Showing posts with label பகத்சிங். Show all posts
Showing posts with label பகத்சிங். Show all posts

Thursday, January 25, 2024

சண்டை மூட்டும் ஆட்டுத்தாடி . . .

 



மகாத்மா காந்தியை மட்டம் தட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை உயர்த்திப் பேசியுள்ளது ஆட்டுத்தாடி ரெவி. அந்தாளுக்கு நேதாஜி மீதெல்லாம் மரியாதை கிடையாது. இவர்களின் குருநாதர் சாவர்க்கரின் முதலாளியான பிரிட்டிஷார் கடை பிடித்த “பிரித்தாளும் சூழ்ச்சி” தந்திரம்தான்.

 


ஆட்டுத்தாடியின் பேச்சில் கடுப்பானவர்களில் சிலர் காந்தியை உயர்த்திப் பேசுவார்கள், அதிலும் சிலர் நேதாஜியை மட்டம் தட்டுவார்கள். நேதாஜியின் ஆதரவாளர்கள் காந்தியை மட்டம் தட்டுவார்கள். இப்படியே இது ஒரு சர்ச்சையாக போகும். அதைப் பார்த்து ரெவி இளித்துக் கொண்டிருக்கும்.  ரெவியும் டமில் மியூசிக்கும் ஆட்டுக்காரனும் நிர்மலா அம்மையாரும் பொய்களைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயற்சித்தது மறைந்து போய் விடும்.

 வரலாறு இல்லாததால் பொய்யான வரலாற்றை பரப்புகிறது ஆட்டுத்தாடி. மகாத்மா காந்தியின் வருகைக்குப் பின்பே விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷாருக்கு அச்சத்தை உருவாகியது. ஆனால் அவர் 1945 ஆகஸ்டில் மறைந்து விட்டார்.  இந்திய விடுதலையை இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது 1946 ல் நடைபெற்ற கப்பற்படை மாலுமிகளின் புரட்சி. பம்பாயில் நடைபெற்ற அப்போராட்டத்திற்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.  இதெல்லாம் ஆட்டுத்தாடிக்கு தெரிந்திருந்தால் உளறிக் கொண்டிருக்க மாட்டார்.

 சாவர்க்கரை வழிபடும் ஜந்துவிற்கு விடுதலை யாரால் வந்ததென்று எதற்கு கவலை? சுபாஷ் சந்திர போஸே சாவர்கரையும் இந்துத்துவ சக்திகளையும் கழுவி ஊற்றியுள்ளார். அந்த ஆவணங்களை மீண்டும் உலா வர வைத்ததுதான் ரெவியின் சதியால் விளைந்த பயன்.




சுபாஷ் சந்திர போஸ்:
மதவாதம் தன் அசிங்கமான தலையைத் தூக்கி முழு நிர்வாணமாக நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் விவரமறியாதவர்களும் கூட விடுதலைக்காக ஏங்குகின்றனர். இந்துக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து ராஜ்ஜியம் வேண்டும் என்கிற குரல் கேட்கிறது. இவையெல்லாம் பயனில்லாத சிந்தனைகள். உழைக்கும் வர்க்கம்   சந்திக்கும் பிரச்சினைகள் எதையாவது மதவாதம் தீர்க்க முடியுமா? அப்படிப்பட்ட எந்த அமைப்பாவது வ்றுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தீர்வுகளை வைத்திருக்கிறதா? சாவர்க்கரும் இந்து மகாசபையும்
செய்யும் முஸலிம்  எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு நடைமுறையில் பிரிட்டிஷ் அரசுடன் அவர்களின் கூட்டுறவு என்பதே பொருள்.

 தமிழில் : தோழர் விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர். FRONT LINE 

 ஆனால் இதற்கெல்லாம் அந்த ஜந்து ரோஷப்பட்டுக் கொண்டு ஒரு முழம் கயிற்றையோ, தண்டவாளத்தையோ, பாலிடாயிலையோ தேடாது.

 சங்கிகளுக்கு ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

 இந்திய விடுதலை என்பது நீண்ட நெடிய போர். இதிலே காங்கிரஸிற்கும் பங்கு உண்டு, கம்யூனிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு. முஸ்லீம் லீக்கிற்கும் பங்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ் மட்டுமே துரோகப் பாத்திரத்தை வகுத்தது.  இந்திய மக்கள் ஜாதி, மதம் மறந்து போராடியதன் வெற்றிக்கனிதான் இந்திய சுதந்திரம்.

 இங்கே காந்தியும் கதாநாயகர், சுபாஷ் சந்திர போஸும் கதாநாயகர், பகத்சிங்கும் ஜவஹர்லால் நேருவும் இன்னும் பல தலைவர்களும் நாயகர்கள். ஒரே ஒரு வில்லன் கம் காமெடியன் உங்கள் குரு கோழை செல்ஃபி சாவர்க்கர்தான்.

 

Saturday, April 23, 2022

ஒப்பிட ஒரு பக்கமாவது படியுங்கள்


 இரண்டு நாட்கள் முன்பாக படித்த அருமையான புத்தகம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் எழுதியது. 

லேட்டஸ்ட் சமூக ஊடக மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "சங்கிகளின் ஆஜான் சாவர்க்கர் எனும் ஃபர்னிச்சரை அடித்து நொறுக்கியுள்ள நூல்".

விரைவில் விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு முன்பாக நூலின் ஒரு பக்கத்தை மட்டும் உலக புத்தக தினமான இன்று அவசியம் படியுங்கள்.

ஒப்பீடுகள் சர்ச்சையாகும் இக்காலத்தில் இந்த பக்கத்தில் மூவர் பற்றிய ஒப்பீடு உள்ளது.

அதைப் படித்தால் மோடியின் மூலவர் எவ்வளவு மோசமான மனிதன் என்பது தெரியும்.



Friday, December 24, 2021

பகத்சிங்கின் கடைசி ரொட்டி

 


உத்தர்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு தீண்டாமைக் கொடுமை பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

இப்போதே இந்த நிலைமை என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்!

தான் வாழ்ந்த காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக சமத்துவத்தைப் பேசியவன் புரட்சியாளன் பகத்சிங்.

பேசியது மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவன்.

ஆம்,

தன் இறுதி உணவை லாகூர் சிறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பேபியின் கையால் தயாரிக்கப்பட்ட ரொட்டிதான் வேண்டும் என்று கேட்டு உண்டவன் பகத்சிங்.

மோடி போன்ற நடிகன் அல்ல பகத்சிங், சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மாமனிதன்.

பிகு: பேபி என்பதற்குப் பதிலாக போகா என்ற தலித் கைதி ரொட்டி செய்து கொடுத்ததாகவும் இணையத்தில் ஒரு தகவல் உள்ளது. 

Friday, March 23, 2018

இன்று. இன்றுதான் அந்நாள்



மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் இந்தியாவின் விடுதலைக்காக தூக்குக்கயிற்றைத் தழுவி வரலாற்றில் நிலை கொண்ட நாள் இன்றுதான்.

ஆம்.

மார்ச் மாதம் 23 ம் நாள்தான் அவர்கள் லாகூர் சிறையில் தூக்கிலப்பட்டார்கள்.

இளந்தியாகிகளை மட்டுமல்ல, அவர்களின் இறுதி நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் வேறொரு நாளில் வேறொரு வதந்தி பரவுகிறது.

கேளா காதுகள் கேட்கட்டும் என்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவன் பகத்சிங்.

இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஏழை மக்களின், தொழிலாளர்களின் விவசாயிகளின் குமுறலும் கேட்கவில்லை. அவர்கள் எழுப்பும் உரிமைக்குரலும் கேட்கவில்லை.

பகத்சிங்கின் குரலாய், உணர்வாய் நாம் மாறுவோம்.
கேளாக்காதினரை கேட்க வைப்போம்

Thursday, March 23, 2017

பகத்சிங் மீது இன்னும் பயம் ......




இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மகத்தான தியாகிகள்
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு என் வீர வணக்கம். 

விடுதலைக்குப் பிந்தைய இந்தியா உழைக்கும் வர்க்கத்தின் வசம் வர வேண்டும் என்ற அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற சூளுரைப்போம். 

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று சின்னஞ்சிறு வயதில் மிகப் பெரிய கருத்துச் செறிவோடு எழுதிய பகத்சிங் இன்னும் ஆட்சியாளர்களை அச்சுறுத்துகிறான்.

மூவர் நினைவுநாளை ஒட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற வாலிபர் பேரணியில் தடியடி நடத்தியுள்ளது அம்மாநில பாஜக அரசு.

வேலூரில் இன்று நடைபெற இருந்த இளைஞர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது இடைக்கால எடப்பாடி அரசு.

வெள்ளை ஏகாதிபத்திய அரசை அச்சுறுத்திய பகத்சிங்கைக் கண்டு, இன்றைய  ஆட்சியாளர்களும் நடுங்குவது ஏன்?

பகத்சிங் எழுப்பிய முழக்கம், பகத்சிங் உயர்த்திப் பிடித்த சோஷலிச லட்சியம், அவர்களை அச்சுறுத்துகிறது. காவிப்படைக்கு கூடுதலாகவே பகத்சிங் என்றால் பயம் வருகிறது. தங்களால் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களை விடுவிக்கும் சக்தி பகத்சிங்கிற்கு உண்டு என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது. 

பின் குறிப்பு: இதனை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.  மூன்றாண்டுகள் முன்பாக மக்களவைத் தேர்தலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விருதுநகரில் ஒட்டிய ஒரு சுவரொட்டியை பாஜக ஆட்கள் கிழித்துப்போட்டு, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்பதாக காவல்துறையிலும் புகார் கொடுத்தார்கள். 

பாஜக பார்வையில் இதுதான் தேசத்துரோகம். இந்த வாசகங்களைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு பயம் . . . . .

 

Wednesday, March 23, 2016

பாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்




எழுத்தாளரும் வங்கி ஊழியர் இயக்கத் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் எழுதிய அற்புதமான பதிவை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாபர் மசூதியில் பகத்சிங்கின் ஓவியம் வரையப் பட்ட செய்தி நான் இன்று அறிந்து கொண்ட புதிய தகவல்.


தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த உண்மையான புரட்சியாளர்களுக்கு, பிரிட்டிஷ் அரசின் தேசத் துரோகிகளுக்கு 
வீர வணக்கம்


நன்றி  தோழர் மாதவராஜ்.





சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.

அங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.
தனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர். 

லாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்." என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.

இளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. "எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது." என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.

1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. "இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.

“பகைவர்களே இல்லை என்கிறாயா?
அந்தோ என் நண்பனே!
இப்பெருமிதம் மிகவும் அற்பமானது
உனக்கு எதிரிகள் இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்
தவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்
போராட்டத்தில் கோழையாய் இருந்திருப்பாய்”

சார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. "நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. "கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.

கனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.

Wednesday, March 23, 2011

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு. ஏன்?







'செவிடர்களை கேட்க வைக்க வெடிகுண்டுச்சத்தம் தேவைப்படுகின்றது' 
என்ற பிரெஞ்சுப் புரட்சியில்  உயிர் நீத்த பிரபல பிரபல  புரட்சியாளன்
வைலியாவின்  அமர வாக்கியத்தை  எங்கள் செயலுக்கு சாட்சியமாக்குகிறோம்.  

ஆட்சி சீர்திருத்தம்  என்ற பெயரில் இந்த தேசத்தை அவமதிக்கும் செயலை ஆங்கில ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களின் கொள்கை நமக்கு 
தெளிவாக தெரிந்ததே. சைமன் கமிஷனிடமிருந்து ஆட்சி சீர்திருத்தம் என்ற ரொட்டித் துண்டுகளுக்காக எதிர் நோக்கும் ஆட்களை பொதுப் பாதுகாப்புச்சட்டம் போன்ற மசோதாக்களால்   அடக்கி ஒடுக்க அரசு 
முயல்கிறது. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் பத்திரிக்கைகளின் 
வாயிலாக ராஜதுரோகம் பரவுவதைத் தடுக்கவும் ஒரு சட்டம் திணிக்கப்படும் என்றும் அரசு அச்சுறுத்துகிறது. பொதுவாழ்வில் 
பணியாற்றும் தொழிலாளர் தலைவர்கள் எந்தக்காரணமும்  இன்றி 
கைது செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசின் போக்கை தெளிவாகவே 
காட்டுகின்றன. 

அடக்குமுறை மற்றும் அவமதிப்பின் இந்த சூழலில் தங்களுடைய 
பொறுப்பைத் தெரிந்து கொண்டுதான் H.S.R.A. தங்களுடைய 
போராளிகளுக்கு இத்தகைய பணிகளைச்செய்ய  பணித்திருக்கிறது. 
சட்டமியற்றும் இத்தகைய  நாடகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே  நோக்கமாகும். அந்நியர்கள் நம்மைச் சுரண்டுகிறார்கள்.
அதற்கு சட்டத்தை போர்த்தி விடும் செயலை அனுமதிக்கக்கூடாது. 

பாராளுமன்றம் என்ற நாடகத்திலிருந்து விலகி தங்களுடைய சொந்தத் 
தொகுதிகளுக்குத் திரும்பிச்சென்று  அன்னியச்சுரண்டலுக்கு எதிரான 
புரட்சிக்கு மக்களை ஆயப்படுத்துமாறு  மக்கள் பிரதிநிதிகளை 
கேட்டுக்கொள்கிறோம். 

மனித வாழ்க்கையை நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். ஒவ்வொரு நபரும் சுதந்திரத்தை  அனுபவிக்கும் ஒரு எதிர்காலத்தை காண 
விரும்புகின்றோம்.  மனிதக் குருதி சிந்த நேரிடுவதால் நாங்களும் 
வருந்துகிறோம்.  சுரண்டலை  ஒழித்துக்கட்டும் புரட்சியில்  தவிர்க்க
இயலாமல் குருதி சிந்த நேரிடுகிறது. 
இன்குலாப் ஜிந்தாபாத்




இந்த நாளில் தூக்கு மேடையை முத்தமிட்ட 
புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு 
ஆகியோருக்கு வீர வணக்கம். 

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டோடு அவர்கள் 
வீசிய பிரசுரம்தான் மேலே தரப்பட்டுள்ளது. 


இந்திய விடுதலைக்காக  மிக இளம் வயதிலேயே இன்னுயிர் நீத்த பகத்சிங்கை இந்தியாவிற்கு 
அளித்த பஞ்சாப் மண்தான் 
இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக 
மாற்றத் துடிக்கும் மன்மோகன் சிங்கையும் 
அளித்தது என்பது எவ்வளவு  பெரிய முரண்நகை