Showing posts with label கொல்கத்தா. Show all posts
Showing posts with label கொல்கத்தா. Show all posts

Monday, March 30, 2026

நினைவுக்கு வந்த சண்டை

 நேற்று  நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக  30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.

இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை. 

இதோ பதிவுக்கு செல்கிறேன்.


என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?





ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.  நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே  ஒரு போட்டி இருந்தது.

அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை  வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.

அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது

“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்?  கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”

அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.

அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி

கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.

அது ஷாருக்கானின் அணி.

அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ்  அம்பானியின் அணி.

முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பின் குறிப்பு

மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.

பிகு: இன்னொரு கிரிக்கெட் பதிவு நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ளது. முடிந்தால் மாலையில் இல்லை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, October 2, 2025

எல்.ஐ.சி யின் கம்ப்யூட்டர் துர்கா

 


 நான் எழுதிய "முற்றுகை" நாவலின் முக்கியமான அத்தியாயம் கீழே உள்ளது.  அறுபதுகளின் இறுதியில்  இயந்திரமயமாக்கலுக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய "இலாகோ முற்றுகை" போராட்டம் சங்கத்தின் வரலாற்றில் ஒரு வெற்றி அத்தியாயம். அப்போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு கட்டம்தான் கீழே உள்ளது. 

முதலில் உள்ள படம் "முற்றுகை" நூலின் அட்டைப்படம்.  அதில் உள்ளதுதான் "இலாகோ" கட்டிடத்தின் இன்றைய நிலை. அடுத்த படத்தில் உள்ள நுழைவாயிலில்தான் "துர்கா பூஜை" கொண்டாடப் பட்டது. 

மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை இன்று நிறைவடையும் நாளான இன்று அந்த அத்தியாயத்தை பகிர்ந்து கொள்கிறேன். 






“இலாகோ முற்றுகை” யை உடைப்பதற்கான சரியான தருணம் வந்துள்ளதாக நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்து சேர்ந்தது. துர்கா பூஜை தொடங்கி இருந்தது. பெங்காலிகளின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகை துர்கா பூஜை. காளிகத் காளி, தக்னேஷ்வர் துர்கா போன்றவர்களை பிரதான கடவுளாக வழிபடுபவர்களுக்கு துர்கா பூஜைதான் பிரதானமான பண்டிகை. அந்தந்த பகுதிகளில் பந்தல் அமைத்து களி மண்ணால் உருவாக்கப்பட்ட துர்கை சிலைகளுக்கு வண்ணம் பூசி பத்து நாட்கள் பூஜை நடத்தி பிறகு கங்கையில் கரைப்பார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசம் மட்டுமல்ல, மத வேறுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடும் திருவிழாவும் கூட.

 என்னதான் போராட்டம் என்றாலும் துர்கா பூஜாவை குடும்பத்தோடு கொண்டாடத்தான் ஊழியர்கள் விரும்புவார்கள். அதனால் இந்த சமயத்தில் முற்றுகைக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே சரியான தருணம் பார்த்து கம்ப்யூட்டரை வில்லியம்ஸ் கோட்டையிலிருந்து வெளியே கொண்டு வந்து இலாகோ கட்டிடத்திற்குள் எடுத்துச் சென்று விடுவோம் என்பதுதான் அந்த திட்டம்.

 உண்மையிலேயே இது தீவிரமான பிரச்சினைதான். ஊழியர்களுடைய உணர்வுகளையும் புறக்கணிக்க முடியாது. அதே சமயம் இத்தனை நாள் உறுதியாக இருந்து விட்டு பிரச்சினை உச்சகட்டத்தை நெருங்கிய நிலையில் அதை கோட்டை விட்டு விடவும் முடியாது.

 என்ன செய்வது?

 ஏதாவது செய்தாக வேண்டுமே!

 முதல் வருடம் கால்டெக்ஸ் கம்பெனியில் நடந்த சம்பவம் வேறு நினைவில் வந்து கொண்டே இருந்தது.

 கால்டெக்ஸ் ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனம். அங்கே ஊதிய உயர்வுக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதற்கான அறைகூவல் கொடுத்திருந்தார்கள்.

 அப்போது துர்கா பூஜைக் காலமும் வந்தது. பண்டிக்கைக்கான நான்கு நாட்கள் விடுமுறை அளித்திருந்தார்கள். விடுமுறை முடிந்து அலுவலகம் வந்த ஊழியர்கள் தங்கள் வாழ்நாளில் காணாத அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள்.

 ஆம்

 அவர்களின் அலுவகத்தைக் காணவில்லை.

 விடுமுறைக் காலத்தில் கால்டெக்ஸ் நிர்வாகம் தங்கள் அலுவலகத்தை சுத்தமாக காலி செய்து கொண்டு பம்பாய்க்கு போயிருந்தார்கள். மேலாளர் அறைகள், ஊழியர்களின் இருக்கைகள் என எல்லாவற்றையுமே எடுத்துப் போயிருந்தார்கள். ஊழியர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, தாங்கள் பணியாற்றிய மேஜையில் வைத்திருந்த சொந்த உடமைகளைக் கூட இழந்திருந்தார்கள்.

 கால்டெக்ஸ் நிலைமை நிச்சயமாக இங்கே வரக்கூடாது.

 அதற்கு?  

 போராட்டமும் தொடர வேண்டும். ஊழியர்களின் பண்டிகைக் கொண்டாட்டமும் நடைபெற வேண்டும்.

 பரேஷ்பாபு ஒரு அருமையான யோசனையைச் சொன்னார்.

 “நாம் ஏன் இங்கேயே துர்கா பூஜாவை கொண்டாடக் கூடாது?”

 “ஒரு தொழிற்சங்கம் இது போல ஒரு மதத்தின் பண்டிகையை கொண்டாடுவது முறையாக இருக்குமா?”

 என்ற கேள்வியும் உடன் வந்தது.

 விவாதம் நடந்தது. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மதத்தின் பண்டிகை என்பதைக் கடந்து மக்களின் பண்டிகையாக மாறி விட்டது. துர்கா பூஜை பந்தல்களுக்கு அனைத்து மதத்தினரும் வருவதும் காணிக்கை செலுத்துவதும் நடைமுறையாகவே மாறி விட்டது. அதனால் இங்கே துர்கா பூஜையைக் கொண்டாடுவதில் தவறில்லை. அதே நேரம் இலாகோ கட்டிடத்தின் பின் வாயில் வழியாகத்தான் கம்ப்யூட்டரை உள்ளே கொண்டு செல்ல முடியும். அந்த இடத்தில் நாம் துர்கா சிலையை வைத்து விட்டால் அதனை அகற்றி விட்டு கம்ப்யூட்டரை எடுத்துச் செல்லும் தைரியமும் நிர்வாகத்திற்கு வராது. அப்படி நிர்வாகம் முரட்டுத்தனமாக யோசித்தாலும் பிரச்சினை வரும் என்பதால் ஆளுனர் பயப்படுவார். அதனால் நாம் இங்கே துர்கா பூஜை கொண்டாடுகிறோம் என்று சரோஜ்தா அறிவித்தார்.

 முடிவெடுத்தாகி விட்டது. துர்காதேவியின் சிலைக்கு எங்கே செல்வது? சிலை வாங்க பணம் வேண்டுமே! போராட்டப் பந்தலில் இருப்பவர்களிடமே வசூல் செய்யப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய் உடனடியாக வசூலானது. யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை வருமான வரித்துறை விசாரணைக்கு வந்தால் காண்பிக்க தயாராக இருப்போம் என்று போஸ் பாபு கிண்டலடித்தார்.

 ஆக பணம் தயார். சிலைகள் வாங்க யார் செல்வது? நிர்மல், அசோக், அமிதவ், குனின் குழு நாங்கள் போகிறோம் என்று புறப்பட்டார்கள். குமர்துளி என்றொரு பகுதி வடக்கு கல்கத்தாவில் இருந்தது. அங்கேதான் துர்காதேவி சிலைகளை செய்யும் பிரசித்தி பெற்ற மண்பாண்டக் கலைஞர்கள் இருந்தார்கள். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நால்வரும் புறப்பட்டார்கள். போனவர்கள் போனவர்களே இரவு வரை அவர்கள் திரும்பவில்லை. இங்கே பந்தலில் உள்ளவர்களுக்கு பதட்டம். என்னாயிருக்குமோ? மோட்டார் சைக்கிளில் போனார்களே, பாதுகாப்பாக போயிருப்பார்களா என்று கவலைப்பட்டார்கள். யாராவது குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் விபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற சிந்தனைதானே முதலில் வருகிறது!

 இரவு பத்து மணிக்கு அவர்கள் சிலைகளோடு வந்து சேர்ந்தார்கள்.கடைசி நிமிடம் என்பதால் மிகவும் அலைய வேண்டியுருந்தது.  துர்கா தேவி, சிவன், லட்சுமி, சரஸ்வதி, வினாயகர் சிலைகள் எல்லாம் வாங்கி ஒரு வண்டியில் ஏற்றி கொண்டு வந்தார்கள். கார்த்திகேயன் சிலை ம்ட்டும் கிடைக்காததால் இன்னொரு சரஸ்வதி சிலை வாங்கி அதையே கொஞ்சம் மாற்றி கொண்டு வருவதற்கு கால தாமதம் ஆனது என்றார்கள். சிலைகள் வந்ததை விட அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததே அந்த நிமிடத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.

 சிலைகள் வந்தாகி விட்டது. ஒரு சின்ன பந்தல் அமைத்து இலாகோ கட்டிட வாசலில் நிறுவியாகி விட்டது. அடுத்து இன்னொரு கேள்வி வந்தது. யார் பூஜை செய்வது? எல்லோரும் முழித்தார்கள். பக்கத்தில் இருந்த பழக்கடை வியாபாரி நான் செய்கிறேன் என்று முன் வந்தார். பத்து நாட்களும் அமோகமாக கழிந்தது. வழக்கத்தை விட அதிகமானவர்கள் முற்றுகையில் கலந்து கொண்டார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பல ஊழியர்கள் முற்றுகையிலும் பங்கேற்றார். சங்கம் அமைத்த துர்கா தேவியையும் வழிபட்டு சென்றார்கள். ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை “கம்ப்யூட்டர் துர்கா” என்று தலைப்பிட்டு கட்டுரையே வெளியிட்டது.

 

Wednesday, December 25, 2024

கொல்கத்தா மாநகரம் போல . . .

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்ட முகநூல் பதிவை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.


கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸை கொண்டாட முஸ்லீம் சமையல்காரர்  தயாரித்த கேக்கை வாங்க யூதர் ஒருவரின் பேக்கரியில் இந்துக்கள் காத்திருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா. 

கொல்கத்தா மக்கள் போல இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாறினால் இந்தியாவில் பாஜகவிற்கு இடமே இருக்காது. 

Saturday, January 14, 2023

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாடு இம்மாதம் எட்டாம் நாள் முதல் பதினோராம் நாள் வரை கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா நகரெங்கும் பெரிய பேனர்களில் மம்தாவும் சிறிய பேனர்களில் மோடியும் தோன்றி "ஜனநாயகத்தின் தாயகம்" இந்தியாவிற்கு  ஜி 20 தலைமை என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஜனநாயகத்தின் தாயகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

மாநாட்டு நடத்துவதற்காக ஆறு மாதம் முன்பே கொல்கத்தா எகோபார்க்கில் உள்ள மிஷ்டிகா அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டு முழு கட்டணமும் செலுத்தப் பட்டிருந்தது.

அதற்கான அனுமதியை மம்தா அரசு டிசம்பர் 15ம் தேதி ரத்து செய்கிறது.

1500 பேர் பங்கேற்பதற்கான மாற்று அரங்கை கண்டுபிடிப்பதற்கான அவகாசம் வெறும் 23 நாட்கள்தான்.

மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்பது தீதியின் எண்ணம்.

அந்த எண்ணம் பலித்ததா?

யாரிடம் சவால் விடுகிறார் அவர்!

எங்களிடம் உங்கள் குறுக்கு புத்தியை காண்பித்தால் என்ன ஆகும்?

கொல்கத்தா தோழர்கள் பதில் சொன்னார்கள்.

எகோபார்க் அமைந்திருந்த பகுதியிலேயே ஜோதிபாசு ஆய்வு மையம் கட்ட மார்க்சிஸ்ட் கட்சி வாங்கியிருந்த இடம் இருந்தது

புதர் மண்டிக் கிடந்த பகுதியாய் இருந்த அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். மாநாட்டு அரங்கம், சமையலறை, உணவுக் கூடம், கழிவறைகள் என பிரம்மாண்டமாய் ஒரு மாநாட்டு அரங்கம் பதினைந்து நாட்களுக்குள் உருவானது. 

மாநாட்டை தடுத்து நிறுத்த முயன்ற சதிகார படுபாவிகள் வழக்கம் போல தோற்று ஓடினார்கள்.

தோற்றதில்லை, தோற்றதில்லை, தொழிற்சங்கம் தோற்றதில்லை.

சதிகாரர்களின் முகத்தில் கரியை பூசி பிரம்மாண்டமாக நடந்த மாநாட்டின் புகைப்ப்டங்கள் இங்கே.





















பிகு: இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.