Thursday, August 20, 2020

அடி ராகுலுக்கு இல்லை நட்டா!

 

இன்று காலை நாளிதழ் வர கால தாமதம் ஆனதால் நேற்றைய நாள்தழை படித்துக் கொண்டிருந்தேன். 

மோடியின் மர்ம நிதி குறித்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பைப் பற்றி கூறிய பாஜக தலைவர் நட்டா "இத்தீர்ப்பு ராகுல் காந்திக்கு பலத்த அடி" என்று சொல்லியிருந்தார்.

அந்த மனிதனிடம் சிலவற்றை பேச வேண்டியுள்ளது.

முதலில் அந்த தீர்ப்பு அபத்தமானது, உண்மைக்கு மாறானது. அதிகார துஷ்பிரயோகத்தை காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, ஆட்சியாளர்களின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப அளிக்கப்பட்ட தீர்ப்பு. 

தீர்ப்பு கண்டு கொள்ளாத உண்மைகள் பற்றி நேற்றே எழுதினேன். மீண்டும் அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

பொது அறக்கட்டளை நிதி என்றால் அதற்கு ஏன் பி.எம்.கேர்ஸ் நிதி என்று பெயர் வைத்து அரசு நிதி போலவே தோற்றம் தர வேண்டும்?

பொது அறக்கட்டளை நிதிக்கு ஏன் அரசு அடையாளங்களாக அசோகச் சின்னம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்?

நிதி வழங்குவது தனி நபர் விருப்பம் என்றால் மத்தியரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து கட்டாயமாக பிடித்து பி.எம் கேர்ஸ் நிதிக்கு அனுப்ப வேண்டும்?

ரயில்வேஸ், எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நன்கொடையை மர்ம நிதிக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்?

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டியாக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பணம் அனுப்பினால் போதும் என்று ஏன் சொல்ல வேண்டும்?

இவை மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டாண்டுகளுக்கான தொகையும் மர்ம நிதிக்கு மடை மாற்றப் பட்டுள்ளது. 

இத்தனைக்குப் பிறகும் பி.எம் கேர்ஸ் என்பது ஒரு தனியார் அறக்கட்டளை நிதி என்று சொல்லுமானால்

அது 

நீதிக்கு விழுந்த அடி

நேர்மைக்கு விழுந்த அடி,

வெளிப்படை நிர்வாகத்திற்கு விழுந்த அடி

உண்மைக்கு விழுந்த அடி

மக்கள் மீது விழுந்த அடி.

முன்பெல்லாம் அரசு என்ன விரும்புகிறதோ, அதை அப்படியே பரிந்துரையாக கொடுக்க கமிட்டிகள் நியமிப்பார்கள்.

இப்போதெல்லாம் அர்சு என்ன விரும்புகிறதோ அதையே . . . .

எனக்கேன் வம்பு, அவமதிப்பு வழக்குக்கு நான் தயாராக இல்லை. 

No comments:

Post a Comment