Sunday, August 16, 2020

சுதந்திரம் என்பது - அற்புதமய்யா ம.பு . . .


கவிஞர் மனுஷ்ய புத்திரன் நேற்று எழுதிய அற்புதமான கவிதையை இப்போதுதான் படித்தேன். உடனடியாக பகிர்ந்து கொண்டு விட்டேன். உண்மையான இந்திய எதிரிகள் இக்கவிதையை எள்ளி நகையாடலாம்,  ஹிட்லருக்கான இடம்தான் இவர்களுக்கும் வரலாற்றில் கிடைக்கும். 

அற்புதமான கவிதைக்கு நன்றி திரு மனுஷ்யபுத்திரன். 

இன்னொரு அற்புதமான கவிதையையும் நேற்று எழுதியிருந்தார். அதனை மாலை பகிர்ந்து கொள்கிறேன்.



 சுதந்திர தின வாழ்த்துகள்

பேராசியர் சாய்பாபா, உங்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
இந்த சுதந்திர தினத்தில்
உங்கள் சிறை அனுபவங்களைச் சொல்லுங்கள்
அதிகாரத்தின் முன் மண்டியிட மறுத்ததத்காக
சக்கர நாற்காலி உபயோகிப்பவரான நீங்கள்
சிறைச்சாலை வளாகத்த்தில்
தவழ்ந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டபோது
உங்கள் பெருமூச்சில்
சுதந்திரக்காற்று உங்கள் முகத்தில் பட்டிருக்கலாம்


இந்த சுதந்திர திருநாளில்
நாம் எதை அடைந்தோம் என
மனம் கலங்குகிறது


கவிஞர் வராவராவ், உங்களுக்கு
சுதந்திரதின வாழ்த்துகள்
உங்கள் எரிமலை வார்த்தைகள்
சிறைக்கம்பிகளுக்குப்பின்னிருந்து
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கின்றன
என் இளமைக்காலத்தில்
உங்கள் கவிதைகளைப் படித்து
நானும் ஒரு நக்சலைட்டாக விரும்பினேன்
அதிகாரத்தின் கொள்ளை நோய்க்கு எதிராக
உங்கள் சொற்கள் போராடுகிறபோது
உங்கள் உடல் கொரோனாவோடு
சிறைக்கம்பிகளுக்குப்பின்னே போராடுகிறது


சுதந்திர விழாவில்
ஒடுக்குமுறையின் பாடல்கள்
உரத்து ஒலிக்கின்றன


நாடக ஆசிரியர் ஆனந்த் டெண்டுல்ம்ப்டே உங்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
அர்பன் நக்சலான நீங்கள்
எந்த அகராதியிலும் அர்த்தமில்லாத
அந்தக் குற்றத்திற்காக
உங்கள் கைகள் விலங்குகளால் கட்டப்பட்டன
உங்கள் விடுதலையின் தத்துவத்தைத்தேடி
உங்கள் வீடு சோதனையிடப்படுகிறது


சுதந்திரதின இனிப்புகள்
இதற்குமுன் இதுபோல கசந்தது இல்லை


வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், உங்களுக்கு
சுதந்திரதின வாழ்த்துகள்
கலவரத்தை நிகழ்த்தியவர்களுக்கு
எதிராக நின்றீர்கள்
அதனாலேயே கலவரத்தை தூண்டியதாக
சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்
உங்களை வெளியே விட்டால்
இந்தியா பற்றி எரியும் என
அரசு நம்புகிறது


அரசரின் சுதந்திர தின உரை
சுதந்திரத்தைத்தவிர
எல்லாவற்றையும் பற்றிப்பேசுகிறது


கவுதம் நவால்கா, உங்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
நீங்கள் இடையறாது மனித உரிமைகள் பற்றி பேசினீர்கள்
ஜனநாயக உரிமைகள் பற்றி பேசினீர்கள்
முக்கியமாக காஷ்மீரிகளின்
உரிமைபற்றி பேசினீர்கள்
பலரின் பெயரோடு உங்கள் பெயரும்
அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள்
பட்டியலில் இருக்கிறது


சுதந்திரம் என்பது
மீண்டும் ஒரு கனவாக எஞ்சுகிறது


மாணவி சபூரா சர்க்கார் உங்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துகள்
குடியுரிமை பறிப்பிற்கு எதிராக முழங்கியதற்காக
சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்
பலமுறை உங்கள் ஜாமீன் மறுக்கப்பட்டது
மேலும் நீங்கள் தலை நகரத்தை எரித்தீர்கள்
என்று குற்றம் சாட்டப்பட்டது


சுதந்திர இந்தியாவின் பிள்ளைகள்
கருவறையிலேயே சிறைச்சாலை இருளை
கண்டு வளர்கிறார்கள்


ஒமர் அப்துல்லா உங்களுக்கு
சுதந்திரதின வாழ்த்துகள்
மெஹ்பூபா முஃப்தி உங்களுக்கு
சுதந்திரதின வாழ்த்துகள்
சுதந்திரத்தின் பொருள்
நீங்கள் அறியாததல்ல
உங்கள் ரம்ஜானையும் பக்ரீத்தையும்
தடுப்புக் காவலில்
சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள்
பனியின் தேசம் அநீதின் குளிரில்
உறைந்துகொண்டிருக்கிறது


துண்டாடப்பட்ட காஷ்மீரத்தின் மேல்
மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது


இந்தப்பட்டியல் மிக நீளமானது
கிழக்கு, மேற்கு, வடக்கு என
எல்லாத்திசைகளிலும் வேட்டைகள் தொடர்கின்றன


மனித உரிமை செயல்பாட்டாளர்களைத் தேடி
ஜனநாயகத்திற்காக வழக்கறிஞர்களைத்தேடி
நீதிக்கான எழுத்தாளர்களைத்தேடி
உண்மைக்கான பத்திரிகையாளர்களைத்தேடி
இவர்களின் பொது அடையாளமான
அர்பன் நக்சல்களைத்தேடி
நாலாபுறமும் கரங்கள் விரிகின்றன
டெல்லி, மும்பை, ராஞ்சி,
கோவா, ஹைதராபாத், ஸ்ரீநகர்
என இந்தக் கைதுகள்
காவி தேசியத்தின் எழுச்சியை
எங்கும் முழங்குகின்றன


சுதந்திரம் என்பது நீதி
சுதந்திரம் என்பது முரண்படும் உரிமை
சுதந்திரம் என்பது குடியுரிமை
சுதந்திரம் என்பது வழிபடும் உரிமை
சுதந்திரம் என்பது சமமான சட்டங்கள்
சுதந்திரம் என்பது அமைப்பின்மீதான நம்பிக்கை
சுதந்திரம் என்பது எழுத்துரிமை
சுதந்திரம் என்பது பேச்சுரிமை
சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கு
நீதியைப்பற்றி தெரிந்திருப்பது


சுதந்திரம் என்பது
கூட்டம் கூடி
பாசிஸ்டுகளுக்கு எதிராக
பதாகைகளை உயர்த்துதல்


சுதந்திரம் என்பது
அதிகாரத்திற்கு எதிராக கவிதை எழுதுவதும்
கெட்ட வார்த்தை பேசுவதும்


15.8.2020
மாலை 6.43
மனுஷ்ய புத்திரன்


பிகு: மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள்தான் கவிதையில் வருபவர்கள்

No comments:

Post a Comment