Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Thursday, November 25, 2021

இது வேறு மழை

 


இன்று காலை முகநூலில் எழுத்தாளர் புதிய மாதவி அவர்கள், தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ஒரு கவிதையை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இது நாள் வரை எழுதிய மழைக் கவிதைகளுக்காக வெட்கப்பட்ட தருணம் இது. நீங்களும் மழையை ரசித்து கவிதைகள் எழுதியிருந்தால் இனி எழுத மனம் துணியாது என்பது நிச்சயம்.

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட 
சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா 

கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க 
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து 
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து 
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா 

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க 
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

 எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட 
சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா 

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா 
வுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே 
ஒண்ணு தெரிஞ்சுக்கோ 
மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு

எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.



Tuesday, July 7, 2020

கடும் மழை வருமென்று . . .

மாலை 6.30 மணியளவில் ஏ.டி.எம் சென்று விட்டு ஆவின் பாலகத்தில் பால் வாங்கி விட்டு வாகனத்தை இயக்கும் முன்பு பார்த்தால் வானத்தை கரு மேகங்கள் ஆக்கிரமித்திருந்தன.






அந்த கண்கொள்ளா காட்சியை புகைப்படங்கள் எடுத்து விட்டு, எங்கே கடும் மழை வருமோ, அதில் மாட்டிக் கொள்வோமோ என்று எண்ணி அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தால்

இதோ ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

மழையையும் காணவில்லை.
திரண்டிருந்த மேகங்களையும் கூட.


Friday, December 1, 2017

மழை நிறுத்திய விழா




கடந்த அக்டோபர் 1, 2 தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் முப்பதாவது பொது மாநாடு ஆரணியில் நடைபெற்ற போது மக்கள் ஒற்றுமை கலை விழாவும் பொது வெளியில் நடைபெற்றது.

வேலூர் சாரல் கலைக்குழுவினரின் இனிய பாடல்களோடு நன்றாகவே தொடங்கியது. அற்புதமான தப்பாட்டம் தொடர்ந்தது. "யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்" என்ற தலைப்பில் உரைவீச்சு நிகழ்த்த எழுத்தாளர் தோழர் மதுரை பாலன் மேடையேறினார். அவரோடு தூறலும் இணைந்து வர சில நிமிடங்கள் நிகழ்ச்சியை நிறுத்தினோம்.







பிறகு மீண்டும் அவர் பேச ஆரம்பிக்க மழையும் தொடர்ந்தது. குடைக்குள் நின்றவாரே அவர் பேசினார்.






அவரே முக நூலில் பதிவு செய்ததை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்"
என்று அவ்வை  பாடினார்.  அவ்வை பாடிய அந்த இட்டார்  என்பது  தர்மம்  இட்டார் பிச்சை இட்டார்   என்ற  அர்த்த்தில்  என்று  ரொம்பப்பேர்  புரிந்து  கொண்டிருக்கிறார்கள். அது அந்த அர்த்தத்தில் அல்ல.   யார் இந்த மண்ணைப் பொன்னாக்கு வதற்காக  தன் நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி  தன் குருதியைப் பிழிந்து கோலமாய் வரைந்து இந்த  மண்ணிற்கு  தன் உழைப்பை இடுகிறார்களோ  அந்த "இட்டார்" பெரியார் .
யார்  இந்த மண்ணிற்கு  உழைப்பை இடுவதில்லையோ  யார் அடுத்தவன்   உழைப்பைச்   சுரண்டி ஊதிக் கொழுக்கின்றார்களோ  அவர்கள்  இழிகுலத்தோர்   என்று   அவ்வை   பாடினார்.

அய்யர்  தேவர்  அகம்படியர்  வெள்ளாளர்  முதலியார்  நாயக்கர் இவர்கள் எல்லாம்  உயர்ந்தவ"ர்"களாம்

பள்ளன்  பறையன்  சக்கிலியன்  அம்பட்டையன்  வண்ணான் இவர்களெல்லாம் தாழ்ந்தவ"ன்" களாம். 

திருநெல்வேலி  பக்கத்தில்   9ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோவில் இருக்கிறது.  அங்கே முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார்.அதில் என்ன விசேசம் என்றால் தெய்வாணை மார்புக் கச்சை அணிந்திருக்கிறார். வள்ளி  மார்புக் கச்சை அணியாமல் அரைநிர்வாணமாக  நின்று கொண்டிருக்கிறார்.  வள்ளி  தாழ்த்தப் பட்ட சாதியைச் சார்ந்தவளாம்.  அதனால்  மேலாடை  அணிவதற்கு  உரிமை இல்லையாம்.  நீ கடவுளின் பொண்டாட்டியாகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவள் என்றால்  உனக்கு  மேலாடை அணிவதற்கு உரிமை இல்லை.



சூடான உரைக்கு பார்வையாளர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது அவர் உரையைக் கேட்க மழை மீண்டும் வந்து விட்டது. ஆர்வக்கோளாறில் வேகமாகவே வந்து விட, சென்று விடவும் அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை கைவிட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

அனைத்து கலைஞர்களையும் மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வந்துதான் கௌரவிக்க வேண்டியிருந்தது.




இரண்டு மாதத்திற்கு முந்தைய நிகழ்ச்சி பற்றி இப்போது எதற்கு என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

உழைப்பாளி மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மாநாடு  இன்று மாலை குடியாத்ததில் தொடங்குகிறது.



நேற்று முதலே மழை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி விளம்பரங்கள் போல   A SMALL BREAK மழையும் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

நல்லவர்களுக்கு இயற்கையும் ஒத்துழைத்தால் நல்லது.

Saturday, November 4, 2017

வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க????




ம். இப்படி ஒரு படம் வாட்ஸப்பிலும் முக நூலிலும் உலாவிக்கிட்டு இருக்கு.

இதைப் பார்க்கிறவங்க வேலூரைப் பத்தி என்னய்யா நினைப்பாங்க?

ஏதோ பல வருஷமா வேலூரில மழையே பெய்யாம சஹாரா பாலைவனம் மாதிரி காஞ்சுக் கிட்டு இருக்கறதா நினைக்க மாட்டாங்களா?

மழையே இல்லாத ஊருல போய் நம்ம பொண்ணை கட்டிக் கொடுத்தா காலம் முழுதும் தண்ணிக்குடம் தூக்கியே இடுப்பு ஒடிஞ்சுடும்னு நினைச்சா என்னய்யா ஆகும்?

வேலூரில உள்ள ஒரு வாலிபனுக்கும் கல்யாணமே நடக்காதய்யா?

டெய்லி மழை பெய்யுது. பாலாறில கொஞ்சமாவாவது தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. 

இப்ப போய் இப்படி பண்றீங்களேப்பா!!!!!!!!!

Saturday, July 30, 2016

மழை வந்த நொடிகளுக்கு முன்பு







ஒரு கையில் தேநீர்க் குவளை,
மறு கையில் காமெராவாய் 
உருவெடுத்த அலைபேசி.

குளிர் காற்றும்
கரு மேகங்களும்
சின்னதாய் தோன்றிய
ஓளிக் கீற்றும் 
கண்ணிற்கும் நெஞ்சிற்கும்
இதமளித்த அந்த நொடிகள்.

மழை வந்த மறு கணம் 
அடைக்கலம் தேடி
ஓடி ஒதுங்கியதில் 
மாறிப் போனதே!

கடந்த வருட 
பெரு மழை தந்த
அச்சத்தின் மிச்சமோ!

பின் குறிப்பு : இன்று செய்யாறு சென்று திரும்பி வருகையில் எடுத்த புகைப்படங்கள். புகைப்படங்கள் எடுத்த அடுத்த நிமிடமே பெருமழை பிடித்துக் கொண்டது. 

Tuesday, June 9, 2015

அந்த விழா இன்றோ, இந்த மழை அன்றோ

 http://media.dinamani.com/2014/10/27/rain.jpg/article2495439.ece/alternates/w460/rain.jpg


அதற்கு  பதிவர் திரு தருமி அவர்கள் "அடுத்த வாரம் பார்ப்போம்" என்று பின்னூட்டம் எழுதியிருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று திரு விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் திரு தருமி அவர்களை அறிமுகம் செய்து வைத்த போது அவர் எழுதிய பின்னூட்டம்தான் நினைவிற்கு வந்தது. ஏனென்றால் அப்போது வேலூர் பிராண்ட் வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

எந்த கேள்வியை அவர் கேட்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, "எங்கே மழையை காணோம்" என்ற அந்த கேள்வியை அவர் உணவருந்தும் வேளையில் கேட்டே விட்டார்.

கொஞ்சம் சமாளித்துக் கொண்டு "இரண்டு நாள் முன்பாகக் கூட நல்ல மழை. இன்றுதான் வெயிலடிக்கிறது" என்று சொல்ல அவர் பெருந்தன்மையாக "it is coming on and off" என்று சொல்லி விட்டு அதன் பிறகு அது பற்றி எதுவும் பேசவில்லை.

இன்று பாருங்கள். மாலை ஏழு மணிக்கு தொடங்கிய மழை இன்னும் இதோ பதினோரு மணிக்குக் கூட நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.

அன்று நடந்த விழா இன்று நடந்திருந்தாலோ
இல்லை
இன்று பெய்யும் மழை அன்று பெய்திருந்தாலோ

வேலூருக்கு எவ்வளவு நல்ல பெயர் கிடைத்திருக்கும்?
 

 

Wednesday, May 27, 2015

வேலூர் வெயிலூரா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது



தென் மாவட்டங்களில் பயணம் செய்த போது உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால் வேலூரில் மட்டும் வெயில் அதிகமாக இல்லை. தமிழகம் முழுதிலுமே அப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வேலூர் மட்டுமில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு ஊருமே வெயிலூர்தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தின் பிற ஊர் மக்கள் வேலூர் மக்களை பரிதாபமாக பார்க்கிறார்கள் அல்லது எப்படித்தான் அங்க இருக்கீங்களோ என்று நக்கல் செய்கிறார்கள்.

நேற்று முன் தினம் திருச்செந்தூரில் ஒரு கடையில் கரும்புச்சாறு பருகுகையில் அந்த கடைக்காரர் “எந்த ஊருங்க நீங்க” என்று கேட்டதற்கு வேலூர் என பதிலளித்ததும் “பாவங்க நீங்க, அங்க ஓவர் வெயிலாமே” என்று பரிதாபப்பட்டார்.

வழக்கமான வேலூர் வெயிலை விட அன்று திருச்செந்தூரில் வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த வெப்பத்தோடு அவர் சொன்னதும் சேர்ந்து கொள்ள “இதோ இப்ப உங்க ஊரில அடிக்கிறதை விட வேலூரில குறைவுதான் என்று நான் சொல்ல, என் சகலையோ "எங்க ஊரில குளிர் காலத்துல சாயந்தரம் ஆறு மணிக்கு ஸ்வெட்டர் போடாம வெளிய வர முடியாது. இங்க அப்படியா?” என்று கேட்க அவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“நீ எதற்கு பேசுகிறாய், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வேலூரை பழிப்பவர்களுக்கு இன்று இயற்கையே பதிலடி கொடுத்து விட்டது.

மாலை மூன்று மணி இருக்கும். ஒரு சில விஷயங்கள் குறித்து முதுநிலை கோட்ட மேலாளரிடம் விவாதிக்க படியேறுகையில் வாசலில் பெரும் ஓசை. என்னமோ ஏதோ என்று பதைபதைத்து வந்தால், வானத்தில் ஓட்டை விழுந்து இருக்கும் மேகமெல்லாம் அப்படியே கீழே விழுவது போல அப்படி ஒரு பெரு மழை. முதல் சில நிமிடங்களில் அடித்த காற்று எங்கே மழையை கடத்திச் சென்று விடுமோ என்ற அச்சம் இருந்தாலும் வென்றது மழைதான். 


இதோ இன்னும் பெய்து கொண்டிருக்கிறது.  நடுவில் கொஞ்ச நேரம் கூட இடைவெளி கொடுக்காததால் ந்னைந்து கொண்டுதான் வீட்டிற்கு வந்தேன். 

இதோ இந்த படம் மாலை சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு எடுக்கப் பட்டது. எப்படி இருள் கவிழ்ந்து கொண்டுள்ளது பாருங்கள். 



இனி யாரும் வேலூரை வெயிலூர் என கிண்டல் செய்யாதீர்கள். அப்படி கிண்டல் செய்யும் முன் உங்கள் ஊரின் வெப்ப நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்குப் பின் பேசுங்கள்.


Friday, November 14, 2014

மனமார்ந்த நன்றி




மழையின் காதலன் நான்.
எத்தனை நேரம் பொழிந்தாலும்
போதாது, போதாது என
ஏக்கம் கொள்பவன் நான்.

இன்று மட்டும் 
கொஞ்சம் நின்றால் என்ன?
மனதிற்குள் ஆசைப்பட்டேன்.


மக்கள் நிறுவனம் எல்.ஐ.சி யை
காத்திடவே, மக்களுக்கும்
சேதி சொல்லிடவே
மனிதச் சங்கிலி இயக்கத்தில்
கரம் கோர்த்து நின்றிடவே
மாலையிலே வேளை குறித்து
பதட்டத்தில் தவித்திருந்தோம்.

மனதிற்குள் மௌனமாய் 
ஒலித்த குரல் கூட
மழையின் செவிகளையும்
எட்டியது போலும்.

இன்று போய் நாளை வருவேன்
எனச் சொல்லி
மதியத்திலேயே 
விடை பெற்றுப் போனது.

நல்லவர் ஒருவருக்காய்
பெய்யெனப்  பெய்யும் மழை
நல்லதொரு  இயக்கத்தின்
நல்லதொரு நோக்கத்திற்கென
நிற்க மட்டும் செய்யாதா என்ன?




Monday, September 15, 2014

மழையூராக மாறிய வேலூரில் இரண்டு நாட்களாக ஒரு சவால்

வேலூரை வெயிலூர் என்று கிண்டல் செய்தவர்களுக்கு ஒரு முக்கியமான  தகவல். 

நேற்றும் இன்றும் வேலூரில் மழை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மாலை 6.15 மணிக்கு தொடங்கிய மழை இந்த நிமிடம் வரை அடித்துப் பெய்து கொண்டிருக்கிறது.

இதில் என்ன சவால் என்று கேட்கிறீர்களா?

எனது பொறுமைக்கும் மழைக்குமான சவால்தான்.

நேற்று மதியம் ஒரு திருமணம் முடிந்து வருகையில் மழை தொடங்கியது. அலுவலகம் அருகில் வந்ததால் அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தேன். மழை கொஞ்சம் குறைந்தது போலிருந்ததால் வீட்டிற்கு புறப்பட்டு ஒரு அரை கிலோ மீட்டர் கூட கடந்திருக்கவில்லை. மீண்டும் கன மழை தொடங்கி ஒரு நிமிடத்திற்குள் முழுமையாக நனைந்து விட்டேன்.

பிறகென்ன்ன, மழையை ரசித்தபடி நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்து விட்டேன்.

இன்றும் அப்படித்தான்.

பாதி வழியில் மழை பிடித்துக் கொண்டது.

எனது பொறுமைக்கும் மழைக்கும் மீண்டும் சவால்.

அரை மணி நேரத்திற்கு மேல் பொறுமை நீடிக்கவில்லை. சட்டைப் பையில்  இருந்த பணம், தொலைபேசி எல்லாவற்றையும் உணவு எடுத்துச் செல்லும் பையில் பத்திரப்படுத்தி மீண்டும் மழையில் நனைந்து கொண்டு வீடு திரும்பினேன். 

இன்றும் மழையே வென்றது.

வீடு திரும்பி, தலையை, உடலைத்  துடைத்துக் கொண்டு,  சூடாக காபி சாப்பிட்டு, இதோ இந்த பதிவை எழுதும் நொடி வரை மழை நன்றாக பெய்து கொண்டுதான் இருக்கிறது. 

வேலூர் மக்களின் மனம் கவர்ந்த விருந்தினராய் மழை மகிழ்ச்சியளித்துக் கொண்டிருக்கிறது. 

போதாது போதாது என்று ஏங்க வைக்கிறது.

எனென்றால் வேலூரில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம் அப்படி.
 

Monday, August 25, 2014

சப்தம் இல்லாமல் சந்தடி இல்லாமல்

வந்ததற்கான சப்தம் எதுவுமில்லை,
வருகையை அறிவிக்கும் இடியுமில்லை,
காற்றின் வெப்பத்திலும் மாற்றமில்லை,
மண்ணும் கூட வாசம் தரவில்லை.
வாகனத்தின்  மீது படிந்து கிடந்த
நீர்த்துளிகள்தான் சொன்னது
மழை வந்து போனதை

Thursday, June 5, 2014

அச்சுறுத்தும் மழை இன்று

நேற்று வரை 
பரவசம் தந்தது.
வசந்தத்தை வரவேற்கும்
மேளச்சத்தமாய் 
கேட்டிருந்தது இடியோசை.
வாழ்வின் ஒளியாய்
மின்னலும் இருந்தது.
வீதியில்  ஓடுகிற 
நீரைக் கூட
வெள்ளமாய் உணர்ந்தோம்.
மண்ணில் ஊறி
தாகம் தணிக்கும்
தேவதையாய் போற்றினோம்.

இன்றும் பெய்கிறது,
இன்னமும் பெய்கிறது
பரவசம் தந்த மழை
இன்று
பயமும் தருகிறது.

மழலையின் மரணம்
தந்த மனதின் ரணம்.

Thursday, May 22, 2014

காசு கொடுத்து மழை

கட்டணம் நிர்ணயித்து
கண்காட்சி போல
காசு வசூலித்தால்
கோடியாய் இங்கே
பணம் கொட்டும்,
அடித்துப் பெய்கிறது
மழை
அதை நாங்கள்
மறந்தே போன பின்

Friday, May 9, 2014

காற்றால் கலைந்த கண்ணாமூச்சி


காலை முதல் மாலை வரை 

கருமேகங்களும்  கதிரவனும்  
விளையாடினார்கள் கண்ணாமூச்சி.

காற்றினை துணைக்கழைத்து
கருமேகத்தை துரத்தினான்.

இப்போதும் பொழிந்தது மழை,
சூரியன் வெப்பத்தால் 
உருவான வியர்வை மழை.
 

Tuesday, May 6, 2014

மத்திய அரசாக மாறிப் போனதோ மழை?


சின்னச் சின்ன தூறல்களாய்
மேலே விழுந்தன மழைத்துளிகள்.

இங்கேயும் இருக்கிறார்கள் நல்லோர்கள்
என எண்ணும் முன்பே
ஒரிரு நிமிடத்தில்
ஓரிரு துளிகளோடு
நின்றே போனது அதிசயமாய்
வந்து போன மழை.

முதலாளிகளுக்கு  கருணை பொழிந்து,
வறியோரை வாட்டி வதைக்கும்
மத்திய அரசைப் போல
மாறிப் போனதோ மழையும் கூட?
சிலரை குளிர வைத்து
பலரை புறக்கணித்து.....

இது காலையில் எழுதிய கவிதை.
மாலையில் நிலைமையே மாறிப் போனது.

நாளைய தலைப்புச் செய்தி

அங்கே என்ன பேரோசை?
யார் செய்வது இந்த ஆரவாரம்?
யாரை வரவேற்க இத்தனை கூட்டம்?
அலுவலகங்கள் கூட 
முடங்கியது ஏனோ?
அனைவரது முகத்திலும்
பரவசம்தானா?
இன்றைய இனிய தொடக்கம்
இனியும் தொடருமா என
வினவாதவர் எவரேனும் உண்டா?

குழப்பமாக பார்ப்போரே,
நாளைய தலைப்புச் செய்தி
உங்களுக்கு விடை தரும்
வேலூரில் கனத்த மழை என்று