Thursday, April 30, 2020

இதுக்கா அவ்வளவு அலட்டினீங்க???


மருந்து அனுப்பவில்லை என்றால் பதிலடி கிடைக்கும் என்று ட்ரம்ப் மிரட்டியதும் அதற்கு உடனே தலை வணங்கி மருந்து அனுப்பியதும் அதற்கு மனிதாபிமானம் என்று சொல்லி சமாளித்துக் கொண்டதும் பழைய கதை.

அந்த சம்பவம் முடிந்து இரண்டு மூன்று நாட்களிலேயே சங்கிகள் ஒரு செய்தியை உலக மகா சாதனை போல பரப்பிக் கொண்டிருந்தார்கள், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி என அனைத்து துறைகளுக்குமான நோபல் பரிசுகளையும் மோடியே வென்றது போல அப்படி ஒரு பில்ட் அப். (மோடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற தகுதியானவர் என்பது வேறு விஷயம்)

அப்படி என்ன செய்தி அது?

மோடியின் ட்விட்டர் பக்கத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை பின் தொடர்கின்றது (FOLLOW) என்பதுதான் அந்த செய்தி. அதற்குத்தான் அவ்வளவு பீற்றல்.

இப்போதைய செய்தி கீழே உள்ளது. அதிலே காலச்சித்தனின் பின்னூட்டம் இருக்கிறதே, அது சங்கிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்.




அர்ஜூனன் அம்பு - மோடி அதிர்ச்சி

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து சுட்டது.



"முடில' என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொள்ள விழைந்தாலும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லியே ஆக வேண்டும்.

அர்ஜூனன் விடும் அம்பைப் பார்த்து தர்மன் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை கவனியுங்கள்.

சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் இல்லாமல் கொரோனா யுத்தமா?

அவசரப்பட்டு ஓடிட்டாங்களோ?



ஐம்பது பெரும் பணக்காரர்கள் வாங்கி திருப்பிக் கட்டாமல் ஏமாற்றிய கடன் தொகை 68,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு  ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.



வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய தேச பக்தர்களான, (ஜெமோவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தோற்றுப் போன தொழில் முனைவர்கள்)  விஜய் மல்லய்யா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி ஆகியோரும் அந்த பட்டியலில் அடக்கம்.

கடன் த:ள்ளுபடி செய்யப்பட்டது என்னமோ வாஸ்தவம்தான், ஆனால் அது அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அவர்கள் அதனால் திருப்பி செலுத்தினால் அதை வாங்கிக் கொள்வோம். ஆனாலும் நிலுவையில் உள்ள கடன் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஆமாம், இவர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள் அல்லவா! கடனைத் திருப்பிக் கட்டி விட்டுதான் மறு வேலை பார்க்கப் போகிறார்கள்!

இந்த கடனெல்லாம் தள்ளுபடி ஆகும் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை இவர்கள் ஓடிப் போயிருக்க மாட்டார்களோ?

அல்லது

ஓடிப்போனவர்கள் மீது வழக்கு எல்லாம் போட்டு சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக தள்ளுபடி செய்யப்பட்டதோ?

ஆனால் ஒன்று கடன் வாங்கினாலும் மோடியின் குஜராத் மாநிலத்தில் வாங்க வேண்டும். அப்போது கண்டிப்பாக தள்ளுபடிதான். 

Wednesday, April 29, 2020

ராஜராஜன், ராஜேந்திரனுக்கும் பொங்குங்கய்யா . . .



தஞ்சை பெரிய கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றது என்பதைத் தாண்டி வேறெதுவும் சொல்லாத போதே இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டார், தஞ்சை பெரிய கோவிலை அவமானப் படுத்தி விட்டார் என்றெல்லாம் பொங்கிய தமிழ் இனக் காவலர்களே, 

இதோ இந்த இணைப்பின் வாயிலாக 

https://www.facebook.com/prathaban.jayaraman.1/videos/3243026069041152/

தமிழ் தேச அதிபர் சீமான் பேசிய காணொளியைப் பாருங்க. 

பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனையும் மகன் ராஜேந்திர சோழனையும் "பைத்தியக் காரப் பசங்க" என்று திட்டுகிறார்.

போரில் வென்ற நாடுகளின் பெண்களை தூக்கி வந்ததாக எல்லா தமிழ் அரசர்களையும் சொல்கிறார்.

தமிழ் பாரம்பரியம் பறி போய் விட்டது என்று இப்போது பொங்குங்கள் பார்ப்போம் . . .

தீக்குளிப்பு எப்போ ஜீயர்?




விளக்கம் தேவையில்லை. இந்த படம் ஒன்றே போதும். சோடா பாட்டில் புகழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மோடி பாணியில் வெட்டி உதார் விடுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.






இதுவும் கொரோனா உபயம்




கொரோனாவால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புக்களை நாம் அறிவோம்.

ஒரு சில நல்லது கூட நடந்துள்ளது.

மாசு படுதல் குறைந்துள்ளதால் மற்ற ஜீவ ராசிகளின் உலா எந்த தடையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

கீழே உள்ள படங்களில் முதல் படம் நேற்று முன் தினம் ஹிந்து இதழின் முதல் பக்கத்தில் வந்தது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காட்டை நாடி வந்த பறவைகள்



இந்த படம் வாட்ஸப்பில் வந்தது.



எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆனால் போக்குவரத்து இல்லாததால் மயில்கள் ஜாலியாக உள்ளது.

Tuesday, April 28, 2020

மோடிக்கு எரிச்சலூட்டும் கடிதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கத்தை தீக்கதிர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது. அக்கடிதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு மோடியால் உருப்படியாக எந்த பதிலும் சொல்ல முடியாது என்பதால் அக்கடிதம் அவருக்கு  நிச்சயம் எரிச்சல்தான் அளித்திருக்கும். 



கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம்.
துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று.
நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் எதிர்கொண்டிருக்கிற பிரச்சனைகள் குறித்து, தங்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.  
தாங்கள் வெறும் 4 மணி நேர கால அவகாசத்துடன் திடீரென்று அறிவித்த தேசிய அளவிலான சமூக முடக்கத்தின் கடைசி வாரத்தில் நாற்பதாவது நாளைக் கடந்திருக்கிறோம். இது, முற்றிலும் தயார்நிலையில் இல்லாதிருந்த மக்களுக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது.
1     புலம்பெயர் தொழிலாளர்கள்
சமூக முடக்கத்திற்குப்பின்னர், புலம்பெயர் தொழி லாளர்கள் தங்கள் அனைத்துவிதமான வாழ்வாதாரங் களையும், தங்குமிடத்தையும்இழந்ததன் விளைவாகத் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முயன்ற தன் காரணமாக, வீதிகளில் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினர். இதுவே, மக்கள் ஒருவர்க்கொருவர் இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற சமூக முடக்கத்தின் குறிக்கோளை மறுதலித்தது. அதன்பின்னர் பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும்,  ஊட்டச்சத்துக்குறைவு மற்றும் தங்குமிடங்களும் இல்லாத நிலைக்கும் கோடானு கோடி மக்களைத் தள்ளியது. சமூக முடக்கத்தைத் தொடர்ந்து, தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் இலவச மாக உணவு அளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மத்திய அரசின் கிடங்குகளில் மிகப்பெரிய அளவில் உணவு தானியங்கள் வீணாகி, அழுகிக் கொண்டி ருக்கின்றன. அவற்றை தேவைப்படும் மக்களுக்கு இலவச மாக விநியோகம் செய்வதற்காக மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரினோம். இவை எதையுமே தங்களைப் பிரதமராகக் கொண்டுள்ள மத்திய அரசு பரிசீலனை செய்யக்கூட முன்வரவில்லை.
2   வேலையில்லாத்  திண்டாட்டம்
சமூக முடக்கத்திற்குப் பின்னர், 340 லட்சமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 880 லட்சமாக அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே 540 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, இதில் கூடுதலாகி இருக்கின்றனர். இத்துடன் வேலை பார்த்துவந்தவர்களில் 680 லட்சம் பேர் மேலும் கூடுதலாக இதில் சேர்ந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், 12 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் வேலைகளையும், வாழ்வாதாரங் களையும் இழந்துள்ளனர். சமூக முடக்கக் காலத்தையும் சேர்த்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் 20 வரைக்கும் வேலையின்மை விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 23.6  சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இவற்றின் காரணமாக, மத்திய அரசு, வாழ்வாதாரங்களை இழந்த அனை வருக்கும்  அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று உடனடியாகச் செய்திட வேண்டும். இது அவசியம். நிச்சயமாக, கடந்த ஐந்தாண்டுகளில் 7.76  லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பெரும் பணக்காரர் களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தள்ளுபடிசெய்யும் வல்லமை உள்ள உங்களால், நாட்டில் பெரும்பான்மை யான மக்களுக்கு உணவு அளித்து அவர்களை ஆதரித்திட பணம் இல்லை என்று சொல்ல முடியாது.
3    கூட்டாட்சித் தத்துவம்
கொரோனா வைரஸ் தொற்றை முறியடித்திட மாநிலங்கள் போர்முனையில் செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. அவர்களுக்குப் போதுமான அளவில் நிதி, உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இவை குறித்து அர்த்தமுள்ள விதத்தில் எவ்விதமான உதவியும் மத்திய அரசால் இதுவரை அளிக்கப்படவில்லை. அவசரகதியில் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் விளைவாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டது. இப்போது இந்நெருக்கடியைச் சமாளித்திடுமாறும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கு மிடங்கள் அளித்திடுமாறும் அவர்கள் ஒருவர்க்கொரு வர் இடைவெளியைக் கடைப்பிடித்திட வழிவகை செய்துதருமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இது மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். ஜிஎஸ்டி வசூலில் மாநில அரசுகளின் பங்கினையே இன்னமும் மத்திய அரசு அளித்திடவில்லை. எனவே, மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி உதவியினை அளித்திட வேண்டும். இதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.
4      நிதி
உங்களுடைய பெயரைத் தாங்கி தனியார் அறக்கட்ட ளை ஒன்று பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது, வசூலித்துக்கொண்டுமிருக்கிறது. இந்தத் தனியார் அறக்கட்டளை வசூலித்திடும் தொகை, மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலராலோ (சிஏஜி), அல்லது அரசாங்கம் நியமித்திடும் வேறெந்த தணிக்கையாளராலோ தணிக்கை செய்யப்பட மாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளங் களிலிருந்தும் மற்றும் பல்வேறு வகைகளிலும் பிடித்தம் செய்யப்படும் தொகை (அவர்கள் முன்பு அதிகாரப்பூர்வ மான பிரதமர் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு நன்கொடை அளித்துவந்திருந்தாலும்) கட்டாயமான முறையில் இந்தத் தனியார் அறக்கட்டளையின் நிதியத்திற்கு மாற்றப் படுகிறது. இந்தத் தொகையை கொரோனா வைரஸ் தொற்றுக்கு  எதிரானப் போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் அதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.
5     வீணான  செலவினங்களை நிறுத்துக!
இவ்வாறு மிகப்பெரிய அளவில் மருத்தவ அவசரநிலை உருவாகி அதனை எதிர்கொள்ள நிதியின்றி  தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு நிதி  உதவி அளிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு கட்டிடங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அவற்றை புதிதாகக் கட்டுவதற்கும், பிரதமரின் இல்லத்தைப் புதிதாகக் கட்டுவதற்கும் மற்றும் பல மக்கள் தொடர்பு நடவடிக்கைகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மிகவும் வீணான முறையில் செலவு செய்வதைத் தொடர்ந்திட மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பது, ஆச்சரியமாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இது கிரிமினல்தனத்திற்கு ஒப்பான செயலாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கத்தின் மரபு, பொது சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்றவற்றிற்கு செலவு செய்திடாமல் அதற்குப் பதிலாக, சிலைகளுக்கும், புல்லட்  ரயில்களுக்கும், பரப்புரைப் பிரச்சாரங்கள் போன்றவற்றி ற்கும் அதீதமாக செலவுசெய்வதாக இருந்து வந்திருக்கிறது. இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில்  தேவைப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.
6       சுய பாதுகாப்பு  உபகரணங்கள் பற்றாக்குறை
சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் அனைவரையும் சோதனை செய்திட வேண்டும் என்பதும், அதற்கு மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போதுமான அளவில் சுய பாதுகாப்பு உபகரணங்கள் அளித்திட வேண்டும் என்பதும் இன்றையதினம் உலகம்  முழுவதும் ஒப்புக்கொண்டுள்ள விஷயமாகும். ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இவ்விஷயத்தில் இந்தியாவில் போதுமான அளவிற்கு  தேவையான தயாரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வில்லை. இப்போதும்கூட, சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டு ஒருமாதம் கடந்த நிலையிலும், சோதனை செய்திடும் விகிதம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறை வானதாகவே இருக்கிறது. இது பாகிஸ்தானைவிடக் கீழ் நிலையில் இருப்பது வெட்ககரமானது. சுகாதார ஊழியர் களுக்குப் போதுமான அளவில் சுய பாதுகாப்பு உபகரண ங்கள் இல்லை. இதன் காரணமாக சிலர் இந்நோய்க்குப் பலி யாகிவிட்டனர். இந்தச்சமயத்திலாவது, சோதனை செய்வத ற்கான கருவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் போர்க்கால அடிப்படையில் அளித்திட மத்திய அரசு முன்வர வேண்டும். இது அவசியம், அவசரம்.
7 அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று அல்லாத விதத்திலும் ஏராளமான அளவிற்கு மரணங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை மத்திய அரசு பார்க்கத் தவறிடக்கூடாது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளும், பல லட்சம் கர்ப்பிணிப் பெண்களும் அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவை யான தடுப்பூசிகள் அளிக்கப்படாமல் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்றே  கடந்த ஐந்து வாரங்களில் மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்புத் திட்டங்களும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந் திருக்கின்றன.   புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளான லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளும், 3.5 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளும் தேவையான சிகிச்சையைப் பெற முடியவில்லை. மலேரியா ஒழிப்பு மற்றும் காச நோய் ஒழிப்புத் திட்டங்களும் கடந்த ஐந்து வாரங்களில் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இரத்த சேமிப்பு வங்கிகளில் போதிய அளவிற்கு இரத்தம் இல்லை என்றும், இதனால் இரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்தகைய நிலைமையை ஏற்க முடியாது என்பதும் இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டியது அவசியம் என்பதும் நிச்சயமாகும்.
8 அரசாங்கத்தின்  முன்னுரிமை நடவடிக்கைகள்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டிருப்பது குறித்துக் கவலைப்படாமலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதையும்  எடுக்காமல் அவற்றை மீறியும், எதிர்க்கட்சி அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதிலேயே கவனம் செலுத்திய பாஜகவின் உயர்மட்டத் தலைமையின் அதிகாரத்தின் மீதான இச்சை, ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது. இதனால் அங்கே  கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி யுள்ள ‘பாசிடிவ்’ எண்ணிக்கை அதிகமாகி இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, பாஜக அரசாங்கம் பதவியேற்றபின், மாநிலத்தில் எந்தவித அர சியல் தலைமையும் செயல்படாத நிலையில், சாமானிய மக்கள் மிக வேகமாகப் பரவி வரும் கொரான வைரஸ் தொற்றுக்கு பெரிய அளவில் விலை கொடுத்து வருகின்றனர்.
9 மோசமான  அரசு நிர்வாகம்
இப்போது மத்திய அரசு வெளியிடும் ஆணைகள் புரிந்து கொள்ள முடியாததாகவும், பின்னர் பல விளக்கங்கள் அவற்றுக்கு அளிக்கப்படுவதும், பின்னர் அவையும் ரத்து  செய்யப்படுவதும் வழக்கமாக மாறியிருக்கின்றன. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு காலத்தில் இத்தகைய மோசமான முன்னு தாரணத்தை நாம் கண்டோம். இப்போது அது மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், ஆட்சி  நிர்வாகத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறது.
10  மதவெறி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடும், நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக முறியடித்திட முடியும். தப்லிகி ஜமாத் அமைப்பு மாநாடு நடத்திய பொறுப்பற்ற தன்மையைவைத்து, ஒட்டுமொத்த முஸ்லீம் சிறுபான்மை இனத்தினரைக் குறிவைத்துத் தாக்குவதற்கும், சமூகப் பிளவினை ஆழப்படுத்தவதற்கும், மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கும் சாக்காக வைத்துக்கொள்ளக்கூடாது. இது மதத்தின் பெயரால் வெறுப்பைப் பரப்புவதுடன், இந்தியாவையும் பலவீனப்படுத்திடும். இத்தகைய மதவெறிப் பிரச்சாரத்தின் தாக்கம் இப்போது உலகின்  பல நாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வ வம்சாவளியினரால் (Indian origin) உணரப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட மத்திய அரசின் அங்கம் வகிக்கும் அரசியல் தலைமை முன்வர வேண்டும். இல்லையேல், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழ் இந்தியர்களுக்கும், நம் நாட்டு மக்களுக்கும் மாபெரும் அளவில் கேடு விளைவித்திடும்.
11 புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்திடுக!
கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய உடனேயே வெளிநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் தவித்த இந்தியர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர சரியானமுறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை வரவழைத்தது. ஆயினும், சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் அதனால் பாதிப்புக்கு உள்ளான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிட எவ்விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்திட வில்லை. அவர்களுக்கு சிறப்பு விமானங்கள் வேண்டாம், குறைந்தபட்சம் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கி அவர் களை அனுப்பி வைத்திருக்க வேண்டாமா?  இப்போதாவது இதனைச் செய்திட முன்வர வேண்டும். மேலும், இன்னமும் இந்தியர்கள் அதிகமான அளவில் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். மத்திய அரசு, அவர்கள் திரும்பி வருவதற்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதேபோன்று நம்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினரையும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
12  திருவாளர்   பிரதமர் அவர்களே!
உலகில் இதர நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தலைவர்களைப் போல் அல்லாமல், நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களுக்கு முன்னால் வந்து, பதில் சொல்வதை வெறுத்து வருகிறீர்கள். பெரும்பாலான நாடுகளில் அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் நாள்தோறும் ஊடகத்தினரைச் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். உங்களது அரசாங்கம் நிலைமையை நன்கு சமாளிக்கக் கூடிய விதத்தில் திறமையுடன் ஆட்சி புரிகிறது என்று மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திடுவதற்கும், மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கும் இது  ஒன்றுதான் ஒரே வழியாகும். உண்மையில், இந்தியாவில் உள்ள மாநில அரசாங்கங்களில் பல இதனைச் செய்து  வருகின்றன. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் முதலமைச்சர், நாள்தோறும் ஊடகத்தினரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றையதினம் எடுத்த நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்குகிறார். அதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஆனால் மத்திய அரசின் நிர்வாக நடைமுறை பாணியில் இத்தகைய ஜனநாயகப் பொறுப்பு முழுமை யாகக் காணப்படவில்லை. 
- தமிழில் : ச. வீரமணி

நன்றி - தீக்கதிர் 28.04.2020

சூர்யா ஓங்கி அடிச்சா . . .


ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்பது சினிமா வசனம் மட்டுமல்ல. சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையும் கூட...

இதற்காகவே சிங்கம் 3 படத்தை பார்த்தாலும் கூட தவறில்லை என்று தோன்றுகிறது. 




நாங்களே கட்டுவோம், நாங்களே இடிப்போம்



ஆந்திர எல்லையில் ஞாயிறு அன்று சாலையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களை நேற்று வேலூர் மாவட்ட அதிகாரிகளே அகற்றி விட்டார்கள்.

பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு..



இப்படிப்பட்ட பாதிப்பு வரும் என்று முன்பே தெரியாதா?

இந்தியாவுக்கு ஒரு மோடி போதும்யா . . .

Monday, April 27, 2020

புளிச்ச மாவும் திரிஞ்ச பாலும்



தான் வாங்கிய 13 பால் பாக்கெட்டுக்களில் பால் குக்கரில் காய்ச்சும் போது 9 பாக்கெட்டுக்கள் திரிந்து போனதாக சிப்பு சேகர் முதல்வருக்கு  ட்விட்டரில் பதிவு செய்கிறார்.

இவர் ஒருத்தரே இவ்வளவு பாலை வாங்கி பதுக்கி வைத்து என்ன சேய்யப் போகிறார்? பால் குக்கரை சுத்தமாக கழுவினார்களா போன்ற கேள்விகள் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

அவர் ட்விட்டரில் பதிவு செய்த உடன் ஆவின் அதிகாரிகள் உடன் வந்து 9 புதிய பாக்கெட்டுக்களை கொடுத்து விட்டுப் போனதாக இன்னொரு பதிவு முதல்வருக்கு நன்றி சொல்லி போகிறார்.

பால் திரிந்து போவது என்பது வழக்கமாக நடக்கக் கூடியது. முதல்வருக்கு ட்விட்டரில் புகாரில் அனுப்பினால் நம் வீட்டுக்கும் வந்து மாற்றிக் கொடுப்பார்களா என்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான உண்மை வேறு. இதையும் புளிச்ச மாவு விவகாரத்தையும் ஆராய்ந்தால் மூன்று விதமான கோணங்கள் உள்ளது.

ஆவின் அரசு நிறுவனமாக இருப்பதால்தான் எஸ்.வி.சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றித் தரப்பட்டுள்ளது. புளிச்ச மாவை விற்றது தனியார் என்பதால் ஜெமோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உலகம் அறிய எஸ்.வி.சேகர் புகார் கூறியும் அவர் வேலை முடிந்து விட்டது. ஜெமோ நிலை ஊரறிந்த விஷயம்.

சினிமாக்காரனை மதித்து பால் பாக்கெட்டை மாற்றிக் கொடுத்த சமுதாயம் எழுத்தாளனை மதித்து புளிச்ச மாவு பாக்கெட்டை மாற்றித் தராமல் வீசி எறிய வைத்து விட்டது.

என்னதான் இருந்தாலும் சிப்பு சேகர் நேரடி சங்கி, ஜெமோ மாஸ்க் போட்ட சங்கி. அந்த வித்தியாசமும் உள்ளது அல்லவா!

பார்டரைத் தாண்டி வராதீங்கய்யா




பேச்சு, பேச்சாதான் இருக்கனும். பார்டரைத் தாண்டி  உன் பக்கம் நானும் வர மாட்டேன், என் பக்கம் நீயும் வரக்கூடாது என்ற வடிவேலு பட காமெடியை நமது தமிழக அதிகாரிகள் பார்த்திருப்பார்கள் போல.



ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் பாதைகளில் எல்லாம் சுவர் வைத்து அடைத்து வருகிறார்கள்.

இப்போது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போகவே சிறப்பு அனும்தி வாங்கிப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.  வேறு மாநிலத்துக்குப் போக வேண்டுமென்றால் நிலைமை இன்னும் மோசம்.

இனி எதிர்காலத்தில் பாஸ்போர்ட், விசா என்றெல்லாம் கேட்பார்களோ?

எல்லாம் கொரோனா படுத்தும் பாடு  . . .


ஊடகங்களாவது பொறுப்போடு . . .



நேற்று கோவையில் அமைச்சர் வேலுமணியின் நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. 

நேற்றா இல்லை அதற்கு முன்பா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஆனாலும் இவையெல்லாம் அபாயத்திற்கு  அழைப்பு விடுக்கும் செயல். ஊரடங்கு என்று பலரின் வாழ்வை முடக்கி போட்டிருக்கிற அரசே அதனை மீறுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமா?

எல்லா அநீதிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகக் காரர்களாவது கொஞ்சம் பொறுப்போடு இருந்திருக்கலாம்.

இப்படித்தான் முண்டியடித்துக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டுமா?

Sunday, April 26, 2020

ஊரடங்கு நேரத்திலே . . .

ஊரடங்கு நேரத்திலே வீட்டிற்கு வெளியே கொஞ்ச நேரம் நிற்கலாம் என்று வந்தால்

அரசுக்கும் காவல்துறைக்கும் அஞ்சாமல்

சந்திரனும் ஒரு நட்சத்திரமும் ஒய்யாரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

தனி நபர் விலகலை அவர்கள் கடைபிடித்த போதும் முகத்தில் மாஸ்க் அணியாத காரணத்தால் எனது அலைபேசியில் அவர்களை கைது செய்து விட்டேன்.





அவர்கள் திருந்தவே மாட்டார்கள் . . .

கீழே உள்ள கட்டுரை எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி 1963 ம் வருடம் எழுதியது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதனை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அதனை நினைவு படுத்தும் அவசியத்தை மத்தியரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கிய முடிவு ஏற்படுத்தியுள்ளது.

எப்போது என்ன பிரச்சினை வந்தாலும் அதன் சுமை சாமானிய மக்களின் முதுகில் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது. அனைத்து ஆட்சியாளர்களும் அதனையே செய்கின்றனர்.

அதற்குக் காரணம் நம்முடைய முதலாளித்துவ சமூக அமைப்பு. அது மாறாத வரை இப்படிப்பட்ட தாக்குதல்களும் மாறாது.


Friday, November 11, 2016

அன்றைக்கும் இதையேதான் சொன்னார்கள்.



தேசத்திற்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று மோடி உபதேசம் செய்கிறார். மோடிக்கு வாக்களித்து அவரது  சீரழிவு ஆட்சியைப் பற்றி இது நாள் வரை எதுவுமே பேச முடியாமல் வாயையும் வாலையும் சுருட்டி வைத்திருந்த  மத்தியதர வர்க்கத்தின் சிறு பகுதியும் அதையே உபதேசிக்கிறது.

சாதாரண மக்களுக்குத்தான் ஆட்சியாளர்கள் உபதேசம் செய்வார்களே தவிர அவையெல்லாம் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக இருக்கிற பெரு முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் பொருந்தாது என்பதை உபதேசம் செய்கிறவர்கள் உணர்ந்து கொள்ளாதது பரிதாபத்திற்குரியது.

முதலாளித்துவ ஆட்சியாளர்களின் குணாம்சம் என்றும் மாறாது என்பதை கீழே உள்ள கட்டுரை உணர்த்தும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி, கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழலைப் பற்றி இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் 1963 ல் எழுதிய கட்டுரை இது.

ஐம்பத்து மூன்று வருடங்கள் கடந்து விட்டதால் சில புள்ளிவிபரங்கள் அற்பமான தொகையாகத் தோன்றும். ஆனால் ஐம்பத்தி மூன்று வருடங்களுக்குப் பின்னும் ஆட்சியாளர்கள், முதலாளிகள் நெருக்கம் மாறாமல் உள்ளது என்பதும் இப்போது அது மேலும் கெட்டிப்பட்டிருக்கிறது என்பதும்தான் இக்கட்டுரை உணர்த்துகிற செய்தி.

கட்டுரையின் இறுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்வியைத்தான் இந்திய உழைப்பாளி மக்கள் இப்போதும் கேட்கிறார்கள்.

சுமைகளை பகிர்ந்து கொள்ளல்

தோழர் சரோஜ் சவுத்ரி
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஜூலை 1963



நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வாசகர்களுக்கு தீனி போடக் கூடிய அனைத்து ஊடகங்களும் தங்களின் ஒவ்வொரு புதிய இதழிலும் ஒரு கோஷத்தை தங்களின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு பிரபலப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தேசம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்லி வாசகர்களுக்கு அவர்களின் கடமைகளையும் பொறுப்புக்களை நினைவு படுத்தி அவர்களின் தேச பக்தியை உசுப்பேற்றி தியாக உணர்வை தூண்டுகிற கோஷம் அது. அன்றொரு நாள் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு ஆங்கில நாளிதழில் முக்கியமான செய்திகளை படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க நிகழ்வு, சோவியத் நிகழ்வு என்று தாவி இங்கிலாந்து பற்றிய செய்தியை படித்துக் கொண்டிருக்கையில் கொட்டை எழுத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு அன்று வெளியிடப்பட்ட “ சுமைகளை புன்னகையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற கோஷத்தின் மீது என் கண்கள் நிலை கொண்டது.

சுமையை புன்னகையோடு பகிர்ந்து கொள்ள நான் இல்லையில்லை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா? நாம் நிஜமாகவே சுமையை பகிர்ந்து கொண்டிருக்கிறோமா? கட்டாய வைப்பு நிதிக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்ய எனது நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கும் படிவத்தை நேற்றுதான் பூர்த்தி செய்து கொடுத்தேன். இதன் மூலம் என் ஊதியத்திலிருந்து எனது குடும்பத்தின் செலவுகளுக்கான தொகையில் பெருமளவு தொகை வெட்டப் படுகிறது. என் சகாக்களைக் கேட்ட போது அவர்களும் அதையே செய்ததாகச் சொன்னார்கள். ஏற்கனவே பற்றாக்குறையில் தவிக்கும் குடும்ப பட்ஜெட்டில் மிகப் பெரிய நெருக்கடியை இது உருவாக்கியுள்ளது. குடும்பப் பொருளாதாரத்தில் எந்த செலவை வெட்ட முடியும்? கைக்குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்க முடியுமா அல்லது குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்காமல் இருக்க முடியுமா? நிச்சயமாக இது சாத்தியமில்லை. கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதன் மூலம் எதிர்காலம் அடமானம் வைக்கப்படுகிறது.

கட்டாய வைப்பு நிதி மூலம் அறுபதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை அரசு வசூலிக்க முயல்கிறது. தேசத்தின் வருமானத்தில் பெரும் பகுதியை அபகரித்துள்ள அந்த கனவான்களிடமிருந்து அப்பணத்தை பெற முடியாதா? பொருட்களை பதுக்கி வைத்து லாபம் பார்க்கும் பேர்வழிகளிடமிருந்து பெற முடியாதா?

இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரிகளே அதிகம். அன்றாட வாழ்வை நடத்த தேவைப்படும் பொருட்களை வாங்குவதனால் பெரும்பான்மை மக்களால் மறைமுக வரிகளிலிருந்து தப்ப முடிவதே இல்லை. ஆனால் நேரடி வரி செலுத்துபவர்களோ சலுகைகள் பெறுகிறார்கள், வழக்குகள் மூலம் சமரச உடன்பாடுகளை பெறுகிறார்கள். குறைத்து மதிப்பிட்டு தப்பிக்கிறார்கள்.

நூறு கோடி ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தாமல் இந்தியாவில் ஏய்க்கப்படுவதாக பேராசிரியர் கல்டோர் சொல்கிறார். நமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாம் அழைத்த அந்த கற்றறிந்த பேராசிரியர் ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி ரூபாய் அளவில் வருமான வரி ஏய்க்க்ப் படுவதாகச் சொல்லி நீண்ட காலமாகி விட்டது. அரசின் கஜானாவுக்கு வராமல் உள்ள பணம் ஒன்றும் குறைவான தொகை அல்ல. அரசு வசூலிக்க வேண்டிய வரி பாக்கி 137.90 கோடியை தள்ளுபடி செய்து விட்டதாக நிதியமைச்சகம் கூறி உள்ளது. வருமான வரி பாக்கியாக ரூபாய் 181 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளதாக கடந்தாண்டு நாடாளுமன்றத்திலேயே சொல்லப்பட்டது. இத்தொகை வேகமாக வசூலிக்கப்படுமானால்?

வருமான வரி பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்கிற போது வருமான வரி செலுத்துவோரின் சராசரி வருமானம் 1953 ல் 10,940 என்று இருந்தது 1959 ல் ரூபாய் 10,583 ஆக குறைந்துள்ளது. அதிகமான ஊதியம் வாங்குபவர்கள் மீது கவனத்தை குவிப்பதற்குப் பதிலாக குறைவான ஊதியம் உள்ளவர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம் இது நிகழ்ந்துள்ளது. இங்கே நாம் சுமையை பகிர்ந்து கொள்ளவில்லையா?

தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு என்ன ஆனது? நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்நாட்டில் இருந்த போதிலும் கூட, அரசு சொல்லும் நல்ல எண்ணங்கள் இருந்த போதிலும் கூடுதல் கால அவகாசத்தை நீட்டித்த போதும் அரசால் எட்டு கோடி மதிப்பிலான தங்கத்தையே பெற முடிந்தது. ஒரு ஆய்வின் படி 1955-56 ல் உள்ள இந்திய மக்கட்தொகையில் 25 % பேரின் மாத வருமானம் ரூபாய் பத்திற்கும் குறைவாக உள்ளதென்றும் இந்தியாவின் தேச வருமானத்தில் அவர்கள் பங்கு வெறும் 9 % மே. அதே சமயம் 0.3 % உள்ளவர்களோ தேச வருமானத்தில் 5.8% ஐ கைப்பற்றுகிறார்கள்.

இன்னொரு சமீபத்திய ஆய்வு 1960 ல் நகர்ப்புறங்களில் உள்ள 85 % குடும்பங்களின் ஆண்டு வருமானம் 3000 ரூபாயாக உள்ளது என்றும் தேச வருமானத்தில் அவர்களின் பங்கு 52 % என்றும் சொல்கிறது. இந்திய பொருளாதார முறையை ஆய்வு செய்ய மத்தியரசால் அமைக்கப்பட்ட மஹாலானோபிஸ் குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வளவு சுமையை பகிர்ந்து கொண்டுள்ளனர்?

இதே மஹாலானோபிஸ் குழு இந்தியாவின் சொத்து மதிப்பு 1949-50 ல் 10,635 கோடி ரூபாய் என்றும் அவற்றில் 75 % தனியாரின் கைகளில் உள்ளதென்றும் சொல்லியுள்ளது. 25 % மதிப்பிலான சொத்துக்கள் நிறுவனங்களில் கைகளில் உள்ளது. தனியார் கைகளில் உள்ள சொத்துக்களில் 40 % வீடுகள் போன்று இருப்பதாகவும் அவ்வறிக்கை சொல்கிறது.

இவர்கள் எல்லாம் தங்களின் சக்திகளுக்கு ஏற்றார் போல சுமையை பகிர்ந்து கொள்கின்றனரா? கடந்த பத்தாண்டுகளில் செல்வத்தின் குவியலும் உற்பத்திச் சாதனங்களும் பெருமளவில் கொஞ்சம் கொஞ்சமாக சிலருடைய கைகளில் வந்தடைந்துள்ளது. தேசத்தின் பொருளாதாரத்திற்கே ஊறு விளைகிற வண்ணம் இந்த பொருந்தா நிகழ்வு அரங்கேறியுள்ளது. சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு வளர்ச்சியின் பலன் மறுக்கப்படும் நிலைக்கே இது இட்டுச் சென்றுள்ளது. இந்தியாவின் செல்வாக்கு படைத்த 1 % பேர்வழிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்தியாவின் செல்வத்தில் பெரும் பகுதி உள்ளது என்று அக்குழு நிறைவு செய்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தையோ, வணிகத்தையோ போதுமான இழப்பீடு தராமல் அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அது போலவே இழப்பீடும் அளிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு தேசியமயமாக்கப் பட்டதனால் பழைய தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு 31.12.1961 வரிய நான்கு கோடியே 76 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சமீபத்தில் வங்கித் துறையை தேசியமயமாக்கியபோது பர்மா (தற்போதைய மியன்மார்) அரசாங்கம் பர்மாவில் செயல்பட்ட ஒவ்வொரு அன்னிய வங்கியும் தங்களின் க்யாட் மூலதனத்திற்கு 20 க்யாட் லாபம் ( க்யாட் – பர்மா நாட்டு நாணயம். அன்று க்யாட்டின் மதிப்பு ரூபாய்) சம்பாதித்ததாக சொன்னது.

மறுக்க முடியாத ஏராளமான நியாயமான வாதங்களும் விரிவான கோரிக்கைகளும் இருந்த போதிலும் கூட இங்கே இன்னும் வங்கித்துறை தேசியமயமாக்கப்படவில்லை. பொதுக்காப்பீட்டுத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களாலும் பொது மக்களாலும் முன்வைக்கப் பட்டபோதிலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. அங்கே மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. பிர்லாக்களால் நடத்தப்படும் ரூபி ஜெனரல் மற்றும் நியூ ஏசியாட்டிக் நிறுவனங்களின் கறுப்பான ஊழல் பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்தது பெரும்பாலான பொதுக்காப்பீட்டுக் கம்பெனிகளின் அவல நிலையை உணர்த்துகிறது. இத்துறையை தேசியமயமாக்கினால் மட்டுமே அரசுக்கு 85 கோடி ரூபாய் கிடைக்கும். கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் பெரு முதலாளிகள் லாபத்தை சுருட்டிக் கொண்டே இருக்க, சாதாரண மனிதனின் துயரங்களோ அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மார்ச் 1963 லிருந்து ஜூன் 1963 க்கிடையிலான காலகட்டத்தில் மட்டும் விலைவாசிக் குறியீட்டு எண் 8.8 %  உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய தொழிலாளர் அமைச்சர் கூறுகிறார். அதிலே 7 % வரை உணவுப் பொருட்களால் உருவானது. உணவு தானிய வணிகம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் நிரந்தரமாகவே ஊழலாகவே மாறி விட்டது. உணவுப் பொருட்களை அரசு ஏன் கொள்முதல் செய்து ஏழை விவசாயிகளையும் மக்களையும் பேராசை பிடித்த பதுக்கல்காரர்களிடமிருந்து பாதுகாக்கக் கூடாது? நம்முடைய ஒரே விடி வெள்ளியாக இருக்கிற ஏற்றுமதிகளில் நடைபெறுகிற ஏராளமான முறைகேடுகளை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

விலைகளை நிர்ணயிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஏகபோக முதலாளிகள் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இந்தியா மிகப் பெரிய ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் விலைகள் மட்டும் உலகிலேயே மிகவும் அதிகமாக இருக்கும் நாடாக இருக்கிறது என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுசீலா நய்யார் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவசர நிலைக் காலத்திலும் கூட சர்க்கரை ஆலை அதிபர்கள் சந்தையில் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க அரசால் முடியவில்லை. எப்போதுமே தொழிலாளர்களுக்கு எதிரான கல்கத்தாவின் ‘ஸ்டேட்ஸ்மேன்” பத்திரிக்கை, கடந்த இருபதாண்டுகளில் அரிசியின் விலை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை எனச் சொல்கிறது. அன்னியப் படையெடுப்பின் காரணமாக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து நினைவூட்டப் படுகிறோம். தேசத்திற்காக தியாகம் செய்ய நாம் தயாராக உள்ளோம். தேசப் பாதுகாப்பு நிதிக்கு 50 கோடி ரூபாய் நாம்தான் அளித்தோம் என்பது உலகிற்கே தெரியும்.

தேசத்தின் பாதுகாப்பிற்கு சமூக நீதி அத்தியாவசியமானது என்று பிரதமர் மிகவும் சரியாகவே சொன்னார். ஆனால் எங்கே இருக்கிறது சமூக நீதி? பொருட்களின் விலைகளை உயர்த்திக் கொண்டே போவதன் மூலம் முதலாளிகளும் பதுக்கல் பேர்வழிகளும் நமது ரத்தத்தை உறிஞ்சி நம்மை எதுவுமே இல்லாதவர்களாக மாற்றுகிறார்கள். பழமொழியில் சொல்வதைப் போல ஒட்டகத்தின் முதுகை ஒடிக்கும் கடைசி சுமையாக கட்டாய வைப்பு நிதி வந்து சேர்ந்துள்ளது.

உண்மையான பகிர்தலாக இருக்கும் பட்சத்தில்  நாடு இன்றிருக்கும் சூழலில் சுமையை பகிர்ந்து கொள்வதில் யாருக்குமே எதிர்ப்பு இருக்க முடியாது.  பதட்டமான நிலைமைகள் நிலவிய கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் ஒரு பிச்சைக்காரர் தன்னுடைய ஒரு நாளைய ஒட்டு மொத்த வருமானத்தையும் தேசப் பாதுகாப்பு நிதிக்கு அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அத்தொகை எவ்வளவு இருக்கும்? எழுபது பைசாவோ, எண்பது பைசாவோ இருக்கலாம். பொருளாதார அடிப்படையில் பார்க்காவிட்டால் அதுதான் ஒரு மனிதன் தேசத்திற்காக தியாகம் செய்யக்கூடிய, சுமையை பகிர்ந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச அளவாக இருக்க முடியும். 

இந்தியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் தங்களது சக்திக்கு ஏற்றார்போல சுமைகளை பகிர்ந்து கொள்கின்றனரா? பிரம்மாண்டமான வருமான வரி பாக்கியை தள்ளுபடி செய்திடுமாறு அரசை தூண்டுகின்றனர். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய் அளவிற்காவது வருமான வரி கட்டாமல் ஏய்க்கிறார்கள். ஆனால் இந்த அரசோ தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அற்பதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை கட்டாய வைப்பு நிதியாக வசூலிக்கிறது.

“சுமையை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்வதற்குப் பதிலாக நாளிதழ்கள் “சுமையை புன்னகையோடு சுமந்து செல்லுங்கள்” என்று கோஷத்தை மாற்றி விடலாம்.

ஆனால் நம்மால் மட்டும் சுமக்கக் கூடியதா இது? வலுவற்ற, நொறுங்கக் கூடிய நமது தோள்களால் பாரம் அதிகமுள்ள இச்சுமையை தாங்க முடியுமா?

Saturday, April 25, 2020

மோடி என்ன சொல்றாருன்னா!!!!



மோடி நிஜத்தில் சொல்ல விரும்புவது என்னவென்றால்

இந்த அரசாங்கத்தை எதற்கும் நம்பாதே...
வாழ்வோ, சாவோ எல்லாம் உன் கையில்தான் உள்ளது.
மகனே உன் சமர்த்து. 

அவ்வளவுதான் . . .

புமா ஜெமோதான் அழிவு சக்தி




குருதிக் கலவை அழகு குறித்த கண்டனங்களுக்கு பதில் அளிக்கும் வேலையை  தன் தொண்டரடிப் பொடிகளுக்கு  அளிக்காமல் அப்பணியை ஜெமோ அவரே எடுத்துக் கொண்டு விட்டார்.

அவருடைய “நமக்கு நாமே” டிசைன் படி ஒரு  செல்ஃபி கேள்வி  கேட்டு  நீநீநீநீநீநீநீண்ட பதில் ஒன்றும் கொடுத்துள்ளார்.

ஒன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் படிப்பதில்லை. அந்த ஒற்றைவரியை முகநூலில் வாட்ஸப்பில் படித்திருப்பார்கள். அதன்மீது ஏதாவது அரைவேக்காடு அளித்த விளக்கத்தையும் படித்திருப்பார்கள். எஞ்சியபலர் எதையும் படித்துப் புரிந்துகொள்பவர்கள் அல்ல.

இது அவரது வழக்கமான திமிர். இவர் அவருடைய வாசகர்களையும் அப்படித்தான் மதிக்கிறார். இவரது பின் தொடரும் நிழலைப் படித்த பின்புதான் லெனின் பற்றி அறிந்து கொண்டதாக அவரது வாசகர்கள் கூறியதாக தடம் நேர்காணலில் கூறியிருந்தார். லெனின் யார் என்று தெரியாத மண்ணாந்தைகள் என்று தன்னுடைய வாசகர்களையே கூறுகின்ற ஜெமோ, விமர்சனம் செய்பவர்களை வேறெப்படி அழைப்பார்! இது அவரது வழக்கமான வசைதான்.

என்னுடைய முந்தைய பதிவில் சொன்னது போல “அந்த அழகியல் எழவு” கருத்து அந்த கதாபாத்திரமான  ஔசேப்பச்சனின் கருத்து என்றும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பு அது என்று விளக்கித் தள்ளியுள்ளார்.

ஔசேப்பச்சன் நிஜமல்ல. வாழ்ந்த நபர் அல்ல. “பத்து லட்சம் கண்றாவிகள்” என்பது ஒரு உண்மைக் கதை அல்ல.

அந்த கதையும் ஒரு முழுமையான புனைவு. அதில் வரும் பாத்திரங்களும் புனைவு. ஆகவே புனைவு பாத்திரம் சொல்கிற அனைத்திற்கும் படைப்பாளிதான் பொறுப்பு. படைப்பாளி தன் கருத்துக்களை தான் படைக்கும் பாத்திரங்கள் வழியேதான் வாசகர்களுக்கு கடத்துகிறான்.

அவரது கலவை அழகு குறித்து ஜெமோ அளிக்கும் விளக்கம் இங்கே

ஔசேப்பச்சன் தொடர்ச்சியாக தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறான்- தன் சாதி, தன் மதம், தன் தெய்வம் ஆகியவற்றை. கூடவே தொடர்ச்சியாக உயர்சாதியை, இந்துமதத்தை, பாரதிய ஜனதாவை நையாண்டி செய்கிறான் அதேபோல கம்யூனிசத்தையும்

அந்த நையாண்டிப் பார்வையில் ஒன்றுதான் அந்த வரி. இந்த சற்றே அறிவார்ந்த, தெனாவெட்டான, கொஞ்சம் போக்கிரித்தனமான நையாண்டி என்பது கேரள கிறிஸ்தவர்கள் எப்போதுமே இந்துமதம் மற்றும் நாயர் நம்பூதிரி சாதிகள் மேல் வைப்பது. இதை அங்குள்ள சூழல் ஒருவகையில் ஏற்றுக்கொள்கிறது. அது கேரளப்பண்பாட்டின் ஒரு அம்சம்.

இக்கதைகளில் ஔசேப்பச்சன் நாயர் சாதி பற்றி என்னென்ன சொல்கிறான் என்பதை பார்ப்பவர்களால் அச்சூழலை புரிந்துகொள்ள முடியும். அவன் சொல்லும் பெரும்பாலான விமர்சனங்கள்  ‘டீஸன்ஸியின் நிலையிலிருந்தும் கீழே செல்பவை. ஆனால் அது ஒரு பண்பாட்டுச்சூழல்

என்று சொல்லும் ஜெயமோகனிடம் ஒன்று கேட்க வேண்டியுள்ளது. டீஸன்ஸியின் நிலையிலிருந்தும் கீழே செல்பவை ஔசேபச்சனின் விமர்சனங்களா அல்லது ஔசேபச்சனின் பெயரில் உங்கள் எழுத்துக்களா?  இதுதான் கேரள பண்பாட்டு சூழல் என்று சொல்கிறீர்களே, இது கேரளாவில் உள்ளவர்களுக்கு தெரியுமா? இத எழவெடுத்த கதையை மலையாளத்தில் எழுதியிருக்கலாமே?

அடுத்து அவர் சொல்வது இன்னும் மோசம்…

நேரடியாக ஆசிரியனே விளக்கவேண்டியிருப்பது ஒரு தலையெழுத்துதான். வேறுவழியே இல்லை. ஔசேப்பச்சனின் அந்த கிண்டல் உத்தேசிப்பதுநீங்கள் கொண்டாடும் அழகு என்பது நீங்கள் உரிமைகொண்டாடுவது போல இனத்தூய்மை அல்லது இன மேன்மையில் இருந்து வந்தது அல்ல, இனக்கலப்பில் இருந்து வந்ததுஎன்பதுதான்.

இன்னும் சொல்லப்போனால். ’நீங்கள் மிலேச்சன் என்று சொல்பவர்களின் ரத்தம்தான் நீங்கள்என்பதுதான் அந்த வரியின் நேரடிப் பொருள். அந்தக்கதையின் ஒட்டுமொத்தத்தில் அந்த வரி எப்படி முக்கியமானது என்பதை வாசகர்கள் உணரலாம். அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி. உயர்சாதியினர் மீது கேரள கிறிஸ்தவர்களின் நையாண்டி [அல்லது உண்மையானவிமர்சனம் அது என்பதுதான்.

விளக்கம் என்கிற பெயரில் இங்கேதான் ஜெமோவின் விஷம் வெளிப்படுகிறது.

“உயர்சாதியினர் மீது கேரள கிறிஸ்தவர்களின் நையாண்டி [அல்லது உண்மையானவிமர்சனம் அது என்பதுதான்.”  என்று கேரள கிறிஸ்துவர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் இடையே சிண்டு முடிகிற கீழ்த்தரமான புத்திதானே இது!

“அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி” என்று ஒரு  safety clause  போட்டுக் கொள்வதில்தான் இவரது பொய்மையும் மோசடியும் அம்பலமாகிறது. இவர் உருவாக்கிய பாத்திரம் பேசுவதை இவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு யார் சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியும்?

இவர் கிண்டலாக எழுதியதை புரிந்து கொள்ள இலக்கிய வாசிப்பு, அறிவுத்திறன், நுண்ணுணர்வு இருக்க வேண்டுமாம்.  இது அனைத்தும் உள்ளதால்தான் உங்களின் சூழ்ச்சியும் தீய எண்ணமும் புரிகிறது.

செல்ஃபி கேள்வி மூலமாக அவரது உள்ளக்கிடக்கை தெளிவாகிறது.

அதற்கு கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் உயர்சாதியினர். இவர்கள் அதை ஏதோ தாழ்ந்த சாதியினருக்கு எதிரானதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் தாழ்ந்த ஜாதி என்ற சொற்றடரே தவறு. தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இது ஜாதிய ஆணவத்தின் வெளிப்பாடு.  இரண்டாவது அவர்கள் அழகற்றவர்கள் என்பதுதான் ஜெமோ சொல்ல வருவது. நுண்ணுணர்வு உள்ளதால்தான் ஜெமோவின் சதி புரிந்து கண்டிக்கிறோம்.

இந்த கதை மூலம் ஜெமோ என்ன எதிர்பார்த்துள்ளார் என்பதும் செல்ஃபி கேள்வி மூலம் புரிகிறது.

அதற்கு கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் உயர்சாதியினர்.

யாரையெல்லாம் இவர் கலவைக்குருதி என்று சொல்கிறார். அதையின் அந்த பத்தியில் குறிப்பிட்டுள்ளவர்களை மட்டும் சொல்கிறேன்.

கொங்கணி பிராமணர்கள்,
மாத்வ பிராமணர்கள்,
இஸ்லாமியர்கள்,
நாயர்கள்,
நம்பியார்கள்

இஸ்லாமியர்களைத் தவிர இதரர்கள் யாரும் தமிழகத்தில் பெருமளவில் கிடையாது.

ஏற்கனவே சங்கிகள் நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரத்தால் கடுப்பாக இருப்பவர்களை கொஞ்சம் சீண்டி விட்டால் அவர்கள் கோபம் கொண்டு திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது போல தனக்கும் ஏதாவது நடக்கும்.

புளிச்ச மாவு விவகாரத்தில் கேசை ஸ்ட்ராங் செய்ய மருத்துவ மனையில் கையில் தண்ணீர் பாட்டிலோடு பெட்டில் அமர்ந்து சீன் போட்டது போல மீண்டும் ஒரு சீன் போடலாம் என்று நினைத்தவருக்கு பிரச்சினை திசை மாறிப் போனதில் வெறுப்பும் கோபமும் உச்சத்திற்கு போய் விட்டது.

இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கும்போதே இந்தவகையான அசட்டு உணர்ச்சிகர மிரட்டல்கள், அவதூறுகளுக்கு ஆளாவார்கள் என்றால் மெல்லமெல்ல ஓர் அறியாத ஜாக்ரதை உணர்ச்சி வரும். அது படைப்பூக்கத்திற்கு எதிரானது.

என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

சொல்லப்போனால் ஜெமோ மீதான கண்டனங்கள் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பொறுப்புணர்வை கற்றுத்தரும். அபத்தமான எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை வரும். சமூக சூழலில் நஞ்சைக் கலக்கக் கூடாது என்று அக்கறையை, அவசியத்தை  ஜெமோ பெறும் அடிகள் அவர்களுக்கு கற்றுத்தரும்.

ஓர் எழுத்தாளன் யாராக இருந்தாலும் தன் படைப்பில் தடையின்றி வெளிப்படுவதே முறையானது. ஒரு சிறு  மூடக்கும்பல் முற்போக்கு என்றும் அரசியல் சரி என்றும் சொல்வதை ஏற்று அவன் எழுதவேண்டியதில்லை. அவ்வாறு எழுதுபவன் எழுத்தாளன் அல்ல. அவ்வாறு எழுதச்சொல்லி கூச்சலிடுபவர்கள், எழுதுபவனை அவதூறுசெய்பவர்கள் மாபெரும் கலாச்சார அழிவுச்சக்திகள்

தன் படைப்பில் வெளி வரும் எழுத்துக்களுக்கும் தனக்கும் தொடர்பு கிடையாது, அது அந்த கதாபாத்திரம் சொன்னது என்று தப்பிக்க நினைக்கும் ஜெமோ, நீர்தானய்யா அழிவு சக்தி.

“அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி” என்று சொல்கிற உம் மோசடியைப் புரிந்து கொள்ளாமல் உம்முடைய பிற்போக்கு சங்கி அரசியலை அறிந்து கொள்ளாமல்  உம்மையும் ஒரு படைப்பாளி என்று ஆராதிக்கிறதே  அதுதானய்யா சிறு மூடக் கும்பல். . .

பிகு: நீல நிறத்தில் உள்ளதெல்லாம் ஜெமோவின் செல்ஃபி கேள்வி, பதிலில் உள்ள பகுதிகள்