Showing posts with label நடைப்பயணம். Show all posts
Showing posts with label நடைப்பயணம். Show all posts

Thursday, June 22, 2017

பதில் சொல்லுங்கள் மிஸ்டர் அடிமை (எ.பாடி) பழனிச்சாமி





சமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய் மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின் துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.

இந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம்!

கடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் தொடங்கி நேற்று மாலை தாம்பரம் வரை நடைபெற்ற  பயணத்தில் எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா? ஏதேனும் மோதல் உண்டா? பயணக் குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா? பெண்கள் முகம் கோண நடந்து கொண்டார்களா?ஆபாசமாய் பேசினார்களா? வழியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்களா? பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா?

என்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி?

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச் சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே  ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள். சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில்  உங்களிடம்தான் வருவதாக  இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே உள்ளீர்கள்?

சேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா, சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்?

ஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக் கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா? உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய தீய சக்தியின் உத்தரவா?

கூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ? நீங்கள் பதவி பெற்றதற்கும் உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும் ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ?

சொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ?

உங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில் நடைபோட அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள் ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால் நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி தடுக்க முடிக்கிறது? கைது செய்ய முடிகிறது?

அடிமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.

Saturday, June 17, 2017

பெருமிதமும் குற்ற உணர்வும்




ஜாதிய ஆணவப் படுகொலைகளை நிறுத்த தனிச்சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் எங்கள் கோட்டத்தின் சார்பிலும் பங்கேற்கவுள்ளது குறித்து முன்னரே எழுதியிருந்தேன்.

அது தொடர்பாக  எழுதிய சுற்றறிக்கையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

முக்கியமானதொரு இயக்கத்தில் எங்கள் தோழர்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டது குறித்து பெருமிதமாகவும் உள்ளது. அன்றைய இருபத்தி ஆறு கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் என்னால் அதிகபட்சம் சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் வரைக்குமே நடக்க முடிந்தது. மற்ற சமயங்களில் இரு சக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து கொண்டிருந்தேன். சமீப காலத்தில் நான் அதிகமாக நடந்தது இதுதான் என்றாலும் முழுமையாக நடக்க முடியாமல் போனது குற்ற உணர்வைத் தரத்தான் செய்கிறது. 

அன்றைய நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே உள்ளது. மேலே உள்ள புகைப்படத்தில் எங்கள் கோட்டத் தோழர்களுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ், எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் ஆகியோர் உள்ளனர்.









 நடைப்பயணம் 15,06.2017 அன்று விழுப்புரம் வந்த போது எங்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணக்குழுவிற்காக காத்திருந்த தோழர்கள் கீழே.



நடைப்பயணம் நேற்று திண்டிவனம் வந்த போது எங்கள் திண்டிவனம் கிளைச்சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் கீழே உள்ளது.











 


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 25/17                                                                                    15.06.2017
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,

நீண்ட பயணத்தில் சிறிய பகுதியாய், கோட்டத்தின் பெருமிதமாய்

மனம் ஒப்பி திருமணம் செய்து கொள்ள விழைபவர்களை ஜாதியின் பெயரால் ஆணவப் படுகொலை செய்யும் அராஜகத்தைக் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த 09.06.2017 அன்று ஒரு மாபெரும் நடைப்பயணத்தை சேலம் நகரில் தொடங்கியது. வரும் 23.06.2017 அன்று சென்னையில் நிறைவடையவுள்ள இந்த மகத்தான இயக்கத்தில் நமது கோட்டத்தின் சார்பிலும் பங்கேற்றுக் கொண்டோம்.

13.06.2017 அன்று கள்ளக்குறிச்சி தொடங்கி மாடூர், தியாகதுர்கம் வழியாக செம்பியமாதேவி வரை நிகழ்ந்த 26 கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் நமது வேலூர் கோட்டத்திலிருந்து

தோழர்கள்  வி.சரவணன் (ஆரணி), டி.மணவாளன், வி.சுகுமாரன், கே.சரவணகுமார், பி.கணேஷ், ஆர்.வெற்றிவேல், கே.பி.சுகுமாரன், பி.ராஜூ, பி.குப்புசாமி (கடலூர்) கே.வேலாயுதம், ஆர்.ராஜா, ஏ.அருண், எஸ்.பாலாஜி, எம்.அரசு, சரவணகுமார், எம்.ஜெயபாலன், பி.தெய்வீகன், டி.குருமூர்த்தி, ஆர்.பாலசுப்ரமணியன் (கள்ளக்குறிச்சி)  கே.கவியரசு (காட்பாடி)  டி.தேவராஜ், பி.சுரேஷ்குமார் (குடியாத்தம்) ஜி.வைத்தியலிங்கம், பி.ஜெயப்பிரகாஷ், (பண்ருட்டி)  ஏ.கே.பரத்,  கே.வெங்கடேசன்  (ராணிப்பேட்டை) என்.ஆரோக்கியராஜ், திருக்கோயிலூர், கே.சுந்தரமூர்த்தி, ஆர்.தங்கவேலு (விருத்தாச்சலம்)  எஸ்.நடராஜன் (வேலூர்) .ஜெயகுமார் (பி&ஜி.எஸ் கிளை)  எஸ்.ராமன், உ.கங்காதரன், சி.கணேசன், உ.வஜ்ஜிரவேலு (கோட்ட அலுவலகம்) வி,குபேந்திரன், பி.தமிழ்மணி (பொது இன்சூரன்ஸ்)  

என முப்பத்தி ஏழு தோழர்கள் பங்கேற்றனர். கடும் வெயிலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக  பங்கேற்று சமூக நீதியை நிலை நாட்டும் வர்க்க உணர்வோடு களத்தில் செயல்பட்ட தோழர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


சமூக நீதியை நிலை நாட்டுவதற்கான நீண்ட நெடிய போராட்டத்தில் இந்த நடைப்பயணம் ஒரு சிறு பகுதிதான். அதிலே நம்முடைய பங்களிப்பு இன்னும் சிறு பகுதிதான். சிறு ஓடைகள் இணைந்துதான் பெரு நதி உருவாகிறது. நதிகளின் சங்கமமே கடலாகிறது. அந்த வகையில் நமது பங்கேற்பும் முக்கியத்துவமானதுதான்.

நடைப்பயணத்தில் தமிழக இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கேற்பு மகத்தானது என்றும் வேலூர் கோட்டத்தின் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது என்றும் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், கள்ளக்குறிச்சியில் நமது தோழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார். கோட்டத்திற்கு பெருமை சேர்த்த தோழர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

நம் கோட்டத்தின் பணிகளை மேலும் மெருகேற்ற நடைப்பயண அனுபவம் உதவிகரமாக இருந்திடும்.  
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் . .எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்