Sunday, August 2, 2020

நான் அனுப்பி விட்டேன். நீங்கள்???







சட்டப் பிரிவை மாற்றி வாழ்வை சூறையாடும் பயங்கரம் 

2006 ஆண்டு சட்டத்தில் பிரிவு A என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும், பிரிவு B மாநில அரசுகளிடம் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும் இருந்தது. ஆனால் இந்த இரண்டுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும், மக்கள் கருத்து கேட்பும் முக்கியம். ஆனால் 2020 சட்டத்தில் பிரிவுகள் A மற்றும் B என்பதை மாற்றி  பிரிவு கள் A1, B1, B2 என மூன்றாக பகுத்துள்ளனர். இதில் B2 என்ற பகுதியில் வரும் திட்டங்களுக்கு எவ்வித சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதியும் தேவையில்லை என்று வகுத்தி ருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.  உதாரணமாக, B2 பகுதியில் பாதுகாப்புத் துறை, முக்கியத்துவம் வாய்ந்த துறைகள், மின்சார கம்பங்கள் அமைப்பது, 8 வழி, 4 வழி சாலைகள் அமைப்பது, ரயில் தண்டவாளங்கள் அமைப்பது, கேஸ் பைப் லைன்கள் அமைப்பது, சூரிய மின்சாரம் தயாரிப்பது, நச்சு வாயு நிறுவனங்கள்  என வாழ்விட நிலங்களை, காடுகளை, விவசாய வயல்களை, ஆறுகளை, மலைகளை துளைத்துச் செல்லும் நேர்கோட்டு திட்டங்கள், கடலில் 15 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் வரும் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட 40 வகையான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

இது எத்தகைய அபாயம் என சொல்லி விளக்கிடத் தேவையில்லை. அதேபோல 2006 சட்டத்தின்படி கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கு 30 ஆண்டு கள் மட்டுமே அனுமதி (இதுவே அதிகம்). ஆனால் 2020 வரைவின்படி 50 ஆண்டுகள் என உயர்வு. அணை மற்றும் அணுசக்தி நிறுவனங்களுக்கு 10 வருட அனுமதி என்பது 15 வருடங்களாக  உயர்த்தப்பட்டுள்ளது. இதர திட்டங்களு க்கு 5 ஆண்டுகள் என்பது 10 ஆண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் கொடுமையாக தற்போது சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 உயிர்க ளைப் பறித்த, பல மக்களின் உடல் நலனை பாழ்படுத்திய காற்றையும் நீரையும் நஞ்சாக்கியுள்ள விசாகப்பட்டி னத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனமும் இதில் அடங்கும்.

அழிக்கப்படும் மணல் திட்டுக்கள்

அதேபோல் ஒரு திட்டம் துவங்க நிலம் வாங்கிய பிறகு, அனுமதி வாங்குவதற்கு முன்பே அந்த நிலத்தை சம தளமாக்கலாம் என்ற EIA 2020 வரையறையும் மிகவும் ஆபத்தானது. தனது அதிகார பலத்தால் நிலங்களை வாங்கும் நிறுவனங்கள் விளை நிலங்களை அழித்து  சமதளமாக்கலாம். அவர்களுக்கு காவல்துறை உதவி இருந்தால் போதும். அவர்கள் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் முன்பே பல பணிகளை செய்து முடிப்பர். இதில் மிகவும் ஆபத்தானவை கடற்கரையோரம் வரும் திட்டங் கள்தான்.  ஏனெனில் கடற்கரையை சார்ந்த மணல் திட்டுக்கள் (Sand dunes) சூழலியலுக்கு மிகவும் முக்கிய மானவை. இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பவை.  இவைகளை அழித்த பின்பு அனுமதி வாங்கி என்ன செய்வது? கடலூர் அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள கடற்கரை மணல் திட்டுக்களை நாகார்ஜுனா என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அழித்த வரலாறு உண்டு. ஆனால் அந்த நிறுவனம் இன்றுவரை பல்வேறு காரணங்களால் துவங்கப்படவில்லை என்பதும் அழிந்த மணல் திட்டுகள் சமதளமாய் நிற்பதும் கொடிய சோகம்.

CSR நிதி 

மக்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து அமலாக்கப்படும் திட்டங்கள், அதனால் வாழ்விழந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு செயல்படும் நிறுவனங்கள் அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு செலவு செய்யும் தொகை CSR நிதி எனப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி (Corporate Social Responsibility Fund). இது பெரு நிறுவனங்களின் பிச்சை அல்ல, அவர்களின் சமூகக் கடமை. அல்லது அதைப் பெற வேண்டியது வாழ்விழந்த மக்களின் உரிமை. அந்த அடிப்படையில்தான் தங்களது லாபத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் கிராம மக்களுக்கு செலவு செய்து வரு கின்றன. உதாரணத்திற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1200 கோடி லாபம் அடைந்தால் அதிக பட்சம் 45 கோடியை இந்த வகையில் மக்களுக்கும் அவர்க ளுக்கான திட்டங்களுக்கும் செலவு செய்ய வேண்டும். ஆனால் EIA 2020  வரைவுப் படி இதற்கும் ஆபத்து வந்துள்ளது

மோடி அரசு கொரோனா பேரிடர் காலத்தில் இந்த CSR நிதியைக் கூட மக்களுக்கு செலவு செய்யவிடாமல், நிறுவனங்களை மிரட்டி தனது தனிப்பட்ட நிதியமான பி.எம்.கேர்ஸ்க்கு இந்த நிதியை களவாடியது தனிக்கதை. (அதிகாரப்பூர்வமற்ற மோடியின் இந்த பி.எம்.கேர்ஸ் கணக்கிற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ.20 கோடி கொடுத்துள்ளது) ஆனால் இனி மக்கள் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொழுக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்காண்டு CSR நிதியைக் கூட கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  தனது திட்ட வரைவின் போது ஒப்புக்கொள்ளும் நிதியை கொடுத்தால் போதும் என்ற நிலையை உருவாகி உள்ளது இந்த புதிய சட்ட வரைவு.

வளரப்போகும் கட்டிடங்கள்

இதுவரை 20,000 சதுர மீட்டருக்குள் மட்டுமே நிறுவ னங்கள் கட்டிடங்களை கட்ட அனுமதி இருந்தது. அதற்கு மேல் கட்ட வேண்டுமெனில் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இனி 1,50,000 சதுர மீட்டர் வரை அனுமதி இல்லாமல் கட்டிடங்களை கட்டிக்கொள்ளலாம் என்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது

எந்த ஒரு நிறுவனமும் அனுமதி வாங்கிய அளவுக்கு மீறி தனது நிறுவனத்தை ஓர் அடி விரி வாக்கம் செய்ய வேண்டுமெனில் கூட முறையான அனுமதி வாங்க வேண்டுமென்பது இதுவரை இருக்கும் சட்டம். ஆனால் EIA 2020 இதையும் ஒழித்துக்கட்டுகிறது. அதாவது எந்த ஒரு நிறுவனமும் அல்லது திட்டமும் 50  சதம் வரை EIA அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்து கொள்ளலாம். அதாவது 100 கிலோ மீட்டர் சாலைக்கு அனுமதி வாங்கி 150 கிலோ மீட்டர் போட்டுக்கொள்ளலாம். பின்பு அனுமதி வாங்கினால் போதும். இது எவ்வளவு அக்கிரமமானது!

அரசியல் சட்டத்திற்கு எதிரானது 

குறிப்பாக கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைக ளை எதிர்த்து சில அமைப்புகளும் தனி நபர்களும், அர சியல் இயக்கங்களும் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா, இனி அது முடியாது! அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமைச் சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது எவ்வளவு மோச மான ஆபத்து என்பதை நாம் உணர முடியும். குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் பாஜக பாசிச குணத்தின் வெளிப்பாடு இது. அதுமட்டுமல்ல, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்க ளையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவக்குழியில் தள்ளுவதற்கு சமமாகும்

இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 51 A (9) ஒவ்வொரு குடிமகனுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அடிப்படை கடமை என்று அறிவிக்கிறது. அப்படி எனில் சுற்றுச்சூழலை சூறையாடுவோரை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை EIA 2020 பறிப்பது எப்படி சரியாகும்? மக்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை பறிக்கும் திட்டங்களை எதிர்த்து கேள்விகேட்கும் உரிமையை அல்லது மக்கள் கருத்து கேட்கும், சொல்லும் உரிமையை பறிப்பது எப்படி சரியாகும்? ஆக அரசியல் சட்டத்தின் அடிப்படையை கேள்வி கேட்கும் இந்த சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கட்டுரையாளர் : பொறுப்பாளர்,  
கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில்  

eia2020-moefcc@gov.in

menong@cag.gov.in


       ஆகிய முகவரிகளுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். நீங்களும் மறக்காமல் அனுப்பி விடுங்கள். காலத்தின் அவசியம் இது. கடமையைச் செய்திடுவோம். இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கு இரையாகாமல் பாதுகாத்திடுவோம்.


No comments:

Post a Comment