Wednesday, August 12, 2020

நமக்கானதா இந்த பூமி?

 

நிச்சயமாக நமக்கானது மட்டுமல்ல இந்த பூமி, நமது சந்ததிகளுக்கானது. பாதுகாக்க வேண்டிய கடமை மட்டுமே நம்முடையது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்க நினைக்கும் மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 யை, அதன் தீய விளைவுகளை அம்பலப்படுத்துகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் பெ.சண்முகம்.


நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியான கட்டுரையை முழுமையாக ப்டியுங்கள்.




இந்த பூமி நமது சந்ததிகளுக்கானது 

                                                                    - பெ.சண்முகம்



காலுக்கு செருப்பு கட்டாயம் என்பதற்காக குழந்தையின் தோலை உரிக்க சம்மதிப்போமா? அப்படிப்பட்ட கொடுஞ்செயல் தான் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் என்ற பெயர்ப்பலகையுடன் கூடிய கடைகள், வண்டிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அங்கு மீன்களை வளர்க்க மாட்டார்கள். மீன்களை வெட்டி விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். அதுபோலத்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020” என்பது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாக்கப்பட்டத்தின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான். ஆனால், சுற்றுச்சூழலை நாசப்படுத்துவதற்கான நோக்கங்களையும், திட்டங்களையும் கொண்ட அறிக்கையை மார்ச் 23 ந் தேதி அத்துறை வெளியிட்டுள்ளது.  இப்படியொரு வரைவு அறிக்கை வெளிவந்திருப்பதே நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. தில்லி உயர்நீதிமன்றம் இதுதொடர்பான ஒரு பொது நல வழக்கில், அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் இவ்வறிக்கை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை. இந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வதற்கான காலக்கெடுவை தில்லி உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் ஆகஸ்ட் 11 வரை பெரிய மனதுடன் மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. தாய் மொழியைத் தவிர வேறு மொழியே தெரியாத மக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும். இரண்டாவது, பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதும், மக்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் செயல்பாட்டாளர்களாலும் மக்களை சந்தித்து விளக்க முடியாது. இத்தகைய சிக்கல்கள் இருக்கிறது என்பதை தெரிந்தேதான் மத்திய அரசு திட்டமிட்டு இந்த காலத்தில் இந்திய மக்களை முற்றிலும் பாதிக்கும் நாசகரமான இத்தகைய சுற்றுச்சூழல் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆகவே அரசின் இந்த அணுகுமுறையே எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

40 ஆண்டு காலம் சட்டமே இல்லை

போபால் ரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு மனிதப்படுகொலை என்பது 1984ல் அரங்கேறியது, இதற்குப் பிறகுதான் “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986” என்பது உருவாக்கப்பட்டது. சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 40 ஆண்டு காலம் சுற்றுச்சூழல் குறித்த ஒரு சட்டமே இல்லாமல் தான் நமது ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. இந்தியாவில் பல மாநிலங்களில் சுனாமி தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போனார்கள், கடற்கரையோர கிராமங்கள் அழிந்து போயின. பிறகுதான் “பேரிடர் மேலாண்மை சட்டம் 2004” என்பது உருவாக்கப்பட்டது. பிரதமர் மேடையில் திருக்குறளை மேற்கோள்காட்டுவதையும், நாடாளுமன்றத்தில் பாடுவதையும் பெருமிதத்திற்குரிய ஒன்றாகவும், அதை பாராட்டும் செயலையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு திருக்குறள் என்பது மேற்கொள் காட்டுவதற்குத்தானே தவிர கடைபிடிப்பதற்கு அல்ல என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ், குறள், சங்க இலக்கியம் என்று குறிப்பிட்டாலே தமிழர்களில் ஒரு பகுதியினர் திருப்தியடைந்து விடுவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்” என்ற குறள் எவ்வளவு சிறப்பானது; எல்லோரும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பொருள் பொதிந்த குறள் அது. ஆனால், எல்லா பேரழிவும் பாதிப்பும் ஏற்பட்ட பிறகுதான் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி மக்களும், ஆட்சியாளர்களும் சிந்திக்கிறார்கள். இப்போது இந்த குறளை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020” ஏற்படுத்தப் போகும் பாதிப்பிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடுதான். காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப சட்டங்களை மாற்றுவதில் ஒன்றும் தவறில்லை. அது மாற்றவே படக்கூடாத புனிதமானது என்ற பிரமையெல்லாம் நமக்கு தேவையில்லை. ஆனால் எதற்காக, யாருக்காக, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அலசி ஆராய்ந்து தான் அது குறித்த முடிவுக்கு வரவேண்டும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு - என்பதற்கொப்ப இந்த அறிக்கையை நாம் பரிசீலிக்க வேண்டும்.

காடு என்பது...

ஒரு காட்டை நம்மால் உருவாக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.  காடு என்றால் மரங்கள் வளர்ப்பது அல்ல! காடு என்பது, வானுயர்ந்த மரம், படரும் கொடி, பல்வகை செடிகள், புதர்கள், புற்கள், பறக்கின்ற பூச்சி, ஊர்கின்ற புழு, கொல்லுகின்ற புலி உள்ளிட்ட விலங்குகள், அதற்கு இரையாகும் பாலூட்டிகள், அந்த எச்சத்தை உண்ணும் கழுகுகள், பாடி மகிழும் பறவைகள், கொஞ்சி மகிழும் குரங்குகள் இப்படி பல்லுயிர்கள் வாழும் இடத்திற்குப் பெயர் தான் காடு! இப்படியொரு காட்டை நம்மால் உருவாக்க முடியாத போது, அதை அழிப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஆதிவாசி மக்கள் காட்டைப் பாதுகாப்பவர்கள். கிழங்குகளை எடுத்தால் கூட மீண்டும் அது முளைக்கும் வகையில் வேர் விட்டுத்தான் வெட்டுவார்கள், உதிரும் பழங்கள், கொட்டைகள், துளிர்க்கும் இலைகள் என்று பார்த்து பார்த்து சேகரித்து பயன்படுத்துவார்களே தவிர அழிக்க மாட்டார்கள்; பேராசை பிடித்த லாப நோக்கத்திற்காக செயல்படும் நபர்கள் தான் காடுகளை அழிக்கிறார்கள். இந்த சட்டம் நடைமுறைக்கு வருமானால், மலைகளில் உள்ள கனிம வளங்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்பதற்காகவும் புனல் மின் நிலையங்கள் போன்றவற்றை அமைப்பதற்காகவும் மலை வளங்களை அழிப்பதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. எதிர்த்தால் சட்டப்படி தான் செய்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.  இந்த ஊரடங்கு காலத்தில் 30 காடுகளின் பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்துள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படுவதுடன் பசுமை காடுகளும் அழிக்கப்படுகிறது. 

வளர்ச்சி என்ற பெயரில்...

“வளர்ச்சி” என்ற பெயரில்தான் இந்த அழிப்பு வேலைகள் அனைத்தும் நடைபெறுகிறது. வளர்ச்சி முக்கியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காலுக்கு செருப்பு கட்டாயம் என்பதற்காக குழந்தையின் தோலை உரிக்க சம்மதிப்போமா? அப்படிப்பட்ட கொடுஞ்செயல் தான் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020. ஏற்கனவே, 1986 சட்டப்படி ஒரு நிறுவனம் தொழிற்சாலை துவங்க அனுமதி பெற வேண்டுமென்றால் அமைக்கப்பட இருக்கும் தொழிற்சாலையில் சுற்றுச்சூழலுக்கு, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளை எவ்வாறு கையாளப் போகிறார்கள், மக்களின் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கும் என்பது போன்ற விபரங்களடங்கிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அரசு அமைத்துள்ள நிபுணர்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அனுமதி வழங்கவோ, மறுக்கவோ செய்யலாம். 

எப்படிப்பட்ட ஆபத்து?

இப்பொழுது நடைமுறையிலிருக்கும் 2006 வழிகாட்டுதலின்படி எல்லா திட்டங்களையும் ஏ மற்றும் பி பிரிவு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய 2020 இஐஏ-வின் ஏ மற்றும், பி1, பி2, என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ, பி, என்று இருந்த போது ஏ பிரிவு திட்டங்களுக்கு மத்திய நிபுணர்குழுவும், பி பிரிவு திட்டங்களுக்கு மாநில நிபுணர்குழுவும், மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். அனைத்து திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம் - பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியம். தற்போது புதிய இஐஏ 2020ல் என்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்றால், ஏ பிரிவு திட்டங்களுக்கு மத்திய நிபுணர்குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும் இதற்கு ஆய்வறிக்கை, பொது மக்கள் கருத்துக்கேட்பும் அவசியம். பி1, பிரிவுத்திட்டங்களுக்கு சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியம். மாநில நிபுணர்குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். பி2 பிரிவு திட்டங்களுக்கு மாநில நிபுணர்குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். ஆனால் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையோ, பொதுமக்கள் கருத்துக்கேட்போ அவசியமில்லை (பத்தி 5.6)

மக்களிடம் கருத்துக் கேட்பு அவசியமில்லை

முந்தைய சட்டத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் அவசியம் என்றிருந்த 25 சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறுவனங்கள் தற்போது பி2 பிரிவுக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று மாற்றப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டங்கள், கனிம சுரங்கங்கள், சாலை விரிவாக்கப்பணிகள், உள்நாட்டு நீர்வழிகள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்து வகையான கட்டுமானப்பணிகள், அமில தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், 25 மெகாவாட் அளவிலான புனல் மின்சார திட்டங்கள், தொழிற்பேட்டைகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள், பூமிக்கடியிலும், நீருக்கடியிலும் இருக்கும் எரிவாயு- நிலக்கரி - எண்ணெய் வளங்கள், நிலக்கரி படிம மீத்தேன் எடுத்தல் பெரிய அளவிலான சூரிய ஒளி மின்சாரம், குழாய் பதிப்பு திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும், மக்கள் கருத்துக் கேட்பும் அவசியமில்லை. அதாவது ஏற்கனவே தமிழ்நாட்டில் போராடி ரத்து செய்திருக்கிற கடலூர் துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் வரையிலான காவிரி டெல்டா உள்ளடக்கிய பகுதிகளில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மதிப்பீட்டு அறிக்கையோ, பொதுமக்கள் கருத்துக்கேட்போ அவசியமில்லை. ஆனால், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இவையிரண்டும் அவசியமாம்.

நிலத்தை, நீர்வளத்தை, வாழ்வாதாரத்தை அழிக்கும் விஷயத்தில் பொதுமக்கள் கருத்து அவசியமில்லையாம். இவற்றை பூமியிலிருந்து எடுத்தப் பிறகு சுத்திகரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்பார்களாம். எட்டுவழிச்சாலை, கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அவசியமில்லை. ஏற்கனவே, செயல்பாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் விரிவாக்கம் மற்றும் நவீனமாக்கம் செய்வது 50 சதவீதம் குறைவாக இருந்தால் மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை. மக்கள் கருத்து சொல்லும் கால அவகாசம் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் 45 நாட்களிலிருந்து 40 நாட்களாக குறைப்பு. இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருக்கிற அறிக்கை வெளிவந்து ஏறத்தாழ நான்கு மாதங்களாகிவிட்டது. இதுவரை மொழிபெயர்ப்பு பணியே நடைபெறவில்லை. இந்த லட்சணத்தில் ஒரு திட்டம் குறித்து 20 நாட்களுக்குள் மக்கள் கருத்து சொல்ல வேண்டும் என்பது உரிமை மறுப்பு மட்டுமல்ல ஏமாற்று வேலையுமாகும்.

சரி செய்ய முடியாத  பாதிப்பு உருவாகும்

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் ஆறு மாதத்திற்குகொரு முறை தாங்கள் எந்த சூழல் சீர்கேடும் செய்யவில்லை என்ற அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். இப்போது அதை ஒரு வருடத்திற்குகொரு முறை என்று மாற்றிவிட்டார்கள். அதாவது தொழிற்சாலைக்குள் என்ன பாதிப்பு நடந்தாலும் ஒரு வருடம் வரைக்கும் அதிகாரிகளுக்கு தெரியவாய்ப்பில்லை. திட்டப்பணிகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு அதை செயல்படுத்துவதற்கான கால அவகாசம் 30 ஆண்டுகள் இருந்ததை 50 ஆண்டுகள் என்றும், ஆற்றுப்படுகை மற்றும் அணுஉலை திட்டங்களை நடைமுறைப்படுத்த 5 வருடங்கள் என்பதை 15 வருடங்கள் என்று உயர்த்தியிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலேயே சுற்றுச்சூழல் தன்மை இருக்குமா என்பதை யோசிக்க வேண்டாமா? அதாவது 1970 ஆம் ஆண்டு அனுமதி வாங்கி இப்போது செயல்படுத்தினால் எப்படி இருக்கும்? அந்த பாதிப்பு சரி செய்ய முடியாததாக இருக்கும். ஆய்வு செய்யும் பரப்பளவை குறைப்பது, பாதிப்பைப் பொறுத்து அந்தத் திட்டம் எந்த பிரிவில் வரும் என்று மதிப்பிடுவதை நீக்கி முன்கூட்டியே எந்தப் பிரிவில் வரும் என்பதை தீர்மானிப்பது, சிறு - குறு தொழில்களுக்கு, அதாவது முதலீட்டு தொகை அளவை வைத்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்பது; உதாரணத்திற்கு சாயபட்டறை சிறிய முதலீட்டில் துவங்கப்படும் தொழில் என்பதற்காக அதன் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து மதிப்பிடுவது எப்படி? விதி மீறல் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனமே புகார் செய்யலாம் அல்லது அதிகாரிகள் என்றெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் செய்யவழியில்லை. மொத்தத்தில் என்ன சீர்கேடு, பாதிப்பு ஏற்பட்டாலும் வெளியில் தெரியப்போவதில்லை என்பது தான். திட்டத்திற்கான ஆய்வு வரைமுறைகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரே மாதிரி என்று மாற்றப்பட்டுள்ளது. அமிலத் தொழிற்சாலை என்றால் ஒவ்வொரு அமிலமும் வெவ்வேறு வகையான பாதிப்புகளை உருவாக்கக்கூடியது என்பதை அறிவோம். 

சூழலியல் அனுமதி பெற்ற பிறகுதான் திட்டத்தையோ, தொழிற்சாலைகளையோ துவங்க முடியும். இப்போது திட்டத்தை துவங்கிவிட்டு அதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு பின்னர் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் பொருள், முதலீடு செய்ய பணம் மட்டும் இருந்தால் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் தொழிலையும் எவரும் துவக்கலாம் என்பது தான்.

சுற்றுச்சூழலை அழிக்க  கட்டற்ற சுதந்திரம்

செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் தொழில் முதலாளிகள் எவ்வித தடையுமின்றி லாப மீட்டவும், கார்ப்பரேட்டுகள் இந்திய வளங்களை கபளீகரம் செய்யவும் நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பில் சமரசம் செய்து கொள்வது என்ற நிலையை மத்திய பாஜக அரசாங்கம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரித்து வரும் காலத்தில் இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கனவே இருந்து வரும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி சுற்றுச்சூழலை அழிக்க கட்டற்ற சுதந்திரத்தை வளர்ச்சி என்ற பெயரில் வழங்குவதுதான் இந்த அறிக்கையின் முக்கிய அம்சம். தலைமுறை தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 ஐ முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் நாடெங்கும் ஒலிக்கட்டும். இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல! நமது சந்ததிகளுக்கானது, அதை பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நமது கடமை. அந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற கரம் கோர்ப்போம்.

No comments:

Post a Comment