்களையும் அல்லவா முன்னுக்குத் தள்ளுவது உண்மையான உதவி?”

இந்திய அரசும் பொதுச் சமூகமும் பெற வேண்டிய முக்கியமான பார்வை மாற்றம் இது. இந்திய அரசு இன்று உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் பேராசிரியர் கல்யாணி உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. நம்முடைய அமைப்பின் தேர்வு முறை கூடுமானவரை மாணவர்களை வெளித்தள்ளுகிறது. கல்யாணியின் வரையறைகளோ கூடுமானவரை மாணவர்களை உள்ளிழுக்கிறது.

ஊர் கண் விழிக்கும் வேளையில், சூரியனுக்கு முன் கடலிலிருந்து வெளிப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடி வரும் ஒரு சிறுவனிடம் உள்ள கல்வித் தேட்டத்தை உணரும் நிலையில் ஒரு அரசும் அமைப்பும் இல்லை என்றால், அவை உயிர்த்தன்மையை இழந்துவருகின்றன என்று பொருள். தம்மை விமர்சிப்போர் மீது பாய்வதை நிறுத்திவிட்டு நம்முடைய அமைப்புகள் முதலில் தன்னிலை உணரட்டும்; ஏனென்றால், ஜடங்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in


Monday, July 29, 2019

அடிச்சுத் தூக்கும் மொட்டைச் சாமியார் ஆட்சிதான் . . .
அமித், யோகி, கொலைகள்

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பராக உள்ளது என்று மொட்டைச் சாமியார் யோகிக்கு போலி எண்கவுண்டர் புகழ் அமித்து ஷா நேற்றுதான் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.

இன்று ஒரு செய்தி வருகிறது.

பாஜகவின் உனாவ் தொகுதி எம்.எல்.ஏ கு;ல்தீப்சிங் செங்கார் ஒரு சிறு பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்.

காவல்துறை வழக்கு பதிய மறுக்கிறது. அந்தப் பெண்ணும் அந்தப் பெண்ணின் தந்தையும் முதலமைச்சர் மொட்டைச் சாமியார் வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயல்கிறார்கள்.

கைது செய்யப்படுகிற தந்தை காவல்துறையால் லாக்கப்பில் அடித்து கொல்லப்படுகிறார். காவல்துறையின் லாக்கப் கொலைக்கு ஒருவர் சாட்சி சொல்லி விஷயம் பரவியதால் வேறு வழியில்லாமல் அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்படுகிறார். சாட்சி சொன்ன நபர் சில வாரங்களில் கொல்லப்படுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணையாக இருந்த அப்பெண்ணின் மாமா மீது பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு வழக்கு தூசு தட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அவரை சிறையில் சென்று பார்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய், வழக்கறிஞர், ஒரு உறவினர் ஆகியோர் காரில் செல்கிறார்கள். நம்பர் பிளேட் இல்லாத ஒரு லாரி தவறான பாதையில் வந்து இந்த காரை நசுக்குகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தாயும் உறவினரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்கள்.

இன்னொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.

“ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்ல மறுத்த ஒரு பதினான்கு வயது வாலிபன் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளான்.

இதுதான் உத்திரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கின் லட்சணம். இதற்குத்தான் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் போலி எண்கவுண்டர் புகழ் அமித்து ஷா!

பேய்களின் ஆட்சியில் கொலைகள்தான் சாத்திரங்கள்!

இதோ இதை எழுதி முடிக்கையில் இன்னொரு செய்தி வருகிறது. பாஜகவின் ஒரு முன்னாள் மாவட்டத்தலைவர் அரசு வேலை வாங்கித்தருவதாக சொல்லி ஒரு பெண்ணை அழைத்து பாலியல் வன் புணர்ச்சி செய்துள்ளார். இது நடந்தது வாரணாசியில். 

Sunday, July 28, 2019

ஸ்பெல்லிங் மாற்றிய யெட்டி தலை தப்புமா?


இன்று யெடியூரப்பா மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போகிறார்.

ஏற்கனவே ஒரு முறை முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ராஜினாமா செய்து விட்டுப் போனவர் இப்போது மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.

இம்முறையாவது அவர் தலை தப்புமா?

எந்த நம்பிக்கையில் அவர் முதல்வரானார்?

ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி குமாரசாமி மந்திரி சபையை கவிழ்த்த தைரியமா?

அதே ஆயிரக்கணக்கான கோடிகள் மூலமாக பெரும்பான்மை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையா?

காங்கிரஸ்- ஜனதா தள் - இந்த இரண்டு கட்சிகளில் இப்போது உள்ளவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு விலைக்கு வாங்க முடியும் என்ற நம்பிக்கையா?

நோ, நோ, நோ

எல்லாம் பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றியுள்ள நம்பிக்கைதான்.

ஆமாம்.   
  
Yeddyurappa  

என்ற பெயரை

Yediyurappa

என்று மாற்றிக் கொண்டு விட்டார். 

வாழ்க்கையையே பிழையாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு எழுத்துப் பிழையெல்லாம் ஒரு விஷயமா என்ன?

பார்ப்போம். இதுவாவது அவருக்கு கை கொடுக்கிறதா என்று!சூப்பரா கேட்டாரு சு.வெங்கடேசன்!
தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சூர்யாவை மிரட்டுகிற சங்கிகள் தொடர்பாக மக்களவையில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி தோழர் சு.வெங்கடேசன் பேசிய காணொளி கீழே உள்ளது.கருத்து கேட்கிறீர்களா இல்லை ஆதரவு கேட்கிறீர்களா?

பதில் சொல்லுங்கய்யா . . .

தளபதி 2019 - நியூ வெர்ஷன் . .


அதானி என்றால் அனைத்துமே . . .

திருவனந்தபுரம், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூர், கௌஹாத்தி, அகமதாபாத் விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது என்று முடிவெடுத்தது மத்தியரசு. அதற்காக டெண்டரும் விட்டது. 

நிதியமைச்சகமும் நிதி அயோக்கும் இரண்டு நிபந்தனை போட்டது. 

ஒரு நிறுவனத்திற்கு இரண்டு விமான நிலையங்களை மட்டுமே அளிப்பது என்று ஒரு நிபந்தனை. (எல்லா பெரு முதலாளியும் பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்ற நல்லெண்ணம்)

டெண்டர் எடுக்கும் நிறுவனத்திற்கு விமான நிலையம் நடத்திய அனுபவம் இருக்க வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை.

ஆனால் ஆறு விமான நிலையங்களுக்கும் அதிக விலைக்கு டெண்டர் கொடுத்தது அனுபவம் எதுவுமே இல்லாத அதானி.

அதானிக்கு எதிராக நிபந்தனையைச் சொல்ல முடியுமா? விமான நிலையம் நடத்தியிராவிட்டாலும் மோடிக்கு ஓசியில் விமானம் கொடுப்பவராயிற்றே!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை நாங்களே நடத்துகிறோம் என்று டெண்டர் கேட்ட கேரள அரசை நிராகரித்தது போல அதானியை நிராகரிக்க முடியுமா?

ஆகவே நேற்று மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக மூன்று விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்த்து விட்டது.

அடுத்த மூன்று அடுத்த வாரமாம் . . .

வாழ்க மோடி!
வளர்க அவரது அதானி தேசம்!

Saturday, July 27, 2019

பாஜக - ஊளையிடும் ஓநாய்கள்


மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுக்க ஊளையிடுகிற பாஜக ஆட்களை ஓநாய்கள் என்று அழைப்பதுதான் பொருத்தம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.

இத்தனை அமளியையும் வேடிக்கை பார்க்கும் பொறுப்பான அந்த மனிதருக்கு பாராட்டுக்கள். 
ம், இன்னிக்கு இந்நேரம் . . .ஆழ்ந்த பெரு மூச்சு விட வேண்டியுள்ளது.

இன்றைக்கு இப்படியெல்லாம் காலையில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து சாவகாசமாக பதிவெழுதல்லாம்  வாய்ப்பே கிடைத்திருக்காது.

ஆமாம்.

எங்கள் கோட்டச்சங்கத்தின் 32 வது பொது மாநாடு இன்றும் நாளையும் வாணியம்பாடியில் நடைபெறுவதாக இருந்தது.

வழக்கமாக இந்நேரத்தில் எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதா என்று பார்த்திருப்போம். கிளைகளிலிருந்து வரும் தோழர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருப்போம். காலை உணவு பரிமாறத் தொடங்கி விட்டார்களா என்று கேட்டுக் கொண்டு இருந்திருப்போம். பேரணி தொடங்கும் இடத்திற்கு கொடிகள், கோரிக்கை அட்டைகள் போய் விட்டதா என்று உறுதிப் படுத்திக் கொண்டிருப்போம். 

அவ்வளவு பரபரப்பாய் இருந்திருக்க வேண்டிய நேரத்தில் இப்போது நிதானமாக பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆமாம். 

மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தல் ஆகஸ்ட் ஐந்தாம் நாள் நடைபெறவுள்ளதால் 

எங்கள் மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம்.

மாநாட்டில் பேரணி நடத்தக் கூடாது, பிரச்சாரம் கூடாது,  மக்கள் ஒற்றுமை கலை விழா நடத்தக் கூடாது, விளம்பர பேனர் வைக்கக் கூடாது, கொடி கட்டக் கூடாது என்று முதலில் பல நிராகரிப்புக்கள்.

பிறகு அரங்கத்தில் கூட நடத்தக் கூடாது என்று அழுத்தம். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம். தேர்தல் நடத்தை விதி, நான் என்ன செய்ய முடியும் என்று அவரும் கை விரித்து விட்டார்.

தேர்தல் சமயத்தில் அரசியலற்ற நடவடிக்கைகள் கூடாது என்பது வினோதமாகவே இருக்கிறது.

மக்களிடம் மாநாட்டுச் செய்தியை எடுத்துச் செல்லாமல் மாநாடு நடத்தி என்ன பயன் என்று கலந்தாலோசித்து மாநாட்டை  செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டோம்.

வேலூர் தொகுதி தேர்தல் இம்முறையாவது ஒத்தி வைக்கப்படாமல் ஒழுங்காக நடக்கட்டும். . .

Friday, July 26, 2019

வீதியில் நிற்கும் வீர் சக்ரா விருதாளர்.


எங்கள் மேற்கு மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் வி.எஸ்.நால்வாடே அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த பதிவு இது.கார்கில் போர் வெற்றி தினத்தை கொண்டாடும் இந்நாளில் டைகர் சிகரத்தை மீட்பதற்கான போரில் பாகிஸ்தான் கேப்டன் ஷேர் கானை வீழ்த்தி வீர சாகஸம் புரிந்த வீரர், வீர் சக்ரா விருது பெற்ற  அன்றைய சிப்பாய் சத்பால்சிங் பஞ்சாபில் போக்குவரத்து ஹெட் கான்ஸ்டபிளாக பவானிகர் என்ற சிறிய ஊரின் வீதியில் நிற்கிறார். அவரால் கொல்லப்பட்ட கேப்டன் ஷேர்கானுக்கு பாகிஸ்தான் அரசு தன்னுடைய வீர விருதுகளிலேயே மிக உயர்ந்த விருதான நிஷான் –இ-ஹைதர் விருதை வாழ்நாளுக்கு பிந்தைய விருதாக வழங்கி கௌரவித்தது. ஆனால் சத்பால்சிங்கை நாம் வீதியில் நிறுத்தியுள்ளோம்.

பிகு: இச்செய்தி வைரலான பின்பு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் சத்பால்சிங்கிற்கு உடனடியாக உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்துள்ளார்.

விமர்சனத்தை ஏற்று செயல்பட்ட பஞ்சாப் முதல்வருக்கு பாராட்டுக்கள்.

கையெழுத்திட்டால் கொலை மிரட்டல்"ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லி அடித்துக் கொல்லும் கொடூரங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாற்பத்தி ஒன்பது திரைப் பிரபலங்கள் கையெழுத்திட்டு  பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாஜகவில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிய ரேவதி, பாஜக கருத்தியலை தன் படங்களில் சொன்ன மணிரத்னம் ஆகியோரும் கையெழுத்திட்டவர்கள் பட்டியலில் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. திருந்தியிருந்தால் மகிழ்ச்சியே.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட கௌசிக் சென் என்ற வங்க மொழி நடிகருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.

கொலைகள் நடப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டதற்காக கொலை மிரட்டல் விடுப்பதெல்லாம் 

மோடி ஆட்சி செய்தால்  ........................................ சாத்திரங்கள்.......

Thursday, July 25, 2019

அந்த குரலில் அப்படியே மயங்கி . . .


நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஒரு வேலையாக வெளியே போயிருந்தேன். திரும்பி வருகையில் திமுக பிரச்சார வாகனம்(ஆமாம். வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் ஐந்து அன்று நடைபெறவுள்ளது) ஒன்று காலியாக  முன்னே போய்க் கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தில் ஒரு பிரச்சாரப் பாடல்.  மறைந்த நாகூர் ஹனீபாவின் குரலில் அப்படியே மயங்கி விட்டேன். மெதுவாகச் சென்ற  அந்த வாகனத்தை ஓவர் டேக் செய்து போயிருக்கலாம். ஆனால் அந்த கம்பீரக்குரல் அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லை. 

எங்கள் அலுவலகம் வரும் வரை அந்த குரலைக் கேட்டபடி வந்து கொண்டே இருந்தேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற  அடிப்படையில்  திரு நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலித்த இரண்டு  திரைப்பாடல்களின் காணொளி இணைப்புக்கள் கீழே

நட்ட நடு கடல் மீது

உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?

நாகூர் ஹனிபா என்றாலே மனதில் நினைவு வரக்கூடிய இரண்டு பாடல்களை பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி சரியாக இருக்கும்?

எல்லோரும் கொண்டாடுவோம் . . .

இந்த பாடல் அவருடைய குரலுக்காக மட்டுமே

இறைவனிடம் கையேந்துங்கள்


அடப்பாவிகளா! இதற்குமா நேரு!
வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை நீக்கிக் கொண்டிருந்த போதுதான் கீழே உள்ள படம் கண்ணில் பட்டது.
H
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்குக் காரணம் அணி வீரர்களின் பெயரை ஒழுங்கு படுத்தினால் ஜவஹர்லால் நேரு என்று வருவதனால்தானாம்.

இதை பகிர்ந்தவர் ஒரு மோடி விசுவாசி. ஆகவே பகடி இல்லை.
எவ்வளவு மோசமாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்!

நல்ல வேளை, நேரு இறந்து விட்டார். உயிருடன் இருந்திருந்தால் . . .


Wednesday, July 24, 2019

டெஸ்க் வொர்க் எனப்படுவது யாதெனில்
தினமலர் பற்றிய ஒரு பழைய பதிவில் “டெஸ்க் வொர்க்னா என்னங்க?” என்று பிக் பாஸ் கஞ்சா கருப்பு பாணியில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

டெஸ்க் வொர்க் பற்றி சுருக்கமாக விளக்குவோம்.

ஒரு நிருபரின் பணி என்பது அடிப்படையில் களம் சார்ந்தது. ஒரு போராட்டமோ அல்லது கலவரமோ அல்லது விபத்தோ அல்லது விழாவோ நடக்கிறது என்றால் அங்கே நேரடியாக சென்று செய்திகளை சேகரித்து அளிப்பது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் இரண்டிற்கும் இது பொருந்தும்.

பெரும்பாலான நிருபர்கள் களத்திற்கு செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அங்கேயும் சொகுசுப் பேர்வழிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்கள் நேரடியாக களத்திற்குச் செல்லாமல் தன் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த படி களத்திற்குச் சென்ற தன் சக நிருபர்களிடம் செய்தியைக் கேட்டு தனது சொந்த கற்பனைச் சரக்கையும் சேர்த்து தன் நிறுவனத்திடம் செய்தியாக அளித்து விடுவார்கள். இதுதான் டெஸ்க் வொர்க்.

இப்போதெல்லாம் நிருபர்களுக்குள் ஒரு ப்ரொபஷனல் எதிக்ஸ் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் தான் எடுத்த புகைப்படத்தை தன் நண்பரான இன்னொரு பத்திரிக்கை நிருபருக்கு அனுப்பி வைப்பார்.

இதனால் செய்தி எப்படி வரும் என்று ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இன்சூரன்ஸ்துறை கருத்தரங்கம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதைய அரூர் தொகுதி எம்.எல்.ஏ தோழர் பி.டெல்லிபாபு உரையாற்றுவதாக இருந்தார். ஆனால் அன்று அவரால் வர முடியாத நிலையில் எங்களின் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் உரையாற்றினார்.

அன்று அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நிருபர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். அதிலே ஒரு நாளிதழில் மட்டும் செய்தி வந்திருந்தது. நிருபர் வராத ஒரு நாளிதழில் கூட செய்தி வந்தது. அந்த செய்தியோ மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ டெல்லிபாபு பேசினார் என்று சொன்னது.

இது போல பல நிகழ்ச்சிகளில் நோட்டீஸில் பெயர் போட்ட அத்தனை பேரும் பேசியதாக செய்தி வரும். ஆனால் அதிலே பாதி பேர் கூட அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இதெல்லாம் அழைப்பிதழைப் பார்த்து தயாரிக்கிற செய்திதான். இதெல்லாம்தான் டெஸ்க் வொர்க்.

மகாமகம் பற்றி குமுதம் வெளியிட்ட செய்தி பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதன் இணைப்பு இங்கே உள்ளது. டெஸ்க் வொர்க்கிற்கான கிளாசிக்கல் உதாரணம் இது.

சில வருடங்களுக்கு முன்பு பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இறந்து போன போது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின் விபரங்கள் எல்லாம் இப்போதைய பாடகர் ஸ்ரீனிவாஸ் பற்றியது. கூகிளைத் தேடி தயாரித்த செய்தியின் லட்சணம் அது.

சமீபத்தில் கூட டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு சொதப்பல் செய்தியைப் பார்த்தேன். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பற்றி ஒரு செய்தி வெளியிட்டது. அவரது புகைப்படம் கீழே உள்ளது. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்கள்.எம்.எல்.ஏ அன்பழகனுக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

சுருக்கமாக

டெஸ்க் வொர்க் என்பது யாதெனில்
களத்திற்குச் செல்லாமல் கண்டபடி செய்தி எழுதுவது.


மோடி, ட்ரம்ப் - யார் பொய்யர்?


ஜி -20 உச்சி மாநாட்டின் சமயத்தில் தன்னோடு பேசிய மோடி, காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சொல்லி உள்ளார். அப்படி மத்தியஸ்தம் செய்ய தான் தயாராகவே இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற இந்திய நாட்டின் நிலைப்பாட்டை மோடி கைகழுவி விட்டாரா என்று நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்கட்சிகள் கேட்ட போது

"மோடி அப்படியெல்லாம் ட்ரம்பிடம் மத்தியஸ்தம் செய்யச் சொல்லி கேட்கவில்லை"

என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

மோடி - ட்ரம்ப்

இந்த இருவரில் பொய் சொல்வது யார்?

மோடி அவ்வாறு பேசவில்லை என்று மழுப்பலாக சொல்லும் ஜெய்சங்கர் ட்ரம்ப் சொல்வது பொய்யா என்ற கேள்விக்கு  ஏன் பதில் சொல்லவில்லை?

மோடியா? ட்ரம்பா? யார் பொய்யர்?
அல்லது இருவருமேவா?
ஏனென்றால் இருவருமே மோசடிப் பேர்வழிகள்...

உண்மை வெளிவராமல் அப்படியே அமுங்கப் போகும் சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாகப் போகப் போகிறது.

அதற்குக் காரணம்
இருவருமே சர்ச்சையை திசை திருப்பக் கூடிய 
மோசடிப் பேர்வழிகள் என்பதுதான்.

Tuesday, July 23, 2019

சுகமா தூங்குப்பா யெடியூரப்பா


ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் செய்யப்பட்ட "ஆபரேஷன் தாமரை" வெற்றி பெற்று விட்டது.

அல்பாயுசில் பறி போன முதல்வர் பதவி மீண்டும் கிடைக்கப் போகிறது.

குதிரை பேரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கொடுத்து ஜனநாயகத்தை படுகுழிக்கு அனுப்பி விட்ட நிம்மதியோடு

சுகமா வீட்டுக்குப் போய் நல்லா தூங்குப்பா, யெடியூரப்பா!

நேர்மைக்கு வெற்றி என்று நாளை மோடி சொல்வார், சிரிக்காமல் கேட்டுக் கொள்ளப்பா!

கல்யாண சமையல் சாதம் கூட . . .

வண்ணத்தில் மாற்றப்பட்ட கருப்பு வெள்ளைப் பாடல்கள் இரண்டை ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருந்தேன்.

பராசக்தி பாடலைப் பார்த்த பிறகு ஒரு தோழர், “கல்யாண சமையல் சாதம்” பாடலும் இப்போது வண்ணத்தில் வந்துள்ளதாக அனுப்பி வைத்தார்.

முந்தைய இரண்டு பாடல்களை விட வண்ண மாற்றம் இப்பாடலில் நன்றாகவே இருக்கிறது.

நீங்களும் பார்த்து மகிழுங்கள் . . .


அதென்ன கப்பலா எடப்பாடி?
தூத்துக்குடியில் வேன் மீது நின்று சுட்டதாக சொல்வது கற்பனை என்று சொல்லும் எடப்பாடி அவர்களே, மேலே உள்ள படத்தில் உள்ள வாகனம் என்னகப்பலா?

பாவம்! டயருக்கு கும்பிடு போட்ட நீங்கள் வாகனத்தை எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்?

Monday, July 22, 2019

அவருக்கு நிகர் யாருமில்லைநேற்று நடிகர் திலகத்தின் நினைவு நாள். அதை முன்னிட்டு எங்கள் தோழர் சின்னையன் பகிர்ந்து கொண்ட காணொளி. திருமண வீட்டில் சந்தனம் பூசிக் கொள்வதில் மட்டுமே வித்தியாசத்தை காண்பிக்க முடிகிற ஒரு ஒப்பற்ற கலைஞனான நடிகர் திலகத்திற்கு வேறு யாரும் நிகரில்லை. 

காலமெல்லாம் நிலைத்திருக்கும் மகா கலைஞன் . . .
Sunday, July 21, 2019

இனி நோ “மை லார்ட்”
ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இனி வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விவாதித்து முடிவெடுத்துள்ளனர். ஜன நாயக நாட்டில் இது போன்று அழைப்பது பொருத்தமில்லை என்பதால் இம்முடிவு என்றும் சொல்லியுள்ளனர்.

ராஜஸ்தான் முன்னுதாரணத்தை மற்ற உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பின்பற்றலாமே!

ஜல்லிக்கட்டு போல திரள்வீராக . . .

தஞ்சையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாட்டை முன்னிட்டு தமிழகமெங்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தவுள்ள் விரிவான உரையாடலை சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா துவக்கி வைத்து பேசியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அனுபவச் செறிவோடு அந்த சிம்மக் குரலோர் பேசிய காணொளியை காண

இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடியதுபோல்... தமிழுக்காக ஒன்று கூடியதுபோல்...
பொதுவுடமைப் போராளி என்.சங்கரய்யா வேண்டுகோள் !
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3-வது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஆகஸ்ட் மாதம் 15,16,17 தேதிகளில் நடைபெறுவதாக அறிகிறேன். அந்த மாநாட்டினையொட்டி தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி தமிழக மக்கள் மத்தி யில் ஒரு விரிவான விவாதத்திற்கு (ஒரு மாத கால விவாதத்திற்கு) இந்த முன்னணி ஏற்பாடு செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.  அதை துவக்கி வைக்கக்கூடிய முறையில், ஒரு சில வார்த்தைகளை இன்று உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நல்ல பல சேவைகளை கடந்த சில ஆண்டு களாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கு தீண்டாமைக் கொடுமைகள் நடக்கிறது என்று தெரிந்தவுடன், அங்கு சென்று, அதில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கலப்பு திருமணங்களால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளில் பாதிக்கப்படக்கூடியவர்க ளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்க ளுக்கு சட்ட உதவிகள் கிடைப்பதற்கும், அவர்கள் வாழ்வு நிம்மதியாக இருப்பதற் கும், உதவிகள் செய்வதற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறது.  இந்த முன்னணி ஒரு மேடைதான். அனைத்து அபிப்பிராயங்களைக் கொண்ட மக்களும், சகலவித கருத்துக்களை கொண்ட அரசியல்வாதிகளும் சேர்ந்து, தீண்டாமை என்பது ஒரு கொடிய முறை; அது அகற்றப்பட வேண்டும் என்று எண்ணம்கொண் டவர்கள்.இதை முன்வைத்து, தமிழகத்தில் தீண்டாமையை அகற்றுவதற்கு அனைவரும் ஒன்றுகூடுவது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன்.
ஆலய நுழைவு 
தமிழக வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்த ஆலய நுழைவுப் பிரவேசத்தில் பட்டியலினத்தவர்களும் வேறு பல சாதியினரும் கோவிலில் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் அந்த கட்டுப்பாட்டை உடைத்து, ஏராளமான பட்டியலிடப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கோவில்களில் மத வழிபாடு செய்யும் உரிமையை பெற்றுத் தருவதில் போராடி வெற்றி பெற்றனர். தமிழக கோவில்களில் பட்டியலினத்த வர்களும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்கு தடையின்றி செல்வது இன்றைக்கு அமலில் உள்ளது. இது மாபெரும் வெற்றி. இந்த நடவடிக்கையை அன்றைக்கு வைதீ கத்தில் நம்பிக்கை கொண்டிருந்த சிலர் எதிர்த்தனர். ஆனால் ஒரு சில வாரத்திலே இது தவிர்க்க முடியாத மாற்றம் என்று ஒத்துக் கொண்ட அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கி றேன். தமிழகத்தில் அந்த நடவடிக்கை எடுப்ப தற்கு முன்னால்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசிய விடுதலை இயக்கம் போராடி யது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பட்டியலினத்தவர்களையும் தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தில் கொண்டு வர வேண்டு மென விரும்பினார்கள்.  அப்படி விரும்பியபோது, அவர்களின் வாழ்க்கை நிலையை கண்டு அதை மேம் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட னர். தேசிய விடுதலை இயக்கத்திலிருந்த தலைவர்களும் தொண்டர்களும் சேரிகளு க்கு சென்று, அப்பகுதி குழந்தைகளை குளிப்பாட்டி, அவர்களுக்கு ஆடை உடுத்தி, அந்த சேரியையும் சுத்தம் செய்யும் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு விடுதலை போராட்ட இயக்கம் மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது. அவர்க ளும் இதில் பங்கு கொண்டார்கள். ஆக, இப்ப டிப்பட்ட முறையில் அவர்களையும் போராட் டத்தில் இணைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதந்திரத்தைப் பெறுவதிலே வெற்றி கண்டது. 
திருப்புமுனை

இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை இடதுசாரிகளால் உண்டாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டிலிருந்து தொடங்கி, இன்று தமிழகத்தின் நெற்களஞ் சியமாகிய தஞ்சாவூர் கழனியிலேதற்போது மூன்று மாவட்டங்களாக பிரிந்திருக்கக்கூடிய இந்த மண்ணிலே நிலமற்றவர்களுக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமைக ளையும் எதிர்த்து இரு முனைகளிலான போராட்டத்தை அன்றைக்கு இந்த இயக் கங்கள் ஏற்படுத்தின.  இடதுசாரிகளின் தலைவர்களும் ஊழி யர்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு மிராசு தாரர்களின் கொடுமைகளை எதிர்த்து பொரு ளாதாரக் கோரிக்கைகளையும், மறுபுறம் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து சமூக விடுதலைக்காகவும் தஞ்சை கழனி யிலே நடத்திய இயக்கம் காட்டுத் தீ போல் பரவியது.  அவ்வாறு பரவிய இயக்கம், தஞ்சையில் உள்ள ஏராளமான விவசாயத் தொழிலா ளர்களையும், பட்டியலிடப்பட்ட இனத்தை சார்ந்த தொழிலாளர்களையும் ஏழை விவ சாயிகளையும் ஒன்றிணைத்து அந்த விவ சாய, விவசாயத் தொழிலாளர்கள் இயக்கம் இன்றைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவி இருக்கிறது. அதன்மூலம் ஏற்பட்ட நன்மைகள் இரண்டு.
இரண்டு நன்மைகள் 
அவற்றில் ஒன்று, பொருளாதார ரீதியிலும் வர்க்க ரீதியிலும் நிலப்பிரபுக்களிடமிருந்து அதிகப்படியான கூலியை பெறுவது, அங்கே தொழிலாளர்களுடைய வசதிகளை பெறுவது. மற்றொன்று, கொடுமையான தீண்டாமை முறையை எதிர்த்து, அதிலிருந்து விடுபடு வது. அன்றைக்கு தமிழகத்தில் இடதுசாரிக ளால் ஏற்படுத்தப்பட்ட இந்த இயக்கமானது பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இன்றைக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் தமிழகத்தில் இருக்கிறோம். 
எந்தச் சூழலில்?

 இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசு இருப்பதை விரும்பாத சக்திகள், ஒரு மதச் சார்பற்ற சமுதாயம் ஏற்படுவதை விரும்பாத பிற்போக்கு சக்திகள், மதவெறியை தூண்டி விட்டு இந்திய மக்களை பிளவுபடுத்துவதற் காக இருக்கக்கூடிய சக்திகள், இந்தியா ஜன நாயக குடியரசாக திகழ்வதை எதிர்க்கக்கூடிய சக்திகள், மாநில சுயாட்சி உரிமையை வன்மை யாக எதிர்க்கக்கூடிய சக்திகள், மாநில மொழி களின் சமத்துவத்தை கடுமையாக எதிர்க்கக் கூடிய சக்திகள் இன்றைக்கு நம் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதை மனதில் வைத்து, தமிழ்நாட்டில் ஆலய நுழைவு பிரவேசத் திருப்பு முனைக்குப் பிறகும் தீரமிக்க விவசாயத் தொழிலாளர் இயக்கம் என்ற இந்த திருப்பு முனைக்குப் பிறகும் நாம் போராடியிருக்கி றோம். அதற்கு எடுத்துக்காட்டு வெண்மணி. வெண்மணி என்பது நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிராக, வர்க்கப் போராட்டத் திற்கு எதிராக, விவசாயத் தொழிலாளர்களுக் கும், ஏழை விவசாயிகளுக்கும் எதிராக நிகழும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து தஞ்சை கழனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி யிருக்கிறது. இந்த இயக்கத்தை தோற்றுவித்து நடத்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தொழிற் சங்கங்கள், மாணவர் சங்கம், மாதர் சங் கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக் கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கி றேன்.
பெரும்பங்காற்றிய இடஒதுக்கீடு 
இன்று, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்தியாவிலேயே அதிகப் படியான இடஒதுக்கீடு இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இது மிகவும் போராடிப் பெற்ற முடிவு. இதன்மூலம் பட்டியலினத்து மாண வர்கள் படித்திருக்கிறார்கள். வேலையில் இருக்கிறார்கள். இது 2 விதத்தில் உதவியி ருக்கிறது. ஒன்று பொறியியல், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படித்து முன்னேறி யிருக்கிறார்கள். இரண்டு, மத்திய-மாநில அரசுகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. ஆகவே, இதுவும் தீண்டா மைக் கொடுமையை ஒழிப்பதிலே பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆகவே, இந்த இடஒதுக்கீட்டை நாம் பாது காத்துக் கொண்டு மேலும் தீண்டாமைக் கொடு மையை முற்றிலும் ஒழிப்பதில் நாம் ஈடுபட வேண்டும். அப்படி பார்க்கும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கேரள அரசாங்கத்தின் முடிவு இன்று அமலாக்கத்திற்கு வந்திருக்கிறது. இது இதர மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய நட வடிக்கை. இதுவும் தீண்டாமையை ஒழிக்கும் வேறொரு நடவடிக்கையாகும். எனவே, இப்படிப்பட்ட சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் 3-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் இவர்களது நோக்கம் என்ன வென்றால், கிராமத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்பி, பட்டியலினத்தவர்கள் தனிமைப்படுத் தப்பட்டு, மற்றவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் செய்வதற்கான முயற்சிகளை முறியடிப்பது, கலப்பு திருமணம் செய்ப வர்கள் மீதான தாக்குதலை தடுத்து, அவர் களை பாதுகாப்பது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
மாற்றுக் கருத்துள்ளவர்களையும் அழைத்து...
மேலும் தீண்டாமைக் கொடுமையிலி ருந்து தமிழகத்தை முழுமையாக விடுவிப்ப தற்கான ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறது. நான் முன்னணி ஊழியர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த கலந்துரையா டலை மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் அழைத்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பொறுமையாகக் கேட்டு, இந்த தீண்டாமை என்பது கொடியது. இது அகற்றப்பட வேண்டியது என்பதை அவர்க ளும் புரிந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வகை யில் நடத்த வேண்டும். இது மிகவும் கடின மான காரியம் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊழியர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அவர்கள் மிகுந்த பொறு மையை கையாண்டு சேரிகளிலே, கிராமங்க ளிலே, சந்து முனைகளிலே, சாவடிகளிலே பஞ்சாயத்து பேசுவது போல் பேச வேண்டும். அதாவது, எந்தவித குரோதமும் இல்லாம் அன்யோன்யமாக விட்டுக் கொடுப்பதை போல் பேசி, இந்த  தீண்டாமை, கலப்பு திரு மணம், மேல் சாதி, கீழ் சாதி என்று கூறி கலவ ரத்தில் ஈடுபடுவது தவறானது என்பது பற்றி எல்லாம் நாம் அவர்களிடம் பேசியாக வேண்டும்.
பள்ளிகளில் ஒரே சீருடை, பஸ், ரயில்களில் பயணிக்கும் போது எந்த சாதியும் தெரியாது. ஆனால், கிராமங்களில் கலப்பு திருமணத் தின் போது மட்டும் சாதி வந்துவிடுகிறது. எனவே, இந்த கலப்பு திருமணத்தை ஊக்கு விப்பது, இன்றைக்கு தீண்டாமைக் கொடு மையை நிரந்தரமாக ஒழிப்பதற்கு உதவி செய்யும் என உங்களிடத்தில் நான் தெரி வித்துக் கொள்கிறேன். 
எல்லோரும் சமம்
அதோடு மட்டுமல்ல, பெண்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய அரசியல மைப்பில் சகல மக்களும் சமத்துவ உரிமை பெற்றவர்கள். எல்லோரும் சமம் (All are Equal) பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பல முற்போக்கு கவிஞர்கள், இன்று இந்தியாவில் நிலவும் சாதிய கொடுமைகளை எதிர்த்து  பாடிய பாடலை தமிழ் மக்கள் மீண்டும் படிக்க வேண்டும். 

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே...
வெள்ளைபரங்கியரை துரை என்ற காலமும் போச்சே...”
“சாதிகள் இல்லையடி பாப்பா...”
“இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே...”

போன்ற பாடல்களை பாரதியார் பாடியி ருக்கிறார். பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை மற்றும் பிற கவிஞர்கள் மனித நேயம், மனித சமுதாய ஒற்றுமை, சமத்து வத்தையும் பாடியிருக்கிறார்கள். வகுப்புவாத நிலைமைகளை உண்டாக்கு கிறவர்கள் மாணவர்கள் மத்தியில் பேசு கிறார்கள். இன்று நான் கேள்விப்பட்டேன், சாதியை எடுத்துக் காட்டும் வகையில் நோன்பு கயிறு கட்டுவது என்று. இவையெல்லாம் நம்மை மேலும் மேலும் பிளவுபடுத்தக் கூடியவை.
பெண் கல்வி உரிமை, வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வ தை ஆதரிக்க வேண்டும். தமிழ்நாட்டு பாரம் பரியப்படி சாதியையும் தீண்டாமை கொடுமை களையும் நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் எப்படி அனைத்து தமி ழர்களும் ஒன்றுகூடினார்களோ, தமிழ் மொழியை மத்திய அரசு அலுவல் மொழி யாகக் கொள்ள வேண்டும் என அனைவரும் போராடுவது போன்று தமிழகத்தில்  தீண்டா மைக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க போராட வேண்டும்.  

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நடத்த திட்டமிட்டிருக்கும் விரிவான கலந்துரையாடலை பயன்படுத்தி, லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து அவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பல கருத்து உடையவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.  இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.


நன்றி - தீக்கதிர் 21.07.2019