திரு இளம் பகவத் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அனுபவம் இது.
இந்தியை திணிக்க முயல்பவர்கள் என்றைக்கும் மாறுவதில்லை என்பதை உணர்த்துகிற சம்பவம் இது.
மேலும் வெளியே போகச் சொன்ன வைத்ய ராஜேஷ் கோச்சா பற்றியும் அவனுக்கு எப்படி அவ்வளவு திமிர் வந்தது பற்றியும் தனியாக எழுத வேண்டும்.
பிகு: பாட்சா படத்தில் "உள்ளே போ" என்று ரஜினிகாந்த் தம்பியை அதட்டுகிற காட்சி எனக்கு ரொம்பவே பிடிக்கும். எப்போது தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பட்டாலும் அந்த காட்சியை மட்டும் பார்த்து விடுவேன்,
அது உரிமையில், பாசத்தில் சொல்கிற "உள்ளே போ"
இவர்கள் சொல்லும் "வெளியே போ" -ஆதிக்க சிந்தனையின், ஆணவத்தின் வெளிப்பாடு, அதே வெறியோடு . . .
பரீதாபாத்தில் ஐ.ஆர்.எஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபொழுது, இந்தி மொழி கற்றுத் தருவதற்கான வகுப்புகள் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்தனர். சரி நாமும் இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் என்ற முடிவோடு, புதிய நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி, பெயரெழுதி, கோடுபோட்டு, குளித்து முடித்து, இன்ன பிற சடங்குகள் எல்லாம் செய்து வகுப்புக்குச் சென்றேன்! எங்கள் ஐ.ஆர்.எஸ் பேட்ச்சில் ஒரு பெரிய தமிழ் கேங்க் இருந்தது. அதில் சிலருக்கு இந்தி தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால், அனைவரும் வகுப்பில் ஆஜர்!
அறிமுக உரை தொடங்கினார்கள். பரிசுத்தமான இந்தியில் இருந்தது! நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அடுத்ததாக வகுப்புகள் தொடங்கின. ஒருவர் இந்தியில் பேசத் தொடங்கினார். இந்தி எழுத்துக்களை இந்தியிலேயே அறிமுகம் செய்தார். ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை. என்னால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் பக்கத்திலிருந்த சரவணனிடம் 'இந்தி தெரியாதவங்களுக்கு இந்தி கத்து தரணும்னா, அவங்களுக்கு புரிஞ்ச மொழியில் தானே சொல்லித் தரணும். இந்தி தெரியாதவங்களுக்கு இந்தியிலேயே பாடம் நடத்தினா எப்படி புரியும்?' என்று கேட்டேன். அவர் 'இவங்க இப்படித்தாங்கன்னா, யாருக்கு எப்படி பாடம் நடத்தனும் தெரியாமலே நடத்துறாங்க' என்று சொல்லிவிட்டு தனது புதிய இந்தி நோட்டில் தமிழில் ஒரு கவிதையை எழுத தொடங்கினார்!
நான் பின்னால் திரும்பி பார்த்தேன். பலருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த இந்தி பண்டிதர் இந்தி பிரசங்கத்தை தொடர்ந்துகொண்டே இருந்தார். 15 நிமிடம் போனது. எனக்குப் பொறுமை பறந்து போனது! அதன் பிறகு தான் நடத்திய பாடப் பகுதியில் இருந்து எங்களை நோக்கி வினாக்களை எழுப்பினார். அவர் என்ன கேட்டார் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் எழுந்து பத்திரிக்கையாளர் ஞானி போல தமிழில் பதில் சொல்ல ஆரம்பித்தேன். ' நீங்க நடத்துற பாடம் இந்தி மொழி தெரியாத நபர்களுக்கு நடத்துகிறீர்கள். அதை அவர்களுக்குத் தெரிந்த ஒரு மொழி வழியாகத் தானே நடத்த வேண்டும். இந்தியிலேயே பாடம் நடத்தி இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியை கற்பித்து விட முடியும் என்று எப்படி நினைக்கிறீர்கள்? எங்களுக்கு புரிந்த தொடர்பு மொழியான ஆங்கிலம் வழியாக இந்தியை கற்பித்தால் எங்களால் இந்தி படிக்க முடியும். இல்லையென்றால் இந்த வகுப்பு சுத்த வீண்!' என்று தூய தமிழில் முழங்கி விட்டேன்.' இந்தி பாடம் நடத்தியவர் அதிர்ச்சியாகி விட்டார்! நான் தமிழில் அந்த ஆளை ஏதோ திட்டுகிறேன் என்று நினைத்துவிட்டார்!
அப்புறம் நான் என்ன சொன்னேன் என்பதை ஆங்கிலத்தில் சொன்னேன். அத்தோடு, 'ஒரு நிமிடம் நான் பேசிய தமிழை எவ்வாறு உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையோ அது போன்று நீங்கள் 15 நிமிடம் பேசிய இந்திய எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வகுப்பு வழியாக நாங்கள் இந்தியைக் கற்றுக் கொள்வதற்கு திறந்த மனதோடு இருக்கிறோம், ஆனால் நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு சரியான வழி முறையை பின்பற்றுங்கள் என்று சொன்னேன்.'
திடீரென்று ஒரு மாற்று மொழியைக் கேட்ட அதிர்ச்சியில் பயிற்சியாளர்களும் பயிற்றுநர்களும் ஸ்தம்பித்து விட்டனர். ஆனால், அடுத்த பத்து நிமிடமும் அவர் சுகந்த மணம் கமழும் இந்தியிலேயே பேசினார். சரி இவர்களிடம் பேசி பயனில்லை என்று முடிவுசெய்து அரை மணி நேரத்தில் தேநீர் இடைவேளையில் வகுப்பை விட்டு வெளியேறி விட்டோம். இதுகுறித்த பஞ்சாயத்து கோர்ஸ் டைரக்டர் வரையும் போனது. 'இந்தியை எப்படிப்பா இங்கிலீஷ்ல கற்றுத் தருவது 'என்று எங்களிடம் கேட்டார். இரண்டு மொழி தெரிந்தவர்களை பயிற்றுநராக நியமியுங்கள். இல்லை என்றால் எங்களால் இந்த மொழி பாடத்தை கற்க முடியாது என்று எங்களது தரப்பை வலுவாக எடுத்துச் சொன்னோம். ஆனால் அவர்கள் இறுதி வரை அவ்வாறு நியமிக்கவில்லை. நாங்களும் இந்தி வகுப்புக்கு போக வில்லை. இந்தியைப் படிக்கவில்லை.
இந்த அளவுக்குத்தான் இவர்கள் இந்தியை கற்பிக்கும் அக்கறை இருக்கிறது! இந்த அக்கறையின்மையில்தான் வெளிப்படுகிறது 'நீங்கள் வெளியே போங்கள் 'என்ற அதிகார செருக்கு!
முசௌரி அகாடமியில் பரவாயில்லை. பாவனா மேடம் ஆங்கிலத்தில் எங்களுக்கு இந்தியை சொல்லித் தந்தார். ஆனாலும், அங்கு என்னை ஃபெயில் செய்வதற்கு ஒரு இந்தி பேராசிரியை முயன்றார் என்பது வேறு கதை!
சில பேச்சாளர்கள் இந்தியில் பேசும்பொழுது நாங்கள் கைகளைத் தூக்கி ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று கேட்போம். பல நேரங்களில் அவர்கள் சிரித்துவிட்டு எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கடந்து போய் விடுவார்கள். சரி அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமியுங்கள் என்று பலமுறை முறையிட்டும் பலனில்லை. அகடமியில் இந்தி தவிர்த்த பிறமொழிப் பேச்சாளர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு கட்டாயம் மொழிபெயர்ப்பாளர்கள் வைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள். கொஞ்ச நாட்களுக்கு பிறகு இவர்களிடம் சொல்லி பயனில்லை என்று விட்டு விட்டோம்.
இப்பொழுதெல்லாம் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதி வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று சில அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பெருமையுடன் சொல்கிறார்கள். இவர்களுக்கு முழுமையாக ஐஏஎஸ் தேர்வைப் பற்றி தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்வதையும் கேட்பதில்லை.
நான் ஐஏஎஸ் தேர்வை தமிழில் எழுதி வெற்றி பெற்றேன். யுபிஎஸ்சி வினாத்தாள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் இருக்கும். நீங்கள் ஆங்கிலத்தில் படித்து தமிழில் புரிந்து கொண்டு விடை அளிக்க வேண்டும். அதுவும் மெயின் தேர்வு எனப்படும் முதன்மை தேர்வில்தான் தமிழில் எழுத முடியும். பிரிளிமினரி எக்ஸாமினேஷன் என்ற முதல்நிலைத் தேர்வில் ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் இந்தியிலும் வினாக்கள் இருக்கும். இந்த முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான் மெயின் தேர்வுக்கு செல்ல முடியும். முதல்நிலைத் தேர்வில் வடிகட்டிவிட்டால் அடுத்த நிலைக்கு செல்வது எப்படி? ஆனால் இந்த முதல்நிலைத் தேர்வில் இந்தி மாணவர்கள் நேரடியாக தனது தாய்மொழியிலேயே வினாக்களை படித்து விடை அளிக்க முடியும்! இந்தி தவிர்த்த பிற மொழி மாணவர்கள் ஆங்கிலத்தில் படித்து, அதனை தனது தாய்மொழியில் புரிந்து கொண்டு பிறகு விடை அளிக்க வேண்டும்! ஒருவனுக்கு தாய் மொழியிலும் மற்றொருவனுக்கு அன்னிய மொழியிலும் வினாத்தாள் கொடுப்பது எப்படி சமமான போட்டியாக இருக்க முடியும்?
ஒருவேளை அவரவர் தாய் மொழியில் ஐஏஎஸ் தேர்வுக்கான வினாத்தாள்கள் இருந்தால், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் ஐஏஎஸ் தேர்வில் கடும் போட்டியாளர்களாக விளங்குவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவ்வாறான ஒரு போட்டியை நடத்திப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் யார் திறமையாளர் என்று!
ஐஏஎஸ் தேர்வில் மொழி சமத்துவம் இல்லை. மொழி சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கம் நார்த் பிளாக் கனவான்களுக்கும், தோல்பூர் ஹவுஸ் பெருமகன்களுக்கும் சுத்தமாக இல்லை. ஒருவேளை உங்களால் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளில் தேர்வை நடத்த முடியவில்லை எனில், நீங்கள் எவ்வாறு 130 கோடி மக்களை ஆளப் போகிறீர்கள்?
இந்தியா என்பது ஒரு மொழி பன்மைத்துவம் வாய்ந்த நாடு. அதில் இருக்கும் ஒவ்வொரு மொழியும் அதன் வளம். அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் அனைவரும் பாடுபட வேண்டும்.
இனி நாங்கள் வெளியே போக மாட்டோம்!
மிகவும் தேவையான பதிவு
ReplyDelete//கட்டாயம் மொழிபெயர்ப்பாளர்கள் வைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள்//
ReplyDelete'ஆங்கிலத்தில்' என்ற வார்த்தைக்கு மாற்றாக, 'இந்தியில்' என வரவேண்டும்!
The teacher should have the mind that all the students would be able to understand what he teaches.
ReplyDeleteThe teacher should heed the students
voice. Otherwise no use.