Saturday, August 1, 2020

படைப்பாளிக்கு சிறந்த மரியாதை.




ஒரு படைப்பாளியை அவரது படைப்பின் மூலம் நினைவு கூர்வதை விட மிகச் சிறந்த இறுதி மரியாதை வேறு என்னவாக இருக்க முடியும்?

நேற்று மறைந்த எழுத்தாளர் திரு சா.கந்தசாமி அவர்களுக்கு அப்படி ஒரு சிறந்த அஞ்சலியை பதிவு செய்துள்ளார் எங்கள் மதுரைத் தோழர் அ.கோவிந்தராஜன்.

திரு சா.கந்தசாமி அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

*நாளொரு கேள்வி: 31.07.2020*

இன்று நம்மோடு  தோழர் *.கோவிந்தராஜன்* (மதுரை). 
**********************************

இன்று காலையில் மறைவெய்திய தமிழ் எழுத்துலக ஆளுமை *திரு சா.கந்தசாமி அவர்களுக்கு அஞ்சலியாக... வாழ்க்கை எழுப்பும் நிறைய கேள்விகளுக்கு எழுத்தின் வாயிலாய் விடை பகிர்ந்த ஒப்பற்ற இலக்கிய ஆளுமைக்கு கண்ணீர் மல்க*

*கேள்வி*

நம்மை விட்டு இன்று மறைந்துள்ள தமிழ் இலக்கிய ஆளுமை சா. கந்தசாமி அவர்களின் படைப்புகளில் உங்கள் மனதில் நின்ற ஒன்றை...

*.கோவிந்தராஜன்*

60 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய ஓர் படைப்பை 2020 ல் படித்தேன். எழுத்துகளுக்கு ஏது வயது. 80 வயதில் மறைந்து விட்ட அவரின் எழுத்து இளமையாய் என் மனதில் நிற்கிறது. அவர் எழுத்துக்கள் சாவை வென்றவை



சாகித்திய அகாதெமி விருது பெற்ற *சா.கந்தசாமி* அவர்களால் எழுதப்பட்ட நாவல் *"சாயாவனம்".* இந்நாவல் 1960 களில் எழுதப்பட்டதுசிதம்பரம் மற்றும் சிவனாண்டி தேவர் என்ற இரு கதாபாத்திரம் தான் நாவல் முழுக்க நிறைந்திருப்பார்கள். சாயாவனம் எனும் கிராமத்தில் சர்க்கரை ஆலை ஒன்றை உருவாக்க சிதம்பரம் முனைகிறான். இதற்காக அங்கு உள்ள வனத்தை அழிக்க முயல்கிறான். அந்த வனத்தோடும் கிராமத்தோடும் ஒன்றி தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் சிவனாண்டி தேவருக்கு வனத்தை அழிப்பது பிடிக்கவில்லை. அதனால் அவரை தன் வழிக்கு கொண்டு வந்து தனது பணியை துவக்கும் சிதம்பரம் இறுதியில் சர்க்கரை ஆலையை நிறுவி வெற்றி பெறுகிறான். இது தான் நாவலின் கரு.  

இலக்கிய நயத்தோடும் மிகை உணர்ச்சி இல்லாமல் மிகவும் யதார்த்தமாக ஒவ்வொரு நிகழ்வையும் ஆசிரியர் விவரித்திருப்பார்

இந்நாவலை தொழிலாளர் இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். ஏன்?

மேலே சொன்ன கருவை வைத்து *நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு, அதிலிருந்து முதலாளிய சமூக அமைப்பிற்கு மாறிச் செல்வதை* மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்

சாதியும் வர்க்கமும் அண்டை வீட்டுக்காரர்கள் என்பார் *அண்ணல் அம்பேத்கர்.* இந்தியச் சமூகத்தில் வர்க்கமும் சாதியும் பின்னி பிணைந்துள்ளது என்கிறோம்.

 தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என இந்திய கிராம முறையை மதிப்பீடு செய்கிறார் *காரல் மார்க்ஸ்.*  இதையே *ஆசிய பொருளுற்பத்தி முறை* ( Asian mode of production) என்றும் கூறுகிறார் மார்க்ஸ்.

இவை குறித்த சித்திரத்தை எல்லாம் இலக்கியம் வாயிலாக உருவாக்கி விட இயலுமா? என்றால் இயலும் என்ற நம்பிக்கையை சாயாவனம் அளிக்கிறது. கதை நடைபெறும் காலம் சுதந்திரத்திற்கு முந்தையது. அநேகமாக, 1920 அல்லது 1930 ஆக இருக்கலாம்

இது அன்றைய கிராமம். அவரின் படைப்பு, அன்று கிராமப் புற உடமை வர்க்கத்தின் சாதிய உள்ளடக்கத்தை சொல்லிச் செல்கிற பாங்கு அருமை. *பாத்திரங்களின் பெயர்களோடு ஒட்டியுள்ள சாதிய அடைமொழிகள் அச் செய்திகளை நமக்கு இயல்பாக பகிர்கின்றன.* அன்று கிராம நில உடமை சாதிய அடுக்கின் உச்சத்தில் இருந்த சமுகக் குழுக்களின் கைகளில் இருந்தது.

இப்படி சாதி அடுக்கிற்கு ஏதுவாகவும், செல்வச் செழிப்பின் அடுக்குகளுக்கு தோதாகவும் புளிய மரங்கள் அடையாளம் காணப்பட்டு அதிலிருந்து  புளி எடுக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பப்படும். *புளி என்பது ஒரு அடையாளம் மட்டுமே. இது தான் சமூக நியதி. இந்நியதி தான் சமூக வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் வியாபித்திருந்தது.* இத்தகு சாதிய சமூகத்தை மிக அழகாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது நாவல்.

முதலாளியத்துக்கும்  நிலப்பிரபுத்துவத்துக்கும் நடக்கின்ற போராட்டத்தை  கவித்துவத்தோடு குறியீடு மூலம் நாவல் விவரிக்கிறது. சர்க்கரை ஆலை அமைக்க காட்டை சிதம்பரம் அழிப்பான். அதை பின்வருமாறு விவரிக்கிறார்

 *"காட்டாமணக்கை விட, ஆடாதொடையை விட, குத்துக் குத்தாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் வளரும் கள்ளியையும் சப்பாத்தியையும் விட, காரை தான் வனம் முழுவதும் வியாபித்திருந்தது. ஒவ்வொரு மரத்தின் கீழும் காரை பெருகி வளர்ந்து, தழைத்துப் படர்ந்திருந்தது. கொடி மாதிரி ஒரு முடிவின்றி வனம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து விட்டது. இயற்கையின் அதிசயப் போக்கு அது. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி வாகை சூடிய காரையைச் சற்றே வளைத்துச் சின்ன முட்கள் கீறிக் கிழிக்க வெட்டி சாய்த்துக் கொண்டு போனான் சிதம்பரம். வர வரச் செடி கொடிகளோடு போராடுவது அவனுக்கு எளிமையாகிக் கொண்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவன் தெரிந்து கொண்டு விட்டான். எப்படி வளைத்து பிடித்தால் ஒரே வெட்டில் காரை சாயும் என்பது அத்துபடியாகி விட்டது. ஆடாதொடையை வெட்டுவது மாதிரி ஒரு வித முயற்சியுமின்றிக் காரையை வெட்டி சாய்த்தான். அவனுடைய சக்தியைப் பலவீனப்படுத்திக்  கொண்டிருந்த காரை, படிப்படியாக அதே கர்வத்தோடும் பெருமிதத்தோடும் சரணடையத் தொடங்கியது."*

சர்க்கரை ஆலையை துவங்க வந்த *சிதம்பரத்தை முதலாளியத்தின் அடையாளமாகவும், மரம், செடி, கொடி தழைத்து இருக்கும் வனத்தை நிலப்பிரபுத்துவத்தின் அடையாளமாகவும்* தான் நாம் இங்கு காண வேண்டியுள்ளது.

முதலாளியம் வெற்றி பெற்றாலும் சாதிய சமூகத்தோடு, நிலபிரபுத்துவத்தோடு எப்படி  சமரசம் செய்துக் கொள்கிறது என்பதை நாவலின் இறுதிப் பகுதி சுட்டிக் காட்டும்.

சிதம்பரம் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியே கருப்பஞ்சாறு கொடுத்தனுப்பினான். *சாதி அடுக்குகளில் உயரே உள்ளவர்கள் வீடுகளுக்கு சிதம்பரம் தானே நேரில் சென்று கருப்பஞ்சாறு கொடுப்பான்.* அன்றைய யதார்த்தங்களை அவர் பகிரும் போது இந்திய சமூகத்தின் தனித்த சவால்களை நாம் உணர முடியும். கிராமங்கள் இன்று மாறவில்லை என்று நாம் சொல்ல முடியாது. சா. கந்தசாமி இந்த விவரிப்பை வாசிக்கும் போது, 2008 தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வில் வெளிப்பட்ட ஓர் தீண்டாமை வடிவம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஒரு கிராமத்தில் தபால் காரர் அருந்ததியர் காலனிக்கு மட்டும் வீடு தேடி கடிதங்களை சேர்க்க மாட்டார், சொல்லிவிடுவார், வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே. எழுத்தாளன் படைப்பு *காலங்களுக்கு இடையில் போடுகிற முடிச்சு ஆற்றலின், ஆழத்தின் வெளிப்பாடு.*

அன்றைய காலக்கட்டத்தில்சமூக அமைப்பில் *பெண்களின் நிலை* என்னவாக இருந்தது என்பது குறித்தும் இந்நாவல் விவரித்துள்ளது

பண்ட மாற்று முறையிலிருந்து (barter system) பணப் புழக்க முறைக்கு சமூகத்தை மாற்றிட, நெல்லும், வாழையும் பயிராகும் நிலத்தில் கரும்பை பயிரிடச் செய்திட மேற்கொள்ளும் உத்திகள், ஆலைக்கான எந்திரங்களை, உற்பத்திக்கான கரும்பை, உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை கொண்டு செல்லவும், கொண்டு வரவும் தேவைப்படும் சாலை, பாலம் குறித்தெல்லாம் எவ்வாறு சிந்தனை உருவாகிறது? என்பதை எல்லாம் கதையின் போக்கிலேயே நாம் காணலாம். *ஒரு நாவல் இவ்வளவு நெருக்கமாக சமுக அமைப்பின் தன்மையை, அதன் அரசியலை, இலக்கிய நயத்தோடு காட்சிப்படுத்துவதை உணர முடிந்தது.* ஒட்டு மொத்தத்தில், இந்திய சமூகம் ஒரு சில வரையறைகளை புரிந்து கொள்வதற்கு இந்நாவல் உதவி செய்கின்றது.

பொதுவாக, ஒரு நாவலை வாசிப்பது என்பது நாவலின் கரு எடுத்தாளப்படும் காலத்தை வாசிப்பது; அந்த காலக்கட்டத்தின் சமூகத்தை வாசிப்பது. ஒரு சில நாவல்கள் மட்டும் காலத்தைக் கடந்தும் சமூகத்திற்கான பயன்பாட்டை கோரி நிலைத்து நிற்கும். இதை சிறப்பாக நிறைவு செய்துள்ளது "சாயாவனம்" நாவல்.

*சா. கந்தசாமி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஆனால் அவரின் உயிர்ப்பான எழுத்துக்கள் என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.*

*******************
*செவ்வானம்*


1 comment:

  1. Thanks to comrade for posting this.Had an idea and review about the novel.Also about the writer.

    ReplyDelete