Sunday, July 31, 2011

அமெரிக்கா திவால்?
அமெரிக்க  நாடு  ஒரு சிக்கலான பொருளாதார நிலையை 
சந்தித்துள்ளது. அமெரிக்காவின்  கடன் தொகை  என்பது 
அதிகரித்து விட்டது. அதன்  கையிருப்பு  நிதி  என்பது 
இப்போது  மிகக் குறைவாக  உள்ளது. அமெரிக்க 
கஜானாவில்  உள்ளதை விட ஆப்பிள் கம்ப்யூட்டர் 
நிறுவனத்திடம்  கூடுதல் கையிருப்பு  உள்ளதாக 
இன்றைய  செய்திகள்  சொல்கின்றது. 


அமெரிக்காவின்  கடன் தொகை வரம்பை 
உயரத்தாவிட்டால்   அமெரிக்க அரசால்  ஆகஸ்ட் 
2 ம்  தேதிக்குப் பின்பு  எந்த  செலவும் செய்ய முடியாது.
அரசு தர வேண்டிய எந்தத் தொகையையும் பட்டுவாடா
செய்ய முடியாது. ஊழியர் ஊதியங்கள், ஓய்வூதியம்,
ஒப்பந்தக்காரருக்கான தொகைகள் என எல்லாமே 
நின்று போய்விடும்.  வெள்ளை மாளிகைக்கு காய்கறி
வாங்கக் கூட காசு இருக்காதாம்.    


அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதித்த கடன் 
அளவான 14 .3   ட்ரில்லியன்  டாலர் என்ற அளவு 
தாண்டி விட்டது. இந்த  அளவை  அதிகரிக்க வேண்டும். 
இல்லையென்றால் அமெரிக்க  நிர்வாகம் ஸ்தம்பித்துப் 
போய்விடும். செய்ய வேண்டியதுதானே  இதிலென்ன 
சிக்கல்  என கேட்கலாம்.


அங்கேதான்  வருகின்றது  அரசியல்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில்  ஒபாமாவின் ஜனநாயகக்
கட்சியை விட குடியரசுக் கட்சிக்குத்தான்  அதிக உறுப்பினர்கள்
உண்டு. எனவே குடியரசுக் கட்சியின்  தயவு இல்லாமல் 
கடன் தொகையை    உயர்த்த முடியாது. இந்த வாய்ப்பை 
குடியரசுக் கட்சி நன்றாகவே  பயன்படுத்துகின்றது. 
புஷ்ஷால் பறி போன ஆட்சியை  திரும்பப் பெற  ஒபாமாவால்
நிர்வாகம்  செய்ய முடியவில்லை  என்று காண்பிக்கப் பார்க்கிறது.
 

செலவினங்களைக் குறைக்க வேண்டும்  என்று  ஜனநாயகக்
கட்சி  நாடகம்  போட,  நாட்டின் மீது , மக்கள் மீது  கவலையே 
இல்லாமல்  உள்ளார்களே  என  ஒபாமா புலம்ப, பாவம் அவர் 
தூங்கியே  பல நாட்கள் ஆகி விட்டது  என  அவரது கைத்தடிகள்
புலம்ப  சாதா பேச்சு வார்த்தை, மசாலா தோசை பேச்சு வார்த்தை,
டீ பார்ட்டி பேச்சு வார்த்தை என நடந்து கொண்டே இருக்கிறது. 


ஆனால்  மக்கள்  எவ்வித கவலையும் இல்லாமல்  உள்ளார்கள். 
இது   மோடி மஸ்தான்  நடத்தும்   பாம்பு - கீரி  நாடகம்  என்று 
அவர்களுக்கு  தெரியும். இது போல பல  முறை கடன் தொகை 
அளவு  உயர்த்தப்பட்டதுதான்  அமெரிக்க பொருளாதார வரலாறு. 
இப்போதும் அது நடக்கத்தான் போகிறது. 


முதலாளித்துவத்தின்  தாயகத்தில்  அரசியல்வாதிகள்  வெறும் 
சொக்கட்டான் காய்களே. முடிவு செய்யப் போவது பெரும் 
முதலாளிகளும் சர்வதேச நிதி மூலதனமும்தானே. அவர்கள் 
சமரச நாடகத்தை  அரங்கேற்றுவார்கள்.

கலைஞர் காட்டிய வழியில் நீதிபதி தினகரன்நேற்றைய ஹிந்து நாளிதழ் தகவல்படி  நில  
ஆக்கிரமிப்பு  புகாரில் சிக்கியுள்ள சிக்கிம் 
மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் 
தனது  பதவி விலகல்  கடிதத்தை  உச்ச நீதி 
மன்ற  தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் " ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில்
பிறந்ததன் துரதிர்ஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறோமோ
என்ற  சந்தேகம்  எனக்கு  எழுந்துள்ளது. ஒடுக்கப்பட்ட
சமுதாயத்தை  சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு
வரும் போது  அவர்கள்  நேர்மை, பொய்யான, 
விஷமத்தனமான  வதந்திகள் மூலம் கேள்விக்குள்ளாகப்
படுகின்றது. ஆனால்  மற்றவர்களோ  சில சக்திகளால்
எப்போதும்  அரவணைக்கப்படுகின்றனர்.


எனக்கு  பதவி ஆசை கிடையாது  என்பதையும் ,
பதவியின்  கவுரவத்தை  காக்கவும் ,  இழுத்தடிக்கும்
உத்திகளில்  நம்பிக்கை இல்லை என்பதை 
நிரூபிக்கவும்  பதவி விலகுகின்றேன் " 


என்பது அவரது கடிதத்தின் வாசகங்கள். 


நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார்  என்று  திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர்  அறிக்கை கொடுத்தபோதோ, 
இவரது நீதிமன்றத்தில்  வழக்காட மாட்டோம்  என
பெங்களூர் உயர் நீதி மன்ற வக்கீல்கள் முடிவெடுத்த
போதோ,  அல்லது அவர் மீது  நாடாளுமன்ற 
உறுப்பினர்கள்  புகார் கொடுத்து நாடாளுமன்றம் 
குழு அமைத்தபோதோ  இவர் பதவி விலகியிருந்தால்
இவர்  சொன்னது எல்லாம் கேட்க நன்றாக 
இருந்திருக்கும்.   
  

ஆனால் நாடாளுமன்றம் இவர் மீதான பதவி விலகல் 
நடவடிக்கையை  தொடங்கும் நேரம்  ராஜினாமா 
செய்வது  என்பது  அதிகமாக அசிங்கப்படுவதை 
தடுக்கும் முயற்சியன்றி  வேறொன்றுமில்லை. 


என்ன பிரச்சினை முற்றும் வேளையில் இவரும்
ஜாதிய கேடயத்தை  தூக்கி விட்டார். கலைஞர் 
காட்டிய சிறப்பான  வழியில்  நீதிபதியும் 
பயணிக்க வந்து விட்டார். 


இவருக்கு  ஆதரவாகவும்  தி.க வீரமணி, 
நக்கீரன் கோபால், பாதிரியார் ஜகத் கஸ்பர் 
ஆகியோர் கூட்டம் போடுவார்களோ!


 

Saturday, July 30, 2011

உளவுத்துறைக்கு நன்றி


நாடாளுமன்றக்   மழைக்காலக்  கூட்டத் தொடர்   தொடங்கும்   
நாளான  ஆகஸ்ட் முதல் தேதி அன்று   அனைத்து  அலுவலகங்கள் 
முன்பாகவும் " இன்சூரன்ஸ் துறையை  சீரழிக்கும்  நோக்கத்தோடு 
அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை  நிறைவேற்றக் கூடாது "
என  வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்  நடத்த வேண்டும்  என்பது  எங்கள் 
அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கத்தின்  அறைகூவல். 


இம்முடிவு முன்னரே   தோழர்கள் மத்தியில்  எடுத்துச்செல்லப்பட்டது 
என்றாலும்  கோரிக்கையை  விளக்கி  தமிழில்  ஒரு சுற்றறிக்கை 
அனுப்பினால்  நன்றாக  இருக்கும்  என்று  நேற்று  காலையில் 
யோசித்திருந்தேன். அலுவலகம்  சென்றதும் எதோ ஒரு பிரச்சினை,
விவாதம், தீர்வு  என சுற்றறிக்கை  தயாரிக்க வேண்டும்  என்பது 
நினைவுக்கே  வரவில்லை. 


மதிய உணவிற்காக  டப்பாவை திறந்தால், அப்போது  வேலூர்
மாவட்ட சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்  தொலைபேசியில் கூப்பிட்டு 
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என்ன போராட்டம்  செய்யப் போகின்றீர்கள்
என்று  கேட்டார். 
சாப்பிட்டு முடிக்கும் முன்பாக  கடலூர் மாவட்ட சி.ஐ.டி 
இன்ஸ்பெக்டர்  தொலைபேசியில்  அழைத்து  கடலூர் மாவட்டத்தில்
எங்கெல்லாம்  ஆர்ப்பாட்டம்  செய்யப் போகின்றீர்கள்  என்றார்.  

ஆகா ; உளவுத்துறையே  மும்முரமாக இருக்கிறதே, நாம் 
விரைவாக சுற்றறிக்கையை  உணர்வு பூர்வமாக அனுப்ப 
வேண்டுமே  என்று நினைத்துக் கொண்டேன்.

தொழிற்சங்க நடவடிக்கையை  வேகப்படுத்த உதவிய 
உளவுத்துறையே  உனக்கு நன்றி

 
 
 

Thursday, July 28, 2011

சிரிங்க, ரசிங்க, பிறகு . . . .


எனக்கு மின் அஞ்சலில் வந்த கார்ட்டூன்கள் 


படிங்க 


ரசிங்க


கொஞ்சம் சிந்திக்கவும் செய்யுங்க

யெட்டியூரப்பா காலி , கர்நாடக அரசு?

ஒரு வழியாக  பாஜக மேலிடம்  பல்வேறு  ஊழல் புகார்களில்
சிக்கிக்கிடந்த   யெட்டியூரப்பா வை  ராஜினாமா  செய்யச்சொல்லி 
விட்டது. புதிய  முதல்வரை  நாளை  தேர்ந்தெடுக்கப்
போகின்றார்களாம். 


பெவிகால் போட்டு ஒட்டியது போல  நாற்காலியை பிடித்து 
வைத்திருந்த  அவரை  ஆட்டி வைத்த  சுரங்க மாபியா ரெட்டி 
சகோதரர்களிடமிருந்து  பாஜக மீளுமா? 


நாற்காலி ஆசை  நீங்காத  யெட்டியூரப்பா  புதிய அரசு
அமைக்க  ஒத்துழைப்பு  தருவாரா? 

சட்ட மன்ற உறுப்பினர்களின்  புதிய விலை என்ன? 


நாளை முதல் கர்நாடக அரசியலில்  சுவாரஸ்யமான 
காட்சிகளுக்கு   பஞ்சமே  இல்லை. 

தென்னிந்தியாவின்  முதல் மாநில அரசு பாஜக 
கைகளில்  இருந்து நழுவிக் கொண்டே  போகிறது
 
 

Wednesday, July 27, 2011

ராசா மேல கைய வச்சா

ராசா மேல கைய வச்சா 
அது ராங்கா போகுமடா,


சிதம்பரம் என்றாலும்
சிங்கே என்றாலும் 
எல்லாம் என் ஜோடிடா


என்று  இப்போது  ராசாவின்  வழக்கறிஞர்  இப்போது
சி.பி.ஐ   நீதிமன்றத்தில்   கலக்கிக் கொண்டிருக்கிறார். 
கனிமொழியையே  காப்பாற்ற முடியாத கலைஞர் 
தன்னை எங்கே  பாதுகாக்கப் போகின்றார்  என்ற 
மன நிலைக்கு ராசா வந்து விட்டார் போலும்.


தான் மட்டும் என் திகார் சிறையில் வாட வேண்டும்
சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் கூட வரட்டும்
என முடிவு செய்து விட்டார் போலும். 


இனி வழக்கு சூடு பிடிக்கும். மறைந்திருக்கும் 
உண்மைகள் மேலும் மேலும் வெளியே  வந்தால்
மஞ்சள் துண்டு இருக்கவே  இருக்கிறது
முகத்தை  மூடிக்கொள்ள.
    


ஊழல்களின் ஊர்வலம் - குடும்ப ஊழல்களால் பதவியிழந்த முதலமைச்சர்தலைப்பைப் பார்த்து  அதற்குள்ளாக நிகழ்கால அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த இதழில் நாம் பார்க்கப்போவது  இந்திய அரசியலில் அரசியல்வாதி மீது அமைக்கப்
பட்ட முதல்  விசாரணைக் கமிஷன் பற்றியும்  அந்த அறிக்கையினால்  பதவி விலகிய  ஒரு முதலமைச்சர் பற்றியும்.


பஞ்சாப் மாநிலத்தின்  முதலமைச்சராக 1952 முதல் 1964 வரை  இருந்தவர் திரு பிரதாப் சிங் கெய்ரான். நவீன பஞ்சாபை உருவாக்கியவர், பல நல்ல திட்டங்களை  அறிமுகம் செய்தவர்  என்றெல்லாம் நல்ல பெயர்  எடுத்தாலும், மறு புறத்தில்  அவரது வாரிசுகள்  முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு  பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். அதிகார முறைகேடுகள், நில அபகரிப்பு, கையூட்டு பெறுவது  என  இன்று போலவே  அன்றும் நடந்தன.


ஆனால்  அவர் மீது நடவடிக்கை எடுக்க  அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தயங்கினார். தயக்கம்  என்பது பிரதமர்களின் தாயகம் போலும்! ஆனால்  ஒரு அரசு மருத்துவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு  தொடுக்க, நீதிமன்றமும்  கண்டிக்க, இப்போது போல அப்போதும்  மத்திய அரசிற்கு  வேறு வழியில்லை.

எஸ்.ஆர்.தாஸ்  என்ற முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி  தலைமையில்  விசாரணைக் கமிஷன்  ஒன்றை  நேரு அமைத்தார். இந்தியாவில்  முதன் முதலில் ஒரு அரசியல்வாதி மீது அமைக்கப்பட்ட  விசாரணைக் கமிஷன்  இதுதான்.


கமிஷன் தனது அறிக்கையை  அளிக்கும் முன்னரே  நேரு இறந்து விட்டார். திரு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் கமிஷன் தனது அறிக்கையை  அளித்தது. பிரதாப்  சிங் கெய்ரானுக்கு  தெரிந்தே  அவரது  வாரிசுகள் அத்தனை முறைகேடுகளையும் செய்ததாகவும் அவரால் அதனை தடுக்க முடியாததால்  அவரும் பொறுப்பேற்க வேண்டும்  என்று  அறிக்கை  கூறியது. இதனை  ஏற்க முடியாது, உன்னால்  முடிந்ததை செய்து பார் என்று கெய்ரான் சவால் விட, லால் பகதூர் சாஸ்திரி  அறிக்கையை  வெளியிட்டு விட, வேறு வழியின்றி பிரதாப் சிங் கெய்ரான்  பதவி விலகினார். ஊழல்  புகார் காரணமாக பதவியிழந்த  முதல் முதலமைச்சரும் அவர்தான்.


தனக்கு பதிலாக கிஷன்சிங் என்ற ஒரு தலையாட்டி பொம்மையை முதல்வராக்கிய  கெய்ரான் அடுத்த  ஆண்டே  கொல்லப்பட்டது ஒரு சோகமான முடிவு.


அவரது  இன்றைய வாரிசுகள் மீதும்  பல புகார்கள் இன்னும் அழுத்தமாக தொடர்வது, பிரதாப் சிங்  கெய்ரானுக்கு  2005 க்கு  2005 ம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது ஆகியவை  கூடுதல் தகவல்கள்.


எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் மாத 
இதழான " சங்கசுடர் " ல்  புதிய பகுதியான
ஊழல்களின் ஊர்வலத்திற்காக 
எழுதியது
  

Tuesday, July 26, 2011

சிரிப்பாய் சிரிக்கும் ஸ்பெக்ட்ரம் கவிதைகள்

பழி எப்போதும்
ஓரிடம்தான்
பாவம் பலரிடம்
இருந்தும் கூட 
---------------------------------------------------

அணி விளையாட்டில்
அவார்ட் அனைவருக்கும் 
அறை மட்டும்
ஒருவருக்கு
----------------------------------------------------

கையெழுத்திட்டவர் உள்ளே
கையசைத்தவர்  வெளியே
தொடர்பு எல்லைக்கப்பால்
-----------------------------------------------------     

" மாண்புமிகு" வரவேற்பிற்கு 
ரத்தினக் கம்பளத்துடன்
திகார் தயாராகிறது
----------------------------------------------------

சிதம்பர ரகசியம் 
சிங்கத்திற்கும் தெரியுமாம்!
பின் என்ன
தனிச்சிறை?     
----------------------------------------------------
கவிதைகளின் படைப்பாளி 
தோழர் மதுரை பாரதி


 

ரயில் பயணத்தில் தேநீர் குடிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

கீழே  உள்ள புகைப்படங்களைப் பாருங்கள் 
கொங்கன்  ரயில்வேயில் ஜன சதாப்தி எக்ஸ்பிரசில்  எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் மேலே உள்ளவை.


இனி ஒரு முறை ரயில் பயணத்தில் தேநீர் குடிக்கும் முன்பு
அது சமையலறையில் தயாரிக்கப்பட்டதா  அல்லது
கழிப்பறையில் தயாரிக்கப்பட்டதா  என்பதை தெரிந்து கொண்டு
அருந்தவும்.
   

ஒரு சட்ட மன்ற உறுப்பினரை துரத்தும் தீண்டாமைக் கொடுமை

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு! 

 

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்
 

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!
ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது. 


நன்றி 

தீக்கதிர் 

Sunday, July 24, 2011

திக்விஜய் சிங் வெடிகுண்டு வீசியது ஏன்?

 காங்கிரஸ் கட்சியின்  சுப்ரமணிய சாமியான திக்விஜய்சிங் 
ஒரு திடீர் வெடி குண்டு ஒன்றை போட்டுள்ளார்.  ஆர்.எஸ்.எஸ் 
அமைப்பு  வெடி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளதாகவும்
அதற்கான வீடியோ ஆவணங்கள்  தன்னிடம் உள்ளதாகவும் 
சி.என்.என் தொலைக்காட்சிப் பெட்டியில் கூறியுள்ளார். 

பத்து ஆண்டுகள் முன்பே  இக்குற்றச்சாட்டை சொன்னதாக 
கூறியதாகவும் மத்திய பிரதேச  மாநிலத்தில்  ஆட்சி மாற்றம்
நிகழ்ந்ததால்  காவல் துறை நடவடிக்கை  எடுக்கவில்லை என்றும்
அவர் கூறியுள்ளார்.

எனது கேள்விகள் இரண்டுதான்

அன்றாடம் தொலைக்காட்சிகளுக்கு  பேட்டி  கொடுத்து வரும் 
திக்விஜய் சிங் பத்தாண்டுகளாக மவுனமாக  இருந்தது  ஏன்?  

எந்த பிரச்சினையிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப
இப்போது  இந்த கலகத்தை  துவக்கியுள்ளார்?


 

Saturday, July 23, 2011

கண் தானம் செய்யுங்கள், சிங்கள சாத்தான்களின் உபதேசம்இத்தோடு இணைக்கப்பட்ட  வீடியோ காட்சியைப் பாருங்கள்
ஆந்திராவில்  உள்ள ஒரு தோழர் பஞ்சாபில் உள்ள ஒரு
பெண் தோழருக்கு  அனுப்ப அந்த பஞ்சாப் தோழர் எனக்கு
அனுப்பினார்கள்.
கண்  தானத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்ற
விளம்பரப்படம் அது. உருக்கமாகவும் இருந்தது,
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்
இருந்தது. எனது கம்ப்யூட்டரில் ஸ்பீக்கர் வேலை
செய்யாததால்  என்ன மொழி என்று தெரியாமல்
ஆங்கில சப் டைட்டில் மட்டும்  பார்த்துக்
கொண்டிருந்தேன். இறுதியில் தான் எரிச்சல் கொடுத்த அந்த
ஸ்லைட் வந்தது. விளம்பரத்தை வெளியிட்டது
இலங்கை கண்தான அமைப்பு  என்று.இலங்கை நாட்டவருக்கு  கண் தானம் பற்றி
பேசவெல்லாம் அருகதை  இருக்கிறதா என்ன?மரண தண்டனை விதிக்கப்பட்ட போராளிகள்
குட்டி மணி, ஜகன் ஆகியோரின் இறுதி விருப்பம்
தங்களது கண்கள்  தானம் செய்யப்பட வேண்டும்
என்பதுதானே!1983 ல் வெலிக்கடை  சிறையில் சிங்கள ராணுவம்
அவர்களைக் கொன்ற போது துப்பாக்கி கத்தியால்
கண்களை நோண்டி எடுத்து பூட்ஸ் கால்களால்
மிதித்து  அழித்ததை  உணர்வுள்ள எந்த ஒரு
தமிழனாலும் மறக்க முடியுமா?
மன்னிக்க முடியுமா?இன்னும் கருத்துக் குருடர்களாக அல்லவா
இலங்கை சிங்களர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்?தமிழர்கள் படும் இன்னல்களை கண்டும் காணாமல்
இருக்கும் இலங்கை மக்கள்
என்னைப் பொறுத்தவரையில்
பார்வையற்றவர்களே!

இதிலே  இன்னொரு கொடுமை என்னவென்றால்
இலங்கையிலே  இழைக்கப்பட்ட  எந்த ஒரு கொடுமை
பற்றியும் கடந்தாண்டு ஆயிரக்கணக்கானவர்கள்
கொல்லப்பட்டது  உட்பட  எதுவுமே
அந்த பஞ்சாப் தோழருக்கும் சரி ஆந்திரத்
தோழருக்கும் சரி தெரியவேயில்லை.Friday, July 22, 2011

ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் பட்டியலினத்தவர் துணைத்திட்டக் கோரிக்கை சாசன வெளியீட்டுக் கருத்தரங்கம்


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 10
அன்று சென்னையில் பட்டியலினத்தவர் துணைத்திட்டக் கோரிக்கை
சாசன வெளியீட்டுக் கருத்தரங்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது
.
சமுக நீதிக்கான பயணத்தில் இன்னுமோர் முக்கியமான நிகழ்ச்சி நிரலை
தமிழக அரசியலில் முன்னுரிமை பெறச் செய்வதற்கான முன்முயற்சியை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டிருப்பது
பாராட்டுதலுக்கு உரியது. இக் கருத்தரங்கின் வழிநடத்தும் குழுவில் தோழர்
ஜே.குருமூர்த்தி, தோழர் கே.சுவாமிநாதன், தோழர் ஜி .ஆனந்த்,
தோழர் டி.செந்தில்குமார் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனெவே தமிழ்நாடு
நிதியமைச்சர் மாண்புமிகு ஒ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து
துணைத்திட்டத்திற்கு பட்டியலின, பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப
நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும்,  அந்நிதி அம்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டிற்கு முழுமையாகப் போய்ச்சேருகிற வகையில் அமலாக்கப்பட வேண்டுமேன்றும் வலியுறுத்தியதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குழுவிலும் தோழர் க.சுவாமிநாதன்இடம் பெற்றிருந்தார்.

1979 வாக்கில் இந்தியப் பொருளாதாரப் பாதையின் பயன்கள் ஒடுக்கப்
படுகிற மக்களுக்கு சென்றடையவில்லை என்பதை ஆட்சியாளர்கள்
ஏற்றுக் கொண்டு அறிவித்த திட்டமே பட்டியலின, பழங்குடி மக்களுக்கான
துணைத் திட்டங்கள்.இத் திட்டத்தின் முதற்பெரும் அம்சம், அவர்களின் மககள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதே. ஆனால் மத்தியிலும்,மாநிலங்களிலும் சரி, நிதி ஒதுக்கீடிற்கும், மக்கள்தொகையில் அவர்களின் விகிதத்திற்கும் இடையே பெரும் அகழிதான் 30 ஆண்டுகளாக நீடித்து
வருகிறது. சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கங்கள் பல குரல் கொடுத்தும்
ஆட்சியாளர்களின் செவிகளில் ஏறவில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணி
2008 ல் சென்னையில் ஓர் கருத்தரங்கம் மூலம் இப் பிரச்சினை மீதான
கருத்துருவாக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டது. இத்தகைய
கருத்துத் திரட்டலின் பயனாக 2010 - 11 நிதியாண்டில்தான் முதல் முறையாக
தமிழகத்தில் மககள் தொகைக்கேற்ப ரூ 3828 கோடிகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டது.

அதற்கு முன்பு இழந்த தொகைகள் இந்தியா முழுவதும்
நான்கரை லட்சம் கோடிகள் இருக்கும் என்றால் பாருங்களேன்! எனினும்
மககள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு என்பது தீண்டாமை ஒழிப்பு முன்னணி
உள்ளிட்ட அமைப்புகளின் முன்முயற்சிகளுக்கு கிட்டியுள்ள வெற்றியேயாகும்.
தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி கவனமும், முயற்சிகளும் குவிய
வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள்
என்பதே! டெல்லியில் துணைத்திட்ட நிதியை எடுத்து காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்காக செலவிட்டதும், அதில் ஊழல் வெடித்ததும் நாம் அறிந்ததே.இப்படி பட்டியலின மக்களுக்கான நிதியை சம்பந்தமில்லாமல் சூறையாடுவதும்,பொதுத் திட்டங்களுக்கு செலவழித்து விட்டு துணைத்திட்டக் கணக்கில் கழிப்பதும்நடைமுறையாக இருக்கிறது. ரூ 3828 கோடிகளை ஒதுக்கிய முந்தைய தமிழக அரசு அதை எப்படி கணக்கு காண்பித்தது என்பது வேடிக்கையானது. வேதனையானது.

கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம், டாக்டர்
முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், கான்க்ரீட் வீடு திட்டம் போன்ற திட்டங்கள்
எல்லா மக்களுக்கும் பொதுவானவை. அவற்றுக்கான செலவில் 19 சதவீதத்தை
பட்டியலின, பழங்குடி மக்களின் கணக்கில் கழிப்பது என்பது ஏமாற்று வேலை
அல்லவா! தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் ஓர் பயிலரங்கம் மூலம்
பொருளியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், சமுக நீதி ஆர்வலர்கள்
ஆகியோரை அழைத்து 2010 ல் பரந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்
அடிப்படையில் துணைத்திட்ட அமலாக்கத்தில் ஒடுக்கப்பட்ட மககள் வஞ்சிக்கப்படுவதை வெளிக்கொணர்ந்ததோடு மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்தது.


ஓர் வரைவுக் கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டது. தொழில், விவசாயம், மகளிர் நலன்,கல்வி, அடிப்படை வசதிகள் போன்றவற்றுக்காக துணைத்திட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆவணமாக உருவாக்கி வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. தற்போது அதற்கு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 10 அன்று 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிற கருத்தரங்கமாக அதுசென்னையில் அரங்கேறவுள்ளது. கோரிக்கை சாசனம் வெளியீடு நிகழ்வாகவும் அது அமையவுள்ளது.


திருமிகு கிறிஸ்து தாஸ் காந்தி இ.ஆ.ப, திருமிகு கருப்பன் இ.ஆ.ப, திருமதி சிவகாமி இ.ஆ.ப,திரு பி சம்பத், (தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி) கே.சாமுவேல்ராஜ் ( பொதுச் செயலாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி) தோழர் ஏ. சௌந்தரராஜன் ( சட்டமன்றக் குழுத் தலைவர்-சி.பி.எம் ) எஸ். கே.மகேந்திரன் ( முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்) தோழர் பீமாராவ் எம்.எல்.ஏஆகியோர் அழைக்கப்படவுள்ளனர். அகில இந்தியத் தலைவர்களைப் பங்கேற்கச் செய்கிற முயற்சிகளும் உள்ளன. 
 

தமிழகம் முழுவதிலும் இருந்து தலித் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகளின் முன்னணி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். நமது சங்கத்தின் முன்னணித் தலைவர்களும் அனைத்துத் தமிழகக் கோட்டங்களிலும் இருந்து பங்கேற்பார்கள் எனவும், சென்னைக் கோட்டம் 1 மற்றும் 2 திரளான பங்கேற்பை உறுதி செய்வதெனவும் ஜூலை 20 அன்று நடந்த மாநில அளவிலான தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளின் கூட்டுக் கோட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இத்தகைய இயக்கத்தில் நமது கரங்களும் இணைய வேண்டாமா! சென்னைக்
கருத்தரங்கில் சங்கமிப்போம்! சமுக நீதிக்கான குரல் கொடுப்போம்!
Thanks to www.szief.blogspot.com

Thursday, July 21, 2011

கலப்பின "வேங்கை"

மகனின் விருப்பப்படி  கடந்த சனிக்கிழமை  நானும் அவனும்
வேங்கை திரைப்படம்  சென்றோம். படம் முடிந்து வெளியே
வந்தால் வெள்ளைச்சட்டை முழுதும்  படம் முழுக்க
பீரிட்டு  வந்த ரத்ததால்  சிவப்பாக மாறிப்போன பிரமை
தோன்றியது.


இன்னும்  எத்தனை  காலத்திற்கு  நம் இயக்குனர்கள்
அரிவாள்கள், டாடா சுமோக்கள், வெள்ளை வேட்டி
சட்டை அரசியல்வாதிகள், பழிவாங்குதல் ஆகியவற்றை
மட்டுமே  நம்பி படமெடுக்கப் போகின்றனர் என்று
தெரியவில்லை


தேசிய விருது பெற்ற தனுஷ் தொடங்கி ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ்
போன்ற சிறந்த கலைஞர்கள்  வீணடிக்கப்பட்டுள்ள ஒரு படம்.
ஒட்டு மொத்த காட்சிகளிலும் மெழுகு பொம்மை போல
வெறுமனே வந்து போகும் கதாநாயகி, பாடல் காட்சிகளில்
மட்டும் ஏன் அத்தனை கோணங்கித்தனம் செய்கிறார்? புரியாத
பாடல் வரிகளுக்கு புரியாத முக பாவம்.


நான்கு  பேரை வெட்டியதற்காக கைது செய்யப்படுகின்ற தனுஷிற்கு
மலேசியா செல்ல எப்படி  விசா கொடுத்தார்கள்.இயக்குனர் ஹரியின் முந்தைய படங்கள் சாமி, ஐயா, ஆறு, வேல்,
சிங்கம் ஆகிய படங்களை கொஞ்சம் கொஞ்சம்  தொலைக்காட்சியில்,
பேருந்தில் பார்த்துள்ளேன். அத்தனை படங்களையும் மிக்ஸியில்
போட்டு கலந்து வேங்கை  என புதுப்படமாக கொடுத்துள்ளார்.


பல முக்கியமான படங்களை பார்க்காத எனக்கு வேங்கை போன்ற
தண்டனை தேவைதான்.

Sunday, July 17, 2011

பக்தனைக் கூட்டிச் சென்ற பத்மனாபன்


தள்ளாத வயதினிலே
வழக்கொன்று தொடுத்தான்,
தங்கப் புதையல் வெளியே வர
திசைகள் அதிர்ந்தது...
தேசம் குலுங்கியது...
வழக்கு தொடுத்தவன்
இன்று பரமபதம் அடைந்தான்.
கொள்ளையடித்த சொத்துக்களின்
கூடாரமாகிப் போன கோயிலிலே
பாம்பிலே படுத்தபடி
ஆள்வோர் சொத்தைக்
காக்கும் கடவுள்!
இன்று பக்தன் உயிரை
பறிக்கும் கடவுள்...

Saturday, July 16, 2011

இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள்

எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள்
முடிந்து விட்டன. 16 ஏப்ரல் 1986  அன்றிலிருந்தே  பணி துவங்கினாலும்
அது பயிற்சிக்காலம். தகுதி காண் பருவம் தொடங்கியது 16 ஜூலை 1986.
ஆக இன்றோடு  25 ஆண்டுகள்  கடந்து விட்டது. 25 ஆண்டு  அனுபவங்கள்  என்னை  மாற்றியுள்ளதா  எனப் பார்த்தால்
நான்  மிகவும் மாறியுள்ளேன்  என்பதுதான்  உண்மை. எல்.ஐ.சி மாற்றியது
என்று சொல்வதை  விட எல்.ஐ.சி யின் ஜீவனாய் இருக்கிற  அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  மாற்றியது  எனச் சொல்வது இன்னும்
பொருத்தமாக  இருக்கும்.

1986 ல் பணியில் சேர்ந்த போது இருந்தது  ஒரே ஒரு கனவுதான். மிகக்
கடுமையாக சிரமப்பட்டு படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்.
குறைந்த பட்சம் எல்.ஐ.சி யிலாவது  முதல் நிலை அதிகாரியாக
வேண்டும்  என்பதுதான். 1987 ஜனவரியில் முதன் முதலாக நெய்வேலி
கிளைச்சங்கத்தின் பொறுப்பாளரான பின்புதான் ஒரு புதிய உலகிற்கான
பாதை திறந்தது.படித்த புத்தகங்கள், கிடைத்த தொடர்புகள் எல்லாமே என்னை வேறு
திசையில் பயணிக்க வைத்தது. சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை
ஒன்பது  சுற்று  சுற்றி, சனி பகவானுக்கு எள்ளும் நல்லெண்ணையும்
கொண்டு சென்றவனை கடவுள் யார் என்று  கேட்க வைத்தது. அதிகாரியாக  வேண்டும்  என  ஆசைப்பட்டவனுக்கு  அதிகார வர்க்கத்தின்
கோர முகம் எப்படி இருக்கும்  என்ற அனுபவத்தை  உணர்த்தியது. பார்க்க
அழகாக காட்சியளிக்கும்  தலைவர்கள்  உள்ளுக்குள்  எவ்வளவு அசிங்கமாக உள்ளனர்  என்பதை  அறிந்து கொள்ள வழி காட்டியது. ( ராஜீவ் காந்தியும் ராமகிருஷ்ண ஹெக்டேவும்) அலுவல்கம் வந்து பணி செய்து ஊதியம் வாங்கிப் போவதோடு வாழ்க்கை
நின்று போவதல்ல, அதனையும் தாண்டியது  என்பதை  சுட்டிக்காட்டியது
எனது  அமைப்பு. அதிகாரியாகப் போயிருந்தால்  என்ன பொருளாதார
மேம்பாடு  கிடைத்திருக்குமோ அதனை மூன்றாம் பிரிவு ஊழியருக்கும்
பெற்றுத் தந்தது  எனது  சங்கத்தின் சாதனை.சமூகத்தில்  அந்தஸ்தை உருவாக்கித் தந்தது எல்.ஐ.சி.
சமூகத்தின் மீது அக்கறையுள்ள மனிதனாய் மாற்றியது
அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம்.
இருவரையும்  நான் நேசிக்கிறேன்.இருபத்தி ஐந்து ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள நாளில்
இருவருக்கும் எனது  நன்றி 

நான்   அன்றும்  இன்றும்


Thursday, July 14, 2011

இந்த மூஞ்சியை எங்கயோ பாத்திருக்கேனே!

என்னுடைய  அனுபவத்திற்கு  மரியாதை கொடுக்காமல்
என்னை காபினெட் மந்திரியாக்காமல் இணை மந்திரியாகவே
வைத்திருக்கின்றார்கள் என இரண்டு நாட்கள் முன்பு ஒரு
 புலம்பல் குரல் கேட்டது நினைவில் உள்ளதா? ஒரிஸாவைச்
சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த ஜேனாவின்
புலம்பல் அது!

அந்த புலம்பலைக் கேட்ட போது  இந்த மூஞ்சியை
எங்கயோ பாத்திருக்கேனே! என்று தோன்றியது.
ஞாபக அடுக்குகளில் தேடிய போது நினைவிற்கு
வந்து விட்டது.

1990 ம் வருடம் கட்டாக் நகரில் எங்கள் சங்கத்தின்
அகில இந்திய மாநாடு நடந்தது. வி.பி.சிங்  ஆட்சியைக்
கவிழ்த்து பொம்மையாக சந்திரசேகரை  பிரதமராக்கி,
இரண்டு கான்ஸ்டபிள்கள் உளவு பார்க்கிறார்கள் என
அவரையும்  கவிழ்த்து  காங்கிரஸ் ரத்த ருசி பார்த்திருந்த
நேரம் அது.

எங்கள் மாநாட்டு  வரவேற்புக்குழு புரவலர் ஸ்ரீகாந்த
ஜேனா. வி.பி.சிங்  அமைச்சரவையிலும் அவர்
இணை அமைச்சர். துவக்க விழாவில் அவர் வீர
உரையாற்றினார். " சந்திர சேகருக்கு  ஆதரவாக 
என்னை  கட்சி மாறச் சொன்னார்கள், ஐம்பது லட்சம்
ரூபாய் பணம் தருவதாக  சொன்னார்கள், காபினெட்
மந்திரி பதவி தருவதாக சொன்னார்கள்.
பணத்திற்காகவோ, பதவிக்காகவோ
என்னை விற்க நான் விரும்பவில்லை. மக்களின்
எதிரியான  காங்கிரஸ் கட்சியின்  ஆதரவில்
நடைபெறும்  அரசில்  அமைச்சராக  இருப்பதை விட
தெருவில் நிற்பது மேல்" என அவர் முழங்கியது
துரதிர்ஷடவசமாக  நினைவிற்கு வந்து விட்டது.

அந்த கொள்கை வீரர் எப்போது மக்கள் விரோத
காங்கிரஸ் கட்சிக்குப் போனார் என்று தெரியவில்லை.
தெருவில் நிற்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்கு
வந்து விட்டார் போலும்.

அவர் அன்று பேசிய வீர உரைக்கு நாங்கள்
விழுந்து விழுந்து கை வேறு தட்டினோம்.

Wednesday, July 13, 2011

தன்மானச்சிங்கம் ப.சிதம்பரம் ராஜினாமா?

சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரத்திற்கு  இதுதான் நல்லதொரு
வாய்ப்பு. மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு சிவராஜ் பட்டீலை
கழற்றி விட்டு உள்துறை அமைச்சர் பொறுப்பை  அவர்
தலையில் கட்டி விட்டார்கள். பாவம் இஷ்டமே இல்லாமல்
உள்துறை அமைச்சராக கஷ்டப்பட்டு வண்டியோட்டிக்
கொண்டிருக்கும் ப.சிதம்பரத்திற்கு  இதுதான் வாய்ப்பு.

தார்மீக பொறுப்பேற்பதாக சொல்லி உள்துறை அமைச்சர்
பதவியை ராஜினாமா செய்து விடலாம், மற்ற சில பல
சர்ச்சைகளிலிருந்தும்  தப்பித்து  விடலாம். தியாகச்
செம்மல் என்று ஜால்ரா தட்ட மகன் கார்த்தி சிதம்பரத்தின்
எடுபிடிகளும் இருக்கவே  இருக்கிறார்கள்.

ஆனால் பசி யிடமிருந்து  இப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம்
எதிர்பார்க்க முடியாது. பிறகு  சிவகங்கை தொகுதியில்
மோசடி செய்து வெற்றி பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல்
போய் விடுமே!

Tuesday, July 12, 2011

இவன் அல்லவோ கதாநாயகன்!

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.
மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.
PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.
மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.
அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.
அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.
இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.
இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…
O

Monday, July 11, 2011

இப்படித்தான் நடக்கிறதோ ?இன்று  எனக்கு  வந்த  மின்னஞ்சல்  இது?
மிகவும்  நன்றாக  படிக்கிற  மாணவர்கள்  பொறியியல், மருத்துவம்
என தொழில்நுட்பப் படிப்புக்களை  படித்து  டாக்டர், இன்ஜினியர்கள்
என  உருவாகின்றனர். நன்றாக  படிக்கிற  மாணவர்கள், ஐ.ஏ.எஸ் ,எம்.பி.ஏ என  படித்து
டாக்டர்கள், பொறியாளர்களை  நிர்வாகம்  செய்கின்றனர்.மிக மிக சுமாராக  படிக்கின்றவர்கள் அரசியல்வாதிகளாகி
இவர்கள்  அனைவரையும்  கட்டுப்படுத்துகின்றனர். இந்த  செய்தி  இத்தோடு  முடிந்து போகவில்லை. தேர்வுகளில்  தோற்றுப் போனவர்கள்  என்ன ஆகின்றார்கள்?


அவர்கள் கடத்தல், மாபியா  என்றெல்லாம்  சக்தியுள்ளவர்களாக
மாறி  இவர்கள் அத்தனை பேரையும் ஆட்டுவிக்கின்றார்கள்.


இக்கருத்தில்  எனக்கு  உடன்பாடில்லை. அரசியல்வாதிகள்
அறிவற்றவர்கள்  என பொதுமைப்படுத்துவதோ, தேர்வுகளில்
தோல்வியடைபவர்களை  இழிவு படுத்துவதோ  சரியல்ல.நீங்கள்  என்ன  சொல்கின்றீர்கள்?

Sunday, July 10, 2011

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் படிக்க வேண்டாம், பரிதாபத்திற்குரிய ஆசிரியரும் படுபாவி மாணவனும்

முதலில்  கீழே  உள்ள விடைத்தாள்களை படிக்கவும்.
உங்களுக்கு ரத்தக் கொதிப்பு பாதிப்பு இருந்தால் படிக்க வேண்டாம்.விடை தெரியாமல் ஏதோ எழுதியுள்ளான் என எனக்கு
தோன்றவில்லை. திமிரின் உச்சகட்டத்தில் அளித்துள்ள
பதில்கள். மாணவ  சமுதாயத்தின் மீதான நம்பிக்கையை
தகர்க்கும் இந்த பதர்களை என்ன செய்வது? இந்த
விடைத்தாளை  திருத்திய  அந்த ஆசிரியர்
உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்

Saturday, July 9, 2011

அட . . . . பத்மனாபா!
ஐம்பொன் ரத்தினங்கள்
ஐந்து அறையில்  தங்கக் குவியல்கள்
ஆறாவது. . . திறக்கவேயில்லை...
ஆனாலும்  மதிப்பு லட்சம் கோடி

உணவு, உடல் நிலை, கல்வி
எதற்கும் பயன்படாமலே . .
நூற்றைம்பது வருடங்களாய் ...

யார் இதைக் கொண்டு வந்தது?
யாரிடம் இதை கேட்பது?

எதைக் கொண்டு வந்தாய்
நீ  இழப்பதற்கு -
என்று  உபதேசம் செய்தவனிடமா?

அட பத்மனாபா!


கவிதை :  மதுரை பாரதி

Wednesday, July 6, 2011

திருடர்கள் கையிலே அளிக்கப்பட்ட சாவியாய் சமச்சீர் கல்வி

எது  எதிர்பார்க்கப்பட்டதோ , அது நன்றாகவே நடந்துள்ளது. 
எது நடக்கக்கூடாதோ, அதுவும்  நடந்து  விட்டது. 
இதனை இவண் கண் விடல் - வள்ளுவன் மொழி 
அறிந்தவர்கள், கொலைகாரர்கள்  கையிலேயே 
கொடுவாளை அளித்தார்கள். வணிகம் தழைக்க 
சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட துணிந்து விட்டார்கள். 
மெட்ரிக் பள்ளி  அதிபர்களை   குழுவில் போட்டது
புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் அது
நிச்சயம்  நேர்மை அல்ல.   


Tuesday, July 5, 2011

கோயில்களா அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் பெட்டகமா?

திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயத்தின்  ரகசிய அறைகளில்  உள்ள 
தங்க, வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை 
நெருங்கி விட்டது  என்ற செய்தி  உண்மையிலேயே  தலை சுற்ற 
வைக்கிறது. இதெல்லாம்  கோயிலுக்குத்தான்  சொந்தம் என்று 
அவசரம் அவசரமாக  பல தரப்பு குரல்கள்  எழுகின்றது. பத்மனாபருக்கு
சொந்தம்  என்றால் அது என்ன அவர் பாற்கடலில் இருந்து கொண்டு 
வந்ததா என்ன? 


அரசர்கள்  அளித்தவை, ஜமீன்தார்கள் தந்தது, முதலாளிகள்  தந்தது
என்றெல்லாம் விளக்கம் வரலாம். இவர்களுக்கு  எப்படி வந்தது 
சொத்து? மக்களை சுரண்டி, கொள்ளையடித்து சேர்த்ததுதானே!  
ஆலயத்துக்கு  உள்ளே  வைத்து  அழகு பார்க்கவோ, அரசின் 
செலவில்  பாதுகாக்கவோ  அவசியமில்லை. இதனை அரசே 
எடுத்துக் கொள்ளட்டும். மக்களுக்கு செலவழிக்கட்டும். 
ஒரு கோயிலில் மட்டுமே  இவ்வளவு என்றால் மற்ற கடவுள்கள்
மட்டும் பிச்சைக்காரர்களாகவா  இருந்திருக்கப் போகின்றனர். 
அனைத்து ஆலயங்களிலும் இந்தியா முழுதுமே  இப்பணி 
நடக்கட்டும். 


சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை விட பல மடங்கு
அதிகமாகவே  கோயில் பொக்கிஷங்கள்  இருக்கும் போல 
தோன்றுகின்றது.  இப்பணத்தையும்  கைப்பற்ற  வேண்டும் 
என ஹசாரே, ராம்தேவ்  கூட்டம் குரல் கொடுக்குமா?  

Monday, July 4, 2011

கல்லூரிக்குப் போன முதல் நாள்

இன்று எனது மகன் ரகுநந்தன் முதன் முதலாக கல்லூரி சென்றான். வேலூர் வி.ஐ.டி  பல்கலைக்கழகத்தில்  ஐந்தாண்டு படிப்பான எம்.எஸ் (சாஃப்ட்வேர் இன்ஜினியிரிங்)  படிப்பு. முதல் நாள் அன்று பெற்றோரும் வரவேண்டும் என்று  சொல்லியிருந்ததால்  நாங்களும் போயிருந்தோம். காலை எட்டு மணிக்கு  உள்ளே நுழைந்து  மாலை ஐந்து முப்பதிற்கு  வெளியே  வந்தோம்.  அவ்வளவு நேரம்  என்ன செய்தோம்  என்பதை நாளை சொல்கிறேன். இப்போது நான் எழுதப்போவது  எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள்  பற்றி . 


மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில்  1982  முதல் 1985  வரை பி.பி.ஏ 
படித்தேன்.  அப்போது எங்கள் குடும்பம் இருந்தது நெய்வேலியில். 
பி.பி.ஏ படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து மதுரை வந்தேன். 
அப்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மட்டுமே  பி.பி.ஏ
இருந்தது.  
கல்லூரியில்  பணம் கட்டி விட்டு பேருந்து நிறுத்தம் வரும் ஒன்றரை 
கிலோ மீட்டரும் எனது அப்பா " விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு 
கலைக் கல்லூரியில்  பி.எஸ்.சி கணிதம் படித்திருந்தால்  வருடத்திற்கு 
நூற்று முப்பது ரூபாய் கட்டினால் போதும். இப்போது நானூறு ரூபாய் 
கட்டியாச்சு, ஹாஸ்டலுக்கு வேறு செலவு" என்று  மூச்சு விடாமல் 
திட்டிக் கொண்டே வந்தார். கணக்கில்தானே  சிக்கல் என்பதை அவருக்கு 
புரிய வைக்க முயற்சிக்கவில்லை. 


கல்லூரி என்று திறக்கும் என்பதை கடிதம் மூலம் தெரிவிப்பதாக 
சொன்னார்கள். அந்த அஞ்சலட்டை கல்லூரி திறந்த மறு நாள் 
வந்தது. அதன் பின் மீண்டும் அடித்து பிடித்து மதுரை போய் 
கல்லூரி திறந்த நாள் மூன்றாம் நாள் சென்றேன். முதல் நாள் 
பேருந்தும்  சரியாக கிடைக்காமல் பதினைந்து நிமிடம் கால 
தாமதமாக  சென்றேன். பிசினெஸ் மேதமேடிக்ஸ்  என்று 
அச்சுறுத்தும்  கணிதப் பாடம்தான் நடந்து கொண்டிருந்தது. 


காண்டீன் இருக்கும், மதிய உணவை அங்கே பார்த்துக் கொள்வோம் 
என்று  உணவும் எடுத்து வரவில்லை. முதல் வருடம் ஹாஸ்டல் 
வேண்டாம், அக்காவின் மாமியார் வீட்டில் தங்கிப் படிக்கலாம் 
என்பது ஏற்பாடு. அந்த காண்டீனில் டீயையும் மசால் வடையையும் 
தவிர வேறு எதுவும் இருக்காது என்பது தெரியவில்லை. அது கூட
அப்போது இல்லை. எனவே மதுரை நகருக்குத்தான் வந்து சாப்பிட 
வேண்டும் என்று நினைத்து பஸ்  பிடித்து வந்து விட்டேன். அருகில்தான்
திருப்பரங்குன்றம் என்பது அப்போது தெரியாது. 


மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் கல்லூரி சென்று பேருந்து 
பிடிக்க நினைத்தால் இரண்டரை மணிக்குதான் வரும் என்று தெரிந்தது. 
நிச்சயம் முதல் வகுப்பு கோவிந்தா, வருகைப் பதிவும் கிடைக்காது 
என்று தெரிந்து வீடு போக முடிவு செய்தால் அருகிலேயே ஒரு 
போஸ்டர் பக்கத்து திரையரங்கில் கமல் நடித்த "குரு" ஓடுவதாக 
சொல்லியது. பள்ளிக் காலத்தில் பார்க்க முடியாத படம். எனவே 
கால்கள் கல்பனா தியேட்டருக்கு சென்றது. 


வீட்டிற்குள் நுழைந்தால் " பேரைச் சொல்லவா " என எஸ்.பி.பி யும் 
ஜானகியும் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தார்கள். என் அக்கா 
கணவரின் தம்பி வேறு "குரு பாத்துட்டியா ?" என்று கேட்க மனதில் 
கத்தி பாய்ந்தது. ஒரு வேளை  நாம் சினிமாவிற்குப் போனது 
தெரிந்து விட்டதோ என்று பயம் வேறு வந்து விட்டது.   முன்னாடியே 
பாத்தாச்சு என்று மட்டும் பதில் சொன்னேன். 


வா, ஏதாவது படத்துக்கு போகலாம். காலேஜ் முதல் நாளே சினிமா 
பார்த்தா அது ஒரு த்ரில் என்று அழைக்க, அந்த த்ரில் ஏற்கனவே 
கிடைத்து விட்டது என சொல்ல முடியாமல் அருகில் இருந்த சுந்தரம் 
தியேட்டரில் "பாபி" ஹிந்தி படம் பார்க்க போய் விட்டோம். 
அதற்கு பிறகு கல்லூரியை கட்டடித்து விட்டு திரைப்படத்திற்கு 
போகவேயில்லை. பல நாட்கள் மதியம் வகுப்பே இல்லாமல் 
போயிருக்கிறோம். அது வேறு கதை. ஆனால் கட்டடித்தது என்பது 
முதல் நாளோடு முடிந்து விட்டது.


ஆனால் என் மகனுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது போல. 
வருகைப்பதிவு  இணைய தளத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். 
பெற்றோர்கள் வீட்டிலிருந்தே கண்காணிக்கலாமாம். 

எனது கல்லூரி வாழ்வின் கடைசி நாள் புகைப்படங்கள் கீழே