Tuesday, March 31, 2020

இது உப்புமா வாரமா?


ஒரு மாறுதலுக்கு எனக்கு வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பிய ஒரு காமெடி காணொளியை பகிர்ந்து கொள்கிறேன்.


உப்புமாவை வெறுப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

எனக்கு உப்புமா பிடிக்கும். சாவி எழுதிய "வாஷிங்கடனில் திருமணம்" படியுங்கள். அதில் கூறப்பட்டுள்ளது போல தயாரித்தால் உங்களுக்கும் உப்புமா பிடிக்கும். 

தாக்குதல் ஆயுதம் காவல் பணியில்


கீழே உள்ள காணொளியை ஒரு தோழர் அனுப்பியிருந்தார்.



வேலூர் க்ரீன் சர்க்கிள் பகுதியில் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் "வ்ஜ்ரா" வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டங்களை கலைக்கத்தான் இதுவரை "வஜ்ரா" பயன்படுத்தப் பட்டுள்ளது. போராட்டக்களத்தில் போராட்டக்காரர்களை மிரட்டி அச்ச உணர்வை உருவாக்கவே காவல் துறை "வ்ஜ்ரா"வை அங்கே கொண்டு வரும்.

ஒரு அடக்குமுறைக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்றை ஆக்கபூர்வமான பாதுகாப்புப் பணிக்குக் கூட உபயோகிக்க முடியும் என்பதை காலம் கற்றுக் கொடுத்துள்ளது.


Monday, March 30, 2020

மாட்டுக்குத்தான்யா அங்க மரியாதை


இந்த தலைப்பில் நான் எழுதத் தொடங்கியது வேறு ஒரு செய்தி பற்றி. 

டெல்லியிலிருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு 200 பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளதாக மொட்டைச் சாமியார் அறிவித்திருந்தார். 

வேலை இல்லாமல் வீட்டிற்கு திரும்பிய அவர்களிடம் பேருந்து கட்டணத்தை வசூலித்துத்தான் அழைத்து வந்திருக்கிறது யோகி அரசு. இதே நேரம் ராஜஸ்தான் அரசோ கொரோனோ ஸ்பெஷல் என்று கட்டணம் எதுவும் வாங்கவில்லை. 



வாழ வழியின்றி சொந்த ஊருக்கு கால் நடையாகவே திரும்பி வந்தவர்களிடம் எஞ்சியிருக்கிற பணத்தையும் தட்டிப் பறிக்கிற கொள்ளைக்காரக் கூட்டத்திற்கு உத்தரபிரதேசத்தில் ஆட்சி என்று பெயர். இந்த லட்சணத்தில் "எப்போதும் உங்கள் நண்பன்" என்று வேறு அச்சிட்டு வைத்துள்ளார்கள்.

இதைத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இதை விட பெரிய அராஜகத்தை, அயோக்கியத்தனத்தை செய்துள்ளது மொட்டைச்சாமியார் அரசு.

உத்தரபிரதேச எல்லைக்குள் வந்த தொழிலாளர்களை பெரெய்லி என்ற் இடத்தில் அமர வைத்து ப்ளீச்சிங் பௌடர் கலந்த தண்ணீரை அவர்கள் மீது பாய்ச்சி அவர்களை தூய்மைப்படுத்தியுள்ளார்களாம்.

ப்ளீச்சிங் பௌடர் கலந்த தண்ணீர் முகத்தின் மீதும் கண்கள் மீதும் உடல் முழுதும் பீய்ச்சப்பட்டதால் கண் எரிச்சல், உடல் நமைச்சல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். நோய்த் தொற்றை தடுப்பது என்ற பெயரில் புதிய நோய்களைக் கொடுத்துள்ளது மொட்டைச் சாமியார் அரசு. 




உபி மாநிலத்தில் மாடுகளாக இருப்பது மேல். மாட்டு மூளை கொண்டவர்கள் அல்லவா ஆட்சியில் உள்ளார்கள்! அவர்கள் மூளை முழுவதும் இருப்பது மாட்டுச் சாணம் அல்லவா!

கடைசியில் தடம் புரண்ட "சூல்"



ஊரடங்கு காலத்தில் படித்து முடித்த நூல் இந்த வருடம் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு சோ.தர்மன் எழுதிய "சூல்" நாவல்.

விவசாயிகளின் நுட்பமான அறிவைக் கண்டு சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி பிரஷ்னேவ் வியந்து போன ஒரு சம்பவமே இந்த நூலுக்கான அடிப்படை என்று முன்னுரையில் கொடுத்துள்ளார்.

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் எட்டயபுரம் ஜமீனில் உருளைக்குடி என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கொண்ட கண்மாயும்தான் இந்த நாவல்.

கரிசல் காட்டு பிதாமகன் கி.ரா வின் மொழி நடையில் நாவலின் துவக்கப் பக்கங்களிலிருந்து பாதி வரை சுவாரஸ்யமாகவே உள்ளது. பல்வேறு மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகவேதான்  நூல் செல்கிறது. கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான பேச்சு என்று அங்கங்கே காம நெடி ஓவராகவே அடிக்கிறது.

மழை எப்போது வரும் என்று பறவைகளைப் பார்த்து கணிக்கும் முத்து வீரன் தாத்தா, கண்மாயின் அடைப்பை அகற்ற தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் கருப்பன், தன் வாழ்நாளுக்குப் பிறகும் தன் பெயரைச் சொல்ல ஒரு நந்தவனத்தை உருவாக்கி வழியில் செல்பவர்கள் தினமும் மோர் பருக ஏற்பாடு செய்யும் கொப்பளாயி, கொப்பளாயிக்கு துணை நிற்கும் காட்டுப்பூச்சி, காரமான வெற்றிலை பயிரிட திருட்டுத்தனமாக தொழில்நுட்பம் கற்று கடைசியில் செத்துப் போகும் கொடிக்கால் வேளார், குப்பாண்டி பண்டாரம் என்று ஏராளமான சுவாரஸ்யமான பாத்திரங்கள் உண்டு.

வீர பாண்டிய கட்டபொம்மனும் கூட வந்து போகிறார். அவருக்கு உதவி செய்த பனையேறிக்கும் ஆசாரிக்கும் கொடுத்தனுப்புகிற நகைகளை அவர்கள் மறைத்து வைத்து விட்டு எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது என்று அலைவதில் நூலும் கொஞ்சம் தடுமாறுகிறது.

ஆவிகள், பேய்கள் ஆகியவை உள்ளது என்றும் அவ்வப்போது பல சம்பவங்கள் மூலம் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். லாஜிக் இல்லாத காஞ்சனா படங்களின் பாதிப்பு போல . . .

சுதந்திரம் வந்தால் மக்கள் நலன் பின்னுக்கு போகும் என்று முதலில் குப்பாண்டி சாமி மூலம் சொல்ல வைக்கிறார்.

அரசாட்சி முடிந்தவுடன் வருகிற ஆட்சியாளர்கள் மூலம் கிராமப்புற வாழ்க்கை பாழாகிறது என்று முடிக்கிறார்.

இதற்கு அவர் பயன்படுத்தியுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களில்தான் வில்லங்கத்தை விதைக்கிறார்.

பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிற சின்னாத்துரை, அவரது உதவித்தலைவராக இருந்து பதவியேற்ற சில மாதங்களில் விஷ சிலந்தி நோயில் சின்னாத்துரை இறந்து போக தலைவராகிற மூக்கா, இவர்களையெல்லாம் வழி நடத்துகிற சுச்சி நாயக்கர் ( பெயர் என்னமோ ராமசாமி நாயக்கர்தான். இவர் ஒரு வார்த்தை சொன்னால் சுச்சி போட்டது போல வாலிபர்கள் செயல்படுவதால் சுச்சி நாயக்கர் என்று அழைக்கிறார்களாம் என்று ஆசிரியரே எழுதுகிறார்) என்று வெளிப்படையாகவே எழுதுவதில் இவர் யாரைச் சொல்கிறார் என்று நன்றாகவே புரிகிறது.

சுதந்திரம் வந்தவுடனேயே மக்களை பாதிக்கிற சம்பவங்கள் நடப்பதாக எழுதுகிறார். சுதந்திரம் வந்து இருபது வருடத்திற்குப் பிறகுதான் திமுக ஆட்சிக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கருவேல மர விதை கொடுத்தது போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?

கால்நடை ஆராய்ச்சி மையங்கள் துவக்குவதெல்லாம் கொலைக் குற்றமா என்ன?

பஞ்சாயத்து தலைவர் நிலத்தை ஆக்கிரமிக்கிறார். அதனை கண்டிக்கிற குப்பாண்டிசாமி "சாமி இல்லைன்னு எப்போ நீங்க சொல்ல ஆரம்பிச்சீங்களோ, இந்த திருட்டுத்தனம்தான் செய்வீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்" என்கிறார்.

நாத்திகர்களை திருடர்கள் என்று நிறுவ செய்கின்ற முயற்சியல்லவா இது! சபரிமலைக்கு தங்கப்படிக்கட்டுக்களும் கர்னாடகா சுப்ரமணியா கோயிலுக்கு தங்கக் கதவும் செய்து கொடுத்த விஜய் மல்லய்யாதான் இந்திய வங்கிகளின் பணத்தை திருடிக் கொண்டு வெளிநாடு போனது அவருக்கு தெரியாது போல !

உருளைக்குடி எக்காலத்திலும் சுபிட்சமாகவே இருந்தது போலவே எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் பேரை கொன்றழித்த தாது வருஷப்பஞ்சம் உருளைக்குடிக்கும் எட்டயப்புரம் ஜமீனுக்கும் மட்டும் வரவில்லை போல!

பின்னட்டையில் இந்த நூலை ஜெயமோகன் விதந்தோந்தி எழுதியிருந்த போதே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் என்று வாங்கியதால் படித்து எரிச்சலானதுதான் மிச்சம்.  ஜெமோ சொல்லும் "அறம்" இல்லாத நூல்.





Sunday, March 29, 2020

மோடிக்கும் மோகிகளுக்கும் வலி புரியாது . . .

மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்கிற எந்த ஒரு முடிவும் இந்நாட்டு மக்களுக்கு துயரத்தைத் தவிர வேறெதையும் தருவதில்லை என்பதே  தொடர்ச்சியான அனுபவமாக இருக்கிறது. 

ஜனவரி மாதம் முதலே கொரோனா குறித்த நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கினோம் என்று மத்தியரசு இன்று கூசாமல் பொய் சொல்லியுள்ளது. 

21 நாட்கள் ஊரடங்கு என்பது இன்றைய அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடனடியாக மோடிக்கு எழுதிய கடிதத்தில் "21 நாட்கள் மக்கள் உயிரோடு வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த வித முன் யோசனையோ முன் ஏற்பாடோ இல்லாமல் அமலாக்கிய ஊரடங்கு உத்தரவு புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் நோக்கி துரத்திக் கொண்டிருக்கிறது. 

புகைப்படங்களும் கீழே உள்ள ஒரு கருத்துப்படங்களும் மிகுந்த வலி தருபவை. எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதனின் பதிவும் கீழே உள்ளது. வலியை அதிகப்படுத்துகிறது அப்பதிவில் உள்ள உண்மை. 

இதெல்லாம் மோடிக்கோ, மோடியை மோகிப்போருக்கோ புரியப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் பொய்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

வலி மிகுந்த காட்சிகளை தொலைக்காட்சிகளிலும் எத்தனை நாள் நாம் மௌனமாக கடந்து போகப் போகிறோம்!

அறிவிலாதார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இந்த அவலம் தொடரும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டாமா? இந்த நேரத்தில் அரசியலா என்ற கேள்வி எழலாம்.

இப்போது உண்மையைப் பேசாமல் வேறெப்போது பேசுவது!






*நனையும் இமைகள்...*
*நடுங்கும் இதயம்...*
**********************************

*க.சுவாமிநாதன்*

"நான் கான்பூருக்கு போக வேண்டும். ரயில்கள் இல்லை. ஏதாவது ஒரு வண்டியை பிடித்து ஊருக்கு பக்கத்திலாவது போய் விட முடியாதா என்று தவித்து நிற்கிறேன். எப்படியோ இன்னும் சில நாட்களில் சாகப் போகிறேன். இங்கேயே நான் தங்கினால் பசியிலேயே செத்து விடுவேன். போகிற வழியில் நோய் தொற்றினாலும் பரவாயில்லை. சொந்த மண்ணிலாவது போய் செத்துப் போகலாம்"

இது மனிஷ் குமார் என்கிற நொய்டா அருகில் உள்ள கஸ்னாவின் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த புலம் பெயர் தொழிலாளி. நாடு தழுவிய ஊரடங்கால் இப்போது ஒரு வாரமாக ஆலை மூடிக் கிடக்கிறது. 

இப்படி குரல்கள் லட்ச கணக்கில், கோடிக் கணக்கில் நாடு முழுவதும் கேட்கின்றன.

*சாலையெங்கும் ஓலங்கள்* 

டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள "ஜீரோ பாயிண்ட்" நேற்று புலம் பெயர் தொழிலாளர்களின் கடலாக இருந்ததென்பது வேதனையான காட்சி. "தனித்திரு" என்ற ஊரடங்கு உத்தரவு, மனித உயிர் காக்க விதிக்கப்பட்ட அரச கட்டளைகளின் நோக்கம் அங்கு "தோல்வி அடைந்திருக்கிறது". இது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வார்த்தைகள். 

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கௌதம் புத்தா நகர்- ஆக்ரா சந்திப்புதான் உத்தரப் பிரதேச எல்லை. அங்குதான் நேற்று பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு இருக்கிறார்கள். உத்தரப்பிரதேச அரசு 200 வாகனங்களை ஏற்பாடு செய்வதாக செய்திருந்த அறிவிப்பை கேட்டு வந்தவர்கள் அவர்கள். ஒவ்வொரு வாகனம் வந்த போதும் ஓடி ஓடி மோதி மோதி இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இடித்து உட்கார்கிற நிற்கிற அவலங்கள் அரங்கேறியுள்ளன. 

அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கிறது. எழுத்தாளர்கள் அல்ல அவர்கள். கற்பனைகள் வறண்டு போன இதயங்கள் அவர்களுடையது. கேட்பவர்களுக்கு எந்த செய்தியும் அவர்களிடம் இல்லை. இருந்தாலும் அவர்கள் வார்த்தைகளுக்கு இணையான இலக்கியம் ஏதும் இருக்க முடியாது. 

"நான் சிறிய அளவில் தொழில் செய்யும் ஒரு மொத்த பழ வியாபாரி.  எல்லா பழங்களும் அழுகிவிட்டன. வைப்பதற்கு இடமில்லை. பதத்தோடு பாதுகாக்க ஐஸ் சப்ளை செய்ய ஆளில்லை. இங்கு இருந்தால் பசியோடு வாட வேண்டும். இல்லாவிட்டால் பிச்சை எடுக்க வேண்டும். சொந்த ஊருக்கு போய் விடுவதே நல்லது என்று காத்திருக்கிறேன்".

இப்படி வாகனங்களை எதிர்பார்க்காமல் 200, 300 கி.மீ நடந்து கொண்டிருப்பவர்கள் பல்லாயிரம் பேர். கைகளில் குழந்தைகளோடு, ஊரில் இருந்து வருகிற செல் அழைப்புகளுக்கு பதில் சொன்னவாறு, பல நூறு மைல்கள் வந்தும் வாயிற்கும் வயிற்றுக்கும் அல்லாடி சம்பாதித்த சொத்துக்களான அழுக்குப் பைகளோடு... சாலைகளில் இரவும் பகலும் இவர்களின் கால்கள். 

*நினைப்பவர்கள் யார்?*

இவர்கள் கண்களில் நீர் வற்றி விட்டது. புன்னகை மறைந்து விட்டது. வழியில் பழங்களை, சிறு சிறு உணவு பொட்டலங்களை தருகிற நல்லுள்ளங்களுக்கு நன்றி சொல்லக் கூட தோன்றாத விரக்தியோடு நடக்கிறார்கள். கடக்கிற மைல் கற்கள் கூட அவர்கள் கண்களில் படுவதில்லை. வீசியெறியப்பட்ட குப்பை போல மனிதம் வீதியெங்கும் சிதறிக் கிடக்கிறது. 

தேசிய நெடுஞ்சாலை எண் 8 லும் இதே காட்சி. அது டெல்லியையும், ஜெய்ப்பூரையும் இணைக்கிற சாலை. அதன் இரு மருங்கிலும் ஜனத் திரள். 

"நாங்கள் கட்டிடத் தொழிலாளர்கள். குரு கிராமில் உள்ள டி.எல்.எப் கட்டம் 2 ல் இருந்து நடக்க துவங்கினோம். எங்கள் ஊர் ராஜஸ்தான் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சவாய் ஆகும். 550 கி.மீ தூரம்"

இது நர்சிங் லால் என்கிற கட்டிடத் தொழிலாளியின் பகிர்வு. "நான் இனிமேல் ஓட்டு போடவே மாட்டேன்" என்று கோபப்படுகிறார். இவர்கள் நம்பிக்கையையெல்லாம் இந்த தேசம் எப்படி மீட்டு எடுப்பது! 

எதிர் திசையில் நடப்பவர்கள் கண்ணோஜ் நோக்கி நடந்து செல்கிறார்கள். 443 கி.மீ. இன்னும் பல பேர் எங்கே போகிறார்கள் தெரியுமா? அயோத்தி. அவர்கள் ராஜஸ்தான் பிவாடி நகரில் கட்டிட வேலைக்கு வந்தவர்கள். இப்போது அவர்கள் கைகளுக்கும், அடுக்க வேண்டிய செங்கல்களுக்கும் வேலை இல்லை. கட்டுவதற்கு ஏதுமில்லை. என்ன சொல்வது? அரசியல் பேசுவதற்கு இது நேரமில்லை என்பது நடுத்தர வர்க்க மனோ நிலை. அரசியல் இல்லாமல் எது இருக்கிறது! எது மிச்சம் இருக்கிறது...

பகல் காட்சிகளை விட இரவு காட்சிகள் மிக மோசமானவை. நடந்து போகிறவர்கள் என்ணிக்கை பல மடங்குகள். பரிதாபாத் சாலையில் கூட்டம் கூட்டமாய்...

ஊரில் இருக்கிற அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு.

"அம்மா உனக்கு தெரியாதா என்ன நிலைமை என்று.... ஏன் திரும்ப திரும்ப கேட்கிறாய்... வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே போய் விட முடியும். நம்பு. வீட்டிற்கு வந்து விடுவேன்" 

அம்மாவிடம் பேசும் போதுதான் வார்த்தைகளில் உயிர், உணர்ச்சி இருக்கும் போலிருக்கிறது! இயலாமையால் எழும் மெல்லிய கோபத்துடன் கூட...

இன்றைய (மார்ச் 29, 2020) இந்து ஆங்கில நாளிதழின் 7 ஆம் பக்கம் விவரிக்கிற செய்திகள் இவை. புகைப்படங்கள் நிலைமையின் கடுமையை உணர்த்துகின்றன. டெல்லி மட்டுமல்ல. நவி மும்பை, சண்டிகர், லக்னோ போன்ற நகரங்களிலும் இதே காட்சிகள். 

இவை எல்லாம் நமது கண்களில் கசிவை ஏற்படுத்தலாம். ஆனால் கிரன் என்கிற புலம் பெயர் தொழிலாளி எழுப்புகிற கேள்விதான் முக்கியம். அது நமது இதயத்தை கிழிக்கிறது. கிழிக்க வேண்டும்.  

"யார் எங்களைப் பற்றி நினைக்கிறார்கள்? இதயத்தின் ஓரத்திலாவது எங்களை பற்றி கவலைப் பட சிறு இடம் வைத்திருக்கலாமே!"

என்ன பதில் நம்மிடம் உள்ளது?

*கடந்து போகக் கூடாது*

பெரும் பெரும் துயரங்கள் ஏற்படுத்தும் சோகங்கள் நம்மை அப்போதைக்கு அலைக் கழித்தாலும் பின்னர் மறந்து போய் விடுகின்றன. ஓர் பெருந் துயர் வரும் போதுதான் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு, வருமான திரட்டலில் உள்ள பாரபட்சம், மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான முறைமையின் (Delivery Mechanism) பலவீனம், உடல் நல கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு பற்றியெல்லாம் ஆழமாக கவலைப்படுகிறோம். மாற்று பற்றி யோசிக்கிறோம். ஆனால் ஒரே இரவில் சரி செய்ய இயலாதே என்று திகைத்து நிற்கிறோம். நீண்ட காலத் தீர்வுகள் சாதாரண காலங்களில் மனதில் ஒட்டுவதில்லை. ஒட்டுகிற காலத்தின் நெருக்கடி, இருப்பதற்குள் என்ன செய்வது என்று முடக்கி விடுகிறது. சாதாரண மக்கள் "கொரோனா" உருவாக்குகிற பாதுகாப்பற்ற உணர்வை அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் அனுபவித்து வருவதன் வெளிப்பாடே இந்த கோடிக் கணக்கானோரின் நீண்ட நெடிய நடை. 

13 கோடி பேர் புலம் பெயர் தொழிலாளர்களாக சொந்த ஊரை விட்டு, சொந்த உறவுகளை விட்டு பல நூறு கி.மீ தூரம் பணி புரிகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இப்படி மாநிலம் மாநிலம் விட்டு அத்தக் கூலிகளாய் நகர்கிறார்கள். இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டா? உண்ண, உறங்க, குளிக்க, காலைக் கடன் கழிக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா? டெல்லி அடுக்குமாடி தொழிலகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி திணறி பொசுங்கி இறந்தவர்கள் இவர்களே. இந்த பொருளாதார வைரஸ் பற்றி சமூகத்தில் விவாதமாவது உண்டா? அரசு அறிவிக்கிற நிவாரணங்களை பெறுவதற்கான ரேஷன் அட்டைகளாவது உண்டா? 

கேரள இடது முன்னணி அரசு இவர்களுக்கு வைத்துள்ள பெயர் " விருந்தாளி தொழிலாளர்". (Guest workers). அவர்களுக்கு வீடுகள் கட்டி தந்துள்ளது. அடையாள அட்டைகள் தந்துள்ளது. இடதுசாரிகளின் இத்தகைய மாற்று அணுகுமுறையாவது மற்ற மாநிலங்களின் மனச் சாட்சியை அசைத்துள்ளனவா? மத்திய மாநில அரசுகளே உடனடி நிவாரணம், உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இவர்களை எட்டட்டும்! எதிர்காலம் உங்கள் பொருளாதாரப்  பாதையை மாற்றட்டும்! என்ற குரல் கேட்க வேண்டாமா!

அதுவரையில் இவர்களுக்கு என்ன சொல்வது! நடக்கட்டும். கால்கள் நோக நடக்கட்டும். கை குழந்தைகள் சுமக்கிற தாய்மார்கள் கண் சொருகாமல் பத்திரமாய் நடக்கட்டும். இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடந்து செல்லுங்கள்.  கொரோனா தொற்றி விடாமல் கவனமாக இருங்கள். யாராவது கீழே விழுந்தால் தொட்டுத் தூக்கி விட்டு தண்ணீர் கிடைத்தால் கை கழுவுங்கள். சோப்பு இருந்தால் போட்டு கழுவுங்கள்.
எப்படியாவது வீடுகளை போய் சேருங்கள். 
அம்மாவின், இணையரின், உறவுகளின் முகமாவது ஆறுதலைத் தரட்டும்.  குற்ற உணர்வோடு கூனிக் குறுகியே சொல்கிறோம். எங்கள் நல்லெண்ணங்கள் மட்டும் உங்களுக்கு உதவி விடாதே! இந்த வார்த்தைகளை தவிர வேறு எதையும் நமபிக்கையுடன் சொல்ல முடிகிறதா?

*ஒரு வார்த்தை உண்டு. நீங்கள் இன்று நடக்கிறீர்கள். நாங்கள் இந்த துயரை, வலியை, கசப்பான உண்மையை எந்திர கதியாய் எதிர்வினை இல்லாமல் வரும் காலத்தில் கடந்து விட மாட்டோம் என்பதே.*

கம்பீரமான ஆண் - கடைசி வரி

எழுத்தாளர் வினாயக முருகனின் முக நூல் பதிவு கீழே உள்ளது. கடைசி வரி சரியான பஞ்ச் 




இந்த படத்தில் இருப்பவரின் பெயர் ரமேஷ் மீனா. ராஜஸ்தானிலிருந்து கூலிவேலை செய்து பிழைக்க குஜராத்தின் அஹமதாபாத்துக்கு வந்தவர். தோளில் சுமந்து நடப்பது அவரது மனைவியை. ஊரடங்குக்கு பிறகு பேருந்துகள் ஓடாததால் கால் முறிந்த மனைவியை தோளில் சுமந்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு நடந்தே செல்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம். ராஜஸ்தான் சென்றடைந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மனைவியை விட்டுட்டு ஓடும் ஆண்களுக்கு மத்தியில் குஜராத் மண்ணிலிருந்து இப்படியொரு கம்பீரமான ஆண் புகைப்படத்தை பார்ப்பது பெருமையாக உள்ளது.

மறுபடியும் வேணும்னு யாருய்யா கேட்டது?



பெரும்பாலான மக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் "ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரை மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப் போவதாக  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் காலத்தில் மக்களை ராமர் பக்கம் திருப்புவதற்கான உத்தி என்பதைத் தவிர வேறொன்றும் இதில் இல்லை.

ராமாயணம் முதல் முறை வந்த காலத்தில் ஹிந்தி மொழி புரிகிறதோ இல்லையோ தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருந்த மக்கள் உண்டு. அக்காலக்கட்டத்தில்தான் நெய்வேலி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொலைகட்சி ஒளிபரப்பு மையங்கள் துவக்கப்பட்டு தூர்தர்ஷன் பல இல்லங்களுக்கு வந்திருந்த காலம் அது. சாலிடர், டயனோரா போன்ற  கலர் டி.விகளும் சில வீடுகளில் எட்டிப் பார்த்த காலம் அது. அதனால் ராமாயணம் பார்க்கும் எண்ணிக்கை கூடுதலாகவே இருந்தது யதார்த்தம். 

அப்போது எங்கள் நெய்வேலிக் கிளை சென்னைக் கோட்டத்தில்தான் இருந்தது. வேலூர் கோட்டம் பிரிக்கப்படவில்லை. அலுவலக வேலையாக சென்னை சென்றால் சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரில் உள்ள சர்மானி ஹோட்டலில் தங்குவது வழக்கம். தனிப்பட்ட முறையில் சென்றாலும் அங்கே தங்குவேன்.  பஞ்சாபிகள் நடத்தும் ஹோட்டல் அது. வட இந்தியர்கள் அதிகமாக தங்குவார்கள். 

ஹோட்டல் வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சியை யாருமே சீண்ட மாட்டார்கள். வெளியே போய் விட்டு வருகையில் நான் மட்டும் தனியே அமர்ந்து புரிந்தும் புரியாமலும் ஏதாவது பார்த்து விட்டு வருவேன். ஆனால் இரண்டு முறை ஞாயிறு காலையில் நான் பார்த்த காட்சி ஆச்சர்யமாக இருந்தது.

விடுதியில் தங்கியிருந்த அனைவருமே தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாற்காலிகள் நிரம்பி தரையில் கூட அமர்ந்திருந்தார்கள். அதுவே அப்போதைய தொலைக்காட்சி பரபரப்பான சித்தார்த்த பாசுவின் "Quiz Time" நிகழ்ச்சியை பார்க்க ஈ, காக்கா இருக்காது.

ஏதோ தெரிந்த கதை, புராணம் என்பதால் இவ்வளவு ஆர்வம் என்று அப்போது நினைத்ததுண்டு. ஆனால் இந்த ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்குத்தான் பயன்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அரசு ஒரு அடி முட்டாள் அரசாக இருந்துள்ளது என்பதற்கும் இது ஒரு உதாரணம். 

"கடவுளின் பெயரால்" என்ற ஆவணப்படம் மூலம் அயோத்தி ராமன் பெயரில் சங்கிகள் செய்த அராஜகத்தை ஆவணப்படமாக்கிய திரு ஆனந்த் பட்வர்தன், ராமர் கோயில் பிரச்சினையை ஊதிப் பெருக்க சங்கிகளுக்கு ராமாயணம் தொலைக்காட்சியும் உதவிகரமாக இருந்தது என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

"நரி செத்தாலும் அதன் கண் இரை மீதுதான்" என்று சொலவடைக்கு ஏற்ப மக்கள் ஏராளமான இன்னல்களை சந்தித்து வரும் வேளையிலும் கூட பாஜக தன் செயல் திட்டத்தில் கறாராக இருக்கிறது. ராமர் பெயரில் தன் அரசியலை தொடர பழைய தொலைக்காட்சித் தொடரை தூசி தட்டி மீண்டும் ஒளிபரப்புகிறது.

மக்களின் விருப்பப்படி என்று ஒரு டயலாக் விட்டுள்ளாரே, அங்கேதான் காவிச்சாயம் வெளுத்துப் போகிறது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் துயரத்தில் என் செய்வது என்று தவிக்கும் வேளையில் அவர்களின் முன்னுரிமை அடுத்த வேளை உணவா? அல்லது ராமாயணம் தொலைக்காட்சித் தொடரா?

அப்படி யாருய்யா கேட்டது உன்னை?

பிகு: பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் வெளி வந்த மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரை ஒப்பிடுகையில் ராமானந்த சாகர் தயாரித்து இயக்கிய ராமாயணம் படு மொக்கை என்பதை இரண்டு தொலைக்காட்சித் தொடர்களையும் பார்த்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பிகு 2 

நேற்றே எழுதியது. அதை பகிரும் முன் தின மலரின் ஜாதி வெறி கார்ட்டூனைப் பார்த்த காரணத்தால் முன்னுரிமை மாறி, இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

Saturday, March 28, 2020

நல்லா வேலை பாக்கறாரு மந்திரி



"ராமரும் ரூமரும் இல்லாமல் பாஜக இல்லை" என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா சொல்வார்.

அதை நிரூபிப்பது போல இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் சீரியலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது மத்தியரசு.

(இந்த முடிவு குறித்து காலையில் எழுதிய பதிவை பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு தின மலர் கடுப்பேத்தி விட்டது. ட்ராப்டில் உள்ள அதை நாளை பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன் என்று அன்போடு எச்சரிக்கிறேன்)

"நான் ராமாயணம் பார்க்கிறேன். நீங்கள்? " என்ற கேள்வியோடு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

"நீங்கள் ராமாயணம் பார்ப்பதை செல்பி எடுத்து அமைச்சருக்கும் பிரதமருக்கும் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டது பிரச்சார் பாரதி. 

நரி செத்தாலும் கண் இரையின் மீதுதான் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

"ஒரு சோதனைக்காலத்தில் இதெல்லாம் ஒரு அமைச்சருக்கு அழகா?" என்று பிரகாஷ் ஜாவ்தேகர் ராமாயணம் பார்க்கும் பதிவை ட்விட்டர்வாசிகள் கண்டித்து பொங்கி எழ

அந்த பதிவை நீக்கி

"தன் வீடே இப்போது அலுவலகமாகி விட்டது. வீட்டில் அமர்ந்து கொண்டு வேலை பார்க்கிறேன்"

என்று புதிதாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்கிறார்.

அதைப் பார்க்கும் போதே வெறும் போஸ் என்று நன்றாகத் தெரிகிறது.

நடிப்பென்று தெரியாத அளவிற்கு போஸ் கொடுக்க ஜாவ்தேகர் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் அவர்களின் குருநாதர் நடிகர் சிகரம் மோடி இருக்கிறாரே!

தீண்டாமை பரப்பும் தினமலரை தடை செய்

காலையில் எழுந்தவுடனேயே கடுப்பேத்திய செய்தி தின மலர் ஜாதி வெறி கொண்டு தீண்டாமையை அப்பட்டமாக நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள படம்தான்.



தின மலர் பத்திரிக்கையை தடை செய்து அதன் நிர்வாகிகளை தீண்டாமை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டியதுதான் தமிழக அரசு எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால் இந்த எடுபிடி அரசு செய்யாது. 

தமிழக மக்கள் புறக்கணிப்பே ஒரே தீர்வு.

Friday, March 27, 2020

திருத்திக் கொண்ட "தி ஹிந்து" திருந்தாத . . .

நேற்றைய ஹிந்து ஆங்கில இதழில் வெளியான கார்ட்டூனில் கொரோனா கிருமிக்கு இஸ்லாமியர்களின் ஆடை அணிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கு கண்டனக் கடிதங்கள் வந்ததும் அந்த நாளிதழ் வருத்தம் தெரிவித்து அந்த கார்ட்டூனை மாற்றி தன் இணையத்தில் வெளியிட்டது. 



எத்தனை கண்டனங்கள் தெரிவித்தும் "தின மலர்" போன்ற  திருந்தாத பல ஊடகங்கள் உள்ளது. 

அவற்றை புறக்கணிப்பது மட்டுமே ஒரே வழி


இசை - இன்றும் அன்றும்



பல்வேறு இசைக் கலைஞர்கள் பாடிய காணொளியை ஒரு தோழர் அனுப்பி வைத்தார். 



கேட்க நன்றாக இருந்த அக்காணொளியைப் பார்த்தவுடன் எண்பதுகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இன்னொரு பாடலை நினைவு படுத்தியது.


பார்த்து கேட்டு ரசியுங்கள்

Thursday, March 26, 2020

தின மலர் தலைப்புக்களை மறக்க முடியுமா?



தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் எண்ணற்ற மக்கள் போராட்டங்களை காவல்துறை தடியடி கொண்டு ஒடுக்கிய போது விதம் விதமான தலைப்புக்களைக் கொடுத்து தன் வக்கிரத்தை வெளிப்படுத்திய பத்திரிக்கை தின மலர்.

காவல்துறையின் வெறியாட்டங்களை அது என்றுமே நியாயப்படுத்தித்தான் எழுதியுள்ளது.

இன்று தினமலர் பத்திரிக்கை போடுபவர்களை எங்கோ போலீஸ் தாக்கிய உடன் மனித உரிமை வேடம் புனைகிறது. போலீஸ் லத்தி எதற்கு என்று தலைப்பு கொடுக்கிறது.

இதன் மூலம் தின மலர் திருந்தி விடும் என்று நினைத்தால் நாம்தான் ஏமாந்து போவோம்.

நாகத்தின் நச்சு என்றும் மாறாது.

நாளை போராடுபவர்கள் மீது காவல்துறையின் குண்டாந்தடி பாயும் போது அப்போதும் வக்கிரமான தலைப்புக்களோடு அதை கொண்டாடும்.


புளுகுவதற்கும் அளவில்லையா?

இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவிய ஒரு செய்தி கீழே.

"ஊரடங்கு உத்தரவை ரஷ்யாவில் அமலாக்க விளாடிமிர் புடீன் 500 சிங்கங்களையும் 800 புலிகளையும் அவிழ்த்து விட்டு விட்டார். அவை ரஷ்யாவின் சாலைகளில் திரிவதால் மக்கள் அஞ்சி வீட்டை விட்டு வெளியே வருவதில்லை"

இந்த செய்திக்கு ஆதாரமாக கீழே உள்ள படமும் பகிரப்பட்டது.


இது ரொம்பவே ஓவராக இருக்கே என்று தேடிப் பார்த்தால் 

ஆம். 

அது போலிச் செய்திதான்.

ரஷ்யாவில் இருப்பதே ஒட்டு மொத்தமாக 540 புலிகள்தான்.

ரஷ்யக்காடுகளில் சிங்கம் இருக்கிறதா என்று ஒரு மணி நேரம் இணையத்தில் தேடினாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சரி அந்த படம்?

தென் ஆப்பிரிக்க தலை நகர் ஜோஹனஸ்பர்க்கில் ஒரு மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பி வந்த சிங்கம் அது.

என்னத்தான் பொய் என்றாலும் ஒரு அளவு கிடையாதா?

இந்த செய்தி ஒரு உண்மையை உணர்த்தியது.
சங்கிகள் பேடர்னை வெளி நாடுகளிலும் பின் பற்றுகின்றார்கள் . . .

Wednesday, March 25, 2020

மோடியின் கட்டுப்பாடு முதல்வருக்கு பொருந்தாதா?



நேற்று இரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக மோடி அறிவித்தார். மதம் தொடர்பான எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி கிடையாது என்றார். மரணமடைந்தவர்களின் இறுதி நிகழ்ச்சியில் கூட இருபது பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பதும் ஒரு கட்டுப்பாடு. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் ஊரடங்கு அமலான அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் உ.பி முதல்வர் அயோத்தி செல்கிறார். தற்காலிக கொட்டகையில் இருந்த ராமர் சிலையை அங்கிருந்து எடுத்து வந்து இன்னொரு தற்காலிக இடத்தில் பூஜைகள் நடத்தி வைக்கிறார்கள்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் இந்த மத நிகழ்வை மொட்டைச் சாமியார் நடத்துவது சரியா? ஊரடங்கை அமலாக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என அனைவரும் உடன் இருக்கிறார்கள். 

நாட்டு மக்களுக்கு ஒரு சட்டம். மொட்டைச் சாமியாருக்கு மட்டும் வேறு சட்டமா?

ராமர் சிலையை உடன் இடம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் ராமர் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக துவக்கப் போகிறார்களா? ஊரடங்கு காலத்திலும் நடத்த வேண்டிய அத்தியாவசியப் பணியா இது? 

எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே இதை? இப்போது என்ன அவசரம்?

மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து விட்டு இப்போது அதை ஆளும் கட்சி முதல்வரே மீறுவது ஏன்?


21 நாட்கள் உயிரோடு இருக்க வேண்டும்



பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ‌

21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே!

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே, 

கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில்,  தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல்,  அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல்,  அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்களது உரையில்,  இத்தகைய நாடுதழுவிய முடக்கத்தால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட போகிற,  குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வேலை தேடி வந்த கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வுக்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீங்கள் அளிக்கவில்லை. அவர்கள் உணவையோ அல்லது 21 நாட்கள் தங்குவதற்கான இடத்தையோ உறுதி செய்யாமல் அதை பெறுவதற்காக அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் திணறி இன்று இரவு முதல் செய்வதறியாது கையறு நிலையில் நிற்கப் போகிறார்கள்.  அவர்கள் எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடைவார்கள்? 

அவர்கள் எப்படி இருபத்தொரு நாட்கள் பணமில்லாமல் அல்லது உணவுப் பொருட்கள் இல்லாமல் அல்லது காவல்துறையின் அராஜகத்தை எதிர்கொள்ளாமல்  உயிர் வாழ்வார்கள் என்று  நம்புகிறீர்கள்? 

அவர்கள் பாதுகாப்புக்காக ஓடத் துவங்கி இருக்கிறார்கள். யாரேனும் துரத்துவார்களோ,  பிடித்து விடுவார்களோ,  அடித்து விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர்கள் ஓடத் துவங்கி இருக்கிறார்கள். அனேகமாக நள்ளிரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். அவர்கள் தங்களது அடிப்படையான தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு வாய்ப்போ அல்லது பணமோ அல்லது எந்த விதமான உதவியும் அளிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள். 

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 21 நாள் முடக்கம் காரணமாக எல்லோருடைய வேலையும் பறிபோக இருக்கிறது. ஏற்கனவே துயரத்தின் உச்சத்தில் சிக்கியுள்ள அவர்களது வாழ்க்கை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வே துயரின் பிடியில் சிக்கியிருக்கிறது. அவர்களது கூலிக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் நோய் பதற்றம் ஏற்பட்டு இருக்கிற நிலையில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற சமூக தனிமைப்படுத்தல் என்பதன் அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எல்லாம் அமைந்துள்ளன. மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்து நாம் போராட வேண்டிய தருணத்தில்,  பொருத்தமற்ற இந்த அறிவிப்புகளை செய்திருக்கிறீர்கள்.

உங்களது உரையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினீர்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடிக்கடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அடிக்கடி பொருளாதாரத்தில் உச்ச கட்டத்தை எட்ட போவதாக பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே உங்களால் ஒதுக்க முடிந்திருக்கிறது. இந்தத் தொகை எந்த அளவிற்கு மிக மிக குறைவானது தெரியுமா?

ஒரு குடிமகனுக்கு வெறும் 112 ரூபாயைத் தான் நீங்கள் ஒதுக்கி இருக்கிறீர்கள்.  ஆனால் மிகப்பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் தெரியுமா? அவர்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக என்ற பெயரில் கிட்டத்தட்ட 7.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறீர்கள். 

இன்னும் சொல்வதானால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை மட்டும் அளித்து இருக்கிறீர்கள்

ஆனால் மிக மிக பயங்கரமான ஆபத்தான நோய் சூழலில் சிக்கியிருக்கிற நமது மக்களின் சுகாதாரத்திற்காக உண்மையில் இதைவிட மிக அதிகமாக அல்லவா செலவழித்து இருக்க வேண்டும்? 

ஏன் நீங்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு மிகப் பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து அந்த பணத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூட நாம் எச்சரிக்கப்பட்டோம். உலக  அளவில் கொரோனா பாதிப்பு என்பது தீவிரமாகப் போகிறது என்பது கண் முன்னால் தெரிந்தது. ஆனாலும் கூட உங்களது அரசாங்கம் தேசிய சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகவே குறைத்தது. குறிப்பாக நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவ மனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட வெறும் 0.1 சதவீதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

இன்னும் குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீம யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியாயமாக அது அதிகரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான முறையில்,  எளிதில் தொற்றக்கூடிய எளிதில் கண்டறிய கூடிய நோய்களுக்கான சுகாதாரம் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாமல் 2178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.

உண்மையைச் சொல்வதானால் உங்களது அரசாங்கம் இந்தியாவின் சுகாதார செலவினங்கள் மீது கிரிமினல் தனமான வெட்டுக்களை கடுமையான முறையில் அரங்கேற்றியது.  இது இன்றைக்கு இந்தியாவை மிகப் பெரும் ஆபத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 

உலக அளவில் கொரோனா நோய் பரவத் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் இந்தியாவுக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான கருவிகளைக் கூட குறைந்த விலையில் நாடு முழுவதும் சப்ளை செய்ய முடியவில்லை. பரிசோதனை கருவிகள் மட்டுமல்ல,  அதற்கான நடைமுறைகள் அல்லது முக கவசம் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைக் கூட அரசு உணர்ந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்தகைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதைக் கூட உணராமல், அவை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட நிறுத்தாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காமல் உங்களது அரசாங்கம் அலட்சியம் செய்து இருக்கிறது என்பது மிகமிக அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும். 

உங்களது உரையில் மாநில அரசுகள் முழுக்க முழுக்க சுகாதார நடவடிக்கைகளில் மட்டுமே அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறீர்கள்.  ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்தில் உங்களது கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதையெல்லாம் மறந்து,  மத்தியப் பிரதேசத்தில் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்து, கவிழ்த்து இருக்கிற ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருந்தது.  இந்தியாவின் நாடாளுமன்றமும்,  நீங்கள் என்ன தேவை என்று கருதுகிறார்களோ அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 

ஆனால் மறுபுறத்தில் கேரளாவில் ஆட்சி நடத்தும் இடது ஜனநாயக அரசாங்கமும் நாட்டில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் வேறுசில மாநிலங்களும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை செய்திருக்கின்றன. குறிப்பாக பாதித்தவர்களை பரிசோதிப்பது, அவர்களோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்ளாக்குவது,  பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது,  அதற்கு மிக அதிகபட்சமான முக்கியத்துவம் தருவது என்கிற முறையில் மட்டும் அல்லாமல், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய பொருத்தமான பொருளாதார உதவிகளை அறிவித்திருப்பது என்ற முறையில் மிகச் சிறந்த பணியாற்றி இருக்கின்றன.  

இவை எதையும் நீங்கள் குறிப்பிடவும் அங்கீகரிக்கவும் செய்யவில்லை.   அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை,  அவர்களது உணர்வுப்பூர்வமான பங்களிப்பை, அவர்களது சக்தியை, அவர்களது நிர்வாகத் திறமையை நீங்கள் ஒரு துளி அளவு கூட அங்கீகரிக்கவில்லை.

இந்த மிக மிகக் கடினமான தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிகத்தெளிவான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இந்த கடுமையான தருணத்தில் இருபத்தொரு நாட்கள் நாடே மூடப்படுகிற சூழலில் பொருளாதார உதவிகளைப் பற்றியும் அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கான சோதனை, பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகள் ஆகிய இரண்டு முனைகளிலும் நீங்கள் சரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இரண்டுமே மிக முக்கியமானவை.

இவையிரண்டும் தாமதப்படுத்தாமல் செய்யப்பட்டால் தான் மிகப் பெரும் கொள்ளை நோயை நாம் தோற்கடிக்க முடியும்.

கொரோனா  நோய்க்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தில் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

ஆனால் உங்களது அரசாங்கம் அனைத்தையுமே குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்களை அனைத்து துன்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எந்தவிதமான உறுதி மொழியையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே நமது மக்கள் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

சீத்தாராம் யெச்சூரி
பொதுச்செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்

Tuesday, March 24, 2020

வெறும் சினிமா சீன்தான் . . .



மேலே உள்ளது விஜய் நடித்து விக்கிரமன் இயக்கத்தில் வந்த "பூவே உனக்காக" படத்தின் ஒரு காட்சியும் அக்காட்சிக்கான ஒரிஜினல் வசனம் மட்டுமே . . .

எட்டு மணிக்கு உரையாற்றப் போகும் வேறு யாரையும் குறிப்பது அல்ல.


அர்த்தமற்ற கொண்டாட்டம், கோயம்பேடு பதற்றம்

கீழே உள்ள படங்கள் நேற்றைய முன் தினம் கொரோனாவை முறியடித்த வெற்றியை சங்கிகள் கொண்டாடி மகிழ்ந்த தருணத்தின் சில துளிகள். மக்கள் ஊரடங்கு என்பதை மோடி வகையறாக்களே அர்த்தமற்றதாக மாற்றினார்கள்.






சங்கிகள் தாங்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள். இந்த மூடர் கூட பட்டியலில் முதலிடம் முன்னாள் காக்கிச்சட்டை கிரண் பேடி அவர்களுக்கே (சூரியன் ஒலி- ஓம் -  நாசா- டுபாக்கூர் ! நினைவுக்கு வருகிறது) முதலிடம்.

வெற்று விளம்பரம் என்பதைத் தாண்டி இந்த கொண்டாட்டங்களில் ஏதாவது உள்ளதா?

அந்த கொண்டாட்டங்கள் மூலம் எவ்வளவு பேருக்கு புதிதாக பரவியுதோ?

இந்த லட்சணத்தில் இதை ஒரு சாதனையாக வேறு சொல்கிறார்கள்.



கீழேயுள்ள படம் நேற்றைய கோயம்பேடு காட்சி. இது கவலையைத் தருகிறது. 



இன்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு, மாவட்ட எல்லைகள் மூடல், அனைத்து போக்குவரத்து ரத்து போன்ற அறிவிப்புக்கள் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எலியை பிடிக்க வேண்டுமானால் அது செல்லும் வழியை அடைக்க வேண்டும் என்று மூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன் ஆணவமாக சொல்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் ஒரு அரசு பதற்றத்தை உருவாக்கலாமா?


Monday, March 23, 2020

ஏன் கைவிட்டீர் பரமாத்மாவே?


மேலேயுள்ள படத்திற்கும் அதில் உள்ள கேள்விக்குமான விளக்கம் கீழே உள்ள இரண்டு செய்திகளைப் பார்த்தால் தெரியும்.




இந்த நாளில், இந்த நாளில்தான் . ..


தேசத்தின் விடுதலைக்காக புரட்சிப்பாதையை தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நடுங்க வைத்த புரட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. . .

கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் மரணத்திற்கு அஞ்சாமல் மன் உறுதியோடு வாழ்ந்தவர்கள். என்றும் நமக்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.

புரட்சியாளர்களுக்கு வீர வணக்கம் . . .

பிகு : வழக்கமாக காதலர் தினத்தன்று "காதலர் தினத்தை கொண்டாடுபவர்களே, இன்றுதான் பகத் சிங் தூக்கிலடப்பட்டார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று சிலர் பதிவிடுவார்கள். 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடைய உண்மையான நினைவு நாள் மார்ச் 23 தான் என்று நாம் விளக்கினாலும் அடுத்த வருடமும் அதையே செய்வார்கள்.

ஆனால் மார்ச் 23 அன்றோ பகத்சிங்கை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

ஆமாம்

அவர்கள் நோக்கம் பகத்சிங்கை நினைவு கொள்வது அல்ல.
காதலர் தினத்தை சிறுமைப்படுத்துவது. 

Sunday, March 22, 2020

கிழிக்கப்படும் ரஞ்சன் கோகய்



பேக்கரி டீலிங்கில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயை இந்த பேட்டியில் நார் நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ளார் தோழர் சவுக்கு சங்கர். 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமற்ற சங்கிகள் இதையும் துடைத்து விட்டு போய் விடுவார்கள் என்பது வேறு விஷயம்.





ஊரடங்கு ஸ்பெஷல் வெறித்தனம்



ஊரடங்கு நாளில் 

"பிகில்" திரைப்படத்தின்

"வெறித்தனம்" பாடல்

என் மகனின் கைவண்ணத்தில் வயலினில்





Saturday, March 21, 2020

குற்றவாளிகளை விட மோசமான . . .


அதனால் என்ன வேண்டுமானாலும் ?????



நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. மரண தண்டனை தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. பொதுவாக மரண தண்டனை அவசியமில்லை என்ற கருத்து இருந்தாலும் பாலியல் வன் கொடுமை வழக்குகளில் அதுவும் நிர்பயா போன்ற, பெரம்பலூர் நந்தினி போன்ற எண்ணற்ற வழக்குகளில் மரண தண்டனை அளிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த வழக்குகளில் குற்றவாளிகள் வெளிப்படுத்திய கொடூரம் அவ்வளவு மோசமானது. இந்த வழக்கின் ஒரு குற்றவாளி தற்கொலை செய்து கொள்ள, பதினெட்டு வயது நிரம்பவில்லை என்பதால் இன்னொருவன் விடுதலையாகி விட்டான்.

பாலியல் குற்றங்களை தடுக்க ஏராளமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பெண்களை சக மனுசியாக மதிக்க குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக முக்கியமான நடவடிக்கை.

இந்த பதிவில் நான் சொல்ல விரும்புவது வேறு ஒரு விஷயம்

தூக்கு தண்டனையை தவிர்க்க குற்றவாளிகளின் வழக்கறிஞர் எல்லா உத்திகளையும் பயன்படுத்தினார். அவரது எல்லா முயற்சிகளும் தோற்றுப் போன பின்பு அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறார்.

அந்தப் பெண் ஏன் இரவில் வெளியே வர வேண்டும்? ஏன் ஆண் நண்பரோடு வெளியே வர வேண்டும். அதனால்தான் இந்த பிரச்சினை என்று கூசாமல் பேசினார்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவராக இருப்பினும் அவரது விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று சட்டம் இருப்பது அந்த வக்கீலுக்கு தெரியாது போல! No Means No என்பது தெரியாதா?

இரவில் ஆண் நண்பரோடு வந்தால் அதற்காக இவரது கஸ்டமர்ஸ் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

தறுதலைகளுக்காக வாதாடி விட்டு பாதிக்கப்பட்டவர் மீது பழி போடுவது படு கேவலம். குற்றவாளிகளை விட பெரிய அயோக்கியனாக அவரது வக்கீல் இருக்கிறார்.