Tuesday, August 11, 2020

இந்தியர்கள். ஹிந்தியர்கள் அல்ல . . .

 


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழியை பார்த்து “ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என்று மத்திய தொழிற்துறை காவல்படை அதிகாரி கேட்டது என்பது கொழுப்பின் உச்சகட்டம்.


 ஒருவர் தான் விரும்பும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. இதர பல மொழிகள் போல ஹிந்தியும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு இருப்பது போல வரலாறோ தொய்மையோ இலக்கியப் பாரம்பரியமோ இல்லாத ஒரு சாதாரண மொழி.

 ஹிந்தி பேசக் கூடியவர்கள் நேரு தொடங்கி மோடி வரை ஆட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த காரணத்தாலேயே  ஹிந்திக்கு ஒரு ஒளி வட்டம் கிடைத்தது. மத்தியரசின் அலுவல் மொழியானது. அதனால்தான் அதை அனைவரும் பயின்றாக வேண்டும் என்ற அழுத்தம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது.

 ஆட்சியாளர்களிடம் உள்ள வெறி கீழே உள்ள அதிகாரி வரை பாய்ந்துள்ளது. அது நீயெல்லாம் இந்தியரா என்று ஆணவமாக பேச வைத்துள்ளது.

 தமிழ்நாட்டில் வேலை பார்க்கிற ஒரு காவல்துறை அதிகாரிக்கு தமிழ் தெரியவில்லை. இணைப்பு மொழியாக இருக்கிற ஆங்கிலமும் தெரியவில்லை. அவர் நீ இந்தியரா என்று கேட்கிறார் என்றால் எவ்வளவு தெனாவெட்டு.

ஹிந்தியில் சில மீம்கள் வரும் போது கூட கஷ்டமாக இருக்கும். ஆனால் அதனை விளக்கிச் சொல்லும் அளவிற்கு தமிழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தோழர்கள் இருக்கையில் அது ஒரு பிரச்சினையே இல்லை. 

 இந்தி மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கும் சில சமயங்களில் தோன்றும். ஆங்கிலம் அவ்வளவாக பேச வராத சில தோழர்கள் எங்கள் அகில இந்திய மாநாடுகளில் ஹிந்தியில் பேசும் போது, அதை மற்றவர்கள் ரசிக்கிற போது அப்படி தோன்றியுள்ளது.

ஆனால் இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாய் ஹிந்தி படிக்க வேண்டும் என்று திணிப்பு முயற்சிகள் செய்கையில் அந்த ஆர்வம் உடனடியாக வடிந்து போய் விடும்.

 ஆக ஹிந்தியின் உண்மையான எதிரி, அதை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்பவர்களே.

 அவர்களிடம் சொல்ல வேண்டும்.

 நாங்கள் இந்தியர்களாக இருக்கத்தான் விரும்புகிறோமே தவிர ஹிந்தியர்களாக அல்ல.

 மொழி ஒருவரை மற்றவரோடு இணைப்பதற்கான கருவி. அதனை பிரிவினை ஏற்படுத்தும் கருவியாக இவர்கள்தான் மாற்றுகிறார்கள்.

தமிழைத் தவிர வேறெதுவும் படிக்காத நான் உலகின் எந்த மூலையிலும் எந்த கஷ்டமும் படவில்லை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலே உள்ள அறிக்கை ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களின் முகநூல் பதிவு. ஹிந்தி தெரியாவிட்டால் தமிழ்நாடு தாண்டினால் வாழ்வதே வீண் என்று பிதற்றும் உபதேசிகள் வாய் மூடிக் கொள்ளட்டும். 


பிகு: இந்த முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஒரு குழப்படியான ஆளு. எப்போ ஒழுங்கா பேசுவாரு, எப்போ சொதப்புவாரு என்று யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு சொதப்பலுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மேலே உள்ள படம்.


No comments:

Post a Comment