Thursday, January 31, 2019

நாகேஷ் அழவும் வைத்துள்ளார் . . .

நகைச்சுவை அரசன் நாகேஷின் நினைவு நாள் இன்று.



சர்வர் சுந்தரம், மாடிப்படி மாது, ஒஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பா, தில்லானா மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி என்று அந்தக் காலப் படங்கள் தொடங்கி 

பூவே உனக்காக தாத்தா, அவ்வை சண்முகி ஜோசப், மகளிர் மட்டும் சடலம் என்று எண்ணற்ற படங்களில் நம்மை சிரிக்க வைத்த அவர் 

நம்மை அழ வைத்த படம் நம்மவர்.



மகளுக்கு கொள்ளி வைத்து விட்டு சுடுகாட்டில் அவர் நடனமாடும் காட்சியைப் பார்த்து கலங்காதவர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களை உணர்வற்ற ஜடங்கள் என்றே சொல்வேன், 

துரதிர்ஷ்டவசமாக நம்மவர் படத்தின் அக்காட்சி யூட்யூபில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 

அதனால் அதன் தெலுங்குப் பதிப்பின் இணைப்பை கீழே தந்துள்ளேன். 


எந்நாளும் மறக்க முடியாத காட்சி அல்லவா இது. 

என்ன பார்த்து சோகமாகி விட்டீர்களா?

சரி நாகேஷின் பெயரைச் சொல்லி கொஞ்சம் சிரிக்கவும் செய்யுங்கள்






புலிக்கூட்டம் பகை முடிக்கும் . . .


அவர்கள் இல்லையேல்
அரசு இயந்திரம் இயங்காது.

அவர்கள் இல்லையேல்
எதிர்காலத் தலைமுறையும் கிடையாது.

ஆனாலும் அவர்களை
ஆட்சியாளர்கள் மதிப்பதே இல்லை,
ஆட்சியாளர்களே மதிப்பில்லாத
சில்லறைகள் என்றாலும் . . .

வாழ்க்கையின் ஓரத்துக்குத்
தள்ளப்பட்டவர்கள்
வேறு வழியில்லாமல்தான்
வீதிக்கு வந்தார்கள்.

அடக்குமுறை, அவதூறு,
மிரட்டல் மொழிகள்
எத்தனை எத்தனை ஆயுதங்கள்!

எட்டப்பர்கள் வழக்கமான
அரசு கை ஆயுதங்களாய் . . .

ஆவேசமாய் எழுந்த அவர்கள்
தற்காலிகமாய் அடங்கியுள்ளார்கள்

பதுங்கியுள்ள புலிக்கூட்டம்
மீண்டும் சீறிப் பாயும்,
பகை முடிக்கும் . . .

வரலாறு மீண்டு எழும்
காலம் விரைவில் வரும் . . .


Wednesday, January 30, 2019

மொட்டைச் சாமியார் கைது செய்வாரா பூஜா சாமியாரை?




மகாத்மா காந்தியை கொன்ற வெறி பிடித்த கூட்டம் இன்று அவரை மீண்டும் ஒரு முறை கொன்றுள்ளது.

ஆமாம்.

கொல்வது போன்றதொரு காட்சியை நடத்தியுள்ளது.

இந்து மகாசபா என்றதொரு காவி அமைப்பு இன்று உ.பி மாநிலம் அலிகாரில் நடத்தியுள்ள நிகழ்ச்சியில்

காந்தியின் படம் உள்ள கொடும்பாவியில் இந்து மகா சபாவின் பொதுச்செயலாளரான பூஜா சகுன் பாண்டே எனும் பெண் சாமியார் பொம்மைத் துப்பாக்கியில் சுட ரத்தம் போன்றதொரு திரவம் வழிந்துள்ளது.

துப்பாக்கியால் காந்தியை சுட்ட வைபவம் முடிந்த பிறகு கொடும்பாவியைக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது மகாத்மா நாதுராம் கோட்சே அமர் ரஹே என்றும் மகாத்மா நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டுள்ளார்கள். (அதை முழக்கம் என்று சொல்ல நான் தயாரில்லை) பின்பு கொலைகாரன் கோட்சேவின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி உள்ளார்கள்.

இதை விட யாராலும் மகாத்மா காந்தியை இழிவு படுத்திட முடியாது.

காந்திக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையே இழிவு படுத்தியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த இழிச்செயல் செய்த பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டேவை

உத்திர பிரதேச மாநில முதல்வரான மொட்டைச்சாமியார் யோகி ஆதித்யநாத்  கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா?

அல்லது தன்னால் செய்ய முடியாததை செய்தாய் என்று பூஜா சாமியாரை பாராட்டி அவரும் இனிப்பு தின்பாரா?

இரண்டாவதற்கான வாய்ப்புதான் அதிகம்.

ஆம், மோடி, யோகி, பூஜா என அனைவருமே கோட்சேவின் வாரிசுகள்தானே!!!!

இப்போது இன்னும் பொருத்தமாய் . . .

இன்னும் வெறியோடு அலையும் தோட்டா



ஒரு முதியவரின்
உடல் துளைத்து
உதிரம் குடித்தும்
இன்னும் வெறியடங்காத
அந்த தோட்டா
ரத்த ருசி சுவைக்க
இந்தியா முழுதும்
அலைந்து கொண்டே
இருக்கிறது.

அயோத்தியில் கடப்பாறையாக,
ஒரிசாவில் பெட்ரோல் கேனாக,
குஜராத்தில் சூலமாக,
முசாபர் நகரில் வீடியோவாக
விதம் விதமாய்
வடிவம் எடுத்தும்
இன்னும் தணியவில்லை
அதன் ரத்த தாகம்.

சவங்களின் மீது
சாம்ராஜ்யம் அமைக்க
தொடர்கிறது
தோட்டாவின் பயணம்.

அண்ணலின் சமாதியில்
மலர் வளையம் தேவையில்லை.
ரோஜா இதழ்களை
தூவிடவும் அவசியமில்லை.
சிலைக்கு மாலையிடும்
சடங்கையும் சற்றே
ஒதுக்கி வைத்து

வெறி கொண்ட தோட்டாவின்
பதவிக்கான பயணத்தை
முறியடித்து
அமைதிப் பூங்காவாய்
தேசத்தை மாற்றி விட்டு
பிறகு செலுத்துவோம்
நம் அஞ்சலியை.

பின் குறிப்பு :

மீள் பதிவுதான். 
2014 ம் ஆண்டு எழுதியது.
இன்றும் இக்கவிதை பொருத்தமாயும்
அவசியமாயும் இருப்பது இந்தியாவின் பெருந்துயரம்.

Tuesday, January 29, 2019

யாரால் அசைத்திட முடியும்?


எல்.ஐ.சி நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு ப.இசக்கிராஜன் அவர்களின் முகநூல் பதிவு. படிக்கையிலேயே மெய்சிலிர்த்துப் போனது. திரு அரங்கசாமி அவர்களைப் போல ஒவ்வொருவரும் நேசிக்கிற நிறுவனம் எல்.ஐ.சி. இந்த உணர்வு தொடர்கிறவரை எல்.ஐ.சி நிறுவனத்தை  மோடி போன்ற எந்த தீய சக்தியாலும் அசைத்து விட முடியாது. 





இவரல்லவா முரட்டு பக்தன்..


அண்ணாச்சி... திரு.அரங்கசாமி...

LIC திருச்சி மலைக்கோட்டை கிளையின் ஓய்வுபெற்ற வளர்ச்சி அலுவலர். பாசம் நிறைந்த பெரிய மீசைக்காரர். நட்புக்காக உயிரைக்கூடகொடுக்க முன்வரும் மாமனிதர்.

நிறுவனத்தின் மீது பெரும் பாசம் கொண்டவர். நிறுவனத்தில் இவருக்கு ஒளி காட்டியாகவும், நல் வழி காட்டியாகவும் விளங்கிய ஓர் உயர் அலுவலர் திரு வை. நடரஜன் என்ற பெரியவர். அவரது கை பேசி எண்ணை தனது கைபேசியில் பெயரைப்போடாமல் குலதெய்வம் என்ற பெயரில் பதிந்து இருப்பதை நான் அறிவேன்.

நிறுவனத்தின் முத்திரை பொதித்த தங்கப் பதக்கத்தை தனது மேல் சட்டையில் குத்தியிருப்பார். இந்த உடையில் தான் கூட்டங்களில் கலந்து கொள்வார். எந்த அணியின் முகவர்களாக இருந்தாலும் சாதனை படைப்பவர்களை பரிசுகள் வழங்கி பாராட்டி பெருமைப்படுத்துவார்.

அண்ணாச்சியின் இல்லத்திற்கு நாம் சென்றால், அவரும் அவரது இல்லத்தரசியும் விருந்தோம்பலில் நம்மை திக்கு முக்காடச் செய்து விடுவார்கள்.

அவருடைய பணி நிறைவு நாள் நான் பொறுப்பிலிருந்த காலத்தில் 31-8-2008 அன்று வந்தது. ஓய்வு பெறுவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன் அதிகாலையில் திருச்சியிலிருந்து தஞ்சையிலிருக்கும் கோட்ட அலுவலக வளாகத்திற்கு வந்திருக்கிறார்.

வளர்ச்சி அலுவலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு சரவணனை உடனே கோட்ட அலுவலக வளாகத்திற்கு வருமாறு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். சரவணனுக்கு அண்ணாச்சி எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமலே உடனே புறப்பட்டு வந்திருக்கிறார்.

அவர் வந்து சேர்ந்ததும் வளாகத்தில் இருந்த நகர்மன்ற தண்ணீர் இணைப்புக் குழாயில் நீர் பிடித்து குளித்திருக்கிறார். சரவணன் அவர்களின் உதவியுடன் ஈர உடையோடு அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றி உருள் வலம் வந்திருக்கிறார். உருள் வளம் முடிந்ததும் அலுவலகக் கட்டிடத்தை ஓர் ஆலயமாக நினைத்து தரையில் விழுந்து வணங்கி எழுந்தாராம்.

நிறுவனத்தை பெற்ற தாய்க்கும் மேலாக நினைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த விளம்பரம் இல்லாத உருள் வலம்.

அலுவலகத்தில் பணியிலிருந்த காவலாளிகள் மூலம் இந்த தகவலை அறிந்து, அதிசயித்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து மகிழ்ந்தேன்.

* தாய்ப்பற்று... உணர்ந்திருக்கிறோம்.
* மொழிப்பற்று .. நிறைய வெளிப்படுத்தி இருக்கிறோம்.
* நாட்டுப்பற்று ... படித்து பரவசமுற்று இருக்கிறோம்.

அரங்கசாமி அண்ணாச்சியின் 
* நிறுவனப்பற்று... கேட்டாலே மெய் சிலிர்க்கிறது.

இப்படிப்பட்ட கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து ஊழியர்களின் நிறுவனப் பற்றும், ஈடுபாடும், பங்களிப்பும் தான் LIC என்ற மாபெரும் நிறுவனத்தின் நெடிதுயர்ந்த வளர்ச்சிக்கு மூலக் காரணம். இந்த பலம் தான் பல திசைகளிலிருந்தும், பல தரப்பிலிருந்தும் வரும் போட்டிகளை எளிதாக எதிர்கொள்ள LIC க்கு துணை நிற்கிறது.

அண்ணாச்சியின் நிறுவனப்பற்று போன்று ஒவ்வொருவரும் அவரவர் நிறுவனத்தின் மீது கட்டாயம் பற்று வைக்க வேண்டும்.

நிர்மலா-தமிழிசை-தினமலர்-கேவலம்



மேலே உள்ளது நேற்றைய தினமலர்.

நீட் நிர்மலா அம்மையாரை எப்படி சித்தரித்துள்ளார்கள்?
தமிழிசை அம்மையாரை எப்படி சித்தரித்துள்ளார்கள்?

வித்தியாசம் புரிகிறதா?

தினமலர் பாஜகவிற்கு சேவகம் செய்யும் பத்திரிக்கை. அந்த பத்திரிக்கை கூட தமிழிசையை இழிவு படுத்துகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன?

தாமரை மலரும் என்று என்னத்தான் தமிழிசை தொண்டை வரண்டு போகும் அளவு கத்திக் கொண்டிருந்தாலும் அவருக்கு பாஜகவில் இவ்வளவுதான் மரியாதை.

இது அவருக்கும் தெரியும். ஆனாலும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறார்.

பாவம் அவரு! அவ்வளவு நல்லவரு!


Monday, January 28, 2019

நாய்களுக்குப் பதிலாக . . .

எங்கள் பகுதியின் தெரு நாய்ப் பிரச்சினை குறித்து பல முறை எழுதியுள்ளேன். 

சமீப காலமாக அதிகாலையில் எழுந்து கொள்கிற போது கவனித்த ஒரு விஷயம்.

அதிகாலையில் தெரு நாய்களை காணவில்லை. மாறாக அந்த இடத்தை மாடுகள் பிடித்துள்ளது.

காலை ஐந்து மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட போது கவனித்தேன். மறுபடி ஆறு முப்பதுக்கு வருகையில் எந்த அசைவும் இல்லாமல் அங்கேயே இருந்தன.

ஏதோ அலாரம் வைத்தது போல ஏழு மணிக்கு எழுந்து எங்கேயோ சென்று விட்டன.

எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, எப்படி சரியாக ஏழு மணிக்கு புறப்பட்டது. - எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.




Sunday, January 27, 2019

எங்கே? எங்கே? மோடி எங்கே?


தேவையில்லை. திரும்பிப் போ. . .



உலக மகா பொய்யர்  இன்று மதுரை வருகிறார். 

நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பதற்கான பணிகள் கூட தொடங்கவில்லை. அப்படி இருக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது என்பது அவரின் வழக்கமான "ஜூம்லா" வேலை என்பதைத் தவிர வேறெதுமில்லை.

"கஜா" புயல் காலத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளையோ மக்களையோ பார்க்க வர முடியாத அளவிற்கு பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் அம்பானி குடும்பத்து திருமணத்திலும் உல்லாசத்தில் மூழ்கிப் போன மனிதனுக்கு இப்போது மட்டும் தமிழகத்தில் என்ன வேலை?

தமிழகம் உட்பட இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒரு மோசடிப் பேர்வழி தமிழகம் வர வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் விரோதியை தமிழகம் வரவேற்காது.

எனவே உரக்கச் சொல்வோம் . . .

#GoBackModi

Saturday, January 26, 2019

மாலை மலரும் ஏமாந்து போச்சே!!!!




வதந்திகளை விரும்பிப் பரப்பும் வாட்ஸப்பில்தான் கீழே உள்ள இந்த செய்தியை சில மாதங்கள் முன்பாக பார்த்தேன்.



அப்போது இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

பிறகு இதே செய்தி எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக கொஞ்சம் வேகமாகவே வலம் வந்தது. பத்திரிக்கைகளில் கதைகளும் கட்டுரைகளிலும் எழுதிய ஸ்ரீரங்கத்துக்காரர் ஆன சுஜாதா, படித்து முடித்ததும்  அரசு வேலைக்குப் போய் விட்டார் என்பதும் அவர் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எல்லாம் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியாமல் ஃபார்வர்ட் செய்து கொண்டிருந்தது தமிழ்ச்சமூகம்.

இப்போது பார்த்தால் சுஜாதா சொன்னதாகவே மாலை மலர் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. 

ஒரு பத்திரிக்கை இப்படி வாட்ஸப் செய்திகளை நம்பி பிரசுரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதை ஒரிஜினலாக எழுதியவர் யாரோ? 

அவர் எழுதியதை சுஜாதா எழுதியதாக அவருக்கும் யாராவது ஃபார்வர்ட் செய்திருப்பார்கள் அல்லவா!

Friday, January 25, 2019

கொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்த நாளிலே சிலருக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொடியேற்று விழாக்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது எக்ளேய்ர்ஸ் சாக்லேட்டோ அல்லது லட்டோ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் இந்த நாளை தொலைக்காட்சிகள் முன்பாக செலவழிப்பார்கள்.

கொடியேற்றும் முன்பாக,

மிட்டாய் சாப்பிடும் முன்பாக,

தொலைக்காட்சி முன்பு அமரும் முன்பாக, 

கொஞ்சம் இதைப் படித்து விடுங்கள்.



ஆம் இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன அடிப்படைகளை பாதுகாப்பவர்கள் யார்? அதற்கு எதிராக நிற்பவர்கள் யார்? 

கடந்த ஆகஸ்ட் பதினைந்து அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றியவரோ, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் கிடையாது. 

அரசியல் சாசனத்திற்கு எதிரான,
ஜனநாயகத்திற்கு எதிரான,
அரசியல், பொருளாதார, சமூக நீதிக்கு எதிரான,
மக்கள் ஒற்றுமை, மதச் சார்பின்மை, இறையாண்மைக்கு எதிரான 

மோடி வகையறாக்களை முறியடிப்பதே இந்தியாவிற்கு நல்லது. அந்த நல்லதை செய்ய தயாராவோம். அதுதான் இந்த குடியரசு தினத்தன்று நம் முன் உள்ள கடமை.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் . . .




வரலாற்றைப் படிங்கடா






இந்து சேனா என்றொரு காவிகளின் ரவுடி கோஷ்டி (தோழர் சீதாராம் யெச்சூரியை தாக்க வந்தவர்களை வேறெப்படி அழைப்பது?) சில தினங்கள் முன்பாக விக்டோரியா ராணியின் நினைவு தினத்தை கொண்டாடியுள்ளது.

1857 ல் இங்கிலாந்து அரசாங்கம் இந்திய ஆட்சியை நேரடியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆணையை விக்டோரியா ராணி பிறப்பித்த காரணத்துக்காக அவரது நினைவு நாளை கொண்டாடுகிறார்களாம். அது மட்டுமல்லாது அந்த ஆணை போடப்பட்ட நாள்தான் இந்தியாவின் முதல் சுதந்திர தினமாம்.

இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு இந்தியா வந்தது இந்தியாவின் அடிமைத்தனத்தை உறுதி செய்த நாளாக நாம் கருதினால் இவர்களுக்கு அதுதான் முதல் சுதந்திர தினமாம். என்னே விஸ்வாஸம்!

அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்?

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்கு விக்டோரியா ராணி  இஸ்லாமிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்து விட்டாராம். அதனால் முதல் சுதந்திர தினமாம்.

அடப்பாவிகளா?

1857 க்கு முன்பாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை ஆண்டது அவர்களுக்குத் தெரியுமா?

அக்காலக்கட்டத்தில் இந்திய செல்வங்களைக் கொள்ளையடித்து விக்டோரியா ராணியின் தேசத்திற்குத்தான் எடுத்துச் சென்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமா?

வீர பாண்டிய கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் பூலித்தேவனும் யாருடைய ஆட்சிக்கு எதிராக போராடினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

திப்பு சுல்தான் யாருடைய ஆட்சிக்கு எதிராக போரிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

1806 ல் வேலூரில் சிப்பாய் புரட்சி யாருக்கு எதிராக நடந்தது என்று தெரியுமா?

அவர்கள் சொல்லும் 1857 லேயே வட இந்தியா முழுதும் சுதந்திரப் போராட்டம் நடந்ததே அது யாருக்கு எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா?

இந்து முஸ்லீம் சிப்பாய்கள் தொடங்கி வைத்த புரட்சியை நானாசாஹிப், ஜான்சிராணி ஆகியோர் முன்னெடுத்துச் சென்றது யாருக்கு எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா?

விக்டோரியா ராணியின் படைகளால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான சிப்பாய்களும் பொது மக்களும் எந்த மதத்தினர் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

முதல் சுதந்திரதினம் என்று அவர்கள் அழைக்கும் நாளுக்குப் பிறகு அந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இந்திய மக்களுக்கு தொன்னூறு ஆண்டுகள் இழைத்த கொடூரங்கள் பற்றி ஏதாவது தெரியுமா?

ஜாலியன் வாலாபாக் கொடூரம் நிகழ்ந்தது அவர்களின் முதல் சுதந்திர தினத்திற்குப் பிறகுதான் என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காவிகளுக்கு போராட்ட வரலாறு என்பது கிடையாது. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கறைபடிந்த வரலாறு என்பதுதான் இருக்கிறது.

அதனால்தான் மோடி தொடங்கி அனைத்து காவிகளும் வரலாற்றை அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,

அடிமைத்தனத்தை பெருமிதமாகக் கருதக் கூடிய அளவிற்கு காவிகளின் புத்திசாலித்தனம் இருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.

முதலில் வரலாற்றைப் படிங்கடா, அப்புறமா விழாவெல்லாம் எடுக்கலாம்.

பின் குறிப்பு:

நாளை குடியரசு தினம்.  சட்டையில் கொடியை தலை கீழாக குத்திக் கொண்டு காவிகள் பல பேர் அலைவாங்களே என்று நினைக்கும் போதே அச்சமாக இருக்கிறது.  


விஸ்வாஸம் பாட்டு




விஸ்வாஸம் திரைப்படத்தில் வரும் "கண்ணான கண்ணே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் கீழே


https://www.youtube.com/watch?v=hQk0xy5TZyA

Thursday, January 24, 2019

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.




ஒரிஸாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று முக நூலில் பதிவிட்டிருந்ததை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்தியாவின் கறுப்பு தினமான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை பற்றிய அந்த பதிவு உள்ளத்தை உருக்குவதாக இருந்திருந்தது.

திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.










இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.  கண் சிமிட்டும் நேரம் போல கடந்து விட்டன.

1999 ம் வருடம் இதே நாளில்தான் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (பத்து வயது), டிமோத்தி (ஆறு வயது) ஆகியோர் கந்துஜார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற கிராமத்தில் தங்களின் ஸ்டேஷன் வேகன் வேனில் தூங்கிக் கொண்டிருக்கையில் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் நான் அருகிலிருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான பரிபாடாவில்தான் கிரஹாம் ஸ்டெய்ன்ஸூம் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்ததால் அவரை நான் நன்கு அறிவேன்.

கிரஹாம், அவரது மனைவி கிளாடிஸ், மகள் எஸ்தர், இரண்டு மகன்கள் பிலிப்  மற்றும் டிமோத்தி ஆகியோர் அந்த கோரமான கொலை நடப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பாகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களை எங்களோடு கழித்து விட்டுச் சென்றனர் என்பதை வேதனையோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எப்படி தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து மயூர்பஞ்ச் வந்து சேர்ந்தார் என்பதை அவரோடு விவாதித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரால் ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் சரளமாக பேச முடியும்.

கிரஹாம் ஒரு உன்னதமான ஆத்மா. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் அவர்களுக்கான மறு வாழ்விலும் அவர் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பல முறை அருகிலிருந்து பார்த்து “இந்த மனிதனால்  எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது” என்று வியந்து போயிருக்கிறேன்.

சம்பவம் பற்றி அறிந்ததும் நானும் என்னுடைய காவல்துறை கண்காணிப்பாளரும் உடனே அங்கே விரைந்தோம். மாவட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த இருந்த அப்பகுதிக்குச் செல்ல நான்கு மணி நேர பயணமானது.

நான் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கிப் போனேன். தற்காலிக சவப்பெட்டிகளை தயார் செய்தோம். கட்டாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சடலங்கள் பரிபாடாவிற்கு கொண்டு வரப்பட்டன. சவ அடக்கம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்.

சவ அடக்கம் செய்யும் இடத்தை விரல்களையும் பாதங்களையும் இழந்த சில தொழு நோயாளிகள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ததை நான் பார்த்தேன்.. அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

நானும் மௌனமாக கதறினேன். ஆனால் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னுடைய கணவனையும்  இரு மகன்களையும் இழந்த கிளாடிஸ் என்னையும் என் மனைவியையும் தேற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.

சில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முன்பாக மயூர்பஞ்ச் தொழு நோயாளிகளில் இல்லத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை திறந்து வைக்க கிளாடிஸ் என்னை அழைத்திருந்தார். அதன் பின்பு நான் டெல்லிக்கு சென்று விட்டேன்.

ஒடிசா மாநிலத்தின் தொழுநோயாளிகள் மத்தியில் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது 2005 ல் கிளாடிஸிற்கு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக வழங்கப்படும் அன்னை தெரஸா நினைவு விருதை அவர் 2016 ம் ஆண்டு பெற்றார்.

கிளாடிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது மகள் எஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எப்போதெல்லாம் கிளாடிஸ் இந்தியா வருகிறாரோ அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம். 2010 ல்  என் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் என்னை நலன் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.

கடந்தாண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது ஒரு நாள் இடைவெளியில் அவரைப் பார்க்கத் தவறி விட்டேன்.

கிரஹாம் படுகொலைச் சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் ஆழ் மனதில் ஏற்பட்ட நிரந்தர வடு இது. எந்நாளும் அப்படியே நிலைத்திருக்கும்.

கிரஹாம், பிலிப், டிமோத்தி அமைதியாய் துயிலிலிருக்கட்டும்.

கிளாடிஸ், எஸ்தர் மற்றும் அவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

மனிதமும் கருணையும் அன்பும் வாழிய, வாழியவே . . .

ஆர்.பாலகிருஷ்ணன்


அடேங்கப்பா! என்னே வளர்ச்சி!!!!

நான் ரசித்து சிரித்த இன்னொரு பத்தாண்டு சவால் படம்.

டயர் கும்பிடு சாமிகள் ஹெலிகாப்டர் பயணிகளாய் மாறிய கதை


Wednesday, January 23, 2019

ரெஸ்ட் வேணும் மோடி, ப்ளீஸ்



கொஞ்ச நேரம் முன்னாடிதான் "மோடியின் டீ விற்காத காதை" எழுதினேன். 

இப்போ பார்த்தா 



"உணவு சமச்சேன், பாத்திரம் கழுவினேன்"

என்ற அடுத்த உடான்ஸை அவிழ்த்து விட்டுள்ளார். 

யப்பா மோடி, இப்படி அடுத்தடுத்து உங்களைப் பத்தியும் உங்க மோசடி பத்தியுமே எழுதிக்கிட்டு இருந்தா உங்க வானரப் படை அட்டகாசம் பத்தியெல்லாம் எப்போதான் எழுதறது?

பொய் சொல்றதிலிருந்து நீங்களும் ரெஸ்ட் எடுத்துக்குங்க!
உங்க டுபாக்கூர் பத்தி எழுதறதிலிருந்து நானும் ரெஸ்ட் எடுத்துக்கறேன். 

டீல் ஓகேயா?


டீ விற்காத மோடி – பழைய செய்தி




“மோடி டீ விற்றதாக சொன்ன செய்தி பொய்யானது. மக்களிடம் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நாடகம்” என்று மோடியின் நாற்பதாண்டு கால நண்பரும், மோடி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று சில மாதங்கள் முன்பாக புகார் கொடுத்தவருமான பிரவீண் தொகாடியா கூறியுள்ளது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.



இச்செய்தி ஒன்றும் புதிதல்ல.

பதினைந்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்ததாக மோடி சீன் போட்ட காலத்திலேயே “ மோடி டீ விற்ற மோசடிக் கதை”யை  ஒரு பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தியது நினைவுக்கு வந்தது.

மோடி டீ விற்றதாக சொன்ன காலக்கட்டத்தில் மோடி விற்றதாக சொல்லப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படவே இல்லை என்பதை அந்த பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தி இருந்தார்.

இல்லாத ஸ்டேஷனில் விற்காத டீ யை யார் வாங்கிக் குடித்தார்களோ!!!!!

பத்திரிக்கையாளர் சொன்னதை நம்பாத அப்பாவி மக்கள் இப்போது மோடியின் நாற்பதாண்டு கால நண்பர் சொல்வதையாவது நம்பினால் சரி

Tuesday, January 22, 2019

அமாவாசையும் ஆதியோகியும்

பத்தாண்டு சவால் தொடர்பாக நான் பார்த்து ரசித்த இரண்டு படங்கள் நீங்களும் பார்த்து இன்புறுவதற்காக

அமாவாசையாக  இருந்து நாகராஜசோழனாக மாறியவர் கதை



நதிநீர் பாதுகாக்க மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லிக் கொண்டே வனத்தை அழித்த கதை






திரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .



களைகள் பரந்து வளர்ந்தால்
பயிர்கள்தான் நீக்கப்படும்.
பாவிகளின் ராஜ்ஜியத்தில்
புனிதர்களுக்கு இடமேது?

பொய்களின் பிம்பங்களுக்கு
புரட்சியும் புரியாது,
தியாகமும் தெரியாது.

கட்டுக்கதை பரப்பிக் கொண்டு
காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்கு
வரலாறும் கிடையாது,
வாழ்வில் கொள்கையும் கிடையாது.

ஆட்சிப் பொறுப்பின் ஆணவத்தால்
அகற்றப்பட்டவர்
இன்று மீண்டும் எழுகிறார்.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
என்ற  என்றென்றும்
தேவைப்படும் தத்துவத்தை
முதலில் சாதித்தவரை
திரிபுராவில் வீழ்த்தியதாய்
நினைத்தார்கள்,
திருநெல்வேலியில் மீண்டு
வருகிறார் கம்பீரமாய் . . .

உயிரோடிருந்தால் 
பாரதி பாடியிருப்பான்
“ஆஹாவென்று எழுகிறது
யுகப் புரட்சி நாயகனின் சிலை”


Monday, January 21, 2019

போட்டோஷாப்பிற்கு இஸ்லாம் தோஷமில்லை


காவிகளைப் போல மோசடிப் பேர்வழிகள், வெட்கம் கெட்டவர்கள், அடுத்தவர் சாதனையை தங்களுடையது என்று காண்பித்துக் கொள்ள கூசாதவர்கள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்காக மொட்டைச் சாமியார் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகளை பாரீர் என்று சங்கிகளின் பொய்களைப் பரப்புவதற்கென்றே உள்ள "போஸ்ட்கார்ட்" இணைய தளம் ஒரு படத்தை வெளியிடுகிறது.  






அவ்வளவுதான் அதை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அந்த படத்தை பகிர்ந்து கொண்டு மொட்டைச் சாமியார் புகழைப் பரப்புகிறார்கள்.

கெட்டிக்காரனின் புளுகிற்கே இரண்டு நாட்கள் என்கிற போது மோசடிப் பேர்வழிகளின் புளுகு மட்டும் எவ்வளவு நாள் தாங்கும்?

வழக்கம் போல இந்த படத்தின் மர்மமும் அம்பலமாகி விட்டது. 

படத்தில் உள்ளது அலகாபாத்தே கிடையாது. அது மெக்கா.  ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபிய அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் புகைப்படம். 



தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த ஹஜ் யாத்ரீகர்கள் பதிவு செய்த புகைப்படத்தை அப்படியே அலகாபாத் என்று மாற்றி விட்டார்கள்.

காவிகள் எப்போதுமே இஸ்லாமை வெறுப்பார்கள். ஆனால் போட்டோஷாப் மோசடி செய்வதற்கு மட்டும் இஸ்லாம் தோஷம் இல்லை போலும்!