Sunday, August 23, 2020

இவையல்ல அவர்கள் பிரச்சினை!

 *

நேற்று திருப்பூரில் வினாயகர் சிலை வைப்போம் என்று போலீஸோடு மோதியுள்ளார்கள். திருப்பூர் நகரத்தின் இன்றைய முக்கியமான பிரச்சினை பற்றி எங்கள் கோவைக் கோட்ட பொதுச்செயலாளர் தோழர் கே.துளசிதரன் எழுதியுள்ள பதிவை படியுங்கள். இப்பிரச்சினை குறித்தெல்லாம் சங்கிகள் என்றாவது கவலைப் பட்டிருப்பார்களா? போராடியிருப்பார்களா? 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எதிலும் சாத்தியமில்லை. 

ஏனென்றால் அவர்கள் அழிவு சக்திகள். ஆக்கபூர்வமான எதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. 



நாளொரு கேள்வி: 21.08.2020*


இன்று நம்மோடு கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *கே. துளசிதரன்*
*********************************

*கேள்வி*

தமிழகத்திற்கு வாழ்வு தரும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர், அன்னிய செலாவணியை அதிகமாக ஈட்டித் தரும் திருப்பூர் கொரொனா காலத்தில் எப்படி இருக்கின்றன?

*துளசிதரன்*

இரண்டு நகரங்களும் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமையுமுள்ள பல லட்சம் பேருக்கு வாழ்வு தரும் தொழில் மையங்களாகும். 

*கோயமுத்தூர் நகரம்* தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு நகரமாகும். இங்கும் ஏறத்தாழ 7 - 8 லட்சம் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் – பணிபுரிகின்றனர். அவர்களில் 1 1/2 லட்சம் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து வந்து பணிபுரிபவர்கள். அவர்களில் 90000 பேர் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் தங்களது கிராமங்களுக்கு ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் திரும்பச் சென்று விட்டனர். ஊரடங்கு தளர்விற்கு பிறகு கோவையில் இயங்கும் தொழில்களில், பம்பு செட் தயாரிக்கும் நிறுவனங்களில் உற்பத்தி தொடர்ந்து தடையில்லாமல் நடைபெறுகிறது. *3 லட்சம் வாகன உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.* பவுன்டரி முதல் Car Showroom வரை பெரும்பகுதி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். *8 லட்சம் சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் வேலையிழந்துள்ளனர்.* திருமண மண்டபத்தில் பணியாற்றம் ஊழியர்கள், திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள், பெரிய மால்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கட்டுமானத் தொழில்களில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் ஏற்கனவே துவங்கப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே உள்ளுர் தொழிலாளர்களை வைத்து நடைபெறுகிறது. கட்டுமான நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டுவதை இனியும் துவங்கவில்லை. அதே போன்று கோவில் திறக்காததலால் அதை நம்பி உள்ள கடைகள் இயங்க வில்லை. *உதாரணமாக மருதமலை கோவில் திறக்காததால் அதை நம்பி உள்ள 1000 முதல் ;2000 கடைகள் திறக்கப்படவில்லை.* அதே போன்று பேரூர் கோவிலை நம்பி உள்ள
ஹோட்டல்கள் சிறிய கடைகள் இயங்குவதில்லை.

*திருப்பூர் நகரம்* பனியன் மற்றும் உள்ளாடைகள் தயாரிக்கும் நகரம். இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடைகள் தயாரித்து ஏற்றுமதி வணிகம் நடந்து வருகிறது. 

திருப்பூரில் ஏறத்தாழ 7 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2 லட்சம் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களிலிருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் வந்து பணிபுரிபவர்கள். 1 1/2 லட்சம் தொழிலாளர்கள் கொரோனா நோய் தொற்றின் காரணமாக, *மத்திய அரசு அவசர கதியில் வெறும் 4 மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு அமலாக்கியதால் வேலையும் இல்லாமல் வருவாயுமில்லாமல் வேறுவழியில்லாமல் முடங்கி கிடந்தனர். கடைசியில் அரசு சிறப்பு இரயில்கள் ஏற்பாடு செய்த பின் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்ப சென்று விட்டனர்.* 75000 பேர் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து வந்து பணியாற்றுபவர்கள். 

புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவும் திருப்பூர் தொழில்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளான வேளையில் கொரோனா பெருந்தொற்று மேலும் திருப்பூரின் தொழில் வளர்ச்சியை அதிகமாக பாதித்துள்ளது. *ஏறத்தாழ 40% வருவாய் குறைந்துள்ளது.* 

*தொழிலாளர்களை பொறுத்த வரை 20 முதல் 25% வரை வேலையிழந்துள்ளனர்.* ஆனால் தனியார் நிறுவனங்களின் *அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50% பேர் பணி இழந்துள்ளார்கள்.* அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு *ஊதியம் 30 முதல் 40% வெட்டப்பட்டுள்ளது.* 

கொரோனா தொற்றின் காரணமாக *ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.* ஏற்கனவே கொடுக்கப்பட்ட Pending Order மட்டும் தான் உற்பத்தியாகிறது. முன்கூட்டி Order பெற்று பிறகு அந்த Order தான் உற்பத்தியாகிறது. ஆடைகள் விற்பனை ஆகும் என்று நினைத்து Order பெறாமல் உற்பத்தி செய்வதில்லை. தற்போது முககவசங்களும், PPT என்று சொல்லக்கூடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் கவசம் தான் அதிகம் உற்பத்தி ஆகிறது. *பொதுவாக உற்பத்தியை சொந்த இடம் வைத்துள்ள நிறுவனங்கள் தான் செய்கின்றன.*

முன்பெல்லாம் ஒரு Order கிடைக்கப் பெற்றால் ஒரு பகுதி தொகை Advance ஆக பெறப்படும். மீதி தொகை 90 நாட்கள் Credit basisல் தான் பெறப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் அந்த Credit 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு அதிகமாக உள்ள நாட்களுக்கான நிதியை வங்கியில் வாங்கினாலும் தவணை கட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது.  வாடகை கொடுக்கும் பட்சத்தில் அது கூடுதல் சுமை என்பதால் வாடகையில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்கள் பெரிய அளவில் உற்பத்தி மேற்கொள்வதில்லை.

இதுதான் கோவை, திருப்பூர் நிலைமை. கடன் மட்டும் தொழில்களை காப்பாற்றி விட முடியாது. சந்தை இல்லாவிட்டால் உற்பத்தி எப்படி நடக்கும்? *அரசு மாற்றுப் பொருளாதார பாதை வாயிலாக, சந்தை விரிவாக்கம், வேலை உருவாக்கம் பற்றி சிந்தித்து நகராவிட்டால் தொழில் நகரங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதாய் இருக்காது.*

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment