காலை எழுந்தவுடன் கண்ணில் பட்டது
நாள்காட்டிதான்; நாள்காட்டி மட்டும்தான்!
5 ஆகஸ்ட் 2020 என முகத்திலறைந்தது.
உன்மத்தம் கொண்டு ஓடிச் சென்று
தாளைக் கிழிக்க முயன்றேன்;
அந்நாளையும் தான்
நாட்டப்பட்ட அடிக்கல் போல
வலுப்பெற்றுவிட்டது அந்நாள்;
கிழிக்க முடியவில்லை – நிகழ்வுகளை
அழிக்க முடியவில்லை
தோல்வியால் உந்தப்பட்டு
மற்றுமொரு முறை
கிழிக்க முடியாத, அழிக்க முடியாத
5 ஆகஸ்ட் 2020 உடன் போராடினேன்
இப்பெருநாட்டின் தலைவர்தம் மனம் போன்ற
வெறிகொண்ட நாள்காட்டியின் ஆணி
சிறுவிரலைப் பதம்பார்த்தது
விரலிலும் பாரபட்சம்தான்
பெருவிரல் இளக்காரமாகச் சிரித்தது
சிறுவிரல் மௌனித்தது
புண்பட்ட சமத்துவம் போல
விழுப்பட்ட சிறுபான்மை போல
இயலாமை, கழிவிரக்கம், கோபம்
இவையும் இன்ன பிறவும்
கைப்பிடித்து இட்டுச் செல்கின்றன
நேற்றின் நினைவுகளுக்கு
புரட்சி புரட்சியென இணையப் பெருவெளியில்
கதறியும் புலம்பியும் பாசாங்கு செய்த நான்
நேற்று
தொலைக்காட்சிகளின் வர்ணனைகளை
தலைவரது வீர உரையை
என் ‘புனித ரத்த’ உறவுகளின் குரூர மகிழ்ச்சியை
என் கையில் படிந்த ரத்தக் கறையை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்
உணர்ச்சிகள் ஏதுமற்று
கிழிக்க முடியாத தாள் போல
அழிக்க முடியாத நாள் போல
இன்று
நிலைத்து நிற்கும் கொடுமையான உண்மைகள்
அகங்காரக் கெக்கலிப்பு செய்கின்றன
என் அடையாளத்தின் ஒரு பகுதியை
இப்பெருவெளியின் குடிமகன் எனும் நினைப்பை
ஒருமனதாக இழக்கிறேன் – அதைப் பற்றிய
குற்ற உணர்ச்சி தலைதூக்கவில்லை;
தலை தூக்கப் போவதுமில்லை
Really fantastic.He is able to communicate poetically his feelings.My wishes to both the poet n com.Jayashree for making his son to realise the ideology.
ReplyDelete